Friday, August 19, 2016

கணபதி முனி - பாகம் 41: ரமணாஸ்ரம ஸ்தாபிதம்

அழகம்மாள். கணவர் சுந்தரம் ஐயரை இளமையிலே பறிகொடுத்தார். கடும் துயரங்களுக்கு ஆட்படுத்தி கடவுள் அந்தத் தங்கத்தைப் புடம் போட்டுக்கொண்டிருந்தான். அவரது இரண்டாவது மகன் வெங்கட்ராமன் திடீரென்று ஒரு நாள் சீட்டு எழுதிவைத்துவிட்டு காணாமல் போனார். பல வருடங்கள் ஊர் ஊராகத் தேடிய பின்னர் திருவண்ணாமலையில் ஒரு குகை வாயிலில் வெங்கட்ராமனைக் கண்டுபிடித்தார்கள். எப்படிதெரியுமா? திரும்பவும் வீட்டு வாசற்படி மிதிக்கமுடியாத, சன்னியாசியாக ஒதுங்கிப்போன ஒரு சாமியார்க் கோலத்தில் பார்த்தார்கள்.
1900ல் அழகம்மாளின் மூத்த மகன் நாகசாமி குடும்பத்தை அனாதரவாகத் தவிக்கவிட்டு காலமானர். சுந்தரம் ஐயருக்குப் பிறகு அவர்தான் ஆணி வேராக இருந்து சம்பாதித்து குடும்ப பரிபாலனம் செய்துவந்தார். நாகசாமி மேலுலகம் சென்ற போது அவரது மூன்றாவது மகன் நாகசுந்தரமும் மகள் அலமேலுவும் ஏதுமறியாத பால்ய வயதினர். இரு குழந்தைகளையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ளுமளவிற்கு அழகம்மாளிடம் பொருள் சக்தி இல்லை. போதாதகுறைக்கு கடன் சுமை வேறு அவரது தோளில் பாரம் ஏற்றியிருந்தது. சுந்தரம் ஐயரின் தம்பி நெல்லையப்ப ஐயர். அழகம்மாளுடன் அனைவரும் அவரிடம் புகலிடம் தேடிப்போனார்கள். ஊரில் வள்ளலாக வாழ்ந்த சுந்தரம் ஐயர் குடும்பம் அடுத்தவர் ஆதரவுக்காக தஞ்சமடைந்தது.
நெல்லையப்ப ஐயர் தாராள குணம் மிக்கவர். பரோபகாரி. இருந்தும் அழகம்மாளைத் துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தியது. நாகசுந்தரம் பொருளீட்ட ஆரம்பித்ததும் அலமேலுவுக்கும் மணம் முடித்து அவருக்கும் கல்யாணம் நடந்தேறியது. குடும்பம் காலூன்றி இன்பமயமான நாட்களுக்கு நகர்கிறோம் என்று அழகம்மாளுக்கு கொஞ்சமாகத் தெம்பு வந்தது. ஆனால் இறைவனின் திருவுளம் வேறு விதமாக அமைந்தது.
1916ம் வருடம் நாகசுந்தரத்தின் மனைவி ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்து உயிர் துறந்தார். தாயில்லாதக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு அழகம்மாளிடம் வந்தது. தொடர் துக்கங்களினால் அல்லலுற்றதினால் தனது இரண்டாவது மகனின் அருட்பார்வையால் நற்கதி கிட்டுமா என்று பார்ப்பதற்கு திருவண்ணாமலை செல்லத் தீர்மானித்தார். இருந்தாலும் மனைவியை இழந்து கைக்குழந்தையுடன் கஷ்டப்படும் இரண்டாவது மகனை விட்டுப் பிரியமுடியாமலும் தவித்தார். தனது மகனை சிற்றப்பா நெல்லையப்ப ஐயரின் மனைவி அதாவது தனது சித்தியிடம் ஒப்படைத்துவிட்டு அவரும் திருவண்ணாமலை வந்தடைந்தார். 1918ல் நாகசுந்தரமும் சன்னியாசம் அடைந்தார்.
விரூபாக்ஷி குகைக்கு வரும் பக்தர்களுக்கும் சிஷ்யர்களுக்கும் சமைத்துப் போட்டு பரிமாறும் பொறுப்பை அழகம்மாள் ஏற்றுக்கொண்டார். அவர் கடவுளிடம் சரணடைந்தவர். தேவைகள் அதிகமில்லாத எளிமையானவர். ஆஷ்ரமத்தை நிறுவனமாக்கும் எந்த எண்ணமும் அவருக்கில்லை. துயரக்கடலில் நீச்சலடித்து குடும்பத்தைக் கரையேற்றியவர் எஞ்சிய சொற்ப நாட்களை தனது மகன் ரமணரின் அருட்பார்வையின் கீழே கழித்துவிட பிரியப்பட்டார். அவரது மிதமிஞ்சிய ஆசாரங்கள் ஆன்மிக சாதகத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டது. ரமணரின் அருள்மொழிகளைப் புரிந்துகொண்டு அதைப் பின்பற்ற ஆரம்பித்ததும் அமைதியும் இன்பமும் பொங்கக்கண்டார்.
ஆனால் 1920ம் வருடம் அவருடைய தேகாரோக்யத்தில் பின்னடைவு ஏற்பட்டது. மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படவில்லை. 1922ம் வருடம் வியாதிகளின் கை மேலோங்கி அவரை படுத்தபடுக்கையாக்கியது. அந்த வருடம் மே 19ம் தேதி அழகம்மாளுக்கு காலன் நெருங்குவது தெரிந்தது. நினைவு தடுமாறியது.
ரமணர் தாய்க்கு ஆதவரவாக வந்து தலைமாட்டில் உட்கார்ந்தார். ஒரு கையை நெற்றியிலும் மறு கையை மார்பிலும் வைத்து இதமாகத் தடவிக்கொடுத்தார். உள்ளே ஓடும் நூறாயிரம் எண்ணங்களை அந்தத் தடவலால் நீவி விட்டு அமைதியாக அடங்கச் செய்தார். பகவான் ரமணரின் ஆத்மசக்தி அழகம்மாளை மரணபயம் நீங்கச் செய்து முகத்தில் களையும் பிரகாசத்தையும் கூட்டியது. பழனிஸ்வாமியையும் இதேபோல கரையேற்ற முற்பட்டபோது அவரால் இதற்கு ஒத்துழைக்க முடியவில்லை.
அடுத்த நாள் பலிதீர்த்தமருகே அழகம்மாளின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது. ரமணர் அங்கே ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தார். நாயனா அவ்விறைவனை மாத்ருபூதேஸ்வரர் என்று வழிபட்டார். நிரஞ்சனானந்தா நித்யபடி பூஜையும் அபிஷேகமும் செய்துவந்தார். ஒரு நாள் அங்கே வந்த ரமணர், சமாதியின் வடதிசையைப் பார்த்தவாறு நின்றார். சில அடிகள் அந்தப் பக்கம் நடந்திருப்பார். ஓரிடத்தில் அசையாது நின்றார். அவர் பின்னால் வந்த அனைவரும் ரமணர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள்.
"இதோ.. இங்கே தோண்டுங்கள்.. சுனை இருக்கிறது..." என்றார். உடனே ஆட்களை வரச்சொல்லி தோண்ட ஆரம்பித்தார்கள். சில மணித் துளிகளில், சொற்ப அடிகளில், அற்புதமான நீரோட்டம் வாய்ந்த ஒரு சுனையிலிருந்து தண்ணீர் குபுகுபுவென்று பொங்கியது. பக்தர்கள் மகிழ்ந்தார்கள். அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நாயனா அதற்கு "அகஷமன தீர்த்தம்" (பாவங்களைக் களையும் தீர்த்தம்) என்று பெயரிட்டார்.
நாயனாவிற்கு பகவான் ரமணரின் அருட்கடாட்சத்தின் விஸ்தீரணம் தெரியும். கூடிய விரைவில் மாத்ருபூதேஸ்வரர் சன்னிதி இருக்கும் இவ்விடத்தில் ஒரு ஆசிரமம் உருவாகப்போவதை தன் ஞானக்கண்ணால் அறிந்தார். மாத்ருபூதேஸ்வரர் கோயிலின் மஹா பூஜை (28-05-1922) தினத்தன்று ஆறே ஸ்லோகங்களில் ஸ்ரீரமணரையும் அவரது தாயார் அழகம்மாளையும் போற்றிப் பாடினார். சுற்றிலும் நின்றுக் கேட்டவர்கள் கண்மூடி பரவசமடைந்தார்கள்.
அடுத்த நான்கு மாதங்கள் கணபதி முனி மாமரக்குகையில் தவ வாசமிருந்தார். ஸ்வாமி நிரஞ்சனானந்தா மாத்ரூபூதேஸ்வரர் சன்னிதி மேலே தென்னை ஓலையில் கூரை வேய்ந்தார். புதர்கள் அடர்ந்த அந்த பிரதேசத்தில் ஒரு தெய்வீக அமைதி குடிகொண்டிருந்தது. அவரது உதவியாளர் தண்டபாணி ஸ்வாமி. ஸ்ரீரமணர் மேல் அதீத பக்தி கொண்டவர். பக்தர்களிடமிருந்து நன்கொடைகள் பெற்று கற்களையும் புதர்களையும் அகற்றி வேலி போட்டார். ரமணர் தினந்தோறும் அங்கு வந்து மாத்ருபூதேஸ்வரரை வணங்குவதை வழக்கமாகக் கொண்டார்.
தண்டபாணிக்கும் ஸ்வாமி நிரஞ்சனானந்தாவிற்கும் ரமணரின் இடைவிடாத வருகை ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. ரமணரின் அடுத்த ஜெயந்தி உற்சவத்தை இங்கே கொண்டாடுவது என்று முடிவு செய்து அவரிடம் அதற்கான சம்மதமும் பெற்றுவிட்டார்கள். இதற்கு முன்னர் இதுபோன்ற ஜெயந்திகளுக்கெல்லாம் ஸ்ரீரமணர் சரி.. இல்லை என்றெல்லாம் பதில் எதுவும் சொல்லமாட்டார். வாய்மூடி மௌனமாய் இருப்பார். மிகவும் வற்புறுத்தினால் மெலிதாய்ப் புன்னகைப்பார்.
ஜெயந்திக்கு ஒரு வாரம் முன்பு மாத்ருபூதேஸ்வரர் சன்னிதிக்கு வந்தவர் அதன் பின்னர் கூட ஸ்கந்தாஸ்ரமத்திற்கு திரும்பவே இல்லை. அங்கேயே அமர்ந்துவிட்டார். பக்தர்களில் பலர் மாத்ருபூதேஸ்வரர் கோயிலை விட ஸ்கந்தாஸ்ரமமே அவருக்குத் தோதான இடம் என்று எண்ணினார்கள். மேலும், திருவண்ணாமலையில் வசிக்கும் பக்தர்கள் அவர்கள் இல்லங்களிலிருந்தே ஸ்கந்தாஸ்ரமத்தைக் காண முடியும். இப்போது பகவான் புற நகர் பகுதிக்குச் சென்றுவிட்டார். மனதைரியத்தை வரவழைத்துககொண்டு சில பக்தர்கள் ரமணரிடம் ஏன் ஸ்கந்தாஸ்ரமத்தை விட்டு இவ்விடம் பெயர்ந்தார் என்று கேட்டார்கள். ஏதோ அமானுஷ்ய சக்தி என்னை இவ்விடம் இழுத்து வந்தது என்று பதில் கூறினார்.
1923ம் வருடம் ஜனவரி மூன்றாம் தேதி ரமண ஜெயந்தி மாத்ருபூதேஸ்வரர் கோயிலில் நடந்தேறியது. இதுவே ரமணாஷ்ரமத்தின் ஸ்தாபித தினமாகவும் ஆயிற்று.
பகவானின் முன் அமர்ந்து நாயனா மனமுருகப் பாடினார். சூழ்ந்திருந்த பக்தர் குழாமும் சேர்ந்து உருகியது. .
தேவி ஷக்திரியம் த்ரிஷோ: ஸ்ரிதஜன த்வந்த க்ஷயதாயினி
தேவி ஸ்ரியம் அம்புஜாக்ஷமஹிஷ் வக்த்ரே ஸஹஸ்ரச்சதே
தேவி ப்ரஹ்மவதுர் இயம் விஜயதே வ்யஹர கூடா பரே
விஸ்வாசார்ய மஹானுபாவ ரமண த்வம் ஸ்தோது க: ப்ரக்ரித:
பக்தர்களின் அறியாமையைக் களையும் தேவி சக்தி (உமா) உனதுருவில் தெரிகிறாள். தாமரைக்கண்ணனான விஷ்ணுவின் பத்னி லக்ஷ்மி உனது பத்ம முகத்தில் வாசமிருக்கிறாள். உனது வாக்கில் பிரம்மனின் தேவி சரஸ்வதி குடியிருக்கிறாள். மானுடகுலத்திற்கு கற்பிக்கும் குருவே, (என்னைப் போல) சாதரண மனுஷ்யன் உன் புகழ் பாடுவது எளிதா?

1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு...
தொடர்கிறேன்...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails