Saturday, May 9, 2015

காதுகள்: எங்கேயும் கேட்ட குரல்

டாக்டர் ஜெகில் தனது தீவிர ஆராய்ச்சியில் ஒரு மனிதனின் கெட்ட குணாதிசயங்களை மட்டும் பிரித்து வெளிக்கொணரும் ஒரு அரிய மருந்தைக் கண்டுபிடிக்கிறார். இந்த மருந்து சாப்பிடுபவர்கள் அடுத்த க்ஷணம் ரௌடியாகத் திரிவார்கள். இதற்கு முறி மருந்து ஒன்றையும் ஜெகில் கண்டுபிடித்தார். அதை உட்கொள்பவர்கள் திரும்பவும் பழையபடிக்கு நல்லவர் ஆகி கட்டின பசுவாகிவிடுவார்கள். 

தனது மருந்தை சோதனை செய்ய விரும்பி அவரே அந்த மருந்தை ஒரு நாள் விழுங்குகிறார். அகோர உருவமெடுத்துத் தனது பெயரை மிஸ்டர் ஹைட் என்று வைத்துக்கொள்கிறான். கொலை கொள்ளை கற்பழிப்பு என்று அடாவடிச் செயல்களில் ஈடுபடுகிறான். அந்த பஞ்சமா பாதகங்கள் கொஞ்சம் அலுக்கும் போதோ அல்லது போலீஸிடம் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்று தெரியும்போதோ முறி மருந்தை உட்கொண்டு நல்லவனாகிவிடுகிறான். 

ஆனால், தீயது பிடித்துப்போய் அடிக்கடி அந்த மருந்தை சாப்பிட்டு கெட்டகாரியங்களில் இஷ்டமாக ஈடுபடுகிறான். ஒரு முறை குற்றம் செய்துவிட்டு மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக அவசரமாக வீட்டிற்கு வந்து முறி மருந்தை மேஜையில் தேடும்போது அது காலியாகக் கிடக்கிறது. இப்போது தீயவனானதால் மீண்டும் முறி மருந்தை தயாரிக்கும் திறனும் இல்லாமல் இக்கட்டில் மாட்டிக்கொள்கிறான். தீயதை நாடினால் அதிலிருந்து மீள முடியாமல் அந்தப் பொறியில் மாட்டிக்கொள்வோம் என்கிற நீதியை வெளிச்சமிட்டுக் காட்டும் ஸ்டீவென்சனின் 1931 வருடத்திய கதை. இதை காதுகளில் ஒரு இடத்தில் எழுதுகிறார் எம்விவி. இவ்விதமான மருந்துகளைப் புகட்டாமல் தீய எண்ணங்கள் மாலிக்கு வருவதாக எழுதியிருக்கிறார்.

சோஃபாவில், கட்டிலில், சேரில், ஹாலில் என்று காணும் இடமெல்லாம் உட்கார்ந்து படுத்து உட்கார்ந்து நின்று ஒரே மூச்சில் இன்று காதுகளை பரீட்சைக்குப் படிப்பது போலப் படித்து முடித்தேன். மூன்று வருட தவம் நிறைவுக்கு வந்தது. இது வாழ்ந்து கெட்டவனின் கதை. மகாலிங்கம் என்பது கதாநாயகனின் பெயர். இந்த நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது வாங்கும் ஏற்புரையில் “இது என்னுடைய கதை.” என்கிறார். ஒரு லட்சம் பேர் கை தட்டியதால் என் இலக்கியப்பணி வளரவில்லை. ஒரு சில ரசிகர்களால் என் படைப்பாற்றல் வலுப் பெறுகிறது என்கிறார் திடமாக. சொல்லுக்குள்ள வசிய சக்தி மகத்தானது என்று பெருமிதம் கொள்கிறார்.

சோகம் பிழியும் கதைகளைப் படிக்கும்போது துக்கக் கால்பந்து தொண்டையை கெட்டியாய் அடைக்கிறது. விரக்தியில் இருக்கும்போது மனசாட்சி மாதிரி ஏதோ ஒரு மாயப்பிசாசு நம்மிடம் பேசுவதை நாம் சிலசமயங்களில் உணர்வோம். ”கோயிலுக்குப் போ.. நாக்கைப் பிடிங்கிட்டு சாவு...மதியாதார் தலைவாசல் மிதியாதே... அவனென்ன பெரிய அப்பாடக்காரா?” போன்று நிறைய எகத்தாளங்களையும் அறிவுரைகளையும் கட்டளைகளையும் பிறப்பிக்கும். காலைக் கட்டி எங்கயாவது கோயிலுக்கோ பீச்சுக்கோ தனிமைக்கு இழுக்கும். அதுபோன்ற ஒரு உணர்வாக காதுகளுக்குள் குரல் கேட்பதாக எழுதியிருக்கிறார் எம்விவி. “ஆ”வில் சுஜாதா ஆடிட்டரி ஹாலுஸினேஷனில் அவதியுறும் இளைஞனின் கதையை எழுதியிருப்பார். புத்தகத்தின் பக்கக் காது மடக்கிக் கவிழ்க்காமல் ஒவ்வொரு அத்தியாய இறுதியிலும் “ஆ”வில் முடித்து அசத்தியிருப்பார். அபாரமான கதை.

இதில் காதில் கேட்கும் குரல்களை சில சமயங்களில் சித்தாந்தமாகவும் பல சமயங்களில் sickகாகவும் பயன்படுத்தியிருக்கிறார் எம்விவி. எழுத்தாளனாக வரும் மாலி என்கிற மகாலிங்கத்தின் குடும்பம் கஷ்டஜீவனம். அதிலும் ஏழையின் சந்தோஷமாக அசராமல் பிள்ளை பெறுகிறாள் மனைவி காமாட்சி. வருமானத்திற்கு வழியில்லாமல் கடனைஉடனை வாங்கி குடும்பத்தை ஓடுகிறார்கள். காளியாக கேட்கும் குரல் தன்னை விட்டு ஏன் விலகி வந்தாய் என்று உலுக்கி உறுமுகிறது. தன் குருநாதனான முருகனிடம் அடிக்கடி பேசுகிறார் மாலி. ஆண்குரல், பெண்குரல், குழந்தைக் குரல் என்று எல்லாம் கலந்து கட்டி காதுகளில் குரல்கள் கேட்கத்துவங்கி கடைசியில் ரோமக்கால்களெங்கும் குரல் கேட்டது என்று எழுதும்போது நமக்கும் ரோமக்கால்கள் எங்கும் பல குரலகள் அலறுவதுபோல ஒரு பிரமை ஏற்படுகிறது. எழுத்தாளனின் பரிபூரண வெற்றி.

இதுதான் கரு என்று ஒரு கட்டத்துக்குள் கொண்டு வரலாம் என்று தேடினால்...... ஒரு அன்றாடங்காய்ச்சி எழுத்தாளின் டைரிக் குறிப்புபோல கதை விரிகிறது. உப்புபுளிக்குக் கஷ்டப்பட்டு பொண்டாட்டியின் தாலியைத் தவிர எல்லாவற்றையும் விற்று பிழைப்பு நடத்துபவனின் அவலக் கதை. அவனது வாழ்க்கையில் தரித்திரம் எவ்வளவு தாண்டவமாடியது என்பதற்கு ஒரு துளி கீழே தருகிறேன்.

பொண்டாட்டி காமாட்சி ஆறாவது முறையாக கருவுருகிறாள். ஒரு நாள் நடுஇரவு நெருங்குகையில் வலி எடுக்கிறது. கையில் தம்படி காசில்லை. நடந்தே போயிடலாம் என்று மாலி கூப்பிடுகிறான். முடியலீங்க.. வண்டியைக் கூப்பிடுங்க என்று கெஞ்சுகிறாள். வண்டிச்சத்தம் ஒரு ரூபாக்கு எங்கே போறது என்று மூக்கால் அழுகிறான் மாலி. சமையற்கட்டில் ஒரு பொட்டியில் ஒரு ரூபாய் சில்லறை சேர்த்து வைத்திருக்கிறேன் என்று வண்டி கட்டச் சொல்லி ஆஸ்பத்திரி செல்கிறார்கள். நகராட்சி மருத்துவமனையில் இது கொஞ்சம் சிக்கலான கேஸ்.. உயிருக்கு ஆபத்து.. பெரியாஸ்பத்திரி செல்லுங்கள் என்று அட்மிட் செய்ய மறுக்கிறார்கள். காசில்லாத காரணத்தினால் நான் எவ்வளவு வலி வேணுமின்னாலும் பொறுத்துப்பேன் என்று காமாட்சி சொல்லும் காட்சியில் படிப்பவர்க்கு கண்கள் குளமாகிறது.

பெரியாஸ்பத்திரி செல்ல வண்டிக்காரன் மேலும் நான்கு ரூபாய் கேட்கிறான். நாளைக்கு கொடுக்கிறேன் தயவு செய்து கொண்டு போ என்று கெஞ்சிக் கூத்தாடி பெரியாஸ்பத்திரி சென்று சேர்த்தால் குழந்தை இறந்து பிறக்கிறது. அப்பாடி என்று அந்த வேதனையில் மாலிக்கு மகிழ்ச்சி. மறுநாள் காலை ஆஸ்பத்திரி சென்றால் குழந்தையை புதைப்பதற்கு ஐந்து ரூபாய் கேட்கிறார்கள். ரெண்டு ரூபாய் வேண்டுமானால் தருகிறேன் என்று பேரம் பேசி அது படியாமல் பிண்டமாகக் கொடுத்த குழந்தையின் பிணத்தை மூட்டையாகக் கட்டி சைக்கிளில் வீட்டிற்கு விரைந்து வந்து தானே கொல்லையில் குழிதோண்டிப் புதைக்கிறான். வேலி தாண்டி பக்கத்துவீட்டில் புதைக்கப்போய் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு கிழவி திட்ட மீண்டும் நோண்டி தன் வீட்டிற்குள் புதைக்கிறான் மாலி. ச்சே.. என்னடா வாழ்க்கை? என்று படிப்பவர்க்கே வெறுத்துப்போகிறது. 

காலச்சுவடு இந்த வருடம் பதிப்பித்திருக்கும் காதுகளுக்கு பிரபஞ்சனின் முன்னுரை பிரமாதம். காவிரிக்கரைக்காரர்கள் எம்விவி, திஜா, கரிச்சன்குஞ்சு என்று மூவரையும் முன்னுரையில் அங்கேஇங்கே தொட்டிருக்கிறார். முன்னட்டையிலிருந்து பின்னட்டை வரை ஒரு எழுத்துவிடாமல் படிக்கவேண்டிய நாவல்? சுயசரிதை?....எதாகிலும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails