Thursday, May 5, 2011

இனி கிரிக்கெட்டும் சினிமாவே!


முதலில் ஒரு கொசுவர்த்திச் சுருள் ஏற்றி வைத்து பதிவை தொடங்குவோம். என்னுடைய பதின்ம வயதுகளின் தொடக்கத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடிய ஒரு ஆட்டம் சென்னை சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. வீரர்களும் பார்வையாளர்களும் 83ல் கோப்பை கெலித்த சூட்டில் இருந்தார்கள். நவ்ஜோத் சிங் சித்து வானளாவிய ஆறுக்கள் அடித்து 'சிக்சர்' சித்து என்று பட்டம் பெற்று புகழ் பெற்றிருந்த சமயம். என்னுடைய அருமை சிற்றப்பா ஒரு மஞ்சள் கலரில் ரயில்வே பாஸ் போல இருந்த ஒரு அட்டை காகிதத்தை காண்பித்து "டேய்! அடுத்த வாரம் மேட்ச். உனக்கு மட்டும் கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கியிருக்கேன். வந்து பார்!" என்று சொன்னதும், மெட்ராசுக்கு பஸ்ஸேரி ஓடோடி வந்து பார்த்தேன். வரும் வழியில் அப்போதும் விக்கிரவாண்டியில் பேருந்தை நிறுத்தி கூட்டாக 'நம்பர் ஒன்' போன நாற்றத்தில் டீ குடித்தார்கள். இந்த விஷயங்கள் இந்தப் பதிவுக்கு வேண்டா. இருந்தாலும் இன்றுவரை நாறுவதால் எழுத நேர்ந்தது.

எண்பதுகளில் மைக் மோகன் புகழேணியின் உச்சாணிக் கொம்பில் ஏறி தலையாட்டி ரம்மியமாக பாடிக் கொண்டிருந்தார். ஒரு ஓரமாக நோஞ்சானாக போட்டி பார்க்க நடந்து சென்ற என்னைக் கடந்து எல்லோருக்கும் கையசைத்துக் கொண்டே உற்சாகமாக நடுரோட்டில் ஒரு புடை சூழ ஊர்வலமாகச் சென்றார். பக்கத்தில் மஞ்சள் பனியனில் ஒரு பேரிளம்பெண் சென்றதாக பசுமையான ஞாபகம். விக்கெட்டுகளின் நடுவில் டென்னிஸ் பார்க்கும் அமைப்பாக ஒரு இடம் கிடைத்தது. கிரிக்கெட் பார்க்க குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தலைகளில் தொப்பி அணிந்து சின்னதாக என்னுதும் ஒன்னு. பக்கத்தில் ஒரு ஹிப்பி மாமா மேட்ச் முழுக்க ஸ்டேடியத்தில் புகைவண்டி விட்டார். எனக்கு ஒரே கமறல். எல்லோரும் "ஹோ" என்று கத்தும் போது நானும் அந்த அகண்ட கோஷ பஜனையில் கலந்து கொள்வேன். மட்டையில் பட்ட பந்து மைதானத்தில் எங்கே போகிறது என்று முதல் ஒரு மணி நேரம் தேடித் பார்த்து கண்கள் பூத்து களைத்துவிட்டேன்.

அதன் பின்னர் கூட்டத்தோடு கோவிந்தா போட கற்றுக்கொண்டேன். எல்லோரும் "ஹோ" என்றால் நானும் "ஹோ". எல்லோரும் "ஓ....." என்றால் நானும் "ஓ...". எல்லோரும் "ச்சே!" என்றால் நானும் "ச்சே!". ஏழெட்டு மணி நேரம் கண் நோக பார்த்துக் களைத்து உடலெங்கும் புழுதியுடன் வீடு திரும்பினேன். இந்தியா வெற்றியின் பார்டர் வரை வந்தது. ஒரு ரன்னில் ஆலன் பார்டர் இந்தியாவை ஜெயித்தார். மனீந்தர் சிங் என்று பந்து வீச மட்டும் தெரிந்த மாமனிதர் நமது கிரிக்கட்டை புனிதப் படுத்திக்கொண்டிருந்த இந்தியாவின் பொற்காலம் அது. கொசுவர்த்தி அணைந்து விட்டது. கலர்க் கலர் காலத்திற்கு வருவோம்.

திடீரென்று நேற்று முற்பகல் நேரத்தில் என்னுடைய அலுவலக நண்பர் "RVS" என்று வாஞ்சையுடன் அழைத்து "IPL போறியா?" என்று கேட்டார். கிரிக்கெட்டில் நேரடி பார்வையாளனாக இருந்த எனது எண்பத்தேழாம் வருட மைதான அனுபவம் ஒரு முறை என்னை பதில் பேச விடாமல் வாய்க்குப் பசை போட்டது. அப்புறம் நண்பர் டிக்கெட்டின் தரத்தை பற்றி பிரஸ்தாபித்ததும் சட்டென்று ஒத்துக்கொண்டேன். கரும்பு தின்ன அலவன்சா? கோடீஸ்வரர்கள், பெரிய மனிதர்கள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஸ்டைலாக கோக் உறிஞ்சி வேடிக்கை பார்க்கும் இடத்தில் இந்த ஏழையும் உட்கார்ந்து போட்டியை ரசிக்கலாம் என்று அச்சடித்த அனுமதிச் சீட்டு கொடுத்தார்.

உடனடி பம்பர் போல டிக்கெட் கிடைத்ததால் என்னுடைய நாற்கால் ரதத்தை நிறுத்துவதற்கு பார்க்கிங் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் அன்பளிப்பாக கொடுத்த அன்பரின் ஆலோசனையின் பேரில் நேற்று மாலை மட்டும் எக்ஸ்பிரஸ் அவென்யு வணிக வளாகத்தை கார் நிறுத்துமிடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அங்கிருந்து ஒரு ஆட்டோ அன்பரை சேப்பாக்கத்தில் என்னை கொண்டு சேர்க்கப் பணித்தேன். வழக்கம் போல பேரம் பேசி ரெண்டு தெரு திரும்புவதற்கு நாற்பது ரூபாய் அவருக்கு வெட்டினேன். ஒரு நப்பாசையில் மீட்டர் எவ்வளவு காண்பிக்கிறது என்று பார்க்கலாம் என்று குனிந்து பார்த்தேன். அது கண்ணை மூடி தூங்கிக்கொண்டிருந்தது. தற்காலிக உறக்கமா அல்லது நிரந்தரமா என்று தெரியவில்லை. வெளியே ஆட்டோ பின்புறம் "எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது" என்று RTO-வுக்கு வாசகம் எழுதியிருந்தார்கள். சரிதான் பொருத்தப் பட்டிருந்தது வேலை செய்கிறது என்று யாரும் சொல்லவில்லையே. வாழ்க தமிழ்நாடு!


விக்டோரியா ஹாஸ்டல் பெவிலியன் முனையில் நுழைவதற்கு அனுமதி இருந்தது. நான் போவதற்கும் வீரர்கள் ஏசி கோச்சில் வந்து இறங்குவதற்கும் மிகச் சரியாக இருந்தது. ஒரு இரும்பு சுழற் கேட்டில் ஒரு தடவை சுற்றி விட்டு உள்ளே விட்டார்கள். உள்ளே நுழைந்ததும் எனக்கு மிகவும் ஆச்சர்யம். கண்களை ஒருமுறை கசக்கிவிட்டு மீண்டும் பார்த்தேன். படியேறி காலரி செல்லும் வழியில் ஜெட் மற்றும் கிங்பிஷர் ஏர்வேஸ் விமானப் பணிப்பெண்கள் போல வெள்ளை சட்டை, நீல ஸ்கர்ட் அணிந்து தேவதைகள் நின்று கொண்டிருந்தார்கள். "Welcome Sir!" என்று ராகமாக சொன்னார்கள். குழலினிது யாழ் இனிது. பிளாஸ்டிக் அட்டையில் இந்திய ஜனங்களுக்கு கடன் வாங்க சொல்லித்தந்த முன்னோடி, Citibank நிறுவனத்தார் ஒரு காகிதப் பையில் ஸ்கெட்ச், நீண்ட குச்சி பலூன், பேப்பர் முதலான ஐட்டங்கள் போட்டுக் கொடுத்தார்கள்.

அதையடுத்து உள்ளே நுழைந்ததும் ஒரு சிறிய வரவேற்பறை போல இருந்தது. அது ஒரு குளிரூட்டப்பட்ட ஏசி அறை. அங்கே முன்பு பார்த்ததைவிட இன்னும் கொஞ்சம் அழகாக ஒரு அப்சரஸ் தட்டு நிறைய செண்ட் அடித்த வெள்ளை நிற ஜிலீர் துணியுடன் வரவேற்றது. அந்தப் பெண்ணின் திருமுகத்தை பார்த்தாலே பார்ப்போர் முகம் மலர்ந்துவிடும். இருந்தாலும் அப்பெண்ணின் மனம் நோகாமல் அதையும் வாங்கி முகத்தை துடைத்துக் கொண்டேன். எனக்கு முன்னால் நின்றிருந்த அந்த குறுந்தாடி குறும்புக் கிழவர் அந்தக் குட்டைப் பாவாடை குமரியை பார்த்துக்கொண்டே வாய்க்கு கீழே தாவாங்கட்டையை அழுத்தி துடைத்தார். ஜொல்ளோ? எனக்கு அவருடைய தாடி கையோடு வந்துவிடுமோ என்ற பயம். சந்தனக் கலர் துணி பரப்பி மேஜை போட்டிருந்தார்கள். "திண்பதற்கு எல்லாம் கொடுப்பார்கள்" என்று டிக்கெட் கொடுத்த புண்ணியவான் சொன்னது அசரீரியாய் ஞாபகம் வந்தது. Sprite  கேட்டேன். பதிலுக்கு 7 UP கொடுத்தார்கள். "இவங்க தான் ஸ்பான்சர்" என்று இளித்தான் கொடுத்த பையன். தானம் கொடுத்த கூல்ட்ரிங்கை பிராண்ட் கேட்டு படுத்தக்கூடாது என்று நாகரீகமாய் குடித்துவிட்டு இன்னும் கொஞ்சம் படியேறி இருக்கைகள் இருக்கும் இடத்திற்கு வந்தேன்.


உள்ளே நுழைந்ததும் டிஸ்கோதே பார் போன்று பாட்டு அலறிக்கொண்டிருந்தது. "நாக்க மூக்க" உள்ளே நுழையும் எல்லோரையும் "அட்ரா.. அட்ரா..." என்று வரவேற்றது. மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு செட்டு கட்டியது போல ஒரே சத்தம். எல்லாமே டம்மு டும்மு என்று சங்கீத அடிதடி பாடல்கள். முதல் நான்கு வரிசைகள் வெள்ளைக்கார ஆட்டக்காரர்களின் வூட்டுக்கார அம்மணிகளுக்கு என்று அங்கே நின்றிந்த இன்னொரு சிட்டு சொன்னது. அது காட்டிய திசையை சிரமேற்கொண்டு ஏற்று எட்டாவது ரோவில் பவ்யமாக உட்கார்ந்தேன். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அரை டிராயர் வெள்ளை டி. ஷர்ட்டில் கோதுமை நிறத்தில் ஒரு அம்மணியும், ஜீன்ஸ் பேன்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் டி ஷர்ட் போட்ட ஒரு கனவானும் வந்தனர். எனக்கு பின்னால் இருந்த வரிசையில் உட்கார்ந்து போட்டி துவங்குவதற்கு முன்னரே கன்னாபின்னாவென்று ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். முதுகுக்கு பின்னால் இருந்து ஒரே "யா.யா..யா.." என்று யாயலை பேயலையாக அடித்தது.

என்னுடைய வரிசையில் எனக்கு பக்கத்து சீட்டில் உட்காருவதற்கு இரண்டு பருவச் சிட்டுகள் வந்தது.  ஒன்று பேன்ட் போட்டு மேலுக்கு ஒரு அலங்கார பனியன் அணிந்து பின்னால் குண்டலினி எழும்பும் இடத்தில் அந்த பனியனை நாடாவால் இழுத்து ஒரு கட்டுப் போட்டிருந்தது. சுண்டினால் ரத்தம் வரும் சிவப்பு. இன்னொன்று ஜீன்ஸ் அணிந்து டாப்ஸ் போட்டிருந்தது. மா நிறம். என்னருகில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்த சு.ர.வ. சிவப்பு என்ன நினைத்தது என்று தெரியவில்லை வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சி போல விருட்டென்று எழுந்து சென்றுவிட்டது. ஐந்து நிமிடத்தில் கருகருவென்று ஒரு ஆடவனை அழைத்து வந்தது. என் பக்கத்தில் அவனை உட்கார வைத்துவிட்டு பின் சீட்டில் ஆங்கிலம் பேசிய அந்த ஜோடிக்கு பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டது.


மேட்ச் ஆரம்பித்தது. IPL பானர் மியூசிக் ட்ரம்பெட் போடும் போதெல்லாம் "ஹோ..ஹோ.." என்று கோஷ்டியாக இரைந்தார்கள். பந்துக்கு பந்து இடைவெளி சந்தில் பாட்டு போட்டார்கள். அடுத்த முறை IPL போட்டிகளில் மியூசிக் நிரம்ப பிடித்த ஆட்டக்கார்கள் மைதானத்தின் நடுவில் குத்தாட்டம் போடுவார்கள் என்று நினைக்கிறேன். காது கிழியக்கிழிய அந்த மியூசிக் சத்தம். மேட்ச் ஆரம்பிக்கும் போதே இனிய தமிழில் பேசிய ஒரு கள வர்ணனையாளர் "இன்னிக்கி மேட்ச்ல CSK தான் ஜெயிக்கும்" என்று ஆணித்தரமாக அடித்துச் சொன்னார்.


இன்னிங்க்ஸ் இடைவேளையில் மீண்டும் அந்த ஏசி அறை ரெஸ்டாரெண்டில் முழு வெண்டக்காயை கடாயில் இட்டுப் பொரித்தெடுத்த செமி பஜ்ஜியும் செமி வருவலும் கலந்த ஒரு செமி பதார்த்தம், உப்புமாவுக்கு முந்திரி போட்டு ராஜ மரியாதை செய்து அடுப்பேற்றி இறக்கியிருந்தார்கள். சுடச் சுதா முந்திரி அல்வா. மல்லிப்பூ மிஸ்ஸிங். அப்புறம் ஐஸ்க்ரீம், கடைசியாக நம்மை எழுப்புவதற்கு ஒரு ஏழு அப்பு என்று ஒரு பிடி பிடித்தேன். உணவு உபசரிப்பு பார்க் ஷெரடானாம். பஃபே என்றாலும் குறுக்கு நெடுக்காக உள்ளே நுழைந்து பாய்ந்து அள்ளினார்கள். வாய்க்குள் அடைத்துக்கொண்டார்கள். ட்ராஃபிக்கில் நிறுத்தக் கோட்டுக்கு முன்னே நாலடி சென்று நிறுத்தும் நமது சராசரி சென்னை மனப்பான்மை அங்கே மட்டும் இருக்காதா என்ன? சிவமணியோடு ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். மனிதர் தோளோடு அணைத்து போஸ் கொடுத்தார்.

இடைவெளிக்கு பின்னர் ஆடிய சென்னையை ராய்னா, ஹஸ்சி ஜோடி இலகுவாக வெற்றிக்கு இட்டுச் சென்றது. ரொம்ப நேரத்திற்கு பக்கத்தில் இருந்த மா நிறம், கருப்பு பையன், பின்னே உட்கார்ந்த சு.ர.வ.சிவப்பு கேர்ள் மூவரையும் காணவில்லை. ஒரு ரோவில் எட்டு சீட்டு பிடித்து கடைசியாக ஆறு அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்த பெண்மணி ஒருவர் கடைசி வரை கண்களில் நீர் வர சிரித்து சிரித்து பக்கத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். சீட்டு பிடிப்பதில் இவ்வளவு நேர்த்தி இருக்கும் இவர் ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்து கொண்டால் பிழைப்பு நன்றாக ஓடும். இத்துனை இடையூறுகளுக்கு இடையில் நான் ஒரு பந்து விடாமல் மேட்ச் முழுவதும் பார்த்தேன் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். பாட்டு, கூத்து, ட்ரிங்க்ஸ் இன்டர்வெல் என்று சினிமா போலவே மூன்று மணி நேரம் நடக்கும்  IPL  இன் வெற்றி எதனால் என்று எனக்கு நன்கு விளங்கியது. இனி கிரிக்கெட்டும் சினிமாவே!

பின் குறிப்பு: என்னது IPL மேட்ச் பற்றியே எழுதலையா? அதான் டி.வில பார்கரோமே. அப்புறம் நான் என்ன எழுதறது. நான்கு நாட்கள் அயராத பணிக்கு ஒரு அற்புதமான ரிலாக்ஸ். அடுத்த பதிவில் சிலிகான் காதலி தொடரும். ஓடாதீங்க. நில்லுங்க..

படக் குறிப்பு: அனைத்தும் என் கையால் கிளிக்கியவை. பெவிலியன் பக்கத்தில் இருந்ததால் "தோனி..தோனி" என்று பல தொனிகளில் அழைத்துப் பார்த்தேன். ஆனால் அண்ணன் திரும்பிப் பார்க்கவில்லை. சிவமணியும் நானும் தோளோடு தோள் சேர்த்த போட்டோவை நான் இங்கே சேர்க்கவில்லை.

-

35 comments:

A.R.ராஜகோபாலன் said...

என் பொறாமையும் ஆற்றாமையும் உன்னை பொசுக்கட்டும் வெங்கட்
ஏன்டா இப்படி சொல்லி சொல்லி வெறுப்பெத்துரிங்க, அதுவும் அந்த
சு ர வ அழகி , நல்லா இரு வெங்கட் .

பத்மநாபன் said...

குஷியாத்தான் இருக்கும்...விஜய் ஆடும் போது இ.தளபதி விஜய் பாட்டு.. தோனி ஆடும் பொழுது ரஜினிபாட்டு என ஏக ரகளை....

சியரிங் பார்ட்டிகளின் நடனம் பற்றி ஒன்னுமே சொல்லலை... இந்த தடவை சிஎஸ்கே சியரிங் கொஞ்சம் சோபை ..அதனால தான் தோனி பார்ட்டி ஒழுங்கா ஆடறாங்க....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஆர்விஎஸ்! இந்த சேப்பாக்ல பெஃருவரி 16ம் தேதி பசங்களக் கூட்டிக்கிட்டு இந்தியா-நியூசிலாண்ட் ப்ராக்டீஸ் மேட்ச் போயிருந்தேன்.

மறக்கமுடியாத தண்டனை. தண்ணி குடிக்க இல்லை. கைலயும் பாட்டிலுக்கு அனுமதி இல்லை.ஆனா பெரிசு பெரிசா டாய்லெட். வேணும்னா பெப்ஸி குடிங்கன்னு அனுசரணையாச் சொன்னாங்க.

அதுக்கெல்லாம் நடுவுலயும் மேட்ச் பாத்துட்டு நிர்வாகத்துக்கு சாபம் கொடுத்துட்டு வந்தோம்.

நீங்க எழுதினதுல சேப்பாக் சொர்க்கபூமியாத் தெரியுது.இது நிஜமா?நிஜமானால் நியாயமா?

ஸ்ரீராம். said...

கேமிரா உள்ளே அனுமதிக்கப் பட்டதா...அல்லது செல் கேமிராவா...அந்த பனியன் மங்கைகளை ஒரு படம் பிடித்திருக்கலாமே...!

இராஜராஜேஸ்வரி said...

தானம் கொடுத்த கூல்ட்ரிங்கை பிராண்ட் கேட்டு படுத்தக்கூடாது //
Good ...

எல் கே said...

இந்த மாதிரி அதிக விலை இருக்கற டிக்கெட் தான் நிம்மதியா மேட்சை அங்க இருக்கற டிவில பாக்க முடியும். இல்லாட்டி இப்பவும் கஷ்டம்தான் மைனர்வாள்

Madhavan Srinivasagopalan said...

முதல் கிரிக்கெட்டு முடிந்து நீங்ககள் மன்னை திரும்பியவுடன் என்.வி.ஆர் கோபால், நீங்கள் நேரடியாயக் கிரிக்கெட்டு பாத்ததால்தான் இந்தியா தோல்வியை தழுவியதாக உங்கள் கலாய்த்ததும் எனக்கு நினைவிற்கு வருகிறது... நீங்கள் மறந்து விட்டீர்களோ ?

ஐ.பி.எல் போகும் போக்கைப் பார்த்தால்... மனதில் வரும் கேள்வி
எங்கே செல்லும் இந்தப் பாதை..?

Unknown said...

கிரிக்கெட் வர்ணனை விட உங்கள் வர்ணனை அருமை
நடக்கட்டும் நடக்கட்டும் ...:)

Yaathoramani.blogspot.com said...

கிராமங்களில் திருவிழாவுக்குப் போகும் குஷி
நகரவாசிகளுக்கு கிரிக்கெட் திருவிழா
என்ன எல்லாம் கொஞ்சம் மாடர்ன் ரசிப்பு
வர்ணித்தவிதம்வழக்கம் போல அருமை

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ரசனை உங்களுக்கு மைனர்வாள்... பார்க்கறவங்களை- யெல்லாம் இப்படி வர்ணனை பண்ணா, அப்பறம் கிரிக்கெட் எப்படிப் பார்த்து இருப்பீங்கன்னு ஒரு சம்சயம்!!!

Chitra said...

கோடீஸ்வரர்கள், பெரிய மனிதர்கள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஸ்டைலாக கோக் உறிஞ்சி வேடிக்கை பார்க்கும் இடத்தில் இந்த ஏழையும் உட்கார்ந்து போட்டியை ரசிக்கலாம் என்று அச்சடித்த அனுமதிச் சீட்டு கொடுத்தார்...... தன்னடக்கமே...... அடக்கி வாசிக்கிரீகளே!

அமுதா கிருஷ்ணா said...

விக்ரவாண்டி பிறந்ததில் இருந்தே அப்படி தானோ..

balutanjore said...

rvs sir

this is balu how are you

nirayya kalakki irukkeengale

ellam padichutu apram varen

best of luck

balu vellore

Anonymous said...

சில வாரங்களாக தங்கள் வலைத்தளத்தை என் சிஸ்டத்தில் ஓப்பன் செய்வது பெரும்பாடாக இருக்கிறது. மற்ற அனைத்து தளங்களும் ஓப்பன் ஆகின்றன. எங்கே பிரச்னை என்று தெரியவில்லை. What would be the solution RVS?

Anonymous said...

100 kisses in your cheeks for the flow of writing. Please give your mail id.

சாய்ராம் கோபாலன் said...

//ஐந்து நிமிடத்தில் கருகருவென்று ஒரு ஆடவனை அழைத்து வந்தது. என் பக்கத்தில் அவனை உட்கார வைத்துவிட்டு பின் சீட்டில் ஆங்கிலம் பேசிய அந்த ஜோடிக்கு பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டது.//

ஆர்.வி.எஸ். இந்த பெண்களை புரிஞ்சிக்கவே முடியாது பாஸ் !

கிரிக்கெட் பிளேயர் ஆனா நீங்கள் இம்மநேரம் எழுதவில்லையே என்று நினைதேன். நான் பெங்களூரில் பார்த்த பாகிஸ்தான் வோர்ல்ட்கப் மேட்ச் (ஜடேஜா / சலில் அன்வர் / வெங்கடேஷ் பிரசாத் சண்டை); நெறைய பெங்களூர் மேட்ச்கள்; லண்டனில் பார்த்த நாட்வெஸ்ட் இறுதிப்போட்டி.

இருந்தும் நானாக ஆடியது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் !!

ரிஷபன் said...

இன்னிங்க்ஸ் இடைவேளையில் மீண்டும் அந்த ஏசி அறை ரெஸ்டாரெண்டில் முழு வெண்டக்காயை கடாயில் இட்டுப் பொரித்தெடுத்த செமி பஜ்ஜியும் செமி வருவலும் கலந்த ஒரு செமி பதார்த்தம், உப்புமாவுக்கு முந்திரி போட்டு ராஜ மரியாதை செய்து அடுப்பேற்றி இறக்கியிருந்தார்கள். சுடச் சுதா முந்திரி அல்வா. மல்லிப்பூ மிஸ்ஸிங். அப்புறம் ஐஸ்க்ரீம், கடைசியாக நம்மை எழுப்புவதற்கு ஒரு ஏழு அப்பு என்று ஒரு பிடி பிடித்தேன்.

மேட்ச் கூட இவ்வளவு சுவாரசியமா இருக்காது போல..

RVS said...

@A.R.RAJAGOPALAN
எதிர்பாராமல் கிடைத்தது. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ;-)))

RVS said...

@பத்மநாபன்
நல்ல கற்பனை. ஐ.பி எல்லுக்கு எழுதிப் போடுங்க.. சீயர் கேர்ல்ஸ் ஒன்னும் காண சகிக்கலை. பக்கத்துல உட்கார்ந்திருந்தவங்க தான் சியர்புல் கேர்ளா தெரிஞ்சாங்க பத்துஜி.. ;-))

RVS said...

@சுந்தர்ஜி
அதெல்லாம் காசு புரளாத மேட்ச் ஜி! இதுல டிக்கெட் விற்பனையிலேயே லட்சம் லட்சமா சம்பாதிக்கறாங்க.. செலவு பண்ணலைன்னா எப்படி. நான் போன டிக்கெட் வி.வி.ஐ.பி. அதான் ராஜ மரியாதை. ;-)))

RVS said...

@ஸ்ரீராம்.
போன என்ட்ரி அது மாதிரி ஸ்ரீராம். நோ செக்கிங். நிக்கான் கூல்பிக்ஸ் கேமரா. ;-))

RVS said...

@இராஜராஜேஸ்வரி

Thanks Madam. ;-))

RVS said...

@எல் கே
ஆமாம் தனிக்காட்டு ராஜா! ;-))

RVS said...

@Madhavan Srinivasagopalan
ஞாபகம் இருக்குது மாதவா! அதான் இப்ப போய் சென்னையை செயிக்க வச்சுட்டேன். ;-))

RVS said...

@siva
நன்றி மன்னைகுல மாணிக்கமே. ;-))

RVS said...

@Ramani
ரசித்ததற்கு மிக்க நன்றி ரமணி சார்! ;-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
எந்தா சம்சயம். கண் மேட்ச் பார்த்தது. காது பிற வேலைகளை பார்த்துக் கொண்டது தலைநகரத் தலை. ;-))

RVS said...

@Chitra
ஹி..ஹி.. நெசமாத்தான்.. ;-))

RVS said...

@அமுதா கிருஷ்ணா
ஆமாம் போலருக்கு.. சரி.. அது எப்ப பொறந்தது.. ;-)))

RVS said...

@balutanjore
ரொ..........ம்ப நாளா ஆளைக் காணும் சார்! எங்க போயிட்டீங்க.. கருத்துக்கு நன்றி. ;-))

RVS said...

@! சிவகுமார் !
என்னான்னு தெரியலையே! ஏதாவது நோண்டிப் பார்க்கிறேன். ;-))

RVS said...

@! சிவகுமார் !
சீ.சீ.. கன்னம் பூரா ஈரம் ஆயிடுச்சு.. ;-))
thee.vee.pe@gmail.com தான் ப்ரதர். ;-))

RVS said...

@சாய்
நீங்க எங்க ஆடினீங்க.. சென்னையிலா.. அல்லது தின்னவேலியிலா... ;-)))

RVS said...

@ரிஷபன்
ஹா.ஹா.. பாராட்டுக்கு நன்றி சார்! ;-)))

சாய்ராம் கோபாலன் said...

//RVS said... @சாய் நீங்க எங்க ஆடினீங்க.. சென்னையிலா.. அல்லது தின்னவேலியிலா... ;-)))//

திருநெல்வேலி என் அப்பா / அம்மாவின் ஊர். நான் பிறந்தது பெங்களூர், வளர்ந்தது முழுதும் சிங்கார சென்னை !!

ஆறு வயதிற்கு முன் (மூன்றில் இருந்து ஆறு வரை ) ஒரு மூன்று வருடங்கள் மட்டும் திருநெல்வேலியில் !


பெங்களூர் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேல் மற்றும் லண்டன். சென்னையில் பத்தாம் வகுப்புக்கு முன் வரை தான். அதற்குபிறகு படிப்பும் வரவில்லை - கிரிக்கெட்டும் போச்சு !!

பெங்களூரில் கம்பெனிக்கு பல வருடங்கள் கார்பரேட் மேட்சேஸ், லண்டனில் அங்கே இருந்த ஒரு "லோக்கல் கிளப்" ஒன்றில் லீக் மேட்ச் இரண்டு வருடம் ஆடினேன். பல நாட்டு மக்கள் கொண்ட ஒரு கதம்பம். கிட்டத்தட்ட 25 டீம் உண்டு. ஹோம் / அவர்கள் இடம் என்று நிறைய மேட்ச்கள்.

"மேட்" இல்லாத turf விக்கெட்டில் லண்டனில் மிதமான குளிருடன் ஸ்வெட்டர் அணிந்து கிரிக்கெட் பந்தின் வாசத்துடன் ஆடியது சுகமோ சுகம். அதோடு சரி.

இப்போது கிரிக்கெட்டை பார்ப்பது கூட கிடையாது. இந்த வேர்ல்ட் கப் தான் ரொம்ப வருஷத்திற்கு பிறகு பார்த்தேன் !!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails