Sunday, October 22, 2017

பங்குனி பெருவிழா - இரண்டாம் பாகம்

”பெரிய திருநா கடை போட்டான்னா இந்த முறுக்குப் பிழியற நாழி ஒண்ணு வாங்கணும்டீ பவானி” என்பாள் பாட்டி. ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் பங்குனி பிரம்மோத்ஸவத்துக்கு மன்னையில் ”திருவிளாக் கடை” போடுவார்கள். விடையாற்றி வரையில் மக்கள் வருவதும் போவதுமாய் முப்பது நாட்கள் கடை இருக்கும். முழு ஆளைப் போட்டு வறுத்தெடுக்கத் தோதாக இருக்கும் மண் அடுப்பு எரியும் நிலக்கடலைக் கடைதான் பிள்ளையார் சுழி. பட்டாணி படாரென்று வெடிக்க... சூடாகக் கடலை வறுபடும் வாசனைச் சுண்டி இழுக்கும். பின்னர் சமையல் ஐட்டங்கள், அமுக்கினால் குதித்தோடும் நாய், விளக்கேற்றி வைத்தால் தண்ணீரில் ஓடும் தகரப் படகு, பம்பரம், பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் சாதனங்கள் என்று ஐந்தடிக்கு ஐந்தடி வேஷ்டி வேலிக்குள் ஒரு கடை.
“இது போன வருஷமே வாங்கினேயேடா... தம்பி... ஒவ்வொருவருஷமும் இதையேதான் வாங்கறான். பாவம் அவனுக்குப் புதுசாக் கூட வெளையாடத் தெரியல...” என்று Bombay Trade Game வாங்கியதை சக பாட்டிகளிடம் சொல்லி கிண்டலடிப்பாள் பாட்டி.
கோபாலனின் பங்குனி பிரம்மோற்சவத்தில் பெரிய திருநாள் என்பது ”சிம்ஹ வாகனத்தில்” ஆரம்பிக்கும். சிம்ஹ வாகனத்தில் இராஜா அலங்காரம். கோபாலன் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் சேவை சாதிப்பார். ஒரு நாள் ராஜாவாக இருந்தால் அடுத்த நாள் சூர்யபிரபையில் வேணுகானம் வாசித்து கோபியர்களை மயக்கிய குழலூதும் கண்ணன் அலங்காரம். நேத்திக்கு பிரஜைகளின் காவலன் இன்று கோபிகாஸ்த்ரீகளின் காதலன். தங்கசூர்யபிரபை தீவட்டி வெளிச்சத்தில் தகதகக்கும். அந்த வட்டத்திற்குள் ஒய்யாரமாக குழலூதும் கண்ணன்.
ரோட் ஸைட் ரோமியோ என்பது போல ஆல் ஸைட் ரோமியா கோபாலனுக்குதான் பொருத்தமாக இருக்கும். வீதியுலாவில் கோபாலன் அழகை என்னால் சொல்லில் வடிக்கமுடியாது என்பதால் ஊத்துக்காடு வேங்கடகவியின் குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்பும் பாடலில் வரும்..
மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும் ........
மிகவும் எழிலாகவும் ....... காற்றில்
மிளிரும் துகில் ஆடவும் ....

சிருங்காரம் ததும்பும் இந்தப் பாடல் உங்களுக்கு அப்போது நினைவுக்கு வந்தால் பரமசுகம்தானே.
அடுத்தநாள் வெள்ளி சேஷ வாகனப் புறப்பாடு பத்து மணிக்கு மேல் ஆகிவிடும். அதுவும் நாலாம் தெரு தாண்டி கோபிநாதன் கோயில். சேரங்குளம் டோர்னமெண்ட்டுக்கு சைக்கிளில் போகும் போது பார்க்கும் கோபுரம் அந்தக் கோயில். “வெங்கடாசலம் வண்டி ஓட்ட முடியாதும்பன்... ரொம்ப நாழி ஆறதும்மான்னு கயண்டுப்பன்....தம்பி... புறப்பாடுக்கு வேட்டு போடற சத்தம் இங்க கேட்குமோடா?” என்று கேட்டுக்கொண்டே கேட்காத காதைத் தடவிக்கொண்டே சயனத்துக்குப் போய்விடுவாள் பாட்டி. ஒரு வருஷம் திருவிழாவுக்கு வெங்கடாசலம் மாட்டு வண்டியில் சென்றுவிட்டு கண் தெரியாமல் முப்பது டிகிரிக்கு குடைசாய்வது போல ரோட்டை விட்டு இறங்கிவிட்டது. “சேச வாகனம் மட்டும் கஸ்டம்மா” என்று அப்போதிலிருந்து வெங்கடாசலம் வண்டி கட்டாமல் ஒதுங்கிவிட்டார்.
கருடவாகனம். கோயில் புறப்பாடு. வேட்டுப் போட்டால் கூட வீட்டிலிருந்து வேகமாக ஓடிவந்தால் கோபாலனைப் பிடித்துவிடலாம். காலை ஒய்யாரமா வெச்சுண்டு கருடன் மேலே எழுந்தருளுவார். ”வேதங்களே கருடனா வந்ததாலே பாதம் கருடன் தோள் மேலே படாது பாருங்கோ... லேசா தூக்கிண்டிருப்பார்” என்று தென்னாங்கூரில் புறப்பாட்டின் போது அர்ச்சகர் மாமா சொல்வது இப்போது நினைவுக்கு வந்தது. வைரமுடி சேவை. புறப்பாடுக்குப் பின்னர் தேரடி வரை குடுகுடுன்னு ஓடி வந்துடுவார். அங்கே ஒரு சின்ன நாதஸ்வரக் கச்சேரி நடக்கும். பின்னர் இரட்டைக் குடை சேவை ஆகும். இரண்டு பெரிய வெண்குடைக்குள் வைரமுடி சேவையில் கோபாலன் அருட்பார்வை அமுதம். பெரும்பாலும் கோயில் புறப்பாடு நடைதான். திரும்பும் போது தாலுகாஃபீஸ் ரோடு முனையில் நிற்கும் கடலை வண்டிக்காரரிடம் ஐம்பது காசுக்கு வ.கடலை கூம்பு வாங்கிக் கொண்டு காலியாவதற்குள் வீடு வந்து சேர்ந்துவிடலாம்.
அடுத்த நாள் அனுமந்த வாகனமும் தேரடிதான் புறப்பாடு. காலை பல்லக்கு புறப்பாட்டில் காளிங்க நர்த்தன சேவை. பல்லக்குக்குள் காளிங்க நர்த்தன கிருஷ்ணனை காணக் கண் ஆயிரம் வேண்டும். மாலையில் ஆண்டாள் நாச்சியார் திருக்கோலத்தில் கோபாலன். இரவு அனுமந்த வாகனத்துக்கு ஒரு விசேஷம் உண்டு. தேரடித் திடல் வடுவூர் துரைசாமி நூலகத்துக்கு முன்னால் வெடி போடுவார்கள். ஐந்து நிமிடத்துக்கு ”பட்பட்படார்பட்பட்படார்...” என்று தாளகதியில் சரமும் எல்லாவற்றிர்க்கும் மகுடம் வைத்தாற்போல கிளைவெடி என்றொரு வகையறாவும் உண்டு. மரம் போல நிற்க வைக்கப்பட்ட வெடியில் கிளைகளில் தொங்கும் கனிகள் வெடித்து கடைசில் உச்சியில் இருக்கும் பெரிய வெடி காது கிழிய அணுகுண்டு சோதனை நடத்தும். தாமரைக்குளம் தாண்டி வரும் மீன்கடைச் சந்து கடந்தால் வாணக்காரத் தெரு வரும். அப்பெருமக்களின் வெடி பங்களிப்புதான் இவ்வேடிக்கைகள். ஒரே நாளில் காளிங்க நர்த்தன கிருஷ்ணனாக, ஆண்டாளாக அனுமன் மேலே இராமனாக என்று விதம் விதமாக கோபாலன் தரிசனம்.
வாணக்காரத் தெரு வழியாகவும் யானை வாகன மண்டபம் செல்லலாம். அப்படிதான் வெங்கடாசலம் வண்டியில் அழைத்துக்கொண்டு செல்வார். “ஹே..ஹே”வுக்கு மட்டும் ஓடும் செல்ல மாடு அது. யானை வாகனத்தில் ராஜகோபாலன் ராஜா அலங்காரத்தில் சேவை. சங்கும் சக்கரமும் போட்ட நீலக்கலர் திரை திறக்க மண்டப ஓரத்தில் வண்டியில் அமர்ந்தே பார்த்துக்கொண்டிருப்போம். இரண்டு வேட்டுக்குப் பிறகு கம்பீரமாக உலா வருவார்.
கோரதம் கலர்க் கலர் சீரியல் விளக்குகளோடு தேரடியில் பார்த்துவிட்டு அன்று முழுவதும் திருவிளாக் கடை பார்ப்பதுதான் வேலை. கிருஷ்ண தீர்த்தம் அருகே ஜெயண்ட் வீல் ராட்டினம் போட்டிருப்பார்கள். “இன்னிக்கி எதுவும் வாங்க வேண்டாம்.. ஆத்துக்குப் போகலாம்...” என்று கோரதம் அன்று கையைப் பிடித்து தரதரவென்று ஒரு திருவிழாவுக்கு வீட்டிற்கு இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். சோகமாக வாசல் படியில் உட்கார்ந்து ஆட்டீன் பலூன் வாங்கிக்கொண்டு போகும் சிறுவனைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது “அப்படியே தலையே பிச்சுண்டுடுத்தாமே...” என்று ரமா பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு வெளிறினேன். ஜெயண்ட் வீலில் சுற்றிய பக்கத்துக் கிராமப் பெண்ணின் பின்னிய கூந்தல் மாட்டிக்கொண்டு மண்டைஓட்டிலிருந்து மொத்தமாக பிய்த்தெறிந்துவிட்டதாம். அகோரம். ஊர் முழுக்க இரண்டு நாட்கள் இதே பேச்சாக இருந்தது.
மரணக்கிணறு என்று ஒரு விளையாட்டு. ரெண்டு ரூபாய் டிக்கெட் என்று நியாபகம். தேரடியிலிருந்து பஸ்ஸ்டாண்ட் செல்லும் சாலையில் பெரிய போஸ்ட் ஆஃபீஸ் முன்னால் கொட்டாய் போட்டிருப்பார்கள். இருபது முப்பது அடி ஆழத்திலிருந்து டூவீலரில் “டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”ரென்று டரியலாக மேலே ஏறிவருவார் கழுத்தில் கர்ச்சீப் கட்டிய ஆசாமி ஒருவர். அவர் ஏறுவதற்குள் பூர்வ பீடிகை அதிகம். ம்யூசிக் போட்டு அவர் வண்டியின் காதை இரத்தம் வர “டர்ர்...டர்ர்ர்..டர்ர்ர்ர்ர்...” என்று திருகி கொடுத்த காசிற்கு பத்து நிமிடம் நிற்க வைத்து வித்தை காட்டுவார். அதற்கு அடுத்ததாக கடல்கன்னி கொட்டாய். ஒரு ஜன்னலில் முகமும் அடுத்த ஜன்னலில் மீன் வாலுமாக ஒரு பெண் படுத்திருப்பாள். நடுவில் என்ன என்று அறியும் ஆர்வம் அப்போது இருந்தது. இப்போது விளங்கியது.
வெண்ணைத்தாழி முக்கியமான திருநாள். வெண்ணைத் திருடனை பல்லக்கில் தூக்கி வருவார்கள். பூவரசு இலையில் ஒரு பொட்டு வெண்ணை வாங்கி அவன் மேல் எறிவார்கள். பல்லக்கில் ஏறி வரும் தீக்ஷிதருக்கும் வெண்ணைக் காப்பு நடக்கும். “பின் பக்கம் வாடா...” என்று இழுத்துச்சென்று பின்னல் அலங்காரமும் முட்டி போட்டிருக்கும் அவனது பின்னழகையும் கண்டு ரசிப்பது பக்தர்களின் பொழுதுபோக்கு. மாலையில் வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டியார் அலங்காரத்தில் கையில் தராசோடு கோபாலன். பின்னர் அன்று இரவு வெட்டுங்குதிரை. ராஜா அலங்காரத்தில் செட்டித்தெருவில் வையாளி போவார்கள். அதாவது குதிரை ஓடுவது போல இங்குமங்கும் அந்தத் தெருவில் ஓடிவருவார்கள்.
அன்று பந்தலடியில் குறவன் குறத்தி ஆட்டமெல்லாம் உண்டு. விஸ்தாரமான நாதஸ்வர கச்சேரிகளும் நடக்கும். பெரியகோயில் திருவிழா என்பது சுற்றுப்பட்டு கிராமங்களுக்கெல்லாம் பெரும்விழா. ஒரு முறை கௌரி என்னுடன் வெ.குதிரைக்கு வந்தான். பந்தலடியில் குறவன் குறத்தி ஆட்டம் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. பொம்பளை வேஷம் போட்ட ஆம்பளைக் குறத்தியைப் பார்க்க ஆயிரம் ஆம்பளைகள் சுற்றி நின்று வேடிக்கை. கௌரியும் நானும் அதைக் கண்கொட்டாமல் இரசித்துக்கொண்டிருக்கும் போது இரவு பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. “போலாம் வா..” என்று கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தேன். ஹரித்ராநதி நுழைவதற்கு முன்னர் சின்ன கான்வெண்ட் அருகில் ஒரு கட்டையில் அதற்கு மேலும் ஏதோ பேசிக்கொண்டு அமர்ந்திருந்தோம்.
“டேய்.. போலாம்டா..”
“இன்னும் கொஞ்ச நேரம்.. போலாம்..”
“ரொம்ப லேட்... பன்னெண்டுக்கு மேலே ஆச்சுடா...”
“போலாம்.. போலாம்..”
நேரம் துரிதமாக ஓடிக்கொண்டேயிருந்தது. தூரத்தில் சைக்கிளில் இருவர் வருவது தெரிந்தது. உடனே கௌரி ஆர்வமாக எழுந்தான். உடனே என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.. “டேய் மாப்ள.. வா போவோம்...” என்று என்னை இழுத்துக்கொண்டு திரும்பவும் வந்த வழியே சைக்கிளை மிதித்தான். “டேய்.. நாம்ப இப்படிப் போகனும்..” என்று சொல்லிக்கொண்டே திரும்பிப் பார்த்தேன்.
அந்த மயில் அதன் போலீஸ்கார மாமாவுடன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தது. அது தனியாகவோ அல்லது தோழிகளுடன் வருமெனக் காத்திருந்த கௌரிக்கு போலீஸுடன் வந்தவுடன் அட்ரலின் சுரக்க எஸ்கேப் ஆகியிருக்கிறான் என்று புரிந்தது. வீடு வரும் வரை அவனை வெறுப்பேற்றி வயிறு வலிக்கச் சிரித்தேன். அடுத்த சில நாட்கள் அர்த்த புஷ்டியுடன் “மாப்ள..” என்றாலே கன்னம் சிவந்தான் கௌரி.
திருத்தேர் பற்றி என்னுடைய முந்தைய மன்னார்குடி டேஸ் - பங்குனிப் பெருவிழா முதல் அத்தியாயத்தில் எழுதிவிட்டேன். விடையாற்றி திருவிழாவில் இலக்கிய பட்டிமன்றங்களும், வீரமணி, சீர்காழி சிவசிதம்பரம் போன்றோரின் இறையிசைக் கச்சேரியும், அபூர்வமாக ஆர்கெஸ்ட்ராவும், புலவர் கீரன் போன்றோரின் உபன்யாஸங்களும் கேட்டது பற்றி விரிவாக வேறொரு பதிவில் பார்க்கலாம். நன்றி!
பங்குனிப் பெருவிழாவில் பெரிய திருநாட்கள் பற்றி என்னை எழுதத் தூண்டிய என் நண்பன் Rajagopalan Rengarajan க்கு இப்பதிவு சமர்ப்பணம்.
மன்னார்குடி மஹாத்மியங்கள் தொடரும்.......
படம்: இன்றைக்கு சிம்ஹ வாகனம். ராஜா அலங்காரத்தில் ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி, மன்னார்குடி.
பட உதவி: Vicky Vicky

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails