Friday, August 19, 2016

புத்தகக் காட்சி 2016

புத்தகம் இருக்குமிடம் ஒரு தீவு. வாகனங்கள் நிறுத்த அதோ... அவ்ளோ... தூரத்தில் ஒரு பெரிய திடல். அதுதான் இந்த புத்தகக்காட்சி நடக்கும் தீவுத்திடல். 
~~
வீட்டிற்குக் கிளம்பி வந்துகொண்டிருக்கும் போது குட்டிப் பூனைஃபோன் பண்ணினார். பிற்காலத்தில் “நீங்க குட்டிப்பூனையா?” என்று ஃபோனில் பேசும் போது நம்ம பக்கத்திலிருக்கும் ஆட்கள் நம்மை ஒரு மாதிரியாக சந்தேகமாக பார்க்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் மறக்காமல் அவருடைய இயற்பெயரைக் கேட்டு வாங்கி பதிந்துகொண்டேன்.

சாயந்தரமா Venkat Subramani ஃபோன் பண்ணினார். ஆப் ஆளு.
“மிஸ் பண்ணிட்டேன் சார்... இன்னிக்கி நீங்களும் கார்த்தியும் வர்றீங்கன்னு தெரிஞ்சா நானும் வந்திருப்பேன்... உங்களுக்கு ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம்.. ”
வந்திருந்தா நொந்திருப்பாரு.
இந்த தபா புத்தகக் காட்சி தீவுத்திடல்லன்னு சொன்னவுடன் எனக்கு “பெரிய அப்பளாம்” தின்னும் குடைராட்டிணம் சுத்தும் பொருட்காட்சி நியாபகம்தான் வந்தது. சேப்பாயியுடன் சென்றவுடனே வெள்ளுடுப்பு போலீஸ்காரர்கள் நிற்கவிடாமல் விரட்டினார்கள்.
“அங்கே பார்க்கிங் சார்... இங்க நிறுத்தாதீங்க” கையையும் காலையும் மார்னிங் யோகா போல ஆட்டிக்கொண்டு நல்ல திடமாக இருந்தார்.
“சார்.. உள்ளே எங்களோட ஸ்டால் இருக்கு.... அதுக்கு எதுவும் பிரிவிலேஜ் கிடையாதா? எங்க வண்டியைக் கூட விடமாட்டீங்களா? ”
“அதெல்லாமில்லை சார்... போங்க. போங்க.. ஏ ஆட்டோ.. நீ நவுரு.. சொன்னா புத்தியில்லை...”
ஆட்டோவுக்கு சொன்ன புத்தியில்லை எனக்கு உரைத்தது. நான் நகர்த்தாமலேயே ரோஷங்கொண்ட சேப்பாயி நகர்ந்துவிட்டாள்.
புத்தகக்காட்சியில் புத்தகம் வாங்குவது என்பது நாடி நரம்பெல்லாம் ஊறிப்போய் வெறிகொண்ட ஒருத்தனுக்குதான் எவ்ளோ அவமானப்பட்டாலும் வாலைக் குழைத்துக்கொண்டு அங்கேயே சுற்றத் தோணும். “தமிழ்நாட்ல எழுத்தாளனுக்கு மரியாதை கிடையாது... மதிப்பு கிடையாது....” என்று அறச்சீற்றத்தில் பொங்கும் சாருவுக்கு முன்னாடி போய் நின்று “ வாசகனுக்கும் வாசிப்புக்கும் மதிப்பே இல்லீங்க சாரு..” என்று கத்தணும் போல இருந்தது.
இலவச வேன், ஆட்டோ போன்றவை ஜனத்தொகை சொற்பமாக இருக்கும் பிரதேசங்களுக்கு அனுகூலமாக இருக்கும். காசு கொடுத்து செல்லும் ஷேர் ஆட்டோவிலேயே தொடை மேல் தொடை போட்டுக்கொண்டு, இன்னொருத்தர் தொடை மேல் தன் தொடை, செல்லும் அசால்ட்டு கூட்டம் நாம். இலவச வேனெல்லாம் வேலைக்காகுமா?
“அண்ணே... இதுக்கு அந்த எண்ட்ரென்ஸ்ல கொண்டு போய் விடறீங்களா?”
ஆட்டோகாரர் கருணையுள்ளத்தோடு “அம்பது ரூவா..” சொன்னவுடன் குடும்ப சகிதம் ஏறி அமர்ந்துகொண்டேன். சொந்தக்காரர்களின் கல்யாணம் காதுகுத்துவுக்கு செல்வது போல் வருடா வருடம் குடும்பத்துடன் புத்தகக்காட்சி செல்கிறேன். சூரியன் ஊமைக் குசும்பனாய் எரித்துக்கொண்டிருந்தான். வெக்கை தாங்க முடியலை.
படித்து பின்னூட்டமிட்டு உற்சாக டானிக் ஊட்டும் அனுராதா கிருஷ்ணமூர்த்தி மேடத்தையும் புத்தகத்தின் பால் எனக்கிருக்கும் ஆர்வத் தீயை பல தலைப்புகளில் நெய்யூற்றி வளர்த்த பெருமைக்குரிய என் அன்பு பாஸ் கார்த்திக் சுப்ரமணியனையும் சந்தித்தது அந்த அனலிலும் மலைவாசஸ்தலத்து ஜில்லென்று இருந்தது.
அனலடித்ததால் நிறைய ஸ்டால்களுக்கு செல்ல முடியவில்லை. சொக்கனின் அன்புடை நெஞ்சம் எங்கள் தினமணி.காமில் வந்தது. வாங்க விருப்பம். “அப்பா... நீ வரியா... இல்ல நாங்க கெளம்பட்டா?” என்று என் மகள்களின் விரட்டல் அதிகமாக சீக்கிரமே கிளம்பிவிட்டேன்.
நானும் கார்த்திக்கும் புத்தகங்களைப் பற்றிய சம்பாஷணையை காலச்சுவடில் வைத்துக்கொண்டோம். கண்ணன் பார்த்து சிரித்தார். இருநூறு ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கினால் அலமாரி சந்தா இலவசம் என்று கிழக்கில் தொங்கவிட்டிருந்தார்கள். கிழக்கு ரேட்டில் இரண்டு புத்தகம் வாங்கினாலே இருநூறுதான். ஐநூறு என்று எழுதியிருக்கலாமோ?
”என்னங்க ஆயிரம் ரூவாய்க்கு வாங்கியிருக்கேன்... அலமாரி சந்தா பத்தி வாயைத் தொறக்க மாட்டேங்கிறீங்க?” என்று கல்லாவில் தட்டிக் கேட்டவுடன் “அந்த நோட்டுல எழுதிட்டுப் போங்க....” என்று அசுவாரஸ்யமாய் சொன்னார்கள். அனுராதா மேடத்திற்கு ஐந்தினையிலிருந்து தி.ஜா எடுத்துக்கொடுத்தேன்.
இன்று நான் வாங்கியவை:
1. நிறக்குருடு - சுதாகர் கஸ்தூரி (Sudhakar Kasturi) - வம்சி (இப்பவே முக்காவாசி படிச்சாச்சு)
2. அமெரிக்காவில் கிச்சா - கிரேஸி மோகன் - கிழக்கு
3. வெந்து தணிந்த காடுகள் - இ. பா - கிழக்கு
4. ஜே.ஜே: சில குறிப்புகள் - சு. ரா - காலச்சுவடு
5. குறத்தி முடுக்கு - ஜி. நாகராஜன் - காலச்சுவடு
6. முள்ளால் எழுதிய ஓலை (செவிவழிக்கதைக் கட்டுரைகள்) - உ.வே. சாமிநாதையர் - காலச்சுவடு
7. புத்ர - லா.ச.ரா - காலச்சுவடு
8. வெண்கடல் - ஜெ. மோ - வம்சி
9. சின்னஞ்சிறு கதைகள் - தேவன் - அல்லயன்ஸ்
10. அச்சுதம் கேசவம் - இரா. முருகன் ( EraMurukan Ramasami) - கிழக்கு
11. இரா. முருகன் குறு நாவல்கள் - இரா. முருகன் - கிழக்கு

இன்னொருக்கா போவேன் என்று நினைக்கிறேன். நானு “எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாம்ப்பா.. ரொம்ப நல்லவன்....” கேஸு.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails