Friday, August 14, 2015

கணபதி முனி - பாகம் 25: பச்சையம்மன் கோயில் அற்புதங்கள்

ஏழு சுனை. அருணை மலையின் ஆளரவமற்ற பகுதி. குளிர்ந்த பிரதேசம். கணபதி தவமியற்ற ரமணர் காட்டிய இடம். ஸ்ரீரமணருக்கு மலையின் இண்டு இடுக்கெல்லாம் தெரியும். அனுதினமும் அவர் ஜீவித்த மலை. அவரே அம்மலையின் அருட்குழந்தை தான். மலையோடு ரமணர் ஐக்கியமாகியிருந்தார். அவருடைய மௌனம் அம்மலை காத்த மௌனம். ரமணரே அருணை மலை. ரமணர் அருளிச்செய்தபடி கணபதி ஏழு சுனையில் ஒருமுகமாகக் கடும் தவமியற்றினார்.
இதற்கிடையில் கீழே பச்சையம்மன் கோயிலில் உமாசகஸ்ரத்தை நாயனா ரமணர் முன்னிலையில் பாடிக் காண்பித்து உபன்யாசம் செய்வார் என்று அவரது பக்தர்கள் ஏகமனதாக அறிவித்தார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்டு வெளியூர்களிலிருந்து அண்ணாமலையில் முடியும் ரோடுகள் அனைத்திலிருந்தும் கணபதியின் சிஷ்யர்களும் ரமணரின் பக்தர்களும் பஸ்களிலிருந்தும் வண்டிகட்டிக்கொண்டும் நடையாய் நடந்தும் வந்து குவிந்தார்கள். பச்சையம்மன் கோயிலில் பக்தர் கூட்டம் உமாசகஸ்ரத்திற்காகக் காத்திருந்தது. ஒரு வாரம் கழித்து நாயனா ஏழு சுனையிலிருந்து தவம் முடித்து மெதுவாய் இறங்கி வந்தார்.
உமாசகஸ்ரம் ஒரு நாளில் பூரணமாகச் சொல்லி முடியாது. ஆயிரம் பாக்களை அர்த்தத்தோடு பாடிக்காட்டிச் சொற்பொழிவு. கணபதியும் ரமணரும் இணைந்து இருந்து நடத்துவது அங்கு குழுமியிருக்கும் பக்தர்களுக்கு ஒரு அருட்கொடை. ஆயுட்கால பரிசு. பச்சையம்மன் கோயில் ஜேஜேயென்று களைகட்டியிருந்தது. ஸ்ரீரமணர் தலைமை. நிகழ்ச்சி வெகு சிறப்பாக நகர்ந்துகொண்டிருக்கும் போது அம்பாள் அரூபமாக வந்து நாயனாவின் காதுகளில் ”எனக்கு இது ரொம்பப் பிடித்திருக்கிறது. திரும்பப் பாடு” என்று சொன்னாளாம். அது.,
கணபதயே ஸ்தனகதயோ:
பதகமலே ஸப்தலோக பக்தேப்ய:
அதரபுடே த்ரிபூஜிதே
ததாஸி பீயுஷம் அம்ப த்வம்

அர்த்தம்: அம்பிகையே... உனது மேனியில் மூன்று பாகங்களில் அமரத்துவத்தை அளிக்கும் இன்சுவை பானத்தை தாங்குகிறாய். உனது பிள்ளையான கணபதிக்கு ஸ்தனத்திலிருந்தும் ஏழு உலகங்களிலும் உன்னைத் தொழும் உன் பக்தர்களுக்கு திருவடித் தாமரையிலிருந்தும் திரிபுரங்களை எரித்து வெற்றி கொண்ட சிவனாருக்கு உன் இதழ்களிலிருந்தும் வழங்குகிறாய்.
அடுத்த நாள் உமா சகஸ்ரம் தொடர இருக்கிறது. பக்தர் கோஷ்டி உமாசகஸ்ர பாஷ்யம் கேட்பதற்குக் கணபதியை நோக்கிக் காத்திருக்கிறது. பச்சையம்மன் கோயிலைச் சுற்றி தேவாதிதேவர்கள் குழுமியது போல ஜில்லென்ற சூழல். கோயில் கொள்ளாத கூட்டம்.
திடீரென்று அங்கே சிறு சலசலப்பு. தார்ப்பாய்ச்சி கட்டிய வேஷ்டியோடும் கட்டுக் குடுமியோடும் ஒரு புது ஆள் விடுவிடுவென்று பச்சையம்மன் கோயிலுக்குள் நுழைகிறார். அவர் யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. ஒரே குறிக்கோள். நேரே பகவான் ஸ்ரீரமணர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு விரைந்தார். ”பகவானே!” என்று எட்டூருக்குக் கேட்கும்படி அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார். அவ்ளோதான். எழுந்தார். அப்படியே வந்த வழியே கிளம்பிவிட்டார்.
வேகுவேகென்று வெளியே நடக்க ஆரம்பித்தவர் ஏதோ ஒறு அமானுஷ்ய சக்தித் தன்னைக் கொக்கிப் போட்டு இழுத்தது போல வெடுக்கென்று திரும்பிப் பார்த்தார். கண்ணிரெண்டும் ரமணரின் அருகிலிருக்கும் நாயனாவின் மேல் போய்க் குத்தியது. அமர்ந்திருந்த பக்தர்கள் அனைவரும் இக்காட்சியை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவருக்கும் நாயனாவுக்கும் என்ன தொடர்பு? முறைக்கிறாரா? தெரியவில்லையே ஒரு விநாடிதான் கடந்திருக்கும்... தபதபவென ஓடி வந்து நாயனா கால்களில் பொதேர் என்று விழுந்தார். இதுவரை அமைதி காத்த கூட்டம் குசுகுசுத்தது. அந்த சப்தத்தை அறுத்து அவர் பெருங்குரலில்.....
“ஓ! ஐயனே... நீர் இங்கேதான் இருக்கிறீரா? பாவி உம்மை கவனிக்காமல் சென்றேனே... என்னை மன்னித்தருளும்... ” என்று வாய்விட்டுக் கதறினார். கண்களில் அணை உடைத்த வெள்ளமாய் ஜலம் தாரை தாரையாய்க் கொட்டியது. அனைவருக்கும் ஆச்சரியம். யாரிவர்? ஏனிப்படி இவர் கண்களில் கங்கை பொங்குகிறாள்?
அவர் பெயர் சிறுப்பாக்கம் கொண்டையா. நாள் தவறாமல் அக்னிஹோத்ரம். தீ மூட்டி ஹோமம் வளர்ப்பவர். பிள்ளையாரப்பனை நெஞ்சாரத் தியானிப்பவர். ஒரு நாள் ஹோமத்தில் எழுந்த தீயில் நரமுக விநாயகரைத் தரிசித்தார். இப்போது நாயனாவைப் பார்த்தவுடன் அன்று அக்னியில் எழுந்த உருவம் போலவே ஒற்றுமை தெரிந்தது. உடனே நாயனா கணபதியின் அவதாரம் என்று அவருக்கு மேனி சிலிர்த்துப் புல்லரித்தது. அன்றிலிருந்து அவரும் நாயனாவின் சிஷ்யர்களில் ஒருவர் ஆனார்.
உமாசகஸ்ர சொற்பொழிவுகள் நடக்கும் காலத்தில் பச்சையம்மன் கோயிலில் ஏராளமான அற்புதங்களும் அதிசயங்களும் விடாமல் நிகழ்ந்தன. நாள்தோறும் இருள் கவிவதற்கு முன்னர் பலவிதமான பிரார்த்தனைகளுடன் பாஷ்யம் தொடங்கும். ரமணரும் அருகிலேயே இருந்து அருள் கூர்ந்து கேட்டதனால் சாதாரணர்களின் கூச்சலும் குழப்பங்களும் அடங்கி ஆன்மிக ஒளி சூழ்ந்தது.
ஒரு நாள் அனைவரும் நாயனாவின் அன்றைய சொற்பொழிவிற்காகக் காத்திருந்தனர். பச்சையம்மன் கோயில் நிரம்பி வழிந்தது. திடீரென்று ஒளிமிகுந்த ஒரு நட்சத்திரம் அங்கு விண்ணில் தோன்றியது. பார்ப்பவர்களின் கண்கள் கூசக்கூச அது நேராக மின்னல் நேரத்தில் ரமணரின் நெற்றியில் முட்டித் துளைத்து உள்ளே நுழைந்து. அவருடன் இரண்டறக் கலந்தது. இதுபோல ஆறு முறை அங்கே பளிச்சென்று நட்சத்திரம் தோன்றுவதும் ஒளிக்கற்றையாய் ரமணருடன் கலப்பதும் நடந்தது. பக்தர்கள் திறந்த வாயை மூடாமல் இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். கணபதிக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்துவிட்டது. ஆறுமுகனான கார்த்திகேயன் இப்போது ரமணரிடம் ஜோதிரூபமாக உள்ளுக்குள் ஏறியிருக்கிறார் என்று குருவை வந்தனம் செய்தார்.
அக்கணமே பீறிட்டு எழுந்த அளவற்ற பக்தியால் உந்தப்பட்டு ஒரு எட்டு ஸ்லோகங்களை ரமணர் மீது போற்றிப் பாடினார். கூட்டத்தில் ஈயாடவில்லை. ரமணரையும் கணபதியையும் இந்தக் கோலத்தில் பார்த்து அசந்து போயிருந்தார்கள். (இப்போதும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தின் காலை பூஜையில் இந்த எட்டு ஸ்லோகங்களையும் சேர்த்து மொத்தமாய் நாற்பது ஓதுகிறார்கள்). இந்த பக்திரசத்தில் மூழ்கித் திளைத்திருந்த ரமணர் இமை மூடி இவைகளைக் கேட்டு உளமார இரசித்தார். அவ்வப்போது முகத்தில் அரும்பிய துளித் துளி புன்னகையில் அது தெரிந்தது.
சதாசர்வகாலமும் ஸ்ரீரமணர் மௌனவிரதத்தில் இருப்பார். வாயைத் திறக்காமல் அந்தக் காரியம் நடக்காது என்ற ஸ்திதியில் அளவாகப் பேசுவார். கார்த்திகேயனின் அவதாரமாகவே ஸ்ரீரமணர் பிறந்திருப்பதாக கணபதி எண்ணினார். அவரின் அந்த மௌனமே அனைவரையும் வழி நடத்து சக்திஆயுதம் என்று நம்பினார் கணபதி.
உமாசகஸ்ர பாராயணம் நல்லபடியாக முடிந்த பின்னர் மீண்டும் ஒரு புனித ஸ்தலத்தில் தனது தவத்தைத் தொடர விரும்பினார் கணபதி. ரமணரிடமிருந்து தவமியற்றும் பாதையைக் கற்றுக்கொண்ட கணபதி அதை அனுஷ்டானம் செய்து அதிலிருந்து கிடைக்கும் தபோ வலிமையை தாய் நாட்டிற்கு அர்பணித்து முன்னேற்ற ஏதேனும் வழியிருக்குமா என்று ரமணரிடம் கேட்டு அறிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தார்.
புராண காலத்திலிருந்து ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் மந்திரங்கள்தான் வலுவையும் எவ்வித சங்கடங்களிலிருந்தும் காத்துக்கொள்ளும் அபரிமிதமான சக்தியையும் அளித்தது. ஆனால் ரமணர் உபதேசிப்பது போல பத்மாசனத்தில் உட்கார்ந்து மூச்சை அடக்கி ”நான்” என்கிற மனதை வெல்லும் வெறும் ஆத்மவிசாரத்தால் நமக்கு அவ்வித சக்தி சித்திக்குமா? அதைக்கொண்டு இம்மானுட சமுதாயத்திற்கு உபகாரமாக எதுவும் நம்மால் செய்ய இயலுமா? போன்ற கேள்விக் கணைகள் கணபதியை விடாமல் துளைத்துக்கொண்டிருந்தது. ஒரு நாள்..
“ஐயனே! நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு உருப்படியான காரியங்களை செயலாற்றுவதற்கு "நான்” என்ற வஸ்துவை உற்று நோக்கி ஈடுபடும் ஆத்மவிசாரம் மட்டுமே யதேஷ்டமா? அல்லது அதற்கு வேறு ஏதேனும் புதிய சாதனங்கள் இருக்கிறதா?. அருள வேண்டும்” என்று அவரைப் பணிந்தார். ரமணர் திருவாய் மலர அமைதியாகக் காத்திருந்தார்.
சிரித்தார் ஸ்ரீரமணர். “கணபதி! பகவானை நம்பு. அவரை எப்போதும் வழிபடு. சரணடை. அவரே இவ்வுலகத்தை இயக்குகிறார். இப்பூவுலகத்திற்கு நன்மை விளைவிப்பைவைகளை அவரே முன்னின்று நடத்துகிறார். வருங்காலத்தை வடிவமைத்துச் செல்பவர் நிகழ்காலத்தையும் தடையின்றி செலுத்துகிறார். பூலோகத்திற்கு நன்மையையே அருள விரும்புவர் அவர். இதில் இம்மியளவு கூட யாருக்கும் சந்தேகம் வேண்டாம். வேளைக்குத் தக்கவாறு அவரே அனைத்து ஜீவராசிகளையும் செம்மையாக வழி நடத்துகிறார். ஆகையால் உனக்குள் எழும் பற்பல கவலைகளைக் களைந்துவிட்டு தீவிரமாக ஆத்மவிசாரத்தில் ஈடுபடு. மனசைக் குவி. மௌனத்தால் பேசு. அது போதும். மற்றவைகளைக் கடவுள் பார்த்துக்கொள்வார். இது உனக்கும் இச்சமுதாயத்திற்கும் அளவற்ற பயன்களை அள்ளித் தரும்.” என்றார்.
ஆன்மிக சாதனமான ஆத்மவிசாரம் மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் சாஸ்வதமான வழி என்பதை ரமணர் துல்லியமாக விளக்கியபின் கணபதியைச் சூழ்ந்திருந்த கவலைப் பனி சூரியனைக் கண்டது போல விலகியது. சொன்னது ஞானசூரியனாயிற்றே! கணபதியின் உள்ளம் தெளிவடைய முகம் கோடி சூர்யப் பிரகாசமாயிற்று. ரமணர் மகிழ்ந்தார்.
“நாயனா! இங்கே வா... வாசுவேத சாஸ்திரிகளுடன் கொஞ்சம் நீ சென்னைக்கு சென்று வா...” என்று அனுப்பினார்.
கணபதியும் வாசுதேவ சாஸ்திரியும் சென்னையில் வந்திறங்கினர். அங்கே.............

Thursday, August 6, 2015

கணபதி முனி - பாகம் 24: நாயனாவின் உமா சகஸ்ரம்

கணபதியின் ஸ்லோகங்களில் உள்ளம் கரைந்து போன ரமணர் மூடிய கண்களை மெதுவாய்த் திறந்து “நாயனா” என்று செல்லமாக அருகில் அழைத்தார். கணபதிக்கும் அன்றிலிருந்து “நாயனா” என்ற பெயர் நிலைத்துவிட்டது. தெலுங்கில் நாயனா என்றால் அப்பா... என்று அர்த்தம். எத்துனை சிஷ்யர்களுக்கு வழிகாட்டுதலில் அப்பாவாக இருந்திருக்கிறார் கணபதி!

தனது பரம சிரேயஸான ஒரு குருவை சந்தித்துவிட்டதாக தந்தைக்கும் மனைவிக்கும் கடிதம் எழுதினார். அடுத்த இரண்டு நாட்களில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா. விஸாலாக்ஷி வேலூரிலிருந்து கணபதியின் சீடர்களோடு வந்திறங்கினார். அனைவரும் நேராக விருபாக்ஷி குகைக்குச் சென்று ரமணரை நமஸ்கரித்தனர். கார்த்திகை தீபம் ஏற்றப்படும் போது பகவான் ரமணரோடும் கணபதியோடும் இருந்தது அவர்களுக்கு மன சந்துஷ்டியாக இருந்தது. குரு பக்தியின் உச்சத்தில் அந்த இடம் மிளிரிந்தது.
தீபத் திருவிழா முடிந்த அடுத்த நாள் விஸாலாக்ஷி வேலூர் திரும்பினார். நாயனா ரமணரிடம் தனது தவம் புரிய ஏதுவான இடம் கேட்டார்.
“மாமர குகை சென்று தவமியிற்று” என்று அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல் நாயனாவை வழிநடத்தி தன்னுடன் அழைத்துச்சென்றார். குகையில் இருவரும் தனித்து பல மணி நேரங்கள் அமர்ந்திருந்தனர். மௌனமாக பல விஷயங்களை நாயனாவிடம் பரிமாறிக்கொண்டார் ஸ்ரீரமணர்.
ரமணருக்கும் தினமும் உணவு சமைத்து எடுத்து வருபவர் ஈச்சம்மாள். அப்போது அவருக்கு அணுக்கமான பக்தராக, சிஷ்யனின் அனைத்து யோக்யாதம்சங்களோடு ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். நாயனாவிற்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வர ஆரம்பித்தார். இருவரும் தினமும் அமர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசினர். ஒன்றாக உணவருந்தினர். சில நாட்கள் கடப்பதற்குள் ஈச்சம்மாள் நாயனாவிற்கும் பக்தையானார்.
அருணாசலேஸ்வரரைப் போற்றி “ஹர சகஸ்ரம்” என்ற ஆயிரம் பாடல்களை நாயனா ஏற்கனவே இயற்றியிருந்தார். ஆன்மிக ஒளியில் பிரகாசமாக ஜொலிக்கும் ஒரு உன்னத குருவை தனக்கு காட்டியமைக்காக இப்போது இன்னும் இருபது நாட்களில் உண்ணாமுலையைப் போற்றி ஆயிரம் பாடல்கள் இயற்ற சங்கல்பம் செய்துகொண்டார். உமையம்மையைப் போற்றித் துதித்து எழுதுவதால் அதற்கு “உமா சகஸ்ரம்” என்று பெயரிட்டார்.
ஸ்ரீரமணரிடம் தனது இந்த அவாவைச் சொல்லி விக்னமில்லாமல் அதை பூர்த்தி செய்ய அவரிடமிருந்து ஆசி பெற்றார். 1907, நவம்பர் 26ம் தேதி நாயனா மாமரக் குகையில் அமர்ந்து உமா சகஸ்ரம் இயற்ற ஆரம்பித்தார். ரமணர் அடிக்கடி சென்று நாயனாவைப் பார்த்து அவருக்கு ஆன்மிக பலத்தை அளித்து அவருக்கு தெம்பூட்டினார்.
ஒரு நாள் கணபதிக்கு காலையிலேயே பசி வயிற்றைக் கிள்ளியது. என்றைக்குமே இதுபோல அவருக்கு இருந்ததில்லை. எழுதுவதை அப்படியே நிறுத்திவிட்டு யோகா செய்ய அமர்ந்துவிட்டார். அங்கே வீட்டினில் சமைத்துக்கொண்டிருந்த ஈச்சம்மாளின் முன் ஒரு பெண் திடீரென்று தோன்றினாள். “அம்மா... கணபதிக்கு பசிக்கிறது. சீக்கிரம் சென்று உணவு பரிமாறு” என்று சொல்லிவிட்டு அலையலையாய் காற்றோடு மறைந்து போனாள். சமையலை சுருக்க முடித்துவிட்டு பக்கத்து வீட்டு சிறுவனைக் கூப்பிட்டார் ஈச்சம்மாள்.
“இந்தச் சாப்பாட்டைக் கொண்டு போய் மாமரக் குகையில் உமாசகஸ்ரம் எழுதிக்கொண்டிருக்கும் கணபதி குருஜியிடம் கொடுத்துவிடு....”
கையில் சாப்பாட்டுடன் அவசரமாய்க் கிளம்பியவனைத் தடுத்து “அவரிடம் இன்று காலையில் ஏதேனும் விசேஷமாக நடந்ததா என்றும் விசாரித்துக்கொண்டு வா” என்று சொல்லியனுப்பினார். சிறுவன் குகை நோக்கி ஓடினான். யோகத்தில் ஆழ்ந்திருந்த கணபதியிடம் சாப்பாட்டைக் கொடுத்தான். அவர் அதைப் பிரிக்கும் முன் ஈச்சம்மாள் கேட்ட கேள்வியைக் கேட்டான்.
“ஆமாம். இன்று வழக்கத்துக்கு மாறாக அதிகமாகப் பசித்தது” என்று கணபதி சிரித்தார்.
உமா சகஸ்ரம் வேகமாய் வளர்ந்துகொண்டிருந்தது. சோதனையாக பதினைந்தாம் நாள் கணபதிக்கு வலது கைக் கட்டை விரலில் நகச்சுத்தி வந்து வீங்கிவிட்டது. இனி எழுதுவதைத் தொடர முடியாது என்று நிறுத்திவிட்டு ஜபத்தில் இறங்கிவிட்டார்.
பதினாறு, பதினேழு, பதினெட்டு என்று நாட்கள் ஓடின. ஒரு அக்ஷரம் கூட எழுத முடியாமல் ஜபதபங்களில் கணபதி ஈடுபட்டார். பத்தொன்பதாவது நாள். முக்கால்வாசி எழுதி முடித்தாகிவிட்டது. கால்வாசியில் அம்பிகை திருவிளையாடலைக் காட்டிக்கொண்டிருந்தாள். அன்றிரவு புண்ணியகோடி என்ற மெட்ராஸ் மருத்துவரின் கனவில் அம்பிகை தோன்றி ”திருவண்ணாமலையிலிருக்கும் ஒரு தபஸ்வியை உடனே சென்று சொஸ்தப்படுத்து” என்று கட்டளையிட்டாள்.
மறுநாள் காலையில் விருபாக்ஷி குகையை வந்தடைந்த டாக்டர் புண்ணியகோடி, ”இங்கே சன்னியாசி யாரேனும் சுகவீனமாக இருக்கிறார்களா?” என்று விசாரித்துக்கொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் கணபதியின் நகச்சுத்தியைப் பற்றி அவரிடம் சொல்லி மாமரக் குகைக்கு அனுப்பிவைத்தார்கள். அங்கேயே கணபதிக்கு ஆபரேஷன் செய்தார். கைக்குக் கட்டுப் போட்டுவிட்டு அவரை நமஸ்கரித்துச் சென்னை திரும்பினார். இருந்தாலும், பேண்டேஜுடன் எப்படி எழுதுவது?
அது இருபதாம் நாள். இன்று எப்படியாவது ஆயிரம் ஸ்லோகங்களை முடித்துவிட கங்கனம் கட்டிக்கொண்டார் நாயனா. அன்றிரவு நாயனாவின் ஐந்து சிஷ்யர்கள் எழுது பொருட்களுடன் மாமரக் குகையை அடைந்தனர். குரு ரமணர் கணபதியின் அருகில் ஆதரவாக அமர்ந்துகொண்டார். மகாபாரதத்தில் வியாஸ பகவான் கணபதிக்கு ஸ்லோகங்களைச் சொன்னது போல இந்த கணபதி ஐந்து சிஷ்யர்களுக்கும் ஸ்லோகங்களை வர்ஷித்தார். ஸ்லோகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தத்திலும் வெவ்வேறு பொருள்படியும் அமையுமாறு அவர் சொன்னதுதான் அதில் விசேஷம்.
நள்ளிரவு கடப்பதற்குள் இருநூறு ஸ்லோகங்கள் மூச்சுவிடாமல் பாடியிருந்தார் கணபதி. உமாசகஸ்ரம் நிறைவடைந்திருந்தது. அதுவரை கண்கள் மூடி அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ரமணர் இமை திறந்தார். அங்கே எழுதியவர்களைப் பார்த்தார். “இதுவரை நாயனா பாடிய அனைத்து ஸ்லோகங்களையும் சரியாக எழுதினீர்களா?” கேட்டார்.
அப்போதுதான் கணபதிக்கு உரைத்தது. இதுவரை அங்கே நடந்து அனைத்தும் தன் சத்குருநாதனின் அருளாலே என்று. குருவருள் இல்லையெனில் உமாசகஸ்ரத்தை அன்றிரவு முடித்திருக்கமுடியாது என்று எண்ணி பரவசமடைந்தார். அதற்கு நன்றிக்கடனாக உடனே ரமணரைப் புகழ்ந்து ஒரு ஸ்லோகம் எழுதினார்.
யதஸ்ய மஹத: காலே
பாரம் யாதோஸ்மி கர்மண:
அனுக்ரஹோயம் ஆசார்ய
ரமணஸ்ய மஹாத்மன:

”இந்த மஹா கார்யத்தை நிச்சயத்த காலத்திற்குள் பூர்த்தி செய்தது என்னுடைய ஆசார்யனான மஹாத்மா ரமணரின் அனுக்கிரஹமே” என்பது இதன் பொருள்.
உமா சகஸ்ரம் தெய்வக் கவி கணபதியின் உள்ளத்திலிருந்து ஆத்மார்த்தமாக எழுதப்பட்டது. ஆன்மிக வழி நடப்பவர்களின் சோதனைகளைக் களையும். அவர்களது உள்ளத்தில் ஆன்மிக ஒளி ஏற்றும். அம்பிகையின் பல ரூபங்களையும் அவளது அருளையும் போற்றி இயற்றப்பட்டது. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அதை அவர்களுக்கு சித்திக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. மனிதர்களின் சிந்தனைக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட அரிய பலன்களை தரவல்லது.
உமா சகஸ்ரம் இயற்றிய பின்னர் நாயனா தனிமையில் தவமியற்ற விரும்பினார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம்......

நண்பர்கள் தினம்

சைக்கிள் கேரியரில் பேட்டைச் சொருகிக்கொண்டு பாரில் ஒருத்தனை மூட்டையாய் ஏற்றிக்கொண்டு, ஓட்டுபவன் கால் முட்டியும் உட்கார்ந்திருப்பவன் ப்ருஷ்ட பாகமும் உரசியுரசி நெருப்பு உண்டாகும் வரை க்ரௌண்ட் க்ரௌண்டாக சுற்றி கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம். யாருக்கும் நண்பர்கள் தினம், பாட்டிகள் தினம், பொண் வயத்துப் பேரர்கள் தினம், சித்தப்பர்கள் தினம், ஒன்று விட்ட பெரியப்பாவுக்கு இரண்டு விட்ட சின்னம்மா தினம், அம்மாஞ்சி தினம், ஆயா தினம் என்றெல்லாம் தனித்தனியாக கொண்டாடத் தெரியாது.
பாவிப் பயலுவ ஒண்ணா மதில் கட்டையில ராப்பகல் அகோராத்திரியா உட்கார்ந்து வம்பளந்து அரட்டையடித்தால் அதுதான் நண்பர்கள் தினம். அப்பு வீடு தாண்டின லக்ஷ்மணன் கடை.. இல்லை... ஸ்ரீராமோடு ஜோடி போட்டுக்கொண்டு செட்டி கடை... இல்லை ஆத்தங்கரை ஓரம்... அதுவும் இல்லையென்றால் கிழக்குத் தெரு முக்கு அரசமரத்தடி பஸ்டாப், அதுவும் ஃபுல்லா தெற்குத் தெரு ஃபிஸிக்ஸ் ரவி வீட்டு எதிர்த்தார்ப்ல இருக்கும் ஹரித்ராநதி படித்துறை, அதுவும் இல்லையா விட்றா வண்டியை தேரடிக்கு....அங்கினயும் எவனும் இல்லையா... நேரா பந்தலடி... டில்லி ஸ்வீட்ஸ்... “என்ன மாப்ள? சௌக்கியமா? ஆளயே பார்க்க முடியலை...” அப்டியே ஆனந்த விநாயகர்... கோயில் வாசல்ல ரெண்டு பேரு... “நேத்திக்கு மேட்ச்ல.. சரியான பால்டா.. ஸ்டம்ஸ் கார்ட் வீலிங்....” அப்புறம் முதல் தெருவுக்குப் போ...
கீழப்பாலம்.. மார்க்கண்டேய விலாஸ்... ராஜாம்பாளையம் ஸ்கூல்... ராதா கண்ணன் மாஸ்டர்... பட்டக்கா... மாரியம்மன் கோயில்...”என்ன ஐயிரே...” இப்படி பார்க்கும் இடங்களில்லாம் ஸ்நேகிதமே தெரிந்து நண்பர்கள் தினங்களுக்குப் பதிலாக ’நண்பர்கள் நொடிகள்’ கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோம்.
இந்த மாதிரி பாசத்துக்கும் அன்புக்கும் வருஷத்துக்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு தினம் கொண்டாடுவது சிரார்த்தம் மாதிரி இல்லையோ? சரி.. பரவாயில்லை... நாமளும் ஒரு தபா... வாழ்த்து... ”டாய்... இவ்ளோ பேசிட்டு...” என்று நாக்கைத் துருத்தி யாரோ உருட்டுக் கட்டையை தூக்கிக்கொண்டு அடிக்க..வருகிறா.... “யப்பா...ப்ளீஸ்... அடிக்காதீங்க... நண்பர்கள் தினமாம்....வொய் ப்ளட்டு.. ஸேம் ப்ளட்டு....” 
smile emoticon
 
smile emoticon
 
smile emoticon

Sunday, August 2, 2015

கணபதி முனி - பாகம் 23: ரமணா!

தேர் அசைந்தாடி அழகாக வந்து கொண்டிருந்தது. வடமேற்கில் ஒரு இடத்தை விட்டு நகர மறுத்தது. வடம் பிடித்த கூட்டம் துவண்டது. எவ்வளவோ பிரயர்த்தனப்பட்டும் இம்மியளவு கூட தேர் நகரவில்லை. பாதையில் பள்ளமோ மேடோ இல்லை. சமதளத்திலும் நகராத தேரைக் கண்டு அனைவருக்கும் ஆச்சரியம். களைத்துச் சலித்துப் போய் நாளைக்கு வடம் பிடிக்கலாம் என்று அனைவரும் கலைந்தனர்.

நிருதி லிங்க கோயில். நள்ளிரவு தாண்டியிருந்தது. லேசாக கண் அயர்ந்த கணபதியின் கனவில் அருணாசலேஸ்வரர் கோயில் குருக்களும் கணபதியின் சீடருமான ராமலிங்கம் புகையாய்த் தோன்றினார். “ஐயனே... வடமேற்கில் நங்கூரம் பாய்ச்சியது போல சமதளமான பாதையில் அண்ணாமலையார் தேர் நின்றுவிட்டது. நீர் மனது வைத்தால்தான் தேர் நகரும் போலத் தெரிகிறது.” என்று கூறி மறைந்தார். தன்னைச் சுற்றி ஏதோ அமானுஷ்யமான ஒன்று நடக்கின்றது என்று ஞானக்கண்ணால் அறிந்த கணபதி அந்த அகால வேளையில் சட்டென்று நிருதி லிங்க கோயிலில் இருந்து புறப்பட்டு தேரிருக்கும் இடத்திற்கு விரைந்து வந்தார்.
காவலுக்கு உட்கார்ந்திருந்தவர்களிடம் என்னவென்று விசாரித்தார். தேரிலிருக்கும் அருணாசலேஸ்வரரை தலைமேலே கைதூக்கித் தொழுதார். “நான் காலையில் வருகிறேன்” என்று அவர்களிடம் கூறிவிட்டு வேத பாட சாலையை நோக்கி நடக்கலானார். காவல் புரிந்தவர்கள் ஏதோ ஒரு வித ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அமைதியாய் அருணாசலேஸ்வரரும் தான்.
*
காலையில் கூட்டம் அலைமோதியது. வடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இழுக்கத் தயாராய் நின்றிருந்தனர். கணபதி வந்தார். அருணாசலேஸ்வரரை நமஸ்கரித்தார். மனதார வேண்டிக்கொண்டார். அதுவரை அசைவின்றிருந்த தேர் முதல் இழுப்பிற்கே தடதடவென்று ஓட ஆரம்பித்தது. கூட்டம் “அண்ணாமலைக்கு அரோகரா... “ என்று ஆர்ப்பரித்தது. கணபதி அசந்து போனார். இதில் ஏதோ பூடகமான விஷயம் உள்ளது என்று உணர்ந்தார். கணபதியின் சீடர்களில் ஒருவரான விஸ்வநாத ஐயர் அவரை தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். கணபதி அவரது வீட்டிற்கு சென்றார்.
விஸ்வநாத ஐயரின் கிரஹத்தில் அவருக்கு அன்று காலை நடந்தைவகளையே மீண்டும் மீண்டும் அசை போட்டுக்கொண்டிருந்தார். நிலைகுத்தி நின்றிருந்த தேரானது இவ்வுலகத்தில் ஆன்மிக நெறி சுத்தமாக நின்றுவிட்டதையும் பின்னர் தான் தொட்ட பின்பு கடகடவென்று ஓடிய தேர் அந்நெறியை தாராளமாகத் தழைக்கச் செய்வது போலவும் சிந்தித்தார். உட்காரமுடியாமல் தவித்த கணபதி மத்தியான்ன வேளையில் விரூபாக்ஷி குகையை நோக்கி நடந்தார்.
ப்ராம்மண ஸ்வாமி தனிமையில் அமர்ந்திருந்தார். அவருடைய உதவியாளர் பழனி ஸ்வாமியும் ஒரு ஓரத்தில் இருந்தார். கணபதி ப்ராம்மண ஸ்வாமியை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். என்ன வேண்டும் என்கிற தோரணையில் ப்ராம்மண ஸ்வாமி பார்த்தார்.
“ஸ்வாமி! என்னுடைய சக்திக்கேற்ப மந்திர ஜெபங்களைப் படித்துக் கற்றுணர்ந்தேன். ஆனால் இன்னமும் சத்தியமான தவம் என்ன என்பதை அறிகிலேன். அதை அறிவதற்கும் உணர்வதற்கும் தங்களின் இறை வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அருள வேண்டும் ஆண்டவரே” என்று ,மீண்டும் ஒரு முறை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வேண்டினார்.
கொஞ்ச நேரம் ப்ராம்மண ஸ்வாமி கண்கொட்டாமல் கணபதியையே பார்த்துக்கொண்டிருந்தார். சில நிமிடங்கள் அமைதியாய்க் கரைந்தன. பின்பு மெதுவாய்ப் பேச ஆரம்பித்தார்.
“யாரொருவர் தனக்குள் கிளர்ந்தெழும் ‘நான்’ என்பதை அசைவில்லாமல் உற்று நோக்குகிறார்களோ அதுவே ஒரு தவம். ஜபம் செய்யும் பொழுது எழும் மந்திர த்வனியின் அதிர்வுகளை உள்வாங்கிக்கொண்டு வெறுமனே அமர்ந்திருப்பதும் தவமே”
இத்தகைய ஆன்மிக வழிகாட்டுதலினால் கணபதிக்கு சொல்லவொணா ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. மீண்டும் ப்ராம்மணசாமியை விழுந்து வணங்கினார்.
ப்ராம்மணசாமி கணபதியை மீண்டும் தவமியற்றும் பாதைக்கு கொண்டு வந்தது 1907ம் வருடம் நவம்பர் மாதம் பதினெட்டாம் தேதி. ஞானசொரூபனான ஒரு குரு வாய்ப்பதற்கு கொடுத்துவைத்திருக்க வேண்டும். கணபதிக்கு அது திருவண்ணாமலையில் வாய்த்தது. வேதங்களில் விவரிக்கப்படும் தவவாழ்வை போதிக்கும் குரு இங்கே வாழ்கிறார். அவரே அந்த அனுபவக்கடலில் மூழ்கிய முனிவராகவும் இருக்கிறார். அவரின் வழித்தடத்தை பின்பற்றுவர்கள் வேத கலாச்சாரத்தை பின்பற்றுபவராகிறார்கள். புத்தியும் பிராணனும் ஓரிடத்தில் நிசப்தமாக ஆத்மா என்கிற புள்ளியில்இணையவேண்டும். இது அங்கே அவர் எதிரே நடக்க ப்ராம்மணசாமி ஒத்துக்கொண்டார். இதை விட வேறு பேறு உண்டோ?
ஆத்மவிசாரம் அவ்வளவு எளிதல்ல. விழிப்பற்ற விழிப்புநிலையில் மனதோடு ஒன்ற வேண்டும். அலைபாயும் மனதை அடக்கி அதை அந்த விழிப்பற்ற விழிப்பு நிலைக்கு தள்ளுவது சிரமமான காரியம். பிடிவாதமாக மனதைக் கட்டிப்போடமுடியாது. ‘நான்’ என்ற அதிகார ஊற்றின் கண்ணில் மனதை நிலை நிறுத்துவது ஒரு கலை. யோகத்தின் உச்சம். தபஸின் கால். இப்படியிருப்பது லேசுப்பட்டதில்லை. தான் என்கிற அகந்தையை விட்டொழிக்க வேண்டும். அதிலிருந்து விடுபட்டு ”தான் யார்?” என்பதைக் கண்டுகொள்ளும் முயற்சியாக தரை தட்டாத ஒரு கிணற்றுக்குள்ளே தலைகீழாக குதிப்பது போல.. ஆழம்.. ஆழம்...ஆழம்... என்று போய்க்கொண்டே “நான்”னைக் கண்டுபிடிக்க பயணிக்க வேண்டும்.
ப்ராம்மண ஸ்வாமியிடமிருந்து இந்த ஆத்மவிசார வித்தையை எளிதில் கற்றுக்கொண்டார் கணபதி. இதில் ஒருநிலைப்பட்டு அடங்குவது மிகவும் கடினம் என்று வியந்தார்.
சிறு சலனத்தில் சிந்தனை கலைந்தார். பழனி ஸ்வாமி உள்ளே வந்தார்.
“ப்ராம்மண ஸ்வாமியின் இயற் பெயர் என்ன?” ஆர்வமாய் வினவினார் கணபதி.
“வெங்கட்ராமன்”
மனதில் இருமுறை அப்பெயரை உச்சரித்தார். பின்பு கண்களை மூடி “ரமணா.. ரமணா” என்று மந்திர உச்சாடனம் செய்வது போல சத்தமாக சொன்னார். பழனி ஸ்வாமிக்கு அந்தப் பெயர் மிகவும் பிடித்துப்போனது. ரமணர் மஹரிஷி. அன்றிலிருந்து கணபதி ப்ராம்மண ஸ்வாமியை “பகவான் ரமண மஹரிஷி” என்று வாய் நிறைய அழைக்கலானார். தன்னுடைய குருவின் புகழ்பாடி ஒரு ஐந்து ஸ்லோகங்களை அப்பொழுதே இயற்றிப் பாடினார். குழு மகிழ்ந்தது. ரமணர் ஒரு இறைப் புன்னகையோடு அந்த ஸ்லோகங்களை ஏற்றுக்கொண்டு அமர்ந்திருந்தார். இருவரும் இருந்த அந்த அறையில் ஆத்ம ஜோதி சுடர்விட்டு பிரகாசமாய் எரிந்தது.
கணபதி படித்த ஸ்லோகத்துக்கும் “ரமணா” என்று அன்பொழுக பக்தியோடு அழைத்தற்கும் பதிலாக பகவான் ரமணர் அப்போது......

கணபதி முனி - பாகம் 22: திருவண்ணாமலை தபஸ்

அந்தப் படத்தில் இருந்தவர் தியோசாஃபிகல் சொஸைட்டியின் தலைவராக இருந்த கர்னல் ஆல்காட். கணபதிக்கு ஆச்சரியமாக இருந்தது. கர்னல் ஆல்காட்தான் பத்ரகாவா? சென்னையில் இருக்கும் போது தன் கண்ணில் ஏனிந்த ஆல்காட்டின் படம் படவில்லை என்று அதிசயித்தார். அடையாறில் தங்கியிருந்த போது இவரைச் சந்தித்திருந்தால் நிச்சயமாக தங்களது பொது அபிப்பிராயங்களைப் பற்றிப் பேசியிருக்கலாம் என்று எண்ணிக்கொண்டார். தன்னுடைய பிறப்பின் லட்சியத்தை நிறைவேற்றாமல் பத்ரகா ஏன் பாதிலேயே பரலோகம் சென்றார் என்று கணபதியின் மூளைக்குள் ஆயிரமாயிரம் கேள்விகளாய்க் கிளைவிட்டு வெடித்தது.

ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோ போன்ற மேலை நாடுகளுக்குச் சென்று ஆன்மிகத்தின் அருமைபெருமைகளை விளக்கியது போல கர்னல் ஆல்காட் ஒற்றுமையின் சாரத்தை இந்தியர்களிடம் விதைக்க வந்தார். பாரத தேசத்து மக்கள் தங்கள் பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் ஆன்மிக காரியங்களில் ஈடுபடவேண்டும் என்று கணபதி விரும்பினார். புலனின்பங்களில் ஈடுபட்டு மேனியின் புறவயமான வாழ்க்கையில் இன்பம் நுகரும் மேலை நாட்டவரும் ஆன்மிகத்தில் ஈடுபடவேண்டும். இப்படியாக பல விஷயங்களை மூளையில் போட்டுப் புரட்டிக்கொண்டிருந்த கணபதி மீண்டும் தவமியற்ற இறங்கினார்.
இவ்வேளையில் அவரது தந்தையார் நரசிம்மசாஸ்திரி தனது மகனையும் மருமகளையும் பார்க்க விரும்பினார். அவருக்கு மீண்டும் கண்ணில் பார்வைக் கோளாறு ஏற்பட்டது. கலுவராயிக்கு ஏப்ரலில் சென்றார் கணபதி. சிலாக்கியமான பல விஷயங்களைப் பேசி அவருடன் பொழுதைக் கழித்தார். பின்னர் அங்கிருந்து தீர்த்தயாத்திரையாக ப்ரயாகைக்குப் புறப்பட்டார். கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் புண்ணிய ஸ்நானம் செய்தால் தந்தைக்கு பார்வை பிழைக்கும் என்று நம்பினார்.
ப்ரயாகை சென்று மீண்டும் கலுவராயிக்கு திரும்பும்போது அவரது மகன் மஹாதேவனுக்கு அம்மை போட்டிருப்பதாக தகவல் வந்தது. மஹாதேவன் வேலூரில் சிவராம சாஸ்திரியின் அரவணைப்பில் இருந்தான். நேரே வேலூர் சென்று சீதளாதேவி அம்மனைத் துதித்து பாடல்கள் பாடினார். மஹாதேவனைப் பீடித்திருந்த அம்மை நோய் உடனே விலகியது. விசாலாக்ஷி அப்போது கர்ப்பஸ்திரீயாக இருந்தார்.
படைவீடு வேலூரிலிருந்து 24 மைல்கள். அதுவரை கணபதி அங்கிருந்து அருள்பாலிக்கும் ரேணுகாதேவியை எட்டிப்பார்த்தது கிடையாது. அக்டோபரில் வரும் நவராத்ரியின் போது படைவீடு ரேணுகாதேவியம்மனை தரிசனம் செய்தார்கள். இவ்விடத்தில் மீண்டும் தவமியற்றும் எண்ணம் ஸ்திரப்பட்டது. படைவீடு கணபதியின் சரித்திரத்தில் திருப்புமுனையானது.
படைவீட்டிலிருந்து திரும்பிய உடன் பள்ளியில் ஏற்பட்ட சிறு வேண்டத்தகாத சம்பவத்தால் வேலையைத் துறக்கும் நிலைக்கு வந்தார் கணபதி. கற்கால நடைமுறையான ஜபதபங்களை விட்டொழிக்க வேண்டும் என்றார் ஹெட்மாஸ்டர் தாமஸ் ஹாரிஸ். நவீன யுகத்தில் அதெல்லாம் செல்லுபடியாகாது என்றும் அறிவுறுத்தினார். தவத்தினால் மேன்மை அடையமுடியும் என்று காட்டுகிறேன். அதற்கு முதல்படியாக இந்த வேலையை நான் ராஜினாமா செய்கிறேன் என்று கடிதம் கொடுத்தார். ஹாரிஸ் துணுக்குற்றார். தன்னால் ஒரு நல்ல ஆசிரியர் வேலையை விடுகிறார் என்று நொந்தார். நீங்கள் காரணமில்லை என்று அவரைத் தேற்றி, ஒரு கனலாகக் கழன்றுகொண்டிருந்த தபஸினால் வேலூரிலிருந்து அன்றிரவே ( 3-11-1907) கிளம்பினார் கணபதி.
மறுநாள் காலையில் திருவண்ணாமலையில் வந்திறங்கினார் கணபதி. அவரது சீடரான வாசுதேவ சாஸ்திரி தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். திடீரென்று வேலையை விட்டுவிட்டு வந்திறங்கிய மாஸ்டரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாலும் தீபாவளியில் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று மகிழ்ச்சியடைந்தார் வாசுதேவ சாஸ்திரி. ஊரே கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருக்கும் தீபாவளியை தனது குருவோட சேர்ந்து கொண்டாடலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
“வாசுதேவா.. எனக்கு ஒரு தனியான அமைதியான இடத்தைக் காட்டு. நான் தவமியற்ற வேண்டும்.” என்றார் கணபதி ஆசுவாசமாக. ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த பச்சையம்மன் கோயில் ( மரகத ஷ்யாமலாம்பாள் கோயில் ) தோதாக இருக்கும் என்று பரிந்துரைத்தார். “நான் திருவண்ணாமலைக்குத் திரும்பியதை உன்னுடன் வைத்துக்கொள்” என்று பச்சையம்மன் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றார். வாசுதேவ சாஸ்திரி தனது குருவுக்குத் தேவையானவைகளை பிரத்யேகமாக கவனித்துக்கொண்டார்.
ஷ்யாமலாம்பாளை மந்த்ரியாம்பா (திரிபுரசுந்தரியின் மந்திரி) என்று லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கும். திரும்பவும் தவ வாழ்விற்கு திரும்பியதில் கணபதிக்கு உள்ளூர மகிழ்ச்சி. அன்றிரவு அர்த்தஜாமத்திற்குப் பிறகு அவர் தவமியிற்றிக் கொண்டிருக்கும் போது பச்சையம்மனின் கர்பக்கிரஹத்திலிருந்து இசை ஒலிப்பது கேட்டது. உற்றுக் கேட்டார். நடனமாடுபவர்களுக்குத் தோதான லயம் போல தோம்..தொம்.தகதிமி என்று கேட்டது. நேரம் செல்லச் செல்ல இந்த முழக்கம் வலுத்து பேரிரைச்சலாகக் கேட்டது.
வாசல் மண்டபத்தில் வடக்கு நோக்கி அமர்ந்திருந்த கணபதி கர்ப்பக்கிரஹம் நோக்கித் திரும்பினார். அவர் கண்ணுக்கு நிறைய வினோத கொடூர உருவங்கள் தோன்றின. செவிப்பறையைக் கிழிப்பது போன்ற ”கெக்கெக்கே...ஹெஹ்ஹே...” சப்தங்களோடு கோரத் தாண்டவமாடிக்கொண்டு அவ்வுருவங்கள் கணபதியை நோக்கி வரத்துவங்கின. இதில் துணுக்குற்ற கணபதி அம்பிகையை
”உக்ஷராஜ வாஹனஸ்ய ஜீவிதாத்கரீயஸி 
பக்ஷிராஜ வாஹநாதி வர்ண்யமான வைபவா 
கேகிலோக சக்ரவர்த்தி வாஹனேன புத்ரிணீ 
வாரணாரி ஸார்வபௌம வாஹனா கதிர்மம”

(நந்திவாஹனனின் பிராணநாயகியே, பக்ஷிகளின் ராஜாவாகிய கருடவாஹனத்தில் வரும் விஷ்ணுவை ஆராதிப்பவர்களாலும் துதிக்கப்படுபவளே, வண்ண மயிலேறும் குமாரஸ்வாமியின் அன்னையே, யானைகள் மிரளும் சிம்மத்தை வாஹனமாகக் கொண்டவளே.. எம்மைக் காத்தருள்வாய்)
என்று துணைக்கு அழைத்தார்.
உடனே அங்கு நிலவிய குழப்பம் பனித்திரை போல மாயமாய் விலகியது. வினோத ஆட்டங்கள் சட்டென்று அடங்கின. சமூகத்தில் ஆன்மிகத்திற்கு எதிராக நிலவும் சில துர்நிமித்தங்களே அப்படி கொடூரமாக ஆட்டம் போட்டதை உணர்ந்தார். இதைக் களையெடுக்க உறுதிபூண்டார். இப்படிச் செய்தால் இப்பூலோகத்தில் இறைத்தன்மை பூக்கும்.
புராண கால ரிஷிகள் தங்களது தபோ வலிமையால் பல தெய்வீக அவதாரங்களுக்குக் காரணமானார்கள். வசிஷ்டரின் தவத்தால் மஹாவிஷ்ணுவின் இராமாவதாரம் நிகழ்ந்தது. குமரனின் படைக்கு ப்ருஹஸ்பதியின் அமைச்சர்கள் உதவி புரிந்தார்கள். கணபதி, தனது பெயருக்கு ஏற்ப இப்புவியில் ஆன்மிகத்திற்கும் இறைநிலையை எட்டுவதற்கும் தடையாக இருப்பவைகளை வேரறுக்க இன்னும் தீவிரமாக தவமியற்ற உறுதி பூண்டார்.
பொழுது புலர்ந்தது. நேற்றிரவு நடந்தவைகளை அசை போட்டார் கணபதி. ப்ரணவ மந்திரத்தில் தவமியற்ற முடிவு செய்தார். ஆனால் அதற்கு அமைதியான தனிமையான சூழல் தேவை. பச்சையம்மன் கோவில் ஜனங்களின் அதிக சலசலப்புக்கு மத்தியில் இருந்தது.
“ஸ்வாமி... தென்மேற்கில் இருக்கும் ந்ருதி லிங்கத்தின் அருகில் நீங்கள் தவமியற்றலாம். எந்தவிதமான தொந்தரவுகளும் இல்லாத இடம்.” என்றார் வாசுவேதவ சாஸ்திரி அடக்கமாக.
ந்ருதி லிங்கம் வந்தடைந்தார் கணபதி. இயற்கையான தனிமையான சூழல் அவருக்கு தவமியற்ற மிகுந்த ஊக்கமளித்தது. சுற்றிலும் பசுமை. நேரே அண்ணாமலை. வேறென்ன வேண்டும்? அது ஒரு கார்த்திகை மாதம். பத்து நாட்கள் அருணாசலேஸ்வரருக்கு உற்சவம் கோலாகலமாக நடைபெறும். தினமும் அபீதகுஜாம்பாளுடன் அருணாசலேஸ்வரர் திருவீதியுலா வருவார். அக்கம்பக்கத்திலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் திருவண்ணாமலையில் நிரம்பி வழியும். அம்பிகையுடன் சிவனாரின் திருவலம் கண்டு உள்ளம் மகிழ்வர்.
ஏழாம் நாள் தேர்த்திருவிழா.
அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது....

கோப்பு

அனுதினமும் நாங்கள் இருவரும் ட்ராஃபிக் கடலோடி திரவியம் தேடித் திரும்பும் போது இதுபோல அகாலமாகிவிடுகிறது.
"அப்பா! ட்ரான்ஸ்பரன்ட் ஃபைல் இருக்கா?" ஓடிவந்து இடித்தாள் சின்னவள்.
"ஏன்?"
"Answer Sheets file ப்பா"
"அப்டீன்னா?"
"இருக்கா.. இல்லியா? ரீஸன் அப்புறம் சொல்றேனே" பெரியமனுஷாள் தோரணையில் பதில்.
"பசிக்கறது.. சாப்டுட்டு வரேனே.. ப்ளீஸ்..."
"ஓகே. நா மாடிக்குப் போய் தேடி வக்கறேன். டின்னர் முடிச்சிட்டு வாப்பா.."
சாப்பிட்டு சித்திக்கு சிஷ்ருஷைகளை செய்துவிட்டு மாடிக்குத் தாவி ஓடினேன்.

படுக்கையின் மேலே ஒரு கிழிந்த பேப்பர் ஆடியது. பறக்காமல் இருக்க அதன் மேல் ஹேர் க்ளிப் இரண்டும் ஸ்கெட்சும் பேப்பர் வெயிட்டாய். படித்தேன்.
புன்னகையோடு குனிந்து நெற்றியில் முத்தமிடும்போது காதருகே "ஃபைல் கெடச்சுதா?" என்று கிசுகிசுப்பாய்க் கேட்டேன்.
மெதுவாய் இமை திறந்து பதுமையாய் வாய் திறந்து "இதோ இருக்குப்பா.. அங்க இருக்கிற பேப்பரையெல்லாம் இதுக்குள்ளே எடுத்து வச்சுடேன்.. ப்ளீஸ்.." சொல்லிக்கொண்டே தூங்கிப்போனாள்.
முழுநாளும் கசக்கிப்பிழியப்பட்ட மனசு சட்டென மலர்ந்து தேனாய் இனித்தது. குட்டி சொர்க்கம் என்னைச் சூழ்ந்தது.
செல்லமே நீ வாழ்க!!

சிகே என்கிற சந்திரகாந்த்



ஐஸ் க்யூப்ஸோடு கலந்த Black Dog தொண்டையைச் சில்லிட்டு வயிற்றில் மிதமாய் எரிந்து ஜோராய்க் கரைந்துகொண்டிருந்தது. சிகேவுக்கு ஃபுல் மப்பு. நேற்றிரவு அடித்த கூத்துகளெல்லாம் கலர்க்கலராக கண் முன்னே சுழன்றது. பானுஸ்ரீக்கு ரொம்பவும்தான் ஏத்தம். எவ்ளோ திமிர் இருந்தா ”தில்லிருந்தா நீ வாடா..... உன்னை நிக்க வச்சுக் வகுந்து ரெண்டா கூறு போட்ருவேன்.. ஸ்கௌண்ட்ரல்...” தொண்டை கிழிய கத்தினாளே. கையில் கோப்பையுடன் எவ்ளோ பேர் வேடிக்கைப் பார்த்தார்கள். சிகேவுக்கு மனதில் புகைந்துகொண்டிருந்தது.

“ஃபோகஸ் நேரேடா.... நீயும் க்ரேன்ல ஏறு... டேய்... பின்னால நிக்கறவங்களை ஓரமா போச்சொல்லு..... ஃப்ரேம் அசிங்கமாவுது... ” சலசலப்புகள் காதில் விழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார் சிகே.
கைலியை மடித்துக்கட்டிக் கொண்டு மீன்பாடியில் ஏறி உட்கார்ந்தாயிற்று. ஆமாம். நீங்கள் இந்தப் படத்தில் பார்ப்பது சி.கேவைத்தான். பஸ் ஸ்டாண்ட் சமீப மார்க்கெட்டின் மூ.சந்திற்கு பக்கத்து ஓரம். இன்னும் அரை மணி நேரமாவது இப்படி தம் பிடித்துத் தேமேன்னு அமர்ந்திருக்கவேண்டும். “சைதாப்பேட்டை பாலத்தாண்ட ஒரு எறக்கம் வருமே... அங்கேயிருந்து ஈர்க்குச்சிக்கு சுடிதார் போட்டுவுட்டா மாதிரி வரும்டா இந்த ஜிகிடி..” என்று தகவலறிந்த வட்டாரங்கள் சரக்கு கொஞ்சம் ஏறியவுடன் பார்ட்டிகளில் கெக்கேக்கே என்று சிரித்து கைதட்டுவார்கள். சி.கேவுக்கு இந்த மாதிரி ஜனங்களிடம் நெருங்குவதற்கு பயம். தூரத்திலிருந்து காதை மட்டும் திறந்துவைத்துக்கொண்டு லாகிரியை ரசித்துச் சீப்பிக்கொண்டிருப்பார். ஐம்பதிலிருந்து ஐம்பத்தைந்து இருக்குமா? “வைரம் பாஞ்ச கட்டைடா..” என்று போனவாரம் டெக்ஸாஸிலிருந்து இரண்டு நாட்கள் சென்னைக்கு வந்திருந்த பெரியவன் விக்கியிடம் முஷ்டி மடக்கினார். “பார்த்துப்பா.. புடைக்கிற நரம்புல சுளுக்கிக்கப்போவுது.... அப்புறம் எல்லாம் கேன்சலாயிடும்.. ஸ்காட்ச்சுக்கு டப்பு கெடைக்காது நைனா...” என்று கையை இழுத்துக் கிண்டலடித்தான் விக்கி.
”வண்டியைக் கொஞ்சம் நகர்த்துப்பா...” என்ற குரல் சி.கேவைப் பிடித்து அங்கே இழுத்துவந்தது.
“நானும் இறங்கணுமா?” எழுந்திருக்க எத்தனித்தார்.
“நோ..நோ.. சி.கே.. நீங்க அப்படியே இருங்க... டேய் பழனி... வண்டியை செவுத்து ஓரத்துக்கு நவுத்துடா... அப்பதான் ஆங்கிள் சரியா இருக்கும்... ஃப்ரேம்ல அந்த போஸ்டர்லாம் வரணும்... அப்படியே ஓடிப்போய் தந்தி வாங்கிட்டு வா... மீன்பாடில உட்கார்ந்திருக்க சி.கே முன்னாடி போடு.. ”
பழனி சுவற்றுக்கு முட்டுக் கொடுக்கும் தூரத்தில் வண்டியை பாந்தமாக நிறுத்தினான். “தந்தி வாங்கிட்டுவா...” என்று தெருமுனைக்கு குரல் கொடுத்தான்.
“சி.கே.. பீ கூல்.. டிஸ்டர்ப்டா இருக்கீங்களா? யு ஹாட் எனஃப் ஸ்லீப் யெஸ்டர்டே? இப்போ உங்களோட மூட் ரொம்ப முக்கியம்... இல்லைனா இந்த சீன் எகிறிடும்..”
சென்ற வருடத்தின் பெஸ்ட் ஃப்லிம் மேக்கர் ஆதித்யா. ஏழு வெள்ளித்திரைக்கு வந்தது. ஏழும் சூப்பர் டூப்பர் ஹிட். ஏ.பி.சி என்று எல்லா செண்டரும் படம் பிச்சிக்கிட்டுப் பறந்தது. படத்துக்குப் படம் மக்களைப் பைத்தியம் பிடிக்க வைத்தான் ஆதி. நாற்பதில் இருபதின் உற்சாகம். எதிலும் உச்சம் பார்க்காமல் விடமாட்டான். விடாக்கொண்டன். ஸ்வாமி விவேகானந்தரின் அவேக் அரைஸ்ஸை அதிதீவிரமாக பின்பற்றுபவன். இப்படி சொல்லும் போது சிலர் ”பானுஸ்ரீயையும்தான்” என்று அவன் முதுகுக்குப் பின்னால் பேசுவார்கள். “என்ன பண்ணுவீங்களோ.. ஏது பண்ணுவீங்களோ.. எனக்குத் தெரியாது....” என்று விரட்ட ஆரம்பித்துவிட்டால் அவன் பக்கத்தில் ஒரு பயல் நிற்கமாட்டான். தெறித்து ஓடிவிடுவார்கள்.
“ஷாட் ரெடி பண்ணனும்... ADயெல்லாம் என்ன எழவைப் பண்றானுங்களோ... காசு கொடுத்து வச்சிருக்கிற என் புத்தியை.. ” என்று முடிக்காமல் விட்டவனின் அருகில் செருப்பால அடிக்கணுமா என்பது போல் பார்த்துக்கொண்டே ஒரு அஸிஸ்டெண்ட் வந்தான்.
“பானு எங்கடா?”
பேய் முழி முழித்தான். டைனோஸரிடம் மாட்டிய பூனையாய் “தெர்ல சார்... இந்நேரம் வந்திருப்பாங்கன்னு....” கடைசி ‘னு’வை எப்போது முடிப்பான் என்று தெரியாமல் இன்ஃபினிட்டியாய் இழுத்துக்கொண்டிருந்தான்.
“கோ.. சர்ச் ஹர்.. தட் ப்ளடி ஹாஸ் டு பி ஹியர் இன் அனதர் ஃபைவ் மினிட்ஸ்... கோ..கோ...” செட் அடங்க அலறினான். பூனை தலை தெறிக்க ஓடியது.
பரபரப்பானது மொத்த யூனிட்டும். அடுத்ததாக வரும் கனவு சீனுக்கு க்ரூப் ஆடுவதற்கு குழுமியிருந்த துணைகளில் வாயெல்லாம் வெற்றிலை போட்டிருந்த ஒருத்தி ”பானு எங்கேன்னு இவன் கிட்டேதானே கேட்கணும்.. இவன் ஏன் எல்லார்கிட்டேயும் கேட்டுக்கிட்டிருக்கான்... பைத்தியமாயிட்டான் போல்ருக்கு....”. தெலுங்கு சுமதியும் பாலிவுட் மல்லிகாவும் சிரித்தார்கள். “ராத்திரி எங்கே விட்டோம்னு மறந்துட்டானோ....” என்று விஷமமாய்க் கண்ணடித்தாள் மல்லி. “கன்னிமாராவுலதான்....” என்று பதிலுக்கு கண்ணடித்து ஆமோதித்தாள் சுமதி. குழு சிரிப்பில் குலுங்கியது.
“டிஃபன் ஆச்சுல்ல... இப்படி கூடிக் கூடி ஒக்காறாதீங்கன்னு எத்தன தடவ சொல்றது.... பாவனா வந்து நின்னப்புறம் ரெண்டு நிமிசத்துல டான்ஸுதான்.... மாஸ்டர் குடுத்த ஸ்டெப்ஸை ட்ரையல் பார்க்கலாம்ல...ம்... இல்லைன்னா காலு சுளுக்கினா மாதிரி கன்னாபின்னான்னு ஸ்டெப்ஸ் போட்டு பத்து பதினைஞ்சு டேக் வாங்கி தாலிய அறுப்பீங்க... ம்.. ம்.. அந்த மூலைக்கு போங்க...” என்று ஆதியின் பின்னால் நிற்கும் படைவீரன் ஒருவன் அனைவருக்கும் தார்க்குச்சி போட்டான்.
”மீன்பாடி வண்டிக்குப் பக்கத்துல ஒருத்தனை நிக்கச் சொல்லு... போனதடவை சொன்னேன் பாண்ட் வாண்டாம்... கைலியோட நிக்கச்சொல்லுன்னு.... வுட்டா ஆலயம்மன் கோயில் பூசாரிக்கே பாண்ட் போட்டு வலது காதுல தொங்கட்டானோட ப்ரேக் டான்ஸ் ஆட வுட்ருவீங்கப்பா....ச்சே...”
“அவரு சாமியடறத்துக்குப் பதிலா ‘மாரியம்மா..மாரியம்மா...’ ப்ரேக் ஆடினா நல்லாயிருக்ம்ல ஆதி...”
“சிகே.. நக்கலா... இதையே ராமராஜன் கரகம்னு ஆடிட்டாரு...”
எல்லாம் தயார். மொத்த யூனிட்டும் காத்திருக்கிறது. பானுஸ்ரீ இன்னும் வரவில்லை. குறுகிய காலத்தில் முன்னுக்கு வந்தவள். அழகும் அறிவும் சேர்ந்து நிறைகுடமாய் தளும்புகிறவள். சிரித்தால் கன்னத்தில் குழி விழுந்து இழுக்கும். ஆதி தவித்தான். சி.கே ஒரு யோகிபோல அந்த மீன்பாடியில் அமர்ந்திருந்தார். மீண்டும் மீண்டும் அவள் கத்தியது நினைவுக்கு வந்து அவரைத் துரத்தியது. “டாட்.. வாட்ஸ் தெ ப்ராப்ளம் வித் தட் கேர்ள்?” என்று நேற்று விக்கி ஸ்கைப்பில் கூப்பிட்டான்.
“ஏண்டா?”
“ஃபேஸ்புக்ல கன்னாபின்னான்னு ஸ்டேட்டஸ் போட்ருக்கா... ஆயிரக்கணக்குல லைக்கு... நூத்துக்கணக்குல கமெண்ட்ஸ்... “
“என்னான்னு?”
“Touch me. If you dare to go to hell. ‪#‎NotForCK‬
“என்னடா சொல்றே?”
“இதுதாம்பா ட்வீட்டர்ல ஃபேஸ்புக்லல்லாம் போட்ருக்கா...”
”ம்... இப்ப என்ன?”
“இப்ப என்னவா? ஊரே பத்தி எரியுது... கமெண்ட்ல ஒருத்தன் கேக்கறான் ஏற்கனவே அம்பது பர்செண்ட் பானுஸ்ரீக்குக் கொடுத்தாச்சேன்னு.. இன்னொருத்தன் மாறுகால் மாறுகையா மேடம்னு... வாட் இஸ் திஸ் க்ராப் பா...” சகட்டுமேனிக்கு விக்கி எகிறினான்.
“பொதுவா பானு துணி கிடைக்காத பரம ஏழை மாதிரி சிங்கிள் பீஸ்ல கிளாமரஸ்ஸான படம்தானே போடுவா.. இப்ப எதுக்குடா பொங்கறா?” இண்டெர்நெட் தொடர்பு துண்டித்ததில் விக்கி மறைந்துபோனான்.
சி.கே என்கிற சந்திரகாந்த் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் ஜாம்பவான். ஐம்பது வயசுக்கு மேலே ஆனாலும் தினமும் நெற்றியில் விபூதி துலங்கும் சில ப்ரொட்யூசர்களும் “இதை எடுத்தா நிச்சயமா சில்வர் ஜூப்லிதான் சார்...” என்று கண்களில் நம்பிக்கைத் தெரிய கதை சொல்லும் இளைய ஃப்ளிம் மேக்கர்களும் அவரது ஆஃபீஸ் நோக்கி படையெடுக்கிறார்கள்.
இரண்டு மாதங்களாக இந்தப் பிரச்சனை இழுக்கிறது. வெளிவட்டாரத்தில் அனைவரும் விசாரித்துவிட்டார்கள். தலைகாட்ட முடியவில்லை. சி.கே இதில் கொஞ்சம் வீக்தான். குடும்பத்திற்கே தெரிந்த கதை. "ஸ்ருதிபேதம்" வெற்றி விழா பார்ட்டியில் ஈஸியாரில் பானுஸ்ரீயின் மேல் கைவைத்தது தப்பாகிவிட்டது. இந்த ஆதி பயலும் அங்கே இருந்தான். மூச்சுக்காட்டாமல் நகர்ந்துவிட்டான். அன்று Mind Twisters ஜெயின்தான் விலக்கிவிட்டார்.
“பானு வந்தாச்சா?” ஆதி அலறினான்.
செட் நிசப்தமானது. இப்படியும் அப்படியுமாக ஒன்றிரண்டு மணித்துளிகள் நகர்ந்தன.
“ஓகே... சி.கேவோட இந்த சீனை முடிச்சிடுவோம்.. சிகே... இந்த படத்தின்படி உங்க பையன் ஒரு ஊதாரி.. நீங்க உழைக்கிற காசையெல்லாம் குடிச்சி அழிக்கிறான். பத்தாதத்துக்கு பொம்பளை சகவாசம். பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல கொரியர் ஆஃபீஸ் இருக்கு. அங்க உங்களுக்கு தெனமும் சவாரி குடுப்பாங்க.. அதுக்காக வண்டியைப் போட்டு உட்கார்ந்திருக்கீங்க.. அப்போ.... ஃபுல்லா குடிச்சிட்டு உங்க பையன் தள்ளாடிக்கிட்டே எதிர்சாரியில போறான்......”
“ஆதி.. நூறாவது தடவையா சொல்றீங்க... விட்டுடுங்க... நான் பார்த்துக்கிறேன்.. அடப்பாவி நீயெல்லாம் விளங்குவியா? உன்னால வீட்டுக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லையே... நாசமாப்போறவனே... அப்டீங்கற மாதிரி நான் பார்த்துக்கிட்டே இருக்கணும்... அப்போ ஹீரோயின் பானுஸ்ரீயும் இந்த மார்க்கெட்டுக்கு கார்ல வந்து இறங்குவாங்க... “
“ஆமா.. அதுக்கப்புறம் நீங்க போய் பையனா மேக்கப் போட்டுட்டு வந்தா பானுஸ்ரீயோட கட்டிப்பிடிச்சு ஒரு ட்யூட் ஆடிட்டு இன்னிக்கி ஷெட்யூலை முடிச்சுக்கலாம்..”
”ம்.. சரி.. ஆக்‌ஷன் குடுங்க...”
சி.கே கேமிரா படம் பிடிக்காத மார்க்கெட் மூலைக்கு கண்களை விரட்டி மோன நினையில் அமர்ந்திருந்தார்.
“ஸ்டார்ட்.. கேமிரா.. ஆக்‌ஷன்...”
க்ரேனில் ஜிவ்வென்று வானம் பார்க்க கேமிரா பறந்துகொண்டே படம் பிடித்துக்கொண்டிருக்கையில்...
“யாருப்பா.. அது.. பாதியில குறுக்கால வர்றது?”
போலீஸ். வண்டியில் உட்கார்ந்திருந்த சி.கேவை கரம் பற்றி இறக்கி தூரத்தில் நிறுத்தியிருந்த ஜீப்பிற்கு அழைத்துக்கொண்டு போனார்கள். மொத்த யூனிட்டும் ஸ்தம்பித்தது. லைட் பாய் ஒருவன் பக்கத்தில் நிற்பவன் காதில் கிசுகிசுத்தான்.
“பானுஸ்ரீயை யாரோ கொன்னுட்டாங்களாம்”

பின்குறிப்பு: இப்பதிவோடு இணைத்திருக்கும் படத்திற்கு ஒரு கதை எழுத வேண்டும் என்று முகநூலில் கேட்டார்கள். ஒரு நெடுங்கதையை சிறுகதையாக சுருக்கிவிட்டேன். பானுஸ்ரீயின் கொலை மர்மத்தை விடுவிப்பவர்க்கு ஒரு டபரா செட் பரிசு.

தெலுங்கு ஆர்.வி.எஸ்

சுந்தரத் தெலுங்கு போலவே நம் காதுக்குள் அமிழ்தைப் பொழியும் தமிழை உச்சரிப்பார் சுரேஷ். ”இத்துக்கோ.. வந்துட்டோ... நீங்க பெரீய அத்திகாரி....” என்று சில தமிழ் எழுத்துக்கள் அவரது வாயில் கடாமுடாவென்று அரைபட்டு உடைபடுவது விஜயவாடா விஜயலெக்ஷ்மி நுனி நாக்கில் ஸ்டைல் தமிழ் பேசுவது போல ரசிக்கும்படியாக இருக்கும். [விஜயவாடா விஜயலெக்ஷ்மி யாரென்று தெரியாமல் தலையைச் சொறிபவர்கள் தனியாக கமெண்ட் பக்கம் வரவும்]
தலைமுடி கறுப்பாக இருந்ததிலிருந்து காதோரம் நரை ஏறியிருப்பது வரை காலம் கடந்து சிநேகிதம். கூகிளுக்குப் போட்டியாக தானொருவனாக நின்று ஜெகத்தோருக்குப் பதில் சொல்லியே தீர்வேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு புஸ்தகங்கள் படிப்பவர். இன்று எதையெதையோ பேசிக்கொண்டே இருந்த போது எதிர்பாராத க்ளைமாக்ஸாக தெலுங்கு இலக்கியம் பற்றி பேச்சு திரும்பியது.
“சுரேஷ்.. தெலுங்குல யாரெல்லாம் பெரிய இலக்கியவாதிகள்?”
“நெற்றயா பேரு இருக்காங்க.. யாரென்னு சொல்ல... .... .... ஆர்விஎஸ்?””
“ஆர்விஎஸ்ஸுக்கு தமிழே தகராறு... நாக்கு தள்ளுது.. ஏன் என்னை போயி தெலுங்கு இலக்கியவாதிகள் லிஸ்ட்ல ஏத்தி பேசுறீங்க சுரேஷ்.. மீகு தெலுகு தெல்லேது....”
“லேது... அது நாகு.... சரி... அதை விட்டுடுவோம்.. ஆர்விஎஸ்ஸுன்னு தெலுகுல பெரிய ரைட்டர் இருந்தாரு...”
”ஆர்விஎஸ்?”
”ஆமா... ராசகொண்டா விஸ்வநாத சாஸ்திரி... ர.வி.சாஸ்திரின்னு நிறையா பேரு சொல்லுவாங்க... நானு ஆர்.வி.எஸ்ன்னுதான் சொல்லுவேன்....”
“ஆஹா.. நம்ம பேரு... பெரிய ஆளா?”
“பின்ன... எப்பவுமே ரொம்ப கஷ்டப்படறவங்களை, டவுண்ட்ராடன்ஸை வச்சுக் கதை எழுதுவாரு.... அவரு லாயர்... வந்த கேசையெல்லாம் வச்சே கவர்மெண்ட்டை எதிர்த்து நெறையா Boldஆ எழுதுவாரு.. ”
“ம்.... என்னென்ன நாவல் எழுதியிருக்காரு... சுரேஷ் காரு....”
“அல்பஜீவின்னு ஒரு நாவல்.. அப்புறம்.. இன்னும் இருக்கு.... நாவலை விடுங்க.. ஒரு இன்சிடெண்ட் சொல்றேன்.. கேட்டுக்கோங்க.. அவரு எவ்ளோ பெரிய ஆளுன்னு புரியும்..”
“ம்..”
“என்.டி.ஆர் பெரிய ஆளு.. உங்களுக்கெல்லாம் தெரியும். விஷ்ணுவோட அவதாரம்னு நினைச்சுக்கிட்டே வாழ்ந்தவரு.. அவரோட ஃப்ரெண்டு ஸியென்னார்ன்னு.. அவரும் ஒரு ரைட்டரு... உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்காது.... ”
“ஸியென்னார்னா?”
“ஸி. நாராயண ரெட்டி... அவரு ஆர்விஎஸ்ஸுக்கும் ஃப்ரெண்டு.... ஆர்விஎஸ்ஸுக்கு ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆகி வீட்ல படுக்கையில கிடக்காரு... அப்போ ஸியென்னார் என்.டி.ஆர்கிட்டே ஆர்விஎஸ்ஸுக்கு எதுனா ஹெல்ப் பண்ணலாம்னு சொன்னாராம்... என்.டி.ஆரும் சரி என்ன தேவைன்னு பார்த்துக்கிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பினாரு... ஸியென்னார் நேரே ஆர்விஎஸ்கிட்டே வந்து உங்க கிட்னிக்கு என்.டி.ஆர் ஹெல்ப் பண்றேன்னு சொல்றாரு... என்ன சொல்றீங்க?ன்னு கேட்டாரு”
”ஓ... ஆர்.வி.எஸ் வேண்டாம்னு சொல்லியிருப்பாரே..”
“ஆமாம். எப்படி சொன்னாரு தெரியுமா?”
“எப்டி?”
“நானு உங்களுக்கு தெரிஞ்சவங்கன்னு என்.டி.ஆர் ஹெல்ப் பண்றாரு.. ஆனா ஊர்ல என்னை விட மோசமா எவ்ளோ பேரோ இருக்காங்க.. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணச் சொல்லுங்க.. நானு இந்த ஹெல்ப்பை எடுத்துக்கிறதை விட செத்துப் போய்டுவேன்.. வேண்டாம்...ன்னு சொல்லிட்டாரு... கொஞ்ச நாள்ல செத்தும் போய்ட்டாரு.. பெரிய மனுஷன்...”
”நெசம்மாவே பெரிய மனுஷந்தான்.. சின்னச் சின்ன ஹெல்ப்புக்கெல்லாம் அரசாங்கத்தையும் விருது தர்றவன் காலையெல்லாம் பிடித்துத் தொங்குகிற ஆளெல்லாம் இருக்கிற காலத்துல இப்படியும் ஒரு ஆளான்னு ஆச்சரியமா இருக்கு சுரேஷ்.. ”
“வேற யாராவது தெலுகு இலக்கியவாதிகள்?”
“இவருக்கு ஃப்ரெண்ட் காளிப்பட்டணம் ராமாராவ்னு ஒருத்தர்.. காரா காரான்னு வாசகர்கள் கூப்பிடுவாங்க... ரொம்ப குறைச்சலாதான் எழுதியிருக்காரு.. ஆனா அந்த குறைச்சலான கதைகள்ல தீசிஸ் பண்ணின ஆட்கள் ரொம்ப பேரு...”
“ஓ.. அப்படியென்ன கதை எழுதினாரு....”
“ஒரேயொரு வரி சொல்றேன்.. அப்புறமா சொல்லுங்க இவரு கதையெல்லாம் எப்படி எழுதியிருப்பாருன்னு....”
“ம்.. சொல்லுங்க...”
“காலில்லாத யானை படியில்லாத மாடிக்கு தூக்கிக்கிட்டுப் போறா மாதிரி...ன்னு ஒரு வரி வரும்.. நெனைச்சுப் பாருங்க.. ஒரு கேரெக்ட்ரால முடியாத காரியத்துக்கு அவர் கொடுத்த ஸிமிலி.... எப்படியிருக்கு?”
“அப்டிப்போட்டுத் தாக்கு... அபாரம் சுரேஷ்.. கதை பேரு என்ன?”
“யக்ஞம்”
அப்புறம் சுரேஷ் நிறையா தெலுங்கு இலக்கியங்கள் பற்றிப் பேசினார். எனக்கு காலில்லாத ஒரு யானையும் அதற்கு முன்னே படிகளில்லாத மாடியும் தோன்றித் தோன்றி மறைந்தது. காலில்லாத யானை.... படியில்லாத மாடி..... காலில்லாத யானை.... படியில்லாத மாடி.... காலில்லா.....படியில்லா........

ஓடுடா...ஓடு... ஆஃபீஸுக்கு..

முதுகைத் தட்டி ”ஒம் பேர் என்னடா?” என்று கேட்டால் ரெண்டு செகண்ட் யோசிப்போமே... அப்படியொரு காலை நேர பரபரப்புக்கு மத்தியில் ஐந்து நிமிடங்கள் என் ஸ்வர்க்க பூமிக்குச் சென்று வந்தேன்.
ஸ்ரீசங்கராவில் ஸ்ரீவித்யா ராஜகோபாலனை தரிசனம் செய்து வைத்தார்கள். ஏக வஸ்திரம், மார் பூரா பவிழம் ரத்தினம் வைர வைடூர்ய மாலைகள், காதுல கோபிகையர்களிடமிருந்து சண்டைப் போட்டுப் பிடுங்கிப் போட்டுண்ட தாடகங்கள், இடுப்புல தங்க சாவிக் கொத்து, ரெண்டு பக்கமும் ருக்மிணி சத்யபாமா சமேதராக உதடுகளில் புன்னகை தவழ ஜெகஜோதியாய் திரையில் தெரிந்தார்.
”கோபாலனைப் பார்க்க ஓடுவோம்...” என்று என் சித்தி பின்னாலிலிருந்து குரல் கொடுக்க சாரதா பாட்டி “வேட்டுப் போட்டுட்டாண்டா... புறப்பாடு ஆயிடும்...”ன்னு விசுக்விசுக்கென்று ஓடியதும், பாட்டி கையைப் பிடித்துக்கொண்டு நான் ஓடியதும்.... சஞ்சயனுக்கு குருக்ஷேத்திரம் தெரிந்தது போல கண் முன்னே வந்து என்னைப் பிடித்துத் தரதரவென்று எண்பது தொன்னூறுகளின் மன்னைக்கு இழுத்துச் சென்றது.
அம்மாவின் ”ஆஃபீஸுக்கு லேட்டாகலை?” மீண்டும் என்னைக் கொத்தாகக் கொண்டு வந்து சென்னையில் இறக்கியது.
ஹரித்ராநதி...
கோபாலன்...
சாரதா பாட்டி...
தேரடி...
கல் துவஜஸ்தம்பம்..
கோபுரவாசல் சிறிய திருவடி...
தமிழ் சார் ஜெம்பகேச தீக்ஷிதர்..
கிரிக்கெட் விளையாண்டு இப்போ கோபாலன் கைங்கர்யம் செய்யும் பிரசன்னா, ஸ்ரீராம்...
துளசி மாடம்...
தாயார் சன்னிதி...
மாதுவோடு (மாதவனின் சுருக்கம்) ஃபிஸிக்ஸ் படிச்ச ராமர் பாதம்..
காய் எடுத்து அடித்து விளையாடிய புன்னை மரம்
சொர்க்க வாசல்...
யானை செங்கமலம்.... 
திருமஞ்சன வீதி...
ஆஞ்சநேயர்...

“தம்பி... லோட்டாகலை?” இன்னொரு தடவை அம்மாவின் குரல்..
“ஓடுடா...ஓடு... ஆஃஃபீஸுக்கு...”

சிவ தனுசு

எட்டுச் சக்கரங்களையுடைய ஒரு வண்டி மைதானத்திற்குள் கம்பீரமாக நுழைகிறது. முன்னால் கொசகொசவெனப் பெருங்கூட்டம் முண்டியடிக்கிறது. ஜனத்திரளுக்குப் பின்னால் வரும் அது மாட்டு வண்டியா? குதிரை வண்டியா? இல்லையில்லை.. ஐயாயிரம் பேர் தேர் போல இழுத்துக்கொண்டு வருகிறார்கள். நேரே ஓரமாகப் பதினைந்து பிராயம் கூட நிரம்பாதவர்கள் இருவர் நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள். பக்கத்தில் ஒரு ஜடாமுடி ரிஷி. அப்புறம் தங்கக் க்ரீடம் ஜொலிக்க ஒரு வெண் தாடி வேந்தர்.
“ரொம்ப பேர்னால இத தூக்கவே முடியலை... இது ரொம்ப சின்ன பையனா இருக்குதே.... இதால முடியுமா?” முண்டாசுக் கட்டியிருந்தவர்கள் குழுமி நின்று பேசிக்கொள்கிறார்கள். பக்கத்தில் குந்தியிருந்த பெண்கள் ”க்ளுக்...” என்று சிரிக்கிறார்கள். வண்டியில் வருவது திரிபுரங்களை எரித்தபோது சிவபெருமான் கைகளில் விளையாடிய திவ்ய தனுசு.
வண்டி அந்த பதினைந்து வயசுப் பசங்கள் அருகில் வந்து நிற்கிறது.
“குழந்தைகள் வில்லைப் பார்க்கட்டும்...” என்று அந்த ஜடாமுடி முனிவர் உத்தரவிடுகிறார். ஐம்பது பேர் வண்டியின் மீது குதித்து ஏறி இரு பக்கத்திலும் நின்று கொண்டு பெட்டியின் மூடியை லாவகமாகத் திறந்து காட்டுகிறார்கள்.
“நான் தொட்டுப் பார்க்கட்டுமா?” தோளிரண்டும் கருந்தேக்காய் இருந்தவனிடமிருந்து ஆர்வமாய் கேள்வி வந்தது. கண்களில் ஆர்வம் மின்னியது.
ஜனகர் விஸ்வாமித்ரரைப் பார்க்கிறார். இருவரும் பார்வையால் பேசிக்கொள்கிறார்கள். மீண்டும் அந்த சியாமள இளைஞன்
“நான் இந்த வில்லை எடுத்து நாணேற்றிப் பார்க்கட்டுமா?” என்று கேட்கிறான். விஸ்வாமித்ரரும் ஜனகரும், கேட்ட அந்த ராமனைப் பார்த்து “உம்” என்று தலையசைக்கிறார்கள்.
அநாயாசமாகச் சுள்ளி பொறுக்குவது போல ஒற்றைக் கையால் வில்லைத் தூக்குகிறான். வளைத்து நாணேற்றும் போது வில் படாரென்று முறிந்து இரண்டு துண்டாகத் தரையில் விழுகிறது. அப்போது எழுந்த பெரும் சப்தத்தில் பூமி அதிர்ச்சி உண்டாச்சு. சுற்றி நின்றிருந்த பலஹீனமானவர்கள் மூர்ச்சையடைந்து பொத்தென்று சாய்ந்தார்கள். மிருகங்கள் பக்ஷிகள் எல்லாம் நடுநடுங்கின. ஜனகர் நல்ல மாப்பிள்ளைக் கிடைத்துவிட்டான் என்று மனம் மகிழ்ந்தார்.
**
ஸ்ரீமத் இராமாயணம் பற்றி சில்வர் டங் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் பல தலைப்புகளில் ஆங்கிலத்தில் பேசியதை கி. சாவித்திரியம்மாள் தமிழில் ”ராமாயணப் பேருரைகள்” என்று எழுதிய புஸ்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். இராமாயணத்தை சல்லடை போட்டு அலசி ஆராய்ந்த ஸ்ரீநிவாச சாஸ்திரியின் துளிக்கூட பந்தா இல்லாத அவையடக்கமான பேச்சும், கி. சாவித்திரியம்மாளின் அழகான எளிமையான தமிழாக்கம் இரண்டும் என்னை தூங்கவிடாமல் அடுத்த பக்கம் அடுத்த பக்கம் என்று புரட்டி கீழே வைக்கவிடாமல் படிக்கவைக்கிறது. இது மயிலாப்பூர் சம்ஸ்க்ருத அகாடமி வெளியீடு.
வால்மீகி உயிரோட்டமாக எழுதியதை உருக்கமாக எழுத்தில் வடித்திருக்கிறார்கள். பக்கம்பக்கமாகப் படித்துக்கொண்டே வரும் போது கொஞ்சம் நிறுத்தி மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டே சிவதனுசு வண்டியில் வரும் காட்சியையும் அதை ராமன் ஒடித்ததையும் படம் ஓட்டி எழுதிப் பார்த்தேன். மன்னார்குடி ஹரித்ராநதி வடகரை கோதண்டராமர் நினைவுக்கு வருகிறார். ஆஹா. அற்புதம். சிரித்துக்கொண்டே சீதா இளையபெருமாள் ஆஞ்சநேயருடன் கப்சிப்பென்று நின்ற திருக்கோலத்திலிருக்கும் அவனை.....
”பலுகே பங்கார மாயனா? கோதண்ட பாணி - பேசினால் பொன்னும் சிந்திடுமா? கோதண்ட பாணி!” என்று பத்ராசலம் ராமதாசர் ஆனந்த பைரவியில் பாடியதோடு ஸ்ரீராமசந்தரனுக்கு ஜெய மங்களம்!
பின் குறிப்பு: "எடுத்தது கண்டனர் ... இற்றது கேட்டார்" என்ற கம்பநாட்டாழ்வாரை இங்கு அழைத்திருக்கலாம். தூங்கியிருப்பான். அடுத்த ராமாயணப் பதிவில் கூப்பிட்டுக்கொள்ளலாம்! குட் நைட்!!

PCயப்பன்

நாற்பது வயசுக்குப் போனால் நாற்பத்தைந்து வயசுக்கு வீடு திரும்புவது போல ஆஃபீஸிலிருந்து ரொம்ப லேட். தெருவுக்குள் நுழையும் போதே பைரவர்கள் தீவிர எல்லைக்காவல் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். சேப்பாயியை ஷெட்டிற்குள் ஏற்றி ஜோஜோ தட்டி தூங்கவைத்துவிட்டு நான் பெற்ற செல்லங்களைப் பார்க்க பரபரப்பாக மாடியேறினேன். தூங்கியிருப்பார்களோ? அறை விளக்கு வெள்ளி வாள் போல கதவின் இடுக்கு வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. சின்னது இந்நேரம் ரெண்டாம் ஜாமம் போயிருக்கும். பெரியவ முழுச்சிண்டிருப்பா.
“குட்டீ. நீ இன்னும் தூங்கலையா?” அறை மூலையில் மும்முரமாகத் தலை தூக்கமால் வேலை செய்துகொண்டிருந்த சின்னவளிடம் கேட்டேன்.
“ம்.. இல்லப்பா... “ பதிலில் தீப்பொறி தெறித்தது. என் கேள்வி இம்சை செய்திருக்கவேண்டும்.
"என்னடி இது... தயிருஞ்சாம் மாதிரி Gumம்மெல்லாம் கை பூரா ஈஷிண்டு.... ”
“க்ராஃப்ட் வொர்க்.. நாளைக்கு சப்மிட் பண்ணனும்... போதுமா?” ஜீனோ போல வார்த்தைகள் விழுந்தன.
“இல்லே... நெறையா பேப்பரெல்லாம் வேறே தரை பூரா பரப்பி வச்சுருக்கே.... இப்பவே மணி பத்துக்கு மேலே..... இதுக்கப்புறம் கிராஃப்ட் ஒர்க் பண்ணிட்டு எப்போ படுத்துப்பே... கார்த்தால எப்போ எழுந்துப்பே...”
அரைநொடி திரும்பினாள். அலட்சியமாக அரைப் பார்வையை அள்ளி என் மீது வீசினாள். பெயிண்ட் ப்ரஷ்ஷை பாலெட்டில் தோய்த்து வெட்டி வைத்திருந்த ஒரு பேப்பருக்கு வர்ணம் பூசப் போய்விட்டாள். வயிறு ”பசிக்குதுடா.. சோம்பேறி...” என்று ஓலமிட கைகால் முகம் அலம்பிவிட்டு சாப்பிட ஓடினேன். சித்தநேரம்கூட நின்று பிள்ளையின் ஆட்டத்தை ரசிக்க முடியாத பிஸியப்பன். PCயப்பன்.
டின்னர் முடித்துக்கொண்டு மேலே வந்தேன். ஏஸி சப்தமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. ஸிஎஃப்ஃபெல் பளீரென்று ஒளிர்ந்தது. ஓசையில்லாமல் கதவைத் திறந்தால் படுக்கையில் சின்னவள் ஒருக்களித்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். எழுப்பாமல் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அலங்காரமேஜைக்குக் கீழேயிருந்த லேப்டாப்பை இலக்கியப் பணிக்காகத் தூக்கினேன். தலையை நிமிர்த்தும்போது இத்தோடு இணைத்திருக்கும் வஸ்து கண்ணில் பட்டது. இவ்வையகம் முழுவதும் எப்போதுமே இன்பம் மட்டுமே பெருகட்டும்!! இதைப் பார்த்ததும் இரவு இனித்தது.


பௌர்ணமி நிலா

கிணற்று மதகில் விஸ்ராந்தியாக அமர்ந்திருக்கிறேன். ஆகாயத்தில் பௌர்ணமி நிலா காய்கிறது. மின்சார விளக்கு பாயாத இடங்களில் ஊர்வன தெரியுமளவிற்கு சன்னமான வெளிச்சம். தென்னை மட்டைகள் சரசரக்க மிதமான காற்று வீசுகிறது. நாள் பூராவும் உழைத்துக் களைத்த மேனி மெதுவாய்க் குளிர்கிறது. "கல்யாணத் தேன் நிலா..... காய்ச்சாத பால் நிலா....." பாடல் எங்கிருந்தோ கசிவது கேட்கிறது. இந்த நாள் மெல்ல மெல்ல விடைபெற்று விடியலை நோக்கி நகர்கிறது. கண்கள் சொருக..... சொரு....க...

அன்பே நீயும்.. அன்பே நானும்..

இதற்கு மேல் அன்பை யார் சொல்லிவிட முடியும்? பிரபஞ்சமே அன்பின் அரவணைப்பில் கட்டுண்டு கிடக்கிறது. அன்பின் வழியது உயிர்நிலை. சாந்தானந்த ஸ்வாமிகள் பக்தியாய் அன்பில் உருகி எழுதிய, தமிழ் வீடுகளில் பல காலைகளை பக்திமயமாக்கிய சூலமங்கலம் சகோதரிகளின் (ராஜலெக்ஷ்மி) குரலில் கந்த குரு கவசம் கேட்பது சுகானுபவம்.
கண்ணை மூடிக்கொண்டு கீழ்க்கண்ட வரிகளைக் கேட்கும் போது அன்பினால் நெஞ்சம் உருகி இரண்டு சொட்டு நீர் வழிகிறது. இப்படியெல்லாம் கேட்டபிறகு யாரைவது திட்டத் தோன்றுமா? யாரிடமாவது ”ச்சீ..தூரப்போ..” என்று வெறுப்பைக் கக்குவோமா? ”போடா” என்று துப்புவோமா? மீண்டும் மீண்டும் தன் மீது எச்சில் துப்பி சலைவா வற்றிப் போய் “சாமி... இவ்ளோ தடவை உங்க மேல துப்பியும் என் கிட்டே கோவிச்சுக்காம திரும்பத் திரும்ப குளிச்சீங்களே....” என்று காலில் விழுந்துக் கேட்டவனிடம் “இத்தனை முறை என்னை கங்கையில் குளிக்க வைத்ததற்கு உனக்கு நானல்லவா நன்றி சொல்லவேண்டும்...” போன்ற பரந்த அன்பு பிறந்துவிடாதோ?
அன்பே ஆன்மிகம்! 
அன்பே தெய்வம்!
அன்பே குருஸ்தானம்!
அன்பே வழிபாடு! 
அன்பே ஆன்மஜோதி!
அன்பே அழகு!
அன்பே அனைத்துமன்றோ!!

"அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்...” என்று முருகனிடம் கெஞ்சுகிறார் சாந்தானந்த ஸ்வாமிகள். இதுதானே அனைவரது பிரார்த்தனையாக இருக்கவேண்டும். நாலு வரி சாஃப்ட்வேர் code எழுதி அது ப்ரொடெக்‌ஷனில் வெற்றிகரமாக ஓடும் போது “நானெழுதிய ப்ரோக்ராம்” என்று நெஞ்சு நிமிர்த்தாமல் இதுபோன்ற வரிகளல்லவா நினைவுக்கு வரவேண்டும். அன்பிருக்கும் இடத்தில் ”நான் யார் தெரியுமா?” என்று மார் தட்டும் அகந்தை வருமா? அன்பெனும் ஊற்று நம்முள்ளே பொங்கிவிட்டால் யாரையாவது சபிக்கத் தோன்றுமா?
யாவர்க்கும் வலியனாயும் எளியனாயும் இனியனாவும் இருக்கின்ற முருகனைப் பற்றிப் பாடும் போது அன்பைக் குழைத்து எழுதிய வரிகள் கசிந்துருக வைக்கின்றன. முழு பாடலையும் உள்ளுக்குள் வாங்கி கேட்கும் போது எழும் உடம்பு உதறும் ஒரு பரவச நிலை உங்களுக்கும் வாய்த்திருக்கிறதா? சாயங்கால வேளையில் வானம் பார்க்க உட்கார்ந்து ”எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ” வரிகளில் கண்ணைத் திறக்க மழைமேகமே அன்பாய்ச் சிரிக்கும் பால முருகனாய் தோன்றியது.
மன்னை காளவாய்க்கரை முருகன் கோயில். தொன்னூறுகளின் சில ஞாயிறு மாலைகளில் நானும் பூசாரியும் மட்டும் விபூதி வாசனையில் தனியாய் அமர்ந்திருப்போம். அலங்கார முருகனைக் காட்டி “நம்மள பார்த்து சிரிக்கிற மாதிரியே இருக்கும் பாருங்க...” என்று சொல்லிக்கொண்டே தீபாராதனைக் காட்டும் போது ”அன்பே நீயும்.. அன்பே நானும்...” எனும் வரிகள் என் காதுகளில் மட்டும் ஒலிப்பது போன்ற பிரமையில் அசந்திருக்கிறேன். தரிசனம் முடிந்து சலனமின்றி கோயில் வாசலில் உட்கார்ந்திருக்கும்போது சலசலவென்று வேப்பமரக் காற்று வீசும். ”அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா..” உருவேறினாற்போல ஓடிக்கொண்டிருக்கும்.

பாலசுப்ரமண்ய குருக்கள் படியில் உட்கார்ந்து கொண்டு சாயாவனேஸ்வரர் கோயில் வில்லேந்திய வேலவரைத் தரிசிக்கக் காட்டிய போது கூட ”படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்.. அன்பே சிவம்.. அன்பே சக்தியும்....” என்று ஆனந்தமடைந்திருக்கிறேன்.
வேத ஆரண்யம் தாண்டி கோடியக்கரை சென்றால் அங்குள்ள அமுதகடேஸ்வரர் திருக்கோயிலில் மூலவர் சந்திதிக்குப் பின்புறம் சட்டென்று திரும்பிவிடாதீர்கள். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கும். புல்லட்டில் அமர்ந்திருப்பது போன்ற திருக்கோலத்தில் மயிலின் இருபுறமும் கால்களைப் போட்டுக்கொண்டு ஆஜானுபாகுவாய் ஆறுமுகன் அமர்ந்திருப்பார். கையில் ஏழடிக்கு ஒரு வெள்ளி வேல். மற்றொரு கையில் அமுதகலசம். மேனியெங்கும் விபூதியலங்காரம் செய்திருந்தார்கள். பிரதக்ஷிணம் செய்து வரும் போது என்ன சன்னிதி என்று எட்டிப்பார்த்த எனக்குத் ’பக்’கென்று தூக்கிவாரிப் போட்டது. யாரோ நிஜமாகவே சந்திதிக்குள் நடமாடுவது போலிருந்தது.
ஒரு முறை கண்களைக் கசிக்கொண்டு திருவுருவின் முகத்தை உற்றுப்பார்த்தேன். அழகாய் அன்பாய் புன்னகைத்தான் முருகன்.
அன்பே நீயும்.. அன்பே நானும்..

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails