Friday, August 19, 2016

என் பெயர் வெங்கடசுப்பிரமணியன்

சட்டை மடிப்பு கலையாத வண்ணம் இவ்வளவு நாள் பயணம் செய்தாயிற்று. மாநகர போக்குவரத்தில் கூட்டம் பார்க்காவிட்டால் அவ்வளவு ஸ்ரேயஸாக இருக்காது. இன்று காலையில் மடி பே.நியிலிருந்து ஆலந்தூர் ர.நி பார்க்க ஒரு சுமால் பஸ் போயிருக்கவேண்டும். ஓடவில்லையாம். நிறுத்தத்திற்கு வரும்போதே நடத்துனர் கடைசிப் படியில் நின்று உக்கிரமாகக் கடமையாற்றிக்கொண்டிருந்தார். கூட்டத்தின் தீவிரத்தைப் பார்க்கும் முன் சுமால் பஸ்ஸின் மொத்தக் கொள்ளளவைப் பார்த்துவிடலாம்.
ஓட்டுனர் இருக்கைக்குப் பின்புறம் ஆறு வரிசை. வரிசைக்கு ஒன்றரை பேர் உட்காரலாம். ஆனால் பசைபோட்டு ஒட்டியதுபோல ரெவ்வெண்டு பேராக இருந்தால் பன்னிரெண்டு பேர். கடைசி வரிசை மகளிர் ஸ்டிக்கர் அடித்தது. கொடி இடையர்கள் ஏழு பேரும் சற்றே பருத்த சரீரமுடையவர்கள் ஐந்துபேரும் அமரலாம். இதுவரை பதினேழு. இடதுபுறம் முன்படிக்குப் பின் மூன்று வரிசை. ஆறு பேர். இருபத்துமூன்று. ட்ரைவர் கேபின் இடதுபுறம் இரண்டு சோலோ சீட்டுகள். மொத்தம் இருபத்தைந்து பேர் உட்காரலாம்.
இரண்டு ஸ்பெஷல் இருக்கைகள். ஒன்று ஓட்டுனருக்கு(நமக்குக் கிடையாது) மற்றொன்று நடத்துனருக்கு (அவர் மனதுவைத்தால் அமரலாம்).
நுட்பமான கனரக வாகன ஓட்டும் பணி தெரிந்தாலொழிய அந்த சந்துபொந்துகளில் புகுந்து வந்துவிடமுடியாது. ஆதம்பாக்கத்தைத் தொடுவதற்கு முன்னர் வரும் வேளச்சேரி பைபாஸ் வரை ஒருவர் மீது ஒருவர் ஆடை உரச நெருக்கமாக நின்று கொண்டு வந்தோம். இன்னும் பத்து பேர் ஏறியவுடன் முன்னால் இருப்பவர் சுவாசித்தது போக மிச்சமிருக்கும் ஆக்ஸிஜன் எனக்கும் கிடைக்குமளவிற்கு முண்டியடித்தார்கள்.
உள்ளே ஓடும் ரோடுகள் துண்டில் கிழித்த கோமண அளவுதான். அதில் ஒரு மணல் லாரி, தண்ணீர் லாரி, நூறு கார்கள், எண்பது சைக்கிள்கள், இருநூறு பைக்குகள் என்று அந்தப் பேட்டையின் ஒட்டு மொத்த வாகனாதிகளும் வீதிக்கு வந்துவிட ஸ்மால் பஸ்ஸுக்கு ஸ்மால் இடம் கூட கிடைக்காமல் திணறியது. பதினைந்து நிமிடத்திற்கும் மேலாக ஒரு பஸ் நகரவில்லை என்றால் அதன் பின்னால் குறைந்தது இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுக்கும் என்பது சென்னை போக்குவரத்தின் அடிப்படை விதி.
ஏற்கனவே புளிமூட்டையாய் அடைந்து கிடந்த பேருந்தில் முதுகில் ஒரு பையோடு கொஞ்சம் பூசிய உடம்போடு ஒரு பையன் ஏறினான். என் பக்கத்தில் வந்து நின்று என்னை கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தவர்களின் மடியில் உட்காரும்படி ஒதுக்கினான். விழுந்துவிடக்கூடாது என்று பின் பக்க பெயர்ப்பலகையின் அடிபாகத்தை கெட்டியாகப் பற்றிக்கொண்டேன். அவ்வளவு நெருக்கத்திலும் வெள்ளையாச் சிரித்தான். என்னோடு சேர்ந்து ஏறிய ஒரு நண்பருடன் நான் பேசிக்கொண்டிருந்தேன்.
“டே புத்தகமெல்லாம் எடுக்கலை.. அடுத்த வாரமாதான் பிரிச்சுப் பார்க்கபோறேன்...” பின்னால் இரைச்சல். திரும்பினால் அந்தப் பையன் யாரோ நண்பனிடம் மொபைலிக்கொண்டிருந்தான்.
“காஞ்சூரிங் பார்ட் 2 பார்த்துட்டேன். செம்ம..செம்ம... பயத்துல....” அதற்கப்புறம் சத்தத்தைக் குறைத்து வாயோடு பேசிக்கொண்டான். “சுச்சா போயிட்டேண்ட்டா”ன்னு சொல்வானோன்னு மனசுக்குள் ஒரு ஆர்விஎஸ் பேசினான்.
ஸ்மால் பஸ் இன்னும் பிதுங்கி வழிந்துகொண்டிருந்தது.
“க்ரீம்ஸ் ரோடு போகுமா?”
காதில் ஏதோ ரகசியம் போல கிசுகிசுத்தான். பெண்மை கலந்த குரல்.
“இது போகாதுப்பா. ஆசர் கானா... கிண்டி இறங்கிக்கோ... அங்கே கேட்டுப் போய்க்கோ....”
என் பேச்சைத் தொடர்ந்தேன்.
“இன்னிக்கி ரொம்ப கூட்டமில்ல....” நெளிந்தான் பையன்.
“ம்..”
ஆதம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் கடந்தபோது சாலையில் நெரிசல் இல்லை.
“இனிமே கூட்டமிருக்காதில்ல....” வெகுளித்தனமான கேள்வி.
“வாழ்க்கையில எப்போ சுகம் வரும் எப்போ துக்கப்படுவோம்னு தெரியாத மாதிரி சென்னையில எப்போ எங்கே கூட்டமிருக்கும்னு தெரியாது... “
கூட வந்த நண்பர் சிரித்தார்.
“எது சொந்த ஊரு?” அவர் கேட்டார்.
“தஞ்சாவூர்”
பையனின் பதிலில் திரும்ப ஒரு முறை அவனை ஊடுருவிப் பார்த்தேன். காவேரி ஜில்லா. நம்ம பேட்டை. இனம்புரியாத ஒரு பாசம். தூரத்தில் கம்பியை எக்கிப் பிடித்திருந்த பிடியைத் தளர்த்தி பாக்கெட்டிலிருந்து சிணுங்கிய ஃபோனை சமாதானப்படுத்தினேன்.
அமர்ந்திருந்த நண்பர்... “யேய்.. நானும் தஞ்சாவூர்தான்...”. அவர் எனக்குப் புதிதாக அறிமுகமானவர். அவரையும் ஒரு முறை உற்று நோக்கினேன்.
“நீங்க எந்த ஊரு சார்?” அவர் விசாரித்தார்.
“தஞ்சாவூரு பக்கத்துல...” என்று ராஜா பாடலுக்கு நடுவில் இசையணைத்தையும் நிறுத்தி அமைதி காப்பதுபோல மூன்று விநாடிகள் இடைவெளி விட்டேன்.
இருவரும் ”நான் எந்த ஊரோ?” என்று அறியும் ஆவலில் கிளைமாக்ஸ் கேட்க காத்திருந்தனர்.
“மன்னார்குடி”
இருவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. அப்புறம் நண்பர் பூண்டியில் படித்தேன் என்றார். அந்தப் பையன் அஞ்சலையம்மாள் மகாலிங்கத்தில் இஞ்சினியரிங் படிப்பதாகவும் இங்கே இண்டெர்னுக்கு வந்திருப்பதாகவும் கதை தொடர்ந்தது.
“சார்.. அச்சச்சோ சட்டையைப் பாருங்க..” பதறினார் நண்பர்.
எக்கிப் பிடித்திருந்த கையை செல்ஃபோன் சிணுங்கியபோது பாக்கெட்டில் விட்டதில் உஜாலா விளம்பரத்துக்கு தயாரான வெள்ளைச் சட்டையில் ஓர் அழுக்கு.
“மெட்ரோவுல தண்ணி கிடைக்கும். நான் துடைச்சு விடறேன்...”
அந்தப் பையன் “சார்.. என் பாக்கெட்ல கர்சீப் இருக்கு.. துடைச்சுக்கோங்க... இன்னிக்கி எதாவது மீட்டிங் இருக்கப்போவுது..”
“தம்பி.. நெஜமாவே இன்னிக்கி மீட்டிங் இருக்கு. வெள்ளைச் சட்டை நல்லாயிருக்குமேன்னு....”
இருவரும் மிகவும் வருத்தப்பட்டார்கள். உதவுவதற்கு போட்டி போட்டார்கள். காலத்தின் கோலமாக பேருந்தின் ஒரு மூலையில் நசுங்கிக் கிடந்தாலும் காவிரிக்கரை மைந்தர்கள் என்றதில் ஒரு அன்புப் பிணைப்பு உருவானது வாஸ்தவம்தான்.
பேசிக்கொண்டிருந்தோம். பெயர் கேட்கும் வைபம் நடந்தது. எல்லோரும் பெயர் சொல்லிக்கொண்டோம். என் பெயரைச் சொன்னேன். அந்தப் பையன் நிறுத்தி நிதானமாகச் சொன்னான்.
“என் பெயர் வெங்கடசுப்பிரமணியன்”
அடிக்குறிப்பு: எழுத்தாளர் ஆதவனின் ஆகச் சிறந்த படைப்பு “என் பெயர் ராமசேஷன்”. மிகவும் அற்புதமாக மத்யமர் வகுப்பு பையன் ராமசேஷனின் அபிலாஷைகளைப் படம் பிடித்த அதியற்புதமான நாவல் எ.பெ.ரா. நண்பர்களுக்கு என்னுடைய பிரத்யேக சிபாரிசு.

1 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails