Showing posts with label நீதிக்கதை. Show all posts
Showing posts with label நீதிக்கதை. Show all posts

Wednesday, February 8, 2012

தவளைப் பாடம்

ஒரு குரூப்பாக பாழுங்கிணற்றைத் தாண்டி தவ்விச் சென்ற தவக்களைகளில் இரண்டு கால்தவறி அதற்குள் தொபகடீரென்று விழுந்துவிட்டது.

இரண்டு தவளைகளும் முழுத் தெம்பையும் உபயோகித்து குதித்து எம்பிப் பார்த்துக்கொண்டிருந்தன.

இதை மேலேயிருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சக தவக்களைகள் “உஹும்.. இது ரெண்டும் பூட்ட கேஸு. இனிமே இவன்களால நிச்சயமா எந்திரிச்சு வெளியே வரமுடியாது.” என்று தலையாட்டி பெட் கட்டி விவாதித்துக்கொண்டிருந்தன.

கரைத் தவக்களைகளின் இந்தக் கேலி சம்பாஷனையைக் கேட்ட கிணற்றில் விழுந்த ஒரு தவக்களை திராணியற்று ஸ்தம்பித்துப்போய்விட்டது. சிறிது நேரத்தில் ஹார்ட் அட்டாக் வந்து அந்த இடத்திலேயே உயிரைவிட்டது.

இன்னொரு தவளை விடாமல் எம்பியது. அந்தத் தவளை அண்ணாந்து பார்த்து தப்பிக்க மூச்சுமுட்டக் குதிக்கும்போதெல்லாம் கிணற்றுக்கட்டையில் குழுமியிருந்த தவளைகள் கைகொட்டிச் சிரித்து அதன் முயற்சியை பழித்தன.

விடாக்கொண்டனாக தொடர்ந்து எழும்பி கடைசியாக ஒரு க்ளைமாக்ஸ் ஜாக்கிசான் துள்ளலில் வெளியே வந்து குதித்துவிட்டது அந்த தவக்களை. 


ஹீரோயிஸம் காட்டிய அந்தத் தவளையை எல்லாத் தவளையும் சூழ்ந்துகொண்டு “டேய்! ஹீரோ. எப்படிடா அவ்ளோ ஆழத்திலிருந்து தப்பிச்சே” என்று தோளைத்தட்டி விசாரித்தபோது திருதிருவென்று விழித்த தப்பித்த தவக்களை “என்ன?” என்று ஜாடையாக கையை ஆட்டியது.

ஐந்தாறு முறை எல்லாத்தவளையும் கூக்குரலிட்டு கேட்டபோதும் பதிலலிக்காததால் ஒரு மோட்டா தவக்களை வாயருகில் கையை கொண்டு வந்து “பேசமாட்டியா?” என்று அபிநயத்தது.

”பஹ்..”என்று சிரித்த அந்தத் த.தவளை, “ச்சே..ச்சே... நல்லா பேசுவேன். ஆனா காதுதான் சுத்தமாக் கேட்காது”ன்னுது.

நீதி: வாழ்க்கையில முன்னேறனும்னு நினைச்சா அதற்கு தடையா அனாவசிய டயலாக்ஸ் வரும்போது காதுக்கு “கே” இனிஷியல் மாட்டிக்கோங்க. உருப்படலாம்.

Sunday, November 13, 2011

யாருக்கு அந்த முறைப் பெண்?


ஒரு ஊர்ல ஒரு கணவன் மனைவி இருந்தாங்களாம். இந்தக் கதையை இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டியிருக்கும். ரொம்பப் புராதனமான கதை சொல்லலாக இருக்கிறது. பரவாயில்லை. மேலே சொல்லுவோம். அந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகள். பார்ப்பவர்கள் மயங்கி மூச்சடைக்கும் அழகுள்ள அதிரூப சுந்தரி அவள். எங்கெல்லாம் இதுபோல அழகி இருக்கிறாளோ அங்கெல்லாம் அவளை மணமுடிக்க போட்டா போட்டியிருக்கும் என்ற உலக நியதிப்படி அவளுக்கு மூன்று முறைமாமன்கள் க்யூ கட்டி நின்றார்கள். மூவருமே அவர்களுடைய அக்காவிற்கு ஆத்ம தம்பிகள். இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க அந்த அக்கா ஒரு போட்டி வைத்தாள். ஆளுக்கு நூறு ரூபாயைக் கொடுத்து “இதை மூலதனமாக வைத்துக்கொண்டு யார் அதிகம் சம்பாதிக்கிறீர்களோ அவர்களுக்கே என் மகள்” என்றாள் சவாலாக.

மூவரும் அந்த நூறு ரூபாயை பாக்கெட்டில் திணித்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றினர். இறுதியாக மைசூரில் வந்திறங்கினர். மூத்தவன் ஒரு மாயக் கண்ணாடி வாங்கினான். யாரை நினைத்துக்கொண்டு பார்க்கிறோமோ அந்த ஆளைக் காட்டும் கண்ணாடி அது. இரண்டாமவன் ஒரு மரத்தொட்டில் வாங்கினான். அதுவும் ஒரு அதிசயப் பொருள். எங்கே செல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கே நம்மை ஏற்றிக்கொண்டு பறந்து செல்லும். இருவருக்கும் மிகவும் மகிழ்ச்சி. இவற்றினால் அக்காளைத் திருப்திப்படுத்தி அவளது மகளை மணந்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்டார்கள்.

சின்னவன் கொஞ்சம் விஷயாதி. பொறுமையாக அந்தக் கடைத்தெரு முழுவதும் சுற்றிவிட்டு கடைசியாக ஒரு பதுமை விற்கும் கடைக்குச் சென்றான். அதுவும் விசேஷமான பொம்மைதான். இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் பொம்மை அது. மிகவும் சந்தோஷமாக சின்னவன் அதை வாங்கினான். 

மூவரும் அந்தக் கடைத்தெரு முழுவதும் சுற்றிவிட்டு ஒரு மரத்தடியில் சிறிது நேரம் கண் அயர்ந்தார்கள். திடீரென்று மூத்தவன் தான் வாங்கிய பொருளை சோதித்துப் பார்க்க எண்ணினான். கண்ணாடியைத் தன் முன்னால் விரித்து வைத்துக்கொண்டு தன் அக்கா மகளை நினைத்தான். அப்போது அவன் கண்ட காட்சியால் மூர்ச்சையடைந்தான்.  அக்கா மகள் பிணமாகக் கிடந்தாள். அக்காள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

உடனே பக்கத்திலிருந்த இரண்டாமவன் தனது தொட்டிலில் அண்ணனையும் தம்பியையும் ஏற்றிக் கொண்டு ஊரை நினைத்தான். கணநேரத்தில் தொட்டில் பறந்து வந்து அவர்களை ஊரில் தரையிறக்கியது. தொட்டிலிலிருந்து குதித்து ஓடிய சின்னவன் தனது அபூர்வமான பொம்மையால் இறந்து கிடந்தவளை பிழைக்கவைத்தான். 

கொடுத்த காசை உருப்படியாக செலவழித்த சின்னவனுக்குத்தான் தனது பெண்ணை அக்காள் கட்டிவைத்தாள் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமோ?

பின் குறிப்பு: தலைப்பினால் கவரப்பட்டவர்களுக்கு ஒரு செய்தி. அவரவர் விதிப்படி முறைப்பெண் கிட்டும் என்பதறிக. பேரா.இரா.மோகன் தொகுத்த ”விருந்தும் மருந்தும்” என்ற நூலிலிருந்த வட கன்னட நாட்டுப்புறக் கதை. மூலத்திலிருந்த கதைமொழி இங்கே என் மொழியில். பறந்து வருவதற்கு தொட்டிலும், பார்ப்பதற்கு அந்த மாயக் கண்ணாடியும் இல்லையென்றால் சின்னவனுக்கு சான்ஸ் கிடைத்திருக்குமா என்றெல்லாம் பட்டிமன்றம் போட்டு ஆராயாமல் கதையைப் படித்து இன்புற்றமைக்கு நன்றி.

படக் குறிப்பு: பழைய கதையாதலால் cinefundas.com-ல் கண்டெடுத்த சரோஜாதேவி இங்கு அதிரூப சுந்தரியாக வர சம்மதித்தார்.

-

Friday, November 4, 2011

மக்கு நான் கொக்கல்ல


சலனமற்ற காடு தனிமையில் ஆழ்ந்திருந்தது. பட்சிகளின் பண்ணிசையும் காற்றின் ”ஹோ” என்ற ஓசையையும் தவிர்த்து நிசப்தமாக இருந்தது. ஜடாமுடியுடன் ஒரு தவஸ்ரேஷ்டர் ஏரிக்கரையில் நின்று நித்யானுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தார். “க்ரீச்..க்ரீச்” என்ற பறவையின் சப்தத்தைத் தொடர்ந்து ’சொத்’தென்று அவர் சூரியனை நோக்கி ஏந்திய கையில் ஏதோ விழுந்தது. அது பறவையின் எச்சம். கோபாவேசமாக அண்ணாந்து அக்னிப் பார்வையை விண்ணில் செலுத்தினார். அவரது பார்வையில் அங்கே பறந்து கொண்டிருந்த எச்சமிட்ட கொக்கு பஸ்பமாகி செத்துக் கீழே விழுந்தது.

பொசுக்கியவர் பெயர் கௌசிகன். வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். வயதான தாய் தந்தையரின் சொல்லைக் கேளாமல், அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காமல் "தவமே சிறந்தது” என்று கங்கணம் கட்டிக்கொண்டு காடுகளில் கௌசிகன் பன்னெடுங்காலமாக கடும் தவம் புரிந்தார். கௌசிகனுக்கு கொக்கு பொசுங்கியதில் ஆச்சர்யம். ஆஹா. நமக்கு தவப்பலன் பூரணமாகக் கிடைத்துவிட்டது என்று அகமகிழ்ந்தார். புதிய சக்திபெற்ற சந்தோஷம் மற்றும் சுடுபார்வை ஒரு அப்பாவி ஜீவனைக் கொன்றுவிட்டதே என்ற வருத்தம் என்று கலவையான எண்ணத்தில் காட்டை விட்டு பக்கத்துக் கிராமத்திற்கு பிக்ஷைக்கு கிளம்பினார்.

நாளுக்கொரு வீடு பிக்ஷை எடுத்து உண்பது என்று முடிவு செய்தவராய் “பவதி பிக்‌ஷாம் தேஹி” என்று இருகையையும் ஏந்தி நின்றார். மூன்று முறை கேட்டு ஒரு வீட்டிலிருந்து பிக்‌ஷை அரிசி வரவில்லையென்றால் அன்றைக்கு பட்டினி தான். உள்ளுக்குள் கோபம் ஆறாக ஊற்றெடுக்கத் தொடங்கியது. மீண்டும் ஒருமுறை “பவதி பிக்ஷாம் தேஹி” என்று உரத்தக் குரலில் பிக்ஷை கேட்டார். இவரைப் பார்த்துக்கொண்டே அந்த வீட்டின் இல்லத்தரசி கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள். இப்பவும் பதில் வரவில்லை. கௌசிகனுக்கு முகம் ஜிவ்வென்று சிவந்தது. கோபத்தின் உச்சிக்கு சென்று இன்னும் சப்தமாக “பவதி பிக்ஷாம் தேஹி” என்று குரலை உயர்த்தினார்.

அச்சந்தர்ப்பத்தில் அப்பெண்மணியின் கணவனார் வேலையிலிருந்து வீடு திரும்பினார். கொல்லைப்புறத்தில் இருந்தவள் போட்டது போட்டபடி ஓடிடோடி வந்தாள். வாசலில் கையேந்தி நின்றவரைப் பார்த்து “கொஞ்சம் பொருங்கள்” என்று கையால் சமிக்ஞை செய்துவிட்டு கணவனுக்கு சிஸ்ருஷ்டை செய்யலானாள். இவருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு அவளுக்காக காந்திருந்தார்.

கோபம் எல்லைமீறிப் போய் சபிக்கலாம் என்று நினைக்கும் வேளையில் அந்த வீட்டின் குலஸ்திரீ கையில் அரிசியுடன் பிட்சையிட வந்தாள். அவளை சுட்டெரித்துவிடும் பார்வையை அவள் மேல் வீசினார் கௌசிகன். அப்பெண்மணி கற்புக்கரசி. மாதரசி. சிரித்த வண்ணம் சாந்தமாக “உன் கோபப்பார்வையில் சுட்டுப் பொசுக்கிவிடுவதற்கு என்னை அந்தக் கொக்கென்று நினைத்தாயோ?” என்று கேலியாகக் கேட்டாள்.

ஆளரவமற்ற பகுதியில் தான் கொக்கை எரித்தது இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று கௌசிகனுக்கு மிகுந்த ஆச்சரியம். 

“அம்மா! நீங்கள் உத்தமமான பெண். நான் காட்டில் கொக்கை எரித்தது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று பணிந்து கேட்டார் கௌசிகன்.

 ”முனிவரே! நான் என் இல்லத்து தேவைகளனைத்தையும் குறையில்லாமல் நிறைவேற்றுகிறேன். எனது வயதான மாமியாரையும், மாமனாரையும் சொந்த தாய் தகப்பன் போல போற்றிக் காத்து வருகிறேன். மேலும், எனது கணவருக்கு செய்ய வேண்டிய பணிவிடைகள் அனைத்தையும் குறையில்லாமல் செய்கிறேன். என்னுடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு அவர்கள் மனம் கோணாமல் தாராளமாக பொருள் தருகிறேன். என் கணவருக்கு சேவை செய்தபின் நேரமிருப்பின் மற்றவர்களுக்கு உபகாரமாக இருக்கிறேன். இதுதான் என்னுடைய தர்மம். உங்களுக்கு மேலும் விவரம் வேண்டுமென்றால் மிதிலையில் தர்மவியாதரன் என்றவரிடம் போய் தர்மத்தின் விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினாள்.

அம்மாதருள் மாணிக்கத்தை வணங்கி விடைபெற்று மிதிலை மாநகரத்திற்கு சென்றார் கௌசிகன். இவ்வளவு பெரிய நகரத்தில் தர்மவியாதரனை எங்கு தேடுவது என்ற யோசனையில் அங்கு கடைவீதியில் விசாரித்தார். ஒரு மாமிசம் விற்கும் கடையைக் காட்டி அங்கிருப்பவர் தான் தர்மவியாதரன் என்றார்கள்.

கசாப்புக்கடை வைத்திருப்பவரிடன் என்ன தர்மத்தை நாம் எதிர்பார்க்க முடியும் என்ற எண்ணத்தோடு அந்தக் கடையை நெருங்கினார் கௌசிகன்.

மிகவும் தயக்கத்தோடு “தர்ம வியாதரன்....” என்று சங்கோஜமாக கேட்ட கௌசிகனுக்கு “வாருங்கள்.. வாருங்கள்... நீங்கள் கொக்கை எரித்ததை ஞானக்கண்ணால் கண்ட பதிவிரதையான பெண்மணி சொல்லி என்னிடம் தர்ம விளக்கம் பெற வந்திருக்கிறீர்கள். வரவேண்டும். வரவேண்டும். எனது வீட்டிற்கு சென்று பேசலாம்” என்று அன்போடு அழைத்துச் சென்றார்.

ஏற்கனவே கொக்கை எரித்ததை எங்கிருந்தோ கண்டுகொண்ட அந்த பதிவிரதை பற்றிய ஆச்சரியத்துடன் வந்தவர் இங்கே தர்மவியாதரரின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போனார்.

வீட்டில் தனக்கு அநேக உபசாரங்களைச் செய்த தர்மவியாதரரிடம் “எங்கோ நடைபெற்ற சம்பவங்களை இங்கிருந்தே அறிந்த நீர் பல தர்மங்களை தெரிந்தவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. இருந்தாலும் இந்த மாமிசம் விற்கும் தொழிலை ஏன் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“இது என்னுடைய குலத்தொழில். என்னுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இத்தொழிலை செய்துவருகிறோம். இது கொஞ்சம் மோசமான தொழில் தான். ஆனால் முன் பிறவில் நான் செய்த வினையை இப்போது அனுபவிக்கிறேன். இப்புவியில் வசிக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஒன்றிர்கொன்று உணவாக அமைகிறது. இயற்கையை ஒட்டியும் நேர்மையாகவும் நான் செய்யும் இத்தொழில் மோசமானது அல்ல.”

இதன் பின்னர், பல தர்ம விளக்கங்களை கௌசிகனுக்கு எடுத்துக் கூறலானார் தர்மவியாதரன்.

“பொய் பேசுவதை மனிதர்கள் விட்டுவிட வேண்டும். நன்மைக்கு அளவுகடந்த இன்பப் படுவதும், தீமைக்கு துன்பக்கடலில் வீழ்வதும் முற்றிலுமாக தவிக்கவேண்டிய குணங்கள். தர்மம் மிகவும் நுட்பமானது. இக்கட்டான வேளைகளில் தர்மம் காக்க பொய் சொல்லலாம். ஆபத்தில் சொன்ன பொய்யை மற்றவர்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பின்னர் பிரிதொசொல்வது பாபத்தை விளைவிக்கும்.

இவ்வுலகத்தில் கெட்டவன் சுகிப்பதும், நல்லவன் நலங்கெட்டுப் போவதும் தத்தம் முன்வினைப்பயனே! அவரவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப அடுத்த பிறவியில் வாழ்கிறார்கள்.

அதற்கு கௌசிகர், “இன்னார் பிறந்தார், இறந்தார் என்றால் அது அந்த ஜீவனைப் பற்றித்தானே, அப்படியிருக்கையில் ஜீவன் அழிவற்றது என்று எப்படிக் கூறலாம்?” என்று கேட்டார்.

“ஒருவர் இறக்கும்போது அழிவது சரீரம்தானே தவிர ஜீவன் அல்ல. ஜீவன் ஒரு உடலை விடும் பொழுது இறப்பு என்றும் இன்னொரு உடலை அடையும் பொழுது பிறப்பு என்றும் கூறுகிறார்கள். சரீரம்தான் அழிகிறதே தவிர ஜீவன் அழிவற்றது. ஜீவன் அமரத்தன்மை வாய்ந்தது.” என்றார் தர்மவியாதரர்.

மேலும் அவர் கூறினார்: “மனிதன் மூவகைக் குணங்களோடு படைக்கப்பட்டிருக்கிறான். தமோ, ரஜஸ், சத்வ என்று அவை வகைப்படும். தமோ குணம் படைத்தவன் சோம்பேறியாகவும், முட்டாளாகவும் இருப்பான். ரஜஸ் படைத்தவன் பொருள் ஈட்டுவதிலும், சக்தி உள்ளவனாகவும் இருப்பான். ஆனால் அவனிடம் தான் என்ற அகந்தையும் இருமாப்பும் இருக்கும். சத்வ குணம் படைத்தவன் சாந்தமாகவும், பற்றற்றும் இருப்பான். பொருள் ஈட்டுவதில் அவன் மனம் செல்லாது”.

இப்படி பல தர்மங்களை கௌசிகருக்கு எடுத்துரைத்து தாய் தந்தையருக்கு பணிவிடை செய்து புண்ணியம் பெற்றுக்கொள்ளுமாறு தர்மவியாதரர் உபதேசித்தார்.

பின்குறிப்பு: மகாபாரதத்தில் மார்க்கண்டேய மகரிஷி தர்மபுத்திரருக்கு வனபர்வத்தில் சொல்லும் இக்கதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய வழக்கமான மொழியை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அடக்கமாக எழுதினேன். போரடித்திருக்கலாம். இருந்தாலும் காலை வாக்கிங்கில் கசாப்புக்கடை பார்த்ததும் ஞாபகம் வந்ததால் எழுதினேன்.

பட உதவி: mbp.photoshelter.com

-

Tuesday, November 16, 2010

ரஸவாதம்

pebble beachபழங்காலத்தில் ஒரு ஊரின் மிகப் பெரிய நூலகம் மொத்தமாக தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த அத்தனை அறிய புத்தகங்களும் பற்றி எரிந்து சாம்பலானது. ஒரே ஒரு புத்தகம் மட்டும் காப்பாற்றப்பட்டது. அது ஒன்றும் சுவாரஸ்யம் இல்லாத புத்தகம். கேட்பாரற்று அந்த சாம்பலில் கலந்து ஒன்றாக கிடந்தது. ஏதோ கொஞ்சம் எழுத்துக்கூட்டி படிக்கும் திறமை மட்டும் உள்ள ஒரு சாமானியன் அந்த புத்தகத்தை கையில் இருந்த சில்லறையை கொடுத்து வாங்கிச் சென்றான்.

அதைக் கொண்டுபோய் வீட்டில் உட்கார்ந்து பொறுமையாய் ஒவ்வொரு பக்கமாக திருப்பி தனக்கு தெரிந்த வரையில் படித்துப் பார்த்தான். சில பக்கங்கள் புரட்டிய பிறகு ஒரு சின்ன சிட்டில் "ரஸவாதம்" என்று எழுதி மடித்து வைக்கப்பட்டிருந்தது. ஆர்வம் தாங்காமல் அந்த சின்ன பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பித்தான். அதில் அந்த ஊரின் கடற்கரையில் உள்ள ஒரே ஒரு கூழாங்கல்லின் அதிசயத்தக்க ஆற்றல் பற்றி குறிப்பிட்டிருந்தது. அந்த கல்லின் மகத்துவம் என்னவென்றால் அந்த குறிப்பிட்ட கூழாங்கல்லை கொண்டு எந்த உலோகத்தை தொட்டாலும் அது ஸ்வர்ணம் ஆகிவிடும். அந்த கூழாங்கல்லை கையில் எடுத்தால் கொஞ்சம் மிதமான சூட்டோடு வெதுவெதுப்பாக இருக்கும் என்பது தான் அந்தக் குறிப்பின் அதிமுக்கியமான கவனிக்கவேண்டிய விஷயம்.

அப்படியே புளகாங்கிதம் அடைந்து தன்னிடம் உள்ள சில தட்டுமுட்டு சாமான்களையும் இன்ன பிற சொத்துக்களையும் விற்றுவிட்டு கையோடு வேலைக்கு ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு கடலோரத்தில் ஒரு பர்ணசாலை அமைத்துக்கொண்டான். தினமும் காலையில் இருந்து மாலை கதிரவன் மறையும் நேரம் வரை கூழாங்கல்லை கையில் எடுத்துப் பார்ப்பான். ஜில்லென்று இருந்தால் எடுத்து கடலில் வீசி எறிந்துவிடுவான். மீண்டும் மற்றொன்றை எடுப்பான். ஜில்லென்று இருந்தால் சமுத்திரத்தில் வீசிவிடுவான். இப்படியே நாட்கள் வாரங்களானது வாரங்கள் மாதங்களானது மாதங்கள் கரைந்து ஒரு வருடம் நெருங்கியது.  காலை முதல் மாலை வரை பொறுக்கி எடுத்து கடலில் தூக்கி எறிவது என்பது அவனது அன்றாட வாடிக்கையானது. ஒரு நாள் கையில் எடுத்த கூழாங்கல் வெதுவெதுப்பாக இருந்தது. ரஸவாதக் கல்லின் அணைத்து குணங்களையும் அது பெற்றிருந்தது. மாதக்கணக்காக கூழாங்கல்லை கையில் எடுத்தால் கடலில் வீசி எரிவதையே தொழிலாக கொண்டிருந்தவன், இதையும் எடுத்து வீசி எறிந்துவிட்டான்.

இதனால் விளங்கும் நீதி என்னான்னா.. (இது ஒரு நீதிக்கதை. இதை முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு தூரம் படிச்சிருக்க மாட்டோம்!! சை..)... வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு என்பது ஒரு முறை தான் வந்து நம்ம வீட்டு கதவை தட்டும். தட்டிய வாய்ப்பை நழுவ விடாமல் கதவைத் திறந்து இறுகப் பற்றிக் கொள்பவனே புத்திசாலி.

இந்த நீதிக்கதை எனக்கு மின்னஞ்சல் மூலமாக ஒரு உருப்படியான நண்பர் அனுப்பியது.

-

பட உதவி: http://picasaweb.google.com/superior.north.region

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails