Sunday, October 22, 2017

அன்பின் அமரத்துவம்

ஸ்ரீரங்கத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்ரீ. விஜயராகவன் கிருஷ்ணன் ஒரு வீடியோவை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது ஒரு துக்க செய்தி (அ) காணொளி. அதாவது ஸ்ரீரங்கத்து தேவதைகளில் வாத்யார் சுஜாதா எழுதியிருந்த கேவி என்றழைக்கப்படும் கேவி அரங்கன் திருவடிகளை அடைந்துவிட்டார். இடுகாடு சம்பந்தபட்ட விஷயங்களிலும் அபர காரியங்களிலும் கேவி மாமா ஸ்ரீரங்கரபுரவாசிகளுக்கு நிறைய ஒத்தாசை செய்திருக்கிறார். இதனால் அவருக்கு வெட்டியான்களிடம் நல்ல பரிச்சயமும் அன்னியோன்னமும் ஏற்பட்டிருக்கிறது.
அந்த ஸ்நேகிதம் எந்த அளவுக்கு போனது என்றால், அவரது இறப்புக்குப் பின்னர், வெட்டியான்கள் அவர்களது வழக்கப்படி ஆளுயர மாலையுடன் பறையடித்து ஆட்டத்துடன் சித்திரை வீதி வந்து கேவி மாமாவின் பூதஉடலுக்கு மரியாதை செலுத்தினர். கேவி மாமாவின் வீட்டிலும் தங்களது சாஸ்திரங்களில் இதுபோன்ற காரியங்களுக்கு இடமில்லையென்றாலும், இதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் உளமார்ந்து அனுமதியளித்தனர். இந்தச் செயல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. இந்த இரண்டு நாட்களில் இச்சம்பவம் மூளையில் மின்னல் வெட்டுகிறது. அப்போது கசிந்த சில சிந்தனைகள்.
ஜாதி மத பேதங்களுக்குப் அப்பாற்பட்டது அன்பும் பாசமும். நமக்கு உதவி செய்பவர் மேல்தான் நாம் அன்பு செலுத்தவேண்டும் என்பது கட்டாயமில்லை. கேவி மாமா யார்யாருக்கோ செய்த உதவிகளைக் கண்கூடாகப் பார்த்து அவர்மேல் அந்த இடுகாட்டு பணியாளர்களுக்குப் பிரியம் வளர்ந்திருக்கிறது. ஆகையால் பொதுவாகவே நாம் நிபந்தனையற்ற அன்பு செலுத்தும் போது அந்த Aura நம்மைச் சுற்றிப் பரவுவது தெரிகிறது.
அன்பு மழை மனசைக் குளிர்விக்கிறது. அது பெய்தவுடன் ஏற்றத்தாழ்வுகள் மறைந்துபோகின்றன. பாறையிலும் நேசப்பூ பூக்கிறது. அன்பே சிவம் அன்பே சத்தியம். அன்பே நீயும். அன்பே நானும். உள்ளத்தின் அடியாழத்தில் அது தேங்கிக்கிடக்கிறது. சமயம் வாய்க்கும் போது ஜகடை கயிற்றில் கட்டிய வாளியில் நீராய் மொண்டு உள்ளக்கேணியிலிருந்து மேலே வருகிறது. இன்னாரென்று பாராமல் வாளி நிரப்பியிருந்த அன்பை வார்த்தைகளாலும் செயல்களாலும் அள்ளித் தெளித்துவிடுகிறோம்.
அன்பு செலுத்தப்பட ஜீவன் அகமகிழ்கிறது. "ஆஹா.. அது அன்பினால் நனைந்திருக்கிறதே..." என்று அதைக் கேட்ட/பார்த்த இன்னொரு ஜீவன் தனக்குக் கிடைத்தது போலவே அதைக் கொண்டாடுகிறது. பரோபகாரத்தில் ஏற்படும் திருப்தி அமரத்துவம் வாய்ந்தது. என்றும் போற்றத்தக்கது. அதிகாரத்தினால் அடையும் பேரரசுகளைக் காட்டிலும் அன்பினால் கிடைக்கும் சிறுபரிசுகள் பெருமதிப்புடையவை.
ஸ்ரீராமபிரானுக்கு சபரி சுவைத்துக் கொடுத்த நாவற் பழங்கள், அதியமான் ஔவைக்குப் பரிசளித்த முதுநெல்லி, கௌரவர்களின் அறுசுவை விருந்தைத் தவிர்த்து வந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு விதுரன் கொடுத்த வாழைப்பழம், கண்ணப்ப நாயனார் கௌரிகாந்தனுக்குக் கடித்துக் கொடுத்த இறைச்சி... இவையெல்லாமே.... அன்பு தோய்த்து பக்தியோடு கொடுத்தவை.
அன்பின் வழியது உயிர்நிலை. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails