Tuesday, June 6, 2017

பிரயாணம்

இமயமலைப் பர்வதத்தில் என்று நாமாகவே எண்ணிக்கொள்ளுமளவிற்கு ஒரு வனாந்திர பிரதேசம். அங்கு ஹரிராம்புகூர் என்ற மனிதவாடை வீசும் வடக்கத்தி கிராமம் ஒன்று. அங்கே இருவர்... இல்லையில்லை.. ஒருவர் பிரயாணிப்பதுதான் கதை. மலை, சமவெளி, காடு என்று அம்மலைத் தொடரில் ஒரு நீள கட்டையில் வைத்து கிழ தாடியுடன் இருப்பவரை இழுத்துக்கொண்டு இன்னொருவர் வருகிறார். வெகுதூரம் பயணித்து அந்த மனிதவாடை வீசும் கிராமத்தில் சில பொருட்கள் வாங்கி திரும்புகின்றனர் என்றுதெரிகிறது. பள்ளத்தாக்கு, செங்குத்தாக ஏறும் மலை, ஆறு, சமவெளி என்று இரண்டு இரவுகள் இரண்டு பகல் குளிரில் பிரயாணப்பட்டுதான் தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவேண்டும்.
அப்படி வரும் இருவரும் சன்னியாசிகள். கட்டையில் படுத்துக்கொண்டு வருபவர் குருதேவர். இழுத்துக்கொண்டு வருபவர் அவரது சிஷ்யர். அசோகமித்திரனின் "பிரயாணம்" சிறுகதை இப்படி ஆரம்பிக்கிறது. வயதான குருதேவரை மீண்டும் ஆசிரமத்திற்கு இழுத்துக்கொண்டு போய்ச் சேர்த்துவிடவேண்டும் என்பது சிஷ்யகோடியின் பிரதான இலக்கு. ஆனால் குருதேவரால் நகரக்கூட முடியாமல் தள்ளாமை வந்துவிடுகிறது. அவரைக் கம்பளி சாக்கு பைக்குள் போட்டு காதுகளை மூடி இரவு முழுவதும் பனிவிழும் மலைக் காட்டில் பாதுகாக்கிறார் சிஷ்யர். கஞ்சி கலந்து தருவது பற்றியும் இரவில் வானில் தோன்றும் நட்சத்திரக் கூட்டம் பற்றியும் அமியின் வர்ணனையை எவராலும் அடித்துக்கொள்ளமுடியாது.
ஓநாய்கள் எப்படா சமயம் வாய்க்கும் என்று அவர்களைக் குதறத் தயாராய் சுற்றுகின்றன. கையில் இருக்கும் சுள்ளிக்கட்டைகளை கொளுத்திப் போராடிக்கொண்டிருக்கிறார். எப்பவோ கண் அயர்ந்து மீண்டும் எழுந்த வேளையில் சாக்குப்பையின் அடிபாகத்தில் ஓநாய் கடித்த சுவடு தெரிகிறது. பொழுது விடியும் தருவாயில் பார்க்கையில் குருதேவர் இறந்து போயிருப்பது தெரிந்தது. மீண்டும் குருதேவரைக் கட்டையில் வைத்துத் தள்ளிக்கொண்டே ஆசிரமத்தை அடைய விரைகிறார். அப்படியிருந்தும் மலைக்குள்ளேயே இன்னொரு இடம் செல்வதற்குள் இருட்டிவிடுகிறது. அங்கேய தங்க நேரிடுகிறது. ஓநாய்கள் இந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்துவிடுகிறது.
தீ மூட்ட கட்டைகள் இல்லை. இங்கேயும் அங்கேயுமாக பொறுக்கி தணல் மூட்டுகிறார். விடிய விடிய குருதேவரைப் பாதுகாக்கவேண்டும் என்று அமர்ந்திருக்கிறார். ஓநாய்க் கூட்டத்தோடு சண்டையிடுகிறார். எப்போது கண் மூடினோம் என்று தெரியாமல் அசந்து போய் மீண்டும் கண் விழிக்கும் போது முரட்டு ஓநாய்கள் குருதேவரை குதற முற்படுகிறது. ஒற்றையாளாய் அந்த ஓநாய்க்கூட்டத்தை எதிர்த்துப் வலுவிருக்கும்வரை போராடுகிறார்.
ஓநாய்கள் குருதேவரை கவ்வி ஒரு சிறுபள்ளத்தாக்கிற்கு இழுத்துப்போகின்றன. கதறுகிறார். இருளில் ஒன்றும் செய்யமுடியாமல்... காலையில் அந்தப் பள்ளத்தை எட்டிப் பார்க்கிறார். தலையை பிய்ந்து குருதேவரின் உடல் கிடக்கிறது. ஆனால் இங்கே கதையை அமி முடிக்கும் பாணியே அலாதியானது. கீழ்கண்ட வரிகளோடு இந்தக் கதை முடிகிறது.
“ஒரு ஓநாயின் கால் அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, என் குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது.”
1969ல் எழுதப்பட்ட கதை இது. ”ஐயா” என்று ஐந்தாறு இடத்தில் வரும் வசனத்தைத் தவிர வேறு வசனமே கிடையாது. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை வாசகனைக் கட்டிப் போடும் எழுத்து. சிறுகதைதான் என்றாலும் வெகுநேரம் சிந்திக்க வைக்கும் கதை. குருதேவர் இறந்துபோய்விட்டார் என்று முடிவு செய்த சிஷ்யனின் அனுமானம் தவறா? தன்னை பள்ளத்துக்கு இழுத்துப்போன ஓநாய்களுடன் போராடினாரா? நம்மையும் அந்த மலைச்சாரலில் பத்து நிமிடங்கள் வாழவைக்கும் எழுத்து. வாசிப்பின்பம் பருக நினைக்கும் எவரும் தவறாமல் படிக்கவேண்டிய கதை.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails