Friday, August 19, 2016

நெருப்புடா

"பெருமாளே! இது அடுக்குமா?" பஞ்சகச்சத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டு அவசரமாக ஓடி வந்தார் மிஸ்டர் அக்னி. அவரின் கோபச்சூட்டில் பாற்கடல் தளபுளவென்று பொங்கியது. ஸ்நேக் பெட்டில் சயனித்திருந்த எம்பெருமான் ஸ்லோ மோஷனில் கண்களைத் திறந்து "என்னாச்சு? நெருப்புடா... நெருங்குடா... பார்ப்போம்.." என்று பாடிக் கலாய்த்தார்.
"ஐயகோ! யாதெனச் சொல்வேன். நீரே இப்படி என்னைக் கிண்டலடித்தால் நான் எங்கே போவேன் பகவானே" என்று கைதொழுதார். லக்ஷ்மி அரை செமீ புன்னகைத்து அடங்கினாள். லீலை என்ற பெயரில் பெருமாள்அன்றாடம் நடத்தும் குசும்புகளை அருகிலிருந்து ரசிப்பவளாயிற்றே. கால் பிடித்துவிடும் பூதேவிக்கு "இவர் பாட்டுப் பாடற அழகைப் பாறேன்..." என்று சிக்னல் கொடுத்தாள். பூதேவி உள்ளங்காலில் நறுக்கென்று கிள்ளியதும்...
"சொல்லுப்பா" என்று சுதாரித்துக்கொண்டார் நாராயணன்.
"பூலோகத்தில் நடந்த அதிருத்ர மஹா யக்ஞத்திலிருந்து ஹவிர்பாகத்தைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு கைலாசத்திற்குப் பொடிநடையாக வந்துகொண்டிருந்தேன்."
"ம்.."
"திரிலோக சஞ்சாரியும்... சதா சர்வகாலமும் உமது பெயரை உச்சரித்துக்கொண்டு தகிடுதத்தம் செய்பவருமான..."
" நிறுத்து.. நிறுத்து...நம்ம லோக்கல் Band நாரதனைச் சொல்கிறாயா? அவன் தங்கமான பிள்ளையாயிற்றே..."
"ஆமாம். நீர்தான் மெச்சிக்கொள்ள வேண்டும். வழியில் நின்றுகொண்டிருந்த நாலைந்து சேட்டைக்காரப் பூதகணங்களை சேர்த்துக்கொண்டு... இப்போது நீங்கள் பாடினமாதிரி உரக்கப் பேசினீர்களே... அவ்வரிகளைச் சொல்லிச் சொல்லி இடுப்பை ஆட்டியாட்டி ஒரே நக்கலும் நையாண்டியுமாக என்னைத் துரத்தினார்கள்..."
"ஒரு செகண்டு நிறுத்துப்பா... அது பாடலே அல்ல.தீப்பொறி பறக்கும் வசனம் தான்.. பின்னால் இசைக்கும் கருவிகளைத் தூண்டிவிட்டு பாடல் என்கிறார்கள்.. ஈசனுக்கே வெளிச்சம்..." என்று சைடில் சிந்துபாடிவிட்டு..... "ம்.. நீ மேலே சொல்லு...."
"ஒரு கட்டத்தில் நான் வெறுப்பாகி பொசுக்கிவிடுவதற்காக வாயைத் திறந்தேன்..."
"ஆஹா.. சிவகணத்தைப் பொசுக்கிவிட்டு கைலாசபதிக்கு ஹவிர்பாகமா? அடக்குனா...அடங்கிற ஆளா நீ... " என்று கையையும் காலையும் விலுக்விலுக்கென்று உதைத்துக்கொண்டு ப்ரேக் ஆடிப் பாடத் தொடங்கிவிட்டார்.
"கேளுங்கள் ப்ரபோ.. நெருங்குடா பார்ப்போம்.. முடியுமா நடக்குமா இன்னும்... இன்னும்..இன்னும்.. என்று என் இடுப்பில் முட்டிச் சுத்திச் சுத்தி வந்து என்னை பரிகசித்து அழவிட்டார்கள்..."
“அடப்பாவமே...” த்சொ..த்சொ என்று பரிதாபப்பட்டார்.
"இதற்கு மேல் பொறுப்பதிற்கில்லை என்று வாயைத் திறந்து அக்னிப் பிழம்பை வீசும் போது..."
"வீசும் போது..." க்ளைமாக்ஸ் காட்சியில் நிமிர்ந்து உட்காருவது போல பரமாத்மா எழுந்து கேட்டார். அசையும் பொருள் நின்றது. நின்ற பொருள் அசைந்தது. (திருவிளையாடல் வசனம் தக்க சமயத்தில் கைகொடுக்கும் என்பதற்கு இது சான்று)
"கபாலீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ" என்று எல்லோரும் கையிரண்டையும் மேலே தூக்கிக் கோரஸாகக் கத்தினார்கள்.
"ம்.. அப்புறம்?" ஆர்வத்துடன் அக்னியை விசாரித்துவிட்டு அக்கம்பக்கம் இரு தேவியரையும் ஒருதடவை பார்த்துக்கொண்டார். சீரியல் பார்க்கும் தமிழ்குடிகள் போல அவர்களும் திறந்த வாய் மூடாமல் அக்னி பகவானையே நோக்கினார்கள்.
"உடம்பெல்லாம் சாம்பல் பூசிக்கிட்டு... இடுப்புல ஸ்கர்ட் மாதிரி புலியாடை கட்டிக்கிட்டு... நாவுக்கரசர் "கபாலி" ன்னு பாட்டுப் பாடின உடனே அபயஹஸ்தத்தோட "சொல்லுங்க நாவு"ன்னு ரிஷபாரூடரா வந்து நிப்பானே... அந்த கபாலின்னு நினைச்சியாடா? கபாலிடா....என்று அவரது பாதாதிகேசம் கையை விசிறிச் சொன்னார் ப்ரபோ... சித்தம் கலங்கிவிட்டது..."
"அடிசக்கை.. அந்த கோட் தரிசனம் உனக்குக் கிடைத்ததா? அஹோ பாக்யம்.. அஹோ பாக்யம்.."
"ஆம்.. அதைச் சொல்லத்தான் வந்தேன். ஜடாமுடியைக் களைந்து... கால்களில் ஷுவும், மேலுக்கு கோட் சூட்டோடும் கண்ணிற்குகூலிங் க்ளாஸோடு இன்று நான் கண்டேன் கபாலியை..."
"ஸ்ரீதேவி, பூதேவி.. புறப்படுங்கள் இருவரும்.. நாமும் கைலாயம் போய் கபாலி தரிசனம் காண்போம்.. ம்.. சீக்கிரம்..."
பிராது கொடுக்க வந்த அக்னி பல்ப் வாங்கிவிட்டோமோ என்று அதிர்ந்த போது..... "வந்துட்டேன்னு சொல்லு... திரும்ப வந்துட்டேன்னு..." என்று ரஜினியை மிமிக்ரி செய்து வைகுந்த வாசலைக் கடந்துகொண்டிருந்தார் நாணா!!

2 comments:

Yaathoramani.blogspot.com said...

சூப்பர்
படிப்பது போல இல்லை
நேரடி ஒளிபரப்பில் பார்ப்பதுப் போல இருக்கிறது
வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் said...

மேலோகத்திலும் கபாலி!

நெருப்புடா... :)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails