Friday, August 19, 2016

சந்தோஷபுரத்தில் மகிழ்ச்சியில் உறைந்த தருணம்

வல்லபா: "சுரேஷ் சீனு கல்யாணத்துக்கு எப்ப வரேள்?”

ஆர்.வி.எஸ். மனஸ்: “அது அவர் பையன் கல்யாணம் இல்லியோ? கீதா மன்னிக்குத் தெரிஞ்சா பெண்டு நிமிர்த்துடுவாளே!”
மண்டபத்தில் அரைமணிக்கொருதரம் துப்பட்டாவை இழுத்துவிட்டுக்கொண்டு “மாப்பிள்ளை” அப்பா சுரேஷ் அண்ணாவின் இந்தப் பக்க அந்தப் பக்க நடையை ரசித்துக்கொண்டிருந்தோம்.
சாப்பாடு பிரமாதம். எனது பெரிய சோதரர் ஆர்வியிடம் “இலையை எடுக்க ஆள் வருவா? அதை விட்டுடலாம்...” என்று வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுத்துவந்தோம். புலியை வேட்டையாடி அதன் மேல் காலூன்றி, கவிழ்த்துப் பிடித்தத் துப்பாக்கியை ஒருகையில் பிடித்துக்கொண்டு படமெடுத்துக் கொள்வதைப் போல.. ஆர்வி “சுத்தமான” இலையோடு ஒரு படம் பிடித்திருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் அவரிடம் கேட்டுப்பெறவும்.
வாசலில் காத்திருந்து, என்னோடுதான் சாப்பிடுவேன் என்று கைப்பற்றி மண்டபத்தினுள் கூட்டிப்போன வீகேயெஸ்ஸின் அன்பை எப்படி வெறும் வார்த்தையால் எழுதுவது? முதல் பந்தியில் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டாலும் எனக்காக இலை பிடித்துக்கொடுத்த எல்.கேவின் பாசமழையில் நனைந்துவிட்டேன். இடம் போட்டவரை இதயத்தில் வை!
கேரிக்கேச்சரிஸ்ட் சுகுமார்ஜி அனைவரையும் எதிரே உட்காரச்சொல்லி பென்சிலால்வரைந்து தள்ளினார். பென்சில் சீவி கூர்ப்பாக்கும் நேரத்தில் இருவரை வரையும் வேகம் அசாத்தியமானது. (இராமாயண) ஆரண்யகாண்டத்தில் வரும் தங்கை மாதிரி முன்னால் முடி பறக்க அனன்யாவை வரைந்தது இன்னும் சிறப்பு. மஹாதேவனார் அமைதியின் திருவுரு. வழக்கம்போல கைகொடுத்து காதோடு ரெண்டு நல்ல வார்த்தை பேசினார்.
ஸ்தூலமாக நடமாடும் விக்கி கோபுவும் வந்திருந்தார். "உங்கள் பிள்ளை மண் உண்டு வாயைத் திறக்கச் சொல்லி.. உங்களுக்கு உலகம் தெரியவில்லை என்றால்... உங்கள் பிள்ளை கிருஷ்ணன் இல்லாமலில்லை.... நீங்கள் யசோதை அல்ல..” என்ற க்ரேசி மோகனின் வரிகளைச் சிலாகித்தார்.
தையத்தக்கா போடச்சொல்லும் பாட்டுக் கலவை ஒன்றை போட்டுவிட்டு பரவலாக எல்லோரும் மேடையில் ஆடினார்கள். நானும் சங்கீதாவும் “வாழவைக்கும் காதலுக்கு ஜே!”வுக்கு ஆடியிருக்கலாம். சுப நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை விரட்டும் உத்தேசமில்லாமல் திரும்பிவிட்டோம். ஃபாத்திமா பாபுவுடனும் நண்பர்களுடனும் படமெடுத்துக்கொண்டோம். ஃபேஸ்புக் நண்பர் ரவீந்திரன் சீதாராமன் சு.சீனு அண்ணாவுக்கு உறவினர் என்கிற பேருண்மையைத் தெரிந்துகொண்டோம். திருமதி செல்வி சங்கர் அவரது கணவருடன் வந்திருந்தார். அனைவருடனும் உற்சாகமான அரட்டை.


சந்தோஷபுரத்தில் மகிழ்ச்சியில் உறைந்த தருணம்!!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails