Friday, August 19, 2016

அப்புவின் அம்மா

மீசை அரும்பிய பதின்மவயசு. எதிர்பாலினரிடமிருக்கும் கண்ணுக்குத் தெரியாதவைகளைப் பார்க்கும் ஒருவிதமான "அந்த" ஆசை. ஒருநாள் விஜயாவில் காலைக் காட்சி படத்துக்குப் போகும்போது "வெங்குட்டு.. நானும் வரேன்.." என்று கேரியரில் ஓடிவந்து தொற்றிக்கொண்டான் அப்பு. அது மன்னை முழுக்க காலையை கிளுகிளுப்பாக்கிக்கொண்டிருந்த எண்பதுகளின் பிற்பாதி. கொட்டகையெங்கும் சேர நாட்டுப் படங்களின் ஆதிக்கம். ஒண்ணரை மணிநேரப் படத்தில் இடைவேளைக்கு முன்னும் பின்னும் வரும் அல்ப ஐந்து நிமிட சிற்றின்பம்.
தியேட்டர் எதிரில் கீத்துக் கொட்டாயில் சைக்கிளை விட்டாயிற்று. சிகரெட் அட்டையை டோக்கனாக வாங்கி சட்டைப் பையில் சொருகிக்கொண்டு கை சொடுக்கும் நேரத்திற்குள் தியேட்டர் இருட்டுக்குள் இருவரும் மறைந்துவிட்டோம். காமாசோமாவென்று (இப்போது நினைத்தால்!) திரையில் ஏதோ காண்பித்தார்கள். பாதி நேரம் வெண்திரையில் அடர்மழை. மீதிப் பாதி மசமசவென்ற காரிருளில் புள்ளியாய் டார்ச் வெளிச்சமடித்து எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள்.
கசகசவென்று வேர்த்து விறுவிறுத்துப்போய் படம் விட்டு வெளியே வந்தோம். வெய்யிலில் கண் கூசியது. இருநூறு அடியில் இருக்கும் சைக்கிளை எடுத்துவிட்டால் சாவகாசமாக வீட்டிற்கு போகலாம். சைக்கிளில் கிளம்புவதற்கு முன்னர் வீட்டிற்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் அசிங்கம்.
பரபரப்பாகக் கூட்டத்தில் கலந்து தலையோடு தலையாய் மிதந்து வந்து கொண்டிருக்கும் போது "மேட்டினி ஷோ.... சாமி படத்துக்கு அம்மா வந்துருக்காங்க..." என்று காதில் கிசுகிசுத்தான் அப்பு . காலையில் நுழையும் போது கையில் சூலாயுதத்துடன் ஏதோ அம்மன் படப் போஸ்டர் தியேட்டர் காம்பௌன்ட்டில் ஓட்டியிருந்தது இப்போது நினைவில் வெட்டியது. எனக்கு கிடுகிடுத்துப்போனது.
"டேய்... என்னடா சொல்ற?" சத்தமான ரகசியக் குரலில் கேட்டேன்.
"ஆமாடா.. வளையல் சத்தம் கேட்குது"
"ஊர்ல எல்லா பொம்பளையும் வளையல் போட்டுக்கிறாங்க... வளையல் சத்தம் கேட்டாக்க அம்மாவாடா?" இளக்காரமான சிரிப்பு.
"இல்ல... இது அம்மாதான்..."
டிக்கெட் கவுன்டருக்கும் சினிமா முடிந்து வெளியில் வரும் வழிக்கும் மத்தியில் ஒரு அரைக்கல் சுவர்தான் வேலி. எனக்கும் "க்ளிங்..க்ளிங்.." கேட்டது. அது அப்புவின் அம்மாதானா என்று எட்டிப் பார்க்கும் அசட்டு தைரியம் எங்கிருந்தோ வந்தது.
"வெங்குட்டு.. வேணாம்.. நிச்சயமா அம்மாதான்.. பார்க்காதே.... ஓடிடலாம்.." வெட்கமும் பயமும் பிடுங்கித் திங்க கையைப் பிடித்து சைக்கிள் ஸ்டான்ட் பக்கம் இழுத்தான் அப்பு. நான் விடவில்லை. எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்று திமிறிக் கொண்டு அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு கவுன்டரை நோக்கி முன்னேறினேன்.
ஜீவசமாதி போன்ற கவுன்டர்கள். ஆறுதலுக்காக வாசல் பார்த்த சுவரில் ஒரடிக்கு ஒரடி சிமென்ட் ஜாலி (பல்லி மட்டும் நுழையும் துளைகளோடு) பதித்திருப்பார்கள். எட்டணா, ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து "குபேரராஜ் LUV தேனு" என்று சுரண்டி ஆட்டின் போட்டு மன்மத அம்பு விட்டிருப்பார்கள். பார்வை யாரைத் தேடி வந்ததோ அதை விட்டு கண்டதையும் பார்த்து தவித்துக்கொண்டிருந்தது.
பக்...பக் மனசை அடக்கிக்கொண்டு கவுன்டருக்குள் பாய்ந்தேன். ஓரத்தில் குள்ளமாக கையை ஆட்டிக்கொண்டு கண்ணாடி வளையல்கள் கலகலக்க யாரிடமோ பேசிக்கொண்டு அப்புவின் அம்மா அமர்ந்திருந்தார்கள். கவுன்ட்டர் வாசலில் நிழலாட, திரும்பிப்பார்த்தார்கள். ஜாலியிலிருந்து என் முகத்தில் வீசிய வெளிச்சத்தில் "வெங்குட்டுவா?" என்று சுலபத்தில் அடையாளம் காணப்பட்டது.
நாணிக்கோணிக்கொண்டு சைக்கிளை எடுக்க ஓடினேன். அப்பு ஏற்கனவே சைக்கிள் நிறுத்தத்தின் வாசலில் காலில் வென்நீர் கொட்டியது போல தவித்துக் கொண்டிருந்தான்.
"எடுடா சீக்கிரம்...ம்... சீக்கிரம்.."
அவசரத்தில் இரண்டு மூன்று சைக்கிளை சாய்த்துவிட்டு என்னுடையதை உருவிக்கொண்டு பேய் மிதி மிதித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடினோம். ஹரித்ராநதி கீழ்கரை அடைந்தவுடன் எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. "பஹ...பஹா" என்று சிரித்தேன்.
"ஏன்டா சிரிக்கிறே?"
"எப்படியும் உங்கம்மா அந்த சாமி படம் பார்த்துட்டு சாயங்காலமாதான் வரப்போறாங்க... எதுக்குடா இப்படி நாயடிபேயடியா சைக்கிளை மிதிச்சுக்கிட்டு பறந்து வந்தோம்?'
குளக்கரையில் சைக்கிளைச் சாய்த்துவிட்டு சிரித்துக்கொண்டோம். இரண்டு மூன்று நாட்கள் அப்பு வீட்டுப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை. மறந்துவிட்டிருப்பார்கள் என்று பத்து நாட்களுக்குப் பின்னர் எட்டிப் பார்த்தபோது கூட "வெங்குட்டு..." என்று ராகமிழுத்து நமுட்டுச் சிரிப்புடன் அடிப்பார்வை பார்த்தது நிரந்தரமாய் என் நெஞ்சில் பதிந்துவிட்டது.
**
இன்று காலையில் அப்புவிடமிருந்து ஃபோன். அவசரகதியில் உடனே எடுக்கமுடியவில்லை. சற்று நேரம் பொறுத்துக் கூப்பிட்டேன்.
"என்னடா?"
"வெங்குட்டு... காலயில மூணு மணிக்கு அம்மா தவறிட்டாங்க..."
ஒரு நிமிடம் புரியவில்லை. நிதானத்திற்கு வந்த பின்னர்..
"எ-ன்-ன சொ-ல்-றே?" தடுமாறினேன்.
"வயித்துல கேன்சர்னு சமீபத்துல கண்டு பிடிச்சோம். முத்திப்போச்சுதுன்னு அடையாறுல பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.... ஆயுர்வேதிக்ல காமிச்சுக்கிட்டிருந்தேன்.. முடியல.. போய்ட்டாங்க..."
ஃபோனை வைத்துவிட்டான். ஐந்து சுவையுள்ள ஐங்கிரிமண்டி என்றொரு பதார்த்தம் அவர்களது மராத்தி மரபில் சிறப்பு. "வெங்குட்டு... இன்னும் கொஞ்சம்.." என்று கூடத்தில் இலைபோட்டு கேட்டுக் கேட்டுப் பரிமாறியிருக்கிறார்கள். கல்யாணத்திற்காக அப்புவைக் கடத்திய போது (பார்க்க: மன்னார்குடி டேஸ் - முதல் கல்யாணம்) என்னை நம்பி வெளியே அனுப்பிய தர்மாத்மா. ம்..
காலனையும் காலத்தையும் யாரால்தான் பிடித்துக்கட்டிவிட முடியும்?
என் ஆழ்ந்த அஞ்சலிகள்! 

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails