Friday, August 19, 2016

அறிவுஜீவிகளுக்கான அடையாளங்கள்

முட்டாள்கள் எடுத்த யாவற்றிலும் ”மூணே கால்” என்று ஸ்திரமாக இருப்பதும் அறிவுஜீவிகள் ”இதுவா? அதுவா? எதுவோ?” என்று சந்தேகத்தில் தள்ளாடுவதுமே இந்த நவீன யுகத்தில் பலவிதமான சிக்கல்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது - என்கிற புகழ்பெற்ற பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் உதிர்ந்த முத்துவிலிருந்து ஆரம்பிக்கிறது அந்த கட்டுரை.

அறிவுஜீவி என்று இனம் காண அவர்களிடம் பதினைந்து அடையாளங்கள் லட்சணங்களாகத் தென்படுமாம். நீங்களும் அறிவுஜீவியா என்று கீழ்காணும் பதினைந்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.
1. அறிவுஜீவிகள் போதிய அளவு நேரத்தை நானாவிதமான துறைகளில் செலவழித்து, நன்கு படித்து தங்களை எப்போதும் உரமேற்றிக்கொள்வார்கள். (நம்மில் எவ்ளோ பேர்?)
2. இணையமே கதியென அதன் காலில் விழுந்து கிடப்பார்கள். (அப்படியென்றால் நாமெல்லாம் அ.ஜீக்களே)
3. இராக்கோழியாக திரிவார்கள். (ரஹ்மான் நினைவுக்கு வரலாம். கால் செண்டரில் கடமையாக அகோராத்திரி வேலை செய்து ஜீவனம் நடத்துபவர் இதில் அடங்கா!! )
4. சொற்ப நேரமே மின்னணு உபகரணங்களை உபயோகிப்பார்கள். இல்லையேல் ஏகப்பட்ட செய்திகளினால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டுவிடுமாம். (நமக்கு ஒத்து வராது. அஷ்டபுஜ அனுக்ரஹம் கிடைத்தாலும் அனைத்துக்கும் ஒரு கருவி சொருகி உபயோகிப்போம்)
5. சங்கீதம் பயிலும் குழந்தைகள் பூரணமான ஞானம் பெறுகிறார்கள். (சங்கீதம் இரசிக்கும் பெரியவர்கள் என்றும் எழுதிக்கொள்வோம்.)
6. லாஹிரி வஸ்துகள் சரித்துக்கொண்டு மிதப்பார்கள். (கண்ணதாசனைக் காரணம் காட்டி பைசாவுக்குப் பிரயோஜனமில்லாமல் குடித்துக் கெட்டவர்கள் அநேகம்)
7. எவ்விதமாகவும் தங்களை வளைத்துக்கொள்ளும் விசால மனது படைத்தவர்களாகவும் இருப்பார்கள். (”நல்லத்துக்கு” என்று இந்த வரியின் முதலில் சேர்த்துக்கொள்ளவும்)
8. இது சரியா தவறா என்கிற நீண்ட மனப்போரட்டத்துக்குப் பிறகு தர்க்கரீதியாக அலசி ஆராய்ந்து அறிந்துகொண்டே எதையும் ஏற்பார்கள். (எந்தவொன்றுக்கும் நன்மை தீமை இரண்டு தெரிவதால்... அது ஆளை அலைக்கழிக்கும். “அனுபவிக்கணும்.. ஆராயக்கூடாது...” என்கிற வசூல் ராஜா கமல் தத்துவம் பலரை இயல்பாய் வாழ வைக்கும் மந்திரம்)
9. எதையும் தெரிந்துகொள்ளும் அதீத ஆர்வத்துடனும் பொசுக் பொசுக்கென்று கேள்விக் கணைகளைத் தொடுப்பவர்களாகவும் இருப்பார்கள். (வணிகவியல் மாணவன் இயற்பியல் வகுப்பிற்குச் சென்று குவாண்டம் மெக்கானிக்ஸ் கேட்டுக் குடைவது போல...)
10. சிந்தனைக்குத் தார்க்குச்சி போடும் வினாக்களை எழுப்பி அனைவரையும் மலரச் செய்வார்கள்.
11. வாழ்வில் சறுக்கி விழுந்தத் தங்களது தவறுகளிலிருந்து புதிய பாடங்களைப் படித்து ஏற்றம் கொள்ளும் பக்குவமடைந்திருப்பார்கள்.
12. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமாக இருப்பார்கள்.
13. பேசப்படும் பொருள் மீதான தனது அறியாமையை நானூறு/நாலாயிரம் பேர் முன்பு லஜ்ஜையின்றி ஒத்துக்கொள்ளும் மகாத்மாக்களாக இருப்பர்.
14. ஒரு பொருளின் சத்யத்தின் அடிப்படையாகவே தங்களது கருத்துக்களை முன்வைப்பரே அன்றி அவை பற்றிய நம்பிக்கைகளின் பேரில் அல்டாப்பாக கருத்துரைக்க மாட்டார்கள்.
15. உணர்ச்சிப் பிழம்பானர்வகள். வெகு எளிதில் பிறத்தியாரிடம் கருணையோடும் அனுசரணையோடும் நடந்துகொள்வார்கள்.
மூலத்திற்கு குந்தகம் வராமல் மொழி மாற்றியிருக்கிறேனா என்று அறிந்துகொள்ள கீழே கொடுத்திருக்கும் சுட்டியைக் க்ளிக்கவும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails