Friday, August 19, 2016

கோபியுடன் டின்னர்

பெங்களூருவின் பூர்வகுடியர்களுக்கு இந்த சாலை அடைக்கும் போக்குவரத்து ஹார்ட் அட்டாக் தரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கமுடியும். இரண்டு குட்டி யானைகள்(TATA ACE) ஜோடி போட்டுக்கொண்டு வந்தால் ரோடு நிரம்பிவிடுகிறது. சாலைகள் கூடுமிடங்களில் ஒரு பக்கத்துக்கு கஞ்சத்தனமாக இருபது விநாடிகள் கொடுக்கிறார்கள். ரொம்ப நேரம் காத்திருந்து கண் அசந்து தூங்கிய பிரகிருதிகள் விழித்தெழுந்து... சுதாரித்து... கியர் மாற்றி நகர்வதற்குள் மீண்டும் சிகப்பு விழுந்து பெப்பே காட்டி சிரிக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை போ.போலீஸ் தலையைக் காணவே காணோம்.
பிரிகேட் ரோட், கமர்ஷியல் ஸ்ட்ரீட்டுகளில் ஈருயிர் ஓருடலாக இரட்டை வாழப்பழமாய் சிலர் திரிந்துகொண்டிருந்தார்கள். ஆட்டோகாரர்களின் முகத்தில் தமிழர் அடையாளம் ஒட்டியிருந்தது. ரிச்மன்ட் சர்க்கிள் சிக்னலில் கை முழுக்க கயிறு கட்டியிருந்த டாக்ஸி டிரைவர் அசப்பில் புனித் ராஜ்குமார் போலிருந்தார்.
கோரமங்கலா. ஜக்கசந்த்ரா எக்ஸ்டன்ஷன். சர்ஜாபூர் மெயின் ரோடிலிருந்து முதலாம் பிரதான சாலை ஒன்று சரேலென்று பிரிகிறது. கொஞ்ச தூரத்தில் நவீன மோஸ்தரில் நின்றிருக்கும் யுதிவகளும் யுவன்களும் கையில் கிளாஸ் பிடித்திருக்கிறார்கள். அதில் ஊற்றியிருக்கும் திரவம் ப்ரௌன் கலரில் இருக்கிறது. அந்த திரவத்தின் மீது ஏதோ மிதக்கிறது. பக்கத்தில் சென்றால் பதினெட்டு படி மேல் வீற்றிருக்கும் ஐயப்பன் போர்டு போட்ட "ஐயப்பா டீ சென்டர்". நாயர் படு பிஸி. "லெமன் டீ... ஹனி போட்டு..." வேணுமான்னு கேட்டார். ஹனி போட்டு டீ குடிச்சேன்னு என் ஹனிக்கு தெரிஞ்சா வில்லங்கமாயிடும். "ஆர்டினரி லெமன் டீ" கேட்டுவிட்டு சுற்றி நோட்டம் விட்டேன். குறைந்தது இருபது பேர் சுவாரஸ்யமாகக் குடித்துக்கொண்டிருந்தார்கள். (இந்தக்) குடி நல்லது.
நாயர் தனியாள் இராணுவம். டீ போடு. லெமன் பிழி. ஹனி வேணும்னா கல. நாலு துளசி பத்ரம் சேர். "சாரே.... ச்சாய்" விளி. குடித்த க்ளாஸ்களை சேகரி. கழுவு. டீ போடு.. லெமன் பிழி... infinite loop. அவரின் சுறுசுறுப்பு குடிப்பவருக்கும் தொற்றிக்கொள்ளும். கோரமங்கலா, ஜக்கசந்திராவாசிகளுக்கு மத்தியில் ஐயப்பா நாயர் பிரசித்தியாயிருக்கக்கூடும். டீ விசுவாசிகளின் உன்னத ஜாயின்ட்.
மாலை நான்கு மணிக்கு சுமாரான ட்ராஃபிக்கிலிருந்த கோரமங்கலா ஐந்தரைக்கு கோர முகம் காட்டி மங்களம் பாடியது. பெங்களூருவில் கார் வைத்திருக்கும் அனைவருமே சாலையில்தான் ஜாகையிருக்கிறார்கள். மாசாமாசம் சபரிமலைக்குப் போகும் கோபியைப் பார்க்க ஆவல். “இன்னிக்கி நம்ம வீட்லதான் டின்னர்...” என்று அன்பால் கட்டி பாசத்தால் அடித்துப்போட்டார் கோபி.
எந்த ஒரு சிக்னலுக்கு முன்னரும் இரண்டு அக்ஷௌஹிணி சேனை வாகனங்கள். லேசாக மழை பிடித்துக்கொண்டது. இரண்டு கியர்கள் கொண்ட சிக்கனக் கார்களை பெங்களூரு சந்தையில் சுலபமாக விற்கலாம். ஒரு சிக்னலுக்கும் அடுத்த சிக்னலுக்கும் டாப் கியரே இரண்டுதான். கியர்கள் இரண்டொழிய வேறில்லை. க்ளட்சே சரணம். ப்ரேக்கே ஆயுதம்.


காஃபி போர்டிலிருந்து ஜேபி நகருக்குள் செல்வதற்குள் இரண்டு முறை சென்னை-பெங்களூரு முனையத்திலிருந்து முனையம் பறந்துவிடும் தூரத்தில் இருக்கிறது. "உங்க ஏரியா எவ்ளோ மணி நேரத்தில இருக்கு?" என்று பெங்களூருவின் தூரங்கள் கிலோமீட்டருக்குப் பதிலாக நிமிஷங்களில் கணக்கிடப்படுகிறது. நான் வாகனக்காட்டில் தொலைந்துவிடாமல் இருக்கிறேனா என்று கால் மணிக்கொருதரம் “சார்! எங்க இருக்கீங்க?” என்று கோபி அட்டென்டென்ஸ் எடுத்துக் கேட்டுக்கொண்டார்.
பதினைந்து மாடிகளுக்கு இரு ப்ளாக்குகளாக ஆயிரம் குடும்பங்கள் பேசி, சிரித்து, உண்டு , உறங்கி, ரோட்டிலேயே வண்டிகளில் இரண்டு மணி நேரங்கள் தவழ்ந்து வந்து இங்கே நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நான்காம் மாடி பால்கனியிலிருந்து தூரத்தில் நத்தையாய் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் தெரிந்தது. “பத்து மணிக்காவது சரியாயிடுமா?” என்று கவலையாய்க் கேட்டேன்.. “பத்தரை பதினொன்னு வரைக்கும் இருக்கும் சார்” என்று கிலியைக் கிளப்பினார்.
சுடச்சுட தோசையும் (”ஓ! பொடி தோசையா இருக்கு! சாருக்காக ஸ்பெஷல்”), சப்பாத்தியும் மணக்கும் ஆலூ சப்ஜியுமாக செய்து போட்ட கோபியின் மனைவிக்கும், சாதாரணமான ஒரு மாலையை அசாதாரணமாக்கிய குருசாமி கோபிக்கும் நன்றி சொல்லி மாளாது.
மீண்டும் தங்குமிடம் செல்வதற்கு பீதியோடு ரோடு ஏறினேன். பூர்வ ஜென்ம புண்ணியத்தினாலும் கோபி வீட்டில் கிடைத்த சாஸ்தா தரிசனத்தாலும் அதிசீக்கிரத்தில் வந்தடைந்தேன்.
அடுத்த அத்தியாயத்தில் கணேசனைப் பற்றி எழுதணும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails