Tuesday, July 29, 2014

மின் காத்தாடி

டிநகரில் முட்டும் சந்துபொந்துகளிலெல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். கட்சிக் கொடியுடைய வேந்தர்களாக திறந்த வேனில் கைகூப்பிய வேட்பாளரை கவனிப்பாரில்லை. பொடிப்பொடியாக நண்டு சிண்டு நார்த்தங்காயெல்லாம் ஹெட் பேண்டுடன் களப்பணியாற்றுகிறார்கள். கல்யாண மண்டப வாசலில் நிற்கும் கைகூப்பும் பொம்மை போலக் கடமை கண்ணாயிரக் கேண்டிடேட் இருபுறமும் வணக்கம் போடுகிறார். ஒரு கும்பிடுக்கு ஒரு வோட்டு என்கிற அரித்மெடிக்கில் தேர்தலுக்கு முன்னர் லட்போசலட்சம் கும்பிடுகள் போடுவார்கள் போலிருக்கிறது.

பாண்டிபஜாரில் ரத்னா ஸ்டோர்ஸ் வாசலில் இருந்த கடைகளை சப்ஜாடாக காலி செய்துவிட்டார்கள். தனியாக இடமொதுக்கி உபகாரம் செய்திருப்பதாகக் கேள்வி. ஸ்வீட் கார்ன் கடை ஒன்று விதிவலக்காக ப்ளாட்ஃபாரத்தில் முளைத்திருக்கிறது. பாரலல் பார்க்கிங் வசதியாக இருக்கிறது. பார்க்கிங் டிக்கெட் கொடுக்காமல் காசு வாங்க எத்தனிக்கும் வசூலிப்புத் திலகங்கள் ஐந்துக்கும் பத்துக்கும் கேஷ் பேக்கைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டுப் பேயாய் உலவுகின்றன. கார்களின் முதுகில் மேல் டெடி பேரும் குழந்தைகள் பாத் டப்பும் பரப்பி விற்பதற்கு ஆளில்லை.

பஜாரில் கழுத்தை நெறிக்கும் கூட்டமெதுவுமில்லை. Sethu Raman சார் நம்பரைத் தொலைத்துவிட்டுக் கூப்பிடமுடியாத பாபியாகி ஸ்நேகாவஸ்தையில் நெளிந்தேன். ரத்னாவில் “அருக்கஞ்சட்டி இருக்கா?”ன்னு கேட்ட மாமியை வேற்றுகிரக ஆசாமி போல பார்த்த அப்பரண்டீஸ் சேல்ஸ் கேர்ளிடம் “அரிசி களையற சட்டிம்மா... வாய் பெரிசா...” என்று கையை அகலமாக விரித்து விளக்கமளித்துக்கொண்டிருக்கும் போது ”கொஞ்சம் நம்ம வேலையைப் பார்ப்போமா” என்ற வீட்டின் கட்டளைக்கு அடிபணிந்து துள்ளி மாடியேறினேன். படியேறும் போது “பரோபகாரம் இதம் சரீரம்” என்ற என் முணுமுணுப்பு எனக்கு ஒரு கொடிய முறைப்பைப் பெற்றுத் தந்து மிரட்டியது.

ஒவ்வொரு ஃப்ளோரிலும் திரும்பும் பக்கமெல்லாம் ப்ளாஸ்டிக் ஸ்டூலோ, டப்பாவோ, பரஷர் குக்கரோ, அண்டா, குண்டா, தாம்பாளம், ஹாட் பாட், சீலிங் டேபிள் ஃபேன்கள் என்று சாமான்கள். ஒரு சாமானுக்கு ஒரு பையன் வீதம் கஷ்டமர் சர்வீஸ் செய்கிறார்கள்.

நங்கை ஆஞ்சு கோயில் ப்ரகாரத்தில் தேசலாய் பிரதக்ஷிணம் செய்வோரை அலேக்காகத் தூக்கும் படி ராட்சத அல்மோனார்ட் ஃபேன் வைத்திருப்பார்கள். விரதகாலத்தில் வலம் வரும் பாட்டிகள் சுவற்றைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்வது நல்லது. அதில் மினியேச்சர் ஒன்று அம்மாவின் தலைக்கருகில் வைத்துக்கொள்ள வாங்கினேன்.

“இறக்கையை ஃபிட் பண்ணியே குடுத்துருப்பா..”

“பிட் பண்ணிட்டா அட்ட டப்பிக்குள்ளே போடமுடியாது சார்...”

“பரவாயில்லை.. கார் டிக்கியிலே வச்சுக்கிறேன்..”

இரண்டு மூன்று முறை ஸ்டார் திருப்பளியில்லாமல் பல் திருப்பளியில் நெட்டை மூர்க்கமாகக் காயப்படுத்தினான். “தம்பி.. ஸ்டார் போடுப்பா... இல்லைன்னா ஸ்க்ரூவோட மண்டை தேஞ்சுடும்”ன்னேன். “நீ பெரிய மெக்கானிக்கோ...” என்பது போல் எகத்தாளமாகப் பார்த்தான். திரும்பவும் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி முதலாளி மேல் காட்டவேண்டிய கோபத்தை அந்த பிஞ்சு ஸ்க்ரூவில் காட்டினான்.

பீஸை எடுத்தாயிற்று. ஸ்க்ருவை உடைத்துவிட்டு ”சாரி சார்! வேற ஸ்க்ரூ போட்டுக்கோங்க.. பில் பண்ணிட்டோம்”னு சொல்லி தலையில் கட்டிவிடுவார்களோ என்றஞ்சி பக்கத்தில் மும்முரமாக சுவற்றைப் பார்த்துக்கொண்டு பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்த சீனியர் அண்ணாவைக் கூப்பிட்டு “சார்! கொஞ்சம் இதை ஃபிட் பண்ணிக் குடுங்க. பையன் தடுமார்றான்..”ன்னேன்.

தியானம் கலைந்த தவச்ரேஷ்டராய் விருட்டென்று வந்தார். “டேய் அறிவுருக்கா... பின்னால ஜாலியை மாடிப்புட்டுதானே ரெக்கையை மாட்டோணும்.. தள்றா...”ன்னுட்டு ஜோலியை ஆரம்பித்தார். ஒதுக்கப்பட்ட பையன் என்னை முறைக்க ஆரம்பித்தான். ஸ்நேகித பாவத்தோடு தோளில் கையைப் போட்டு “தம்பி! பக்கத்துல நின்னு கத்துக்க.. கோச்சுக்காதே..” என்று இளித்தேன்.

செமயாக் காண்டாயிட்டான். “மவனே...”ன்னு ஆரம்பித்து மனதில் கண்டபடி திட்டிக்கொண்டிருப்பது கண்களில் தெரிந்தது. “ம்.. இந்தாங்க சார்... சுத்துது பார்த்துக்கோங்க..” என்று கையில் கொடுத்தார் ஃபிக்ஸ் செய்த சீனியர். காற்று தென்றலாய் முகத்தை வருடியது. பையன் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. கிளம்பும் போது “தம்பி...” என்று ஆரம்பித்தேன். ”இங்கே இருக்கிற ஃபேனெல்லாம் நாந்தான் முடுக்கினேன்” என்றான் “நீ வாயை மூடு” என்கிற தொனியில்.

சிரித்துவிட்டுச் சொன்னேன் “இதெல்லாம் டெமோ பீஸுப்பா. உடைஞ்சாலும் மாத்திப்பீங்க. என்னோடதை மாத்திப்பீங்களா?”.

“பில்லு கீள சார்” என்று நகர்ந்தான்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails