Sunday, August 2, 2015

அன்பே நீயும்.. அன்பே நானும்..

இதற்கு மேல் அன்பை யார் சொல்லிவிட முடியும்? பிரபஞ்சமே அன்பின் அரவணைப்பில் கட்டுண்டு கிடக்கிறது. அன்பின் வழியது உயிர்நிலை. சாந்தானந்த ஸ்வாமிகள் பக்தியாய் அன்பில் உருகி எழுதிய, தமிழ் வீடுகளில் பல காலைகளை பக்திமயமாக்கிய சூலமங்கலம் சகோதரிகளின் (ராஜலெக்ஷ்மி) குரலில் கந்த குரு கவசம் கேட்பது சுகானுபவம்.
கண்ணை மூடிக்கொண்டு கீழ்க்கண்ட வரிகளைக் கேட்கும் போது அன்பினால் நெஞ்சம் உருகி இரண்டு சொட்டு நீர் வழிகிறது. இப்படியெல்லாம் கேட்டபிறகு யாரைவது திட்டத் தோன்றுமா? யாரிடமாவது ”ச்சீ..தூரப்போ..” என்று வெறுப்பைக் கக்குவோமா? ”போடா” என்று துப்புவோமா? மீண்டும் மீண்டும் தன் மீது எச்சில் துப்பி சலைவா வற்றிப் போய் “சாமி... இவ்ளோ தடவை உங்க மேல துப்பியும் என் கிட்டே கோவிச்சுக்காம திரும்பத் திரும்ப குளிச்சீங்களே....” என்று காலில் விழுந்துக் கேட்டவனிடம் “இத்தனை முறை என்னை கங்கையில் குளிக்க வைத்ததற்கு உனக்கு நானல்லவா நன்றி சொல்லவேண்டும்...” போன்ற பரந்த அன்பு பிறந்துவிடாதோ?
அன்பே ஆன்மிகம்! 
அன்பே தெய்வம்!
அன்பே குருஸ்தானம்!
அன்பே வழிபாடு! 
அன்பே ஆன்மஜோதி!
அன்பே அழகு!
அன்பே அனைத்துமன்றோ!!

"அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்...” என்று முருகனிடம் கெஞ்சுகிறார் சாந்தானந்த ஸ்வாமிகள். இதுதானே அனைவரது பிரார்த்தனையாக இருக்கவேண்டும். நாலு வரி சாஃப்ட்வேர் code எழுதி அது ப்ரொடெக்‌ஷனில் வெற்றிகரமாக ஓடும் போது “நானெழுதிய ப்ரோக்ராம்” என்று நெஞ்சு நிமிர்த்தாமல் இதுபோன்ற வரிகளல்லவா நினைவுக்கு வரவேண்டும். அன்பிருக்கும் இடத்தில் ”நான் யார் தெரியுமா?” என்று மார் தட்டும் அகந்தை வருமா? அன்பெனும் ஊற்று நம்முள்ளே பொங்கிவிட்டால் யாரையாவது சபிக்கத் தோன்றுமா?
யாவர்க்கும் வலியனாயும் எளியனாயும் இனியனாவும் இருக்கின்ற முருகனைப் பற்றிப் பாடும் போது அன்பைக் குழைத்து எழுதிய வரிகள் கசிந்துருக வைக்கின்றன. முழு பாடலையும் உள்ளுக்குள் வாங்கி கேட்கும் போது எழும் உடம்பு உதறும் ஒரு பரவச நிலை உங்களுக்கும் வாய்த்திருக்கிறதா? சாயங்கால வேளையில் வானம் பார்க்க உட்கார்ந்து ”எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ” வரிகளில் கண்ணைத் திறக்க மழைமேகமே அன்பாய்ச் சிரிக்கும் பால முருகனாய் தோன்றியது.
மன்னை காளவாய்க்கரை முருகன் கோயில். தொன்னூறுகளின் சில ஞாயிறு மாலைகளில் நானும் பூசாரியும் மட்டும் விபூதி வாசனையில் தனியாய் அமர்ந்திருப்போம். அலங்கார முருகனைக் காட்டி “நம்மள பார்த்து சிரிக்கிற மாதிரியே இருக்கும் பாருங்க...” என்று சொல்லிக்கொண்டே தீபாராதனைக் காட்டும் போது ”அன்பே நீயும்.. அன்பே நானும்...” எனும் வரிகள் என் காதுகளில் மட்டும் ஒலிப்பது போன்ற பிரமையில் அசந்திருக்கிறேன். தரிசனம் முடிந்து சலனமின்றி கோயில் வாசலில் உட்கார்ந்திருக்கும்போது சலசலவென்று வேப்பமரக் காற்று வீசும். ”அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா..” உருவேறினாற்போல ஓடிக்கொண்டிருக்கும்.

பாலசுப்ரமண்ய குருக்கள் படியில் உட்கார்ந்து கொண்டு சாயாவனேஸ்வரர் கோயில் வில்லேந்திய வேலவரைத் தரிசிக்கக் காட்டிய போது கூட ”படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்.. அன்பே சிவம்.. அன்பே சக்தியும்....” என்று ஆனந்தமடைந்திருக்கிறேன்.
வேத ஆரண்யம் தாண்டி கோடியக்கரை சென்றால் அங்குள்ள அமுதகடேஸ்வரர் திருக்கோயிலில் மூலவர் சந்திதிக்குப் பின்புறம் சட்டென்று திரும்பிவிடாதீர்கள். உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கும். புல்லட்டில் அமர்ந்திருப்பது போன்ற திருக்கோலத்தில் மயிலின் இருபுறமும் கால்களைப் போட்டுக்கொண்டு ஆஜானுபாகுவாய் ஆறுமுகன் அமர்ந்திருப்பார். கையில் ஏழடிக்கு ஒரு வெள்ளி வேல். மற்றொரு கையில் அமுதகலசம். மேனியெங்கும் விபூதியலங்காரம் செய்திருந்தார்கள். பிரதக்ஷிணம் செய்து வரும் போது என்ன சன்னிதி என்று எட்டிப்பார்த்த எனக்குத் ’பக்’கென்று தூக்கிவாரிப் போட்டது. யாரோ நிஜமாகவே சந்திதிக்குள் நடமாடுவது போலிருந்தது.
ஒரு முறை கண்களைக் கசிக்கொண்டு திருவுருவின் முகத்தை உற்றுப்பார்த்தேன். அழகாய் அன்பாய் புன்னகைத்தான் முருகன்.
அன்பே நீயும்.. அன்பே நானும்..

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails