Friday, August 19, 2016

ஓரிக்கை


சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆலய ஓட்டம் எடுத்திருக்கிறேன். நீலா சித்தி படுத்தபடுக்கையாவதற்கு முன்பு சனி ஞாயிறுகளில் எனது சேப்பாயி மாயவரம் கும்பகோணம் பிராந்திய காவிரிக்கரை ஓர பச்சை நெற்பயிர்களுக்கு மத்தியில் குஷாலாகப் பயணித்துக்கொண்டிருக்கும். மண் வாசத்துடன் புறப்பட்ட காற்று திறந்த கார் ஜன்னல் வழியாக நுழைந்து தலை கோதும் போது லாஹிரி போதையில் கண்கள் சொருகியிருக்கிறேன். இப்போது சொட்டுத் தண்ணீரில்லாமல் வறண்டு போன அகண்ட பாலாறு செல்லுமிடங்களில் சேப்பாயி சுற்றுகிறது. எட்டு மணி நேரத்திற்குள் கூடு அடையவேண்டிய கட்டாயம்.
உனக்கு சில்ப சாஸ்திரம் தெரியுமா? ஆகமங்களில் தேர்ச்சியா? நம் நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டிய வரலாற்றின் மீதுள்ள ஆர்வமா? என்றெல்லாம் குடையாதீர்கள். எனக்கு சிவனையும் சிவக்குமாரையும் தெரியும். சிவக்குமார் என்றொரு அற்புதமான மனிதர், எங்களது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் தமிழன் எக்ஸ்பிரஸ், சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்த பெருமகனார் (தற்சயம் கைலாஸவாசி, C/O நமச்சிவாயம்), ஒரு புத்தகத் திருவிழாவில் பு.மா. ஜெயசெந்தில்நாதன் எழுதிய “திருமுறைத் தலங்கள்” புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்து சிவமார்க்கத்தில் திருப்பிவிட்டார். அதற்கு முன்னரும் பல கோயில்கள் சென்று வந்தவந்தான். இருந்தாலும் நால்வர் பாடிய தலங்களின் சிறப்புகளை எனக்கு ஓதி எனக்கு நல்மார்க்கம் காட்டிய புண்ணியாத்மா.
இரு தினங்களுக்கு முன்னர் அண்ணாமலையார் படத்துக்கு முன்பாக நான் அமர்ந்து, சுயமாய்ச் சுட்ட, படத்தை வெளியிட்டிருந்தேன். அந்த அண்ணாமலையாரை எனக்குப் பரிசளித்தவர் எனதன்பு சிவாண்ணா. இது போன்ற ஆலய தரிசனங்களுக்கு முன்னர் அவரை நினைக்காமல் பொழுது கழிந்ததில்லை. சேப்பாயியின் முதுகில் ஒட்டியிருக்கும் வாசகமான “ஸ்மரணாத் அருணாசலே!” அவரது பிரத்யேக பரிந்துரை.
பதிவின் பாதை மாறிவிட்டது. கோயம்புத்தூர் கோமகனார் கேகே ஐயர் (காசியைப் பற்றி ஞான ஆலயத்தில் அழகான தொடர் எழுதியவர்) ”கோவிலுக்கு எங்கயாவது போலாம்யா...” என்று கேட்டார். வன்பார்த்தான் பனங்காட்டூர் என்கிற சிவஸ்தலம் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்று. நான் இதுவரை தரிசிக்காத தொண்டைநாட்டு சிவபுரி. உடனே அந்தயந்த ஸ்நேகிதக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ”திருமுக்கூடல், பழய சீவரம் அப்படியே திருப்பனங்காடு... மூணும் போய்ட்டு வரலாம்...” என்று கோயில் திட்டத்தைத் தீவிரப்படுத்தினார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார்.
வீகேயெஸ்-வல்லபா, பாலமுகுந்தன் - ஜெயந்தி, கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணைய்யர்-சித்ரா என்ற தம்பதி பட்டாளத்துடன், வல்லபாவின் தந்தை ஹரிஹரன் மாமா, எழுத்தாளர் வித்யா சுப்ரமண்யம் மேடம், நான் சங்கீதா மற்றும் வினயமானசாவுடன் கோயிலுலா கிளம்பினோம்.
“காஞ்சீபுரம் வழியா திருப்பனங்காடு ஒரு ரூட்டு இருக்கு... முடிச்சூர்... வாலாஜாபாத் வழியாவும் போகலாம்.. அஞ்சு கிலோ மீட்டர் வாலாஜா வழி குறைச்சல்....” என்றார் எங்கள் டூர்களின் ஆஸ்தான ’மேப்’பர் வீகேயெஸ்.
தாம்பரம்-பெருங்களத்தூர் தாண்டியவுடன் எலும்பிச்சம் பழங்களை சக்கரங்களுக்கு இரையாக்கும் இரணியம்மன் கோயில் தாண்டி வரும் பாலத்தைப் பிடியுங்கள். அப்படியே வலது ஒடித்து வரும் படப்பை வாலாஜா சாலை மார்க்கத்தில் ( “நேர் ரோடு தம்பி... லாரியில வெயிட் இருக்கும் போது ஆக்ஸிலேட்டர்ல செங்கல் எடுத்து வச்சுடுவோம்.. எவ்ளோ நேரம் அளுத்துவோம்...” என்று எங்களிடம் ட்ரைவராக வேலை பார்த்த ராஜா அண்ணன் நியாபகம் ஏனோ வந்து படுத்தியது) ஆக்ஸிலேட்டரை அழுத்தி ஸ்டியரிங்கை பத்து பத்து டிகிரி திருப்பி, கனரக வானமில்லா சாலையில் வழுகிக்க்கொண்டு சென்று வாலாஜாபாத் அன்னபூர்ணா ஹோட்டலில் நிறுத்துங்கள். வாய்க்கு சுகமான காஃபி குடியுங்கள். எங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது. கல்லா பெண்மணியிடம் ஒவ்வொருத்தரும் காஃபி மகாத்மியம் பாடினோம். வடை சூடாக இல்லையென்றாலும் சுவையாக இருந்தது.
“வரும்போது இங்கதான் திருமுக்கூடல் அப்பன் வெங்கடாஜலபதி கோயில்.. நாம திருப்பனங்காடு போய்ட்டு ரிட்டர்ன்ல தர்சனம் பண்ணிடலாம். ஆர்க்கியாலஜி கண்ட்ரோல்ல இருக்கு.. சீக்கிரம் வரணும்...” என்று காஃபி சூடு வாயிலிருந்து ஆறுவதற்கு முன்னரே வெங்கட்ராமன் சார் குச்சி போட்டார்.
சரியாக தப்பாக போவதில் நான் மன்னன். கூகில் மேப்பே ஸ்தூலமாக எழுந்து வந்து வழி காட்டினாலும் அதற்கும் பெப்பே காட்டுவது என் வழக்கம். என்னை சாலையிலும் வாழ்விலும் வழிதவறாமல் நடத்திச் செல்பவள் எனது வாமபாகம் சங்கீதா. என் பெண்கள் இருவரும் திருப்புகழ் பாட அதை பின்னால் வரும் வீகேயெஸ்ஸுக்கு மொபைல் ரிலே செய்து கொண்டே கேகே அண்ணா “திரும்பணும்.. திரும்பணும்..” என்று கதறியும் திரும்ப வேண்டிய சந்திப்பை விட்டு தூரம் வந்தோம்.
துரத்திப் பிடித்த பாலமுகுந்தன் சாரும் கேகே அண்ணாவும் வீகேயெஸ்ஸும் சேப்பாயியைச் சூழ்ந்து கொண்டனர். கேகே அண்ணா ஓரிக்கை...ஓரிக்கை என்று பெரியவா ஜபம் செய்தார். வயதான் பெரியவர் ஒருவர் கையேந்தி நிற்கவும் கேகே அண்ணாவுக்கு பெரியவா நியாபகம் பொங்கி நெட்டித் தள்ள.... அவரின் கண்ணில் வழிந்த அந்த ஆசையைப் பார்த்து ”பெரியவா கூப்பிடறா... ஓரிக்கைக்கு போய்ட்டு அப்புறமா திருப்பனங்காடு போகலாம்..” என்று மேப்பர் வீகேயெஸ் வழிநடத்தினார்.
சிகையுடன் பாடசாலைப் பிரம்மச்சாரி பையனொருவன் நடை சார்த்தியிருந்த பெரியவா சன்னிதி முன்னால் நின்றுகொண்டிருந்தான். அனுதினமும் வேதம் சொன்ன தேஜஸ் முகத்தில் அப்பட்டமாக ஜொலித்தது. “நாலு மணிக்கு வந்துடுவாரு...” என்ற நீல சீருடை செக்யூரிட்டி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார். குருக்கள் வருவதற்குள் திருவலம் வந்தோம். கல்லிலே கலைவண்ணம் கண்டோம். தென் திசையில் தெக்ஷிணாமூர்த்தியின் அற்புதமான சிலாரூபம். சனகாதி முனிவர்களோடு வியாஸர் வசிஷ்டர் முதலான ரிஷிமண்டலத்தோடு. கீழே மஹாபெரியவா.
வடதிசையில் சிவனாரின் பிரதோஷ நடனம். தும்புரு, நந்தி மத்தளம் போட, சுப்ரமண்யர் என்று தேவாதிதேவர்கள் குழுமி நின்று நடனம் காண பரம சந்தோஷத்தில் சிவபெருமான் முகத்தில் குமிழ் சிரிப்பு. பரமாச்சார்யாளும் அந்த நடனம் பார்ப்பதாக செதுக்கியிருந்தது நெஞ்சை அள்ளியது. எங்கள் குழுவினர் அனைவரும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போன சிற்பம். ”பட்டடக்கல் பாதாமி மாதிரி...” என்று அவற்றை அனுபவித்த வல்லபாவின் சர்ட்டிஃபிகேட்.
“ஐயிறு வண்டி பஞ்சரு... சாவி குடுத்துவுட்ருக்காரு....” என்று ஒரு மூத்த பிரம்மச்சாரி நடை திறந்தார். பெரியவா நேரில் அமர்ந்து “வா உள்ளே...” என்று கூப்பிட்ட மாதிரி இருந்தது. திவ்யமான தரிசனம். வலம் வந்தோம். காமாக்ஷியின் உற்சவர் சிலையொன்று அப்படியொரு வடிவுடன் இருந்தது.
ஸ்ரீராம் என்கிற ஆஃபீஸர் வந்தவுடன் “இவாள்லாருக்கும் கோயில் பற்றிச் சொல்லுங்கோ...” என்று அக்கௌண்ட்ஸ் வெங்கக்ட்ராமன் சார் விண்ணப்பித்தார்.
“இந்த மணி மண்டபத்துல மொத்தம் நூறு தூண். ஒரே கல்லால ஆனது. ஒவ்வொன்னும் ஒவ்வொரு தினுசா இருக்கும். அதாவது வேற வேற டிசையன்ல இருக்கும். பெரியவாவோட நூறு வயசைக் குறிக்கிறா மாதிரி நூறு தூண். பல்லவா, சோழான்னு எல்லோரோட ஆர்க்கிடெக்சரையும் கலந்து கட்டி கோயில் கட்டிருக்கோம். இந்தோ.. இந்த யாளியோட வாயில இருக்கிற கருங்கல் பந்து... பல்லவா சிற்பக்கலை. அப்புறம் இந்த மணி மண்டபமே ஒரு தேர் மாதிரி பண்ணியிருக்கோம். அதான் வாசல்ல இருக்கிற இந்த இரண்டு சக்கரம். இரண்டு சக்கரத்திலையும் இருக்கிற ஆரத்தில பன்னிரெண்டு ராசியிருக்கு. அதே மாதிரி மண்டபத்தோட நடு மையத்தில.. மேலே.. பாருங்கோ.. அங்கேயும் பன்னிரெண்டு ராசியும் கட்டத்தோட செதுக்கியிருக்கா... எல்லாமே கணபதி ஸ்தபதியோட கைங்கர்யம். முன்னூறு பேர் அவர்கிட்டே வேலை பார்க்கிறா.. அதோ.. அந்த செவுத்துல பாருங்கோ.. யானை.. அந்த மாதிரி வரைஞ்சுடுவார்... வேலை பார்க்கிறவா அதுமாதிரி கல்லை செதுக்கணும்...”
பேச்சு வளர்ந்தது. பனங்காடுக்கு நேரமானது. சரி கிளம்பலாம் என்று முடிவான போது ஓடிப்போய் பெரியவா படம் வாங்கிக்கொண்டோம். வித்யா மேடம் டெட்ரா பேக்கில் பச்சைக் கொத்தமல்லி இஞ்சி தட்டிப்போட்ட மோர் வாங்கி வந்திருந்தார்கள். வெய்யிலுக்கும் இதமான மோர், தொண்டையை நனைத்து வயிற்றையும் குளிர்வித்தது. மோர் வார்த்த மேடம் வாழ்க!
ஐந்து மணி ஆகிவிட்டது. ”திருப்பனங்காடு பதினைஞ்சு நிமிஷம் பார்த்துட்டு ஓடி வரணும்... அப்பன் வெங்கடாஜலபதி ஆர்க்கியாலஜி கண்ட்ரோல்ல இருக்கார்.. ஆறரைக்குள்ள நடையடைச்சுடுவா.. “ என்று பரபரத்தார் அக்கௌண்ட்ஸ் வெங்கட்ராமன் சார். சேப்பாயி கனைத்துக்கொண்டு அசுவமாக ஓட்டமெடுத்தது. காஞ்சிபுர வெளிப்புற சாலைகள் வேகத்துக்கு உகந்ததல்ல. மூன்று கார்களும் பின்னால் புழுதி எழும்ப சீறின.
ஐயங்கார் குளம் பார்க்கணும் என்று வீகே ஸ்ரீநிவாசய்யர் கேட்டுக்கொண்டே வந்தார். சிவனேன்னு திருப்பனங்காட்டிற்கு விரைந்தோம்.
அங்கே.....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails