Monday, August 1, 2011

திமலைகள்

கடந்த பத்து நாட்களில் இரண்டு தி.மலைகள் சென்று கடவுளர்களை தரிசித்து பக்திப் பரவசமானேன். இன்னும் பழமாகவில்லை.  மலைக்கு கீழ் ஸ்வாமியும் பின்னால் ஜோதிமலையும் இருந்தது ஒரு முறையும், மலைமேலே மலையாய் நின்ற மலையப்ப ஸ்வாமியை இரண்டாம் முறை மலை விஜயத்தின் போதும் ஹரஹராவென்று கும்பிட்டுப் பார்த்தேன். முன்னது ஈசன் ஜோதிப் பிழம்பாக அருள் புரியும் திருவண்ணாமலை, இரண்டாவது நமக்கெல்லாம் கால் கடுக்க நின்று தரிசனம் தரும் நெருப்பென்ன நின்ற நெடுமால்; திருவேங்கடவனின் திருமலை.

tmalai

திருவண்ணாமலை சித்தர்கள் பூமி. கோவில் ராஜகோபுரம் தாண்டிய உடனே சொல்லவொனாத ஒரு ஈர்ப்பு சக்தி என்னை ஆகர்ஷிக்க பலமுறை உணர்ந்திருக்கிறேன். எதுவுமே உண்டென்றால் உண்டு. இல்லையென்றால் இல்லை. ஒரு கருப்பு ஸ்கார்ப்பியோவில் ஐந்தாறு வெள்ளையாடை ஸுமோ வீரர்களை ஏற்றிக்கொண்டு வந்து ஸ்வாமியிடம் கட்டப்பஞ்சாயத்து பண்ண வந்த ஒரு கும்பல் அவர்கள் வண்டியை நிறுத்துமிடத்தில் சாவகாசமாக முன்னும் பின்னும் உருட்டி அம்மானை விளையாடி நிறுத்திக் கொண்டிருந்த தொல்லையில் எனது “எப்போதாவது கோபப்படும்” கெட்டபுத்தியைக் காட்டாமல் கட்டுப்படுத்தி ”நமசிவாய” என்று மனதார ஐந்தெழுத்தை ஓதி அண்ணாமலையாரை மனதில் நிறுத்தி, இரண்டு மணி நேரம் அசராமல் ஓடிய சேப்பாயியைப் அலுங்காமல் குலுங்காமல் பார்க்கிங்கில் பத்திரப்படுத்தினேன்.

சென்னைப் பெரு நகரத்தின் பெருவாரியான கார்ப்போரேட் அலுவலகங்கள் வாசலில் வெருமே வெய்யிலில் வாடி வதங்கி நிற்கும் அப்பிராணி செக்கியூரிட்டிகள் போல சம்பிரதாயமாக போலீசார் இருவர் கம்பீரமாக துவாரபாலகர்கள் ஒன்றாக சேர்ந்தது போல கொலு வீற்றிருந்தனர். படி தாண்டிய எங்கள் மேல் சிறு கடைக்கண் பார்வையை அலட்சியமாக வீசிவிட்டுப் பல லோகாயாத விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்ததை மீண்டும் தொடர்ந்தார்கள்.

நுழைந்தவுடன் இடப்புறம் அலங்கரிக்கும் அருனகிரி நாதர் பாடிய முருகன் சன்னிதி பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இத்தனைக்கும் ஒரு நிமிடம் மனச்சிறையில் வைக்கமுடியாத முருகனைக் க்ரில் கேட் பூட்டி சிறை வைத்திருந்தார்கள். “முருகா.. முருகா”வென்று கண்ணத்தில் போட்டுக் கொண்டு அண்ணாமலையானை தரிசிக்க உள்ளே சென்றோம். சமாளிக்க முடியாத கூட்டமாக ஒன்றும் இல்லை. சம்பங்கி மாலை, வில்வார்ச்சனை என்று அபிஷேகப் ப்ரியனை அன்றைக்கு குளிர்வித்தோம். மனதுக்கு நிறைவான அற்புத தரிசனம்.

பிராகாரத்தில் சோமாஸ்கந்தருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுக்கொண்டிருந்தது. சாம்பிராணி புகை மூட்டத்தில் ஸ்வாமி பிராகாரம் பனிசூழ் கயிலாயமாகக் காட்சியளித்தது. உமாவுக்கும் சிவனார்க்கும் நடுவில் அம்மையப்பனுக்கு அடங்கியப் பிள்ளையாக ஆழாக்கு சைஸில் குட்டியாகக் கந்தன் உட்கார்ந்திருந்தார்.

உட்பிராகாரத் திருவலம் வந்து உண்ணாமுலையம்மனை தரிசித்தோம். மூர்த்தம் சிறியதாக இருந்தாலும் அதன் கீர்த்தி பெரிது. “சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யே த்ரியம்பிகே....” என்று ஸ்லோகம் சொல்லி துவஜஸ்தம்பம் அருகில் நமஸ்கரித்தாள் என் பெரியவள். சின்னவள் சூலமங்கலம் சகோதரிகள் போல சேர்ந்து பஜித்து விழுந்தெழுந்தாள்.

அவனருளால் அவன் தாள் வணங்கி நிறைய முறை மஹா சிவராத்திரிக்கு கிரிவலம் செல்லும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இம்முறை சிவப்பாயி சொகுசாகச் சுற்றிக் காண்பித்தாள். சிறு மழைத் தூறலில் மண் வாசனை மூக்கைத் துளைக்க வானளாவிய மலையை அண்ணாந்து பார்த்துக் கொண்டே கிரிவலம் வருவது ஒரு அலாதியான விஷயம். சேஷாத்திரி ஸ்வாமிகள், பகவான் ஸ்ரீ ரமணர், யோகி ராம்சுரத் குமார் என்று அவதார புருஷர்களின் ஆஸ்ரமங்களில் வெள்ளைக்காரர்கள் தியானம் செய்கிறார்கள்.

ரஞ்சி புகழ் நித்தியின் ’ஆ’-’சிரம’த்தில் பலவர்ணக் கொடி பறக்கிறது. இடது ஓரத்தில் மரங்கள் தாண்டி பேவர் ப்ளாக்ஸ் பதித்து பக்தர்களுக்கு சௌகர்யத்திற்கு புதியதாக நடைபாதை போட்டிருக்கிறார்கள். சங்கோஜமாக மறைந்து பீடி குடிக்கும்; இரந்து வாழும்; தாடி வளர்த்த; கஷாயம் கட்டிய சன்னியாசிகள் மற்றும் காவியல்லாது கை நீட்டி வாழ்பவர்கள் என்று மனிதர்கள் சாதா நாட்களிலும் கால் கடுக்க நின்றும், ப்ருஷ்டம் வலிக்க உட்கார்ந்தும் சம்பாதிக்கிறார்கள். பௌர்ணமியல்லாத நாட்களில் அவர்களுக்கு டூட்டி நேரம் குறைவு. நிறையக் காசு சேர்க்க வேண்டாம்.

விண்ணாளும் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானை... என்று மணிவாசகப் பெருமானின் திருவாசகம் அண்ணாமலையானைப் போற்றுகிறது. கிரிவலம் சுற்றி முடித்து சென்னைக்கு திரும்புகையில் வண்டியிலிருந்து தலையை எக்கி எட்டிப் பார்த்து நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையைப் பார்த்து இன்னொரு முறை கண்ணத்தில் போட்டுக் கொண்டேன். அருட்தீர்த்தமென வானம் ரெண்டு துளிகள் தலையில் சொட்டியது.

இது போல இறையருளும் ரம்மியமான இயற்கையும் கைக் கோர்த்து நிற்கும் ஷேத்திரங்கள் நமக்கு நினைவூட்டுவது ஒன்றே  ஒன்றுதான். “இப் பிரம்மாண்டத்தின் முன் நாமெல்லாம் மிகச் சிறிய துகள்கள்”.


****==****

tirupathi


”நேத்திக்கு திருப்பதி போய்ட்டு வந்தேன்” என்று யாராவது தெருக்கோடி பக்தகோடிப் பரவசமாகச் சொன்னால் மின்னலடிக்கும் நேரத்தில் உடனே சகலரும் எழுப்பும் வினா “தரிசனத்துக்கு எவ்ளோ நாழி ஆச்சு?”. நாராயணன் இப்புவியில் பிறவிப் பெருங்கடல் நீந்துவோர்க்கு பொறுமையை போதிக்கும் இடம் திருமலை. ஒரு வருடமாக என்னைத் துளைத்து எடுத்த என் அகமுடையாளின் தார்க்குச்சிக்கு சென்ற வெள்ளிக்கிழமை வேளை வந்தது. ட்ராவல்ஸா, சொந்த வண்டியா என்ற யாத்ரா வாகனப் போட்டியில் சேப்பாயி ஏகோபித்த ஆதரவு பெற்று வென்றாள்.

பூவிருந்தவல்லி-திருவள்ளூர் மார்க்கமாக சென்றால் சுரங்கம் போன்ற பள்ளங்களுக்கு நடுவே ஆங்காங்கே பிட்டு பிட்டாக தென்படும் சாலை இருப்பதால் நொமாடியன்கள் போல ரோடோரத்தில் குடியிருக்கும் அவல நிலைமை ஏற்படும் என்று நண்பர்கள் ஒரு ரோட் அப்டேட் கொடுத்து எச்சரித்தார்கள். நாயுடுபேட் சுற்றி சென்றால் அதிசீக்கிரம் கோவிந்தனைச் சென்றடையலாம் என்று அவ்வழியில் சென்று சேவித்துப் பயனடைந்த ஒரு யாத்திரீக நண்பர் அறிவுரை அருளினார்.

பதினோரு மணி- 300 ரூபாய் அர்ச்சித தரிசனம் செய்யலாம் என்று ஏழரைக்கு சென்னையில் இருந்து ஸெவன் ஹில்ஸுக்கு மாற்று வழியில் புறப்பட்டால் ரெட் ஹில்ஸ் தாண்டுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. ஆக்ஸில்-ப்ரேக்-க்ளட்ச் என்று கால் நடனமாடியது. ஒரு டஜன் டயர் மாட்டிய ராட்சத லாரிகள் மரவட்டையாக நட்டநடு சாலையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்ததால் நாற்பதுக்கு மேல் வண்டியை அழுத்த முடியவில்லை. “SOUND HORN" என்ற அவர்களின் பின்வாசக கட்டளைப்படி சப்தம் செய்ததில் கும்மிடிப்பூண்டி தாண்டி மனமுவந்து ராட்சத லாரிக்காரர்கள் கொசு விரட்டுவது போல கையசைத்து கொடுத்தச் சிறிய சந்தில் புகுந்து சிந்து பாடினேன்.

”நாயுடுபேட் இன்னும் எவ்வளவு தூரம்”  என்று பத்து பத்து கி.மீ இடைவெளியில் நான் கேட்ட மூன்று மகானுபாவர்களும் “இன்னும் இருவத்தஞ்சு கிலோ மீட்டர் இருக்கும்” என்றது எனக்கு மிகுந்த ஆச்சர்யம் அளித்தது. ஒன்று நாயுடுபேட் நான் நெருங்க நெருங்க என்னை விட்டு நகர்ந்து சென்றுக் கொண்டே இருக்க வேண்டும், இல்லை கேட்ட மூவருக்கும் நாயுடுபேட் என்ற பேட்டையைப் பற்றி எதுவுமே தெரியாது. “தெரியாது” என்ற சொல் அவர்கள் அகராதியில் இல்லை. ’நாக்கு தெல்லேது’ சொல்ல அவமானப்பட்டார்கள்.

காலையில் வயிற்றைக் கவனிக்காமல் வண்டி ஏறிவிட்டதால் வயசானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிரட்டிக் கொண்டு வந்துவிட்டது. கொல்கத்தா ஹைவேயில் ஹோட்டல் தேடி அலைந்து கண்கள் பூத்து பசியில் காதடைத்துப் போனது. பத்மாவதி ரெஸ்டாரண்ட் A/C என்று போர்டு வைத்து டிபன் ரெடி போர்டை வாசலில் விரித்து வைத்திருந்தார்கள். உள்ளே ஜன்னல் கதவுகளைத் திறந்து இயற்கை ஏசி வசதியை குளுகுளுப் படுத்தியிருந்தார்கள். தென்னகத்தின் பிரதான காலை வேளை டிஃபனான இட்லி-வடை ஜோடியை ஆளுக்கு ஒரு ப்ளேட் சாப்பிட்டோம். சாம்பாரில் மசாலா ஜாஸ்தி என்று நாக்கு நாலுமுழம் வளர்ந்த என் மூத்தவள் சொன்னாள்.

கழுத்து ஒடியும் உயரத்தில் மாட்டியிருந்த பெட்டியில் ஸாப் டி.வியின் Singh is King படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்த டிவியின் அடிபாகத்தில் நீல வர்ணத்தில் எழுதியிருந்த ”தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சி” என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. தமிழக பார்டர் தாண்டிய இலவசம். இந்தியாவிற்கே இலவசம் கொடுத்திருக்கிறார்கள்.

திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்று பச்சைமாமலை போல் மேனியனின் திருவருளைப் பெற பச்சை வண்ண ஊர்ப் பலகைகளைப் படித்துக் கொண்டே நாயுடுபேட் முன்னால் ப்ளை ஓவர் இறங்கி கீப் லெஃப்ட்டாக காளஹஸ்தி பைபாஸில் நேர் ஸ்ட்ரெய்ட்டாக சென்று திருச்சானூர் சாலையேறி திருப்பதி அடைந்தோம்.

திருப்பதி போகும் வழியெங்கும் ஊர்ப் பெயரைச் சுந்தரத் தெலுங்கில் எறும்புத் தின்ற சிக்குக் கோலம் போல கை சுளுக்க வரைந்திருந்தார்கள். மருந்துக்கு ஒரு எழுத்து கூட ஆங்கிலத்தில் எழுதவில்லை. நேர்க்கோடு இல்லாத லாங்குவேஜ் பார்ப்பதற்கு బాగా ఉంది(பாக உந்தி). தமிழ்மொழிப் ப்ரியர்கள் கவனிக்க. தெலுங்குப் படங்களில் வில்லனாக வந்து ஊரை எரிக்கும் அடியாள் அரசியல்வாதி போல இருந்த ஒரு இளவயது சமூகக் காவலர் ஒருவரை அந்த ஊர்ப் பெயர்ப்பலகை மாக்கோலத்தின் மேல் சுருக்கம் இல்லாமல் ஒட்டிக் களப்பணியாற்றிந்த தொண்டர்களுக்கு தன் தலைவரின் மேல் தான் எத்துனை அளவிடமுடியாத பக்தி!! தெலுங்காட்களுக்கே அது தலைவலி.

மலையேரும் அலிபிரிக்கு முன்னால் வாகன சோதனை செய்ய கம்பு கட்டிய ஒரு பட்டியில் வண்டியை வரிசையில் விடச் சொல்வார்கள். திருப்பதியின் தலைச்சன் வரிசை இதுதான். இங்கிருந்துதான் கியூ ஆரம்பம். மாக்ஸி கேப், மினி வேன், பஸ், கார் என்று ஒன்றுவிடாமல் நிறுத்தி கால் மூட்டு கழன்ற கிழவி முதற்கொண்டு அனைவரையும் இறக்கித் பாலுகேற்றார்ப் போல ஆண் பெண் போலீசார் தடவிப் பார்த்து, பைகளை பாம் ஸ்கான் செய்து கண்காணித்து மேலே அனுப்புவார்கள். அந்தப் பட்டியைத் தேடி வைக்கோல் தேடும் மாடாய் அலைந்தோம். அந்தச் சோதனை இல்லையென்றெண்ணி நேரே செல்வோம் என்று வண்டியை ஒடித்தால் வாகன சோதனையை டிக்கட் கொடுக்கும் இடத்திலேயே பரஸ்பரம் இலகுவாக வைத்துக் கொண்டார்கள்.

பதினைந்து ரூபாய்க்கு டிக்கெட் கொடுத்து அதில் நாற்பத்தைந்து நிமிடத்திற்குள் திருமலையை அடையவேண்டும் என்று ஒரு வரி விதியையும் அச்சடித்துக் கொடுத்தார்கள். யாரோ மலைப் பாதையின் நடுவில் டெண்ட் அடித்து பிக்னிக் கொண்டாடிவிட்டார்கள் போலிருக்கிறது.

அமலாவின் ஆதர்ஷ புருஷனான (அதிமுக்கிய பொதுஅறிவுக் குறிப்பு) அக்கினேனி நாகார்ஜுனா நடித்த ஹலோ ப்ரதர் போன்ற தெலுங்கு மெஹா ஹிட் படங்களுக்கு இசையமைத்த ராஜ்-கோடி இசை இரட்டையரின் ஒருவரான கோடி இசையமைத்து எஸ்.பி.பி பாடிய தள்ளபாக அண்ணமைய்யா பண்ணிசைத்த ஸி.டி ஒன்று இலவசமாகக் கொடுத்தார்கள். கம்ப்போஸ் செய்யும் போது கோடி செம டூயட் மூடில் இருந்தாராம். பாடல்கள் அனைத்தும் சினிமா டூயட்டுகளை தூக்கி சாப்பிடும் போல இருந்ததால் எங்களின் பக்தி மூடுக்கு தக்கவாறு ஓ.எஸ்.அருணின் பஜனுக்கு வழிவிட்டு ஸி.டி உறைக்குள் ஒதுங்கிக் கொண்டார் குரல் வளம் மிக்க எஸ்.பி.பி.

வைகுண்ட வாசல் வழியாக முன்னூறு ரூபாய் டிக்கெட் வாங்கி உள்ளே சென்றால் கம்பி போட்டக் கூண்டில் அடைத்து விட்டார்கள். கூண்டில் உட்கார்ந்த இடத்தில் இருந்து பொற்கோபுரம் தெரிந்தது. பத்து நிமிடத்தில் அந்தக் கூண்டைத் திறந்து விட்டதும் பள்ளி விட்ட ஸ்கூல் பிள்ளைகள் போல பக்தர்கள் பறந்தார்கள். கூரையதிர “கோவிந்தா..கோவிந்தா” போட்டார்கள். ஓட்டமாக ஓடி ஒரு இருபது அடிக்கு முன்னால் மொட்டையில் சந்தனம் மணக்க குளிர்ச்சியாக நின்றவர்களோடு ஐக்கியமடைந்தார்கள். சிலர் தலையை முழுவதும் மொட்டயடிக்காமல் கொஞ்சமாக ஜிட்டு வைத்திருந்தார்கள்.


ஒரு மணி நேரம் ஒருவரோடு ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டு இன்ச் பை இன்ச்சாக கால்கள் பின்னப்பின்ன இன்ச்சினோம். சீக்கிரம் உன் தரிசனம் கிடைக்காதா என்று ஏழுமலையானிடம் கெஞ்சினோம். சமோசா, ஃப்ரூட்டி என்று எம்.ஆர்.பிக்கு மேலே இருமடங்காக வைத்து வரிசைக்கு வெளியே நின்று விற்று கோவிந்தனுக்கு நேரேயே கொள்ளை அடித்தார்கள். பசி, ருசியும் விலையும் அறியாது. ”ஸ்வாமி தரிசனத்திற்கு பிறகுதான் பச்சத் தண்ணி பல்லுல படும்” என்ற தீவிர விரதத்தில் இருந்த எம்பொஞ்சாதிக்கு எதிரில் வாங்கி நொசுக்கினார்கள்.

“நானெல்லாம் காடு கழனியில வேல பார்த்துபுட்டு கம்பங் கூழு குடிச்சுப்புட்டு இஸ்கூலுக்கு போய் படிச்சேன்.”

“எத்தினியாவது வரைக்கும் படிச்சீங்க..”

“ஒம்போதாவது வரைக்கும்”
என்று நெற்றியை நாமம் நிரப்ப காலரில் கர்சீப் சொருகிய ஒரு மத்திம வயசும் வெள்ளை வேஷ்டியை டப்பாக் கட்டுக் கட்டிய வயோதிகத்தில் காலடியெடுத்து வைக்கும் ஒரு இளைய பெர்சும்

”க்யா”

”நஹி”

”க்க்யாயா”

”ந...ந...ஹி"

”கயா”
”நஹி”

என்று  நைநையென்று புதிதாக மணமுடித்த இரு இளம் ஹிந்தி ஜோடிகளும், பல பாஷைகளில் தொணத் தொணவென்று பக்கத்தில் பேசிக் கொண்டே வந்தார்கள். இவையெல்லாம் வரிசை உரையாடல்கள். அவ்வப்போது எழுந்த “கோவிந்தா...கோவிந்த்தா.....” கோஷத்திற்கு ஓருடலாக பின்னியிருந்த ஹிந்தி ஜோடிகள் தனித்தனியாக சேர்ந்து கொண்டார்கள்.

சிக்னல் தாண்டிய ரயில் வண்டி ”தடக்..தடக்..” கென்று கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடிப்பது போல மனிதரயில் வரிசை வேகம் பிடித்தது. ”கோவிந்தா கோவிந்தா” என்று ஓடினோம். பல நதிகள் ஒன்றாக சங்கமித்து கடலில் சேர்வது போல, தர்மம், ஐம்பது, முன்னூறு போன்ற பல அடுக்கு பக்த நதிகளையும் ஒன்றினைத்து கருணா சமுத்திரமான பகவானைப் பார்க்க அனுப்பினர்.

சீனியர் சிட்டிசனான என் அப்பாவையும், அத்தையையும் பார்த்த திருமால் வைகுண்டத்திலிருந்து அனுப்பிய ஒரு புண்ணியாத்மா ஜருகண்டி இல்லாமல், பிடித்து தள்ளாமல் ஐந்து நிமிடம் ஓரத்தில் நின்று வசதியாகப் பார்க்க உதவி செய்தார். நின்ற திருக்கோலத்தில் வைர வைடூர்யங்களில் ஒளிர்ந்தார் பரந்தாமன். ஒரு மணி நேரத்திற்கு மேல் நின்றாலும் சூரியனைக் கண்ட பனி போல சோர்வு நீங்கி உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி பிறந்தது. முடிந்தால் வருடா வருடம் வருகிறேன் என்று லார்ட் ஆஃப் செவன் ஹில்ஸிடம் ஆத்ம ஸங்கல்பம் செய்து கொண்டேன்.

கீழிறங்கி வந்து பீமாஸ் ரெஸிடன்ஸியில் உணவருந்தினோம். அஞ்ஞாத வாசத்தில் விராடனிடம் சமையற்காரனாக வேலை செய்த பீமன் வந்து சாப்பிட்டால் நிச்சயம் இந்த ரெஸ்டாரண்டை துவம்சம் செய்வான். சிப்பல் சிப்பலாக சோற்றை வாரி இலையில் கொட்டினார்கள். கோங்குராவைத் தவிர எதையும் வாயில் வைக்க முடியவில்லை. பருப்பில் கீரையை சேர்த்து இலையில் ஊற்றிய போது மேசைக்கு ஓடியது. உருளை வேகவில்லை. மோர்க்குழம்புக்கு உப்பு பத்தலை. இந்த சாப்பாட்டிற்கே ஆயிரம் ரூபாய் தீட்டி விட்டார்கள் இந்த ஹோட்டல் தீவட்டிக் கொள்ளைக்காரர்கள். நிச்சயம் எங்கள் வயிறு வாழ்த்தவில்லை. வெகு நேரம் வரையில் உறுமிக்கொண்டே இருந்தது.

பத்மாவதியம்மாவை அருகில் நின்று பக்கத்துவீட்டு அம்மா போல தரிசித்தோம். வெளியே கோபுரவாசலில் பளபளவென்று மின்னிய நாகப்பழம் கண்ணைப் பறித்தது. வாங்கி வாயில் போடும் முன் மூக்கு அதன் மீதிருந்த நல்லண்ணை தன் வாசனையால் எச்சரித்துத் தடுத்தது. விற்பனையை அதிகரிக்க நாகப்பழ மேனிக்கு நல்லெண்ணை தடவி அழகூட்டியிருந்தார்கள். ”அம்மா.... காப்பாத்து” என்று வேண்டிக்கொண்டு காளஹஸ்தி நோக்கி வண்டியை விட்டேன். சிவன் கோவில் ஃபுல்லாக இருந்தது. நின்று தரிசித்தோம். சிவன் கோவிலில் காரணமாயிரம் சொல்லி விபூதி தரமாட்டேன் என்கிறார்கள். நெருடுகிறது.

மீண்டும் நாயுடுபேட், கொல்கத்தா ஹைவே, கும்மிடிப்பூண்டி, ரெட் ஹில்ஸ் என்று எண்ணெற்ற பூச்சிகள் என் வாகனக் கண்ணடியில் மோதி உயிரை விட வேகமாகத் தாண்டி கோயம்பேடு நுழைந்தோம். பசியாறலாம் என்று அசோக் பில்லர் சரவணபவனில் நுழைந்தால் எங்கள் தூக்கத்திலிருந்து துல்லியமாக ஒரு மணி நேரம் பிடிங்கிக் கொண்டு உணவு வழங்கினார்கள். அப்போதுதான் தெரிந்தது பத்து மணிக்கு மேல் பாதி சென்னை சாப்பிடுகிறது என்று. முக்கால்வாசிப் பேர் கைக்குழந்தை, பல்லு போன பாட்டி என்று குடும்பத்தோடு.

இரவு நடுநிசிக்கு ஒரு மணி நேரம் முன்பு வீடு திரும்பி படுக்கையில் வந்து விழுந்ததும் எனக்குத் தோன்றிய பொன்மொழி

“ஹரியும் சிவனும் ஒன்னு; அறிந்தவர் வாழ்வு பொன்னு”

பின் குறிப்பு: திமலைகள் என்பது திரு மலைகள் என்பதன் குறுக்கம். 

படங்கள்: அடியேனுடைய கைவரிசை.

-

52 comments:

கௌதமன் said...

சுவையான பயணக் கட்டுரை.

Unknown said...

hahaha.
erunga porumaiya padichitu varen.

Unknown said...

கோவிந்தா..கோவிந்தா”
//
நேரில் சென்று வந்த உணர்வு
கோவிந்தா
உன்னை நான் எப்போது காண்பேன்..

Chitra said...

வணக்கம். நல்ல பகிர்வுங்க.

சாந்தி மாரியப்பன் said...

பரபரன்னு ஒரு பயணம் போயிட்டு வந்துட்ட திருப்தி.. நாலு இடத்துக்கு போயிட்டு வர்றதுன்னா சும்மாவா!!..

மலையிலேயே ஓரளவு நல்ல உணவகங்கள் இருந்திருக்குமே.. வெங்கடேஸ்வரா மியூசியம் ஒண்ணு இருக்கே. அதுக்கு பக்கத்துலன்னு ஞாபகம் :-)

சத்ரியன் said...

//“ஹரியும் சிவனும் ஒன்னு; அறிந்தவர் வாழ்வு பொன்னு”

பின் குறிப்பு: திமலைகள் என்பது திரு மலைகள் என்பதன் குறுக்கம். //

அதெப்படி ராசா நீங்க ரெண்டு நாளா அலைஞ்ச எடங்களுக்கு எங்களை ஒரே நாள்ல சுத்த வெச்சிட்டீங்க.

ஸ்ரீராம். said...

ஹரியையும் சிவனையும் அடுத்தடுத்துப் பார்த்தது சாதனைதான். வர்ணனைகளால் நானும் கூட நின்றது போல உணர்வு.

இளங்கோ said...

ஒரே பதிவுல எங்களுக்கு சுத்தி காமிச்சுட்டிங்க...
நன்றி

ரிஷபன் said...

அட நீங்களுமா.. 23 & 24ம் தேதிகளில் அங்கேதான் இருந்தேன்.. மதியம் மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பிடித்து ஊர் திரும்பியாச்சு.
ஜருகண்டிதான் அங்கு சாஸ்வதம்..

எல் கே said...

மைனர்வாள் திருமலையையும், திருவண்ணாமலையையும் எமக்கு நன்றாகவே சுத்தி காட்டினீங்க. சீனியர் சிடிசனுக்கு நேரா தரிசனத்துக்கு போகும் ஆப்ஷன் இருக்கே . உங்க பார்யாளை அவங்க கூட அனுப்பி தரிசனம் முடிக்க வெச்சிருக்கலாமே .

சரி ஆந்திரா போயிட்டு வந்தால் தமிழ் மறந்துருமா . இந்தமுறை நெறைய பிழைகள் :(

RVS said...

@kggouthaman
நன்றி சார்! :-)

RVS said...

@siva
மனதார நினைச்சுக்கோங்க... உடனே தரிசனம் கிடைக்கும். :-)

RVS said...

@Chitra
நன்றிங்க... மீண்டு வந்து கமெண்ட் போட்டதற்கு.. :-)

RVS said...

@அமைதிச்சாரல்
அடுத்த முறை ட்ரை பண்றேன்!! மிக்க நன்றி சாரல். :-)

RVS said...

@சத்ரியன்
கூடவே வந்து சுத்திப் பார்த்ததுக்கு நன்றிங்க... :-)

RVS said...

@ஸ்ரீராம்.
பாராட்டுக்கு நன்றி ஸ்ரீராம்... :-)

RVS said...

@இளங்கோ
ஆளையே பார்க்க முடியலை.. நல்லா இருக்கீங்களா? :-)

RVS said...

@ரிஷபன்
கரெக்ட்டுதான் சார்! ஆனா தரிசனம் பண்ற பத்து இருபது செகண்ட்லேயே மனசுக்கு நிம்மதி வந்துடுது...:-)

RVS said...

@எல் கே
சீனியர் சிட்டிசன் ஆப்ஷன் தெரியும். எல்லோரும் ஒன்றாக தரிசனம் செய்யலாம் என்று நின்றோம். :-)


நெறைய பிழைகளா? என் கண்ல அவ்வளவா படலையே... கொஞ்சம் கோடு போட்டுக் காமிங்க.. திருத்திக்கிறேன்!

தக்குடு said...

திமலைகள் இரண்டையும் அழகா பார்க்கமுடிஞ்சது! உங்களோட கண்ணுக்கு நேர யாராவது டீ ஆத்தினா கூட அதை கவிதை மாதிரி எழுத்து நடைல சொல்லிடுவேள் போலருக்கே!! திருப்பதிக்கு போயிட்டு புதுமணதம்பதிகளை எதுக்கு நோட்டம் விட்டுண்டு இருக்கேள்? அதுவும் தங்கமணி பக்கத்துல இருக்கும் போதே!! :)))

பத்மநாபன் said...

கோபுரத்துக்குள் கோபுரம் படம் அருமை...இரு திரு மலைகளுக்கும் நேரில் சென்று பார்த்த திருப்தியை எற்படுத்திவிட்டீர்கள் .

நொடிதோறும் அனுபவித்ததை அழகாக வர்ணித்துவிட்டீர்கள்...

A.R.ராஜகோபாலன் said...

அன்பு வெங்கட்
உனக்கே
உரிய
உயரிய பாணியில்
தூள் பரத்தும்
ராஜபாட்டையில்
சேப்பாயியும்
உன் எழுத்தும்
ஒரு சேர பயணித்தது
அமர்க்களம்

Ponchandar said...

”திமலா” சுஜாதா ஒரு கதை எழுதியிருக்கிறார். அதுதான் ஞாபகம் வந்தது உங்கள் திமலை தலைப்பை பார்த்ததும். நல்லதொரு அனுபவ பகிர்வு

இளங்கோ said...

//ஆளையே பார்க்க முடியலை.. நல்லா இருக்கீங்களா? :-)//
நல்லா இருக்கேன் அண்ணா...
கொஞ்சம் ஆணிகள் ஜாஸ்தி.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சூப்பர் தரிசனம். அடுத்த முறை திருப்பதி செல்லும்போது சதசிவக் கோனே சென்று வாருங்கள். அருமையான அருவி உங்களை குளிப்பாட்டக் காத்திருக்கிறது. அற்புதமான மலை. என் பதிவில் இது குறித்து எழுதியுள்ளேன்.

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்! இரண்டு மலைக்கும் என்னையும் சித்த நாழி கூட்டிந்து போய்ட்டெள்! மகராஜனா இருங்கோ! போட்டோ பேசறதுன்னா!

அப்பாதுரை said...

திமலையா? பக்தியோட போய்ட்டு வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

RVS sir//
எனது ஆரம்பப் பதிவுகளின் போது
தங்கள் தொடர்ந்து வந்து வாழ்த்தி ஊக்குவித்ததே
நான் தொடர்ந்து எழுத பலம் கொடுத்தது
தங்களை வலைச் சரத்தில் அறிமுகம் செய்ய
கிடைத்த வாய்ப்பை பாக்கியமாகக் கருதுகிறேன்

Unknown said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

கவலைகள் தீரப் பண்ணும்
திமலைகள் சென்று வந்தீர்.
விமலனாம் அண்ணாமலையும்
கமலத்தாள் வேங்கடனும்
எமக்கும் அருள் தந்தார்
உமதருமை பதிவாலே.

bandhu said...

உங்கள் புண்ணியத்தில் எனக்கு ஹரி தரிசனமும் சிவா தரிசனமும் கிடைத்தது. நான் நேரில் சென்ற அனுபவத்தை வழங்கிவிட்டீர்கள்!

சாய்ராம் கோபாலன் said...

ஐந்தாறு முறை நான் திருவண்ணாமலை கிரி வலம் போய் இருக்கின்றேன். கடைசி ஒன்று இரண்டு கிலோமீட்டர் நடக்கும்போது கால்கள் கெஞ்சும். நான் என்ன, என் அம்மாவே இரண்டு முறை சென்று இருக்கின்றாள்.

நாள் ஒரு முறை தான் பௌர்ணமி அன்று போனேன். மற்றபோதேல்லாம். நானும் என் பழைய சி.இ.ஒ மற்றும் அவரின் தம்பி என்று பேசிக்கொண்டே நடப்போம்.

ஒரு காலத்தில் மெடிக்கல் ரெப் (ஐயோ ஒரு முறை எங்கள் ப்ளோகில் ரெப் என்று வந்து ஒரே கலாட்டா ! கூகிள் இண்டிக் செய்யும் திருவிளையாடல் - நான் என் செய்ய !) என்று அங்கே சுற்றி இருக்கின்றேன் (1987)

இராஜராஜேஸ்வரி said...

திருவண்ணாமலை காந்தமலை ஆயிற்றே. மீண்டும் தரிசிக்கவைக்கும்.

இரண்டுதரிசனத்திற்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

ரைட்டர் நட்சத்திரா said...

உங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.

Anonymous said...

முதலில் உள்ள படம் நன்றாக உள்ளது. என் தாயார் அவ்வப்போது திருவண்ணாமலை சென்று வருவார். ஆனால் நான் இதுவரை சென்றதில்லை.நேரம் கிட்டினால் கண்டிப்பாக செல்கிறேன். பகிர்வுக்கு நன்றி ஆர்.வி. எஸ்!

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் அருமையான ஆலய தரிசனம்.

RVS said...

@தக்குடு
கண்ணை மூடிக்கொண்டு க்யூவில் போக முடியாததால்......

ஏன்...ஏன்...ஏன்.... :-)

RVS said...

@பத்மநாபன்
படத்தை நுணுக்கமாக ரசித்து ரசிகமணி என்று மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள். நன்றி. :-)

RVS said...

@A.R.ராஜகோபாலன்
கோப்லி.. மிக்க நன்றி.. :-)

RVS said...

@Ponchandar
தலைப்புக்கு இன்ஸ்பிரேஷன் வேற யாரா இருக்க முடியும் ஸார்!!

கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@இளங்கோ

O.K O.K.. :-)))))

RVS said...

@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)

கருத்துக்கு நன்றி மேடம். உங்களது பதிவையும் பார்க்கிறேன்.

எப்போதும் திருப்பதி சென்றால்... பாலாஜி.. அலமேலுமங்காவைப் பார்த்துவிட்டு.... காளத்தீஸ்வரரையும் தரிசித்துவிட்டு... ரிட்டர்ன்....

அடுத்த முறை சென்று பார்க்கிறேன்..
:-)

RVS said...

@மோகன்ஜி
அண்ணா கருத்துக்கு மிக்க நன்றி!! :-))

RVS said...

@அப்பாதுரை

அப்பாஜி!! மிக்க நன்றி.. :-)

RVS said...

@Ramani

சார்! தன்யனானேன்.. மிக்க நன்றி. :-)

RVS said...

@ரியாஸ் அஹமது
நன்றிங்க... :-)

RVS said...

@சிவகுமாரன்

கவிதையிலேயே
கருத்துரைத்த
கந்தனுக்கு - இதயம்
கனிந்த நன்றிகள். :-)

RVS said...

@bandhu
நன்றிங்க.. இப்பெல்லாம் அடிக்கடி இந்தப் பக்கம் வரதில்லையோ? :-)

RVS said...

@சாய்
அது ஒரு ஆத்ம பலம் பெருக்கும் கிரிவலம்.
கருத்துக்கு நன்றி சார்! :-)

RVS said...

@இராஜராஜேஸ்வரி
நன்றிங்க மேடம்.. :-)

RVS said...

@! சிவகுமார் !
நன்றி சிவா! நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஸ்வாமி! :-)

RVS said...

@RAMVI
நன்றிங்க மேடம்.. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails