Friday, August 19, 2016

கண்டக்டரின் கரிசணம்

ஜிலுஜிலுவென்று ஏகாந்தமாக மெட்ரோவில் கோயம்பேடு வந்திறங்கினேன்.காலை பத்தரை. உச்சபட்ச போக்குவரத்து நேரம் முடிந்து பேருந்து நிலையம் சற்று தளர்வாக இருந்தது. புற்நகர்ப் பேருந்துகள் வரிசையாய் அணிவகுத்து வெளியே சென்றுகொண்டிருக்கும் போது கடகடக்கும் அம்பத்தூர் தொ.பே செல்லும் கடை வண்டியில் ஓடி ஏறினேன்.
"எஸ்டேட் ஒண்ணு" பத்து ரூபாய்த் தாளை நீட்டினேன்.
"இன்னும் ஒரு ரூபா கொடுங்க..."
"எட்டு ரூபா தானே..."
"அது எக்ஸ்ப்ரஸ்.. இது ......ஸ்... பதினோரு ரூபா" அவர் டீலக்ஸ் சொல்லும் போது அந்த தானியங்கிக் கதவு ஒரு முறை காதைச் செவிடாக்கும்படி தடதடத்து "டீ..ல..க்.." மூன்று அட்சரங்களையும் விழுங்கியது. பெருவாரியான இருக்கைகள் ஆட்களுக்குக் காத்திருக்க உதிரியாய்ச் சிலர் உட்கார்ந்திருந்தார்கள். கையடக்க சஷ்டி கவசத்தில் மூழ்கியிருந்த பெண்ணுக்கு முருகன் அருள் முன்னிற்க வேணும்.
"எக்ஸ்ப்ரஸ்தானே காசு ஜாஸ்தி" டிக்கட்டை மோதிரத்தின் வளையத்தினுள் சொருகிக்கொண்டே பின்னால் வந்தமர்ந்த நடத்துனரிடம் கேட்டேன்.
"இல்ல சார்.. அதெல்லாம் அப்போ .. இப்போ டீலக்ஸ்"
"அதெப்படி? எக்ஸ்ப்ரஸ் கொஞ்சம் ஸ்டாப்ஸ்ல நின்னு சீக்கிரமா போவும்.. அதுக்குதானே காசு ஜாஸ்தி வைக்கணும்.."
"இப்போ ரூல் மாறிடிச்சு.. குறைச்ச ஸ்டாப் குறைந்த கட்டணம். நெறையா நின்னா நெறையாக் கட்டணும்..." ஏன்டா படுத்தறே? பார்வையை உதிர்த்து பதினெட்டாக மடித்து ஸ்டேஜ்வாரியாக டிக்கெட் வரிசையெண் எழுதும் சீட்டில் குறிக்க தலையைக் குனிந்து கொண்டார்.
கைவசம் இரா. முருகனின் "அச்சுதம் கேசவம்" இருந்தது. மடியிலிருந்த புத்தகத்தின் பக்கங்களின் இடுக்கிலிருந்து வைத்தாஸும், சின்ன சங்கரனும், கொச்சு தெரிசாவும், பகவதி குட்டியும் "வா... மோனே.. பொஸ்தகம் வாசி..." என்று மாறி மாறி மேஜிகல் ரியலிஸமாகக் கூப்பிட்டார்கள். அம்பலப்புழையும், அரசூரும் லண்டனும் பக்கத்துக்குப் பக்கம் நீலமயிலோடு வர்ணமயமாக வருகிறது.
"இது லா புக்கா?"
கண்டக்டர் எக்கிப் பார்த்துக் கேட்டார்.
"இல்லீங்க.. நாவல்.." அட்டையைக் காட்டினேன்.
"அச்சுதம்... கேசவம்...” என்று முணுமுணுத்துப் படித்துவிட்டு ”பக்தி கதையாங்க?" என்று கேட்டார்.
"ஊஹும். பக்தி கதையில்லை...ஆனா கதையை நா பயபக்தியோட படிச்சிக்கிட்டிருக்கேன்".
தாடியைச் சொறிந்துகொண்டு வெள்ளையாய்ச் சிரித்தார். பேச்சின் ஊடே இடதுபுறம் பெண்கள் வரிசையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் "வாவினா? எஸ்டேட்டா? எங்க இறங்கணும்னு கரெக்ட்டா சொல்லுங்க.. " என்று கரிசனமாகக் கேட்டார். என் பக்கம் திரும்பி
"ம்... திரும்பவும் அட்டையைக் காமிங்க.,.."
படிக்குமிடத்தில் விரலை நுழைத்து புத்தகத்தை மூடி அட்டையைக் காட்டினேன்.
"இரா. முருகன்.. அச்சுதம் கேசவம்..... சார் ஒண்ணு கேட்டா சொல்வீங்களா?"
"என்ன?"
"அச்சுதம் கேசவம்னா என்ன?"
"அது ஒரு ஸ்லோகம்.. ஆதிசங்கரர் எழுதியது.."
"யாரைப் பத்தி?"
"விஷ்ணுவைப் பத்தி..."
"அதாவது கிருஷ்ணன்.. பார்த்தசாரதி.. வீரராகவப் பெருமாள்.. அந்த மாதிரி சாமி... நாமம் போட்டுக்கிற சாமி... சரியா?"
"ஆமா."
"ஒண்ணு கவனிச்சீங்களா? அதை எழுதினது முருகன். பார்த்தீங்களா... பெருமாளைப் பத்தி சிவனோட பையன் எழுதியிருக்காரு"
"இல்லீங்க... இந்த முருகனோட அப்பா பேரு ராமசாமி"
கலகலவென்று ஒரே சிரிப்பு. நானும் சிரித்தேன்.
"முருகனை திருமால் மருகன்னு கூப்பிடுவாங்க... தெரியுமா?" என்று கேட்டேன்.
"மருகன்னா?"
"மருமகன்"
"எப்படி?"
"திருமால்.. அதான் பெருமாள்... அவரோட சகோதரி பார்வதி. பார்வதியோட பையன் முருகன்.. அதனால மருமகன்.."
"அப்டியா? அப்ப முருகரு பெருமாளைப் பத்திச் சொல்றது ஒண்ணும் பெரிய சங்கதியில்லங்கிறீங்க..."
சிரித்துவிட்டு மேலும் படிக்க ஆரம்பித்தேன். திருமங்கலம் தாண்டி ட்ரிபிள் எம் ஹாஸ்பிடல் சிக்னல். மீண்டும் அந்தப் பெண்மணியிடம் இறங்குமிடம் விசாரித்துக்கொண்டார். இப்போது கொஞ்சம் கூர்ந்து அந்தப் பக்கம் கவனித்தேன்.
அந்தப் பெண்ணைத் தாண்டி ஜன்னலோரத்தில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். அவனது செய்கைகள் வித்தியாசமாக இருந்தது. வாயைக் "ஊ"வென்று கூப்பியே வைத்திருந்தான். பார்வையை பகுதி பகுதியாகத் திருப்பி... பார்த்த இடத்தையே நிலைகுத்தி பார்த்தான். Special Child.
"ஆண்டவன் ஏன் சார் இந்த மாதிரி பசங்களைக் கொடுக்கிறான்.. பாவம் அவங்க.... வாள்நாள் முளுக்க வச்சிப் பார்த்துக்கணும்.. இன்னும் எவ்ளோ சங்கடமெல்லாம் வருமோ?"
அவரது பேச்சிலும் கண்ணிலும் உண்மையான வருத்தம் தெரிந்தது. எனக்கும் பாவமாகத்தான் இருந்தது. பதில் சொல்ல எத்தனித்தேன். எது சொன்னாலும் அந்தப் பக்கமிருக்கும் அந்தப் பெண்ணின் காதுக்கும் அது எட்டும். காயப்படுத்தும். நாக்கை மடக்கிக்கொண்டு வாயைத் திறக்காமல் வருத்தம் தோய்ந்த முகத்தைக் காட்டிவிட்டு மீண்டும் அ.கே படிக்க அரம்பித்தேன்.
வாவின் அருகே வந்தவுடன் அந்தப் பெண் எழுந்தார். நடத்துனர் பதறி எழுந்து படிக்கட்டு அருகே ஓடிப்போய் நின்றார். லாங் விசில் கொடுத்து பஸ்ஸை நிறுத்தி அந்தப் பெண் தன்னுடைய குழந்தையை தூக்கி இறங்கும் வரை படியருகேயே நின்றுகொண்டார். தூக்கும் போதுதான் தெரிந்தது அது வளர்ந்த குழந்தையென்று. பன்னிரெண்டு வயதாவது இருக்கும். சிரமமாகத்தான் தூக்கினார்கள்.
தூக்கித் தோளில் சாய்த்துக்கொண்டபின் வாயிலிருந்து எச்சில் ஒழுகி அம்மாவின் துப்பட்டாவை நனைத்தது. ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தது. கண்கள் எங்கேயோ பதிந்திருக்க கொஞ்சம் கொஞ்சமாக வாய், மூக்கு, கண்கள், நெற்றி, தலைமுடி என்று இறங்கிக்கொண்டே போய் கடைசியில் மறைந்து போயிற்று.
"அந்த அச்சுதம்.. கேசவம்..ன்னு மந்திரம் சொன்னீங்களே... அதுல இந்த மாதிரி புள்ளைங்க குணமாவுறத்துக்கு எதாவது போட்ருக்காங்க்களா?" கேள்வியில் கிண்டல் இல்லை. சாஸ்வதமான அக்கறை இருந்தது. என்னிடம் பதிலில்லை. புத்தகத்தை மூடி பையில் வைத்துக்கொண்டேன். நானும் இறங்குமிடம் வந்துவிட்டது.
கனத்துப் போன இதயத்துடன் நடந்து வந்தேன். மீண்டும் அச்சுதம் கேசவம் படிக்க ஒரு மாய உலகில் நுழைந்துவிடுவேன். அரசூரில் ஒரு வருஷமாக சாவே கிடையாதாம். மயில் தோகை விரித்தாடி பறக்கிறதாம். சாவில்லாத ஊரிலே ஊனமும் இருக்காது!
Aldous Huxley தனது The Genius and the Goddess புத்தகத்தில் சொன்ன ஒரு வரி சட்டென்று நியாபகம் வந்தது. அது...
Reality Never Makes Sense!! எந்த அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ளலாம்!

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

மனதைத் தொட்ட பகிர்வு.....

நடத்துனரின் அக்கறை - Hats Off....

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails