Sunday, August 1, 2010

ராட்சஷ ஷாப்பிங்

tnagar
தன் இருசக்கர வாகனத்தில் ஒட்டடை குச்சி போல வளர்ந்த எட்டு வயதுப் பையனை ஷாலின் படங்களில் சண்டையிடுவதற்கு முன்னால் தலையை குனிந்து வணக்கம் சொல்லும் போஸில் முன்னால் உட்காரவைத்துக் கொண்டு, தனக்கு பின்னால் ஐந்து வயது பெண்ணை நசுக்கி, தர்மபத்தினி கஷ்டப்பட்டு சீட்டில் கால்பாகமும் பின்னால் கம்பியில் முக்கால் பாகமுமாக சேர்ந்து உட்கார்ந்து கொண்டு ஒரு மாருதி ஆல்டோவோ,  ஹுன்டாய் சான்ட்ரோவோ ஏற்றும் மொத்த குடும்ப பாரத்தையும் இரு கால்களால் தத்தி தத்தி சுமந்து கொண்டு,  ஓவர்லோடு அடிக்கும் இவர்களை பிடித்து வசூல் செய்யலாமா கூடாதா என்று இதை பார்த்துக் கொண்டே இருக்கும் திடகாத்திர போக்குவரத்து போலிசை வடிவேலுவின் "வாம்மா...மின்னல்..." போல கடந்து சென்று பனகல் பார்க் அருகில் ஒரு சைக்கிள் சக்கரம் மட்டும் நுழையும் இடத்தில், முதல் சக்கரத்தை மட்டும் பொருத்தி மற்ற பாகங்கள் பாதி ரோடு வரையில் துருத்திக்கொண்டு  ஒரு பக்கம் சிவப்பு பெட்டி வைத்த ஹீரோ ஹோண்டாவை  நிறுத்தி  சைடு ஸ்டாண்ட் போட்டு பெண்டாட்டி பிள்ளை குட்டிகளை கையில் பிடித்துக்கொண்டு கரையிலிருந்து தி.நகர் என்ற மார்க்கெட் சாகரத்தினுள் குதித்தான் நம் கதை நாயகன் கஜபதி.

பஜாரில் இறங்கிய உடனேயே புருஷனை பிடித்த கை, பிடிக்க வேண்டிய கை, அடித்த கை, அடிக்கவேண்டிய கை, கரண்டி பிடித்த கை, கை கொடுக்கும் கை  போன்ற பொற்க்கரங்களை ரோடோர பிளாட்பார மெஹந்தி போடுபவரிடம் கொடுத்துவிட்டு மெய் மறந்து தேமேன்னு அமர்ந்திருக்கும் மகளிர் படை சுந்தரியை பொறியில் வைத்திருக்கும் தேங்காய் எலியை இழுப்பது போல சுண்டி இழுத்தது. "ஐந்து ரூபாயிலிருந்து ஐநூறு ருபாய் வரை விதம்விதமா டிசைன் போடுவோம் மேடம்" என்று சொன்னவர்களை ஒரு தீவிரவாதியை பார்ப்பது போல பார்த்துவிட்டு, "உனக்கு எப்டி வேணுமோ அப்டி போட்டுக்கோ" என்று படு ஜாக்கிரதையாக வாய் உத்தரவு கொடுத்தான். ஐந்து நாற்ப்பத்தைந்துக்கு  ஆயாசமாக உட்கார்ந்தவள் ஆறரை மணிக்குத்தான் எழுந்தாள் அந்த மக்களைப் பெற்ற மகராசி. கொடுத்த நூறு ரூபாய்க்கு முக்கால் மணி நேரம் உழைத்து கர்மசிரத்தையாக போட்டுவிட்டான்.

முண்டகண்ணி அம்மன் கோயில் விளக்கிற்கு எண்ணெய் ஊற்ற எடுத்து செல்லும் வெள்ளை கலர் பிளாஸ்டிக் டப்பாவில் அழுக்கு சோப் தண்ணீர் ஊற்றி, சிறிதும் பெரிதுமாய் குமிழ் விட்டுக்கொண்டிருந்தவனை பார்த்து  அது கட்டாயம் வேண்டும் என்றும் அது இல்லையேல் எக்கணத்திலும் வாயைத் திறந்து அபாய சங்கொலி ஊத தயாரானாள் பெண். முகாரி பாடியே எதையும் சாதிக்கும் அபார திறமை படைத்தவள். வேறு வழி இல்லாமல் அந்த அழுக்கு சோப்பு தண்ணீரையும், யாரோ எச்சப் பண்ணி இளநீர் குடித்து போட்ட ஸ்ட்ராவில் தயாரான குமிழ் ஊதும் வளையத்தையும் வாங்கிக் கொடுத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தான். அவளின் வாயையும் அடைத்தான்.

குடும்பத்தில் இரு உறுப்பினர்களுக்கு தேவையை நிவர்த்தி செய்த பின்னர், மூன்றாவதாக முதல் பாராவில் ஒட்டடை குச்சியாக வர்ணிக்கப்பட்டவன் தன் பங்கிற்கு ஒரு வித்தியாசமான டிசையனில் உள்ள ஒரு பென்சில் போட்டு வைக்கும் பெட்டி ஒன்றை பக்கத்து சீட் பாலு வைத்திருப்பதாகவும் அது அந்த பிரும்மாண்டமாய் கடையில் மட்டும் இருப்பதாகவும் ஒரு "நெருக்கடி" நிலைமையை பிரகடனப்படுத்தினான். அந்த கட்டிடத்தை பார்த்தாலே கஜபதிக்கு அலர்ஜி. சில சமயங்களில் ஏழுமலையானை தரிசிக்க செல்லும் தருணங்கள் ஞாபகத்திற்கு வரும். உள் நுழையும் இடத்தில் "வாங்க வாங்க" என்றும் வாங்கிக்கொண்டு "அப்பாடா..." என்று வெளி செல்லும் வழி பக்கம் "ஜருகண்டி ஜருகண்டி"யும் ஏகநேரத்தில் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. எங்கே க்யு கட்டி நிற்கவைத்து ஃப்ளோர் ஃப்ளோராக பெஞ்சு போட்டு உட்காரவைத்து உள்ளே பொருட்களின் தரிசனத்திற்கு விடுவார்களோ என்று அச்சப்பட்டான் கஜபதி.

நிலமட்ட அடுக்கில் லிப்ட் வாயிலில் ஒரு இரண்டு பஸ் கூட்டம் நின்றுகொண்டு துப்பாக்கி சுட்டவுடன் நூறு மீட்டர் ரேஸ்  ஓட எத்தனிக்கும் ஒலிம்பிக் தடகள வீரர்கள் போல், லிப்ட் வந்தவுடன் பாய்ந்து ஏறுவதற்கு தயாராக இருந்தார்கள். தடியாள், பொடியாள், பாட்டி, பேத்தி, பள்ளிக்கூட மாணவி என்று சகல வயதினரும் காத்திருக்க, நூறோடு நூற்று நான்காக ஜோதியில் ஐக்கியமானான் கஜபதி. முதல் இரண்டு முறை ஏற முற்ப்பட்டு அதிர்ஷ்டம் இல்லாதவனான் ஐயோ பாவம் கஜபதி. ஒரு முறை கையலங்காரம் கலைந்துவிடும் என்று சுந்தரி. இரண்டாம் முறை மூச்சு முட்டி செத்துவிடுவேன் என்று பையன். இவ்விரண்டு தோல்விகளால் துவளாமல் லிப்ட் பக்கம் கண்ணயராமல் பார்த்துக்கொண்டு நின்றான்.  மூன்றாவது முறை போர்க்குணம் கொண்டு எல்லோரையும் இழுத்துப் பிடித்து கதவு மூடும் முன் உள்ளே சென்று விட்டான்.

ஆறாவது மாடியில், மலையென கொட்டிக் கிடந்த டப்பாக்களை பொருக்குவதர்க்குள் "எக்ஸ்கியூஸ் மீ" இரண்டு முறையும், "கொஞ்சம் நகருங்க.." நான்கு முறையும், ஒன்றுமே சொல்லாமல் எட்டு முறை மூஞ்சி முகரை மற்றும் பின்னால் என்று சகல இடத்திலும் இடிபட்டு, அடிபட்டு, மிதிபட்டு வெள்ளைக்காரர்களிடம் வாங்கிய சுதந்திரம் போல நண்பனின் அதே பொட்டியை கண்டுபிடித்து எடுத்தான் குழந்தைச் செல்வம். கூடை கூடையாய் பால் புட்டி, சோப்பு, மிதியடி, துடைப்பம், பெட் ஷீட், ஹேர் பின், பீர்க்கங்காய், கத்தரிக்காய், ஷவர் காப், சங்கீத வட்டுகள் என்று பூலோகத்தில் இருக்கும் அனைத்து பொருட்களிலும் ஒன்று எடுத்து வரிசையில் நின்றவர்களின் வால் பிடித்து நின்று "சில்லரை இல்லையா.." என்று எரிச்சலினாலேயே நக்கீரனாய் சுட்டவர்களை பொருட்படுத்தாமல் போட்டுக்கொடுத்த பெரிய பிளாஸ்டிக் கவரில் வாங்கிக்கொண்டு ஜனசமுத்திரத்தில் நீந்திக் கரையேறினான். நடக்க முடியாமல் தனது பெண் கஷ்டப்பட்டால் அவளை உள்ளே போட்டு தூக்கிக்கொண்டு போக கூட பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தார்கள்.

வாங்கிக் கொண்டு வெளிவரும் வரையில் வேறு எந்த சிந்தனையுமே இல்லாமால் இருந்தவன் அப்போது தான் மனையாளின் கையலங்காரத்தை கவனித்தான். அது "ஐயே.." என்று பல்லித்துக்கொண்டிருந்தது. ஒரு இருபது ருபாய் பெட்டி தன் நூறு ரூபாயை அழித்து அலங்கோல படுத்திவிட்டதால் ஆவேசமடைந்து வேறெதுவும் வாங்க விருப்பமில்லாமல் "வாங்க போலாம்.." என்று வெட்டிக்கொண்டு விருட்டென்று நகர்ந்தாள். தனது தங்கையின் புதுமனை புகுவிழாவிற்கு தங்கம் (அ) வெள்ளியில் ஏதாவது பரிசுப்பொருள் வாங்கலாம் என்று வந்தவன் பொட்டியும், குமிழ் ஊதியும் வாங்கிக்கொண்டு புறப்படும் வேளையில் "என்ன ஷாப்பிங் இது? எது வாங்க வந்தோமோ அதை வாங்க விடாமல்.. ராட்சஷ ராட்சஷிகள்..நல்லா இருக்கட்டும்."  என்று மனதார வாழ்த்தி எழுந்த உஷ்ணத்தை ஹீரோ ஹோண்டாவை உதைத்து காண்பித்து வீடு பறந்தான் கஜபதி.

சே. என்னவொரு ராட்சஷ ஷாப்பிங்.

பட உதவி: mymilestogo.com

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails