Sunday, December 30, 2012

2012:ஒரு பார்வை

இந்த வருஷம் எப்படி ஓடியது என்று தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் பட்டினத்தாரின் ஸ்டைலில் சொல்கிறேன்
”உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும் அடுத்தடுத்து உரைத்த யுரைத்தும்,கண்டதே கண்டுங் கேட்டதே கேட்டுங் கழிந்தனக நாளெல்லாம்”. 

ஒன்றே ஒன்று புதிதுபுதிதாகப் புத்தகங்கள் தேடித் தேடி படித்தேன். படிக்கிறேன். கம்பராமாயணத்தில் விசேஷ ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கொஞ்சமாக நினைவுக் குதிரையை ஃப்ளாஷ் பேக் மோடில் ரிவர்ஸில் ஓட விட்டுப் பார்த்தும் இணையத்தைக் கொஞ்சம் துழாவியும் பத்திரிகைத் துறை நண்பரொருவர் கொடுத்த நிகழ்வுப்பட்டியலையும் தோராயமாக பார்த்துத் தயாரித்த வேர்ல்ட் திஸ் இயர்-2012.

இந்தப் பட்டியலுக்குள் நுழைவதற்கு முன்னர் அதிமுக்கியமாகக் கவனிக்க வேண்டிய மூன்று புல்லட் பாயிண்ட்ஸ்.

அ)இது அதிகாரப்பூர்வ கெஸட் பட்டியல் அல்ல.
ஆ)காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலும் அல்ல.
இ)பூதக்கண்ணாடி கொண்டு பார்க்குமளவிற்கு அதிவிசேஷமான பட்டியலும் அல்ல.

1. என் வயதையொத்த அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் முதல்வராயிருக்கிறார்.

2. மட்டையினால் நாட்டுக்கு விளையாட்டுத் தொண்டாற்றிய சச்சின் டெண்டுல்கர் தேசத்துக்குச் சேவைபுரிய ராஜ்ஜிய சபா எம்பியாக்கப்பட்டார்.

3. நிதித்துறை மந்திரி பதவியிலிருந்து தப்பித்து பிரனாப் முகர்ஜி இந்தியாவின் பதினான்காவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆபத்தில்லாத ஃபாரின் டூர் பதவி என்று ப்ரதீபா ’பாட்டி’லால் அடையாளம் கொடுக்கப்பட்ட பொறுப்பான பதவி.

4. என் போன்ற மீடியம் பட்ஜெட் சிறு கார் ஓட்டும் முதலாளிகளையும் நசுக்கும் முயற்சியாக டீசலை ஐந்து ரூபாய் வரை ஏற்றினார்கள். ஆறு சிலிண்டர்கள்தான் வருடத்திற்கு என்று கட்டை போட்டார்கள். ஒருவாரத்திற்கு டீசல் கிடைக்காமல் அனைவரையும் வீதிகளில் பேயாய் அலையவிட்டார்கள்.

5. தீபா கங்குலி சீதா பிராட்டியாராக நடித்த ராமாயணத்தில் சிரஞ்சீவி ஹனுமானாக நடித்த தாரா சிங் தனது 83 வயதில் உயிர் நீத்தார். அறுபது எழுபதுகளில் கன்னியரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ராஜேஷ் கன்னாவும் இறந்தார்.

6. மனித இனத்தின் ஜெயண்ட் லீப்பாக சந்திரனில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பை பாஸ் சர்ஜரியில் ஏற்பட்ட குளறுபடிகளால் இறந்தார்.

7. சிதாரினால் பல உள்ளங்களில் ஜிப்ஸி கிதார் மீட்டிய பண்டிட் ரவி ஷங்கர் 92வது வயதில் மேலுலகம் சென்றார்.

8.ரொம்பவும் அபர செய்திகளாகப் பார்த்தாயிற்று, சுப செய்தியென்றால் நமக்கெல்லாம் அரட்டையடிப்பதற்கும் அவ்வப்போது சில சத்விஷயங்கள் தெரிந்துகொள்வதற்கும் உறவுப் பாலம் அமைத்துக் கொடுத்த மார்க் ஸூகெர்பெர்க் தனது நீண்ட நாள் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார்.

9.பிரேஸில் நாட்டு இருபதுவயது பெண்ணொருத்தி $780,000 டாலருக்கு தனது கற்பை விற்று கலிகாலப் புரட்சி செய்தார்.

10. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆஞ்சநேயர் விக்கிரஹம் வைத்துக்கொள்ளாமல் பராக் ஒபாமா இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்க ராஜ்ஜியத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்றார்.

11.ரிக்கி பாண்டிங்கும் சச்சினும் திராவிடும் ”ஆடியது போதும்” என்று இளைஞர்களுக்கு ஒதுங்கி நின்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்கள்.

12.யுவராஜ் சிங் அரிதினும் அரிதான ஜெர்ம் செல் கேன்சரை ஜெயித்து மீண்டும் விளையாட ஆரம்பித்துவிட்டார்.

13.பெட்டிங் கள்ளப் பணம் என்று ஆயிரமாயிரம் நொட்டைகள் இருந்தாலும் ஐபிஎல் ஜமாய்க்கிறது. ஷாரூக்கானின் கொக்கத்தா நைட் ரைடர்கள் 2012ம் வருடத்திய பட்டத்தைக் கெலித்தது.

14. காவல் கோட்டத்திற்காக சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருதும், ஜெயகாந்தனுக்கு ரஷிய நாட்டின் உயரிய நட்புறவு விருதும், அசோகமித்திரனுக்கு என்.டி.ஆர் விருதும் கிடைத்தது தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட சுப நிகழ்வுகள்.

15. ஒரு பதினைந்து வயது பையனை “ஒழுங்கா படியேம்ப்பா” என்று சொன்ன குற்றத்திற்காக உமா மஹேஸ்வரி என்கிற ஆசிரியை சென்னை பாரீஸில் கல்விக் கூடத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். வன்முறை வரவேற்பறைக்கு வந்ததன் விளைவு.

16. ஒன்பது வருடங்களுப்பிறகு மின் கட்டணத்தை 37% உயர்த்தி தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களை உயிரோடு கொளுத்தியது. ”கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று வரலாறு காணாத மின்வெட்டையும் அறிமுகப்படுத்தி ஏற்றிய கட்டணத்தை ஓரளவிற்கு சமன் செய்தது. மின்சாரமின்மையால் தனது சொந்த தொழிலையே மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான ஒரு அபாக்கியசாலியை பேட்டி எடுத்துப் போட்டிருந்தது தினகரன்.

17.அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாத ஹேமமாலினிக்கு சர்வதேச பெரும்புள்ளி அவார்ட் லண்டனில் வழங்கப்பட்டது. இன்னும் பத்து வருடம் கழித்தும் இது போன்ற அவார்ட் வாங்குமளவிற்கு ஹேமமாலினி திகழ்வார் என்று பரவலாக நம்பப்படுகிறது.

18. மாருதி ஸுஸுகி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கிடையே நடந்த கலவரத்தில் மனித வளத் துறை மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். வேலை வாங்கும் தகுதியில் இருப்பவர்களுக்கும் வேலை செய்வதாக பாவ்லா காட்டுபவர்களுக்குமிடையே நடக்கும் போராட்டத்தின் உச்சகட்டம் கொலை என்பது துர்பாக்கியமே. நியாயமான கோரிக்கையுள்ளவர்கள் தர்மமான முறையில் போராடுவார்கள்.

19.ஹிக்ஸ் போஸன் என்கிற கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளையே கண்ட மாதிரி அறிவியல் உலகம் கொண்டாடியது.

20. ஆகாஷ் எனும் டேப்லெட்டின் அட்வான்ஸ்டு வெர்ஷனை இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி நாட்டுக்கு அர்பணித்து புண்ணியம் கட்டிக்கொண்டார். முதல் லட்சம் டேப்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் பல்கலைக்கழங்களில் படிப்பவர்களுக்கு மட்டும் என்று அறிவித்திருக்கிறார்கள். பார்ப்போம் உரியவர்களை சென்றடைகிறதா என்று.

21.திடீரென்று ஒருநாள் நித்யானந்தா மதுரை ஆதினமாக அதிரடியாகப் பதவியேற்றுக்கொண்டார். இருவரும் சிரித்துக்கொண்டே பேட்டியளித்தார்கள். பலர் செல்லாது என்று போராடினார்கள். முடிவில் மதுரை ஆதினமே நித்தியை ஆதினப் பொறுப்பிலிருந்து நீக்கினார்.

22. இரண்டாம் வகுப்புப் படித்துவந்த ஸ்ருதி என்கிற பள்ளி மாணவி பஸ்ஸிற்குள் இருந்த ஓட்டையில் விழுந்து நசுங்கிச் செத்ததும், மாணவனொருவன் நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது விழுந்து உயிரிழந்ததும் நிர்வாகத்தினரின் அலட்சிய மனோபாவத்தினை வெளிப்படுத்தியது.

23. கூடங்குளம் அணு மின்சாரத்தை எதிர்த்து இடிந்தகரையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அணு உலை ஆபத்தானதல்ல என்று கூறி போராடியவர்களிடம் அவப்பெயர் சம்பாதித்துக்கொண்டார் அப்துல்கலாம்.

24.ஆங்காங்கே இயற்கைச் சீற்றங்கள் பெருமளவில் இருந்தது. சுமத்ராவில் பூமித்தகடுகள் இன்னமும் சீட் ஆகாமல் நடனமாடிக்கொண்டிருக்கிறது.

25. மாயன் இனத்தவர்கள் காலண்டர் வரைய கல்லில் இடமில்லாமல் போனதால் நிறைய பேர் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்று ஜல்லியடித்தார்கள். தன்னிடமிருந்த ஒரு லட்ச ரூபாயை ரோடில் சென்றவருக்குக் கொடுத்த ஒரு அநாமதேய அப்பாவியைப் பற்றிய செய்தி வந்தது. வாங்கியவர் திரும்பக் கொடுப்பாரா?

26.ஊழலுக்கெதிராக என்று சொல்லிக்கொண்டு ஆம் ஆத்மி என்கிற அகில இந்திய கட்சியை அண்ணா ஹசாரேவின் டீம் ஆளாக அறியப்பட்ட அர்விந்த கெஜ்ரிவால் தொடங்கினார். ஆம்! கட்சிப் பெயரிலேயே சர்ச்சை ஏற்பட்டது.

27.தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கொல்வதும் மத்திய மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதும் தொடர்கிறது.

28. வழக்கம் போல இந்த வருடமும் தமிழில் நிறைய யதார்த்த திரைப்படங்களை எடுத்தார்கள். சாட்டை, வழக்கு எண் போன்ற படங்கள் வெற்றியடைந்தன.

29.தில்லியில் ஒரு மாணவியை பாலியல் வன்கலவியினால் சிதைத்தார்கள். உடனே பூதாகாரமாக நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் ரேப்புகள் ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. நடைபெற்ற இதுபோன்ற துக்கச்சம்பத்தினால் கொதித்தெழுந்த பொதுமக்கள் கருட புராணத்தை திருத்தியமைக்குமளவிற்கு அக்குற்றத்திற்கான தண்டனைகளை தங்களது கணினியின் கீபோர்ட் மூலமாக வழங்கினார்கள்.

30. தூக்கு போடும் வரை வெளியே மூச்சுக் காட்டாமல் கப்சிப்பென கஸாப் தூக்கிலடப்பட்டார். அவரது மரணதண்டனையைவிட அரசாங்கத்திற்கு அவரால் ஏற்பட்ட செலவினங்கள் அதிகமாகப் பேசப்பட்டது.

31. விலாடிமிர் புடின் மூன்றாவது முறையாக ரஷிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

32.  இளையராஜா இன்னமும் ஜோராக இசையமைக்கிறார்.

33.மற்றபடி எல்லாவருடமும் நடக்கும் அநியாயங்கள் அவலங்கள் அலட்சியங்கள் அவமானங்கள் அதிகார அடக்குமுறைகள் தாராளமாகவும் லோக க்ஷேமத்திற்கான காரியங்கள் விரல் விட்டு எண்ணும்படியாகவும் இந்த 2012லும் நடந்தது.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  இந்த 2013ல் பரவலாக நல்ல காரியங்கள் உலகெங்கும் நடந்து எங்கும் சுபச்செய்திகள் பரவ வாழ்த்துகள்.

 படம் cc-chapman.com என்ற இணையத்திலிருந்து எடுத்தது.

Tuesday, December 25, 2012

தொன்னை

சிலகாலத்துக்கு முன்னர் திண்ணைக் கச்சேரி என்று அவியல் பதிவு ஒன்று பத்தி பத்தியாகப் பிரித்து பத்தியுடன் எழுதிவந்தேன். முகப்புத்தகத்தில் தீவிரமாகத் துண்டிலக்கியத் தொண்டாற்றுவதால் இங்கே அதைத் தொடர முடிவதில்லை. திண்ணை எங்கே என்று அவஸ்தைப் பட்டவர்களுக்காக....

**********தொன்னை ************

தனுர் மாச ஞாயிற்றுக்கிழமையில் ஸ்ரீசூர்யபகவான் தன் ரதத்திலேறி புறப்பட்டு புத்தொளி வீசுமுன்னே எழுந்திருந்து பச்சைத் தண்ணீரில் ஸ்நானத்துக்கப்புறம் நித்யானுஷ்டானங்கள் செய்வது மனசுக்குத் திவ்யமாக இருக்கிறது. மார்கழிப் பனியில் ஜில்லென்று நிர்ஜனமாகயிருக்கும் அதிகாலைச் சாலையில் விபூதி மணமணக்க கோயிலுக்குச் செல்வது அதைவிட திவயமாக இருக்கிறது. இதற்கெல்லாம் சிகரமாக இல்லாளுடன் அபிஷேகம் தரிசிப்பது பரம திவ்யமாக இருக்கிறது.

ஆஞ்சு கோயிலுக்குள் நுழையவும் திருக்கதவுகள் திறக்கவும் நேரம் சரியாக இருந்தது. விஸ்வரூப ஆஞ்சநேயர் பட்டுக் கட்டிக்கொண்டிருந்தார். துளசி வாசம் அடித்தது. ”புத்திர்பலம் யசோதைர்யம் நிர்பயத்வம் அரோகதாம்...” என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே நுழைந்தால் கணிசமான அளவில் பனியைப் பொருட்படுத்தாத பக்தர்கள் பாசுரம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

நெற்றிப்பொட்டுகள், தோள்பட்டையும் புஜமும் சேருமிடங்கள், நெஞ்சு, வயிற்றில் மூன்று என்று கண்ணுக்குத் தெரிந்த இடத்திலெல்லாம் கோபியிட்டுக்கொண்டு ஸ்ரீராகவேந்திரர் சொரூபத்தில் மாத்வர் மாமா ஒருவர் வேதம் சொல்லிக்கொண்டிருந்தார். பிரத்தியேகமான மைக்கில். இன்னமும் வெளியே முழு வெளிச்சம் வரவில்லை. விடிகின்ற பொழுதில் ஹனுமானுக்கும் நமக்கும் மந்திரங்களினால் கனெக்ஷன் கொடுத்துக்கொண்டிருந்தார் அவர்.

அரை மணி நேரப் பிரார்த்தனை அரை நொடிப்பொழுதாக கழிந்தது. பிரதக்ஷினத்தையும் தேகப்பயிற்சியையும் ஒரு சேர செய்ய விருப்பட்டவர்கள் வீதிகளில் நடப்பது போல கைகாலை வீசிவீசி அனுமனை வலம் வந்தார்கள். சந்நதிக்குப் பின்புறம் தலையை முட்டி எண்ணெயைச் சுவற்றில் எண்ணெய் ஈஷி இன்னமும் கருப்பாக்கினார்கள். ”புள்ளும் சிலம்பின காண்” என்று கோயில் மாடங்களில் வசிக்கும் புறாக்கள் சடசடத்தன. வைணவக் கோயில்களில் இரண்டு சுற்று பிரதக்ஷினம் கட்டாயம் அனுசரிக்கவேண்டும். அவ்விதிப்படி நிதானமாக 1... 2... வலம் வந்தாயிற்று. வலப்புறம் மனைவியார் பஞ்சாங்க நமஸ்கரிக்க அஷ்டாங்க நமஸ்காரம் அனுமனுக்கு முன்னால் செய்தாயிற்று.

பாசுரம் சொன்ன மாமிகள் கோஷ்டியின் மையத்திலிருந்து ஒரு ஆகிருதியான குரல் “அந்த பச்சக் கலர் டெம்போ நிக்குமே. அதுக்கு பக்கத்தாந்தான் மாமீ... அவசியம் வாங்கோ...” என்று குழுவில் புதியதாய் சேர்ந்த அந்த தீர்க்க சுமங்கலியிடம் அட்ரஸாக ஒலித்தது. சிறிய துவாரங்களுடைய பெட்டியில் துழாவி தாழம்பூ குங்குமம் இட்டுக்கொண்டோம். இப்போது ஆஞ்சு கோயிலின் மிக முக்கியமானக் கட்டத்திற்கு வந்தோம். பிரசாதம் விநியோகிக்குமிடம்.

ஆவிபறக்கும் வெண்பொங்கல் சூடு தாங்காமல் இரண்டிரண்டு தொன்னைகளினால் ஆளுயரக் கலயத்திலிருந்து வழித்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சமீபத்தில் அனுமார் கோயிலுக்கு வரும் பக்தர் கூட்டம் அதிகரித்திருந்தது உருவம் இளைத்த அந்த பிரசாத தொன்னையில் தெரிந்தது.

***********சோகம்*************
நித்யஸ்ரீ எனக்கு மிகவும் பிடித்த பாடகி. மைக் செட் அவசியமில்லாமல் ஆயிரம் பேருக்குக் கேட்கும் காத்திரமான குரல். அமிர்தமான குரல்வளத்தை வழங்கிய ஆண்டவனின் அனுக்கிரஹம் ஏனோ அவரது குடும்ப வளத்திற்கு கிடைக்கவில்லை. இந்த மார்கழியில் கம்பீர நாட்டையிலும் தர்பாரிலும் அடானா போட்டுப் பாடவேண்டியவரை முகாரி பாடவைத்த அந்த மஹாதேவனின் திருவிளையாடலை என்னவென்று சொல்ல?

*********கோரம்**********
தில்லிச் சம்பவம் மனதைப் பிசைகிறது. தலைநகரமா தறுதலைநகரமா என்று தெரியவில்லை. இவ்வளவு கொடூரமாக நடந்துகொள்ளத் துணிந்தவர்களை கருப்பையில் சுமந்த தாய்கூட இதை பொறுக்கமாட்டாள். ஒட்ட நறுக்கவேண்டும்.  

******** ஸ்நேகிதம்******* 


 
நேற்றிரவு மெரினாவில் நட்பு அலை அடித்து எல்லோருடைய கால்களையும் நனைத்தது. இதயத்தைக் குளிர்வித்து மெல்ல வருடியது. மேனி மார்கழியால் நடுங்கியதை விட இந்தத் தோழமை கண்டு உணர்ச்சி வயப்பட்டு நடுநடுங்கியது. ”....மூழ்காதே ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப்தான்.....” என்று பச்சக்குழந்தையிலிருந்து பல்லு போன பாட்டிவரை இவர்களைப் பார்த்து நின்று காயர் பாடினார்கள்.

ஆல் இந்தியா ரேடியோ வாசலிலிருந்து ஐ.ஜி ஆஃபீஸ் வரை ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. கலங்கரை விளக்கம் தாண்டிய இருட்டில் திருட்டுத்தனமாக ஒதுங்கியிருந்த காதலர்கள் அலறிப்புடைத்து வெளிச்சத்துக்கு இடம் பெயர்ந்தார்கள்.

மாயன் காலண்டர் மூன்று நாட்களுக்குப் பிறகு வேலை காட்டியதோ என்றஞ்சும்படி நின்ற பொருள் அசையவும் அசையும் பொருள் நிற்கவும் ஒரு வரலாற்று நிகழ்வு பீச்சாங்கரையில் நடந்தேறியது. Enough! Enough!! ஸ்டாப் பில்டப். Dot.

மன்னையில் பள்ளிப் பருவத்து ஸ்நேகிதர்கள் அறுவர் அங்கே தோழமை வாசம் வீச கடற்கரை மணலில் கால் புதைத்து அரட்டையடித்தார்கள். அஃதே. குமரர்களாகப் பழங்கதைகள் பல பேசினார்கள். நெருங்கி வந்த அண்ட்ராயர் பையனின் சுண்டலைத் தின்றால் வாய் மெல்லும் நிமிடங்கள் பேச்சில்லாமல் போய்விடுமே என்று தவிர்த்துவிட்டு ஒரு தவம் போல சுவாரஸ்யமாக மூச்சுவிடாமல் சம்பாஷித்தனர்.

கடற்கரையில் காற்றோடு கரைந்த சில வசனங்களை இங்கே பகிர்கிறேன். பிரசூரித்தால் இல்வாழ்க்கைக்கு ஆபத்தில்லை என்றவைகள் மட்டும் இங்கே..

“டேய். ------யை ஞாபகம் இருக்கா?”

“உன்னோட ரசிகாள்லாம் வாய் பிளந்து அசந்துபோகிற மாதிரி.... இதழில் கதை எழுதும் நேரமிது பாடுவியே..... இன்பங்கள் அழைக்குது...ஆஅ.ஆஅ..ஆஅ..ஆ”

“லீகலா இல்லீகல் ப்ரொஃபஷன் பார்க்கிற லாயர் தானே நீ”

“சொந்தமா நீ கம்பெனி வச்சுக் கிழிச்சதுபோதும்னு சொல்லிட்டாடா வொய்ஃப். ந்யூ இயர்லேர்ந்து லன்ச் கட்டிக்கிட்டு வேலைக்கு...”

”முதன்மை விஞ்ஞானிக்குதான் எப்பவுமே முதல் மரியாதை”

”பில்கேட்ஸே உங்கிட்ட உத்தரவு வாங்கிண்டுதான் பாட்ச் ரிலீஸ் பண்றாராமே”

”நீதான் காக்னியில கிங்காமேப்பா..ஊர்ல பேசிக்கிறாங்க...”

“உங்க வீட்டுப் புது வீஸியாருக்குப் பூஜை போட்டது நியாபகமிருக்கா?”

ஒவ்வொருவருக்குள்ளும் உன்னதமான யதார்த்த சினிமா எடுப்பதற்கான லட்சம் சங்கதிகள் சுருள் சுருளாய் குவிந்து கிடந்தன.

ஒருவர் புகழை மற்றவர் பேச இனித்திருந்த அத்தருணம் இன்னும் நீளாதா என்றென்னும் போதே ஒவ்வொருவரின் அலைபேசியும் வங்கக் கடலலையின் ஓசையைக்காட்டிலும் ஆர்ப்பரித்து அவர்களின் மனைவியர் கடிவாளத்தை இழுக்கிறார்கள் என்று தெரிவித்தது. ”ம்.. வந்துட்டேம்மா..” என்று ஈனஸ்ருதியில் பொட்டிப்பாம்பாக அடங்கி பவ்யமாகப் பதிலுரைத்தார்கள்.

பசித்தது. ந்யூ உட்லண்ட்ஸ் உணவகத்தில் ஒரே தள்ளுமுள்ளு. இன்னும் லேட்டாகப் போனால் வீட்டிற்குள் காலை வைக்க முடியாதே என்ற எங்கள் பதபதைப்புத் தெரியாத சூப்பர்வைசரிடம் மன்றாடி டேபிள் பிடித்து டின்னர் முடித்தோம்.

சர்வலோகத்திற்கும் ஜன்னல் கொடுத்து கம்ப்யூட்டரும் கையுமாக ஆசீர்வதித்த கம்பெனியிலிருந்து கடல் கடந்து பறந்துவந்திருந்த தோழன் இம்மானுட வாழ்வின் இன்றியமையாத முதலிரண்டு ஐட்டத்தைக் கொடுத்து கௌரவித்தான்.

சாப்பாட்டுக்கு பில்லும் ஆளுக்கொரு டீஷர்ட் கொடுத்ததையும் இப்படி எழுதியதால் மூன்றாவதையே அடுத்த முறை வாங்கித்தருவான் என்ற நம்பிக்கையில் வீட்டிற்கு பறந்து படுக்கையில் விழுந்த பின்னரும் அழகழகான வீதிகளுடன் மன்னார்குடியும், நேஷனல் ஸ்கூலும், ராஜவீதியும், மூன்றாம் தெருவும், சோமேஸ்வரைய்யா வைத்தியசாலையும், முதல் தெருவும், சங்கரா கம்ப்யூட்டர்ஸும், பள்ளிகால சேஷ்டைகளும் கண்களுக்குள் கருப்பு வெள்ளையில் ஃப்ளாஷ் அடித்தன.

ஆட்டோகிராஃப் சேரன் போல படுத்துக்கொண்டே சைக்கிள் ஓட்டினேன்.
 

Monday, December 17, 2012

கந்தன் கலைதெரி கழகம்


க.க.க என்று கம்பனால் பெயர்சூட்டப்பட்ட இந்தக் கட்சி எது என்பது பற்றிய செய்தி உள்ளே.

இக்கால மானுடர்களுக்கு பிரதான பொழுதுபோக்குகள் எவையெவை என்று பட்டியல் தயாரிக்கச் சொன்னால் பளிச்சென்று ஞாபகத்துக்கு வருவது ஒழுக்கக்கேடான சீரியல்களைப் பார்த்து கேவிக்கேவி அழுவது, சூப்பர் சிங்கரில் அம்மாக்கள் கசிந்துருகுவதைப் பார்த்துக் கண்ணீர் சிந்துவது, இருபத்துநான்கு மணிநேரமும் ”ஸ்டே ட்யூன்டு” என்று கதறும் ஆர்ஜேக்கள் குரலுக்கு மத்தியில் சினிமாப் பாடல்களைக் கேட்பது,  பன்ச் டயலாக் பேச்சுகளைக் காது குளிரக் கேட்டு விசிலடித்துச் சினிமாப் பார்ப்பது, பச்சைத் தண்ணீர்கூட குடிக்காமல் எவ்விடத்திலும் பௌதீகமாகவோ வர்ச்சுவலாகவோ உட்கார்ந்து ஊர் வம்பு பேசுவது என்று ஒரு யானை லிஸ்ட் தயார் செய்யலாம். கோசலநாட்டின் இயற்கை எழிலைப் படம் பிடித்துக் காண்பித்த கம்பன் பின்னர் அந்நாட்டு மக்களின் பொழுதுபோக்குகளை ஐந்து பாடல்களில் கவிப் பட்டியலிடுகிறான். இது முன்னால் இது பின்னால் என்ற வரிசையில் இல்லாவிட்டாலும் நாமும் பட்டியலிடுவோம்.

1. பாரத் மேட்ரிமோனி மற்றும் கல்யாண மாலை போன்ற திருமணச் சேவைபுரியும் திருக்கம்பெனிகள் இல்லாத காலகட்டத்தில் கூட குணவிசேஷங்கள் பொருந்திய அந்தஸ்திலும் ஆஸ்தியிலும் சரிநிகர் சமானமான ஆணும் பெண்ணும் இணைந்துக் கல்யாணச் சடங்குகளில் ஈடுபடுவார்களாம். இன்னார்க்கு இன்னார் விதி சரியாகச் செயல்பட்ட காலம் போலும்.

2. ஆகாயத்தில் வட்டமிடும் பருந்தின் நிழல் எப்படி அது செல்லுமிடமெல்லாம் அதைவிட்டுப் பிரியாமல் தொடருமோ அதைப்போன்று இயலும் இசையும் சாகித்யமும் சங்கீதமும் இணைந்திருக்கும் பாட்டுக் கச்சேரிகளைக் கேட்டு இன்புறுவார்கள்.

3. தங்களுடைய வாழ்வியலுக்கு அருமருந்தைவிட இனியதாக இருக்கும் அர்த்தம் பொதிந்த சொற்பொழிவுகளைக் காதால் அருந்துவார்கள். அமிர்தத்தை அருமருந்து என்கிறார் கம்பர். மாந்துவது என்றால் சாதரணமாகக் கேட்டல் பருகுதல் என்ற அர்த்தத்தில் தொனிக்கும் அர்த்தமல்ல. ஆராய்ந்து அனுபவித்து உணர்ந்து கேட்பதே மாந்துதல்.

4. வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரித்து விருந்தளித்து மகிழ்வார்களாம். சாதாரணமாக இல்லை ஒரு அன்ன விழா போன்று விமர்சையாக விருந்துக்கு விழா எடுப்பார்களாம். அந்தக் காலத்தில் ஒருவருடைய செல்வச்செழிப்பு அவர்கள் வீட்டு வாசலில் வந்து விழும் எச்சிலிலைகளின் எண்ணிக்கையை வைத்து அளக்கப்படும் என்று பொதுவாகச் சொல்வார்கள். ஒருவனால் எவ்வளவு பேருக்கு விருந்திட இயலுமோ அந்தளவிற்கு அவன் செல்வம் படைத்தவன் ஆவான்.

அந்தப் பாடலை இங்கே தருகிறேன்.
    பொருந்திய மகளிரோடு வதுவையில்
        பொருந்துவாரும்
    பருந்தொடு நிழல் சென்று அன்ன இயல் இசைப்
        பயன் துய்ப்பாரும்
    மருந்தினும் இனிய கேள்வி செவி உற
        மாந்துவாரும்
    விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணி
        விரும்புவாரும்
கறுப்புறு மனமும், கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி” என்று தொடங்கும் பாடலில் சேவற்போர் பற்றிக் குறிப்பிடுகிறார் கம்பர். வெற்றிமாறனின் அவார்டு படத்தில் தனுஷ் கம்பன் கண்ட கோசலநாட்டு மக்களில் ஒருவனாக வாழ்ந்துள்ளார் என்று விளம்பரப்படுத்தியிருக்கலாம். கறுப்பும் சிவப்பும் கோபத்தைக் குறிக்கும் சொற்களாகவே கம்பர் எடுத்தாண்டிருக்கிறார். “கறுப்பும் சிவப்பும் வெகுளிப்பொருளே” என்று தொல்காப்பியத்தில் வருகிறது. பூங்கா எழுதியவருக்கும் இது தெரிந்துதான் கொடி தேர்ந்தெடுத்திருக்கிறார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போல எருமைப் போர் என்றொரு இன்னொரு கேட்டகரி வீர விளையாட்டுகளையும் பொழுதுபோக்காக நிகழ்த்தியுள்ளனர்.

இப்படலத்தில் நம்மைக் கவரும் இன்னொரு முக்கியமான பாடல் விருந்தோம்பல் பற்றியது. அன்னவிழா எடுப்பார்கள் என்று கொஞ்ச நேரத்திற்கு முன்னர் ஒரு வரியில் சொன்ன கம்பர் இப்போது அந்த விழாவை ஒரு பாடலாகப் பாடி மகிழ்கிறார். அந்தப் பாடல்.
    முந்து முக் கனியின் நானா முதிரையின்
        முழுத்த நெய்யின்
    செந் தயிர்க் கண்டம் கண்டம் இடையிடை
        செறிந்த சோற்றின்
    தம்தம் இல் இருந்து தாமும் விருந்தொடும்
        தமரினோடும்
    அந்தணர் அமுதர் உண்டி அயிறலும்
        அமலைத்து எங்கும்.
மா, பலா, வாழை போன்ற முக்கனிகளையும், அவரை துவரை பயறு போன்ற பலவகைப்பட்ட பருப்புகளையும் (முதிரை) நல்ல நெய்யில் ஊறவைத்துப் பரிமாறி  கட்டிக் கட்டியான செந்தயிருக்கு மத்தியில் வெல்லம்(கண்டம்) முதலியனவற்றோடு சோறும் சேர்த்துப் பரிமாறி அந்தணர், தேவர், அப்போதுதான் கண்ட விருந்தினர்கள் என்று அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்வர். அவ்விருந்தின் ஓசை(அமலை) அத்தெருவெங்கும் கேட்குமாம். விருந்துக்கு என்ன ஓசை வந்துவிட முடியும். தக்காளி ரசத்தை சர்புர்ரென்று உறிஞ்சும் ஓசையா? விருந்தினர்களை முகமன் கூறி உபசரித்தலும் அவர்களின் நலம் விசாரிப்பதிலும் விருந்தில் மகிழ்ந்த அவர்களது ஆசியும் அந்த ஓசையில் அடங்குமே. திருப்பாவையில் நெய்யைப் பற்றிய குறிப்பை ”பாற்சோறுமூட நெய்பெய்து, முழங்கைவழிவாரக், கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்” என்று ஆண்டாள் பாடுகிறாள்.

இதில் செந்தயிர் என்பது என்னுடைய பெட் சப்ஜெக்ட். ஒரு காலத்தில் தயிரில்லாமல் எதுவும் சாப்பிடத்தெரியாத தயிர் அடிக்ட் ஜென்மம் இது. கட்டிக் கட்டியாக தயிர் உறையவைக்க ஒரு கிச்சன் ரகசியம் சொல்கிறேன். செந்தயிர் என்பது நன்றாகக் காய்ச்சிய பாலில் உறை ஊற்றுவது. உறை எல்லோரும் ஊற்றுவதுதான், ஆனால் அது எப்படி பாறையாக உறையும். காய்ச்சிய பாலை சமையற்கட்டில் ஓரிடத்தில் எடுத்துவைத்துவிட்டு, கொஞ்சூண்டு தயிரை எடுத்து உறை ஊற்றுவதுn எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் கட்டித்தயிர் நிறைய பேருக்கு வாய்க்காத ஒன்று. கட்டித்தயிர் வேண்டுமென்றால் உறை ஊற்றிய பாத்திரத்தை அசைக்கக்கூடாது. அதைத் தொடாமல் விட்டோமேயானால் கரண்டியில் எடுத்து அடுத்தவர் கண்ணத்தில் அடிக்குமளவிற்கு கெட்டியான தயிருக்கு நான் உத்திரவாதம்.

இப்படி வீடுகளில் மட்டும் விருந்தளிப்பதில்லாமல் அன்னசாலைகளும் மிகுந்திருந்ததாகச் சொல்கிறார் கம்பர். அரிசிக்குவை (குவியல்), கறிக் குப்பை(குவியல்), போன்றவை அந்நாட்டில் வருவோர்கெல்லாம் ஊட்டிடத்தில் கிடைக்குமாம். அன்ன சத்திரத்தை ”கோட்டம் இல் ஊட்டிடம் தோறெலாம்” என்ற அற்புதமான சொல்லாட்சியின் மூலம் ஒரு தாயின் பரிவோடு ஊட்டுவதைப் போன்ற கலாச்சாரம் மிக்க அன்னசாலைகள் என்கிறார் கம்பர். இப்போது காசு கொடுத்துப் பசியாறும் உயர் தர சைவ உணவகங்களிலேயே சர்வர் சாதத்தை ஜேஸிபி போல இலையில் தள்ளுவதும், தொட்டுக்க ஒரு காய் வேண்டுமென்றால் நான்கு முறை ”வாழக்கா போடுங்க” என்று அழைத்து கைகாய்ந்து உண்பதும் வழக்காகிவிட்டது. அன்ன சத்திரங்களை கேரளாவில் “ஊட்டுப்புரை” என்றுதான் வழங்குகிறார்கள் என்பது கூடுதல் மலையாளத் தகவல்.

ஆடவரும் மகளிரும் பல கலைகளைப் பயிலும் இடங்களையும் பந்தாடுமிடங்களைப் பற்றிய வர்ணனைகளும் பந்தாவாக இருக்கிறது.
பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தரெி கழகம்
சந்தனம் வனம் அல சண்பகம் வனம் ஆம்;
நந்தன வனம் அல நறை விரி புறவம்
இளையவர்களான பெண்டிர் பந்தாடும் இடங்கள் சந்தனக்காடாக இருந்தாலும் அவர்களது மேனியிலிருந்து வீசும் சண்பகம மணத்தால் சண்பக வனமானதாம். முருகனையொத்த காளையர்கள் வில் முதலினவற்றை கற்கும் பயிற்சியில் ஈடுபடும் பல மலர்கள் பூத்துக்குலுங்கும் நந்தவனங்கள் ஆயினும் அவர் தம் மேனியிலிருந்து எழும் முல்லை மணத்தால் முல்லைக்காடானதாம். ஆடவர்க்கு முல்லையும் பெண்களுக்கு சண்பகமும் வாசனையாகக் கூறுவது கவிமரபு. இதில் நாம் உற்று நோக்கவேண்டிய இடம் கழகம். கலைகள் பழகும் இடம் கழகம் எனப்படும். கந்தனையொத்வர்களுக்கு பயிற்சியளிக்க கலைதெரி கழகம் என்று பயிற்சிக்கூடம் ஏற்படுத்தி வீரக்கலைகளைப் பயிற்றுவித்தார்கள். இன்றும் இந்நாட்டில் கழகங்களுக்கு மலிவில்லை என்பதையும் எவ்வளவு வீரதீரச்செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதையும் நாமறிவோம் பராபரமே!

வண்டு மயங்கும் வடிவழகைப் பெற்ற மருதநிலத்துப் பெண்டிரைப் பற்றியும் ஆய்ச்சியர்கள் தயிர் கடைதலைப் பற்றியும் மொத்தமாக பெண்களின் மாண்புகளைப் பற்றியும் பலவாறாக கவிவடிக்கிறார் கம்பர். ஆய்ச்சியர்கள் கெட்டித் தயிரை வெண்ணையெடுப்பதற்காகக் கடையும் போது அவர்களது நுண்ணிடை தேய வெண் சங்கு வளையல்கள் ”ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்” கதறுகின்றனவாம்.
    பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து
    உருவ உண்கணை ஒண் பெடை ஆம் எனக்
    கருதி அன்பொடு காமுற்று வைகலும்
    மருத வேலியின் வைகின வண்டு அரோ.
தாமரை போன்ற முகம் படைத்த பெண்களின் மை எழுதிய கண்கள் தங்களுடைய ஒளிபொருந்திய பெண் வண்டுகள்(ஒண்பெடை) என்று நினைத்து ஆண் வண்டுகள் நாள்தொறும் முப்பொழுதும் மருதத்திலேயே டெண்ட் அடித்து தங்கினவாம். கோசலநாட்டுப் பெண்கள் அறிவிலும், ஆற்றலிலும், விருந்தோம்பலிலும் சிறந்து திகழ்ந்தார்கள் என்று ஒரு பாடலில் புகழ்கிறான். பெண்கல்வியைப் பற்றி இப்போது வாய்கிழிய வலியுறுத்தும் நமக்கு அக்காலத்திலேயே பெண்கள் கல்விகேள்விகளில் மேம்பட்டிருந்தார்கள் என்று கீழ்க்கண்ட பாடலிலிருந்து புலனாகிறது.
    பெரும் தடம் கண் பிறை நுதலார்க்கு எலாம்
    பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
    வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
    விருந்தும் அன்றி விழைவன யாவையே.
பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையும் பெரிய கண்களையும் உடைய மகளிர்க்கு செல்வமும் கல்வியும் நிறைந்திருந்தது. ஆனாலும் கல்விச் செருக்கின்றி பசியால் வருந்தி வந்தவர்களுக்கு அனுதினமும் விருந்தோம்புதலும் அவர்களது ஈகைக் குணத்தையும் மட்டுமே பெரிதாக அடையாளம் காட்டி வாழ்ந்தார்கள் என்று அவர்களின் மாண்புகளை பட்டியலிடுகிறார் கம்பர். மேலும் அந்நாட்டுப் பெண்களின் அழகைச் சொல்லும் ஒரு பாடலில் நம்மையெல்லாம் அசத்திவிடுகிறான் கவிச்சக்கரவர்த்தி. கண்ணதாசன் போன்று சினிமாப்பாட்டெழுதிய மற்றும் எழுதும் நிறைய பேருக்கு கவிச்செல்வம் வாரித்தந்த வள்ளல் அவன் என்று அடையாளம் காட்டும் ஒரு பாடல்.
    விதியினை நகுவன அயில் விழி; பிடியின்
    கதியினை நகுவன அவர்நடை; கமலப்
    பொதியினை நகுவன புணர் முலை; கலை வாழ்
    மதியினை நகுவன வனிதையர் வதனம்.
நகுவன என்றால் பழிப்பன என்று அர்த்தம். பெண்களுக்கு உவமையாகக் கூற வேண்டிய அனைத்தையும் வரிசைப்படுத்தி கோசலத்துப் பெண்டிரின் அங்க அவயங்கள் அந்த உவமைக்குச் சொல்லப்படுபவைகளைப் பழிக்கிறது என்று புகழேற்றிப் பாடுகிறான். என்னென்ன சொல்கிறான் என்று பார்ப்போம். படைக்கும் பிரம்மனை(விதி) பழிக்கிறதாம் அயில் விழி அதாவது வேல் போன்ற விழி, பெண் யானையின் நடையினைப் பழிக்கிறதாம் அவர்களின் நடை, தாமரை மலரின் மொட்டைப் பழிக்கிறதாம் அவர்தம் முலைகள். புணர் முலை என்றால் அடர்த்தியாக நெருங்கிய ஸ்தனங்கள் என்கிறார். இதில் பழிப்பது எங்கு வருகிறது என்றால் தாமரை மலர் ஏழேழு நாட்களுக்கு ஒருமுறை குவிந்தும் விரிந்தும் அதன் நிலையழிந்து காணப்படுமாம் ஆனால் அதற்கு சவால்விடுவது போல இருந்ததாம் கோசலநாட்டுப் பெண்டிரின் எப்போதும் குவிந்திருக்கும் ஸ்தனங்கள். சந்திரன் 15 நாட்களுக்கு ஒருமுறை உருமாறுவான் ஆனால் கோசலத்து வனிதையரின் முகம் அதைப் பழிப்பது போன்று எப்போதும் பூரண நிலவாக ஜொலிக்கிறதாம்.

இவ்வளவு சொக்கவைக்கும் அழகினால் அடித்துப்போடும் பெண்டிர்கள் கோசல நாட்டில் வாழ்ந்தும் இக்காவியத்தின் முதல் பாடலிலேயே நெறியின் புறம்செலாக் கோசலம் என்று கம்பன் புகழ்கிறான் என்றால் அந்நாட்டில் தசரத இராமனுடன் வசித்த சகஇராமர்கள் எவ்வளவு பேர் என்று வியக்கவைக்கிறது கம்பராமாயணம்.

நல்லோர் மிகுந்த கோசல நாடு எத்தகைய பெருமையுடைத்தது என்பதை ஒரு பாடலில் விவரிக்கிறான் கம்பன். எதுகையும் மோனையும் துள்ளிவிளையாடும் அந்தப் பாடலிங்கே.
    வண்மை இல்லை, ஓர்
        வறுமை இன்மையால்;
    திண்மை இல்லை, நேர்
        செறுநர் இன்மையால்;
    உண்மை இல்லை, பொய்
        உரை இலாமையால்;
    வெண்மை இல்லை, பல்
        கேள்வி மேவலால்.
அந்நாட்டில் வள்ளல்தன்மையைக் காணமுடியாதாம், ஏனென்றால் வறுமை என்று பிச்சையெடுப்பதற்கு ஆளில்லாதலால். அந்நாட்டினரின் வலிமையை அறிந்துகொள்ளவே முடியாதாம் ஏனென்றால் கோசலத்தை எதிர்த்துப் போர்புரிய யாரும் முன்வராததால், உண்மை உரைப்பவர்கள் இவர்கள்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாதவாறு எல்லோரும் பொய்யுரைப்பதேயில்லாதவர்கள். அதனால் உண்மை இல்லை. எல்லோரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதால் குறிப்பிட்ட சிலரை மட்டும் எடுத்துக்காட்டாக வெண்மையெனும் வெள்ளையறிவு பெற்ற வித்வான்கள் என்று சொல்லமுடியாதாம். வெண்மை இல்லாமை. எல்லோருமே ஒழுக்கசீலர்களாகவும் புத்திஜீவிகளாகவுமிருக்கும் ஒரு நாடு அடச்சே என்று போரடித்துவிடாது என்று நீங்கள் மனக்கண்ணில் நினைப்பது இங்கெ தெரிகிறது. கவிதைக்கு பொய்யழகு எனலாம் அல்லது த்ரேதா யுகத்தில் மக்கள் அப்படியும் ஒழுக்கமாக குடித்தனம் நடத்தியிருக்கலாம் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு ஒத்துக்கொள்ளலாம்.

இத்தகைய சால்புகள் நிறைந்த நாட்டில் எப்படி வளம் கொழிக்காமல் இருக்கும். எப்படியெல்லாம் வளங்கள் சுரந்தன என்று கம்பன் எழுகிறான் பாருங்கள்.
    கலம் சுரக்கும் நிதியம்; கணக்கிலா
    நிலம் சுரக்கும் நிறை வளம்; நல் மணி
    பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
    குலம் சுரக்கும் ஒழுக்கம்; குடிக்கு எலாம்.
சுரத்தலென்றால் கொள்ளக் கொள்ள குறையாதது. கோசலத்தின் வளங்கள் எடுக்க எடுக்க வற்றாமல் சுரக்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக கூறுபவைகளைக் கவனிப்போம். கப்பல் கப்பலாக செல்வம் பெருகிறதாம். எப்படியென்றால் கணக்கில்லாத நிலவளத்தினால் கிடைத்ததை ஏற்றுமதி செய்து அதனால் நாட்டிற்கு வந்து சேரும் செல்வம் கப்பல் கொள்ளாமல் வருகிறதாம். கோசலத்தில் ஏது கடல்? ஏது கப்பல்? தமிழ்நாட்டை கோசலமாக பாவித்து கம்பன் எழுதிய கவியிது. பெரிய பெரிய மாணிக்கங்களை சுரக்கிறதாம் சுரங்கங்கள்.(பிலம்).தோண்டத் தோண்ட மாணிக்கங்கள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல எக்குலத்தில் பிறந்தவர்களெல்லோருக்கும் ஒழுக்கம் என்பது சுரந்து அந்த நாடை வளமைப்படுத்துகிறது என்று வர்ணிக்கிறார். கலம், நிலம், பிலம், குலம் என்று அணி வகுக்கும் லம்கள் இப்பாடலுக்கு பலம்.

மக்களின் மாண்புகளும் செல்வச்செழிப்பும் மிகுந்து சுபிட்சமாக இருக்கும் நாட்டில் வீதிதோறும் வாய்ப்பாட்டும், குழலின் ஓசையும் தனிதனியாக எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும். பாட்டும் இசை விருந்திற்கும் என்ன காரணம்? ஏதேனும் வைபவங்களோ அல்லது திருமணம் போன்ற மங்கலநிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதால் இக்கச்சேரிகள் களைகட்டும். இதைப் பார்க்க மக்கள் கூட்டம் வெள்ளமெனத் திரண்டு வருமாம். அதைக்காண எப்படியிருக்குமென்றால் வீதிகளில் இரண்டு ஆறுகள் இருபுறமும் திரண்டு வந்து எதிரெதிராய் கலந்தது போல என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார்.

இப்படி சந்துஷ்டியான அத்தேசத்தில் இயற்கையின் இசைக்கச்சேரியை ஒரு காட்சியாகப் படம் பிடிக்கிறார் கம்பர்.
    தினைச் சிலம்புவ தீம் சொல் இளம் கிளி;
    நனைச் சிலம்புவ நாகு இள வண்டு; பூம்
    புனைச் சிலம்புவ புள் இனம்; வள்ளியோர்
    மனைச் சிலம்புவ மங்கல வள்ளையே
சிலம்புவ என்றால் ஒலிப்பது. தினைப்புனங்களில் இனிய மொழியுள்ள இளம் கிளிகள் பாடிக்கொண்டிருக்கும், மலர் அரும்புகளின் மேல் மிகவும் இளமையான வண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும், நீர்நிலைகளின் மேல் பறவையினங்கள் க்ரீச்சொலிகள் கேட்கும், வள்ளல்தன்மை உடையோர்களின் வீடுகளில் மங்கல பாடல்கள் இசைத்துக்கொண்டிருப்பார்கள்.

கோசலநாட்டின் பரப்பளவு எவ்வளவு இருக்கும் என்று படிப்பவர்க்கு ஒரு சேதி சொல்கிறார் கம்பர். பல கால்வாய்களைக் கால்களைப் போல உடைய சரயு நதி மூலைமுடுக்கெல்லாம் பாய்ந்து கோசலத்தின் எல்லையைக் காண முயன்றும் இயலாத போது இருகால் கொண்ட நமக்கு எப்படி அதன் எல்லையைக் காண இயலும் என்று கேட்கிறார்.

நாட்டுப்படலத்தின் இறுதிப்பாடலாக கோசலத்தைப் பற்றிய ஒரு உயரியக் குறிப்பைக் கொடுத்துவிட்டுப் போகிறான் கம்பன்.
    வீடு சேர நீர் வேலை கால் மடுத்து
    ஊடு பேரினும் உலைவு இலா நலம்
    கூடு கோசலம் என்னும் கோது இலா
    நாடு கூறினாம். நகரம் கூறுவாம்.
ஊழிக்காலத்தில் கடலை விட்டு வந்த நீரும் காற்றும் அடிக்கும்போதும் தான் அழியாத குற்றமற்ற சிறப்புடைய கோசலத்தை இதுவரை பார்த்தோம். இனிமேல் அயோத்தி மாநகரத்தைப் பற்றிக் கூறுகிறேன்.

எ.பி.சொ: அன்ன விழா, பங்கய வாள் முகம், முட்டில் அட்டில்(தட்டுப்பாடில்லாத சமையகட்டில்), திஞ்சொல் இளங்கிளி, பொன்விரி புன்னைகள், பெருந்தடங்கண் பிறைநுதலார், ஊட்டிடம், குங்குமத் தோள்கள், இமையவர் உலகம்

#நாட்டுப்படலத்தில் அமிர்தமாக நிறைய எதுகை மோனைப் பாடல்கள் உள்ளது. எதையெடுப்பது எதை விடுப்பது என்ற இலக்கிய மயக்கத்தில் எனக்குத் தெரி(ளி)ந்த வரையில் ஆங்காங்கே தெரிவு செய்து சிலவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன். அடுத்து அயோத்தி மாநகரத்தில் நகரப்படலத்தில் சந்திப்போம்.

Wednesday, December 12, 2012

பல்பு

"ஹலோ சுந்தரா?”

“ஆமாங்க.. சுந்தர்தான் பேசறேன்”

“இன்னிக்கி சாயந்திரம் கொஞ்சம் நேப்பியர் பிரிட்ஜ்ஜாண்ட வரமுடியுமா?”

“நீங்க யாரு? நா ஏன் அங்க வரணும்?”

“நேத்திக்கு சாயந்திரம் காந்தி சிலையாண்ட உங்களோட பர்ஸ் தொலைஞ்சு போச்சுல்ல”

“ஐயய்யோ! ஆமாங்க. போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுத்துருக்கேன்”

“போலீஸ்லாம் எதுக்குங்க? நான் தான் கண்டுபிடிச்சிட்டேன்ல. சாயந்திரமா வந்து வாங்கிக்கோங்க”

“சரிங்க..”

“சரியா வந்துடுங்க.. வச்சிடட்டுமா?”

“ஹலோ... ஹலோ... இருங்க... .இருங்க.. இருங்க... நீங்க யாரு? எப்படி இருப்பீங்க.. அடையாளம் எதுவும் சொல்லாம ஃபோனைக் கட் பண்ணினா நேப்பியர் பிரிட்ஜ் கிட்ட வந்து உங்களை எப்படி பார்க்க முடியும்”

“உசரமா, POLICE னு முதுகில எழுதின ரெட் டீ ஷர்ட், முட்டியில கிளிஞ்ச ப்ளூ ஜீன்ஸ் போட்ருப்பேன். கண்ணுக்கு கூலிங்கிளாஸ் மாட்டியிருப்பேன்.”

“சரிங்க.. வந்துடறேன்... ரொம்ப தேங்க்ஸ்...”

”வாங்க.. சரியா 6 மணிக்கு வந்துடுங்க.. எனக்கு நிறையா வேலையிருக்கு...அப்புறம் கிளம்பிட்டேன்னா வருத்தப்படாதீங்க..”

******

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸுங்க..”

“ச்சே..ச்சே.. பரவாயில்லை.. எல்லாம் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க..”

“ம்..ம்.. இருக்குங்க.. உங்களுக்கு தங்கமான மனசுங்க...”

“பாராட்டறது இருக்கட்டும். உங்களோட கேஷ், கார்டு எல்லாம் இருக்கான்னு பார்த்துக்கோங்க.. உதவி பண்ணப்போயி அப்புறம் பொல்லாப்பாயிடப்போவுது...”

“5000 கேஷ் வச்சுருந்தேன். அடுக்கியிருந்தபடி அப்படியே இருக்கு. சிட்டிபேங்க் கிரெடிட் கார்டு வச்சுருந்தேன். அதுவும் இருக்கு. பான் கார்டு.. ட்ரைவிங் லைசென்ஸ்.. எல்லாமே இருக்கு...”

”ஓ.கேங்க.. நான் கிளம்பறேன்..”

“இருங்க சார். இந்த கலியுகத்துல இது மாதிரி யார் சார் ஹெல்ப் பண்ணுவாங்க.. இந்தாங்க என்னோட அன்பளிப்பா இதப் பிடிங்க”

“ச்சே.,.ச்சே.. இதெல்லாம் வேணாம்.”

“பரவாயில்லை வாங்கிக்கோங்க..”

“இல்லீங்க.. 500 ரூபாயெல்லாம் வேண்டாங்க..”

“அப்ப.. இந்தாங்க 1000”

“அடடா... வேண்ட்டங்க.. ப்ளீஸ்”

“அட... புடிங்க சார்.. உங்களுக்கு இந்தப் பணத்த கையில வாங்க கூச்சமாயிருக்கு போலருக்கு... நானே சர்ட் பாக்கெட்ல திணிச்சுடறேன்.. நன்றி சார்.,... ”

*****

“நேத்து ஒரு உத்தமமான மனுஷனப் பார்த்தேன்டா சேகர்!”

“யாரது?”

“என்னோட பர்ஸ் தொலைஞ்சு போச்சுன்னு சொன்னேன்ல.. அது கிடைச்சிடுச்சு”

“எப்படி?”

“சொன்னேனே அந்த உத்தமன்... அவன் ஃபோன் பண்ணிக் கூப்பிட்டுக் குடுத்தாண்டா. இந்த மாதிரி சிலபேர் வாழறதுனாலதான் சென்னையில மழை பெய்யுது”

“ஆச்சரியமா இருக்கே! எப்படி உன்னுதுன்னு கண்டுபிடிச்சான்”

“பர்ஸ்ல என்னோட விஸிடிங் கார்டு இருந்தது. அதப் பார்த்துட்டுக் கூப்பிட்டுக்கான்”

“ம்... இண்டெரெஸ்டிங். என்ன சொன்னான்? எங்க கூப்பிட்டான்.. ”

“நேத்திக்கு காந்தி சிலையாண்ட பர்ஸை தொலைச்சீங்கல்ல.. நா கண்டுபிடிச்சிட்டேன். நேப்பியர் பிரிட்ஜான்ட்ட வந்து வாங்கிக்கோங்கன்னான்..”

“ம்... அப்புறம்?”

“போய் பார்த்தேன். ஒண்ணுமே வேண்டாம்ட்டு பர்ஸை எங்கிட்ட குடுத்துட்டு கிளம்பினாரு. நாந்தான் வலுக்கட்டாயமா ஒரு ஆயிரம் ரூபா குடுத்தேன். அதுகூட கையால வாங்கமாட்டேன்னுட்டாரு. சர்ட் பாக்கெட்ல திணிச்சு அனுப்பிச்சேன். இந்த மாதிரி ஆளையெல்லாம் நாம என்கரேஜ் பண்ணணும். என்ன சொல்றே”

”திருடனை என்கரேஜ் பண்ணனுமா? போடாங்......”

“என்னடா இப்படி சொல்றே..எப்படி திருடன்றே...”

”அப்புறம்... உன் கிட்ட என்ன சொல்லி வரச்சொன்னான்?”

“காந்தி சிலையாண்ட........ நேத்திக்கி.......... நீங்க......... பர்ஸை..........”

“ம்...ம்.....”

“டேய்... அப்படீன்னா....நா ஏமாந்துட்டேனா....”

“நல்லா பல்ப் வாங்கியிருக்கே... மொதநாள் இல்லீகலா உங்கிட்டேயிருந்து பர்ஸை அடிச்சுட்டு.. மறுநாள் லீகலா ஆயிரம் ரூபா வாங்கி திருட்டுல புரட்சி பண்ணியிருக்கான்டா அவன்.. தி கிரேட் தீஃப்...”

Friday, December 7, 2012

மன்னார்குடி டேஸ் - வெள்ளரிப் பிஞ்சு 50 பைசா

சுதர்ஸன் காஃபியில் தான் ஏ க்ளாஸ் காஃபிப்பொடி கிடைக்கும். நேஷனல் ஸ்கூலுக்கு எதிரில் மணமணக்க ஸ்தாபிதமானது அக்கடை. காஃபிக்கொட்டை வறுபடும் வாசனை ஹரித்திராநதியில் எங்களைச் சுண்டி இழுத்து கடைத்தெருவிற்கு கிளம்புவோம். சுதர்ஸனுக்குச் செல்லும் முன் மன்னார்குடி பஜாரின் பர்ட்ஸ் ஐ வ்யூ கிடைக்க ஒரு ஏற்பாடு செய்வோம்.


கருடாழ்வார் மாதிரி உங்களுக்கும் இறக்கை முளைத்து தரையிலிருந்து சடசடத்து வானுயர்ந்த ராஜகோபாலஸ்வாமி கோபுரத்துத் தங்கக் கலசங்களுக்கு இடையில் உட்கார்ந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரியும் ஒரு தலைகீழ் “L" தான் மன்னையின் பிரதான ராஜவீதி கடைத்தெரு. தேரடியில் ஆரம்பித்து பந்தலடியில் சைக்கிளில் சறுக்கிக்கொள்ளாமல் வலதுகைப் பக்கம் திரும்பி ஸ்ரீனிவாசா மெடிக்கல்ஸ் வரை இருப்பவைகளில் ஜவுளி, நாட்டு மருந்து, அனாஸின் விற்கும் அலோபதி, பலப்பம் இன்னபிற எழுது பொருட்கள், மளிகை ஜாமான், குஷ்பூவையும் கலாவையும் கோப்பைக்குள் அடக்கிய இரண்டு ஒயின்ஸ் கடை, பூக்கடை, அரிசிக்கடை, ஹார்ட்டுவேர்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கும்பகோணம் பாத்திரக்கடை, முறுக்குப் புழியற நாழி, ஜுவல்லர்ஸ் நகை நட்டு எல்லாம் கிடைக்கும். சைக்கிளில் துணிப்பையை மாட்டிக்கொண்டு மாசாந்திர சாமான்கள் வாங்கப்போவார்கள். இப்போது போல கையை வீசிக்கொண்டு ப்ளாஸ்டிக் கவர் எதிர்ப்பார்ப்பில் எந்த ஜனமும் கடைத்தெருவுக்குப் போகா!

கடிகாரம் எட்டு அடித்துவிட்டால் ஊர் சப்ஜாடாக அடங்கிவிடும். ”பரவாயில்லை எரியலாம்” என்று இஷ்டப்பட்ட விளக்குகள் தாங்கள் நிற்கும் துருப்பிடித்த இரும்புக் கம்பங்களின் கால்களுக்கு மட்டும் சன்னமான வெளிச்சத்தை சிற்றிழையாக இறைத்துக்கொண்டிருக்கும். சிலதுகள் மின் மின்மினிப் பூச்சியாய் உயிரை விடத் துடித்துக்கொண்டிருக்கும். அரசு டெண்டரின் லட்சணத்தால் அற்பாயுசில் தன்னை மாய்த்துக்கொண்டவைகளும் இதில் அடங்கும்.

போஷகரில்லா ஒன்றிரண்டு நாய்கள் தெருவோரத்தில் “த்தோ..த்தோ..த்தோ“ என்கிற அழைப்புக் குரலுக்காக தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வீடு தேடி உலாத்திக்கொண்டிருக்கும். எங்கள் வீட்டு வாசலிலேயே “சேப்பன்” ரொம்ப நாள் குடியிருந்தான். அவனுக்குத் தினமும் இரவு தயிர்சாதம் உண்டு. தெப்பக்குளக்கரையின் மதகு ஓரத்தில் யாராவது அரையிலிருப்பதை அகஸ்மாத்தாகத் தூக்கிக்கொண்டு சில விநாடிகள் உட்கார்ந்து எழுந்திருப்பார்கள். சரியாக அமாவாசைக் காலங்களில் பலஹீனமாக இருந்த தெருவிளக்குகள் அனைத்தும் பொசுக்கென்று அணைந்து தெருவை ஒட்டுமொத்தமாக இருட்டடிப்பு செய்துவிடும். ”நம்ம தெரு எப்பவுமே ஏகாதேசித் தெருடா” என்று ஆதங்கக் குரலெழுப்புவாள் என் பாட்டி.

“யே! கடத்தெரு போனா சித்த இத வாங்கிண்டுவா” என்று அக்கம்பக்கம் ”சித்த இத..” “சித்த இத” என்று இழுத்து இழுத்துச் சொன்ன லிஸ்ட் ஸகிதமாக ஏழு மணி வாக்கில் நானும் சித்தியும் காஃபிப்பொடியும் இன்ன பிற சாமான்களும் வாங்கக் கடைத்தெருவிற்குப் புறப்படுவோம். சங்கிலியின் இரு வளையங்கள் இணைந்திருப்பதைப் போல பவானி சித்தியின் கையோடு கையை நுழைத்துக்கொண்டு சாமான்கள் வாங்கப் போவேன். அரை நிஜார் வயசு. கடைத்தெரு போனா வாய்க்கு என்ன கிடைக்கும் என்று அலைபாயும் மனசு. ஃபயர் சர்வீஸ் தாண்டும்போதே தாலுக்காஃபீஸ் ரோடு முனையில் தள்ளுவண்டி கடலைக்காரர் இருக்கிறாரா என்று காற்றில் ஆடும் காடா விளக்கைக் கண்கள் தேடும். “டொட்டொய்ங்..டொய்ங்..” என்று இரும்புச் சட்டியில் மணியடித்து தன்னுடைய இருப்பை சத்தமாகக் கொரிப்பவர்களுக்கு அறிவிப்பார். மன்னையின் காவிரி மணலோடு சேர்த்து வறுத்த கடலைக்கு ருஜி அதிகம். கலந்திருக்கும் சில கசப்பான சொத்தைகளுக்குக் கூட.

”கடல..” என்று சித்தியின் புடவைத் தலைப்பைப் பிடித்து இழுத்து சங்கோஜமாக முணுமுணுத்தால்

“வரும்போது வாங்கித்தரேன்... பேசாம வா..”

என்ற ஸ்ட்ரிக்ட் டயலாக்கிற்கு மறுவார்த்தை பேசாமல் கடமுடா சப்தத்துடன், சொற்ப பயணிகளின் இடுப்பை ஒடித்துக்கொண்டே கிராஸ் செய்த சோழனை வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றது ஞாபகம் வருகிறது. ஒவ்வொரு முறை கியர் மாற்றும் போதும் டிஸ்கொதே லைட்டுகள் போல் பஸ்ஸுள்ளே அணைந்தாடும் விளக்குகளுடன் ஊர்ந்து செல்லும் பேரூந்துகள். சரியான நேரத்திற்கு வராமல் கழுத்தறுக்கும் சோழனை “சோழப் பிரும்மஹத்தி”ன்னு திட்டுவார்கள். எப்போது அந்த பஸ் சாலையில் உருளும் போதும் பிரும்மஹத்திக்கு உதாரணமாகத் தெரியும்.

கோட்டூர் அரங்கசாமி முதலியார் லைப்ரரியின் வாசற்தோரண வளைவின் நெற்றியில் ஒரு சோடியம் வாப்பர் எரிந்து ஊருக்கு அறிவொளியை வீசிக்கொண்டிருக்கும். பாட்டியின் தம்பி (மாமா தாத்தா) மன்னை வரும்போதெல்லாம் கிச்சுகிச்சு மூட்டியது போல நெளிந்து கொண்டே கேரியரில் உட்கார்ந்து வரும் அவரைச் சைக்கிளில் கஷ்டப்பட்டு பாலன்ஸ் செய்து நான் ட்ராப்பும் இடம்.

லைப்ரரி வாசலில் விரிந்திருந்த மணற்பாங்கான தேரடித்திடலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல அரசியல் பொதுக்கூட்டங்கள்(உ.தா.1: ”இங்கு குழுமியிருக்கும் எனதருமை மக்களிடம் நான் இங்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அரசியல் நாணயம் இவர்களுக்கு கொஞ்சமாவது இருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள்”, உ.தா.2: “ஊழலிலேயே குளித்த அவர்கள் தங்கள் ஆட்சியில் என்ன கிழித்தார்கள் என்றுதான் கேட்கவேண்டியுள்ளது”) நடைந்தேறும்.  நேரெதிரே ராயர் தோட்டம். பங்குனிப் பெருவிழாவில் ஒருநாள் ராஜகோபாலன் எழுந்தருளும் இடம். அன்று மட்டும் காட்டுச் செடிகளை சுத்தம் செய்து விளக்கெல்லாம் போட்டிருப்பார்கள். இல்லையேல் பெரும்பாலான நாட்களில் கும்மிருட்டாக லவ்வுபவர்கள் ஒதுங்கிப் பேச தோதான இடமாக இருக்கும்.

ரொம்பவும் வேகமில்லை. ரொம்பவும் மெதுவாகவும் இல்லை. தலை கோதும் இதமான காற்று. சீரான அடிகளில் நிதானமான நடை. இரைச்சலில்லா வீதி. பெரும்பாலும் எதுவும் பேசுவதில்லை. ஓரமாய் வாலைத் தூக்கி வாட்டர் ஃபால்ஸ் விடும் மாடு, குழந்தையை பாரில் அட்டாச் செய்த பேபி சீட்டில் உட்கார வைத்து சைக்கிளில் டபுல்ஸ் போகும் பவுடர் பூசிய தம்பதி, பள்ளியில் பார்த்த அன்யூனிஃபார்மில் தெரியும் ”யாரோ” பையன் என்று வேடிக்கைதான் பிரதானம். பேசுவதற்கு எதுவும் இல்லை. என்றைக்காவது “நல்லா படிக்கணும்” என்று சித்தி சொல்வாள். சாக்லேட்டுக்கும் கடலைக்கும் ஆசைப்பட்டு ”சரி” என்கிற திசையில் தலையசைப்புத் தன்னால் வரும்.

தேரடியில் கூட்டுறவு பால் பண்ணை ஆசாமிகள் சூடான பருத்திப் பால் மற்றும் மசாலா பால் வெங்கல டேங்கோடு அடுப்பில் ஏற்றி ஆவி பறக்க விற்றுக்கொண்டிருப்பர். எதிர்ப்புறம் சுவாமி தேரை மூடியிருக்கும் தகர கொட்டையில் ரெண்டு பேர் அற்பசங்கைக்கு ஒதுங்கியிருப்பர். ”குட்டிக்கோ” என்றவுடன் பாலருந்துபவர்களின் வயிற்றுக்கு இடையில் தெரியும் அரைகுறை வெளிச்ச விநாயகரைக் குட்டிக்கொண்டு மேலராஜ வீதி திரும்புவோம்.

மோகன் லாட்ஜ் அருகில் வழக்கம் போல ஒன்றிரண்டு பேர் கதை பேசிக்கொண்டு உட்கார்ந்திருக்க கடந்து போய் பெரிய போஸ்டாஃபீஸ் தாண்டினால் வருவது சோழன் மளிகை. அப்போது லெக்ஷ்மி ராம்ஸ் கொஞ்சம் ஃபேமஸான ஜவுளிக்கடை. நவநாகரீக துணிகளுக்கு என்று விளம்பரமும் வாசலில் வாயில் சேலை கட்டி இடுப்பு காட்டி நிற்கும் வெளுத்த பொம்பளை பொம்மையும் என் கண்களுக்குப் புதுசு. எதிர்ப்புறமிருக்கும் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடையில் காராசேவு பிரசித்தி. பொட்டலமும் கையுமாக வாசலில் நின்றுகொண்டே வயற்று வார்த்துக்கொண்டிருப்பார்கள். ஸ்டேட் பாங்கைத் தொட்டடுத்திருக்கும் கிருஷ்ணா பேக்கரியில் கருப்புச் சட்டைகள் சில காரசாரமான விவாதத்தோடு தென்படும். முன்புறம் டைனமோ விளக்கு வைத்த சைக்கிளோடு.

பார்த்துக்கொண்டே நடந்தால் வருவது ஜீவா பிஸ்கட்ஸ். பிஸ்கட் துரைக்கு என் மேல் ரொம்பவும் பிரியம் ஜாஸ்தி. காலையில் தெப்பக்குளம் குளிக்க வருகையில் வாசலில் உட்கார்ந்திருக்கும் என்னை “தம்பீ...” என்று ஆசையாகக் கூப்பிட்டுக்கொண்டே சைக்கிள் கிணிகிணிக்க செல்வார். பேக்கரியின் ட்யூப்லைட் மாட்டிய கண்ணாடி அலமாரியின் பின்னாலிருந்து பல வர்ண கேக் இந்தப் போக்கிரியை ”டேக் டேக்” என்று அழைக்கும்.

“கேக்கு...”

“இந்தா..” என்று கொடுக்கும் ரெண்டு ரூபாய்க்கு ப்ளம் கேக் ஒரு சின்னத் துண்டம் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு அப்படியே சென்றால் பந்தலடி வரும். பந்தலடிக்கு முன்னால் வரும் சுப்பிரமணிய முதலியார் நாட்டு மருந்துக்கடையில் கஷாயம் வைக்கக் கண்டந்திப்பிலி, அரிசித்திப்பிலி, கசகசா என்ற மருந்து சாமான்கள் கிடைக்கும். எப்போது கடைக்கு போனாலும் நெற்றி முழுக்க பட்டையில் சித்தர் போல இருப்பார் ஆகிருதியான முதலியார். இன்னும் கொஞ்சம் பொடிநடையாக பந்தலடியை எட்டித் திரும்பினால் அழகப்பா தாளகம். இந்த முறை சென்றபோது “அப்பா நல்லா இருக்காங்களா?” என்று விசாரித்தேன். யாரென்று கூட பார்க்காமல் கல்லாவில் காசைப் போட்டுக்கொண்டே “ம்ம்ம்” என்றான் பையன்.

அழகப்பா வாசலில் சர்பத் கடைபோட்டிருந்தார் பாய். அந்த பாய்க்கு நெருங்கிய தோஸ்த் நான். பிஸ்லெரித் தண்ணீரென்ற விசேஷமான திரவத்தின் ஆளுமை இல்லாத நேரம் அது. வெட்டிவேர் கலந்த பானைத் தண்ணீர்தான் எல்லோருக்கும் உண்ணீர். அதில் ரோஸ்மில்க்கும் கலப்பார் பாய். தையல் போட்ட கைலியோடு குடைக்கும் தையல் போடுவார். சர்பத் வியாபரமில்லாத போது குடை ரிப்பேர்தான் அவரது ஊடு தொழில். இரவு நேரங்களில் வெள்ளைப் படுதாவால் கடையைப் போர்த்தி தூங்கப்பண்ணியிருப்பார்.

நேஷனல் எதிரிலிருக்கும் சுதர்ஸன் காஃபியில் பவானந்தம் மற்றும் ஒன்னரைக்கண் துரைக்கண்ணு இருவருக்கும் பள்ளியின் உணவு இடைவேளையின் போது காஃபிப் பொடி பொட்டலமும் வெண்ணையை பட்டர் பேப்பரில் வைத்து மடித்துக்கொடுத்தும் பொதுச் சேவகம் புரிந்திருக்கிறேன். ஊருக்கே வெண்ணை மடிக்கும் திறமையை அங்குதான் வளர்த்துக்கொண்டேன் என்றும் மாற்றிச் சொல்லலாம். அது ஊத்துக்குளியா இல்லையா என்றெல்லாம் இந்தப் பித்துக்குளிக்கு தெரியாது. ”நூறு வெண்ணை” என்றால் அரைக்கரண்டி எடுத்து அளந்து நாற்புறமும் மடித்து க்ளிப் அடித்துக் கொடுக்கவேண்டும். “டீச்சர்! உங்க பையன் எவ்ளோ வேகமா காஃபிப் பொடி பொட்டலம் மடிக்கறான் தெரியுமா” என்று ஆச்சரியப்பட்டு மனோரஞ்சிதமான சர்ட்டிஃபிகேட் வேறு கிடைக்கும்.

“வெள்ளேரிப்பிஞ்சு நல்லாயிருத்துச்சா தம்பி?”

எந்த முகாந்திரமும் இல்லாமல் அன்றைக்கு இந்தக் கேள்வியை பவானந்தம் கேட்கும்போது அதன் தீவிரம் எனக்குத் தெரியவில்லை.

“ம்.. நல்லாயிருந்துச்சுண்ணே”. சிரித்தேன். ”பி கொட்டை குடுங்க” வளர்ந்த ஆள் ஒருவர் என்னைத் தாண்டி பவாவிற்கு கையை நீட்டினார்.

பர்ஸில் ரூபாய் காகிதங்களை எண்ணி எடுத்துக்கொண்டிருந்த சித்தி “எந்த வெள்ளேரிப்பிஞ்சு” என்று நெற்றி சுருக்கிக் கேட்டாள்.

“இல்ல. நேத்திக்கு ஸ்கூல் வாசல்ல வித்திகிட்டிருந்தான். தம்பிக்கு பிடிச்சுது. ஆனா கையில காசில்லை. ஒரு அம்பது பைசா நாந்தான் கொடுத்தேன்” எனக்குக் கொடுத்த லட்சம் கட்டி வராகன் ஐம்பது காசு கணக்கை கணகாரியமாக சித்தியிடம் காட்டிவிட்டார் பவானந்தம்.

“அரைக்கிலோ  ஏ காஃபி”

“சிக்கிரி கலந்தா?”

“ஆமாம். வழக்கமா வாங்கறா மாதிரிதான். நூறு சிக்கிரி”

பேச்சுவார்த்தை காஃபிப் பொடி வாங்குவதிலிருந்தாலும் கண்களால் என்னை அதீதமாகக் கண்டித்துக்கொண்டிருந்தாள் சித்தி. பொசுக்கி பஸ்பமாக்கி விடுவாளோ என்று பயந்தேன். எனக்குள்ளே நேற்று சாப்பிட்ட வெள்ளேரிப்பிஞ்சு படார் படாரென்று வெடித்துக்கொண்டிருந்தது.

“டீச்சர்! காஃபிப்பொடி இந்தாங்க.”

“இந்தாங்க அம்பது காசு”

“ச்சே.ச்சே. வேண்டாங்க..”

“இல்ல பவானந்தம். அஞ்சு பைசான்னாலும் கணக்கு கணக்குதான். இந்தாங்க..”

கடையிலிருந்து காலைக் கீழே வைத்ததும் ஆரம்பித்தது மண்டகப்படி.

“அம்பது காசு கடன் வாங்கியாவது திங்கணுமா?”

“இல்ல. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சாப்டா..”

“அதனால.. கடனுக்கு வாங்கி வயத்துக்குக் கொட்டிக்கக் கேக்குதோ?”

“இனிமே பண்ணமாட்டேன்.”

“வேணும்னா ஒரு ரூபா வாங்கிக்கோ. இது மாதிரி அம்பது காசு ஒரு ரூபான்னு வெளியில கடன் வாங்கி சாப்பிடாதே. கேட்கறதுக்கே அசிங்கமா இருக்கு.”

அர்ச்சனையை வாங்கிக்கொண்டே நேஷனல் திரும்பினால் பிள்ளையாருக்கு அர்ச்சனை நடந்துகொண்டிருந்தது. கேட்ட வரமருளும் ஆனந்த விநாயகர் திருக்கோயில். பரீட்சைக்கு அருள் புரியும் பிள்ளையார் பரீட்சார்த்தமாக யார் எந்த நற்காரியங்களுக்கு முயற்சித்தாலும் கைக் கொடுப்பவர். வரப்பிரசாதி.


”நல்ல புத்தி வரணும்னு வேண்டிக்கோ”

“ம்..”

“தலைக்கு குட்டிண்டு பன்னென்டு தோப்புக்கர்ணம் போடு. இனிமே யார்ட்டயும் கடன் வாங்க மாட்டேன்னு சொல்லிண்டே”

”யார்கிட்டேயும் கடன் வாங்கமாட்டேன்” என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன். (பர்ஸில் அணிவகுத்து நிற்கும் கடன் அட்டைகள் இதை எழுதும்போது பல்லைக்காட்டி இளிக்கின்றன!)

குட்டிக்கொண்டேன்.

தோப்புக்கரணம் போட்டேன்.

சாம்பசிவக் குருக்களிடமிருந்து வீவுதியை வாங்கி பூசிக்கொண்டு பிரதக்ஷினம் செய்து நமஸ்காரித்தேன். திரும்பவும் அதே ரூட்டில் காலாற நடந்தால் தேரடியில் கடலைக்காரர் ”டொட்டொ..டொய்ங்..டொய்ங்..” என்று ரெண்டு தட்டு சேர்த்துத் தட்டுவார்.

ஒரு ரூபாய் கடலை பொட்டலம். தாராளமாக கூம்பு செய்து உள்ளே இறக்கிய கடலையை இருவிரலால் தோலுரித்து ஒவ்வொன்றாகக் கொரித்துத் தீர்வதற்கும் வீடு வந்து சேர்வதற்கும் நேரம் மிகச்சரியாக இருக்கும். எட்டரை மணி சீதாலெக்ஷ்மி கும்பகோணத்திலிருந்து மன்னைக்குள் “பாம்”மென்ற ஹார்னோடு நுழைந்திருக்கும். கைகால் அலம்பி ரசஞ்ஜாம். மோருஞ்ஜாம். நடுவளாங்குளத்தைப் பார்த்துக்கொண்டு பத்து நிமிஷம் காற்றோட்டமாக வாசற்படி அமர்தல். பாயை விரித்துப் படுக்கை. அரை நிமிஷத்தில் தூக்கம். இவ்வளவும் டிராயர் காலங்கள். முழுக்கால்சராய் போட்ட வயசில் கடைத்தெரு அனுபவங்கள் வேறே!

#பொண்டாட்டியும் நானும் காலாற நடந்து கடைவீதி சென்று வரும் வழியில் பழசைக் கிளறிய ஞாபகங்கள்.

##மன்னையின் ஹரித்ராநதியிலிருந்து ஒத்தைத் தெரு பிள்ளையார் கோயில் வரை ஒரு சுற்றாகவும் இப்பதிவை கொள்ளலாம்.

Monday, December 3, 2012

தாமரை உறங்கும் செய்யாள்

கோசலம் என்பதை கா+அசலம் என்றும் பிரிக்கலாம் என்கிறார்கள். கா என்றால் மிகுதி என்றும் அசலம் என்றால் மயிலென்றும் பதம் பிரித்து அர்த்தம் சொல்கிறார்கள். மயில்கள் மிகுந்த தேசம் என்பதால் கோசலம் என்று வழங்கலாயிற்று. அப்பேர்ப்பட்ட கோசலத்தை கம்பநாடன் நாட்டுப்படலமாக 61 பாடல்களில் கொஞ்சம் விஸ்தாரமாக எழுதினான். தேசியக் கொடி போல தேசிய விலங்கு தேசியப் பறவை என்கிற தேசிய வழக்கு அக்காலத்திலிருந்திருந்தால் கம்பரே மயிலை தேசியப் பறவையாக அறிவித்திருப்பார். 

தேசப்பற்றாளனாகச் சித்தரிக்கப்படும் இக்கால சினிமா நாயகர்கள் அரும்பாடுபட்டுக் குருதிச் சிந்தி நாட்டைக் காப்பாற்றும் படத்தில் நடிக்கும் போது நாட்டின் கொடியைத் தவிர வேறெதையும் நாட்டுடமையாக அறியாதவர்கள். காவிப் பட்டை கீழே வரும்படி கொடி தலைகீழாகப் பறப்பதற்கும், கொடியை யாராவது தீயிலிட்டு எரித்தாலும் ஆவேசப்பட்டு எதிராளியை அடித்துத் துவைக்கும்படி படம் பண்ணினார்களேத் தவிர பாசிட்டிவ்வாக நாட்டின் வளத்தையும் மாண்புகளையும் சிறப்புகளையும் விளக்கிக் காட்டினார்களா என்று தெரியவில்லை. இரு தசாப்தங்களுக்கு முன்னர் ஷ்யாம் பெனகல் எடுத்த பாரத் ஏக் கோஜ் வீடியோக்கள் யூட்யூப்பில் இலவசமாகக் காணக் கிடைக்கிறது. தாய்நாட்டைப் பற்றிக் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொள்ளலாம்.

காவியநாயகனை அறிமுகப்படுத்தவதற்கு முன்னர் அவன் அவதரித்த தேசத்தையும் அதில் வாழும் மக்களையும் அந்நாட்டினரின் இயல்புகளையும் ஒழுக்கத்தையும் எடுத்துக்காட்டிவிட்டுதான் காப்பியத்திற்குள்ளேயே நுழைகிறான். ஔவையார் “நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ”வில் ”எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை, வாழிய நிலனே” என்று நல்லோர் உறையும் இடம் எதாகிலும் அந்தத் தேசம் நல்ல தேசம் என்று பொதுப்படையாக ஒரு புறநானூற்றுப் பாடலில் விவரித்திருக்கிறார். ஆனால் கம்பன் மாஞ்சு மாஞ்சு அந்நாட்டின் இயற்கை வளத்தையும் எழிலையும் அந்நாட்டினரின் பொழுதுபோக்குகளையும் கூறுகிறான்.

இப்படலத்தின் ஆரம்பப் பாடலில் மீண்டும் ஒருமுறை ஆதிகவியாக வான்மீகியின்(வான்மீகம் என்றால் புற்று. புற்றிலிருந்து வெளிப்பட்டவன் வான்மீகி) கவித்துவத்தை வணங்கி மகிழ்கிறான் கம்பன். வான்மீகி நன்நான்கு வரிகளாக எழுதிய அந்தத் தேன் கவியை தேவர்கள் செவிவழியாக உண்ணக் கொடுத்தான் என்றும் அவன் அந்த நாட்டைப் புகழ்ந்ததைப் பார்த்து மூங்கையானே(ஊமை) பேசினான் என்றால் நான் என் மொழியில் பேசமாட்டேனா? என்கிறார் அடக்கத்துடன்.

கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்குப் பிடித்த மற்றும் பார்த்து ரசித்த ஒரு ஆறு பக்கத்தில் ஓடும் செழிப்பான வயல் வரப்பான பிரதேசத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். மருதநிலவாசியான கம்பன் கோசலநாட்டில் நீங்கள் இப்போது நினைவுக்குக் கொண்டு வந்தப் ப்ரிய நிலம் எப்படிக் காட்சியளித்தது என்று எப்படி வர்ணிக்கிறான் என்று படித்துப் பாருங்கள்.

வரம்பு எலாம் முத்தம்; தத்தும்
    மடை எலாம் பணிலம்; மாநீர்க்
குரம்பு எலாம் செம்பொன்; மேதிக்
    குழி எலாம் கழுநீர்க் கொள்ளை;
பரம்பு எலாம் பவளம்; சாலிப்
    பரப்பு எலாம் அன்னம்; பாங்கர்க்
கரம்பு எலாம் செந்தேன்; சந்தக்
    கா எலாம் களி வண்டு ஈட்டம்.

வரப்புகளில் முத்துக்கள் கிடக்கின்றனவாம், நீர் பாயும் மடைகளில் சங்குகள்(பணிலம்), அதிகமாக நீர் பாயும் கரைகளில் செம்பொன் ஒதுங்கியிருக்கிறதாம், எருமைகள்(மேதி) உழலும் குழிகளில் செங்கழுநீர் பூக்களும், பரம்படித்த (சமன்படுத்தப்பட்ட) நிலங்களிலெல்லாம் பவளங்கள் மின்னுகிறது, நெற்கதிர்கள் நிற்கும் இடங்களில்(சாலிப்பரப்பு) அன்னப்பட்சியும் சேர்ந்து நிற்கிறது, மேற்கண்ட நிலப்பரப்புகளில் அடங்காத இடங்களில் தேனிருக்கிறது, சோலைகளில் மதுவில் மயங்கி மகிழும் வண்டுக் கூட்டம்(ஈட்டம்) என்று கோசலநாட்டின் வளத்தை ஒரே பாடலில் கவிவடித்தான் கம்பன்.

இப்படியந்த மருத நிலத்தை காட்சிப்படுத்திக் காண்பித்தக் கம்பன் அடுத்ததாக பின்னணி இசையாக என்னென்ன ஒலித்தது என்று செவிக்கு விருந்தளிக்கிறான். கம்பனின் சொல்லாட்சி இப்பாடலில் சப்தத்திற்காக ஒலிக்காக வரும் வார்த்தைகளாக அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி என்று பிரித்து மேய்வதில் புரிகிறது. ஆறு பாய் அரவம், ஆலை பாய் அமலை, ஆலைச் சாறு பாய் ஓதை, சங்கின் வாய் பொங்கும் ஓசை, ஏறு பாய் தமரம், எருமை பாய் துழனி என்று ஆற்றின் ஓசையையும், ஆலைகளிலிருந்து ஓடும் சாறுகளின் ஓசையையும் எருமைகள் உரசிக்கொள்வதையும் பாய் பாயென்கிறான்.

இக்காலத்தில் ஒரு காப்பியமெழுதுவதென்றால் இந்தக் காமாசு (கா+மாசு) தேசத்தில் என்னென்ன நம் காதுக்கு விருந்தாகும் என்பதை ஷாட் பை ஷாட் பார்ப்போம். பாம்மென்ற பாஸஞ்சர் அலறலுடன் சென்ட்ரல் ஸ்டேஷனைக் காண்பிக்கிறோம். அப்படியே கட் பண்றோம். வெளில காண்பிக்கறோம். டர்ர்ர்ர்ர்ர்ன்னு புளிமுட்டையாய் சைடு கம்பி வரை மக்களை அடைத்துக்கொண்டு நகரும் ஆட்டோ சத்தம். அதையப்படியே கட் பண்றோம். சிக்னலில் பச்சை விழுவதற்கு முன்னாடி பொறுமையின்றி பாம் பாம்முன்னு மாநகரப் பேருந்தின் பேரொலி. கட் பண்றோம். நடுரோடில் ஹாரனிலிருந்து வைத்தகை எடுக்காமல் ஓட்டும் இருவீலர் சவுண்டப்பர் ஒருவர். கட் பண்றோம். இன்னும் கொஞ்ச தூரம் வந்தால் “அம்பிகையைக் கொண்டாடுவோம்” என்று துலுக்காணத்தம்மன் கோயில் கூம்பு ஸ்பீக்கர் பாடல். கடைசியில் எதுவும் பேசாதபடிக்கு நம்ப தொண்டையைக் கட் பண்றோம். மேலே சப்தமிட்ட காட்சிகளில் ஒன்றிரண்டு தவிர மீதமெல்லாம் கிராமப்புறங்களிலும் இருக்கிறது. டர்ர்ர்ர்ரென்ற காதைக் கிழிக்கும் ஆட்டோச் சத்தம் தேசியச் சத்தமாக வாய்ப்பிருக்கிறது. அரட்டை போதும்.

ஒரு பிரம்மாண்டமான பிஜியெம்மிற்கு பிறகு மருதநிலத்தை வேந்தனாக சித்தரித்து ஒரு காட்சியைக் கொண்டு வருகிறான். ஒரு சோலையிலே மயில்கள் களிநடம் புரிகின்றன. அதற்குத் தாமரை மலர்கள் ஃபோகஸ் லைட் போன்று வெளிச்சமடிக்கிறதாம். விண்ணில் கருமேகங்கள் கடமுடாவென்று முழங்குவது நடனத்திற்கு மத்தளம் வாசிப்பது போல இருக்கிறதாம். குவளைக் கொடிகளிலிருந்து மலர்கள் கண்விழித்துப் பார்க்கின்றன. அவைகள் தான் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள். இக்கலை நிகழ்ச்சிக்கு நீர்நிலைகள் திரைச்சீலை வேலை பார்க்கிறது. வண்டுகள் தேனொழுகும் மகர யாழையொத்து இனிமையாகப் பாட மருதமாகிய வேந்தன் வீற்றிருந்தான். இயற்கையை அன்னைக்கு உருவகப்படுத்தவதால் அ.ச.ஞா அவர்கள் மருதநிலத்தரசி என்பார். அந்தக் கவிச்சுவை மிகுந்த பாடல் கீழே.

தண்டலை மயில்கள் ஆட,
   தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
   குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம்
   பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -
   மருதம் வீற்றிருக்கும் மாதோ.

பொன் முத்து பவளமெல்லாம் கூட வேண்டாம், நதிநீர்க் கால்வாய்களில் மறைக்காமல் மறுக்காமல் சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்கமாட்டேன் என்று கர்ஜிக்கும் கர்நாடகா காவேரித் தண்ணீர் வழங்கினால் எதேஷ்டம். உழுது பிழைத்துக்கொள்ளலாம்.

இப்படிக் கச்சேரி களைகட்டியக் கோசலத்தை வர்ணித்த கம்பன் ஒரு பட்டியல் கொடுத்து அவை தங்கும் இடங்களாக சொல்லும் ஒரு பாடல் ரொம்பவும் ஃபேமஸ்...

நீர் இடை உறங்கும் சங்கம்;
    நிழல் இடை உறங்கும் மேதி;
தார் இடை உறங்கும் வண்டு;
    தாமரை உறங்கும் செய்யாள்;
தூர் இடை உறங்கும் ஆமை;
    துறை இடை உறங்கும் இப்பி;
போர் இடை உறங்கும் அன்னம்;
    பொழில் இடை உறங்கும் தோகை

தண்ணீரில் சங்குகள் உறங்கிக்கொண்டிருக்கும், மர நிழலில் எருமைகள் (மேதி) உறங்கும், தாரிடை வண்டுகள் உறங்குமாம். தார் என்றால் பூ மாலை. மாலை இருபக்கத்திலும் முடிச்சுப்போடப்பட்டு இருப்பது. தார் என்பது இக்கால மகளிர் தோளில் சார்த்திக்கொள்ளும் துப்பட்டா அணிவது போன்ற மாலை. ஒரு புறம் முடிச்சுறாத மாலை. அம்மாலையிலிருக்கும் பூக்களில் வண்டு உறங்குகிறது என்று சொல்வதன் மூலம் கோசல நாட்டுப் பூக்களில் தேன் மிகுதியாக இருக்கிறது என்கிறான் கம்பன். அடுத்த வரி மிகவும் அற்புதமான வரி. தாமரை உறங்கும் செய்யாள்(திருமகள்). விழித்துக்கொண்டு மக்களுக்குச் செல்வத்தை அருள்புரிய வேண்டிய திருமகள் தாமரை மலரில் உறங்குகிறாளாம். ஏன் தெரியுமா? வேண்டும் என வேண்டும் வறியவரே இல்லையாம் கோசலத்தில். சேற்றில் ஆமை உறங்குவதும், நீர்த்துறைகளில் சிப்பி உறங்குவதையும் சொல்லிவிட்டு போர் இடை உறங்கும் அன்னம் என்று வரி எழுதி  நெற்போர்களில் அன்னம் உறங்குவதாகவும் நெல் மணிகளை உணவாகக் கொள்ளும் தோகையுடைய மயில்கள் வயிறு முட்டமுட்டச் சோலைகளில் உறங்குவதாக வர்ணிக்கிறான்.

இப்பேர்ப்பட்ட நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக ஒரு பாடல். கரும்பாலைகளிலிருந்து தேனாக ஓடும் கருப்பஞ்சாறும், பாளையை அரிந்து விட்டுப் போன இடத்திலிருந்து ஒழுகும் தேன் போன்ற கள்ளும், சோலைகளில் பழுத்த கனிகளின் தேனொத்த சாரும், மாலைகளிலிருந்து வழியும் தேனும் அபரிமிதமாக பெருகி ஓடி கப்பல்கள் நிற்கும் கடலிலே கலக்கிறதாம். அன்றைய கோசலம் இதுதான் என்று சொல்லப்படும் வட இந்தியாவில் கடற்கரையே கிடையாது. கோசலமாக தமிழ்நாட்டைத்தான் கம்பன் வர்ணித்துப்பாடுகிறான் என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு சாட்சி. அக்கடலில் வாழும் மீன்கள் அத்தேனைப் பருகி களிக்கிறது என்று ”ஆலை வாய்க் கரும்பின் தேனும்;” என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல்.

இளைஞர்களுக்கான சங்கதி ஒன்றை இப்போது சொல்லப்போகிறான். ஒரு நாட்டில் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால் மக்கள் தொகைக் கணக்கெடுத்து வரும் நம்பர்களைச் சொல்லலாம். ரொம்பவும் சுருக்கமாக கோசலத்துப் பெண்டிரின் சென்சஸ் கணக்கு ஒன்றைக் கம்பன் சொன்னான். ஆற்றின் புதுப்புனலில் பெண்கள் குளித்தபிறகு அவர்களது கூந்தலிலிருந்த மலர்களாலும் கஸ்தூரிக் கலவையினாலும் கமழ்கின்ற நறுமணமான ஓடிச் சென்றுக் கலக்கும் கடலின் அலைகளும் அவ்வாசனையைப் பெற்றது என்று சொல்வதன் மூலம் பெண்ணினத்தின் பெருக்கத்தை வர்ணித்தான். கடலுக்கே அந்த நறுமணம் அளித்த அவ்வாற்று நீராடும் பெண்களின் கடைக் கண்கள் வாள் போன்றும், இக்கால தொகுப்பாளினிகள் போலல்லாத கொஞ்சும் மழலை மொழியாகவும், லிப்ஸ்டிக் போடாமலேயே செவ்வரி ஓடிய அதரங்களையும் கொண்ட மகளிர் என்று கூடுதலாக அவர்களது அழகையினையும் சேர்த்துச் செய்தி சொல்கிறான். அந்த அழகிய பாடல் கீழே

புதுப் புனல் குடையும் மாதர்
    பூவொடு நாவி பூத்த
கதுப்பு உறு வெறியே நாறும்
    கருங்கடல் தரங்கம் என்றால்,
மதுப் பொதி மழலைச் செவ்வாய்
    வாள் கடைக் கண்ணின் மைந்தர்
விதுப்பு உற நோக்கும் அன்னார்
    மிகுதியை விளம்பல் ஆமே!

ஒரு எபிஸோட்டிற்குள் இந்த நாட்டுப் படலத்தை அடக்க முடியவில்லை. கடைசியாக இன்னொரு அற்புதமான பாடலைப் பார்த்துவிட்டு நாட்டுப்படலத்துக்கு தொடரும் கார்டு போட்டுடலாம்.

சேல் உண்ட ஒண் கணாரில் திரிகின்ற
    செங்கால் அன்னம்
மால் உண்ட நளினப் பள்ளி வளர்த்திய
    மழலைப் பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளிக்,
    கனைப்பச் சோர்ந்த
பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை
    தாலாட்டும் பண்ணை.

வயற்பரப்புகளில்(பண்ணை) மீன் போன்ற கண்களையுடைய பெண்களைப் போன்று திரிகின்ற சிவந்த கால்களையுடைய அன்னப்பறவைகளின் குஞ்சுகள் தாமரை மலரில் படுத்திருக்கின்றனவாம். அப்பறவைகளின் பசிக்குக் கன்றுகளை நினைத்துக் கனைக்கும், கால்களில் சேறு படிந்துள்ள, எருமைகள் மடியிலிருந்து தானாகச் சுரக்கும் பாலைக் குடித்துத் தூங்குவதற்கு ஏதுவாகப் பச்சைத் தேரைகள் தாலாட்டுப் பாடுகின்றன என்று முடிக்கிறான்.

எ.பி.சொ: தேம்பிழி மகரயாழ், புதுப்புனல் குடையும் மாதர், குண்டலக் கோல மைந்தர், அன்பு எனும் நறவம் மாந்தி, களி வண்டு ஈட்டம், கண்களும் காமன் அம்பும்.

இனிமேல் வாரம் ஒரு பாகமாக இத்தொடர் வெளிவரும்.

Wednesday, November 21, 2012

உற்சாகபானப் பிரியர்கள்

சுவரெல்லாம் காரை பெயர்ந்த பெரியாஸ்பத்திரி. மூலைக்கு மூலை கறைபடிந்த சுவர்கள். அழுக்குக் கோட்டுடன் ஸ்டெத் மாலையணிந்த டாக்டர்கள். முட்டிவரை ஸ்டாக்கிங்ஸ் போட்ட கொண்டை நர்சுகள். ஃபினாயில் நாற்றத்தையும் பொருட்படுத்தாது ஆப்பிளையும் ஹார்லிக்ஸ் பாட்டிலையும் சுமந்தபடி பேஷண்ட்ஸ்ஸைப் பார்க்கக் கூட்டம் அம்முகிறது. மாலை நேரத்து விசிட்டிங் ஹவர்ஸ். கலெக்ஷன்னில்லையே என்று வருத்தப்படும் வார்டு பாய்கள். “உம்புள்ளை நாளைக்கே எந்திரிச்சு நடப்பான் பாரு” என்று ஆரூடமாக ஒரு அன்புத்தாயிடம் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த ஆயாவென்று சுறுசுறுப்பாக இருந்தது.


வார்டு நம்பர் 8. எமன் எப்போ வருவான் என்று பாசக்கயிற்றுக்காக வெயிட்டிங்கில் ஒரு பேஷண்ட். ”இனிமே நம்ம கையில ஒண்ணுமில்லை” என்று டாக்டர்கள் கையை விரித்துவிட்டார்கள். தொண்டைக்குக் கீழே உள்ளேயிருக்கும் அவயங்களெல்லாம் சாராயத்தினால் கரைந்துவிட்டது. எக்ஸ்ரேயெடுத்தால் உள்ளே ஹாலோவாகத்தான் தெரியும். சாவதற்கு முன்னாலேயே வெறும் கூடாக படுத்திருந்தான். ஆனால் சாகக் கிடந்தவன் இப்படியொரு நிலை தனக்கு வந்துவிட்டதென்று கவலைப்படுபவனாகத் தெரியவில்லை.

உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கடைசியாக ஒருதடவைப் பார்க்கலாம் என்று ஒவ்வொருத்தராக வார்டுக்குள் வந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கண்கள் சொருக கடைசி நிமிடத்தை எண்ணிக்கொண்டிருந்தான் அவன். சிறுவயது முதலேயே பழகிய நண்பனொருவன் மிகவும் வருத்தமாக அவன் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தன்.

“இப்படியெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொன்னா கேட்டியாடா?”

அவனால் பேசக்கூட முடியாத நிலை. வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான்.

“ஸ்வாமிகிட்ட நல்ல புத்தி வேணும்னு கேட்டிருக்கலாம்ல”

இதைக் கேட்டவுடன் பதிலுக்கு படுக்கையிலிருந்து அவன் ஏதோ முனகினான்.

“ஸ்வாமிகிட்ட நல்ல புத்தியைக் கொடுன்னு வேண்டியிருக்கலாம்லனேன்” என்று கூரை இடிந்து விழுமளவிற்குச் சத்தமாகக் கேட்டான்.

சாகற நேரத்தில் தன் நண்பனிடமிருந்து இப்படியொரு வசனத்தை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.

கண்ணாலையே சைகை செய்து பக்கத்தில் கூப்பிட்டான். நண்பன் போய் அவன் தலைமாட்டருகில் உட்கார்ந்தான். படுக்கையில் கிடந்தவனின் காதுக்கருகில் தலையைக் குனிந்தான்.

“எ......ன்....ன....... சொ.....ன்....ன....” என்று ஒவ்வொருவார்த்தையாக உதிரியாய் அவன் காதுக்கு சேருமளவிற்கு மட்டும் கேட்டான்.

“ஸ்வாமிகிட்ட நல்ல புத்திக் கொடுன்னு வேண்டியிருக்கலாம்ல”

“நான் அப்படித்தான் வேண்டிக்கிட்டேன். ஆனா.....”

“ஆனா...”

“அந்தப் பாழாப் போறத் தெய்வத்துக்கு “நல்ல புட்டி”யைக் குடுன்னு காதுல விழுந்துடிச்சு. நான் என்ன பண்ணட்டும்”ன்னு சொல்லிட்டு மண்டையைப் போட்டான்.
 
**************
 
போதையடிமைகள் மாதிரி மெட்ராஸ் காஃபி ஹவுஸின் ஃபில்டர் காஃபிக்கு ஆஃபிஸிலிருந்து ஒரு திருக்கூட்டமாக அடிமையாகி விட்டோம்.

சிக்கரி கலந்த காஃபிங்கறதுனாலத்தான் இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கு. அப்படிக் குடிச்சா உடம்புக்கு ஆகாது என்று யாராவது இன்னா நாற்பதாக நீதி சொன்னாலும் நாக்குக்கு புரிய மாட்டேன் என்கிறது. “கள்ளிச்சொட்டான்னா இருக்கு காஃபி” என்று காஃபியார்வலர்கள் சிலாகிப்பதற்கு எதுவும் உள்ளர்த்தம் உண்டாவென்று தெரியவில்லை.

திரும்பத் திரும்ப சப்புக்கொட்டிக்கொண்டு சாயந்திரமானா மெ.கா. ஹவுஸின் முன்னால் காசைக் கொடுத்துவிட்டு கையேந்தி நிற்கச் சொல்கிறது.

சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் சொன்ன ஒரு சன்னியாசக் கதை ஞாபகம் வருகிறது.

ஒருத்தர் ரொம்பவும் ஆச்சார அனுஷ்டானத்தோட இருக்கிற சாஸ்திரிகள். ஆத்துக்காரி கொஞ்சம் அப்பர் ஹாண்ட். உஹும் நீங்க நினைக்கிறா மாதிரி அடிக்கெல்லாம் மாட்டா. பிலுபிலுன்னு பிடிச்சிண்டு வாயாலையே வகுந்துடுவா. இந்த மனுஷனுக்கும் விஷமம் ஜாஸ்தி. எதாவது சொல்லி ஆத்துக்காரியை சீண்டிண்டே இருப்பார். ஒரு நாள் காலங் கார்த்தாலையே சண்டை முத்திப்போச்சு. அக்கம்பக்கமெல்லாம் கூடிப் போய் தெருவில ஒரே வேடிக்கை.

”இனிமே என்னால உங்கூட குடுத்தனம் பண்ண முடியாதுடி. ராட்சஷி. நா சன்னியாசியாப் போய்டறேன்”ன்னு ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதியாக் குதிச்சார்.

“எம்பளது வயசுல நீர் அப்படிப் போகணும்னு உமக்குத் தலையெழுத்து இருந்தா யாரென்ன பண்ண முடியும். பேஷாப் போங்கோ”ன்னு மாமி சொல்லிட்டு பக்கத்தாத்து மாமியோட சகஜமா பேச ஆரம்பிச்சுட்டா.

இவருக்கும் ரோஷம் தலைக்குமேல ஏறிண்டு கடகடன்னு திண்ணைய விட்டு இறங்கி வடக்கப் பார்க்க புறப்பட்டு போய்ட்டார். தோள்ல காசித் துண்டோட. பக்கத்தாத்து மாமியெல்லாம் வந்துக் கூடி நிண்ணுண்டு “இருந்தாலும் மாமாவை நீங்க இப்படி விரட்டியடிச்சுருக்கக்கூடாது”ன்னு ஒரே புலம்பல். மாமி அதெல்லாம் கண்டுக்கவேயில்லை.

“அடுப்புல ஸாம்பார் கொதிக்கறது”ன்னு உள்ளே போய்ட்டா. ”மாமி இப்படியொரு கல்நெஞ்சக்காரியா இருக்காளே”ன்னு எல்லோரும் முணுமுணுத்துட்டு அவாவா ஆத்துக்குப் புறப்பட்டு போய்ட்டா.

சாயந்திரம் நாலு மணியாச்சு. பால்காரன் பாலைக் கொடுத்துட்டு இந்தப் பக்கம் போனான் கார்த்தால வடக்கே போன மாமா விறுவிறுன்னு அந்தப் பக்கத்திலேர்ந்து திரும்பி வந்துண்டிருந்தார். ஃபர்ஸ்ட் செஷன்ல ஃபைட் சீன் பார்த்தவாள்லாம் திரும்ப ஒரு சண்டை பார்க்க ஆசையா ஓடி வந்தா.

திண்ணைமேல ஏறி சப்ளாங்கால் போட்டுண்டு ஜம்முன்னு உட்கார்ந்துண்டாராம் மாமா.

“சன்னியாசம்னு கிளம்பினேளே. சாயந்தரமே ஆத்துக்கு வந்துட்டேளே. என்னாச்சு மாமா”ன்னு எல்லாரும் நக்கலா விஜாரிச்சாளாம்.

“நாலு மணிக்கு காஃபி குடிக்கணும். அதான் திரும்பி வந்துட்டேன். ஆனா நிச்சயமா நாளைக்கு சன்னியாசம் போய்டுவேன்.”ன்னு ஜம்பமா சொன்னாராம்.

“உக்கும். ஆனானப்பட்ட காஃபியையே இந்த மனுஷ்யரால விடமுடியல. கஷாயத்தை எப்படிக் கட்டிப்பராம்”ன்னு தாவாங்கட்டையை குலுக்கி தோள்ல இடிச்சுண்டு சுடச்சுட காஃபியை கொண்டு வந்து திண்ணையில வச்சாளாம் மாமி.

#கஷாயம் கட்டிக்க ஆசை வந்தாலும் காஃபி ஆசை போகாதாம். காசிக்குப் போனாலும் காஃபிக்குதான் ஜெயமாம். தீக்ஷிதர்வாள் சொல்லியிருக்கார்.

Saturday, November 17, 2012

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி

நம்பிஆரூரான் என்கிற சுந்தரரும் கழறிற்றறிவார் என்கிற சேரமான் பெருமாள் நாயனாரும் அணுக்கமானத் தோழர்கள். சேரமான் பெருமாள் தினமும் திருவஞ்சைக்களத்தில் சிவ பூஜை செய்து முடித்தபின் தில்லை நடராஜப் பெருமானின் காலில் இருக்கும் சதங்கை கிணிங் கிணிங்கென்று ஒலிப்பது அவரது காதுக்கு கேட்குமாம். அப்படி சப்தமெழுந்தால் அன்றைய பூஜையில் எதுவும் குறையில்லை என்று சந்தோஷப்பட்டு கோவிலிலிருந்து விடைபெறுவாராம் சேரமான் பெருமாள். 

ஒரு நாள் நெடுநேரமாகியும் சலங்கைச் சத்தம் கேட்கவில்லை. மிகவும் கவலையுடன் இன்று நமது பூஜையில் ஏதோ குறையிருக்கிறது என்றெண்ணி தன்னுடைய உடைவாளை உருவி தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேளையில் “சேரமானே பொறு. சுந்தரனின் தமிழ்ப்பாடலில் என்னை சற்றுநேரம் மறந்திருந்தேன்.” என்று அசசீரியாய் ஒலித்து காலிலிருந்த சதங்கைகளை ஒலிக்கச் செய்தாராம் சிவனார். தான் செய்யும் பூஜையை விட அடியார் ஒருவரின் தமிழ்ப்பாடலில் இறைவன் தன்னை மறந்தான் என்ற செய்திகேட்டதும் அந்தச் சுந்தரரைப் பார்க்க விழைந்து அவருடன் நட்பு பூண்டு இறுதியில் இருவரும் கைலாயம் சேர்ந்தார்கள் என்பது பெரியபுராணக் கதை.

அந்தச் சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதி என்ற ஒன்றை சைவத்திற்கு அருளிச்செய்திருக்கிறார். அதன் முதலில் வரும் அந்தப் பாடல் படிக்கப் படிக்க, படித்துக் கேட்கக் கேட்க தெவிட்டாத தெள்ளமுது.

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.


நடைமுறைத் தமிழில் இருப்பதால் பெரிய விளக்கமேதும் தேவைப்படாவிட்டாலும் ஒருமுறை இங்கே இந்தப் பாடலுக்கான விளக்கத்தை எழுவது என் கைக்குக் கிடைத்த பேறு.

பொன் எந்த வண்ணமோ அந்த வண்ணம் அவருடைய மேனியாம், கருமேங்களுக்கிடையிலிருந்து எழும் மின்னல்கள் போன்றது அவருடைய விரித்த சடையாம், வெள்ளிக் குன்றுவின் வண்ணம் என்னவோ அதுதான் அவரேறும் வாகனமாகிய விடையின் நிறம். மால்விடை என்று எழுதியதற்கு அர்த்தம், திரிபுரசம்ஹாரத்தின் போது திருமாலே அவருக்கு விடை வாகனமாக வந்தார் என்பது புராணம். கடைசியில் சேரமான் எழுதிய அந்த வரிதான் இந்தப் பாட்டின் இனிமைக்கே உச்சம். தான் சிவனைக் கண்டால் எவ்வளவு இன்பமடைவாரோ அவ்வளவு இன்பம் தன்னைக் கண்ட ஈசனுக்கும் என்றார். இறைவனையும் தன் நண்பனாக சேரமான் பெருமாள் நாயனார் இழுத்துக்கொண்ட வரலாறு இது.

இக்காலத்தில் கண்ணதாசன் போன்றோர் ”பால்வண்ணம் பருவம் கண்டு” என்றெல்லாம் மெட்டிற்கு எழுதிய காதல் பாடலும் அக்காலத்தில் “கை வண்ணம் அங்கு கண்டேன், கால் வண்ணம் இங்கு கண்டேன்” என்று சக்கரவர்த்தித் திருமகனைக் கம்பன் போன்றோர் அர்ச்சித்து எழுதியதும் நினைவுக்கு வருகிறது.

#என்வண்ணம் மாறி எவ்வண்ணம் இவ்வண்ணம் எழுதினேன்!!

Wednesday, November 14, 2012

பார் கிழிய நீண்டு.....

இக்கால இயக்குனர் சிகரங்கள் திரைப்படத்தின் பூர்வாங்க சீனிற்கு இரு கை நீட்டி, கட்டை விரல்கள் நீண்டு பக்கவாட்டில் முட்ட, நிமிர்ந்த ஆட்காட்டி விரல்களுக்குள் அடங்கும் காட்சியைக் கட்டம் கட்டி ’ஓப்பனிங் லொகேஷன்’ பார்ப்பதைப் போல அக்காலத்திலேயே இராமகாவியம் எழுத வந்த கம்பன் கோசல நாட்டின் எழிலை முதலில் நம் கண்ணுக்குக் காட்டி விட்டுப் பின்னர்தான் காவியத்துள்ளேயே நுழைகிறான். நதிக்கரையில் நாகரீகங்கள் வளர்ந்ததைப் போல கோசல நாட்டின் நாகரீகத்தை, எழிலை, மாட்சியை, சரயு நதிதீரத்திலிருந்து ஆரம்பிக்கிறான். ”நா காவிரித் தண்ணி குடிச்சு வளர்ந்தவன்டா” என்றும் ”தாமிரபரணி தண்ணி வாகு அது” என்றும் சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதில் அவர்களது பூர்வாசிரம அல்லது வளர்ந்துகொண்டிருக்கும் பிரதேசத்தின் மீதும் அந்நிலத்தில் பாயும் நதியின் மீதும் அவர்கள் கொண்டுள்ள பந்த பாசம் புரிகிறது.

வாழும் நிலத்தின் தன்மையில் நிறைய பேரின் குணவிசேஷங்கள் அடங்கியிருக்கும் என்பார்கள். அலுவலகத்தில் என்னுடைய வளவளாத்தனத்தை விமர்சித்த துணை ஜனாதிபதி(Vice President) அந்தஸ்தில் இருந்த உயரதிகாரி ரிடையர் ஆவதற்கு முன்னர் ஒரு கமெண்ட் அடித்தார். “ஆர்விஎஸ். உனக்கு ஏன் இந்தப் பேச்சுத் தெரியுமா? புராதன காலத்துலேர்ந்து தஞ்சாவூர் ஜில்லா ஃபெர்ட்டெயில் லாண்டா இருந்தது. ஜனங்க கைல காசு நிறையா புரண்டதால தெனமும் மூக்கைப் பிடிக்கச் சாப்பிட்டுட்டு வெத்தலையைப் போட்டுண்டு திண்ணையில உட்கார்ந்து வம்பு பேச வேண்டியதுதானே. அந்த வம்பு ஜீன் உங்கிட்ட இருக்காதா? அதான் இப்படி பேசற. தின்னவேலி கூட ஃபர்ட்டெயில் லாண்ட் தான்” என்றார். இருக்கலாம்.

ஆற்றுப் படலத்தில் மொத்தம் 20 பாடல்கள். முதலில் கம்பன் கோசல நாட்டின் மக்கட்பண்பை ஆற்றின் வழியாக சொல்லும் ஒரு பாடல்.
ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.

ஐம்பொறிகளுள் கண் சென்று பற்றும் கருவி. இருந்த இடத்திலிருந்து மேயும். கவி பாடும். கண் ஜாடையில் ஒரு ஆளையே கவிழ்த்துவிடலாம். மற்ற பொறிகள் நின்று பற்றும் கருவி. ஒரு மனிதனை குற்றமிழைக்கச்(ஆசு) செய்து துன்பத்தில்(அலம்) ஆழ்த்தும் ஐம்பொறிகளையும் அம்புக்கு(வாளி)  உவமைப் படுத்துகிறான் கம்பன். மார்பகங்களில் ஆரங்கள்/காசு மாலைகள் அசைந்தாடும்(அலம்பு) பெண்களின் போர்த்(பூசல்-இப்பொழுதும் சண்டை என்பதற்கு வழக்கில் இருக்கும் சொல்) தொழில் புரியும் கண்கள் என்ற அம்பு பிற ஆடவரை ஏறெடுத்தும் பார்க்காத வண்ணம் ஒழுக்க நெறியில் வாழும் கோசல நாட்டினை அலங்கரிக்கும்(புனை) சரயு நதியின் அழகினைப் பற்றிக் கூறுவோம்.

தீயவைகளைப் பற்றிக் கொணர்ந்து மூளைக்கு அனுப்பும் கண்களின் செய்திகள்தான் மற்ற அவயங்களைத் தப்பு செய்யத் தூண்டுகிறது. பஸ்ஸ்டாண்டில் நிற்கும் பொழுது இமையிறக்கி ஓரக்கண்ணால் ஒரு லுக் விடும் பெண்ணை தேமேன்னு பக்கத்தில் நிற்கும் அப்பாவி ஓவர் லுக் செய்வதற்கு ஆலாய்ப் பறப்பதில் ஆரம்பிப்பது கடைசியில் ஒரு நாள் அப்பெண்ணின் மாமன்காரன் சிவந்த கண்களும் வீச்சருவளோடும் பேருந்து நிறுத்தத்தில் ஆவேசமாய் வெட்ட நிற்பதில் முடிகிறது அந்தப் பார்வையின் சிறு வீச்சு.
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே

நீறு, ஆறு, சேறு, வீறு என்று பட்டையைக் கிளப்பும் அடுத்த பாடலில் பொன்னார் மேனியன் என்று அழைக்கப்படும் சிவனார் போன்று வெண்ணிறமாக திருநீறு பூசியது போல இருந்த கோசல நாட்டு வானம், ஆர்கலி (கடல்) மேய்ந்து, மார்பில் அகில்சேறு (சந்தனக் குழம்பு) பூசிய திருமகளைத் தன் மார்பிலேக் கொண்ட, நீருண்ட மேகம் போலத் திருமேனி கொண்ட திருமால் போலத் திரும்பி மழையாகப் பொழிகிறது என்கிறான் கம்பநாட்டாழ்வார். ஒவ்வொரு அடியிலும் இரண்டாவது வார்த்தையில் அணிந்து என்றெழுதியிருப்பது கவிச்சுவையளிக்கிறது. திருப்பாணாழ்வார் கூட “கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை” என்று பாடுகிறார்.

இப்படியாகப் பொழிந்த மழையானது சரயுவில் எப்படி வெள்ளமாக வந்தது என்று அடுத்த ஆறு பாடல்களில் வர்ணிக்கிறார். நதியை வைத்துக் குறிஞ்சி, பாலை, முல்லை மருதத் திணைகளைப் பற்றியும் கடைசியில் திணை மயக்கமாக சரயு நதி ஒரு திணையை மற்றொரு திணையாக எப்படி உரு மாற்றுகிறது என்று கவி வடித்திருக்கும் கம்பனைப் பார்த்து நம்மை மலைக்க வைக்கும் சில பாடல்களைத் தருகிறேன். எத்திணையில் வாழ்ந்தாளும் அத்திணை ”மக்கள்” இன்னவாறு செய்தார்கள் என்று எழுதாமல், கொடிச்சியர், எயினர், ஆயர், மள்ளர் என்று முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் என்று அந்தந்த நிலத்து மக்களை ரகம் பிரித்து எழுதியிருக்கிறார். மலையில் பிறந்த சரயுவின் நறுமணம் பற்றி கம்பர் எழுதியிருக்கும் ஒரு பாடல் நம்கவனத்தை சரேலென்று ஈர்க்கிறது. (எல்லாப் பாடலும் இழுத்தாலும் இதைப் பிரத்யேகமாகப் பார்ப்போம்)
கொடிச்சியர் இடித்த சுண்ணம்,
    குங்குமம், கோட்டம், ஏலம்,
நடுக்கு உறு சந்தம், சிந்தூரத்தொடு
    நரந்தம், நாகம்,
கடுக்கை, ஆர், வேங்கை, கோங்கு, பச்சிலை,
    கண்டில்வெண்ணெய்,
அடுக்கலின் அடுத்த தீம் தேன்,
    அகிலொடு நாறும் அன்றே.

குறிஞ்சி நில மகளிர் பூசிக்கொள்வதற்கு இடித்த வாசனைப் பொடியாகவும் (சுண்ணம். இக்கால பயன்பாடாக வைரமுத்து அந்நியனில் எழுதிய ”ஐயங்காரு வீட்டு அழகே”வைக் கேட்கவும்), குங்குமம், கோஷ்டம் (கோட்டம்) எனும் வாசனாதி திரவியம், ஏலக்காய்(ஏலம்), பூசியவர்களுக்குக் நடுங்கச் செய்யும் குளிர்ச்சி தரும் சந்தனம்(சந்தம்), மலைகளில் மலரும் சிந்தூரம் என்கிற வெட்சிப் பூ, கஸ்தூரி (நரந்தம்), புன்னை (நாகம்), கொன்றைப் பூ(கடுக்கை), அத்திப்பூ, வேங்கைப் பூ, கோங்கு, பச்சிலைகள், கண்டில் வெண்ணெய் எனப்படும் ஒரு பூண்டு வகையறா (பெருஞ்சீரகம் போலவாம்) அப்புறம் மலைச்சாரலிலிருந்து அடித்துக் கொண்டுவரப்பட்ட சுவைமிகுந்த தேனும் அகில் கட்டைகளோடும் வெள்ள நீர் கரை புரண்டு வருவதால் சரயு நறுமணம் வீசுகிறதாம்.

கூவத்தின் நறுமணத்தை முகர்ந்து கவி எழுத இப்போது ஒரு சென்னைக் கம்பன் இங்கில்லை என்று இதைப் படிக்கும் உங்களது ஆதங்கம் புரிகிறது.

இதுபோல சரயு நதியின் வெள்ளப் பெருக்கை ஆற்றுப்படலம் முழுவதும் பேசியிருக்கிறார் கம்பர். அந்நதியின் வெள்ளப் பிரவாகத்தைப் பற்றிச் சொல்லும் ஒரு அற்புதமான பாட்டோடு இந்த ஆற்றுப்படலத்தை முடித்துக்கொண்டு அடுத்து 61 பாடல்கள் அடங்கிய நாட்டுப் படலத்துக்குச் செல்லலாம்.
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
    மருதத்தை முல்லை ஆக்கிப்
புல்லிய நெய்தல் தன்னைப்
    பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள்
    எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல் உறு கதியில் செல்லும்
    வினை எனச் சென்றது அன்றே.

ஒரு திணையை மற்றொரு திணையாக மாற்றும் வல்லமை படைத்தது சரயு என்கிற அர்த்தத்தில் இதை எழுதினாலும் கடைசி ஈரடியில் ஒரு ஒப்பற்ற தத்துவத்தை இப்பாடலின் மூலம் நம்முன் வைக்கிறான் கம்பன். குறிஞ்சியில் புறப்பட்ட சரயுவின் வெள்ள நீரானது குறிஞ்சி நிலத்துப் பொருட்களைக் கொண்டு வந்து முல்லையில் சேர்த்தது பின்னர் முல்லையில் அடித்துவரப்பட்ட பொருட்களினால் மருதத்தை முல்லையாக்கியது இறுதியாக கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தலை மருதமாக்கியதாம். மருதநிலத்தில் வாழ்ந்தவனான கம்பன் பொருஅரு(ஒப்பற்ற) என்று தன்நிலமான மருதத்தை வர்ணிக்கிறான். புல்லிய(இழிந்த) x பொருஅரு(ஒப்பற்ற). நெய்தல் புல்லியது. மருதம் பொருஅருவானது. இப்படி ஒரு திணை மற்றொரு திணையாக உருமாறுவது திணை மயக்கம் என்ற வகையறாவில் அடங்குகிறது.

ஒவ்வொரு நிலமும் பிற நிலத்தின் தன்மையால் நிலைமாறுவது போல ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிறவியிலும் அவன் செய்த தீவினை நல்வினைகளுக்கேற்ப புண்ணியங்களும் பாபங்களும் பிறவிதோறும் தவறாது அடைந்து அவனைத் தடுமாறச் செய்கிறது என்கிற  தத்துவத்தை இந்த எடுத்துக்காட்டின் மூலமாக கம்பன் விளக்குகிறான்

சரயு ”பார் கிழிய நீண்ட”து என்று அதன் பிரம்மாண்டத்தை ஒரு பாடலிலும், மதம் ஒன்றே என்பதற்கு சான்றாகவும் சரயுவின் வெள்ளப்பெருக்கை பரம்பொருளாகப் பாவித்து “பல்பெரும் சமயம் சொல்லும் (பரம்)பொருளும் போல் பரந்தது அன்றே” என்று இமயத்தில் பிறந்து(கல்லிடைப் பிறந்து) கடலில் சேர்ந்த தண்ணீரானது(கடலிடைக் கலந்த நீத்தம்) தான் வரும் வழிகளில் குளமாக, குட்டையாக, வாய்க்காலாக, ஏரியாக பரவிக் கிடக்கிறது.

இப்படி பல வகைகளாகப் பரவிக்கிடப்பதெல்லாம் பல மதங்களாகவும், பல சாதிகளாவும், இனங்களாகவும், பல ரூபத்திலும், பல பெயர்களில் வழங்கப்படுகிறதென்றும் கடைசியில் அனைத்தும் பரம்பொருளைத்தான் குறிக்கின்றன என்பதற்கும் உவமையாகச் சொல்கிறான். சமயசார்பற்ற கம்பன் என்ற பொருளில் ஒரு மணி சொற்பொழிவாளர்கள் பேசுவதற்கு ஏற்ற இடம் இது. ஆற்றுப்படலத்தின் கடைசிப் பாடலில் சரயு நதியானது அந்நாட்டு மக்களுக்கு உயிருக்கு இணையாக உள்ளது என்று நிறைவாக எழுதி மகிழ்கிறான்.

இப்பத்தியில் எழுதியது போக எனக்குப் பிடித்தச் சில சொற்பிரயோகங்களை எ.பி.சொ என்று கொசுறு போலப் பதிவின் கடைசியில் தரலாம் என்று விருப்பம்.

எ.பி.சொ: அகில் சேறு - சந்தனக் குழம்பு, புள்ளி மால் வரை - பெருமையுடைய இமயம் வரை, உரவுநீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம் - கடல்சூழ்ந்த நிலத்து உயிர்கலுக்கெல்லாம், மறிவிழி ஆயர்மாதர் - மான்விழி ஆயர்குலப் பெண்கள், சேத்த நீர்த் திவலை - சிவந்த நீர்த் துளி.

#இத்தோடு ஆற்றுப்படலம் முற்றிற்று. ”கம்பராமாயணம் ஃபார் டம்மீஸ்” என்கிற ரீதியில் எழுதிவருகிறேன். என்னுடைய புரிதலுக்கேற்ப இந்த எழுத்து அமைந்திருக்கிறது. கம்பனைப் படிக்கவேண்டும் என்ற உந்துதல் உள்ளவர்கள், பேரறிஞர்களின் உரைகளைப் படிப்பதற்கு முன்னர் ஒரு சாதாரண ஆரம்பப் புரட்டலுக்கு இதைப் படிக்கலாம்.

தொடர்புடைய சுட்டிகள்.
இசையறியும் பறவை.
பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை

 

Saturday, November 10, 2012

லட்டில்லாமல் வாழ்தல் அரிது!

செவ்வாய்க்கிழமை தீபாவளின்னா சனி ஞாயிறு வாக்கிலதான் பட்சணம் செய்ய ஆரம்பிப்பாள் பாட்டி. பரணில் தூசியாய்க் கிடந்த பெரிய ஜாரணி கரண்டியை கீழே இறக்கி கிணற்றடியில் போட்டு அலம்பிக்கொண்டிருந்தால் அன்றைக்கு லட்டு பிடிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். எந்த தீபாவளிக்கும் லட்டே பிரதான பட்சணம். ஆனால், ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு தனி ருஜியாய் இருக்கும்.

பத்து பதினோறு மணிக்கு ரமா பாட்டி “சின்தம்பி....” (சின்னதம்பி
) என்று சிரித்தபடியே நிலைவாசப்படியை சப்போர்ட்டாக பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தால் அன்றைக்கு லட்டு பிடிப்பது சர்வ நிச்சயம் என்பது ஊர்ஜிதமாகிவிடும்.


அடுப்பில் எண்ணை சட்டியை ஏற்றி பூந்தி பொரியும் ஓசை காதுக்கினிமை. ஹாலில் உட்கார்ந்து கேரம்மில் ரெட் அண்ட் ஃபாலோவுக்கு எய்ம் பண்ணிக் கொண்டிருந்தாலும் காதும் மூக்கும் சமையற்கட்டே கதியென்று பழியாய்க் கிடைக்கும்.

பூந்தியை ஒரு சம்படத்தில் எடுத்து கொட்டி வைத்துவிட்டு அடுத்தது சர்க்கரைப் பாகு காய்ச்சும் மணம் வீட்டை நிரப்பும். ஸ்வாசத்தில் நுழைந்த அந்த மணத்தில் மனம் சர்க்கரையாய்க் கரையும். ரெட்டாவது ஃபாலோவவது லட்டை ஃபாலோ செய்வதுதான் மோட்சத்திற்குண்டான வழி என்று பூஜை ரூம் தாண்டி சமையற்கட்டின் நிலைவாசப்படியில் நின்று எட்டிப்பார்த்தால் லட்டுக்கு ஒரு கிராம்பு, ஒரு கிஸ்மிஸ் டைமண்ட் கல்கண்டு என்று விகிதாசார வித்தியாசமில்லாமல் கலந்து ரமாபாட்டி பிடித்துக்கொண்டிருப்பாள். வாயை ”ஆ”+”ஆ” என்று திறந்தால் சரியாய் ஒரு லட்டு உள்ளே போகும். அதான் சைஸ்.

“பாட்டி..............”

“போடா! இப்பெல்லாம் சாப்டப்படாது. போ..போ......” என்று என் பாட்டி விரட்டினாலும்...

“கொழந்தேளுக்குதான் மொதல்ல. இது ஒண்ணும் நேவேத்தியம் கிடையாது. அப்புறம் என்ன? இந்தாடாம்பி... வா..வா..” என்பாள் ரமா பாட்டி.

என் பொருட்டு அன்று என்னுடன் கேரம் விளையாடும் அனைவருக்கும் தீபாவளி லட்டு. கொஞ்சம் கொஞ்சமாக கடித்துச் சாப்பிட்டால் தேவாமிர்தம். உள்நாக்கு வரை தித்திக்கும். லட்டுவின் டேஸ்ட் எதிரே சாப்பிடுபவரின் கண்களில் தெரியும்.

திண்டித் தின்காமல் என் பால்ய பருவம் இருந்ததேயில்லை. நிலக்கடலை சாப்பிட்டால் கூட “பாட்டி! கடைசிக் கடலை சொத்தை.. உன்னுட்ட இருக்கறதுலேர்ந்து ஒண்ணு குடேன்.” என்று திண்டித் தின்பேன்.

“பாட்டீ......... பாட்டீ.............”

“என்னடா?”

”இன்னோன்னு”

”அக்கா! இதுக்குதான் இந்தப் பயலுக்கு குடுக்க வேண்டாம்னேன்” என்று எகிறுவாள் என் பாட்டி. ரமாபாட்டி என் பாட்டிக்கு அக்கா வயசு.

“இதுக்குமேல கெடையாது” என்று இடது கைக்கு ஒன்று கிடைக்கும்.

தீபாவளி முடிந்து பத்து நாட்கள் வரை பல் தேய்த்து முடித்தவுடன் லட்டு, தேன்குழல் மற்றும் காஃபி (LTC) சாப்பிடுவது என்பது என் இளவயது கலாச்சாரமாக இருந்தது. சில நாட்களில் இது ரிப்பீட் போகும்.

அன்பைச் சேர்த்து ஆத்தில் பிடிக்கும் லட்டுவை ஸ்ரீகிருஷ்ணாவோ ஏஏபியோ தி கிராண்ட் ஸ்வீட்ஸோ அடித்துக்கொள்ள முடியாது. ஃப்ரெஷ்ஷான லட்டுக்கு இணையாக உசிரைத் தவிர நம்மிடத்தில் இருக்கும் எதைக் கேட்டாலும் அர்பணித்துவிடலாம். லட்டு சாப்பிட உசுரு வேண்டும்.

#லட்டில்லாமல் வாழ்தல் அரிது!
##படத்திலிருக்கும் லட்டு இணைய தேடலில் கிடைத்தது.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails