Friday, August 19, 2016

பெங்களூரு நாட்கள்

”மென்னியை முறிக்கும் ட்ராஃபிக். முதல்நாள் ராத்திரியே போய் படுத்துண்டாதான் பெங்களூர் ஏர்போர்ட்ல அடுத்த ஃப்ளைட் பிடிக்க முடியும்” என்று ஏகத்துக்கும் நிமிண்டி விட்டார்கள். அரைக்கிலோ கறி பார்க்கும் ஆர்வத்தில் வெறிநாய் துரத்தும்போது வீதியில் ஓடுவது போல கிளம்பி இரண்டு முகூர்த்தத்துக்கு முன்னாடியே ஊரை விட்டு தள்ளி வைத்திருந்த ஏர்போர்ட் அடைந்தேன்.
சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் கூட்டத்தில் ஐம்பது பேரே குறைவாக இருந்த பெங்களூரு ஏர்போர்ட். மிதமிஞ்சி ஐடி அபிவிருத்தியாகிவிட்டபடியால் இந்திய சீதோஷ்ணையால் முகம் சிவந்த வெள்ளைக்காரர்கள் நடமாட்டம் மிகுந்து இருந்தது. நூற்றுக்கு தொன்னூற்றொன்பது புள்ளி தொன்னுற்றொன்பது பேர் எதனாலோ ஈரமாயிருந்த தரைமேல் பையை உருட்டிக்கொண்டு சுத்தமே சுகாதாரமாகச் சென்றார்கள். நம்மைக் கடந்தால் மஸ்க் பாடி ஸ்ப்ரே மூக்கைத் துளைத்து கூவத்தில் இறங்கிக் குளிக்கும் நிலைமை ஏற்பட்டால் கூட நமக்கே துர்கந்தம் தெரியாதபடி செய்தது. வயதான பாட்டியோடு பெட்டி தள்ளிக்கொண்டு வந்த ஜீன்ஸ் பேண்ட் பொக்கைத் தாத்தா எடுத்துக்கொண்ட செல்ஃபியை எனது மனசும் படம் பிடித்துக்கொண்டது. வாழ்நாளுக்கும் மறக்காத லவ் சீன்.
ஆசிஷ் ஏறும் போதே வானிலை கொஞ்சம் துஷ்டத்தனமாக இருக்கிறது என்கிற முன்அறிவிப்போடு வண்டியை எடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக மூக்கை மேலே தூக்கி விமானம் ஏறிக்கொண்டே இருந்தது. ரவுடி மேகங்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் அவ்வப்போது உதறியது, வண்டியும் உள்ளமும். இறக்கைக்கு நேர் சீட் என்னுது. ஏதாவது ஒரு உதறலில் இறக்கையில் பொருத்தியிருக்கும் ஸ்கூரு கழண்டுவிடுமோ என்று கண்ணாலேயே டைட் பண்ணிக்கொண்டிருந்தேன். தரையில் சென்றால் எதாவது மரத்தடியில் நிறுத்தி ரிப்பேர் செய்வது போல வெயிட்டான மேகத்தில் நிறுத்தி டயர் மாற்றிக்கொள்வது போல ஏற்பாடு இல்லையே என்று நினைத்துக்கொண்டேன். அப்படி ஒரு ஆப்ஷன் இருந்தால் பெங்களூரு கோரமங்கலா ஐயப்பா டீ செண்டர் நாயரை அங்கே கடை போட சொல்லவேண்டும். (இன்னொரு பதிவில் ஐயப்பா டீ செண்டர்)
முன்னால் அமர்ந்திருந்த மாமாவிற்கு வேதனையோ வேதனை. ட்ரெயினில் அடுத்த ஸ்டேஷன் எப்போது வரும் என்று ஜன்னல் எட்டிப் பார்ப்பது போல ஜன்னலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தனியாய் அலைந்த ரவுடி மேகம் இன்னும் கொஞ்சம் வஸ்தாது மேகங்களைக் கூட்டிக்கொண்டு வந்து விமானத்தை மோதி குலுக்கியது. கரகரவென்று ஸ்பீக்கரில் ஆசிஷ் வேறு புரியாதமாதிரியே பேசிக்கொண்டிருந்தார். இவ்வளவு கூத்திலும் எனக்கு தி.மோகனாம்பாள் பாலையா நினைவுக்கு வந்து “ரொம்ப ஆட்டமா இருக்கே.....” முதுகுக்குப் பின்னால் கேட்பது போல் இருந்தது.
ஸ்பெஷல் சில்ரனுக்கு உதவுங்களேன் என்று ஒரு முறை உண்டியல் தூக்கினார்கள். காசு போட எத்தனிப்பதற்குள் பின்னால் சென்று மறைந்த்விட்டார்கள். நாற்பத்தைந்து நிமிடத்தில் சென்னையில் இருப்போம் என்று உறுதியோடு எடுத்த ஆசிஷ் நாற்பதாவது நிமிடத்திலேயே கார்கோ அருகில் தரையிறக்கி ... ஆசுவாசப்படுத்திக்கொண்டு.. சித்த நேரம் கழித்து உருட்டிக்கொண்டு போய் அரைவலில் இறக்கிவிட்டார்.
வாசலில் ஈயாய் மொய்த்த டாக்ஸிகாரர்களைத் தவிர்த்து எதிரில் பிரிஜ்ஜாண்ட பீடியில் இருக்கும் ஆட்டோகாரர்களிடம் தஞ்சமடைந்தேன். “இருநூறு தர்றியா? நூத்தம்பது?” என்று பேரம் பேசிக்கொண்டிருக்கும் போது இடது ஓரமாய் சென்று கொண்டிருந்த பேட்டை ஆட்டோக்காரர் என்னை அடையாளம் கண்டுகொண்டு “இங்க வாம்மா...” என்று கொத்திக்கொண்டு போனார்.
ஊருக்கே ஜிலுஜிலுன்னு ஏஸி போட்டிருந்த ஊரிலிருந்து ஊரையே பாய்லரில் போட்டு கொதிக்க வைத்திருக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன். வீட்டிற்குள் நுழைந்ததும் ஏஸி ரிமோட்டை தேடியது கைகள்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails