Saturday, May 9, 2015

அன்பு சூழ் உலகு

நல்ல உசரமாகவும் ஆகிருதியாகவும் இருக்கிறார். பரதவர் வாழ்க்கையும் தொன்மங்களும் பற்றி பார்வையாளனை இந்தப்பக்கம் அந்தப்பக்கம் தலைதிருப்ப விடாத கம்பீரமான பேச்சு. நேற்று தக்கர்பாபாவில் ஜோ டி க்ரூஸ்ஸின் ( Joe D Cruz) பரதவர்கள் பற்றிய பேச்சு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. வழிதேடி வருவதற்கு ஏற்பட்ட பதினைந்து நிமிட காலதாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டதில் அவரது குணாதிசயம் புரிந்துபோனது. ”எங்கள் முரட்டு பரதவர்” என்று சொற்பொழிவில் அடிக்கடி விளிக்கும் போது அவருக்கு நரம்பு புடைக்கிறது. நாவன்மையும் படைத்த வலிமையான பரதவர்.

என்னுடன் வாமபாகமாகக் கூட்டத்திற்கு வந்த Sangeetha Seshasayee, நம்பர் புகழ் நம்பர் ஒன் சைஃபி எழுத்தாளர் Sudhakar Kasturi, அன்பின் திருவுரு Vk Srinivasan, ட்ரைபாடில் கேமிரா சொருகி நின்ற கிழக்கு Badri Seshadri, பின்வரிசையிலிருந்து கைகுலுக்கி மகிழ்ந்த Kishore Mahadevan மற்றும் தூரத்திலிருந்து கையாட்டிச் சிரித்த "விஷ்வக்" Venkatarangan Thirumalaiஆகியோருடன் இதைக் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.

பேச்சாளர் அறிமுகத்தில் தனது டி க்ரூஸ் என்கிற நாமகரணத்தை உச்சரிக்க சிரமப்பட்டதிலிருந்து பேச ஆரம்பித்தார். க்ரூஸ் என்பது இந்த பிராந்தியத்தின் பெயரல்ல என்று சொல்லிவிட்டு பிரசங்கத்தின் கடைசி கால் மணி நேரத்தில் அதற்குக் கனெக்ஷன் கொடுத்தார். இது போர்ச்சுகீசியர்களின் பெயர். முத்தும் பவளமும் கொட்டிக்கிடக்கும் கடல் பகுதியில் முகமதியர்கள் துப்பாக்கியால் மீனவர்களைத் தாக்கி அழித்தொழித்து அந்த வளங்களைச் சூறையாடும் போது அவர்களுக்குக் கைகொடுத்தவர்கள் போர்ச்சுகீசியர்கள். செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக அவர்களது வழிபாடுகளையும் கடவுளர்களையும் எங்களை வணங்கப் பணித்தார்கள். அவர்களின் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க தனது பாட்டன் பூட்டன்மார்கள் கன்னியாக்குமரி அம்மன் மீது ஆணையிட்டு.... ”அப்படியே நடக்கிறோம்..” என்று சத்தியம் செய்தார்கள் என்று உணர்ச்சிபொங்க கூறினார். நிறைய பேர் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

ஹிந்துத்துவா என்பது மெச்சூரிட்டி. அது ஒரு பக்குவம். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம். நாங்கள் போர்ச்சுகீசியர்களை ஏற்றுக்கொண்டது போல என்று நச்சென்று பொட்டில் அறைந்தது போலப் பேசினார். மன்னை ஹரித்ராநதியிலிருந்து ரமேஷ், கோப்லி, ஸ்ரீராம், ராஜா என்று ஒரு குழுவாக வேளாங்கன்னி சுற்றுலா சென்றதும் கண்ணாடிப் பெட்டகத்துள் குழந்தை யேசுவை சுமந்திருக்கும் மேரி மாதா எங்களது பூஜையறையை அலங்கரித்ததும் ஞாபகம் வந்து போனது. பக்குவமாக இருக்கிறோம் என்கிற சுயபுரிதல் ஏற்பட்டது.

கடல்கோள்கள் (சுனாமி) பற்றிப் பேசும்போது கன்னியாக்குமரியம்மன் கதையை காட்சிகள் கண்முன் விரிய பேசினார். பேச்சுக்கேட்க வந்தவர்கள் அவர் வார்த்தைகளின் வழியாக காட்சிகள் பார்த்தார்கள். உள்வாங்கிய கடல் மீண்டெழுந்து மலைபோல பொங்கி வரும் போது எதிர்த்து குமரி உள்ளே சென்ற காட்சி அற்புதமான விவரிப்பு. அருவிபோலத் தங்குதடையில்லாமல் வார்த்தைகள் வந்து விழுவது நம்மைக் கட்டிப் போட்டு கவனிக்க வைக்கிறது. தமிழ் ஹெரிட்டேஜினர் விருந்தளித்த டீ கூட ஆறியது.

பரதவர்கள் கல்யாணத்தில் கட்டியம் கூறுதலைப் பற்றி வெகு அழகாக பேசினார். மச்சான் சாமி என்று திருச்செந்தூர் முருகனைப் பற்றி பேசியது அபாரம். திருச்செந்தூர் தேரிழுக்க பாடும் ”ஏலோ.. ஈலோ..” என்ற பாடலைச் சொற்பொழிவு கேட்பவர்கள் வடம் இழுக்க கையிரண்டையும் கோர்க்கும் டண்டக்க..டண்டக்க.. சந்தத்துடன் பாடினார். எனக்கு மன்னை ராஜகோபாலன் தேர் இழுத்த எஃபெக்ட் கிடைத்தது. ”நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.. கோகழி ஆண்ட...” என்று மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை சுனாமியாய்ப் பொழியும் போது நமக்கே சிலிர்த்தது. தானொரு கத்தோலிக்க கிருஸ்தவனானாலும் சிவன், முருகன், குமரியம்மன் என்று எதுவும் பிடித்துப்போகிறது. இந்தப் பக்குவம் வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”பரத்தி மகள் தேவானை குலவிளக்கா இங்கிருக்க.. குறத்தி மகள் வள்ளி பின்னால் போவானேன் குறவனாய்..” என்கிற தாலாட்டுப் பாடல், பரதவர் கல்யாணத்தில் மச்சானுக்குக் அயோத்தி ராசாவென்று கட்டியம் கூறுதல், சங்க இலக்கியத்தில் சுறா வேட்டை பற்றிய பாடல் போன்றவற்றைப் பற்றி பத்ரியோ, சுதாகரோ விஸ்தாரமாக எழுதுவார்கள் என்று ஆசையாய் நம்புகிறேன்.

மட்டையில் பந்து படுவது செட்டாகி நான்கும் ஆறுமாக சரமாரியாக விளாசிக்கொண்டிருக்கும்போது பொசுக்கென்று இன்னிங்கிஸ் முடிந்து போவது போல சரியாக ஒரு மணி நேரத்தில் படக்கென்று பேச்சை நிறுத்திவிட்டு “கேள்விகள் ஏதுமிருந்தால் கேட்கலாம்” என்று அவைக்கு நேரம் ஒதுக்கினார். வெளியே வந்து காரெடுக்கும் போது கீழே எழுதியிருக்கும் வாசகம் ஆழ்கடல் மனசுக்குள் பளிச்சென்று மின்னல் வெட்டியது.

க்ரூஸுக்கு இது ஆழி சூழ் உலகு மட்டுமல்ல. அன்பு சூழ் உலகும் ஆகும். நமக்கும்தான்.

இதை செவ்வனே ஏற்பாடு செய்த Tamil Heritage Trust க்குக் கோடான கோடி நன்றிகள்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails