Friday, August 19, 2016

‪மன்னை சர்பத்ஸ்‬

நேஷனல் ஸ்கூலிலிருந்து பந்தலடி மூன்னூறு நானூறு மீட்டர் இருக்கலாம். இரண்டு பக்கமும் இடைவிடாத கடைகள். சுதர்ஸன் காஃபி ( ’வெள்ளெரிப்பிஞ்சு ஐம்பது பைசா’ என்கிற மன்னார்குடி டேஸ் எபிஸோடில் இந்தக் கடை விஸ்தாரமாகப் பேசப்பட்டிருக்கிறது), தங்கம் ஸ்டுடியோ, வெண்ணைத்தாழி மண்டபம், ஆர்.ஆர் ட்ராவல்ஸ், நாதன் ஸ்டுடியோ, சர்வோதயா, லக்ஷ்மி சில்க் ஹௌஸ் என்று பராக்குப் பார்த்துக்கொண்டே நடந்து வந்தால் ரங்கூன் ட்ராவல்ஸ் வரும். மசமசவென்று தெரியும் புதுப்பட வீடியோ கேசட்டுகளோடு ஒரு நாள் இரவு முழுவதற்கும் VCPயையும் வாடகைக்கு விட்டு மன்னார்குடியையே ஒட்டுமொத்தமாக அடக்கி ஒடு்க்கி வீட்டிற்குள் அடைத்த பெருமையுடையவர்கள். (ஆமாம். இதற்கு தனி மன்னார்குடி டேஸ் எபிஸோட் பிறகு வரும்) அதற்கு எதிர்புறம் இருப்பது அழகப்பா தாளகம். ஆனால், தாளகத்தைப் பற்றிய பேச்சு இல்லை இது.
அதன் ஒதுக்குப்புறமான வாசலில் பாய் ஒருத்தர் சர்பத் ஸ்டால் போட்டு உட்கார்ந்திருப்பார். ஸ்டால் என்றால் ஷட்டர் போடும் கடைகிடையெல்லாம் இல்லை. பெரிய நாலு கால் ஸ்டூலுக்கு மேலே நாலுபக்கமும் சட்டம் அடித்திருக்கும். நாலைந்து கலர்க்கலர் சர்பத் பாட்டில்களையும், ஜஸ்கட்டி வைத்திருக்கும் தெர்மாகோல் பெட்டியையும், நகத்தினால் நெம்பினால் திறந்துகொள்ளும் கதவுடைய அடியில் போட்டு... சுண்டு விரல் அளவு உறுதியான(?!) பூட்டுப் போட்டு ஐந்து நிமிடத்தில் கடையைக் கட்டிவிடுவார்.
கட்டம் போட்ட கைலியும் கை வைத்த வெள்ளை பனியனும் அவரது அடையாளம். வேகமாக காற்று அடித்தால் ஆவி மிதப்பதுபோல தேசலாக இருப்பார். உச்சி சிரஸுக்கு தும்பைப்பூ வெள்ளைக் குல்லாய். அனுதினமும் நேரம்தவறாமல் நமாஸ் செய்து காய்த்துக் கறுத்துப் போன முன் நெற்றி. டொக்கு விழுந்த கன்னங்கள். கண்களில் நேர்மை. எந்த கெட்ட பழக்கமுமில்லாத ஒழுக்க சீலர்.
யாரும் வந்து சர்பத் கேட்காத நேரங்களில் கண்ணாடி போட்டுக்கொண்டு குடை ரிப்பேர் செய்வார். நான் போய் கடை வாசலில் நின்றதும் கண்ணாடியைக் கழற்றி பனியனில் தொங்கவிட்டு... “ஜ்லிங்...ஜ்லிங்..” என்று உடைந்த ஐஸ் கட்டிகளை கண்ணாடி தம்பளரில் இட்டு..... நன்னாரி சர்பத் எஸென்ஸை வலது கை உயர்த்தி ஆகாயத்திலிருந்து ஊத்துவார்... எலும்பிச்சம்பழம் பிழிந்து... இடது கையால் தம்பளரை மூடிக்கொண்டு... வலது கை ஸ்பூனால் கண்ணாடி தம்பளிரில் ”டிணிங்...டிணிங்”க பத்து நொடிகள் அடித்துக் கையில் கொடுப்பார். கை வழி ஏறும் ஜில்லுப்பில் கத்திரி சூரியன் காணாமல் போய்விடுவான். பாய்க்கு நானொன்றும் காசு கொடுக்க வேண்டாம்.
“சர்பத்துக்குக் காசு தரேன்னு அப்பா சொல்லிட்டாஹ... நீங்க பத்திரமா வூட்டுக்கு போங்க....” என்று வாஞ்சையாக வழி அனுப்புவார் பாய்.
**
ஃப்ரிஜ்ஜிலிருந்து எவர்சில்வர் டம்பளரில் ஐஸ் கட்டிகளை எடுத்துப் போட்டு நன்னாரி சர்பத் தயாரித்தேன். தூக்கிப் பிடித்து ஆத்தும்போது ஐஸ் கட்டிகள் ”க்ணிங்..க்ணிங்..” சப்தம் எழுப்பியபோது விழித்துக்கொண்ட மன்னை நினைவுகள் இது.
வெய்யிலுக்கு ஜில்லுன்னு இருக்கா?

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails