Showing posts with label பர்வம். Show all posts
Showing posts with label பர்வம். Show all posts

Monday, October 23, 2017

நியோகம்

ஐந்தாவது வேதமாகிய மஹாபாரதத்தை விதம்விதமான நடையில் கோணத்தில் பலர் எழுதியதைப் படித்திருக்கிறேன். எந்த புத்தக சந்தையிலும் தேடித் தேடி வாங்குகிறேன். மஹாபாரதம் எப்பவுமே விழி விரியச் செய்கிறது. துவாபர யுக மனிதர்களின் வாழ்வும் சமுதாய தர்மங்களும் அவைகள் காட்டும் வழிமுறைகளும் வாழ்வியலின் எழிலையும் அவலத்தையும் ஒருசேர பிரதிபலிக்கிறது. இன்று வரையில் எதனோடும் ஒப்புமைப்படுத்திப் பார்க்கும்படியான இளமையோடு இருப்பது இந்த இதிகாசத்தின் பெருமை. இப்படியெல்லாம் வாழலாமா? என்று நினைப்பதை விட ”இப்படியெல்லாமா வாழ்ந்தார்கள்!” என்ற நுட்பமும் நுணுக்கமும் லேசாகப் புரிகிறது.
புராண காலத்தில் காட்டிலும் நாட்டிலும் நாம் நடமாடினால் சந்திக்கும் மாந்தர்களைப் போல பீஷ்மர், கிருஷ்ண த்வைபாயணர், துரோணர், அஸ்வத்தாமன், பீமன், யுதிஷ்டிரன், அர்ஜுனன், திருதிராஷ்டிரன், கர்ணன், குந்தி, கிருஷ்ணன், பலராமன், ஜராசந்தன், கம்சன் என்று மஹாபாரதத்தின் அனைத்து கதாபாத்திரங்களையும் பக்கங்கள் எங்கும் எழுத்துரூபத்தில் உலவவிட்டிருக்கிறார் எஸ்.எல். பைரப்பா. 928 பக்க தலைகாணி சைஸ் பருவத்தில் 675ல் இருக்கிறேன். 110 வயதில் பீஷ்மர்108/109 வயதில் காட்டிலிருக்கும் ஆஷ்ரமத்தில் வசிக்கும் வியாசரைப் பார்த்து “நியோக முறை” தருமமா? அதர்மமா? என்று போர் துவங்குவதற்கு ஒரு நாள் முன்பு விஜாரிக்க வருகிறார்.
"நீதானே என்னைக் கூட்டி வந்து நியோகத்தின் விதிமுறைகள் சொல்லி பணிய வைத்தாய்?” என்று வியாசர் கேட்டுவிட்டு நியோகத்தின் விதிமுறைகளாக பீஷ்மர் சொன்னவற்றை எழுதியிருக்கிறார். இப்படி ஒரு முறை வியாசரின் முப்பாட்டன் வசிஷ்டர் கல்மாஷபாதன் என்ற அரசனின் மனைவிக்கு நியோக முறையில் வீரியதானம் செய்தார் என்கிற உபகதையும் வருகிறது. நியோக முறைக்கு பீஷ்மர் வியாசருக்கு நியமமாகப் பின்பற்ற வேண்டியவைகளை மட்டும் இப்போது பட்டியலிடுகிறேன். மொத்த புத்தகத்தையும் முடித்துவிட்டு என்னுடைய பார்வையை எழுதுகிறேன்.
1. நள்ளிரவு நேரமாக இருக்கவேண்டும்.
2. ஆண், பெண் இருவரும் உடல் முழுக்க நெய் தடவியிருக்கவேண்டும்.
3. இருவரிடையேயும் பேச்சு வார்த்தை ரொம்பவும் குறைவாக இருக்க வேண்டும்.
4. முழுக்க உணர்ச்சி வசப்படாமல், மருத்துவர் நோயாளியின் வாயைத் திறந்து மருந்தைப் புகட்டுவது போல இருந்துவிட்டு திரும்பவேண்டும்.
5. அவன் அவளையோ, அவள் அவனையோ திரும்பிப் பார்க்கக் கூடாது.
6. நியோகம் நடந்த பிறகு மனதில் கிஞ்சித்தும் மகிழ்ச்சியின் எண்ணம் இருக்கக்கூடாது.
7. ஒருவேளை அப்படி மனத்தில் ஏதாவது ஒரு எண்ணம் இருக்குமேயானால் அது அருவருப்பாக மட்டுமே இருக்க வேண்டும். 
8. தன் புலன்களையெல்லாம் ஆண் கட்டுப்படுத்தியிருக்கவேண்டும்.

ராஜா இல்லாத ஒரு தேசத்தைக் காப்பாற்றும் பொருட்டு க்ஷத்திரியர்களின் பழக்கமாக இருந்த நியோக முறையில் சந்ததி உற்பத்தி செய்துகொள்ளும் முறையை வெகு சுவாரஸ்யமாகவும் அழகாகவும் பைரப்பா எழுதியிருக்கிறார்.
அற்புதமான அபாரமானப் படைப்பு!!

Thursday, June 1, 2017

பர்வம்: எஸ். எல். பைரப்பா

சோவின் மகாபாரதம் பேசுகிறதுதான் அந்த இதிகாசத்தைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஈர்ப்பை என்னுள் தூண்டியது. அந்தப் புத்தகம் இதிகாசம் மீதான ஆர்வத்தைக் கிளறிவிடும். அநேகமாக மகாபாரதத்தின் எல்லாக் கிளைக்கதைகளையும், பாத்திரங்களையும் ஜூஸ் பிழிந்து இரண்டு புத்தகமாகத் தந்தார். சமூகத்திற்கு சோவின் செயற்கரிய பணி. பின்னர் கும்பகோணம் பதிப்பு வாங்கினேன். அப்படியே ராஜாஜியின் வியாசர் விருந்தும். அதுமட்டுமல்லாது திருமுருக. கிருபானந்தவாரியர், ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி அண்ணா, ஆர்.பி.வி.எஸ். மணியன், புலவர் கீரனின் வில்லிபாரதம், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் என்று சொல்லின் செல்வர்களின் சுவைமிகு சொற்பொழிவுகளைச் சேப்பாயியில் பயணிக்கும்போது நிறையக் கேட்டிருக்கிறேன்.
எம்.டி. வாசுதேவன் நாயரின் "இரண்டாம் இடம்" , பீமனின் பார்வையில் இதிகாசத்தை சொன்னது. நாயர் ஸ்வர்க்காரோகண பர்வத்தில் இரண்டாம் இடத்தை ஆரம்பித்திருப்பார். கிருஷ்ணர் பரமாத்மாவாக இடம்பெறாமல், அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் வெறும் தேரோட்டியாகவே வந்து போவார். கௌரவர்களின் சூழ்ச்சியும் பாண்டவர்கள் அதை எதிர்கொண்ட விதமும் பீமனின் பலதார மணங்களும் ஐவருக்குப் பொண்டாட்டியாக வாக்கப்பட்ட திரௌபதி சுழற்சி முறையில் அண்ணன் தம்பிகளிடம் வசிப்பதையும் விறுவிறுப்பு சற்றும் குறையாமல் நாவல் வடிவில் படித்த இதிகாசம்.
பின்னர் இதுபோன்று வித்தியாசமான கோணத்தில் மகாபாரதமோ இராமாயணமோ கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்ததில் இந்த வருட புத்தகக் காட்சியில் எஸ்.எல். பைரப்பாவின் "பர்வம்" (பருவம் என்று கவர்ச்சியாகத் தூய தமிழ் தலைப்பு) சாஹித்ய அகாதெமியில் கிட்டியது. எவருமே கொஞ்சம் கூட எதிர்பாக்காத சல்லியன் கதை சொல்வது போல ஆரம்பித்திருந்தார். க்ளாஸ்!!
குந்தி மற்றும் மாத்ரி என்ற இரு இளவரசிகளை மணம் புரிந்தும் பாண்டுவினால் அவர்களுக்கு புத்ர பாக்கியம் அருள முடியாத கையாலாகாதத்தனத்தை பைரப்பா சில அசாதாரண வசனங்களில் சொல்லிப் போகிறார். வியாச பாரதத்தில் இதுபோன்று சொல்லப்பட்டிருக்கிறதா என்று கும்பகோணம் பதிப்பைப் புரட்டிப் பார்க்க வேண்டும். ஆனாலும், இவரின் கைவண்ணத்தில் பைரப்பா பாரதம் மிளர்கிறது. ஆயிரம் பக்க நாவலை ஆர்வத்துடன் படித்துவருகிறேன். முடிந்ததும் ஒரு பத்தி எழுதுகிறேன்.
இதனிடையே, இந்த மாத வலம் இதழில், பைரப்பாவின் சுயசரிதை நூலான ‘பித்தி’ (தமிழில் சித்திரச் சீலை என்று அர்த்தமாம்)யைப் பற்றிய கட்டுரை அனீஷ் கிருஷ்ணன் நாயர் எழுதியிருக்கிறார். சொல்லொணாப் பல துயர்களை அனுபவித்த பைரப்பா கல்லூரியில் தங்க மெடல் வாங்கியவர். ஒரு வேளை சாப்பிட்டிற்குக் கஷ்டப்பட்டு பவதி பிக்ஷாம் தேஹி என்று கையேந்தியவர். தனது சகோதர சகோதரி மற்றும் அன்னையை ப்ளேக்கிற்கு கொடுத்தவர். என்றெல்லாம் அவரது துயர்களை அடுக்கியிருந்த கட்டுரையில் அவர் கஷ்டப்பட்ட ஒரு இடம் கற்பாறையையும் உருக வைக்கும். அது.....
ஏழு வயது தம்பி இறந்துவிடுகிறான். யாரும் உதவ முன்வரவில்லை. இறந்துகிடக்கும் தம்பியின் இறுதிச் சடங்கை எப்படிச் செய்வது என்று கவலையாயிருக்கிறார். வாய்க்கரிசி போட வீட்டில் அரிசி இல்லை. தெருவில் அங்கும் இங்கும் அலைந்து மூன்று பிடி அரிசி வாங்கி வாய்க்கரிசி இடுகிறார். தகனம் செய்வதற்கு கரடி என்றழைக்கப்படும் பழைய பணியாள் ஒருவர் அவரது சமூக மக்களிடமிருந்து விறகு வாங்கிவருகிறார். இவரே தம்பியின் சடலத்தை தோளில் சுமந்து சென்று கரடி கொடுத்த விறகால் தகனம் செய்து.... இரவு முழுவதும் நாய் நரி எதுவும் கௌவிக் கொண்டு போகாதவாறு காவல் புரிந்தாராம்.
இன்னமும் நெஞ்சை உலுக்கிறது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails