Friday, March 18, 2016

மன்னை 614001




கொஞ்சம் அவன் இவன்னு ஏகவசனத்தில் பேசிப்போம்.. அன்னியோன்யமா இருக்கட்டும்.

”வெங்கிட்டு.. இந்த ஞாயித்துக்கிழம ஃப்ரீயா? உப்பிலிட்ட கலாக்ஷேத்ரா க்ரௌண்ட்ல கிரிக்கெட் விளையாடலாமான்னு கேட்டேன்... ஹெச்சிசி ப்ளேயர்ஸ்லாம்.. என்ன சொல்ற” என்று கோப்லிதான் மெனக்கெட்டு இதை ஆர்கனைஸ் பண்ணினான். ஹெச்சிசி என்பது ஹரித்ராநதி கிரிக்கெட் க்ளப் என்பதன் சுருக்கம். மன்னையின் இங்கிலீஷ் கவுண்டி. ஊரில் பிரதான டீம். பல 5555 ரூ, 4444 ரூ, 3333 ரூக்களைத் தட்டிச் சென்ற வெற்றி அணி.
கோப்லியின் அண்ணன் ரமேஷும் அடியேனும் ஓப்பனிங் பௌலர்கள். ரமேஷ் பேஸர். விர்ர்ரென்று காதருகில் சப்தம் வர பந்து வீசுவார். நான் மீடியம் பேஸர். மிடில் ஆர்டர் மட்டையாளன். அண்ணாமலை பல்கலையில் தற்போது வணிகவியல் பேராசிரியராக இருக்கும் கோபாலும் நானும் தெருத்தெருவாகக் கேப்டன்கள் (அட.. கிரிக்கெட் கேப்டன்தாங்க!!) வீட்டுப் படியேறி, தேவுடு காத்து, ”இன்னிக்கி மத்தியானம் ஒரு மேட்ச் வச்சுக்கலாமா?” என்று மைதானத்துக்கு இழுத்து வந்து பல போட்டிகளில் கெலித்திருக்கிறோம்.
கைப்பிடிக்கு சைக்கிள் ட்யூப் க்ரிப் போட்ட மட்டை, சதை மழித்த கருவேலங் குச்சிகள் ஸ்டம்ப்ஸ், விக்டோரியா க்ளப்பில் கதறக் கதற டென்னீஸ் ஆடிக் கழித்துவிடப்பட்ட பந்து ("ரொம்ப புஸுபுஸுன்னு எடுத்துக்காதடா... காத்துல பட்டமா பறக்கும்... தூக்கி அடிச்சா லாங் ஆன் கையில போயி பிடிச்சுக்கோன்னு லட்டு மாதிரி விழும்...பௌலிங்கலயும் குத்தி ஏத்தி பேஸ் காட்ட முடியாது.." - டென்னீஸ் பால் கிரிக்கெட் தந்திரங்கள் - 101) சகிதம் ஆறேழு சைக்கிள்களில் தொப்பியோடு மே மாத வெயில் பாழாய்ப் போகாமல் ஊர் மைதானங்களில் வாசமிருப்போம்.
கோப்லி எங்கள் தெரு ஸ்ரீகாந்த். எந்த நேரத்திலும் கவுட்டி கிழிந்து, கழுவில் ஏற்றிய தேகம் இருபாகமாகத் தரையில் விழலாம் என்று அபாயகரமாகக் காலைப் பரப்பி வைத்துக்கொண்டு காட்டடி அடித்து ஸ்ரீகாந்த் பெயர் பெற்றவன். "நீ அடிச்சாலும் சரி.. அடிக்காட்டாலும் சரி. நீ ஓப்பனிங்க் இறங்கினாதான் டீமுக்கு ராசி..." என்று அம்மன்னன் புகழ்பாடி மஞ்சள் தண்ணீர் தெளித்து பிட்ச்சுககுள் இறக்கிவிடுவோம். ராசிக்கார பயபுள்ள...
என்னுடைய மன்னார்குடி டேஸ் அத்தியாங்களில் அடிக்கடி வந்து கலாய்த்துப் போகும் ஸ்ரீராம் தன்னை ஜான்ட்டி ரோட்ஸாக இன்னமும் மனதில் வரித்திருக்கிறான். அந்தக்காலமெல்லாம் மலையேறிப் போச்சுது. ஷார்ட் கவர் பகுதியிலிருந்து பந்தை ஃபீல்ட் செய்து ரன் அவுட்டுக்காக விக்கெட் கீப்பருக்கு எறிந்த போது அது ஐந்து தடவை பிட்ச் குத்தி செத்த பந்தாக வந்தடைந்தது. "ஷோல்டர் எறங்கிடுச்சுடா.." என்று முதுகைப் பிடித்துக்கொண்டு மூஞ்சியைச் சுளித்துச் சமாதானம் சொன்னான். கோயில் கைங்கர்யத்தில் இருப்பதால் பஞ்சகச்சத்தோடு களமிறங்கிக் கலக்கினான். தனது புத்ராதிகளுடன் வந்திருந்தான். மட்டையளவு இருந்த இரண்டாமவன் அப்பன் பெயரைத் தக்க வைத்துக்கொள்வான் என்று பிரகாசமாகத் தெரிகிறது. ”யப்பா... நீ ஒண்ணுமே அடிக்கலை.. நான் ஃபோர் அடிச்சேன் பாத்தியா...ம்....” என்று வாய் ஓயாமல் லொடலொடக்கிறான். மிக்க மகிழ்ச்சி.
கோபால் எங்கள் டீமை விட எதிரணிக்காரர்கள் கொண்டாடும் கோலாகலக் கிரிக்கெட்டர். இரசிகைகள் மனதைக் கொள்ளையடிக்கும் லிப்ஸ்டிக் போடாத ரோஸ் உதட்டுக்காரன். அவன் இன்னும் கொஞ்ச நேரம் களத்தில் நின்றால் ஜெயித்துவிடலாம் என்று கும்பலாக நகம் கடித்துக்கொண்டு பெவிலியனில் நெர்வஸாக நின்றுகொண்டிருக்கிறோம். ஒரு அடாசு பௌலர் வீசிய காமாசோமா ஓவரில் எங்கேயோ பிட்ச்சோரக் கல்லில் பட்டு பந்து ஏடாகூடமாக எகிறி ஃப்ரன்ட் ஃபுட்டில் நிற்கும் கோபாலின் இடதுகாலில் படுகிறது. "ஹௌஸாட்..." அலறிய பௌலர் கூட அதை மறந்து அடுத்த பந்து போட திரும்பிவிட்டான். அம்பயர் அங்கே எதுவுமே நிகழாதது போல அசையாமல் சிலையாக நிற்கிறான்.
அப்போது அந்த அதிசயம் நடந்தது. அண்ணன் கோபால் காலையும் ஸ்டம்ப்பையும் திரும்பித் திரும்பி மனமுருகப் பார்க்கிறார். நமக்கு இங்கே வெடவெட. அவரே பிரத்யேக மானசீக ஸ்லோமோஷன் ஓட்டிப் பார்த்து, ஸ்டம்ப் விஷன் காமிராவாக தனது அகக்கண்களை உபயோகிக்கிறார்..... ஐந்தாறு வினாடிகளில் பேட்டை இடதுகைக்கு மாற்றி வலக்கை ஆட்காட்டி விரலை விண்ணுக்கு உயர்த்தி "ஸ்வயம் அவுட்" கொடுத்துக்கொண்டு விடுவிடுவென்று வெளியே வந்துவிடுவார். சத்யசந்தன். "ச்சே,,ச்சே,,, கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம்டா... அவுட்டுன்னு தெரிஞ்சா நாமளா வெளில வந்துடணும்..." என்பது அண்ணனின் உயரிய கோட்பாடு. கேடி(Not KD) குஞ்சுமோன். (ஜெண்டில்மேன்)
உப்பிலி எங்களுக்கு ரெண்டு மூனு செட் சீனியர். அவர் மட்டையை கடாசிவிட்டு ரிட்டயர்ட்டு ஆனப்புறம்தான் நாங்கள் விளையாட ஆரம்பித்தோம். வயலின் வில் பிடித்த கையால் பேட்டும் பிடிப்பார். தற்சமயம் கலாக்ஷேத்ராவில் ஃபிடில் கற்றுத் தருகிறார். மன்னையில் ஹரித்ராநதி கோதண்டராமர் சன்னிதி வாசல் பெஞ்ச் மேடையில்,குன்னக்குடி போல ஜிலுஜிலு ஜிப்பா அணிந்து, வைஷ்ணவராயினும் நெற்றி மறைத்து திருநீறு பத்து போட்டு, முதுகொடிய ஆட்டத்துடன் வயலினில் ”கொட்டாம் பட்டி ரோட்டிலே... பொண்ணு போற ஷோக்கிலே...” வாசித்து எங்களை இன்பமுறச் செய்வார். முப்போதும் கழுத்தருகே வயலின் சாய்த்துச் சாய்த்து சிறு கூன் விழுந்த முதுகோடு ஓடிவந்து அரவணைத்து எல்லோரையும் மைதானப் பிரவேசம் நடத்திவைத்தார்.
கோபாலும் ஸ்ரீராமும் அண்ணன் தம்பி. இது போன்ற மார்க்-ஸ்டீவ் 'வா'க்கள் எங்கள் டீமில் மொத்தம் ஒன்பது. நவரத்தினங்கள்.
1. ரமேஷ் - கோப்லி
2. கோபால் - ஸ்ரீராம்
3. ஸ்ரீதர் - ஸ்ரீராம்
4. சரவணன் - அசோக்
5. சுதர்ஸன் - பாபு
6. ராஜா - நந்து
7. கோபால் - உப்பிலி
8. ராஜா - வாசு
9. ரமேஷ் - ஆனந்த்

பந்தும் பேட்டுமாகத் தெருவெங்கும் கிரிக்கெட் ப்ளேயர்கள் பெருத்து போன சமயத்தில் HCC 'A' டீம் HCC 'B' டீம் என்று பிரித்து மன்னையில் டோர்ணமென்ட் விளையாண்ட காலங்கள் உண்டு.
இதில் கோபால், ஸ்ரீராம், ரமேஷ், கோப்லி, உப்பிலி, ஆர்.வி.எஸ் ஆகியோர் சென்ற ஞாயிற்றுக்கிழமை விளையாடினோம். உடம்பு இதற்கு ஒத்துழைத்தது பகவத் சங்கல்பம். மன்னை ராஜகோபாலனின் அருட்கொடை. கோபால்-ஸ்ரீராமின் அக்கா ராதா ("வெங்குட்டு... புளியோதரை சாப்பிடறயா?.." என்று அன்று அடிக்கடி படியளந்த ராதாக்கா) மகன் கார்த்தி. மன்னையில் நாங்கள் மட்டையோடு அலைந்த போது கால்சட்டையோடு வேடிக்கைப் பார்த்த பையன். இளரத்தம். வெடரன்ஸ் விளையாடுவதைக் கண்டு களிப்புற்றான்.
பன்னிரெண்டாம் வகுப்பிலேயே முன் மண்டை பாதிக்கு மேல் வழுக்கையாகி “ஏண்டா கல்யாணம் வரைக்கும் முடி இருக்குமா?” என்று கவலைப்பட்டு மேலும் முடியிழந்து, இப்போது இரண்டு குழந்தைகளுடன் குடும்பியாக இருக்கும் ஸ்ரீதரும் விளையாட வந்திருக்கலாம். பேட்ச்சில் முதன்முதலில் கல்யாணம் முடித்து இளம் தாத்தாவாக ஆகியிருக்கும் அப்புவையும் கூப்பிட்டோம். பேரனோடு கொஞ்சிக் கொண்டிருந்தானாம். சரி. பரவாயில்லை.. அடுத்த மேட்ச்சில் தேர்ட் மேனில் நிறுத்தி வைத்து தொந்தி கரைய பந்து பொறுக்க விட்டுவிடலாம்.
திங்கட்கிழமை காலையிலிருந்து முட்டிக்கு முட்டி வலிக்கிறது. இரு தொடைகளிலும் யானை ஏறி நின்றார்ப்போல குடைகிறது. தலைக்கு மேலே கையைத் தூக்கமுடியவில்லை. ஒரே பாரமாக இருக்கிறது. க்ளட்ச் போட கால் எழுந்திருக்காமல் ஒத்துழைக்க மறுக்கிறது. பேசினால் குரல் கீச் கீச்சென்று தொண்டையைக் கிழித்துக்கொண்டு வருகிறது. என்னதான் இதுபோன்று சிறுசிறு After effects இருந்தாலும் நெஞ்சு மட்டும் கல்கண்டாய் இனிக்கிறது. மனசுக்குள் இனம் புரியாத ஒரு சந்தோஷம். மூன்று மணி நேரங்கள் முழுசாய் மன்னையில் வாழ்ந்த பரமதிருப்தி!!
இது போதும்... இனிமேல் அடுத்த ஆட்டத்திற்கு அப்புறம்......
பின்குறிப்பு: மேலே குறிப்பிட்டிருந்த தலைப்பில் என்னுடைய மன்னார்குடி கிரிக்கெட் புராணங்கள் எழுதலாம் என்று விருப்பம். முயற்சி செய்கிறேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails