Saturday, May 9, 2015

சரித்திரத்தைப் புதினப்படுத்துதல்

எண்பதுகளின் மன்னை நேஷனல் ஸ்கூல். ஆறாவது செக்ஷன்களை தடுப்பில் பிரித்த சங்கர ஹால். தரையில் உட்கார்ந்த ஆறாவது ஏழாவதில் வி. தியாகராஜன் சார் ஹிஸ்டரி வாத்தியார். ஒரு கண்ணில் பூ விழுந்திருக்கும். அமர்க்களமான ட்ரெஸ்ஸிங் சென்ஸ். கூலிங் க்ளாஸில் சைக்கிளில் வந்திறங்குவார். ஒவ்வொருத்தர் காதுக்கும் பிரத்யேகமாக விழுவது போல பாடம் நடத்துவார். அக்பரோ... பாபரோ... அப்போதெல்லாம் வரலாறு பக்கம் தலைவைத்துப் படுத்ததில்லை. இப்போது வில்லியம் Dalrylmpleனின் The Last Mughalலும் Jhon Keayயின் Inda - A Historyயும் புரட்டிப்பார்க்க ரவையோண்டு ஆர்வம் தலைதூக்கியிருக்கிறது.

Tamil Heritage Trustசங்கத்தினர் பிரதி மாதம் முதல் சனிக்கிழமை சரித்திரம் மெச்சும் பயனுள்ள பல கூட்டங்களை தி.நகர் தக்கர் பாபாவில் டக்கராகக் கூட்டுவர். (ஆவிபறக்கும் டீ காஃபியிம் பருகத் தருவார்கள்) இந்த வாரம் சரித்திர புதினங்கள் எழுதும் ஆர். வெங்கடேஷ். Fictionalising History என்பது தலைப்பு. சமூக நாவல்கள் எழுதி மெசேஜ் சொல்லி லோல்படுவதைக் காட்டிலும் சரித்திர நாவல் எழுதி வம்படிபடாமல் இருக்கலாம்.... யாரும் சர்ச்சை கிளப்பாதவரை... என்று கேஷுவலாக சொன்னார். நல்ல பன்ச். சரிதான். சோழர்களோ பாண்டியர்களோ பல்லவராஜனோ உயிர்த்தெழுந்து சிரச்சேதம் செய்ய வாளெடுக்கப்போவதில்லை.

ஒரு மணிநேரம் மாலிக் காபூர், அலாவுதீன் கில்ஜி, முகம்மது பின் துக்ளக், பதூதா, பாண்டியர்கள், மருது பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் என்று ராஜாதி ராஜாக்களை சம்பவங்களில் சுவையாகக் கோர்த்து ஒவ்வொருத்தராகக் கொண்டு வந்து பார்வையாளர்கள் பக்கத்தில் அரூபமாக அமர்த்தினார். காட்டாற்று வெள்ளம் போல தங்குதடையில்லாமல் சரித்திர நிகழ்வுகளைப் பொழிகிறார். “டினிங்.. டினிங்...” என்று சிந்தையைக் கலைத்து வந்து விழும் அகால எஸ்ஸெம்மெஸ்ஸை ஒரு நொடி பார்த்துவிட்டால் போச்சு. அங்கே மாலிக் காபூர் கோஹினூர் வைரத்தை லவட்டிக்கொண்டு போன நிகழ்வை மிஸ் பண்ணிடுவிடுவோம். அப்படியொரு வேகம் சொற்பொழிவில். சம்பிரதாயமான தமிழில் பேசி கூட்டத்தில் மிலிட்டரி விறைப்பு ஏற்படுத்தவில்லை. பக்கத்தாத்து ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர் மாமா திண்ணையில் உட்கார்ந்து மணிப்பிரவாளமா பேசுவாரே... அந்த மாதிரி ஆங்கிலமும் தமிழும் டிஎன்ஏ ஸ்ட்ரக்சர் மாதிரி பிண்ணிப் பிணைந்த ஒரு பேச்சு நடை. அரங்கு நிறைந்த ஹாலில் ஆர்வமாய்க் கலந்திருந்த ஆங்கிலேயப் பெண்மணிக்கும் புரிய வேண்டாமா?

வரலாற்று நிகழ்வுகளை புனைவுகளின் ஊடே சொல்லும்போது இருக்கும் சுதந்திரத்தையும் சௌகரியத்தையும் பற்றி பேசினார். சித்தூர் ராணி பத்மினி, மதுராந்தகத் தேவர் போன்ற கதாபாத்திரங்களின் புனைவுத்தன்மையின் வாயிலாக கதாசிரியர்களின் திறமையை எடுத்துப்பேசினார். புனைவுகளால் கோர்க்கப்படும் வரலாற்று நிகழ்வுகள் சுலபமாக மக்களிடம் சென்றடைகிறது என்ற உண்மையை அழுத்திக்கோடிட்டார். ஏழாவதில் ஹிஸ்டரி வகுப்பில் பராக்கு பார்த்தது பளிச்சிட்டது.

மாலிக் காபூரின் ஸ்ரீரங்கம் மதுரை படையெடுப்புகள் இந்திய சரித்திர வரலாற்றில் கறுப்புப் பக்கங்கள். கொள்ளையடித்துக்கொண்டு போனான். கட்டிடங்களை தரைமட்டமாக்கினான். மீண்டும் மீண்டும் செழித்தது எவ்வாறு? ஐந்தாறு பாண்டியர்கள் ஹைரார்கி சார்ட் போட்டுக்கொண்டு மதுரையை அரசாண்டதை விவரித்தார். கோஹீனூர் வைரத்தை வைத்திருந்த மன்னன் ஒருவனின் தலையில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி “எங்கேடா வைரம்?” என்று மிரட்டிக் கேட்பினும் வாய் திறக்க மறுத்ததைச் சொல்லும் போது மனிதர்களின் வினோத ஆசைகளின் உக்கிரம் புரிந்தது. கல்கியின் பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக காவிரி மைந்தன் எழுதியதைப் பற்றிச் சொன்னார். பொன்னியின் செல்வன் என்று ராஜராஜசோழனுக்கு கல்கி வைத்ததைப் பற்றிய ஹேஷ்யப் புதிர் ஒன்றைப் போட்டார்.

வல்லத்தரசன் வந்தியத்தேவன் நீராடி ஓடிய காவிரியை பொன்னி நதியின் செல்வனாக அவனுக்கு அடைமொழி தராமல் ஆனால் தஞ்சையிலிருந்து நாற்பது கி.மீ தூரத்தில் ஓடிய பொன்னியை ராஜராஜனுக்கு ஏற்றிச் சொன்னது எப்படி என்று ஒரு கேள்வியை எழுப்பி கச்சியப்ப சிவாச்சாரியார் ஓரிடத்தில் சொன்ன பொன்னியை கல்கி எடுத்தாண்டிருப்பதைச் சொல்லிச் சிலாகித்தார். பிரசங்கத்தில் இந்த இடம் எனக்கு கொஞ்சம் பிசுபிசுப்பாய்தான் ஞாபகம் இருக்கிறது. தீட்டிய முளைக்குள் பிரதியெடுத்தவர்கள் திருத்தலாம்.

அலாவுதீன் கில்ஜி எண்ணற்ற மங்கோலியர்களைக் கொன்று குவித்து அவர்களது மண்டையோடுகளை நகர எல்லையில் பிரமிடு போல குவித்து வைத்து மிரட்டியதைச் சொல்லிவிட்டு சரித்திரத்தில் வரும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒரு கதையாக வடிக்கும் வாய்ப்பிருப்பதை எடுத்துக்கொடுத்தார். ஸ்ரீரங்கம் கோவிலிலிருக்கும் ஒரு அர்ச்சாவதாரத்தின் கண்களில் இருந்த ஆர்லாஃப் வைரங்களைப் பற்றிச் சொல்லும் போதும், அழகிய மணவாளர் போன்றே தில்லையம்பல நடராசப் பெருமானை முகம்மதிய படையெடுப்பின் போது ஒருமுறை திருஆரூரில் கொண்டு வந்து வைத்துக்கொண்டதைப் பற்றியும் ஆச்சரியமான பல வரலாற்றுத் தரவுகளை அசால்ட்டாக அள்ளித் தெளிக்கிறார்.

சமீப காலங்களில் கூவம் நதிக்கரை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். இரண்டாயிரம் கி.மீ கங்கை, எண்ணூறு கீ.மி காவிரி போன்ற நதிக்கரை நாகரீகக் கதைகள் போல திருவிற்கோலத்திலிருந்து சென்னை வரை ஓடிவரும் எழுபத்தி சொச்சம் கி.மீ கூவத்திற்கும் கீர்த்திமிகு கதைகள் பல உண்டாம். திருவிற்கோல கூவம் பற்றி சொல்லும் போது அங்கிருக்கும் ஈஸ்வரன் ஆறுமாதங்கள் வெண்மையாகவும் ஆறுமாதங்கள் சிகப்பாகவும் மாறும் தன்மை கொண்டவர் என்று உபரி தகவல் ”டொய்ங்” என்று மூளையிலிருந்து வந்து விழுந்தது. கோயம்பேடு கோயிலில் (எந்த கோயில்?) சீதாதேவியின் கர்ப்ப சிலை வடித்திருக்கிறார்களாம். விருந்திட்ட ஈஸ்வரராகிய திருக்கச்சூர் ஆலக்கோயில் மதிலுக்கு உட்புறத்தில் ராஜராஜசோழனைப் பற்றிய கல்வெட்டுகள் வெளியே உள்ளூர் சோழர்களை “திரிலோகச் சக்கரவர்த்தி”க்கிய கல்வெட்டுகள்.

மப்பேடு சிங்கீஸ்வரர் கோயிலுக்கு நானும் என் அணுக்க தோழர்களும் சென்றிருக்கிறோம். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு திரும்பிவிட்டோம். ”ஆஞ்சநேயர் பாடின இடம்... வீணையோட ஹனுமார் சிலை ஒண்ணு இருக்கும் பாருங்க... உங்க பசங்களைப் பாடச் சொல்லுங்க.. பாட்டு நல்லா வரும்...” என்று ஒரு ஆஸ்திக அன்பர் அருளிச்செய்தார். வெங்கடேஷ் அந்த கோபுரத்தில் ஸ்ரீரங்கநாதர் போல தலைக்குக் கையைக் கொடுத்து படுத்திருக்கும் ஒரு மானுடரின் சுதையைப் பற்றிச் சொன்னார். யாரவர்? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு மதுரை கோயிலெல்லாம் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர் என்று கண்டுபிடித்ததைச் சொன்னார். அவர் பெயர் அரியநாத முதலியார்.

கூவக்கரை சிந்தாதிரிப்பேட்டையின் ஒரு குட்டி வரலாறு பேசினார். தெருக்கள் நேராக இருக்குமாம். டெக்ஸ்டைல்ஸ் நிறைய விற்ற இடம். காஞ்சி ஆரணி போன்ற ஊர்களிலிருந்து வரும் வியாபாரிகளை ஈர்க்கும் விதமாக விசாலமான தெருக்கள் என்றார். சில மாதங்களுக்கு முன்னர் ஓரமாக நடந்து சென்ற போது கட் அடித்து ”சாவுகிராக்கி..” என்று அர்ச்சித்து “வூட்ல சொல்லிட்டுவண்ட்டியா?” என்று குசலம் விசாரித்த சி.பேட்டை ஆட்டோகாரர் கண்முன் வந்தார். முதன் முதல் மோட்டார் கம்பெனி சிம்ஸன்ஸ். முதல் மிருகக்காட்சி சாலையாக குரங்கும் சிறுத்தையும் அமைந்த இடம். சிறுத்தையில்லாத போது குறைந்த கூட்டம். மெடிகல் காலேஜ் அவார்ட்டில் இடம் பெறும் பெண்மணியின் பெயர். அவர் பேசப்பேச அறையில் கூவம் மணத்தது.

ஆயிரங்களிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டாயிரங்களின் மனிதர் எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ். ( Venkatesh Ramakrishnan )
சரித்திரத்தின் புனிதம் கெடாமல் புதினப்படுத்துதல் சிறப்புதானே!

பின்குறிப்பு: நேற்றிரவே எழுதியிருந்தால் இன்னும் கொஞ்சம் நினைவில் இருந்திருக்கும். என் ந்யூரான்களின் பலம் இவ்வளவுதான். இன்னும் சில சம்பவங்கள் நினைவிருந்தாலும் பெயரும் ஊரும் ஞாபகத்திற்கு வர பிகு பண்ணுகிறது. Balasubramanian Natarajan Radhika Parthasarathy, Chitra Nagesh , Rangarathnam Gopu, Badri Seshadri, Kishore Mahadevan, Vaidyanathan Ramamurthy போன்ற ஆர்வலர்களும் கலந்துகொண்டார்கள். அவர்களில் ஒருவரோ அல்லது வரலாற்றைக் கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டவர்களோ மேற்கூறிய சம்பவங்களை அலசலாம். என்னை அடித்துத் துவைக்காமல்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails