Saturday, May 9, 2015

மயானபுரி

வாசலில் மஞ்சமசேரென்று க்ரோட்டன்ஸ் செடிகள். நுழைந்ததும் பூங்கா போல கடப்பா கல்லில் வரிசையாக பெஞ்சுகள். தொங்கு முகத்துடன் கூட்டம். பார்க் செய்யப்பட்ட திறந்த வண்டிகளுக்குள் மூங்கில் பாடையில் வரிசையாக அமரரானவர்கள். மனுஷனுக்கு செத்தாலும் க்யூ. ”ஒன்றுக்கு” கட்டணம் ரூ.1500 என்று அஃறிணையாக ரேட் மாறிய போர்டு எழுதி வைத்திருக்கிறார்கள். பல்லவபுரம் எரிவாயு தகன பூமி. விர்ர்விர்ரென்று பேருந்துகள் விரையும் சிட்லபாக்கம் மேம்பாலத்துக்கு அடியில் இருக்கிறது. இறந்தவர்களை புகையாய்ச் சொர்க்கத்துக்குச் சேர்க்க விண்ணை முட்டும் புகைபோக்கி நிற்கிறது. இடுகாட்டு சிவன் இளமை ரூபம் எடுத்தது போன்ற இரு இளைஞர்கள் ஸ்லீவ் லெஸ் டீ ஷர்ட்டும் பெர்முடாவும் அணிந்து தொடர்சேவை புரிந்துகொண்டிருந்தார்கள்.

”அடுத்ததை எடுத்து இங்கே வையுங்க..” என்று தரையில் கிடக்கும் அலங்காரமில்லாத மூங்கில் பாடையைக் காண்பித்தார்கள். சுடுகாட்டுக்குள் கிடைக்கும் ஓரத்திலெல்லாம் புளிச் புளிச்சென்று குட்காவைத் துப்பினார்கள். இருந்தாலும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றுகிறது. எப்பேர்ப்பட்ட சேவை!

அபரகாரியம் செய்து வைக்கும் வாத்யாரும் அவருக்கு அஸிஸ்டெண்டாக இருந்தவரும் அசராமல் கார்யம் செய்தார்கள். “இதெல்லாம் முடிச்சுட்டு ராத்திரி காஞ்சிபுரம் பக்கத்துல தூசிக்கு போகணும்..” என்று அஸிஸ்டெண்ட்டைக் காண்பித்தார். மூன்று தடவை ப்ரேதத்தை சுற்றச் சொல்லி...சட்டியில் மூன்று ஓட்டை போட்டு... “திரும்பிப் பார்க்காம அப்படியே பின் பக்கமா கீழே விடுங்கோ...” டமாரென்று சட்டி உடையும் போது தூக்கிவாரிப் போட்டு மனதைப் பிசைந்தது.

மது அருந்திவிட்டு மயானத்திற்குள் வரக்கூடாது, பட்டாசு கொளுத்தக்கூடாது என்று வரிசையாக விதிமுறைகள் வகுத்திருக்கிறார்கள். வேலை நேரம் காலை ஒன்பதிலிருந்து மாலை நாலரை மணி வரை. வீதியில் அழுது புரள்பவர்கள் யாருமில்லை. பிறப்பென்றால் இறப்பு டிக்கெட்டைக் கையிலெடுத்துக் கொண்டுதான் வாழ்க்கையில் பயணிக்கிறோம் என்கிற நிதர்சனம் தெரிந்தவர்கள்தான் சுடுகாடு வருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். மயானத்தில் வெகு நேரம் ஆயிற்று.நானும் ராமனும் (Ramkumar Srinivasan ) இடுகாட்டு வாசலில் அமர்ந்து டன்டன்னாய் நினைவுகளை அசை போட்டோம். பிரேதம் எரிய ஆரம்பித்ததும் சாம்பல் கொஞ்சம் வெளியே பறந்து நமக்கு சுடலைப்பொடி பூசுகிறது. “அரை அவருக்குள்ளே சாம்பலாயிடும் சார்.. ஒரு பாஞ்சு நிமிசம் சூடு ஆறினா அஸ்தியைக் கையில கொடுத்துடுவோம்...” என்று நீலக்கலர் டீஷர்ட் சொன்னார். நெற்றியில் சந்தனமும் விபூதியும் மணத்தது.

”இனிமேல் யாருக்கும் கெடுதி பண்ணக்கூடாது. பிறத்தியாரைப் பார்த்து பொறாமைப் படக்கூடாது. யார்கிட்டேயும் கோச்சுக்ககூடாது. யார் எப்படிப் போனா என்ன நாம ஒழுங்கா இருப்போம். இருக்கிறவரை எல்லோருக்கும் நல்லதே செஞ்சுட்டு போவோம்...” என்பது போன்ற சபதங்களை மனசுக்குள்ளேயே எடுத்துக்கொள்வார்கள். இதற்கு சுசானக்கரை வைராக்கியம் என்று சொல்வார்கள். மிகவும் இளகிய மனது படைத்தவர்களுக்கு ஒரு வாரம் வரை இவை நீடிக்கலாம். அப்புறம் திரும்பவும் “உன்னை விட்டேனா பார்.. நா யார்னு நினைச்சே....” போன்றவைகள் ஒரு வார லீவிற்குப் பிறகு முன்னை விட வீரியமாய்ப் பீறிட்டுக் கிளம்பக்கூடும்.

முக்கால் மணியில் சித்தி புகையாய் விண்ணில் கலந்தார்கள். பழகிய நாட்களில் நடந்த சம்பவங்களின் கோர்வை மனதில் தோன்றித் தோன்றி மறைய ஏதேதோ சிந்தனையில் வீடு வந்து சேர்ந்தேன்.

மனசு சஞ்சலப்படும் போதெல்லாம் தெய்வத்தின் குரலை கையிலெடுத்துவிடுவேன். கிளி சீட்டெடுப்பது போல குன்ஸாக எதாவது ஒரு பக்கம் புரட்டினால் இதமாக எதாவது கண்ணில்படும். ”துக்கச் சுமை குறைய வழி” என்கிற அத்யாயம் வந்தது. துக்கம் நம் உடன்பிறப்பு என்கிறார் பரமாச்சாரியார். அடர்மரக்கிளைகளுக்கு மத்தியில் தென்படும் வெளிச்சம் போல அவ்வப்போது சுகம் தலையைக் காட்டுகிறதாம். தண்ணீருக்குள் இருக்கும் கனமான குடம் இழுப்பதற்கு இலகுவாக இருக்கிறது. அதுபோல துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கிவிட்டால் துக்கம் பரமலேசாகிவிடும். ஆஹா. புண்ணிற்கு மருந்து தடவிய வாசகங்கள். ம்.. கிளம்பி ஆஃபீஸிற்கு ஓடு என்று அடுத்த கடமை அழைக்கிறது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails