Sunday, August 28, 2011

மன்னார்குடி டேஸ் - கம்ப்யூட்டர் கதைகள்


தொன்னூறுகளின் தொடக்கத்தில் கைபேசி தொல்லையற்று பிக்கல் பிடுங்கல் இல்லாமல் சுகஜீவனம் நடத்திக்கொண்டிருந்தோம். அக்காலத்தில் ”கம்ப்பியூட்டர்” என்பது ஒரு மாயச் சொல். கம்ப்பூட்டர், கம்ப்பியூட்டர், கம்ப்யூட்டர் என்று பூன்னு சொல்லலாம், புஷ்பம்னு சொல்லலாம், புட்பம்னு சொல்லலாம் இல்ல நீங்க சொல்ற மாதிரி கூட சொல்லலாம்ங்கிற ரீதியில் போட்டா போட்டியில் கம்ப்யூட்டர் பாஷை பேசிக்கொண்டார்கள். ”ஒன்னை வாங்கி வீட்ல வச்சுக்கிட்டா.. வீட்டோட வரவுசெலவை கவனிச்சுக்கிட்டு  மொத்த கணக்கு வழக்கும் பார்த்துக்குமாமே!” என்று திண்ணையில் சப்ளாங்கால் கட்டி உட்கார்ந்து இருனூரு பக்க அக்கௌண்ட்ஸ் நோட்டில் கோடு கிழித்து எழுதும் ஒரு கணக்குப்பிள்ளையாய் கம்ப்யூட்டரை பாவித்து மூக்கின் மேல் விரலை வைத்து வியந்தவர்கள் அனேகம் பேர்.

ஒரு ஃபூல்ஸ்கேப் டம்மித் தாளை சைக்கிள் ஹாண்ட் பார் இடுக்கில் சொருகிக்கொண்டு அப்போதும் நிறைய பேர் லொட்டு லொட்டென்று தட்டி விரலொடிய மளுக்மளுக்கென்று சொடுக்கி டைப்ரைட்டர் கற்றுக்கொண்டிருந்தார்கள். சைட் அடிக்கும் காலத்தில் டைப் அடித்தார்கள். சிலருக்கு டைப் பழகும் இடத்திலேயே சைட்டும் வாய்த்தது. காலை மாலை இருவேளையும் ஒரு மணி நேர ஸ்பீட் விரல் பயிற்சி. டைப் அடித்துவிட்டு வந்து கேரம்போர்டு விளையாடினால் நிச்சயம் பேக் ஷாட்டில் ரெட் அண்ட் ஃபாலோ போட்டு கேமை கெலிக்கலாம். “ட்ர்ர்ரிங்... டிங்..டிங்..டிங்”கென்று கேரேஜ் ரிட்டர்ன்கள் மெல்லிசையாய் கினிகினித்துக்கொண்டிருந்த காலம். ”என்னங்க கம்ப்யூட்டர் வந்துருச்சே இன்னும் ஏன் டைப்ரைட்டிங் பழகுறீங்க?” என்று யாரையாவது வழிமறித்துக் கேட்டால் “அதுல வேலை பார்க்கறதுக்கு மொதல்ல இதுல தட்டிப் பளகனும். தெரியும்ல...” என்று தொழில் நுட்ப வல்லுனர்கள் போல அட்வைஸ் செய்து ராகமாக இழுப்பார்கள்.

கல்லூரி மாணவன் ஒருவன் கக்கத்தில் புஸ்தகத்தை சொருகிக் கொண்டு கம்ப்யூட்டர் க்ளாஸ் போகிறான் என்றால் அந்தக் காலத்தில் அவன் ஒரு படிப்பு பயில்வான். ஏதோ தேவ பாஷை பயிலும் நினைப்பில் மெதார்பாகத் திரிவார்கள். அவர்களிடமிருந்து ஒரு இரண்டடி இடைவெளி விட்டு ஒதுங்கி சர்வஜாக்கிரதையாக நடந்து கொள்வோம். பேச்சினிடையே தமிழிலிருந்து அவ்வப்போது தாவி ஆங்கிலத்தில் “பீட்டர்” விடுவதைப் போல அப்போது கம்ப்யூட்டர் பற்றி படிப்பாளி யாராவது பேசினால் அது மெகா யந்திர தந்திர பீட்டர். அல்டாப்பு. அதன் அமரத்துவத்தன்மை நமக்கு அப்போது தெரியவில்லை.

ஏசி என்கிற குளிரூட்டும் சாதனம் இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் உயிர் வாழாது என்று நெற்றி வியர்வையைக் கர்சீப்பால் துடைத்துகொண்டு சுடச்சுட பயமுறுத்தினார்கள். பக்கத்து இலை பாயசம் மாதிரி ”மெஷினுக்கு வேணுங்க” என்று சொல்லி கோடைக்காலத்தில் மன்னையில் கொடைக்கானல் குளிர் சுகம் கண்டவர்கள் ஏராளம். தெரியாத்தனமாக கம்ப்யூட்டர் அறையின் கதவை வேவு பார்க்கும் ஒற்றன் போல லேசாக திறந்து எட்டிப்பார்த்தால் “தூசி போயிடுச்சுன்னா அது ஸ்ட்ரக் ஆயிடும். எப்பவும் கதவை சார்த்தியே வையுங்க” என்று அதன் டஸ்ட் அலர்ஜிக்கு வக்காலத்து வாங்கி கடுப்படித்து வைவார்கள்.

கல்லூரியில் இயற்பியல் படிக்கும் பொழுது கடைசி பெஞ்சில் தூங்கி எழுந்து அரட்டையடித்த நேரம் போக கவனித்த முதல் கம்ப்யூட்டர் பாடம்- ஃபோர்ட்ரான் 77. பூவுலகில் இருக்கும் வஸ்தாது கம்ப்யூட்டர்களை சோதிக்கும் வல்லிய பாஷை இது என்றும் விஞ்ஞானிகளுக்கான பிரத்தியேக கம்ப்யூட்டர் மொழி என்றும் சரம் சரமாக ஒரு மீட்டர் அளவிற்கு பீட்டர் விட்டுக் கற்பித்தார்கள். ”இது விஞ்ஞானிகளின் சாய்ஸ்” என்று எடுத்தவுடன் ஏகத்துக்கும் மிரட்டியவுடனேயே உள்ளுக்குள் ஒரு உதறல் எடுத்துவிட்டது.

தாயுமானவன் என்ற மூக்குக் கண்ணாடியை மூக்கின் நுனியில் தொங்கவிட்ட பேராசிரியர் இந்த வகுப்பு எடுத்தார். வகுப்பறைக்குள் சிகரெட் பசியைத் தூண்டிவிடும் மனித அப்பிடைஸர். உள்ளே நுழைந்தவுடன் ‘குப்’பென்று வில்ஸ் மணக்கும். சாக்பீஸை சிறு சிறு துண்டாக்கி தூங்குபவர்கள் முகத்தில் குறி பார்த்து எறிந்து தாக்குவதில் வல்லவர். நரிக்குறவர்களின் உண்டிவில் (கல்ட்டாபில்ட்டு மற்றும் கவண்கல் என்று தேசத்தின் பல்வேறு பிரதேசங்களில் பலவாறு அழைக்கப்படும் ஆயுதம்.) இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். அவ்வளவு இலக்குத் தவறாத துல்லியம். வேகம்.  PROGRAM என்று கரும்பலகையில் ஆலாபனை எழுத ஆரம்பித்து நடுவில் வர்ணம், கீர்த்தனை பாடி கடைசியில் END என்று ஃபோர்ட்ரானில் மங்களம் பாடுவார். இதுதான் கணிப்பொறி என்கிற வலையில் நான் எலி போல அகப்பட்டுக்கொண்ட முதல் சம்பவம். ஆரம்பத்திலேயே “விஞ்ஞானி” வேப்பிலை அடித்துவிட்டதால் ஒருவித பேய் அடித்த ஜுரத்தோடு கற்றுக்கொண்டோம். அன்று தெரியாது இதுதான் எமது இன்றைய வாழ்வாதாரமாகப் போகிறது என்று.

நான் இயற்பியல் இளங்கலை பயின்று “அறிவியல் இளைஞராக” தேறி அறிஞர் பட்டம் விட்ட ஸாரி பட்டம் பெற்ற கல்லூரியிலேயே எம்.சி.ஏ என்கிற முதுகலை கணினி பாடத்திட்டம் கன ஜோராக அறிமுகப்படுத்தப்பட்டது. டொனேஷன் என்கிற காரல் இல்லை கேபிடேஷன் ஃபீஸ் என்கிற கசப்பு கிடையாது. பி.எஸ்.ஸி என்ற மூன்றெழுத்துக்கு மேல் படிப்பதாக கிஞ்சித்தும் எனக்கு எண்ணமில்லை. ஒரு மனிதன் பதினைந்து வருடங்கள் படித்துக் கிழித்த பிறகு வேறு என்னதான் எதிர்ப்பார்க்கிறார்கள் என்ற வேதனையில் நான் இருந்தபோது என் அக்காளின் அறிவுரைப்படி எம்.சி.ஏ படிக்க முடிவானதும் ”கம்ப்யூட்டர் என்றால் என்ன?” என்ற பால பாடத்தில் இருந்து ஆரம்பித்தேன். தற்போது அமெரிக்காவில் ஆரக்கிள் நிறுவனத்தில் டேட்டாபேஸ்களை பதம் பார்க்கும் தொழிலிலிருக்கும் ரெங்காவின் தயவால் படிப்பின் பால் பற்றுதலோடு ஈர்க்கப்பட்டேன். கடைசி பெஞ்சிலிருந்து முதல் பெஞ்சிற்கு ப்ரமோஷன் பெற்றேன். முதல் வருட இறுதியில் கம்ப்யூட்டரின் மேல் ஒரு பிடிமானமும் அபிமானமும் ஏற்பட்டது.

இப்போது வீட்டுக்கு வீடு கம்ப்யூட்டர் ஒரு அழுக்கு டேபிளில் சிரிப்பா சிரிப்பது போல அப்போது மலிந்திருக்கவில்லை. அது ஒரு அதியசப் பொருள். ஏசி கேட்கும் வெகுமதியான பொருள். பழகுவதற்கு ஊரிலும் ஒரு கம்ப்யூட்டர் கிடைத்தால் சௌகரியமாக இருக்கும் என்று எண்ணிய எனக்கும் ரங்காவிற்கும் தோதாக அமைந்தது தான் சத்யா கம்ப்யூட்டர்ஸ்.

ஸ்ரீராமநவமி பதிவில் மிருதங்கத்தை தவிடுபொடியாக வாசித்த கோபால் அண்ணாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அவர் ஒரு தொழில் முனைவர். சதா சர்வகாலமும் பார்க்கும் இடங்களில் எல்லாம் ஓயாமல் பிஸ்னெஸ் பேசும் தொழிலார்வம் மிகுந்த ஆண்ட்ரப்ரனர். ஐந்து நிமிட இடைவெளியில் அமெரிக்காவில் ஆரம்பித்து ஐயம்பேட்டை கடைத்தெரு வரையில் ஒரு ஆயிரம் சுயதொழில் தொடங்குவதற்கான உத்திகளை அரைகுறையாய் மடித்த முழுக்கச் சட்டையின் உள்ளேயிருந்து அள்ளி வீசுபவர். அவருக்கு திடீரென்று ஒரு நாள் கம்ப்யூட்டர் செண்டர் தொடங்கும் விபரீத ஆசை முளைத்தது. “டேய் ஆர்.வி.எஸ். நா கம்ப்யூட்டர் செண்டர் ஆரம்பிக்கிறேன். நீயும் ரெங்காவும் வந்து க்ளாஸ் எடுக்கிறீங்களா?” என்று ராஜகோபாலஸ்வாமி கோயில் துவஜஸ்தம்பம் வாசலில் வைத்து கேட்டவுடன் மனம் ரெக்கை கட்டி சிறகடித்துப்  பறந்தது. சார்லஸ் பாபேஜே கோபால் உருவில் நேரே வந்து “வாப்பா...வா” என்று இருகரம் நீட்டி பாசத்தோடு அழைத்தது போல இருந்தது.

சாந்தி தியேட்டரில் ஈவினிங் ஷோ இண்டெர்வெல் பெல் சத்தம், வேலையில் மூழ்கிய நம்மை தூக்கிவாரிப் போடச் செய்யும் அருகாமையில் சத்யா கம்ப்யூட்டர்ஸுக்கு கடை பிடித்தோம். தியேட்டர் எதிர்புறம் மாரீஸ் டைலர்ஸ் மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகையில் தட்டிக் கதவு போட்ட இடத்தில் சத்யா கம்ப்யூட்டர்ஸ் இயங்கியது. ”இங்க டைப் ரைட்டிங்கும் சொல்லித் தருவீங்களா?” என்று ரெண்டு பேர் இடுப்பில் கூடையோடு வந்து விசாரித்துவிட்டு போனார்கள். அப்புறம் ஒரு மாதத்திற்கு வேறு ஒரு பயல் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது. ஈ ஓட்டுகிறோம் எறும்பு ஓட்டுகிறோம் என்று ஊரே பழித்தாலும் நானும் ரெங்காவும் தீவிர “சி” பயிற்சியில் ஈடுபட்டோம். முதல் போட்ட கோபால் ஒழிந்த நேரத்தில் வந்து உட்கார்ந்து “டேவ்”, “ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா” போன்ற அரும்பெரும் கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் மூழ்கி முத்தெடுத்து சந்தோஷித்தார். ”ஏ இன்னிக்கு டேவ்ல அஞ்சு லெவெல் முடிச்சேன்” என்று காலரைத் தூக்கிப் பெருமைப்பட்டுக்கொண்டாரே தவிர கம்ப்யூட்டர் செண்டர் அடுத்த லெவலுக்கு வளரவேயில்லை.

வாஸ்து பார்த்து முதல் தெருவிற்கு சென்ட்டரை மாற்றினால் சித்ரகலாவும், சரவணனும் டிபேஸ் படிக்க வந்தார்கள். கொஞ்ச நாள் கூத்தடித்து இந்த கம்ப்யூட்டர் பழசான பின் நாங்களிருவரும் ப்ராக்டீஸ் செய்வது ஒன்றுதான் நடக்கிறது என்று தெரிந்து நவ்தால் பூட்டு போட்டு மூடிவிட்டு கைத்தொழில் சிலதுகளை நேர்த்தியான வேலைப்பாட்டுடன் முடிக்கத் தெரிந்த கோபால் அண்ணா வேறு பூவா தரும் தொழில்களை தொடங்கினார். ரோஸ் கலர் சம்க்கியில் வெங்கடாஜலபதியை நீலக் கலர் வெல்வெட் துணியில் குத்தி வரைந்து கோல்டன் கலர் ஃப்ரேம் மாட்டி பீஸ் 25 ரூபாய் மேனிக்கு விற்க ஆரம்பித்தார்.

முதல் தெரு க.சென்டர் வாசலை மூடி ஒத்தைத் தெருவில் புதியதாக ஒரு க.சென்டர் வாசலை எங்களுக்காகத் திறந்தான் இறைவன். செக்கச்செவேலென தேசலான ஸ்ட்ரைப்ஸ் போட்ட முழுக்கைச் சட்டையை மடக்கி விட்ட ஒரு இளைஞர் பிர்லா இன்ஸ்டிட்டியூட் போல பாஸ்கர் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி (BITS) என்று மன்னையில் கம்ப்யூட்டர் புரட்சி ஏற்படுத்த பூஜை போட்டு கடை விரித்தார். அன்றிலிருந்து ரெங்கனுக்கும் எனக்கும் அந்த ஆஸ்பெஸ்டாஸ் மாடி புகலிடமாயிற்று.

பானையை ஒருக்களித்து வைத்தது போல பதினான்கு இன்ச்சுக்கு ஒரு கருப்பு-வெள்ளை ஸ்க்ரீன், வெள்ளாவியில் வெளுத்த வெள்ளை டவர் ஸி.பி.யூ, விண்டோஸ் 3.1, ஸி.பி.யூ வரை வால் நீண்ட மௌஸ், அதைத் தாங்கும் மெத்மெத் அட்டை,  ஆளைத் தூக்கும் காற்றடிக்கும் ஆளுயர உஷா பெடஸ்டல் ஃபேன், கதவடைத்த கேபின் என்று நவநாகரீக சென்டர் அது. எட்டு இன்ச், அஞ்சே கால் இன்ச், மூனரை இன்ச் என்று பல சைஸ்களில் ப்ளாப்பி டிஸ்க் சொருகும் அறை வைத்த கம்ப்யூட்டரில் ஆண் பெண் கூட்டம் அலையலையாய் குவிந்தது. ”ஏ ராக்காயி மூக்காயி எல்லோரும் ஓடி வாங்கடி” என்ற கணக்காக காலை ஐந்து மணியில் இருந்து இரவு பதினொன்று வரையில் மன்னை மக்கள் பேட்ச் பேட்சாக வரிசையில் நின்று கம்ப்யூட்டர் கற்றார்கள்.

டாஸ் ப்ராம்ப்ட்டில் தாஸான தாஸனாக பேஸிக் பயின்றார்கள். இராப்பகல் அகோராத்திரியாக டிபேஸ் மூன்று ப்ளஸில் கம்பெனி கணக்கு எழுதினார்கள். நரி ப்ரோவில் நிறைய ஸ்க்ரீன் வரைந்து கணக்கு எழுதினார்கள். ஃபிபனோக்கி சீரிஸ் எழுதுவதற்கு ‘ஸி’ உபயோகித்தார்கள். கோபால் அண்ணா கம்ப்யூட்டர் கடையில் இல்லாத கோபால்-85 இவரிடம் பெரிய பெரிய ஃப்ளாப்பிகளில் இருந்தது. கோபால்-85-ல் நூறு வரி கோடில் ஒரு வரி ஃபுல் ஸ்டாப் வைக்காமல் எழுதினால் முன்னூறு முழம் நீளத்திற்கு “தப்பு..தப்பு..தப்பு...” என்று இரக்கமேயில்லாமல் கம்ப்யூட்டர் காறித் துப்பியது. மிகவும் ப்ரயத்தனப்பட்டு எழுதிய ஒரு வகுத்தல், பெருக்கல், கூட்டல் கழித்தல் இருக்கும் ப்ரோகிராமை தன்னிடம் காண்பித்த பையனை “இதுக்குப் போயா இவ்ளோ காசு குடுத்து படிக்கிற... இத ரெண்டு நிமிசத்ல சொல்லாலாமே” என்று நாலு பேர் முன்னால் கண்றாவியாக காலை வாரினார் ”இவன் தந்தை என்னேற்றான் கொல்” என்ற சொல் வேண்டாத அப்பா ஒருவர்.

எம்.சி.ஏவின் மூன்றாவது வருடத்தில் INFOFEZ என்ற கல்லூரியின் தொழில்நுட்ப ஆண்டு விழாவிற்கு தஞ்சாவூர் ஓரியண்டல் டவர்ஸில் வாத்தியார் சுஜாதாவுக்கு ரூம் ரிசர்வ் செய்தோம். குத்துவிளக்கேற்றிய விழாவில் வாத்தியாரை பேச அழைத்தவுடன் அவர் பேசிய திருவாசகமாகிய முதல் வாசகம் “இங்க எல்லாருக்கும் தமிழ் தெரியும்ல”. ”ஹோ” என்று ஒருமுறை அரங்கம் அதிர்ந்து அடங்கியது. கம்ப்யூட்டரின் தற்கால பயன்பாட்டைப் பற்றி அக்காலத்தில் ஒரு பதினைந்து நிமிடங்கள் பேசினார். ஏட்டுச் சுரைக்காயாக படித்தது கறிக்கு உதவாது என்பதை நாசூக்காக எடுத்துரைத்தார். கையில் கொண்டு வந்திருந்த ஒரு வீடியோ கேசட்டை பெருந்திரையில் போட்டுக் காட்டினார்.

எல்லாம் கிராஃபிக்ஸ் காட்சிகள். திரையிட்ட நூறு காட்சிகளில் ஆண்-பெண் உருவம் இரண்டு முகத்தோடு முகம் புதைத்து முத்தமிடுவதைப் போன்ற ஒரு காட்சியில் கூட்டம் கூக்குரலிட்டதை பார்த்து அதை நிறுத்தி “நீங்கள் இதுபோல செய்ய முடியுமா?” என்று ஒரு போடு போட்டார். இரு வினாடிகள் அரங்கு நிறைந்த மௌனத்திற்கு பின்னர் ”இது போன்ற காட்சிகளை வடிவமைக்க முடியுமா? என்று கேட்டேன்” என்று சிரித்தார், பலத்த கரவொலிகளுக்கிடையே! என் ந்யூரான்களில் அழியாமல் புதைந்து கிடந்த அந்தக் கைத்தட்டல்களும், நெடிய நெடுமாலாக சற்றே கூன் விழுந்தும், முன் நெற்றியில் முடி புரள மேடையில் நின்று வாத்தியார் புன்னகைத்ததும் காலம் அழிக்கமுடியாத மூளையின் ஒரு முடிச்சில் நிரந்தரமாக செதுக்கப்பட்டவை.

காலையில் கல்லூரியில், மாலையில் பிட்ஸ்ஸில் என்று மன்னையில் கம்ப்யூட்டர் வாழ்க்கை  நாளொரு பிட்ஸும் பொழுதொரு பைட்ஸுமாக வளர்ந்தது. நாங்களும் விற்பன்னர்களாகி(?!?!) திசைக்கு ஒருவராக பிழைப்பு தேடி வந்துவிட்டோம். இன்னமும் மன்னை மக்கள் அதே தீவிர முனைப்புடன் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று பயில்கிறார்களா? மன்னை BITS-இன் சர்ட்டிஃபிகேட் வெளியூர்களில் மரியாதையுடன் செல்லுபடியாகிறதா? பாஸ்கருக்கு டஃப் ஃபைட் கொடுக்கும் மூன்றாம் தெரு ஆக்ஸ்போர்டு கம்ப்யூட்டர் பயிற்சி மையம் உள்ளதா? இராவில் எவ்வளவு பேர் இணைய உலா வருகிறார்கள்? ஐ 3, ஐ 5, ஐ 7 போன்றவைகளில் பழகுகிறார்களா? எக்கச்சக்க கேள்விகள். அடுத்த முறை மன்னை விஜயத்தின் போது BITS ஐ எட்டிப் பார்க்கணும்.

பட உதவி: படத்தில் இருப்பவர் சார்லஸ் பாபேஜ் (1791-1871) http://www.willamette.edu

-

Thursday, August 25, 2011

என்ன ...’ழ’வுடா...

என் ஸீமந்த புத்ரி வினயா பத்து தடவை கீழே இருக்கும் வாசகத்தை படபடவென்று என்னை சொல்லச் சொல்லி நாக்கை சுளுக்க வைத்தாள்.

வாழைப் பழத் தோல் வழுக்கி கிழவன் கிழவி குழியில் விழுந்து எழுந்து அழுதனர்!!

தமில் வால்க!! போன வாசகத்தை வழுக்கிச் சொன்ன நாவுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.

பத்து தடவை படுவேகமா சொல்லி ரிகார்ட் பண்ணி முகப்புஸ்தகத்தில் வலையேற்றுபவர்களுக்கு ஒரு ஆரூடம் சொல்கிறேன்

ஏழேழு ஜென்மத்துக்கும் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சி பொங்கி வழியும்........

கொழுப்பைப் பார்ர்ர்ரா....... கடைசி வாசகத்திலும் எவ்வளவு “ழ”ன்னு..... கொழுப்புல ஒரு ’ழ’...  ச்ச்சே.... பொழப்பைப் பாருங்கப்பா...

மீண்டும் இன்னொரு ‘ழ’....  உன்னையெல்லாம் பழுது பார்க்கனும்யா...

இவன் பழக்கவழக்கமே வேண்டாம்ப்பா இவனைக் கழுமரத்தில ஏத்துங்கப்பா என்று பழிசுமத்தி ஏற்றிவிடாதீர்கள்.

என்ன பொழுது போகலையான்னு கேட்பவர்களுக்கு.....

தமிழினிது.... குழலினிது... யாழினிது.... :-))))

கழுகுக் கண்ணால் வெறித்து கழுத்தை நெறிக்க ஓடிவரும் தோழர்களிடம் ஒரு வார்த்தை...

நான் ஒரு அப்பழுக்கற்ற பழுத்த பழம்... கல்லடி படலாம்... ஆனால், கழுத்தை நெறித்தால் பூமிக்கு கனமழை வழாது... ச்சே... வராது.. மழுப்புகிறேன் என்று நினைக்காதீர்கள்.


மழுமழுன்னு ஷேவ் பண்ணிக்கிட்டா கூட ஐன்ஸ்டீனுக்கெல்லாம் “ழ” வராது. அப்புறம் எதுக்கு நாக்க இவ்ளோ பெரிசா நீட்றார்!! பாவம் இந்த மனுஷனுக்கு இழுக்கு!!

#பார்க்கலாம் எவ்ளோ தமிழ் மழலைகள் கழனி, பழனி, மழு, புழு, கழி, மழி, பிழி என்று பல “ழ”வைக் கமெண்ட்ல போடறீங்கன்னு.....

கொழுகொழு மாதிரி இரட்டைக் கிளவிகள் கூட எழுதலாம்.

எல்லாம் உங்க சுழி...

 நம்ம டாஸ்மாக்கின் சொந்தபந்தங்கள் மாதிரி சொல்லனும்னா... குழ் நைழ்...

வெட்டி வேலை...

பின் குறிப்பு: முழு மூச்சாக உட்கார்ந்து எழுதுவதற்கு நேரமில்லை. காதல் கணினி வேற பாதியில் இருக்கு. முகப்புஸ்தக நண்பர்களிடம் பகிர்ந்தது. உங்கள் பார்வைக்கும்...

-

Tuesday, August 23, 2011

அன்னமில்லாமல் அண்ணா!

கடந்த ஆறு நாட்களாக அன்ன ஆகாரம் இல்லாமல் அண்ணா ஹசாரே ஊழலுக்கும், நம் நாட்டில் லாவண்யமாக நாட்டியமாடும் லஞ்சத்திற்கும் எதிராகக் கொடிபிடித்து இந்த இரண்டாவது இன்னிங்ஸ் ”சாகும் வரை உண்ணாவிரதம்” மேற்கொண்டிருப்பது ஊரறிந்த விஷயம். ஆனால் அண்ணாவுக்கு ஆதரவாக அவரை உண்ணாவிரதக் கோலத்தில் காண வரும் ஊழல் எதிர்ப்பாளர்களும், தன்னார்வ தொண்டர்களும் தீவிர உண்ணும் விரதம் மேற்கொள்கிறார்களாம்.


எதை விடுப்பது எதை எடுப்பது என்று திணறும் அளவிற்கு வண்டி வண்டியாக வீட்டில் செய்த பலவகையான பட்சணங்களும், உணவு வகையறாக்களும், உணவு விடுதிகளிலிருந்து பார்ஸல் கட்டிக் கொண்டு வருவதுமாக ராம் லீலா மைதானம் பஃபேக்களினால் நிரம்பி வழிகிறது.
பக்கோரா, கச்சோரி, இந்தியர்களின் பிரதான கொரிப்பு தின்பண்டமான சமோஸா, பரோத்தா, ரஸகுல்லா, வடக்கத்திய நம்கீன், பிஸ்கோத்து, வாழைப்பழம், டீ, மாம்பழச் சாறு என்று தடபுடலாக அறுசுவை உண்டியோடு மைதானம் அமர்க்களப்படுகிறது.

தன்னார்வலர்கள் உணவுப் பொட்டலங்களை வினியோகிக்கும் அதே வேளையில் ”வீட்டு சாப்பாடு” எடுத்து வந்த அன்பர்களும் ஆசையோடு அதை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டார்கள். தன்னார்வலர்கள் தங்களிடமிருந்த உணவுப் பதார்த்தங்களை “இன்னும் கொஞ்சம் பிரசாதம் எடுத்துக்கோங்க” என்று ஊட்டி விடாத குறையாக கையைப் பிடித்து வற்புறுத்தினார்கள். #ப்ளீஸ் நோட் ”பிரசாதம்”.

ஒரு கச்சோரியை கடித்துக் கொண்டே பார்வையாளர் ராஜேஷ் தவான் கூறியதாவது:
“ரெண்டாவது தடவையா நான் இந்த சிற்றுண்டியைச் சாப்பிடுகிறேன். ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்று கூறினாலும் கேட்காமல் கையில் திணிக்கிறார்கள். வேறு வழியில்லாமல் சாப்பிடுகிறேன்” என்றார் வாயெல்லாம் கச்சோரியாக.

மைதானம் பண்டிகை மற்றும் திருவிழா போன்றவைகள் நடைபெறும் இடம் போல காட்சியளிக்கிறது. ”ஐ அம் அண்ணா” என்று குல்லா அணிந்தவர்கள் மத்தியில் சிலர் தீவிரமாக மூவர்ணக் கொடியை அசைத்தவாறு இருந்தார்கள். வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு மீந்து போன சமோஸாக்களும், வாழைப்பழங்களும் குப்பைத் தொட்டிகளை நிரப்பின. கொறிக்க தீனிகளுடன் மைதானத்தின் இன்னொறு மூலையில் இளம் சிறார்கள் பட்டம் விட்டு பரவசமடைந்தார்கள்.

நாம் சந்தித்த பலர் அண்ணாவை அறிந்திருந்தாலும், “சும்மா பார்த்துட்டு போகலாம்” னு வந்ததாக கூறினார்கள். ”அண்ணாவை நான் டி.வியில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். எங்க அம்மாவும் அப்பாவும் அவரைப் பற்றி அடிக்கடி வீட்டில் பேசியிருக்கிறார்கள். அவங்க ரெண்டு பேரும் அண்ணாவைப் பார்க்க போரோம் என்றதும் நானும் என்னுடைய சகோதரனும் ”நாங்களும் வருகிறோம்” என்று அவர்களுடன் தொற்றிக்கொண்டோம். ”சரி” என்று ஒத்துக்கொண்டு கூட அவர்களுடன் அழைத்து வந்தார்கள். இப்பொழுது எங்களுக்கு நன்றாக பொழுது போகிறது” என்று தென் தில்லியிலிருந்து உண்ணாவிரதம் வேடிக்கைப் பார்க்க வந்த அங்கூர் கோபால் கூறினார்.

பத்து பாத(க)க் குறிப்புகள்(Foot notes):

  1. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் முதற் பக்க செய்தியை பெருமையுடன் தமிழ்ப்‘படுத்தியது’  உங்கள் ஆர்.வி.எஸ்.
  2.  வயிறார பசிக்கு அன்னமிடுவோருக்கு அன்னதாதா என்று பெயர்! இவர் சாப்பிடாமல் விரதமிருந்து அண்ணா தாதாவாகிவிட்டார்.
  3. அண்ணா ஹசாரேவுக்கு ஐந்து கிலோ எடை குறைந்துவிட்டதாம். வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்துக்கு பத்து கிலோ கூடிவிடுமோ?
  4. ஹிந்துவில் அருந்ததி ராய் அண்ணா ஹசாரேவுக்கு உதவுவது அக்கா மாலா கம்பெனியார் என்கிறார். கடவுளுக்கே வெளிச்சம்.
  5. ஊழலை எதிர்த்து அண்ணா போராடுகிறார். அண்ணாவை எதிர்த்து அரசாங்கம் மல்லுக்கு நிற்கிறது. இதன் மூலம் நாங்கள் ஊழலைக் கைவிட மாட்டோம் என்று மக்களுக்கு மத்திய சர்க்கார் பறைசாற்றுகிறது. அடடா... இதிலாவது என்னவொறு கண்ணியம்.
  6. அண்ணா ஹசாரே ராகுல் அல்லது பிரதம மந்திரி ஆபீஸிடம் மட்டும் தான் பேசுவேன் என்கிறாராம். ராகுல் தான் அடுத்தது என்று இவரே ட்ரெண்ட் செட் பண்ணுகிறாரோ!!
  7. சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது அண்ணாவுடன் சென்று அமரும் ஜடாமுடி கார்ப்போரேட் சாமியார்கள்  ஏன் முழு நேரம் வாயையும் வயிற்றையும் கட்டி உட்காரக் கூடாது?
  8. தில்லி இமாம் திருவாளர் புகாரி முஸ்லீம் சகோதரர்களை அண்ணாவை விட்டு தள்ளியிருக்க சொல்கிறார். என்ன என்று காரணம் கேட்டால் “பாரத் மாதா கீ ஜெய்” மற்றும் “வந்தே மாதரம்” என்ற கோஷங்கள் இஸ்லாத்திற்கு எதிரானது என்கிறார். தாய் மண்ணையும், தாயையும் கூட வணங்குவதை இஸ்லாம் ஏற்பதில்லை என்கிறார்.
  9. தலை நகர் தில்லியில் அண்ணா சாப்பிடாமல் உட்கார்ந்ததிலிருந்து டிராஃபிக் விதிமீறல்கள் நிறைய நடக்கிறதாம். காந்தி படம் போட்ட குல்லாயுடனும், தேசியக் கொடியை ஒரு கையிலும் ஏந்தி ஒரே வண்டியில் மூவர் பயணிப்பது போன்றவைகள் சகஜமாக நடக்கிறதாம். கேட்டால் பிரச்சனை என்று போக்குவரத்து போலீசார் வேடிக்கை பார்க்கிறார்களாம். #சென்னையில் அடக்க ஒடுக்கமாக எல்லோரும் அனைத்து சமயங்களிலும் வாகன ஊர்தி ஓட்டுவது அனைவரும் அறிந்ததே!!
  10. அன்னை சோனியா காந்தி தக்க சமயத்தில் உள்ளூரில் இல்லாதது இந்த அண்ணா விவகாரத்தில் தங்களுக்கு பெரிய பின்னடைவு என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஹையோ...ஹையோ...
இந்தக் கட்டுரை அதீதத்தில் வெளியாகியுள்ளது.

பட உதவி: http://www.crickblog.com/

-

Friday, August 19, 2011

பரகீய ரஸம்



அது ஒரு பௌர்ணமி இரவு. ஸரத் பருவம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதம் ஒரு மழை பெய்து ஊரைக் குளிரூட்டி சற்றுமுன் தான் ஓய்ந்திருக்கிறது. பெரிய பெரிய மரங்களின் பச்சைப்பசேல் தளிர் இலைகளில் இருந்து சொட்டுச்சொட்டாய் நீர் வடிகிறது. மாதாந்திர பௌர்ணமிகளில் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு என்றுமே முதலிடம். தனி விசேஷம். காலடி வைக்கும் புல் தரையெங்கும் ஜில்ஜில்லென்று பாதம் மூலம் தலைக்கேறி தாக்கும் குளிர்ச்சியான மழைத் தண்ணீரின் தடங்கள். சுற்றுப்புறமெங்கும் ஒரு எல்லையில்லா அமைதி. சிறிது நேரத்திற்கெல்லாம் தன்னை அவிழ்த்துக்கொண்டுப் புறப்பட்ட மெல்லிய காற்றின் ஓசையை அதைக் கிழித்துக் கொண்டு பூச்சிகளும் சில்வண்டுகளும் போட்டி போட்டுக்கொண்டு தொடர் கச்சேரி போல நீண்ட நேரமாக ரீங்காரமிடுகின்றது. காற்றும் வண்டினமும் சேர்ந்து இந்த மனம் மகிழும் தருணத்தைச் சிறப்பிக்க விருந்தினர் யாரையோ எதிர்ப்பார்க்கிறார்கள் போலும்.

தன் மேல் தீராக் காதல் கொண்ட கோபியருடன் இன்றிரவு நடனமாட முடிவு செய்தான் ஸ்ரீகிருஷ்ணன். பட்டாடைகளை எடுத்து உடுத்தி அழகு பார்த்தான். சிகைக்கு முன்னால் நெற்றிச்சுட்டி போல தங்கக் கிரீடம் அணிந்து அதற்கு சிகரமாய் மயிற்பீலி வைத்து தன்னைக் கண்டவுடன் காதலிக்கத் தூண்டும் வண்ணம் தயாரானான். இதழ்களில் தனது மந்தகாசப் புன்னகையை எடுத்துப் பொருத்திக்கொண்டான். ஸ்த்ரீகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் நெஞ்சையள்ளும் மணம் பொருந்திய மல்லிகை மலர் மாலையை எடுத்துக் கார்வண்ண மாரின் மேலே சார்த்திக் கொண்டு ராஸ நடனம் புரிய குதூகலமாகக் கிளம்பினான்.

ஒரு நாட்டியக்காரர் ஒன்றுக்கும் மேற்பட்ட நடன மங்கையருடன் நடம் புரிவது ராஸ நடனம் என்று வேதங்களில் இருக்கிறது. ஸரத் பருவத்தில் வரும் பௌர்ணமி இரவுதான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ராஸ நடனமாடியதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. கோபிகைகளுடன் ஆரத்தழுவி ஸ்ரீகிருஷ்ணர் நடம் புரிந்தது யோக மாயை என்று அழைக்கப்படுகிறது. ஜடவுலகில் யவ்வனப் பருவத்து யுவனும் யுவதியும் கட்டிப் பிடித்து நடம் புரிவதை மஹாமாயை என்பார்கள். யோகமாயைக்கும் மஹாமாயைக்குமான வித்தியாசத்தை தங்கத்துக்கும் இரும்புக்குமான வேறுபாடு என்பதை நாம் அறியவேண்டும். இரண்டுமே உலோகம் என்றாலும் அதனதன் மதிப்பு நாம் நன்கு அறிவோம்.

மலர்மாலைகள், பட்டாடைகள், மயிர்பீலி சகிதம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ராஸ லீலா புரிந்த போது அவருடைய வயது 8. கிருஷ்ணனுக்கும் கோபியருக்கும் உண்டான காதலை “பரகீய ரஸ” என்று விவரிக்கிறார்கள். மணமான ஆணோ, பெண்ணோ மற்றொரு மணமான கணவன் மனைவி மேல் காதல் கொள்வதை “பரகீய ரஸ”ம் என்பார்கள். பரமாத்மாவுடன் இத்தகைய ஜோடியினர் புலனின்பங்கள் மேல் பற்றுக்கொள்ளாமல் அன்பை மட்டும் செலுத்தி காதலிப்பது பரகீய ரஸத்தில் சேர்கிறது. சிற்றின்பங்களில் நாட்டமில்லாமல் பேரின்பரசத்தை பருக வைக்கும் கண்ணபரமாத்மா மேல் கோபியர் கொண்ட பரகீய ரஸக் காதல் கலியுகத்தில் நடக்கும் கள்ளக்காதல் கண்றாவி வகையறாக்களில் சேராது.

மல்லிகை மாலை அணிந்து கொண்டு கையில் புல்லாங்குழலுடன் அந்த நிலாப்பொழியும் நதிக்கரைக்கு வந்தான் கண்ணன். இளஞ்சிவப்பு நிறத்தில் சந்திரன் உதித்திருந்தான். தொடுவானத்தில் அவன் புறப்பட்ட அந்த இடம் முழுவதும் குங்குமப்பூவை வாரி இறைத்தார்ப் போல செக்கச்செவேலென இருந்தது. நதிக்கரையில் மல்லியும், முல்லையும் கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கின. சம்பங்கியின் வாசம் ஒரு தனி மயக்கத்தை ஏற்படுத்தியது. நீலோத்பல மலர்களும், சங்கு புஷ்பங்களும் அவன் காலடியில் விழுந்து மெத்தையாயின. பலவிதமான புஷ்பங்களில் வயிறு முட்ட தேனுண்டு போதையில் தள்ளாடியபடி காற்றில் மிதந்தன வண்டுகள்.

இமையிரண்டையும் மூடி மோகனப் புன்னகையை சிந்தவிட்டு தனது குழலை எடுத்து கானம் வாசிக்கத் தொடங்கினான். அந்த நதிக்கரையோர கானகத்திலிருந்து முதலில் ஒரு முயலும், மானும் குதித்து அவனருகில் இடம் பிடித்தன. உயிரைப் பிடித்து தொரட்டி போட்டு இழுக்கும் அந்த குழலிசைத் தொடர ஒரு புள்ளிக்கலாப மயில் ஆடிவந்து தோகைவிரித்து நின்றது. கிருஷ்ணன் தோளில் இடம்பெற்றிருந்த அங்கவஸ்திரம் அசைய நல்ல குளிர்க் காற்று தென்றலாய் வீச ஆரம்பித்தது. பௌர்ணமி முழு நிலவு தனது கிரணங்களை ஒரு சேரக் குவித்து அவனை நோக்கி ஒளிக்கற்றைகளை வாரியிறைத்தது.  முன்னால் சொறுகியிருந்த மயிற்பீலி அசைந்தாடியது. வைரக்கற்களை வாரி இறைத்தது போல நட்சத்திரங்கள் வானில் சுடர்விட்டு ஜொலித்தன. ஒரு மந்திரசக்திக்கு கட்டுண்டது போல கிருஷ்ணனின் புல்லாங்குழல் இசையில் இயற்கை ஒரு ரம்மியமான சூழ்நிலையில் அங்கே சிறைப்பட்டது.

குழலிசையின் கானம் ஊருக்குள் கேட்டதும் கோபியரின் உள்ளம் உடனே கிருஷ்ணரைக் காணத் துடித்தது. அவர்கள் முகம் தாமரை போல மலர்ந்தது. அவன் குழல் வாசிக்கும் அந்த நதிக்கரை பிருந்தவனத்தில் வம்சீவடா என்ற இடத்திலிருந்தது. மேலே அணியவேண்டிய வஸ்திரங்களை கீழேயும், கீழே போட வேண்டியதை மேலேயும் போர்த்திக் கொண்டோ அல்லது வெறுமனே சுற்றிக்கொண்டோ ஆளாய்ப் பறந்தார்கள். குழந்தைக்கு பால்சோறு ஊட்டிக்கொண்டிருந்தவர்கள் அப்படியே கைகூட அலம்பாமல் சாதக்கையோடு விரைந்தார்கள். கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த கோபியர் சிலர் அப்படியே போட்டுவிட்டு ஓடினர். மணமாகாத மங்கையர் சிலரை அவர்களது தந்தையர் தடுத்துப் பார்த்தனர். தரையில் பாயை விரித்து படுத்த சில கோபியர் ஆடை அலங்கோலமான நிலையில் சுருட்டிக்கொண்டு பறந்தனர்.

குழலிசைப்பவனும், ஆடுபவனும் பரமாத்மா என்றறியாத கோபியர் ஒரு சிறுவனுடன் ஆடிப்பாடி மகிழ ஒருவரை ஒருவர் முண்டியடித்து அந்த ஆற்றங்கரையோரம் குழுமியிருந்தனர். ஒரு வாலிப சேனையாக தன்னைச் சூழ்ந்த கோபியரைப் பார்த்து கிருஷ்ணர் “இந்த அகால நேரத்தில் உங்களுக்கெல்லாம் இங்கென்ன வேலை?” என்று வினவினார்.

அவருடன் களிநடனம் புரிய வந்த அனைத்து கோபியரும் மனமுடைந்தனர். “கிருஷ்ணா!
அனைத்தும் அறிந்தவன் நீ!
எங்களின் காதல் தலைவன் நீ!
சுவாசக் காற்று நீ!
உடம்பில் உறையும் உயிர் நீ!
எங்களின் பாதுகாவலன் நீ!
அனாதரட்சகன் நீ!
ஆபத்பாந்தவன் நீ!
எங்கள் அங்கமெங்கும் அரைத்துப் பூசிக் கொள்ளும் மஞ்சள் நீ!
மேனியைத் தொட்டுத் தழுவும் ஆடை அணிகலன்கள் நீ!
எங்கள் ஹிருதயத்தின் துடிதுடிப்பு நீ!
எங்கள் இளமைக்கு அதிபன் நீ!”
என்றெல்லாம் பலவாறாக அவனைத் துதித்தனர்.

“கோபியரே! இப்போது நள்ளிரவு கடந்து விட்டது. இந்தக் கானகத்தில் நிறைய கொடிய விலங்கினங்கள் வசிக்கின்றன. அவைகளால் உங்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்து விட்டால் என்ன செய்வது. நீங்கள் உங்கள் குழந்தைகளை, கணவன்மார்களை, அண்ணன், தம்பி மார்களை, தாய் தகப்பன்களை விட்டுவிட்டு என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள். இது தகாத செயல். இப்போது அவர்கள் உங்களைத் தேடிக்கொண்டிருப்பார்கள். தயவுசெய்து எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திக் கொடுக்காமல் இந்த இடத்தை விட்டு நகருங்கள்” என்று குரலில் கொஞ்சம் பொய்யான கோபத்தை வரவழைத்துக் கொண்டு சிடுசிடுத்தார் அந்த மாயவன்.

அவன் ஆரத்தழுவி முத்தமிட மாட்டானா என்ற விரக ஏக்கத்தில் ஓடிவந்தவர்கள் திகைத்தார்கள். இதைக்கேட்ட அவரது ஆத்ம சகாக்களான கோபியர்களுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அவர்களது கருமேகம் போன்ற கண்களிலிருந்து கண்ணீர்மழை பொழிய தயாராக இருந்தது. “ஏன் எங்கள் கூட நீ ஆட மாட்டாயா?” என்று வாயெடுத்து எவரும் கேட்கவில்லை. எந்த கோபியரும் நிமிர்ந்து மற்றொருவரை பார்க்காமல் நிலம் நோக்கியிருந்தார்கள். “ஐயனே! இப்படி எங்களை சோதிக்கலாமா?” என்று கண்ணீரும் கம்பலையுமாக கால்களால் அந்த ஆற்றங்கரை மணலில் கோடு கிழித்தார்கள். முகம் வாடிய மலரென ஆகி மனம் வெம்பி நொந்தார்கள்.


இதற்கு மேலும் அவர்களை சோதிக்ககூடாது என்று முடிவு செய்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது சிருங்கார ரஸம் ததும்பும் நடனம் புரிய ஆரம்பித்தார். வருத்தமடைந்த அனைத்து கோபியரும் உற்சாகமடைந்தனர். சந்தோஷத்தில் கிருஷ்ணர் மீது முட்டி மோதி குதூகலித்தார்கள். ஒவ்வொரு கோபியருடனும் கைகளைத் தட்டியும், இடுப்பில் கைகோர்த்து இடையோடு இடை சேர இழுத்து அணைத்தும், முன்னாலும் பின்னாலும் கைகளால் உரசியும் நடனத்தில் ஈடுபட்டார் இறைவன். கிருஷ்ணரின் சிருங்கார ரஸத்தில் ஊறி ராஸ நடனத்தை காதலில் மயங்கிய நிலையில் கோபியர்கள் ஆடினார்கள்.

கிருஷ்ணருடைய திருக்கரங்கள் எந்த கோபிகா ஸ்த்ரீயின் மேல் தீண்டுகிறதோ, அவளை மற்ற கோபியர் செல்லமாக சீண்டி கிண்டலடித்து கேலி பேசிச் சிரித்தனர். ஸ்ரீகிருஷ்ணரின் குழலோசையும், கோபியரின் சிரிப்பொலியும் நதிக்கரையோர கானகத்தில் இருந்த காட்டு விலங்கினங்களைக்கூட முயக்கமுறச் செய்தன. முத்தமிட்டும், கட்டியணைத்து தூக்கியும், கைகள் பின்னப் பின்ன நடனமும் புரிந்து கோபியர்களை சந்தோஷப்படுத்தினார்.

விடிய விடிய இதுபோல பகவான் ஸ்ரீகிருஷ்ணருடன் ராஸ நடனம் புரிந்துவிட்டு அனைவரும் மறுநாள் அதிகாலையில் தத்தம் வீடுகளுக்கு திரும்பினர்.

**

பரீட்சித்து மஹாராஜா சுகப்பிரம்மத்திடம் “இந்த ராஸ லீலையால் என்ன பயன்?” என்று கேட்கிறார். அதற்கு சுகர்

“ராஸ லீலை கிருஷ்ணனுடைய அளவில்லா அன்பின் வெளிப்பாடு. அவனுடைய பக்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அவனுடன் கலப்பதற்கான மொழி. பக்தர் அல்லாதோரை கவர்ந்திழுக்கும் தந்திரம். இதனால் இவனுடன் கலந்த பிறகு அனைவரும் தெய்வீகத் தன்மையும் நிலையும் அடைகின்றனர்” என்று பதிலளித்தார்.


21-08-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி. போன வருஷம் எழுதியதைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

இந்தக் கட்டுரை அதீதத்தில் வெளிவந்துள்ளது.

பட உதவி: http://www.krishna.com

Thursday, August 18, 2011

வாழ்வியல் பாடத்திட்டம்



சமூக அறிவியல் வாழ்க்கையின்  
ஆசாபாசத்திற்கு அப்பாற்பட்டது

பரு(வ)ப்பொருள் மேனியின் இயற்பியலில்
காதல் வசப்படுகிறது

எல்லையில்லா அன்பு இருவரின்  
வேதியலுக்கு உட்பட்டது

உறவின்  நேசத்திலும் பாசத்திலும்
உயிரியல் வாழ்கிறது

திருமணம் இருவீட்டாரின்
கணிதத்தில் அடங்குவது

குடும்ப அமைதி
வரும் மணப்பெண்ணின்  
சரித்திரத்தில் இருக்கிறது

மன ஆரோக்கியம் நாம் வாழும்
புவியியலில் உள்ளது

நினைவிருக்கட்டும்!
சுதந்திரம் ஆங்கிலேயரிடமிருந்து மட்டுமா வாங்கியது?

ஏதோ என்னால முடிந்த
தமிழ் இது

கவிதைப் புலிகளைப் பார்த்து இந்தக் கட்டுரைப் பூனை சூடு போட்டுக் கொண்டது

#தோழர் வெங்கடேசன்.செ அவர்களுக்கு பின்னூட்டமாக போட்டது, இங்கு கொஞ்சம் முலாம் பூசப்பட்டது. 

பட உதவி: laurenpittis.bandcamp.com

-

Tuesday, August 16, 2011

அவதாரத் திருநாள்

rvs alone
பட்டுப்பாவாடை சரசரக்க ஒரு எவர்சில்வர் ப்ளேட் நிறைய காட்பரீஸ் கொட்டி எடுத்துக் கொண்டு கல்யாண ரிசப்ஷனில் வாசலில் நின்று சர்க்கரைக் கொடுப்பது போல இருகையிலும் ஏந்தி வீடு வீடாக தெருவில் சிறுமிகள் இனிப்பு வினியோகித்த கரும்பு நாட்கள் தான் பிறந்த நாள் என்றால் எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆண்களுக்கு என்றைக்குமே படாடோக அலங்காரம் தேவையில்லை. அவசியமும் இல்லை. பெண் பிள்ளைகள் புத்தாடை உடுத்தி, கூந்தலுக்கு குஞ்சலம் வைத்து கட்டி, முகத்துக்கு ஒரு இன்ச் பாண்ட்ஸ் பூசி, கண்ணுக்கு மை எழுதி, காதுக்கு குடை ராட்டினம் போல ஜிமிக்கி மாட்டி, அம்மாவின் வாத்து போட்ட தங்கச் செயினை சட்டைக்கு மேலே தொங்கவிட்டுக் கொண்டு, அது ஆட ஆட, கொலுசு கொஞ்சும் சலங்கையாய் ஜலஜலக்க பர்த்டே அன்றைக்கு நடந்து வரும் அழகே தனி. ஸ்டாப்! ஸ்டாப்!! இதெல்லாம் நான் பாண்ட் போட்ட புதிதில் பார்த்த சின்னஞ்சிறு மழலைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.

சாக்லேட் தட்டை நீட்டி விட்டு ஒன்றுக்கு மேலே எடுத்துவிடுவானோ என்ற பதற்றத்தில் தடுமாற்றமாக கண் தாறுமாறாய் அலைபாயும். ஒரு சாக்லேட்டை எடுத்தவுடன் சடாரென்று கையை பின்னால் இழுத்துக்கொண்டு அடுத்தாளுக்கு தட்டை நீட்டிவிடுவார்கள். இன்னும் சில சாக்லேட் கைகாரிகள் டீச்சர் வீட்டிற்கு மொத்தம் நான்கு சாக்லேட் என்று எண்ணித் தட்டில் போட்டு இளித்துக்கொண்டே நீட்டுவார்கள். பலே கில்லாடிகள். ஒரு முறை ஒரே அள்ளலில் இரண்டு சாக்லேட்களை அபகரித்துக் கொண்ட குற்றத்திற்காக ஒரு வாரம் முகத்தைத் தூக்கிக் வைத்துக்கொண்டுப் பார்க்காமல் ”டூ”விட்டவர்களும் உண்டு.

பெரிய பெரிய பூப் போட்ட சட்டையும், காக்கி அல்லது கருப்பு கலரில் விரைத்துக் கொண்டு நிற்கும் ஒரு மொடமொடா ட்ராயரும்தான் பிறந்த நாளின் பிரசித்திப் பெற்ற துணிமணி. சில வருடம் இந்த சட்டைப் பூ காயாக டிசையனில் உருமாறலாம். வேறொன்றும் அண்டபேரண்ட வித்தியாசம் எதுவும் இருக்காது. சட்டை, ட்ராயருக்குத் துணி எடுத்து ’ஸ்டைலோ’ மணியிடம் ஒரு மாசத்துக்கு முன்னால் தைக்க கொடுக்கவேண்டும்.

ஆண்களுக்கான அதி நவீன விசேஷ டைலர். எட்டாவது படிக்கும் காலத்திலேயே என் உயரம் இருக்கும் மணி அண்ணன் கால்சராயில் ஜிப் வைக்க அளவு எடுக்கும் போது இரு தொடைகளுக்கு இடையே அந்த மரக்கட்டை ஸ்கேலால் ஒரு முறை தூக்கிப் பிடிக்கும் போது ஒரு விதமாக ஜிவ்வென்று இருக்கும். வேலைப்பளுவில் கோபத்தில் இருந்தால் ஒரு விசையுடன் தட்டும் போது கலங்கிப்போய்விடும்.

இன்ச் டேப்பை சில சமயங்களில் அங்கவஸ்திரமாகவும் பல சமயங்களில் கழுத்தைச் சுற்றி நாகாபரணமாகவும் போட்டுக்கொண்டு நம்மை தோளைப் பிடித்து பம்பரமாகச் சுற்றிவிட்டு சுற்றிவிட்டு அங்க அளவெடுப்பார். அவர் அளந்ததில் நிச்சயம் களைத்துப் போய் நாயர் கடை ஸ்ட்ராங் டீயோ, அல்லது பாய் கடை குளுகோஸ் கூல்ட்ரிங்ஸோ குடிக்கவேண்டும். அவரின் கடையைத் தாண்டி வரும்போதும் போகும்போதும் ஒரு முறை எட்டிப்பார்த்து “அண்ணே ட்ரெஸ் எப்ப ரெடியாகும்?” என்று உடுக்கும் புத்தார்வத்தில் ஒருவித துடிப்புடன் கேட்டால் “அப்பாட்ட குடுக்கறேம்பா” என்றும், அப்பாவிடம் “பையனை அனுப்புங்க ஸார்! நீங்க ஏன் வீணா கடைக்கு அலையறீங்க” என்று பேசி பிரித்தாளும் கொள்கையை கடைபிடிப்பார். சில சமயம் ஜிப்பிற்கு கீழே லேசாக பிடிப்பது போல இருந்தால், “எல்லாம் போடப் போட சரியாயிடும்” என்று சொன்னது எப்படி என்ற லாஜிக் இன்றுவரை இடிக்கிறது.

அது போகட்டும். புத்தாடை உடுத்துவது ஒரு சுகம் என்றால் அதை பள்ளிக்கு அணிந்து செல்வது சுகமோ சுகம். அனைவரும் நேற்று உடுத்திய நீலக் கலர் ட்ராயர் வெள்ளைச் சட்டை சீருடையில் வர நாம் மட்டும் புதிய கலர் ட்ரெஸ்ஸில் வாயெல்லாம் பல்லாக இளித்துக்கொண்டே செல்வது ஒரு அல்ப சந்தோஷம். ஜிலுஜிலுக்கும் ட்ரெஸ் போட்டுக்கொண்டு ராமராஜனாய் சென்றால் அன்றைக்கு பள்ளியின் செண்டர் ஆப் அட்ராக்‌ஷன் நாம்தான். சில ஆசிரிய புண்ணியாத்மாக்கள் “இன்னிக்கு பொறந்த நாளாச்சேன்னு விடரேன்! பொழச்சுப் போ!!’ என்று ஒரு கொலை மிரட்டலோடு விட்டுவிடுவார்கள். இது போன்ற தருணங்கள் நித்தம் நித்தம் நமக்கு பிறந்த நாள் வரக்கூடாதா என்று ஏங்க வைத்துவிடும். ஒரு நாள் முதல்வர் போல வீட்டிலும், ரோட்டிலும், ப்ளாட்ஃபாரத்திலும், பள்ளியிலும் அன்று நாம் தான் கூஜா இல்லாத ராஜா!

மாலையில் கோபாலன் கோவிலுக்கு சென்று “பூரட்டாதி, கும்ப ராசி” சொல்லி ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வந்து புதியதை விழுத்துவிட்டு பழையதை அணிந்துகொள்ளும் போது துக்கம் தொண்டையை அடைக்கும். மறுநாள் வழக்கம் போல ”சனியனே!”, “கடங்காரா”, “பீடை” போன்ற பீஜாக்‌ஷர மந்திரங்கள் ஒலிக்க எங்கும் பவனி வரவேண்டும். வட்டியும் முதலுமாக வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும். மாலை மரியாதை எதுவும் கிடைக்காது.

கருப்பு சோன்பப்படியை உதிரியாய் எடுத்து ஒட்ட வைத்தது போன்று உதட்டுக்கு மேலே குச்சிகுச்சியாய் ரோமம் துளிர் விட ஆரம்பித்த பிறகு வந்த பிறந்தநாட்கள் என் இளமைக்கு சமர்ப்பணம். “மாப்ளே.. எங்க ட்ரீட்?” என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் அந்நன்நாள் தொன்னூற்று ஒன்பது சதவிகிதம் பொன்நாளாக அமையும். தோள், கழுத்து, இடுப்பு என்று எங்குமே அளவே இல்லாமல் மாட்டி விட்டது போன்ற கொசுவலை ஸ்டைலில் ஒரு துணியில் சத்யராஜ் “அண்ணே.. அண்ணே.. நீ என்ன சொன்னே... என்னப் பார்த்து என்ன பாடச் சொன்னே!!” என்று தண்ணி போட்டுப் பாடிய மேல் சட்டை போடும் வயது(க்கு) வந்த போது நான் மாரிஸ் டைலருக்கு மாறியிருந்தேன்.

சாந்தி தியேட்டர் எதிர்புறம் இருந்தா அக்கால ஃபேஷன் கிங் அவர். தலையில் பொட்டு மயிர் கிடையாது. உச்சந்தலையில் கை வைத்தால் வெண்ணையாய் வழுக்கி அவர் உள்ளங்காலடியில் கொண்டுபோய் விடும் வழவழ மண்டை. அண்ணன் தம்பி மொத்தம் மூன்று பேர். உடனே ஆர்.பி. சௌத்ரி படத்துக்கு போய்விடாதீர்கள். கை கால் இடுப்பு ஷோல்டர் அளவுக்கு ஒருத்தர், வெட்டித் தைக்க ஒருவர், காஜாவுக்கு இன்னொருவர் என்று குடும்பமாக எங்கள் ஊர் இளைஞர்களை ரஜினிகாந்த்களாகவும், கமல்ஹாசன்களாகவும் மாற்ற குத்தகைக்கு எடுத்திருந்தார்கள். மாரிஸ் வாசலில் சின்னோண்டு மினியாய் தவம் கிடந்த பதின்மங்கள் ஏராளம்.

ஊர்த் திருவிழாவின் போது ஐயனார் கோவில் வாசலில் நாலு ட்யூப் லைட் கட்டி விடிய விடிய இறங்காமல் ஓட்டும் சைக்கிள் சாகசவித்தைக்காரர்கள் போல சில ஆத்ம நண்பர்கள் பொறந்த நாளில் புதுசு போட்டுக்கொண்டு சைக்கிளில் வீதிவீதியாகச் சுற்றுவார்கள். எனக்கு பெடல் போடுவதற்கு அவ்வளவு தெம்பில்லை. ஆகையால் ஆண் நண்பர்கள் அனேகம் பேர் ஊரின் அப்ஸரஸ் ஃபிகர்கள் பற்றிய தெருவாரிக் கணக்கெடுப்போடும், நேற்றிரவு குஷ்பூ பாரில் நடைபெற்ற சரக்கு பார்ட்டியில் அவர்களது பாண்ட் அவிழா சாகசத்தையும், லக்‌ஷ்மி தியேட்டர் ’பக்தி’ படங்களைப் பற்றியும் வெட்டி அரட்டைக்கு மாநாடாகக் கூடும் ’ஸ்னேக்’ பார்களிலும், கண்டிப்பாக குட்டிச்சுவர் இருக்கும் ஒன்றிரெண்டு தெருமுனைகளுக்கும் ஒரு மினி ரவுண்ட் அடித்துவிட்டு சுருக்கென்று பத்தரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு திரும்பும் ஒரு உத்தமோத்தமன்.

கல்லூரியின் போது எட்டாம் நம்பர் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு கொட்டமடித்துக் கொண்டாடிய பிறந்த தினங்களைப் பற்றி இச்சந்தர்ப்பத்தில் சொல்வது அவ்வளவு உசிதமாக இருக்காது. அது இளமைக்கு விருந்து. வாலிபத்தின் உட்சபட்ச கொண்டாட்டம். படிப்படியாக வயது ஏற ஏற ஹாப்பி பர்த்டேக்கள் சம்பிரதாயமாக புது ட்ரெஸ் போட்டுக் கொண்டு ஸ்வாமிக்கும், பெற்றோருக்கும் நமஸ்காரம் செய்வதோடு முடிந்துவிடுகிறது.

பின் குறிப்பு: ”என்ன இன்னிக்கி பொறந்த நாள் பற்றி இவ்ளோ வளவளா?” என்று கேட்பவர்கள் இந்தப்பக்கம் கொஞ்சம் உங்கள் காதைக் கொடுங்கள். “இன்றைக்கு எனக்கு பிறந்த நாள்”. மிகவும் பாடாய்ப் படுத்துபவர்களை எங்கள் பகுதியில் “சரியான அவதாரமா வந்து பொறந்திருக்கான்டா” என்று திட்டுவார்கள். இப்போது தலைப்பை மீண்டும் ஒரு முறை படிக்கவும். நன்றி!

-

Saturday, August 13, 2011

காதல் கணினி

முன் கதை சுருக்: மணா ஒரு மத்யமர் குடும்ப பையன். சென்னையில் ஒரு புகழ்பெற்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவனுடன் நட்பு பாராட்டிய மிருதுளா என்கிற கும்பகோணத்துப் பெண் கொலை செய்யப் படுகிறாள். அதுவும் கொடூரமான முறையில். போலீஸ் மணாவை லாக்கப்பில் அடைக்கும் முன் அவனது கம்பெனியின் சிபாரிசின் பேரில் ஜெயந்த்-விஜய் ஜோடி மீட்கிறது. அவனை போலீசிடமிருந்து காப்பாற்றி கொண்டு வரும் வழியில்.......

முதல் மூன்று பாகங்களுக்கும் சுட்டிகள்.
முதல் மாட்யூல்
இரண்டாம் மாட்யூல்
மூன்றாம் மாட்யூல்

************ நான்காவது மாட்யூல் ************

”விஜய்.. வண்டியைத் திருப்பு” என்று கைநகம் கடிபடும் கிளைமாக்ஸ் போல சீட்டின் நுனிக்கு வந்தான் ஜெயந்த். க்ரீ...ச்சிட்டு இன்னோவாவை ஒடித்தான் விஜய்.

மணா பின் சீட்டிலிருந்து சமுத்திரக்கரையில் காற்று வாங்கவும், கடலை போடவும் நிறைந்திருந்த ஜனத்திரளில் அரூபமாகக் கரைந்தான். கண்ணகி சிலை பக்கத்தில் சோடியம் வாப்பர் விளக்குகள் கள்ளத்தனமாக காதலிக்கும் ஜோடிகளை வெளிச்சம் போட்டு ஊருக்குக் காட்டிக்கொண்டிருந்தது. தண்டையைத் தூக்கியக் கையை இறக்காமல் நிறைய மாதவிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த மதுரையை எரித்தப் பத்தினி.

ஒரு வாரத்தின் அலுப்பையும் களைப்பையும் போக்கிக் கொள்வதற்கும் இன்னும் ஒரு வாரம் பாரம் இழுப்பதற்கும் அந்த ஞாயிறு மாலையில் பீச்சில் ஏகத்துக்கும் நெரிசல். நாளை அவரவர்கள் குப்பைக்கொட்டும் காரியாலயம் செல்ல வேண்டும். அடிமாடாய் இன்னும் ஒரு வாரம் ஈமெயில் அனுப்பி, சமோசா வித் டீ மீட்டிங் அட்டெண்ட் செய்து, மேனேஜருக்கு பல் இளித்து உழைக்கவேண்டும். இல்லாத வாலை நேசமுடன் ஆட்ட வேண்டும். ஊரில் நான்குக்கு மூன்று பேருக்கு இதுதான் பொழப்பு.

ஒரு ஸ்கார்ப்பியோ எடுத்த இடத்தில் இன்னோவாவை முன்னால் விட்டு பின் ஆரமடித்து ஸ்டைலாகச் சொருகினான் விஜய். ஜெயந்த்தும் மணாவும் முதலில் இறங்கி வழியில் வந்த ஒரு வாக்கிங் ஸ்டிக் பிடித்த தாத்தாவை இடித்துவிட்டுத் தாறுமாறாக ஓடினார்கள். இருவரில் இலக்குத் தெரிந்தவன் மணா மட்டுமே! விஜய் பின்னால் கைகாட்டி இன்னோவாவை ரிமோட்டில் பூட்டிக்கொண்டே ”கிக்..கிக்”க அவர்கள் பின்னால் தொடர்ந்து ஓடினான்.

முயல்போல புல்தரையைத் தாண்டிக் குதித்து, ஃபிகரின் கழுத்தொடிய கைகளைச் சங்கிலியாய் இணைத்து ஜீவனுருகி அவள் மடியில் படுத்துகிடந்தவனின் காலில் இடறி விழுந்து பீச் மணலில் விழுந்தெழுந்து “இங்க தான் சார் பார்த்தேன்!!” என்று பேண்ட் பின்னால் தட்டிக்கொண்டே கடற்கரை மணல்வெளியெங்கும் காதலியின் காலடியை சுற்றும்முற்றும் தேடினான் மணா. மணாவின் காலால் இடறப்பட்டவன் தியானத்தில் உசுப்பிவிட்டது போல எழுந்து காதல் தவத்தை காமதகனம் செய்த மணாவை கோபாக்கினி கொப்பளிக்க பார்வையால் எரித்தான்.

“ஸாரி ப்ரதர்.. நீங்க உங்க கடலையை கண்ட்டினியூ பண்ணுங்க” என்று கலாய்த்துவிட்டு விஜய் பாஸைத் தொடர்ந்தான்.

”பாஸ்! இவ்ளோ நாளா ஒருத்தி அதே ப்ளூ ஜீன்ஸ் வெள்ளைச் சட்டையை கழட்டாம போட்டிருந்தா.. நாம இந்த பீச்சாங்கரையில மெனக்கெட்டு ஒவ்வொருத்தரா தேடிக் கண்டுபிடிக்கவேண்டாம்.”

“விஜய்.. விளையாடாதே.. பின்ன எப்டிக் கண்டுபிடிக்கறதாம். பீ சீரியஸ்”
 
ஜெயந்த் முகத்தை சுருக்கினான்.

“பாஸ். ஒன்னு சொன்னாக் கோச்சுக்காதீங்க... ஒரு வாரத்துக்கு மேல அதே பாண்ட் சட்டையில அந்தப் பொண்ணு உலாத்தினா.. காத்து வாங்க வந்த அவ்ளோ பேரும் கப்பு தாங்க முடியாம மூக்கைப் பிடிச்சுக்கிட்டு பீச்சை காலி பண்ணிக்கிட்டு ஓடிப்போயிடுவாங்க.” என்று கேலியாய் சிரித்தான் விஜய்.


“சார்! நீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்க. நாளைக்கு உங்களுக்கு இம்ப்பார்ட்டண்ட் கிளையண்ட் மீட்டிங் இருக்குன்னு சொன்னாங்க. அதனாலத்தான் அதிரடியா நாங்க உள்ள இறங்கி உங்களை மீட்டோம். இப்ப நாம உங்க ரூமுக்கு போவோமே! ப்ளீஸ்..”

தோள் மேல் கைபோட்டு மணாவை அழைத்து வந்தான் விஜய். இரண்டு பஞ்சாப் பெண் சிங்கங்கள் ஒருவர் தோள் மேல் மற்றவர் இடித்துப் புஜம் சிவக்க ஒட்டி உறவாடினார்கள். ஹிந்தியில் பாத் செய்து கொண்டு சிரித்துப் பேசி கடற்கரையில் வெட்டியாய் உலவிய பல வாலிப உள்ளங்களைக் கொள்ளை கொண்டார்கள்.

“பா....ப்.....பா......” என்று “ஸ்” தொண்டைக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கக் கஷ்டப்பட்டவனைப் பார்த்து ஜெயந்த் “வேடிக்கைப் பார்க்காம வாப்பா... வேல தலைக்கு மேல கிடக்குது.... “ என்றான்.

“பாஸ்.. எனக்கென்னமோ இந்த பீச்சில தான் நமக்கு துப்பு கிடைக்கும்னு தோணுது."

"நீ வடக்கத்தி துப்பட்டாவைப் பார்த்துட்டு துப்பு..துப்புன்ரே!. வா...வா.. போலாம்”

“பாஸ்.. துப்பட்டாவை கழுத்துக்கு மாலையா போட்ட பொண்ணுக்கும் தூளியாய்ப் போட்ட பொண்ணுக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா?”

“யேய்...”

“உங்களுக்கு ஒரு துப்பட்டா சாஸ்திரம் சொல்லித் தரலாம்னா வேண்டாங்கிறீங்க...”

ஜெயந்த் முறைத்ததில் மளமளவென்று மணாவையும் தூக்கி காரில் போட்டுக்கொண்டு சீறினான் விஜய்.

காலையில் போலீஸ் ஜீப்பில் காக்கி பாதுகாப்புடன் பின்னால் ஏறிச் சென்றவன் இரவு இன்னோவாவில் சர்வ மரியாதையாக வந்திறங்கியது கண்ட மேன்ஷன் வாட்ச்மேனும், மானேஜரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டார்கள்.

ரூமுக்கு ரூம் விதவிதமான சப்தங்கள். வினோத சிரிப்புகள். டி.வி. அலறல். சிகரெட் புகை. பீர் வாசனை. வெளிச்சம் இல்லா படிக்கட்டில் உருண்டு விழாமல் ஓசையின்றி மாடியேறிச் சென்று கைலியை மாற்றிக்கொண்டு ரூமில் ஒரு ஓரத்தில் சுருட்டிக்கொண்டு ஒருக்களித்துப்படுத்தான் மணா. அறை நண்பர்கள் அரை போதையில் இருந்தார்கள்.

*****


திங்கள்கிழமை ஸ்டேஷனில் காலடி எடுத்து வைத்தவுடன் முதல் அப்டேட்டே மிகவும் பயங்கரமாக இருந்தது மோகனுக்கு. ராயப்பேட்டை பொது மருத்துவமனை அட்டாப்ஸி ரிசல்ட் ரொம்பவும் பயமுறுத்தியது. ரிசல்ட் பக்கத்தில் ஒளி வட்டமாக செத்துப்போன மிருதுளா சிரித்தாள். முகத்தில் இராசாயனம் ஊற்றிச் சிதைத்து சின்னாபின்னமாக்கியிருக்கிறார்கள். ரேப் எதுவும் இல்லை என்று உறுதியாக தெரிந்தது. காதில், கழுத்தில் போட்டிருந்ததில் ஒரு பொட்டுத் தங்கம் தொலையவில்லை.

“ஹலோ”

“என்ன சார் 507 எச்ச துப்பாம டீ வாங்கித் தராரா?

“விளையாடாதீங்க விஜய் நானே மண்ட காஞ்சு போயிருக்கேன்”

“என்ன ஸார் ஆச்சு! அட்டாப்ஸி ரிசல்ட் வந்துருச்சா”

“ஆமாம் விஜய். கேஸ் வேற கோணத்துல போகுது. ஜெயந்த்தோட நீங்க கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வரீங்களா விவரமா பார்ப்போம்” என்று கவலையில் கூப்பிட்டார்.

வெளியே கண்ணாடி போட்ட ஏட்டு சைக்கிள் காணாமல் போய் புகார் கொடுக்க வந்த அப்ராணியை ஒரு குயர்  ஃபூல்ஸ்கேப் டம்மி வாங்கித் தரச்சொல்லி அடம் பண்ணிக்கொண்டிருந்தார்.

******


அனுஷ்கா அழகின் உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருந்தாள். இரு சக்கரத்தை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஒய்யாரமாக நடந்து வருகையில் அசால்ட்டாக ஒரு இளமை அறுவடை செய்வாள். இந்தப் பக்கம் ஒரு பார்வைக்கும் அந்தப் பக்கம் ஒரு பார்வைக்கும் ஒரு ஆயிரம் இளைஞர்களை வீழ்த்திவிடும் கூர்வேல் விழியாள். மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து ஒட்டுமொத்த ஜொள்ளர்களையும் இமையிறக்கவிடாமல் கிறங்கடிக்கும் இளமைப் பிசாசு. சிகப்பு விளக்கெரியும் சிக்னலுக்கு சாலையை குறுக்கே கடந்தால் பருவ வயது முதல் பல்லு போனது வரை பச்சை போட்டாலும் நின்று வழிவிட்டு ஒரு லிட்டர் ஆறாக பிளந்த வாய் வழியே வழிந்துவிட்டுத் தான் பயணத்தைத் தொடர்வார்கள். வார்ட்ரோபிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பீச்சாங்கையால் பீத்தலாக ஒரு கந்தையைச் சுடிதார் என்று எடுத்துப் போட்டுக்கொண்டாலும் தெருவில் பார்ப்பவரின் பல்ஸ் ஏகத்துக்கும் எகிறும், பல் தெரிய வாய் பிளக்கும்.

பஞ்சாப்பில் பிறந்து அங்கே உள்ள ஏதோ பஞ்சாபி பேசும் குறுக்குச் சந்து கிருஷ்ணன் கோவிலில் நாலு டர்பன் கட்டிய சிங் சிங்கங்கள் வேடிக்கைப் பார்க்க அன்னப் ப்ராசனம் ஆனபோது சாப்பிட்ட அதே கோதுமையின் அசத்தல் நிறம். முப்பது டிகிரிக்கு மேல் ஒரு டிகிரி சூடு ஏறினாலும் மேனி குங்குமப்பூவாய் சிவந்துவிடுவாள். சுருள் சுருளாய் மருதாணிச் சாயம் பூசிய லாக்மேயில் லேயரிங் செய்த கேசம். உதட்டோரக் குறுஞ்சிரிப்பில் தெரியும் தெத்துப் பல்லில் லட்சம் பேரை மண்டியிட்டு காலில் விழவைத்து வேடிக்கை பார்க்கும் திறன் படைத்தவள்.

“அனு. நாளைக்கு ஃபிப்ரவரி முப்பதா?”

“அனு.விஷுவல் ஸ்டுடியோவில ப்ரோகிராம் கம்பைல் பண்றதுக்கு எந்த பட்டனை அழுத்தனும்”

“அனு.. அனு... ஏய் அணுகுண்டு”

“அனு. கேண்ட்டீன்ல இன்னிக்கி காலி ஃப்ளவர் பக்கோடாவாம்... நாமதான் பர்ஸ்ட்டு சாப்பிடறோம்... சரியா...”

“அனு ஜிந்தகி ந மிலேகி படத்துல சினோரீட்டா யார் பாடினா? அந்த விசிறியை வச்சிகிட்டு ஆடுற பொம்பளை யாரு?”

இப்படி அனுதினமும் வார்த்தையால் வரிக்க முடியாத டிஜிட்டலில் செதுக்கிய கிளி அனுவைத் துளைத்தெடுத்து பிச்சுப் பிடிங்கிப் அவள் பவள் வாய் திறக்க வைத்துப் பேசுவதில் பி.எம்மிலிருந்து ப்ரோகிராமர் வரை பாரபட்சமே இருக்காது. ஜொள்ளுக்கு டெஸிக்னேஷன் பேதம் கிடையாது. ஹாப்பி டெண்ட் சுவிங் வாயோடு அவளெதிரே திரிவார்கள். அப்படிப்பட்ட ’அடேங்கப்பா’ அழகி அனு மணாவுக்கு ரெண்டே நாளில் ஸ்நேகிதமானதுதான் அந்த ஆபீசில் கேண்டீனிலும், ரெஸ்ட் ரூமிலும், காரிடாரிலும் குசுகுசுப் பேச்சுக்கு மெயின் தீனி.

மணாவிற்கு ஆபீசிற்கும் மேன்ஷனுக்குமாய் ஒரு வாரம் ஜெட் வேகத்தில் பறந்து போயிற்று. விஜயும், ஜெயந்த்தும் ஓரிரு முறை மணாவை அவனது ஆபீஸ் கேண்டீனில் டீ ஆற ஆற உட்கார்ந்து க்ரைம் கதை பேசினார்கள். நான்காவது நாளில் வாசல் செக்யூரிட்டி சல்யூட்டுடன் பான்பராக் கறைபடிந்த பல்லையும் சேர்த்து காண்பிக்கும் அளவிற்கு அந்த சாஃப்ட்வேர் கம்பெனிக்கு விஜயம் செய்தார்கள்.

மணாவின் ப்ராஜெக்ட் கோஷ்டி மற்றும் டாஸ்மாக்கிலிருந்து பார்சல் வாங்கி வந்து ரூமில் இராக்கூத்தடிக்கும் சோமபான நண்பர்கள் என்று அனைவரிடமும் தேங்காயில்லாமல் துருவித்துருவி செஷன் வைத்துக் கேள்வி கேட்டார்கள். கால் பதில், அரை பதில், முக்கால் பதில் பெற்றார்கள்.

ஒரு நாள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அந்த சாஃப்ட்வேர் கம்பெனியில் ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் போது மணாவுடன் அந்த அனு ரெண்டு கால் போட்டு சிரமப்பட்டு பில்லியனில் ஏறிக்கொண்டிருந்தாள். மேட்டுப்பாங்கான பாகங்கள் பட்டும் படாமலும் உட்கார்ந்ததில் விஜய்க்கு அஸ்தியில் ஜூரம் கண்டது.

”பாஸ்! இந்த மணாப் பய பலே கைகாரன். கெட்டிக்காரன்”

“ஏன் சொல்ற விஜய்?”

“இல்ல.. மொதல்ல ஜூட் விட்ட ஃபிகர் செத்துப் பத்து நாள் காரியம் கூட ஆகல.. அடுத்ததா ஒரு அம்சமான ஆளை செட் பண்ணிட்டான் பார்த்தீங்களா? இவனுங்க ரேஞ்சே தனி..”

“ச்சே..ச்சே... நிறைய கேஸ் பார்த்ததுல.. உனக்கு ஒரு பேண்ட் சட்டை சுடிதார் கூட போனாலே லவ்ஜோடின்னு முடிவு பண்ணிடரே!! தப்புப்பா இது ரொம்ப தப்பு. ஒரு ஆணும் பெண்ணும் சகஜமா பழகக்கூடாதா?”

“ நல்ல வேளை பாஸ்.. நா நினச்ச ஒன்னை நீங்க சொல்லலை...”

“என்ன?”

“இல்ல.. பனைமரம்.. பாலு.. கள்ளுன்னு ஒரு பழமொழி சொல்லுங்க... அதைச் சொல்லலை நீங்க...”

சிரித்துக் கொண்டே வண்டியேறினார்கள்.
*********

இங்கிலாந்திடம் இந்தியா வழிந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்க்கு போன் அடித்தது கூட கேட்கவில்லை. கையைல் அவுட்லுக்குடன் உள்ளே நுழைந்த ஜெயந்த் “ஏய்.. போன் அடிக்குது.. காதில விழலை..” என்று அதட்டினான்.

“சாரி பாஸ்... தோனி டீம் ஆக்ரோஷமான கடல்ல ஆடற தோணி மாதிரி இருக்கறதைப் பார்த்துட்டு நா சுய தேசப்ப்ரஷ்டம் பண்ணிக்கலாமான்னு திங்க் பண்ணிக்கிட்டு இருந்தேன்”

“ஹலோ... ஜெயந்த்...”

“...”

“அப்டியா? சரியா பார்த்தாங்களா?”

“....”

“யார் சொன்னா? கன்ஃபர்ம்டா?”

“.....”

”சரி சார்! ஒரு பத்து நிமிஷத்ல அங்கே இருக்கோம். பை.”

தீர்க்கமான சிந்தனையில் போனைத் துண்டித்தான் ஜெயந்த். இந்தியாவின் பத்தாவது விக்கட்டும் பொதக்கடீர் என்று விழ "அடிமை வீழ்ந்தான்” என்று ஆங்கிலேயர்கள் கட்டிப்பிடித்து ஆரவாரித்தனர்.

“என்னாச்சு பாஸ்”

“வேற என்ன? அனுஷ்கா அப்பீட்...”

அதிர்ச்சியில் உறைந்தான் விஜய்!

தொடரும்...

பின் குறிப்பு: காலதாமதத்திற்கு மன்னிக்கவும்.  அடுத்தடுத்த பாகங்கள் அதிவிரைவில் எழுத முயல்கிறேன். நன்றி.

படக் குறிப்பு: அனுஷ்கா என்ற கேரக்டருக்கு நடிகை அனுஷ்கா நடித்துக் கொடுத்ததற்கு நன்றி.

-

Sunday, August 7, 2011

என் பெயர் க்ருஷ்ணா


சத்யத்தில் நேற்றிரவு இரண்டாம் ஆட்டம் தெய்வத்திருமகள் திரைப்படம் பார்த்தோம். சென்னை நகரின் கழுத்தை நெறிக்கும் ட்ராஃபிக் புகழ் பெற்ற சாலைகளை மனதில் நிறுத்தி ஒன்பது மணிக்கே வீட்டை விட்டு சீறிக்கொண்டு புறப்பட்டாலும் நடுரோட்டில் கொட்டமடிக்கும் நாயகர்களால் அவதிஅவதியென்றுதான் கடைசியில் கொட்டகையை அடைந்தோம். பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI) சரி விகிதத்தில் பராமரிக்கும் ஜென்மங்களைத் தவிர வேறு யாராலும் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்க முடியாத இடைவெளியில் வாகனங்களை நெருக்கமாக நிறுத்தச் சொன்னார்கள். என்னுடைய சேப்பாயியை உரசும் ஆசையில் வந்த ஒரு ஃபோர்ட் ஐகானைப் பதறிப் போய் கையைக் காட்டி நிறுத்தி, அந்தக் குடும்பஸ்தரை புள்ள குட்டியோடு கீழே இறக்கி அவரது ‘நாலுகாலை’யும் அடைப்புக்குறிக் கோட்டுக்குள் சொருகிப் பொதுச் சேவை புரிந்தேன். சேப்பாயி பிழைத்தாள்.

சென்னைக்கு முப்பது கி.மீ என்ற மைல் கல் அருகே ரோடில் விழுந்து கிடக்கும் விக்ரம் பற்றிய கடந்தகால நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஃப்ளாஷ் பேக் போன்று முதல் பாதி எடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் நீதிமன்றத்தில் வாதாடி கிருஷ்ணாவின் அபகரிக்கப்பட்ட குழந்தையை அவரிடம் திரும்ப ஒப்படைக்கிறார் அழகான அனுஷ்கா. கமலின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்ஸுக்கு டாக்டர்கள் கொடிபிடித்தது போல வக்கீல்கள் கேசுக்காக அலைவதை மிகக் கேவலமாக காட்டியிருக்கிறார் என்று கருப்புக்கோட்காரர்கள் சங்கத்திலிருந்து கண்டனம் தெரிவிக்காதது ஆச்சர்யமாக உள்ளது.

ஊட்டி அவலாஞ்சி கிராமத்தில் இருக்கும் சாக்லேட் தொழிற்சாலையில் பணிபுரிகிறார் விக்ரம். சுடச்சுட தயாராகும் சாக்லேட்டை பத்தை போட்டு டப்பாவில் அடைக்கும் வேலை. மூளை வளர்ச்சி குன்றியவரின் மேனரிஸங்கள் இப்படித்தான் இருக்கும் என்று வரையறுத்துச் சொல்ல முடியாதபடி நடிக்கிறார். சில இடங்களில் விக்ரமின் நடிப்பு அலுப்புத் தட்டுகிறது. குறிப்பாக கை தட்டுவதும் பார்வையை உருட்டுவதும். பாலா படங்களில் வரும் அசாதாரண உறுமும் விக்ரமுக்கு கெக்கேபிக்கே க்ருஷ்ணா விக்ரம் எவ்வளவோ தேவலாம். அவ்வப்போது வாய் பிளந்து நடிக்கும் சில காட்சிகளில் நம்மையும் வாய் பிளக்க வைப்பது நிஜம் தான்.

சாராவைப் பெற்றுப் போட்டுவிட்டு இறந்துவிடுகிறார் விக்ரமின் மனைவி. பள்ளி ஆண்டு விழாவின் போது விக்ரம் சாராவைக் கொஞ்சும் போது பார்க்கும் அப்பள்ளியின் இளமைப் பொங்கி வழியும் தாளாளர் அமலா பால்; வீட்டை விட்டு ஓடிப் போய் விக்ரமை காதல் மணம் புரிந்து கொண்ட தன் அக்காவின் பெண் தான் சாரா என்ற உண்மையைத் தெரிந்து கொள்கிறார். அமலா பால் பின்னால் சுற்றும் கார்த்திக் காட்சிகள் சுத்த வீண். ரீலுக்கு ஏற்பட்ட நஷ்டம்.

தமிழின் எல்லா சினிமாவிற்கும் ஒரு வில்லன் தேவை என்பதை பூர்த்தி செய்யும் விதமாக அமலா பாலின் அப்பா விக்ரமிடமிருந்து சாராவைக் கவர்ந்து செல்கிறார். அனுஷ்கா நாசரிடம் போராடி மீட்கிறார் என்று போகிறது படம். சந்தானம் மற்றும் இன்னொறு காலேஜ் பெண் போன்ற லவ்வபுல் லாயர் என்ற கூட்டணியுடன் ஜமாய்க்கிறார் அனுஷ்கா. சாரா ஜோராக நடிக்கிறார். ஷாலினி, ஷாம்லி போன்ற குழந்தை நட்சத்திரங்களை வாயாட விட்டது போல இல்லாமல் அடக்கிவாசிக்க வைத்திருக்கிறார்கள். ரொம்ப திருப்தியாக இருக்கிறது.

சில இடங்களில் படம் “U" போல வளையும் போது அகா துகா சந்தானம் "A" போல நிமிர்த்துகிறார். அடிக்க வரும் க்ளையண்ட்டிடம் ”சார் நான் லாயர் இல்ல நாயர்” என்று கோர்ட்டில் டீ, காபி என்று விற்கும் போதும், விக்ரமும், அனுஷ்காவும் சேர்ந்து கொண்டு சந்தானத்தை “இவரு ஒரு மாதிரி” என்று நெற்றிப் பொட்டுக்கு நேரே விரலால் சுழித்துக் காண்பிக்கும்போதும் அசத்துகிறார். சிகப்பு ரோஜாக்கள் காலத்து கட்டக் கண்ணாடி போட்டுக்கொண்டு பாஷ்யம் நாசரின் ஜுனியராக வரும் இளைஞர் உதடு விரித்த சிரிப்பிலும் “டியர்” என்று அனுஷ்காவின் ஜுனியர் லவ்வபுல் லாயரை அன்போடு அழைக்கும் தருணங்களின் போதும் ரசிக்க வைக்கிறார்.

அனுஷ்கா அர்த்த ராத்திரியில் சந்தானத்தை ஸ்கூட்டி பில்லியனில் ஏற்றி விக்ரமைத் தேடி வீதியுலா வரும் காட்சிகளில் கூட பக்திமயமாக ஸ்டிக்கர் பொட்டுக்கு கீழே ஒரு சின்ன விபூதிக் கிற்றலில் வருகிறார். உதவி டைரக்டர்கள் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். வொய் வொய்.ஜி. மஹேந்திரா இன் திஸ் ஃபிலிம்? மொத்தமாக ஐந்து வார்த்தை வசனம் கொடுத்திருக்கிறார்கள். அனுஷ்காவின் அப்பா வயதில் இருப்பதால் அவருக்கு தகப்பன் ஸ்தானம் கொடுத்து சினிமாவை நாமே கருத்தாகப் பார்த்துக் கொள்ள விட்டுவிட்டார் இயக்குனர். அனுஷ்காவின் அழகையும் இப்படி வீணடித்துவிட்டார்களே என்று தியேட்டரில் இருந்து படம் முடிந்து வெளியே வரும் போது இரண்டு விசிலடிச்சான் குஞ்சுகள்  அங்கலாய்த்துக்கொண்டார்கள்.

 ஸ்ரீசூர்ணம் போட்டுக்கொண்டு பாஷ்யம் என்கிற ஐயங்கார் லாயராக வரும் நாஸர் உதடிரண்டும் சேர்த்து ”உப்” வைத்துக் கொள்ளும் போஸில் ‘அட’ போட வைக்கிறார். சுற்றிலும் ஐந்தாறு பேருடன் கோர்ட்டில் வளைய வரும் நாஸர் கடைசியில் அன்பில் அடிபட்டுப் போய் தன் கட்சிக்காரருக்குப் பதிலாக எதிராளிக்கு சாதகமாகப் பேசி அனுஷ்காவிடம் இந்த கேசில் தோற்பதில் பெருமை கொள்கிறார்.  நாசரின் ட்வெண்டி இயர் ஸ்டாண்டிங் லாயர் பாடி லாங்குவேஜ் அதி அற்புதமாக இருந்தது.  கோர்ட்டில் “அட அட..” என்று சொல்லும் ஒருவரும் பட்டை நாமம் சார்த்திக் கொண்டு “பாஷ்யம்” புகழ் பாடும் ஒருவரும் கோர்ட் ப்ரோஸீடிங் காட்சிகளை நீர்த்துப் போகச் செய்கிறார்கள். அவர்கள் செய்யும் கொணஷ்டைகள் முதல் தடவை புன்னகை பூக்கச் செய்தாலும் ரிப்பீட் காட்சிகளில் “மொச்” கொட்ட வைக்கிறது. நாஸர் முழுத் திறமை காண்பிப்பதற்கு நிறைய காட்சிகள் இல்லை என்பது துரதிர்ஷ்டமே!

எம்.எஸ். பாஸ்கரின் மனைவி விக்ரமுடன் பழகும் காட்சிகளை, முருகன் என்ற கேரக்டர் மூலமாக கொச்சைப் படுத்தியிருப்பது படத்தின் ஓட்டத்தை சிதைக்கிறது.  விரசமாக முருகன் கதாபாத்திரம் பேசும் போது ஒரு சராசரி தமிழ்ப் பட நெடி வீசுவதை தவிர்க்கமுடியவில்லை. அந்தக் காட்சிகளுக்குப் பதிலாக பாசிடிவ்வாக அந்த இருவரின் உறவையும் காண்பிக்க இயக்குனர் முயன்றிருந்தால் காட்சிகளில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கும். விக்ரமால் எதுவும் செய்ய முடியாது என்று படம் பார்ப்பவர்களுக்கு தெள்ளெனத் தெரிந்த பிறகு சோக்குக்காக இதுபோல காட்சி அமைப்பது உலகத்தரப் படத்திற்கு அமெச்சூர்த்தனமாக இருந்தது.

உறவுகளின் பாச உணர்ச்சிப் போராட்டப் படங்களுக்கு இசை மிகப்பெரிய பக்க பலமாக இருக்க வேண்டும். பின்னணியிலும் சரி, பாடல்களிலும் சரி ஜி.வி.ப்ரகாஷ்குமார் இப்படத்தில் மிகவும் சொதப்பியிருக்கிறார். கதையின் கருத்தை உணராமல் காசுக்கு மாரடித்தால் இப்படித்தான் இருக்கும். விசிலடித்து விக்ரம் பாடும் பாப்பா பாட்டு ராபின் ஹுட் கார்ட்டூனில் இருந்து உருவியது. இங்கே பார்த்தும் கேட்டும் மகிழலாம்.  அவர் பிறப்பதற்கு முன்னால் 1979-ல் வந்த படமாம்.

இசை ஞானி இளையராஜாவை விட்டிருந்தால் இரண்டு இழை வயலினிலும், ஒரு முப்பது வினாடி அவரோகனப் புல்லாங்குழலிலும் காட்சியின் எடையை பலமடங்கு நிச்சயம் கூட்டியிருப்பார். பார்ப்போர் கண்களில் நீர் கசிந்திருக்கும். பாடல்கள் ஒன்றும் அவ்வளவாக சோபிக்கவில்லை. அமிதாப்பும் அவரது புத்திரனும் நடித்த ஹிந்தி பாவில் இளையராஜாவை இசையமைக்க அழைத்ததை இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும். சில முக்கியமான இடங்களில் பின்னணி இசையில் ஜாஸ் ஒலித்தது செத்த வீட்டில் கெட்டி மேளம் கொட்டியது போல இருந்தது.

ஊட்டியின் கண்ணுக்கு இனிமையான பச்சையையும் குளிர்ச்சியையும் படம் பிடிக்கக் கேமிரா தவறியதோ என்று தோன்றியது. நிறைய இடங்களில் பள்ளத்தாக்குகளை மட்டுமே படம் பிடித்திருக்கிறார்கள். மரவீட்டுக் காட்சிகளும், சாக்லேட் கம்பெனி உள்ளே காண்பிக்கும் காட்சிகளும் தான் முதல் பாதியை முக்கால்வாசி ஆக்கிரமித்திருக்கின்றன. சாராவை ஸ்கூல் பஸ் ஏற்றும் இடம் கூட மலைராணியின் இயற்கை அழகை காண்பிக்காதது இயக்குனர் அதில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உறுதிப் படுத்துகிறது. இன்னும் கொஞ்சம் காமிராவை சுழலவிட்டிருக்கலாம்.

மன வளர்ச்சி குன்றியவர், தனது மகளுக்காக உருகி உருகி ஏங்கியவர் கடைசியில் தனது மகளை மீண்டும் கொண்டு போய் அவளை அவரிடமிருந்து கடத்தியவர்களிடம் ஒப்படைப்பது மிகப்பெரிய லாஜிக்கல் மிஸ்டேக். அவளுடைய நற்கதிக்காக இவ்வாறு செய்கிறார் என்று காண்பித்திருப்பது இம்மியளவும் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

ஒரிஜினல் பார்த்தவர்களுக்கு இந்த நகல் சற்று ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஒருக்கால் தெ.திருமகளைப் பார்த்துவிட்டு ஐ அம் சாமைப் பார்த்திருந்தால் இந்த ஐ அம் க்ருஷ்ணாவைப் பிடித்திருக்குமோ? என்ன இருந்தாலும் சாம் டாசனை வெல்ல இந்த க்ருஷ்ணாவினால் முடியவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

ஆங்கிலத்திலிருந்து உருவியது என்றாலும் தமிழ் ஒரிஜினாலிட்டியை காப்பாற்றுவதற்கு இயக்குனர் மிகவும் பிரயத்தனப்பட்டிருக்கிறார். ஆனாலும் சில காட்சிகளை தமிழ்ப் படுத்துவதில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் படத்தின் வேகத்தையும் பரிபூர்ணத்துவத்தையும் கெடுத்துவிட்டது என்பது என்னுடைய அபிப்ராயம். ”விக்ரம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். பெரிய இவனாட்டம் சொல்ல வந்துட்டியா?” என்று விக்ரமிற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு என்னிடம் சீறுபவர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள். “தயவு செய்து ஐ அம் சாம் பாருங்கள். புரியும்”



பின்குறிப்பு: 1985-ல் இருந்து நான்கு வருடங்கள் இப்போதையக் கவர்ச்சிக் கிழவி மடோனாவுடன் குடும்பம் நடத்தியவர் தான் "ஐ அம் சாம்" படத்தின் ஹீரோ ஷான் பென் என்பது ஒரு கூடுதல் செய்தி.

#அடடா... என்னவொறு பொதுஅறிவுக் குறிப்பு!!

-

Saturday, August 6, 2011

ஐந்தாண்டு திட்டம்


கல்லூரிக் காளையாக இருந்த போது நண்பர்கள் ரூட் விடும் அழகிய பெண்ணைக் கவர்வதற்கு “என்னடா மாப்ள ஐந்தாண்டு திட்டமா?” என்று கிண்டலடிப்பார்கள். இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பார்களா என்று கேட்டு என்னைத் துளைக்காதீர்கள். கன்னிப் பெண்களைக் கண்டால் என் கண்கள் நிலம் நோக்கப் பழகியிருந்தது.

ஐந்தாண்டு திட்டங்களைப் பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். பண்டித ஜவஹர்லால் நேரு 1951-ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் முதல் ஐந்தாண்டு திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஐந்தாண்டு திட்டங்களில் கல்வியைப் பற்றி ”பாஞ்ச் பஞ்ச்” பாயிண்ட்ஸ்.
 
1. இந்த முதல் ஐந்தாண்டு திட்டத்தின் இறுதியில், 1956-ம் வருடம் தான் ஐந்து ஐ.ஐ.டி தொழில் நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது.

2. 1953-ம் வருடம் பல்கலைக்கழக மானியக் குழு நிர்மாணிக்கப்பட்டது. (UGC)

3. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் Tata Fundamental Research அமைக்கப்பட்டு ஸ்காலர்ஷிப் மூலம் தேறிய நிறைய பளிச் மூளை மாணவர்களுக்கு அணு மின் துறையில் வேலை வாய்ப்பளிக்கப்பட்டது. 1961-66ல் மாநிலங்களுக்கு கல்வியை சீர் செய்யும் பொருப்பளிக்கப்பட்டது.

4. 1966 லிருந்து 1992 வரை திட்டமிட்ட ஐந்தாண்டு திட்டங்களில் உயர் கல்வியை உயர்த்தும் பொருட்டு எதுவும் உருப்படியாக செய்யவில்லை. ஒன்பதாவது மற்றும் பத்தாவது ஐந்தாண்டு திட்டங்களில் ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

5. பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அரைகுறையாக படிப்பைப் பாதியில் விடுவதை கட்டுப்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

தொடர்புடைய சுட்டி: http://12thplan.gov.in/

எல்லா ஐந்தாண்டு திட்டங்களிலும் வகுத்தவைகளைச் செயலாக்கிவிட்டார்களா? என்ற கேள்வியைத் தாங்கும் த்ராணி எனக்கில்லை. 2012-ல் வரப்போவது பனிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டமாம். இதில் 2017-ல் மேல்நிலைக் கல்வியை அனைத்து மாநிலங்களுக்கிடையே சமச்சீர்படுத்துகிறார்களாம்!!

பின் குறிப்பு: ரொம்ப நாளா சைட் காலியாக் கிடக்கு.  நாளைக்கு முடிந்தால் காதல் கணினியைத் தொடர்கிறேன்.

பட உதவி:  http://indolinkenglish.wordpress.com/

-

Monday, August 1, 2011

திமலைகள்

கடந்த பத்து நாட்களில் இரண்டு தி.மலைகள் சென்று கடவுளர்களை தரிசித்து பக்திப் பரவசமானேன். இன்னும் பழமாகவில்லை.  மலைக்கு கீழ் ஸ்வாமியும் பின்னால் ஜோதிமலையும் இருந்தது ஒரு முறையும், மலைமேலே மலையாய் நின்ற மலையப்ப ஸ்வாமியை இரண்டாம் முறை மலை விஜயத்தின் போதும் ஹரஹராவென்று கும்பிட்டுப் பார்த்தேன். முன்னது ஈசன் ஜோதிப் பிழம்பாக அருள் புரியும் திருவண்ணாமலை, இரண்டாவது நமக்கெல்லாம் கால் கடுக்க நின்று தரிசனம் தரும் நெருப்பென்ன நின்ற நெடுமால்; திருவேங்கடவனின் திருமலை.

tmalai

திருவண்ணாமலை சித்தர்கள் பூமி. கோவில் ராஜகோபுரம் தாண்டிய உடனே சொல்லவொனாத ஒரு ஈர்ப்பு சக்தி என்னை ஆகர்ஷிக்க பலமுறை உணர்ந்திருக்கிறேன். எதுவுமே உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை. ஒரு கருப்பு ஸ்கார்ப்பியோவில் ஐந்தாறு வெள்ளையாடை ஸுமோ வீரர்களை ஏற்றிக்கொண்டு வந்து ஸ்வாமியிடம் கட்டப்பஞ்சாயத்து பண்ண வந்த ஒரு கும்பல் அவர்கள் வண்டியை நிறுத்துமிடத்தில் சாவகாசமாக முன்னும் பின்னும் உருட்டி அம்மானை விளையாடி நிறுத்திக் கொண்டிருந்த தொல்லையில் எனது “எப்போதாவது கோபப்படும்” கெட்டபுத்தியைக் காட்டாமல் கட்டுப்படுத்தி ”நமசிவாய” என்று மனதார ஐந்தெழுத்தை ஓதி அண்ணாமலையாரை மனதில் நிறுத்தி, இரண்டு மணி நேரம் அசராமல் ஓடிய சேப்பாயியைப் அலுங்காமல் குலுங்காமல் பார்க்கிங்கில் பத்திரப்படுத்தினேன்.

சென்னைப் பெரு நகரத்தின் பெருவாரியான கார்ப்போரேட் அலுவலகங்கள் வாசலில் வெருமே வெய்யிலில் வாடி வதங்கி நிற்கும் அப்பிராணி செக்கியூரிட்டிகள் போல சம்பிரதாயமாக போலீசார் இருவர் கம்பீரமாக துவாரபாலகர்கள் ஒன்றாக சேர்ந்தது போல கொலு வீற்றிருந்தனர். படி தாண்டிய எங்கள் மேல் சிறு கடைக்கண் பார்வையை அலட்சியமாக வீசிவிட்டுப் பல லோகாயாத விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்ததை மீண்டும் தொடர்ந்தார்கள்.

நுழைந்தவுடன் இடப்புறம் அலங்கரிக்கும் அருனகிரி நாதர் பாடிய முருகன் சன்னிதி பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இத்தனைக்கும் ஒரு நிமிடம் மனச்சிறையில் வைக்கமுடியாத முருகனைக் க்ரில் கேட் பூட்டி சிறை வைத்திருந்தார்கள். “முருகா.. முருகா”வென்று கண்ணத்தில் போட்டுக் கொண்டு அண்ணாமலையானை தரிசிக்க உள்ளே சென்றோம். சமாளிக்க முடியாத கூட்டமாக ஒன்றும் இல்லை. சம்பங்கி மாலை, வில்வார்ச்சனை என்று அபிஷேகப் ப்ரியனை அன்றைக்கு குளிர்வித்தோம். மனதுக்கு நிறைவான அற்புத தரிசனம்.

பிராகாரத்தில் சோமாஸ்கந்தருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுக்கொண்டிருந்தது. சாம்பிராணி புகை மூட்டத்தில் ஸ்வாமி பிராகாரம் பனிசூழ் கயிலாயமாகக் காட்சியளித்தது. உமாவுக்கும் சிவனார்க்கும் நடுவில் அம்மையப்பனுக்கு அடங்கியப் பிள்ளையாக ஆழாக்கு சைஸில் குட்டியாகக் கந்தன் உட்கார்ந்திருந்தார்.

உட்பிராகாரத் திருவலம் வந்து உண்ணாமுலையம்மனை தரிசித்தோம். மூர்த்தம் சிறியதாக இருந்தாலும் அதன் கீர்த்தி பெரிது. “சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யே த்ரியம்பிகே....” என்று ஸ்லோகம் சொல்லி துவஜஸ்தம்பம் அருகில் நமஸ்கரித்தாள் என் பெரியவள். சின்னவள் சூலமங்கலம் சகோதரிகள் போல சேர்ந்து பஜித்து விழுந்தெழுந்தாள்.

அவனருளால் அவன் தாள் வணங்கி நிறைய முறை மஹா சிவராத்திரிக்கு கிரிவலம் செல்லும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இம்முறை சிவப்பாயி சொகுசாகச் சுற்றிக் காண்பித்தாள். சிறு மழைத் தூறலில் மண் வாசனை மூக்கைத் துளைக்க வானளாவிய மலையை அண்ணாந்து பார்த்துக் கொண்டே கிரிவலம் வருவது ஒரு அலாதியான விஷயம். சேஷாத்திரி ஸ்வாமிகள், பகவான் ஸ்ரீ ரமணர், யோகி ராம்சுரத் குமார் என்று அவதார புருஷர்களின் ஆஸ்ரமங்களில் வெள்ளைக்காரர்கள் தியானம் செய்கிறார்கள்.

ரஞ்சி புகழ் நித்தியின் ’ஆ’-’சிரம’த்தில் பலவர்ணக் கொடி பறக்கிறது. இடது ஓரத்தில் மரங்கள் தாண்டி பேவர் ப்ளாக்ஸ் பதித்து பக்தர்களுக்கு சௌகர்யத்திற்கு புதியதாக நடைபாதை போட்டிருக்கிறார்கள். சங்கோஜமாக மறைந்து பீடி குடிக்கும்; இரந்து வாழும்; தாடி வளர்த்த; கஷாயம் கட்டிய சன்னியாசிகள் மற்றும் காவியல்லாது கை நீட்டி வாழ்பவர்கள் என்று மனிதர்கள் சாதா நாட்களிலும் கால் கடுக்க நின்றும், ப்ருஷ்டம் வலிக்க உட்கார்ந்தும் சம்பாதிக்கிறார்கள். பௌர்ணமியல்லாத நாட்களில் அவர்களுக்கு டூட்டி நேரம் குறைவு. நிறையக் காசு சேர்க்க வேண்டாம்.

விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானை... என்று மணிவாசகப் பெருமானின் திருவாசகம் அண்ணாமலையானைப் போற்றுகிறது. கிரிவலம் சுற்றி முடித்து சென்னைக்கு திரும்புகையில் வண்டியிலிருந்து தலையை எக்கி எட்டிப் பார்த்து நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையைப் பார்த்து இன்னொரு முறை கண்ணத்தில் போட்டுக் கொண்டேன். அருட்தீர்த்தமென வானம் ரெண்டு துளிகள் தலையில் சொட்டியது.

இது போல இறையருளும் ரம்மியமான இயற்கையும் கைக் கோர்த்து நிற்கும் ஷேத்திரங்கள் நமக்கு நினைவூட்டுவது ஒன்றே  ஒன்றுதான். “இப் பிரம்மாண்டத்தின் முன் நாமெல்லாம் மிகச் சிறிய துகள்கள்”.


****==****

tirupathi


”நேத்திக்கு திருப்பதி போய்ட்டு வந்தேன்” என்று யாராவது தெருக்கோடி பக்தகோடிப் பரவசமாகச் சொன்னால் மின்னலடிக்கும் நேரத்தில் உடனே சகலரும் எழுப்பும் வினா “தரிசனத்துக்கு எவ்ளோ நாழி ஆச்சு?”. நாராயணன் இப்புவியில் பிறவிப் பெருங்கடல் நீந்துவோர்க்கு பொறுமையை போதிக்கும் இடம் திருமலை. ஒரு வருடமாக என்னைத் துளைத்து எடுத்த என் அகமுடையாளின் தார்க்குச்சிக்கு சென்ற வெள்ளிக்கிழமை வேளை வந்தது. ட்ராவல்ஸா, சொந்த வண்டியா என்ற யாத்ரா வாகனப் போட்டியில் சேப்பாயி ஏகோபித்த ஆதரவு பெற்று வென்றாள்.

பூவிருந்தவல்லி-திருவள்ளூர் மார்க்கமாக சென்றால் சுரங்கம் போன்ற பள்ளங்களுக்கு நடுவே ஆங்காங்கே பிட்டு பிட்டாக தென்படும் சாலை இருப்பதால் நொமாடியன்கள் போல ரோடோரத்தில் குடியிருக்கும் அவல நிலைமை ஏற்படும் என்று நண்பர்கள் ஒரு ரோட் அப்டேட் கொடுத்து எச்சரித்தார்கள். நாயுடுபேட் சுற்றி சென்றால் அதிசீக்கிரம் கோவிந்தனைச் சென்றடையலாம் என்று அவ்வழியில் சென்று சேவித்துப் பயனடைந்த ஒரு யாத்திரீக நண்பர் அறிவுரை அருளினார்.

பதினோரு மணி- 300 ரூபாய் அர்ச்சித தரிசனம் செய்யலாம் என்று ஏழரைக்கு சென்னையில் இருந்து ஸெவன் ஹில்ஸுக்கு மாற்று வழியில் புறப்பட்டால் ரெட் ஹில்ஸ் தாண்டுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. ஆக்ஸில்-ப்ரேக்-க்ளட்ச் என்று கால் நடனமாடியது. ஒரு டஜன் டயர் மாட்டிய ராட்சத லாரிகள் மரவட்டையாக நட்டநடு சாலையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்ததால் நாற்பதுக்கு மேல் வண்டியை அழுத்த முடியவில்லை. “SOUND HORN" என்ற அவர்களின் பின்வாசக கட்டளைப்படி சப்தம் செய்ததில் கும்மிடிப்பூண்டி தாண்டி மனமுவந்து ராட்சத லாரிக்காரர்கள் கொசு விரட்டுவது போல கையசைத்து கொடுத்தச் சிறிய சந்தில் புகுந்து சிந்து பாடினேன்.

”நாயுடுபேட் இன்னும் எவ்வளவு தூரம்”  என்று பத்து பத்து கி.மீ இடைவெளியில் நான் கேட்ட மூன்று மகானுபாவர்களும் “இன்னும் இருவத்தஞ்சு கிலோ மீட்டர் இருக்கும்” என்றது எனக்கு மிகுந்த ஆச்சர்யம் அளித்தது. ஒன்று நாயுடுபேட் நான் நெருங்க நெருங்க என்னை விட்டு நகர்ந்து சென்றுக் கொண்டே இருக்க வேண்டும், இல்லை கேட்ட மூவருக்கும் நாயுடுபேட் என்ற பேட்டையைப் பற்றி எதுவுமே தெரியாது. “தெரியாது” என்ற சொல் அவர்கள் அகராதியில் இல்லை. ’நாக்கு தெல்லேது’ சொல்ல அவமானப்பட்டார்கள்.

காலையில் வயிற்றைக் கவனிக்காமல் வண்டி ஏறிவிட்டதால் வயசானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிரட்டிக் கொண்டு வந்துவிட்டது. கொல்கத்தா ஹைவேயில் ஹோட்டல் தேடி அலைந்து கண்கள் பூத்து பசியில் காதடைத்துப் போனது. பத்மாவதி ரெஸ்டாரண்ட் A/C என்று போர்டு வைத்து டிபன் ரெடி போர்டை வாசலில் விரித்து வைத்திருந்தார்கள். உள்ளே ஜன்னல் கதவுகளைத் திறந்து இயற்கை ஏசி வசதியை குளுகுளுப் படுத்தியிருந்தார்கள். தென்னகத்தின் பிரதான காலை வேளை டிஃபனான இட்லி-வடை ஜோடியை ஆளுக்கு ஒரு ப்ளேட் சாப்பிட்டோம். சாம்பாரில் மசாலா ஜாஸ்தி என்று நாக்கு நாலுமுழம் வளர்ந்த என் மூத்தவள் சொன்னாள்.

கழுத்து ஒடியும் உயரத்தில் மாட்டியிருந்த பெட்டியில் ஸாப் டி.வியின் Singh is King படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த டிவியின் அடிபாகத்தில் நீல வர்ணத்தில் எழுதியிருந்த ”தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சி” என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. தமிழக பார்டர் தாண்டிய இலவசம். இந்தியாவிற்கே இலவசம் கொடுத்திருக்கிறார்கள்.

திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்று பச்சைமாமலை போல் மேனியனின் திருவருளைப் பெற பச்சை வண்ண ஊர்ப் பலகைகளைப் படித்துக் கொண்டே நாயுடுபேட் முன்னால் ப்ளை ஓவர் இறங்கி கீப் லெஃப்ட்டாக காளஹஸ்தி பைபாஸில் நேர் ஸ்ட்ரெய்ட்டாக சென்று திருச்சானூர் சாலையேறி திருப்பதி அடைந்தோம்.

திருப்பதி போகும் வழியெங்கும் ஊர்ப் பெயரைச் சுந்தரத் தெலுங்கில் எறும்புத் தின்ற சிக்குக் கோலம் போல கை சுளுக்க வரைந்திருந்தார்கள். மருந்துக்கு ஒரு எழுத்து கூட ஆங்கிலத்தில் எழுதவில்லை. நேர்க்கோடு இல்லாத லாங்குவேஜ் பார்ப்பதற்கு బాగా ఉంది(பாக உந்தி). தமிழ்மொழிப் ப்ரியர்கள் கவனிக்க. தெலுங்குப் படங்களில் வில்லனாக வந்து ஊரை எரிக்கும் அடியாள் அரசியல்வாதி போல இருந்த ஒரு இளவயது சமூகக் காவலர் ஒருவரை அந்த ஊர்ப் பெயர்ப்பலகை மாக்கோலத்தின் மேல் சுருக்கம் இல்லாமல் ஒட்டிக் களப்பணியாற்றிந்த தொண்டர்களுக்கு தன் தலைவரின் மேல் தான் எத்துனை அளவிடமுடியாத பக்தி!! தெலுங்காட்களுக்கே அது தலைவலி.

மலையேரும் அலிபிரிக்கு முன்னால் வாகன சோதனை செய்ய கம்பு கட்டிய ஒரு பட்டியில் வண்டியை வரிசையில் விடச் சொல்வார்கள். திருப்பதியின் தலைச்சன் வரிசை இதுதான். இங்கிருந்துதான் கியூ ஆரம்பம். மாக்ஸி கேப், மினி வேன், பஸ், கார் என்று ஒன்றுவிடாமல் நிறுத்தி கால் மூட்டு கழன்ற கிழவி முதற்கொண்டு அனைவரையும் இறக்கித் பாலுகேற்றார்ப் போல ஆண் பெண் போலீசார் தடவிப் பார்த்து, பைகளை பாம் ஸ்கான் செய்து கண்காணித்து மேலே அனுப்புவார்கள். அந்தப் பட்டியைத் தேடி வைக்கோல் தேடும் மாடாய் அலைந்தோம். அந்தச் சோதனை இல்லையென்றெண்ணி நேரே செல்வோம் என்று வண்டியை ஒடித்தால் வாகன சோதனையை டிக்கட் கொடுக்கும் இடத்திலேயே பரஸ்பரம் இலகுவாக வைத்துக் கொண்டார்கள்.

பதினைந்து ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்து அதில் நாற்பத்தைந்து நிமிடத்திற்குள் திருமலையை அடையவேண்டும் என்று ஒரு வரி விதியையும் அச்சடித்துக் கொடுத்தார்கள். யாரோ மலைப் பாதையின் நடுவில் டெண்ட் அடித்து பிக்னிக் கொண்டாடிவிட்டார்கள் போலிருக்கிறது.

அமலாவின் ஆதர்ஷ புருஷனான (அதிமுக்கிய பொதுஅறிவுக் குறிப்பு) அக்கினேனி நாகார்ஜுனா நடித்த ஹலோ ப்ரதர் போன்ற தெலுங்கு மெஹா ஹிட் படங்களுக்கு இசையமைத்த ராஜ்-கோடி இசை இரட்டையரின் ஒருவரான கோடி இசையமைத்து எஸ்.பி.பி பாடிய தள்ளபாக அண்ணமைய்யா பண்ணிசைத்த ஸி.டி ஒன்று இலவசமாகக் கொடுத்தார்கள். கம்ப்போஸ் செய்யும் போது கோடி செம டூயட் மூடில் இருந்தாராம். பாடல்கள் அனைத்தும் சினிமா டூயட்டுகளை தூக்கி சாப்பிடும் போல இருந்ததால் எங்களின் பக்தி மூடுக்கு தக்கவாறு ஓ.எஸ்.அருணின் பஜனுக்கு வழிவிட்டு ஸி.டி உறைக்குள் ஒதுங்கிக் கொண்டார் குரல் வளம் மிக்க எஸ்.பி.பி.

வைகுண்ட வாசல் வழியாக முன்னூறு ரூபாய் டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால் கம்பி போட்டக் கூண்டில் அடைத்து விட்டார்கள். கூண்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்து பொற்கோபுரம் தெரிந்தது. பத்து நிமிடத்தில் அந்தக் கூண்டைத் திறந்து விட்டதும் பள்ளி விட்ட ஸ்கூல் பிள்ளைகள் போல பக்தர்கள் பறந்தார்கள். கூரையதிர “கோவிந்தா..கோவிந்தா” போட்டார்கள். ஓட்டமாக ஓடி ஒரு இருபது அடிக்கு முன்னால் மொட்டையில் சந்தனம் மணக்க குளிர்ச்சியாக நின்றவர்களோடு ஐக்கியமடைந்தார்கள். சிலர் தலையை முழுவதும் மொட்டயடிக்காமல் கொஞ்சமாக ஜிட்டு வைத்திருந்தார்கள்.


ஒரு மணி நேரம் ஒருவரோடு ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு இன்ச் பை இன்ச்சாக கால்கள் பின்னப்பின்ன இன்ச்சினோம். சீக்கிரம் உன் தரிசனம் கிடைக்காதா என்று ஏழுமலையானிடம் கெஞ்சினோம். சமோசா, ஃப்ரூட்டி என்று எம்.ஆர்.பிக்கு மேலே இருமடங்காக வைத்து வரிசைக்கு வெளியே நின்று விற்று கோவிந்தனுக்கு நேரேயே கொள்ளை அடித்தார்கள். பசி, ருசியும் விலையும் அறியாது. ”ஸ்வாமி தரிசனத்திற்கு பிறகுதான் பச்சத் தண்ணி பல்லுல படும்” என்ற தீவிர விரதத்தில் இருந்த எம்பொஞ்சாதிக்கு எதிரில் வாங்கி நொசுக்கினார்கள்.

“நானெல்லாம் காடு கழனியில வேல பார்த்துபுட்டு கம்பங் கூழு குடிச்சுப்புட்டு இஸ்கூலுக்கு போய் படிச்சேன்.”

“எத்தினியாவது வரைக்கும் படிச்சீங்க..”

“ஒம்போதாவது வரைக்கும்”
என்று நெற்றியை நாமம் நிரப்ப காலரில் கர்சீப் சொருகிய ஒரு மத்திம வயசும் வெள்ளை வேஷ்டியை டப்பாக் கட்டுக் கட்டிய வயோதிகத்தில் காலடியெடுத்து வைக்கும் ஒரு இளைய பெர்சும்

”க்யா”

”நஹி”

”க்க்யாயா”

”ந...ந...ஹி"

”கயா”
”நஹி”

என்று  நைநையென்று புதிதாக மணமுடித்த இரு இளம் ஹிந்தி ஜோடிகளும், பல பாஷைகளில் தொணத் தொணவென்று பக்கத்தில் பேசிக் கொண்டே வந்தார்கள். இவையெல்லாம் வரிசை உரையாடல்கள். அவ்வப்போது எழுந்த “கோவிந்தா...கோவிந்த்தா.....” கோஷத்திற்கு ஓருடலாக பின்னியிருந்த ஹிந்தி ஜோடிகள் தனித்தனியாக சேர்ந்து கொண்டார்கள்.

சிக்னல் தாண்டிய ரயில் வண்டி ”தடக்..தடக்..” கென்று கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடிப்பது போல மனிதரயில் வரிசை வேகம் பிடித்தது. ”கோவிந்தா கோவிந்தா” என்று ஓடினோம். பல நதிகள் ஒன்றாக சங்கமித்து கடலில் சேர்வது போல, தர்மம், ஐம்பது, முன்னூறு போன்ற பல அடுக்கு பக்த நதிகளையும் ஒன்றினைத்து கருணா சமுத்திரமான பகவானைப் பார்க்க அனுப்பினர்.

சீனியர் சிட்டிசனான என் அப்பாவையும், அத்தையையும் பார்த்த திருமால் வைகுண்டத்திலிருந்து அனுப்பிய ஒரு புண்ணியாத்மா ஜருகண்டி இல்லாமல், பிடித்து தள்ளாமல் ஐந்து நிமிடம் ஓரத்தில் நின்று வசதியாகப் பார்க்க உதவி செய்தார். நின்ற திருக்கோலத்தில் வைர வைடூர்யங்களில் ஒளிர்ந்தார் பரந்தாமன். ஒரு மணி நேரத்திற்கு மேல் நின்றாலும் சூரியனைக் கண்ட பனி போல சோர்வு நீங்கி உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி பிறந்தது. முடிந்தால் வருடா வருடம் வருகிறேன் என்று லார்ட் ஆஃப் செவன் ஹில்ஸிடம் ஆத்ம ஸங்கல்பம் செய்து கொண்டேன்.

கீழிறங்கி வந்து பீமாஸ் ரெஸிடன்ஸியில் உணவருந்தினோம். அஞ்ஞாத வாசத்தில் விராடனிடம் சமையற்காரனாக வேலை செய்த பீமன் வந்து சாப்பிட்டால் நிச்சயம் இந்த ரெஸ்டாரண்டை துவம்சம் செய்வான். சிப்பல் சிப்பலாக சோற்றை வாரி இலையில் கொட்டினார்கள். கோங்குராவைத் தவிர எதையும் வாயில் வைக்க முடியவில்லை. பருப்பில் கீரையை சேர்த்து இலையில் ஊற்றிய போது மேசைக்கு ஓடியது. உருளை வேகவில்லை. மோர்க்குழம்புக்கு உப்பு பத்தலை. இந்த சாப்பாட்டிற்கே ஆயிரம் ரூபாய் தீட்டி விட்டார்கள் இந்த ஹோட்டல் தீவட்டிக் கொள்ளைக்காரர்கள். நிச்சயம் எங்கள் வயிறு வாழ்த்தவில்லை. வெகு நேரம் வரையில் உறுமிக்கொண்டே இருந்தது.

பத்மாவதியம்மாவை அருகில் நின்று பக்கத்துவீட்டு அம்மா போல தரிசித்தோம். வெளியே கோபுரவாசலில் பளபளவென்று மின்னிய நாகப்பழம் கண்ணைப் பறித்தது. வாங்கி வாயில் போடும் முன் மூக்கு அதன் மீதிருந்த நல்லண்ணை தன் வாசனையால் எச்சரித்துத் தடுத்தது. விற்பனையை அதிகரிக்க நாகப்பழ மேனிக்கு நல்லெண்ணை தடவி அழகூட்டியிருந்தார்கள். ”அம்மா.... காப்பாத்து” என்று வேண்டிக்கொண்டு காளஹஸ்தி நோக்கி வண்டியை விட்டேன். சிவன் கோவில் ஃபுல்லாக இருந்தது. நின்று தரிசித்தோம். சிவன் கோவிலில் காரணமாயிரம் சொல்லி விபூதி தரமாட்டேன் என்கிறார்கள். நெருடுகிறது.

மீண்டும் நாயுடுபேட், கொல்கத்தா ஹைவே, கும்மிடிப்பூண்டி, ரெட் ஹில்ஸ் என்று எண்ணெற்ற பூச்சிகள் என் வாகனக் கண்ணடியில் மோதி உயிரை விட வேகமாகத் தாண்டி கோயம்பேடு நுழைந்தோம். பசியாறலாம் என்று அசோக் பில்லர் சரவணபவனில் நுழைந்தால் எங்கள் தூக்கத்திலிருந்து துல்லியமாக ஒரு மணி நேரம் பிடிங்கிக் கொண்டு உணவு வழங்கினார்கள். அப்போதுதான் தெரிந்தது பத்து மணிக்கு மேல் பாதி சென்னை சாப்பிடுகிறது என்று. முக்கால்வாசிப் பேர் கைக்குழந்தை, பல்லு போன பாட்டி என்று குடும்பத்தோடு.

இரவு நடுநிசிக்கு ஒரு மணி நேரம் முன்பு வீடு திரும்பி படுக்கையில் வந்து விழுந்ததும் எனக்குத் தோன்றிய பொன்மொழி

“ஹரியும் சிவனும் ஒன்னு; அறிந்தவர் வாழ்வு பொன்னு”

பின் குறிப்பு: திமலைகள் என்பது திரு மலைகள் என்பதன் குறுக்கம். 

படங்கள்: அடியேனுடைய கைவரிசை.

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails