Tuesday, July 29, 2014

ராஜீ

”இப்ப அதையேண்டா களுட்டற..”ன்னு செல்வராஜ் அவன் முதுகில் ஓங்கித் தட்டினார். கீழே குந்தியிருந்தவன் நிலைதடுமாறி வேதனையோடு முகத்தைத் திருப்பினான். முகத்தில் சமர்த்துக் களையில்லை. சித்தபிரமைப் பிடித்தவன் என்று ஒரேடியாக ஒதுக்கும்படியாகவும் இல்லை. “மாமா... நீங்க தானே களுட்ட சொன்னீங்க?” என்று அடிக்குரலில் இழுத்து இழுத்துப் பேசினான். ”நா.. அதைச் சொன்னேனா? இதைச் சொன்னேன்” என்று செல்வராஜ் கர்ஜித்ததில் “நீ ஆணியே புடுங்க வேண்டாம்” வடிவேலு தெரிந்தார்.

நிமிர்ந்தால், உட்கார்ந்தால், ஸ்பானர் எடுத்துக்கொடுத்தால், ஷெல்லாக் மூடியைத் திறந்தால் என்று ஒவ்வொரு அசைவிற்கும் “ஊ” போல உதடுகளைக் குவித்து அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி சன்னமாக ஒரு “உச்” கொட்டினான். கேசம் கலைந்திருந்தது. அழுக்குச் சட்டையில் கண்படும் இடங்களில் ஜீப்ரா தையல். பிருஷ்டம் யதேச்சையாகச் சுமந்துகொண்டிருந்த பாண்ட் அதன்அடிவாரத்தில் கிழிந்து தொங்கியிருந்தது. நாய் கண்டால் நிச்சயம் விடாது.

”ஃப்ளோ சரியா இல்லை.. தூக்கிரலாம்” என்று போரை இறக்கி வேலை பார்த்துக்கொண்டிருந்த ப்ளம்பர் செல்வராஜ்ஜுக்கு புது அஜிஸ்டெண்ட் தம்பி. குழந்தை உள்ளம். குமரனைப் போல வாட்டசாட்டமான தேகம்.

“இவரு சரியில்லையா செல்வராஜ்?”

“ம்.. நல்லாதானே இருக்கான்...”

“யோவ் நிஜத்தைச் சொல்லுய்யா.. பார்க்க நல்லாதான் இருக்காரு.. ஆனா பழக்கத்துலப் பார்த்தா அப்டித் தெரியலையே...”

“நல்லாதான் சார் இருந்தான். தெருவுல ஒரு சின்னத் தகராறுல மண்டையில அடிப்பட்டுப் போச்சு.. அதுலேர்ந்து இப்படி ஆயிட்டுது.....”

“எந்த வேலை சொன்னாலும் செய்வாரா?”

“ம்... அவங்க அப்பாரும் ப்ளம்பரு. சாமானெல்லாம் அடையாளம் தெரியும். கூடமாட ஒத்தாசைக்கு வச்சுருக்கேன்..” திறந்த ஷெல்லாக் டப்பாவை மூடி ஓரத்தில் பத்திரப்படுத்திக்கொண்டிருந்தான் அவன்.

“உம் பேரென்ன?” முதன்முறையாக யாரோ பேர் கேட்பது போல “ஊ”வென குவிந்திருந்த வாயை அகல விரித்து புன்னகைத்தான். இறைவனின் குழந்தை.

“ராஜீ” சொல்லிவிட்டு ஒரு “ஊ”.

”டேய்.. அந்த ஸ்பானரை எடு...” என்ற செல்வராஜின் உத்தரவுக்கு சரியாக தப்பான ஸ்பானைரைக் கையில் கொடுத்தான் ராஜீ. “ச்சே... ஒன்னோட ஒரே ரோதனைடா.. நாலுக்கு மூனை எடுடா.... உன்னைக் கட்டிக்கிட்டு என்னால மாரடிக்க முடியலைடா..” குடுகுடுவென்று ஓடிப்போய் சரியான ஸ்பானரை எடுத்துக்கொடுத்துவிட்டு மீண்டும் பரப்பிரம்மமாக அப்படியே நின்றான் ராஜீ. முகத்தில் கோபமோ அவமானமோ கொஞ்சங் கூட இல்லை. கார்ப்பரேட்டில் வேலை செய்பவர்களுக்கு அனுபவப் பாடமெடுத்துக்கொண்டிருந்தான் அந்த ராஜீ.

நான் ராஜீயையேப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஒரு உன்னதமான வாழ்வு. வசவோ பாராட்டோ எல்லாம் ஒரே நிலை. எதற்கும் அசையவில்லை. ஒரு முனீந்திரனைப் போல, யோகியைப் போல தெரிந்தான் ராஜீ.

“டேய்.. அந்த ஆயிலைக் காசுடா... நல்லா சூடு வரணும்... அப்பதான் பைப்பை முக்கி எடுத்து இளகின எடத்துல ஜாயிண்டு போட முடியும் “. அடுத்த கட்டளை. “சார்.. ஆயில் காசணும். அடுப்பு குடுங்க...” என் முகத்தருகே மூச்சு படும்படி வந்து கேட்டான். “டேய் அவரு மேலே உரசியாடா கேட்கணும்...” செல்வராஜ் வேலைக்கு நடுவில் ராஜீயை மேய்த்துக்கொண்டிருந்தார். கேஸ் அடுப்பைக் காண்பித்தேன். “அடுப்ப பத்த வச்சுக் குடுங்க சார். மாமா நெருப்புல வெளயாடக் கூடாதுன்னாரு....” கடைசியில் வந்த ரு பஸ்ஸாக ரூ.. என்று ஓடியது. மனசுக்கு வயசானால்தான் சொல்பேச்சு கேட்க மாட்டேன் என்கிறோம்.

“ம்.. மோட்டாரைப் போடுங்க சார்...”

“டைரக்ட் வரைக்கும் வருது. மொட்டை மாடி தொட்டிக்கு ஏற மாட்டேங்குது. எங்கியோ லீக் இருக்கு செல்வராஜ்...”

“பார்க்கறேன் சார்.”

”டேய். செக்வால்வை தொறந்துட்டு.. பைப்ல தண்ணி ஊத்துடா....”

“லைட்டா இறங்குது பாருங்க.. எங்கியோ லீக் இருக்கு...”

“த்தோ.. ஒண்ணேகால் இன்ச்ல ஜாயிண்ட்ல சொட்டுது...” கீழிருந்து அலறினான் ராஜீ.

“வேலக்காரண்டா ராஜீ நீயி....கரீட்டா புடிச்சிட்டே...” செல்வராஜ் வஞ்சப்புகழ்ச்சி செய்தார்.

ராஜீக்கு இதுவும் பாராட்டாகத் தெரியவில்லை. எஜமானனின் அடுத்த உத்தரவை நிறைவேற்ற சலனமின்றித் தயாராக இருந்தான். ”போயி.. அந்த முக்குக் கடையில ஃபெவிக்விக் ஒண்ணு வாங்கியாடா...” என்று துரத்தினார். சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டு. கிழிந்த பேண்ட் காலைத் தடுக்கிவிட்டு பல்லை உடைத்துவிடுமோ என்று பதறிக்கொண்டே “ஜாக்கிரதையா நடப்பா..” என்றேன். “ஊ” “ஈ” யானது.

பத்து நிமிடமாக ஆளைக் காணோம். “எங்கியாவது போயிருப்பாரோ?” என்று சந்தேகத்தைக் கிளப்பினேன். “இல்லையில்லை வந்துருவான். அப்டி இப்டி இருப்பானே தவிர.. நல்ல பய சார்.. பாவம் வூட்லேயே ஒக்காந்திருக்கான். அதான் இப்படி வேலைக்கெல்லாம் அளச்சிக்கிட்டு வந்து தெனமும் அம்பது நூறு தர்றேன்.. புரோட்டான்னா அஞ்சாறு சாப்பிடுவான். கடைக்குப் போனா வாங்கித்தருவேன்....”. செல்வராஜின் மொபைலைக் கூப்பிட்டால் “ஹரிவராசனம்” பாட்டுப் பாடும். அதில் வரும் காத்து ரட்சிக்கும் ஐயப்பனாகத் தெரிந்தார் செல்வராஜ்.

ஆடியாடி நடந்தபடி ஃபெவிக்விக் வந்தது. ஒன்னேகால் இன்ச் பைப்பின் வாய் இருக்கி மூடப்பட்டது. “இப்ப தண்ணி ஊத்துடா..” என்ற கட்டளை வந்தவுடன் சொம்பு சொம்பாகப் பிடித்து விட்டிக்கொண்டிருந்தான் ராஜீ. கடைசியில் பைப் நிறைந்து ஏர் லாக்கெல்லாம் ரிலீஸானது. பைப்பில் கொட்டிய நீர் உள்ளே இறங்காமல் நிலைத்து நின்றுகொண்டிருந்தது.

“சார்.. நீங்க போரைப் போடுங்க...” என்று என்னிடம் திரும்பி செல்வராஜ்.

“ம்.. போட்டாச்சு...”

“டைரக்ட்டுல வருதா பாருங்க...”

“ம்.. வருது.. மேலே மாடியில போய்ப் பார்க்கட்டா?”

“ம்.. போங்க சார்...”

“டேய்... ரின்ச்.. கட்டிங் ப்ளேயர்,, ஆக்ஸா ப்ளேடு எல்லாத்தையும் களுவித் தொடைச்சு பைல வையிடா.....” என்று ராஜீக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தார். திரும்பிப் பார்த்துகொண்டே மொ.மாடிக்கு ஓடினேன். “டொர்.....” என்று தண்ணீர் ”தலை மேல்” தொட்டியில் விழும் சத்தம் கேட்டது. நல்ல ஃப்ளோ. பத்து நிமிடத்தில் கால் தொட்டிக்கு மேலே ரொம்பியது.

கீழிறங்கிய போது செல்வராஜ் கைகால்களை கழுவிக்கொண்டு வீட்டுக்கு புறப்படத் தயார். ராஜீ எங்கே என்று தேடினேன். கொல்லையில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான். போரருகே விரைந்தேன்.

“என்னப்பா?” என்றேன்.

“இது நான் போட்டது” என்று ஸ்நேகமாய்ச் சிரித்தான்.

மழையில் மோட்டார் நனையாமல் பாதுகாக்கக் கவிழ்த்த தகர மூடியைக் காண்பித்தான். நானும் சிரித்தேன்.

இரவு மோட்டார் ஓடும் போது அந்த தகரம் “உர்ர்ர்ர்ர்ர்” ரென்று ரீங்காரமிடுகின்றது. ராஜீயின் “ஊ” நியாபகம் வருதை தவிர்க்க முடியவில்லை. குழந்தை மனசு. கொண்டாட்ட மனசு.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails