Friday, August 19, 2016

நிறக்குருடு


தினந்தோறும் நாம் சந்திக்கும் சாதாரண மனிதர்கள். பேசிக்கொள்ளும் அன்றாட விஷயங்கள். துக்கப்படும் சங்கடங்கள். தொண்டையை அடைக்கும் வேதனைகள். சின்னச் சின்ன சந்தோஷங்கள். செய்துகொள்ளும் சமரசங்கள். இவையே சுதாகர் கஸ்தூரியின் கதைக் களன்கள். ஒரு வரி விஷயத்தை அலங்காரமாக ஒரு சிறுகதையாக சொல்லும் வித்தை சுதாகர் கஸ்தூரிக்கு கைகூடிய ஒன்று. ஆயிரம் பக்க நாவல் படாதபாடுபட்டுச் சொல்ல முற்படும் விஷயத்தை அலட்சியமாக மூன்று நான்கு பக்கங்களில் ஒரு சிறுகதையில் கொண்டு வருவது அசாத்தியமானது. அதுவும் பாடுபொருள் பெண்ணாக இருந்தால் படிக்கும் விஷயம் அதிசுவாரஸ்யமானதுதான்.
சங்க இலக்கியங்களிலிருந்தும் கம்பராமாயணத்திலிருந்தும் ஈர்க்கும் வரிகளைத் தெரிவு செய்து இக்கால சங்கதிகளுக்குள் பிசைந்து உருட்டி பதினேழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு “நிறக்குருடு”. ஆர்ப்பாட்டமில்லாத எழுத்து. முதல் வரியிலிருந்து கடைசிவரை தெளிந்த நீரோடையாய்ச் செல்லும் நடை. வாசகனைத் தப்பிக்கவிடாமல் கதைகளின் ஊடே கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து சகஜமாக உலவவிடும் பாங்கு அபாரம்.
அறங்காவலன் என்ற முதல் கதையில் ”உண்மை தனியாத்தான் போராடும். ராமன் பக்கம் எத்தனை பேர் நின்னான்? விலங்குகள்தான் நின்னு போராடிச்சு. மகாபாரதம்? துரியோதனன் பக்கம் படிச்சவன் பூரா நின்னான். பாண்டவர்கள் பக்கம் கண்ணன் ஒரு ஆளுதான். அறம் தனியாத்தான் நிக்கும். ஆனா ஜெயிக்கும்”னு சொல்கிற வித்வான்ஸைப் போல சிலரை நானும் பார்த்திருக்கிறேன். கஷ்டமோ நஷ்டமோ சளைக்காமல் அறப்போரில் ஈடுபடுவர். உங்கள் ஊரில் நீங்களும் இதுபோல சிலரைப் பார்த்திருக்கலாம்.
கம்பராமாயண சுந்தரகாண்ட வரிகளை வைத்துக்கொண்டு ஜாலம் காட்டிய கதை “கம்பனை ரசித்தல்”. நாகர்கோயில் வட்டார வழக்கில் கதை விறுவிறு. அண்ணாச்சியின் மனைவியிடம் பணம் பெற்றவனை திட்டும் போது போதையில் இருக்கும் ஒருவன் மேற்கோளிடும் கம்பராமாயண பெண்தான் ஆணைவிட முக்கியம். வணங்கத்தக்கவள் என்பதை சீதையிடம் சூடாமணி பெற்று திரும்பும் அனுமன் இலங்கை பக்கம் நமஸ்கரித்து எழுந்துதான் இராமனிடம் பேசினானாம். இதுவேதான் பெருமாள் கோயில்களில் தாயாரைத் தரிசித்த பின் பெருமாளை தரிசிப்பது. பெண்ணுக்கு தரும் அங்கீகாரம்.
கருப்பி என்கிற தேங்காத்துருத்தி பற்றி சொல்லியே ஆகவேண்டும். தெற்றுப்பல்லுடம் கருப்பாக குண்டாக இருக்கும் முறைப்பெண்ணைக் கலியாணம் செய்துகொண்ட தணிகாசலத்தின் கதை. அவரது மனைவி மீனாட்சிதான் கருப்பி. அவளுடன் வாழ முடியாது என்று சொல்லியும் ஆஸ்பத்திரியில் கிடந்த தணிகாசலத்துக்கு மலம் மூத்திரம் அள்ளித் துடைத்து பணிவிடை செய்யும் தாராள மனம் படைத்தவள் கருப்பி.
இதுபோன்ற பதினேழு கதைகளில் ஒன்றிரண்டில் சங்கப்பாடல் திணிக்கப்பட்டது போன்ற உணர்வு எழுந்தாலும் சுதாகரின் சுவாரஸ்யம் ததும்பும் நடைக்காகவே இருமுறை படிக்கலாம். கதைகளின் வழியாக புத்திசொல்வது போலில்லாமல் புத்தி சொல்வது ஒரு தனிக்கலை. கதைகளில் வரும் சம்பவங்களும் வசனங்களும் வாசகனுக்கு ஒரு வித்தியாசமான கோணத்தில் வாழ்வியலை எடுத்துக்காட்டுகிறது. பாவமான கொடுங்கதைகளில் கூட பரவசமான ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறான். அந்தளவில் சுதாகர் கஸ்தூரிக்கு நூத்துக்கு நூறு சதம் வெற்றியே!
பதிப்பகம்: வம்சி
நூல்: நிறக்குருடு
வகையறா: சிறுகதைகள்
ஆசிரியர்: சுதாகர் கஸ்தூரி

பின் குறிப்பு: அடுத்தது இரா. முருகனின் அச்சுதம் கேசவம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails