Friday, August 19, 2016

குமரன் குன்றம்


”அப்போ சிட்லபாக்கம் ஏரிகிட்டே பெரியவா முஹாம். அப்போல்லாம் இவ்ளோ குடித்தனமெல்லாம் இங்கே கிடையாது. அங்கேயிருந்து அந்த சின்ன குன்றைப் பார்த்துட்டு “ஸுப்ரமண்ய சாந்நியத்யம் இருக்கிற இடம் அது” என்றாராம். உள்ளூர் வாலிபப் பையன்கள் சிலர் மகா பெரியவா சொன்னத்துக்காக அந்தக் குன்றின் மீதேறி பார்த்தார்களாம். அரைமணில ஒரு வேல் கிடைச்சுதாம். உடனே அங்கேயே ஒரு கோயில் கட்டிடலாம்னு வேலையை ஆரம்பிச்சு மளமளன்னு கோயில் வளர்ந்துவந்துது.
முருகன் சிலையை வடிச்சப்புறம் மகா பெரியவாகிட்டே கொண்டு போய் காமிச்சாளாம். மெல்ல சிலையை வருடிப் பார்த்துட்டு “வயறு கொஞ்சம் பெரீசா வந்திருக்கே... குறைக்கணும்”ன்னார். சில்பிகிட்டே குடுத்து அதைக் கொஞ்சம் கொறைச்சு வாங்கிண்டாளாம். அப்புறமா ஒரு விநாயகர் வேணுமின்னு சிலை பண்ணி பெரியவாகிட்டே தூக்கிண்டு ஓடினா. அப்போ ஆந்திராவிலே கோதாவரி நதிதீரத்துல முகாமிட்டிருந்தார்.
“நன்னா வந்திருக்கு...”ன்னு கோயில் கும்பாபிஷேகத்து ஆசி பண்ணி அனுப்பிவைச்சாளாம். திடீர்னு நல்ல மழை. கோதாவரி கரைபுரண்டு வெள்ளமா ஓடறது. எப்படி ஊருக்கு போறதுன்னு தவிச்சாளாம். அப்போ அந்தப் பக்கமா ஒரு லாரி வந்திருக்கு. இன்ன காரியத்துக்காக மெட்ராஸ் போகணும். எப்படியாவது கொண்டு போய் விடுங்கோன்னு கெஞ்சியிருக்கா. சேரின்னு பிள்ளையார் சிலையையும் எடுத்துண்டு எல்லோருமா அந்த லாரியில மெட்ராஸ் வந்துட்டா.
இங்க வந்தாச்சு. லாரியில வந்தவாள்ளாம் சேர்ந்துண்டு விநாயகர் சிலையை இறக்கி வச்சுட்டு... லாரிக்காரனுக்கு காசு குடுக்கணும்னு வெளில வந்து பார்த்தா.... லாரியைக் காணும். புது லாரியா இருக்கேன்னு நம்பர்லாம் நோட் பண்ணிண்டு தான் வந்துருக்கா. அந்த நம்பரை வச்சு லாரியை மடக்கிடலாம்னு விஜாரிச்சுப் பார்த்தா அந்த மாதிரி ஒரு நம்பரே இதுவரைக்கும் ஆர்டிஓ ஆஃபீஸ்லேர்ந்து கொடுக்கலேன்னு பதில் வந்துதாம். எல்லாருக்கும் ஆச்சரியமான ஆச்சரியம். மஹா பெரியவா மகிகை.
அதுதான் இந்த குமரன் குன்றம் கோயில். பாலசுப்ரமண்ய ஸ்வாமி.” என்று இந்தக் கதையைச் சொன்னவர் குரோம்பேட்டை “கலவை குருபரம்பரா வேத வித்யா ட்ரஸ்ட் சங்கரமடம் வேதபாடசாலை”யின் அத்யாபகர் ஸ்ரீ. சிவகுமார் சர்மா. எதிர்வரும் 29ம் தேதி அங்கே சமஷ்டி உபநயன ப்ரம்ஹோபதேசம். யத்கிஞ்சிதம் கொடுப்பதற்காக அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சாருடன் வெய்யில் தாழ மாலையில் சென்றிருந்தேன்.
சின்னச் சின்ன ப்ரம்மச்சாரி குழந்தைகள் சிகையோடு குனிந்து நிமிர்ந்து வேதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பார்க்கவே பரவசமாக இருந்தது. வேதம் சொல்லும் குழந்தைகள் ப்ரம்ம தேஜஸுடன் இருந்தார்கள். அனைவரும் வேதம் சொல்லும் போது மூன்று முறை அவர்களை பிரதக்ஷிணம் வந்து நானும் சங்கீதாவும் நமஸ்கரித்தோம். அப்போது உள்ளத்தில் தோன்றிய ஒரு உணர்வுக்கு வார்த்தயேது!!
குமரன் குன்றம் வாசலில் பாலசுப்ரமண்ய ஸ்வாமி என்றும் சன்னிதியில் ஸ்வாமிநாத ஸ்வாமி என்றும் நாமகரணம் எழுதியிருந்தார்கள். வெள்ளி வேல், வெள்ளியிலேயே சேவற்கொடி, க்ரீடம் ஜொலிக்க ருத்ராக்ஷ மாலையுடன் அருள்பாலித்தார் ஸ்வாமிநாத ஸ்வாமி. அப்போது சன்னிதியில் “அகரமுமாகி அதிபனுமாகி...” திருப்புகழ் அசரீரியாய்க் கேட்டது. அற்புதமான குரல் வளம். கண்ணை மூடிப் பாட்டுக் கேட்டாலே இதுவரை பார்த்த ஸ்கந்த ஸ்வரூபங்கள் நினைவலையில் வந்து வரிசைக்கட்டி நின்றது.
”இயலிசையில் பாடச் சொல்லி கேட்போமா?”
“வேண்டாம்பா.. அவங்க எங்கியாவது அவசரமா போய்கிட்ருக்கப்போறாங்க...”
கேட்டுவிடு என்றது எனது உள்மனசு. பிரதக்ஷிணம் வந்தவுடன் எதிரே போய் கும்பிடு போட்டேன்.
“நல்லா பாடினீங்க. அற்புதமா இருந்தது”
“தேங்க்ஸ்”
“கொஞ்சம் இயலிசையில் உசித... பாடமுடியுமா?”
“ஓ... தாரளமா”
கண்ணை மூடி ஆரம்பித்தார்கள். மீண்டும் முருகனின் சன்னிதியை இசைவெள்ளம் சூழ்ந்தது. பக்கவாத்தியங்கள் இல்லாமல் ஆர்மோனியப் பெட்டி இல்லாமல் ஸ்ருதிபாக்ஸ் இல்லாமல் செவிக்கு இன்பம் அளித்த வாய்ப்பாட்டு. வார்த்தைகள் தெளிவாகவும் ஸ்ருதி சுத்தமாகவும்... ஆஹா... பாடப் பாட மயில்மீதேறி அங்கே முருகன் வந்தான்.
“நல்லா இருந்தது. மிக்க நன்றி” மீண்டும் கை கூப்பினேன். திருப்புகழால் வாய் மணக்கப் பேச்சு தொடர்ந்த போது சொன்னேன். “என் பசங்களும் திருப்புகழ் கத்துக்கிறாங்க...” அவர்களது சந்தோஷம் கண்களில் தெரிந்தது.
பம்மலில் இருக்கிறாராம். பெயரைக் கேட்டுக்கொண்டேன். கணவரை அறிமுகப்படுத்திவைத்தார்கள். இருவருக்கும் நன்றி சொல்லி வீடு வந்துசேர்ந்தேன். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம். வேதபாடசாலை வித்யார்த்திகளும் ஒரு முறை நினைவுக்கு வந்தார்கள். நன்றாக கழிந்த ஞாயிறு.
வேதோ ரக்ஷதி ரக்ஷித: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails