Friday, August 27, 2010

டைட்டில் ஐடியாக்கள்

cinema reelகாலையில் கையொடிய கார் ஓட்டிக்கொண்டு வந்தபோது காதில் விழுந்த படத்தலைப்பு ராமர். கொஞ்சநாள் முன்னாடி தான் ராவணன் வந்துட்டு போனார். இப்ப ராமர் வரார். இன்று போய் நாளை வா என்று இலங்கை வேந்தனை கூப்பிடுவாரோ? தெரியவில்லை. கோலிவுட்டில் ஒரே இதிகாச புராண தலைப்புகளாக வைத்து வெளுத்துக் கட்டுகிறார்கள். ஹிட் பாடல் வரிகளில் இருந்து எடுத்த தலைப்புகள் போய் இப்போது இராமாயண டிரெண்ட். தம்பி பொண்டாட்டியை அண்ணன் கவர நுகர முயற்சி செய்யும் படம் எஸ்.ஜெ. சூர்யாவின் வாலி (இப்ப எஸ்.ஜெ. சூர்யா எங்க போனார்?).  சீதை மாதிரி இல்லாத ஐஸை விக்ரம் சிறை பிடிக்கும் மணியின் படத்திற்கு பெயர் ராவணன். ரஜினி-மலபார் மம்மூட்டி நடித்த தளபதியைக் கூட 'கர்ணன் (அ) சூரிய புத்திரன்' என்று வைத்திருக்கலாம். இவையன்றி வாமனன், பரசுராம், நரசிம்மா என்று பகவானின் தசாவதாரப் பெயர்கள் வேறு. இன்னும் கொஞ்ச வருடம் முன்னாடி இயக்குனர் இமயம் தன் கொடுக்கை வைத்து ரிலீஸ் செய்த அல்லி அர்ஜுனா அப்புறம் இப்போது ஆக்ஷன் கிங் நடித்த தம்பி அர்ஜுனா. இப்படி ஒரேடியாக இதிகாச தலைப்பு வைத்து படுத்தும் டைர..டக்ட்டர்களுக்காக மேலும் டைட்டில்ஸ்க்கான ஐடியாக்களை அள்ளி வீசலாம் .

சகுனி
நிறைய சமீபத்திய படங்களில் மாமா வேடத்தில் வரும் நடிகர்கள் ஹீரோவின் காதலுக்கு அடிஉதை பட்டு அல்பமாக துணை போவார்கள். மாப்பிள்ளையுடன் வாடா போடா ரேஞ்சுக்கு பேசிக்கொண்டு பாதி படத்தை நிரப்புவார்கள். வயல் வாய்க்கால் வரப்பு விவகாரத்தில் துரி(மாடர்ன் துரியோதனன்) ஆசைப்பட்டதை அவன் சித்தப்பு பசங்களிடம் இருந்து  இந்த காலத்திற்கு ஏற்ப ரம்மி விளையாடி நிலபுலன்களை கெலித்துக்கொடுக்கலாம். ஊர் நடுவே கிராமத்தின் பஞ்சாயத்து நடக்கும் பெரிய ஆலமரத்தடியில் ஜமக்காளம் விரித்து ஊரார் முன்னிலையில் காலையில் இருந்து சாயந்திரம் வரை ரம்மி அண்ட் ஷூட் ஆடி அத்தனையையும் அபகரித்து துரிக்கு கொடுக்கலாம். இந்த படத்தில் மாமாவுக்குதான் பிரதான பாத்திரம். சகுனி - தி மாமா என்று தலைப்புக்கு கீழ் டாக்லைன் கொடுக்கலாம். படம் பிச்..ச்...சுகிட்டு போகும்.

தருமு
சொல்லவேண்டியதேயில்லை. அண்ணன் தம்பி அஞ்சு பேர். எல்லாருக்கும் மூத்தவன் தருமு. பெரியப்பா பசங்க கிட்ட எல்லாத்தையும் இழந்துட்டு சிட்டி பக்கமா வந்து ஒரு சின்ன டீக்கடை போட்டு பொழச்சுக்கிறான். இராப்பகல் உழைப்புல ஒரு அஞ்சு வருஷத்ல டீக்கடை தருமு இண்டர்நேஷனல் ஃபைவ்  ஸ்டார் ஹோட்டலா ஆயிடுது. அந்த காசை எடுத்துகிட்டு பெரிய பென்ஸ் காரில் கிராமத்து பக்கம் போய் உட்டதை புடிக்கறான். பங்கு தரமேட்டேன்னு சொன்னவங்களை தன் தம்பிகளின் அதிரடிப் படை கொண்டு அடிச்சு துவம்சம் பண்ணி எல்லாத்தையும் மீட்கறான். கடைசியில் திரௌபதி யாருக்கு சொந்தம் அப்படின்னு ஒரு நாட் வச்சு நாட்டாமை சீன் வச்சு பிரிச்சு மேயலாம்.  படம் அள்ளிக்கும்.

விபீஷ்ணா
பக்கத்து வீட்டுக்காரன் பத்தினியை அபகரிச்ச சொந்த அண்ணனின் அராஜக செயலைக் கண்டித்து நொந்து போய் பக்கத்து வீட்டுக்கே சென்று பர்மனன்டாக குடியேறும் ஒரு நல்ல தம்பியின் நீதிக்கதை. படம் முழுக்க அறிவுரைகளை அள்ளி வீசும் கேரக்டர். ஆங்காங்கே அண்ணன்-தம்பி பாசப் பிணைப்பு காட்சிகளும் உண்டு. கண்களில் நீர் முட்ட முட்டதான் படம் பார்க்கமுடியும். பக்கத்து வீட்டு புருஷனுக்கு அண்ணனின் வீக்னெஸ் எடுத்து சொல்லி அதற்க்கு தகுந்தார்ப் போல் காய் நகர்த்தும் ராஜதந்திர காட்சிகள் நிச்சயம் கைதட்டல் பெரும். காமாந்தகர்களுக்கு ஒரு நீதிபோதனை படம் என்று விளம்பரப்படுத்தி நிறைய காசு பார்க்கலாம். க்ளைமாக்சில் குடியேறிய வீட்டை தனக்கு சொந்தமாக்கிகொள்ளும் சீன் ரசிகப் பெருமக்களை "பச்... பச்.." கொட்டவைக்கும்.  அபாரம். 

ஜடாயு
முழுக்க முழுக்க நம்ம ராம. நாராயணன் சப்ஜெக்ட். லோ பட்ஜெட். இந்த முறை யானை, சர்ப்பம்,  குரங்குக்கு பதில் ஒரு பெரிய பறவையை க்ராஃபிக்ஸில் காண்பித்து, அதற்க்கு கூலிங் கிளாஸ், கோட்டு போட்டு அந்தரத்தில் பல டைவ் அடிக்க விடலாம். தன் மானுட சிநேகிதரின் மருமகளை விசேஷ விமானத்தில் கடத்தும் காமுகன் ஒருவனோடு வான் யுத்தம் நடத்தி, விமான ரெக்கையால் தன் ரெக்கையை துண்டிக்கப்பட்டு, துடி துடித்து கிழே விழும் போது மொத்த கொட்டகையும் தாரை தாரையாய் கண்ணீர் வடிக்கும். படத்தின் நடு நடுவே சிறு பிள்ளைகள் ஜடாயு மேல் ஏறி ஆகாயத்தில் பறந்து பாடும் "சொன்ன பேச்சை கேட்கணும் ஜடாயு மாமா..." போன்ற பாடல்களும் நிச்சயம் உண்டு. இது கடவுள் நாராயணன் சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட். வேப்பிலைக்கு வேலையில்லை. ஆனால் நிறைய துளசி செடிகள் வெட்டப்படலாம். ஜாக்கிரதை.

சூர்ப்பனகை
ஆண்டி ஹீரோயின் சப்ஜெக்ட். எவ்வளவு நாள் தான் ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட் படம் எடுக்கறது. ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்த உத்தம புருஷனை அடைய ஒருத்தி எடுக்கும் பல டகால்டி வேலைகளை காட்டும் படம். வித விதமான டிசைனில் காஸ்ட்யூம் அணிந்து தேமேன்னு ரோடில் சமர்த்தாக சென்றுகொண்டிருக்கும் ஒரு மகோன்னத ஆசாமியிடம் வம்பு செய்யும் காட்டு சிறுக்கியின் ஒருதலைக் காதல் கதை. சதா சர்வகாலமும் அவனை படுத்திக்கொண்டே இருந்ததால் எரிச்சலடைந்த அவன் விட்ட குத்தில் மூக்கு பேந்து போய் இரத்தம் வர, அவளுடைய அடியாள் அண்ணன்மார்கள் கோதாவில் இறங்கி ரவுண்டு கட்டும் கதை. இந்தக் ராட்சஷ காதல் பேயிடம் இருந்து எப்படி ஹீரோ எஸ்கேப் ஆனான் என்பதுதான் கதை. சில்வர் ஜுபிலி நிச்சயம்.

இப்படி பல தலைப்புகள் கைவசம் இருக்கிறது கதையோடு. தலைப்பு பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த தருணத்தில் கூச்சம் இல்லாமல் அணுகினால் படங்களுக்கு தக்க பெயர் தரப்படும்.
மேற்கண்ட படம் எடுத்த இடம்: rpifellowship.com

10 comments:

Madhavan Srinivasagopalan said...

very nice post. ur thinking and writing skill is fantastic.. continue..

RVS said...

மாதவா பாராட்டுதலுக்கு நன்றி

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Chitra said...

ஐடியா வேற கொடுத்திட்டீங்களா? ம்ம்ம்ம்..... இப்படியெல்லாம் படங்கள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை....

RVS said...

இதுக்கெல்லாம் ஹீரோ ஹீரோயின் யாரைப் போடலாம் அப்படின்னு எழுதலாம்னு பார்த்தேன்.. பாவம் மக்கள் பிழைச்சு போகட்டும்னு விட்டுட்டேன். வருகைக்கு நன்றி சித்ரா..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ISR Selvakumar said...

கோடம்பாக்கத்துக்காரர்கள், உங்களை ஸ்டோரி டிஸ்கஷனுக்கு கூப்பிடலாம்.

RVS said...

யாராவது கோடம்பாக்கத்துலேர்ந்து வண்டி அனுப்புவாங்களான்னு வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன்...செல்வகுமார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
;-) ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Ramesh said...

டைட்டில் ஐடியான்னு தலைப்புல..சொல்லிட்டு..கதை, திரைக்கதை, வசனம்...தயாரிப்புச் செலவு...எப்படித் தயாரிக்கலாம்னு பிரிச்சு மேயரீங்களே டீ.ஆர் ரேஞ்சுக்கு...கலக்கலுங்க....இனிசியல்ல பிரபலம் ஆகறவங்கல்லாம் இப்படித்தான் இருப்பாங்களோ?

RVS said...

பிரியமுடன் ரமேஷ்... உங்களோட பாராட்டுல உடம்பு அப்படியே ஆடுது.. நன்றி... ;-)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

R.Gopi said...

ஆட்டோ வந்ததா.....

ம்ம்ம்ம்... இல்ல.. செல்வா சொன்னது போல, கோடம்பாக்கத்துல இருந்து ஏதாவது வண்டி வந்ததா?

ஆஹா... வாய்யா டைட்டில் திலகமே...

நான் கூட இது போல படம் டைட்டில் வச்சு ஒரு பதிவு எழுதினேன்... சில டைட்டில்கள் உங்கள் பார்வைக்கு :

ஜப்பானில் ஜானகிராமன்
ஏர்வாடியில் ஒரு மார்வாடி

RVS said...

ரெண்டு டைட்டிலும் சூப்பர். பதிவு பண்ணி வச்சுடுங்க... கோபி.. :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails