Saturday, May 9, 2015

சாரி சேப்பாயி!

நந்தனம்-சைதாப்பேட்டை வழியில் திநகருக்குத் திரும்பும் வலதுபக்கப் பாதை. பச்சையும் சிகப்பும் படக்படக்கென்று கண்சிமிட்டிக்கொள்ளும் சிக்னல். மரணக்கிணறு வீலிங் செய்பவர்களால் கூட நாற்பதுக்கு மேல் செல்லமுடியாது. நானூறு வண்டிகளுக்கு மத்தியில் செல்லும் போது நாற்சக்கரங்கள் நான்கில் போகலாம். இன்னும் கொஞ்சம் அதிகம் என்றால் பத்தில் போகலாம். அப்படித்தான் நான் சேப்பாயியில் போய்க்கொண்டிருந்தேன். முன்னால் ஒரு நாற்பத்தைந்து பி ஊழிக்காலத்தில் உலகம் கிடுகிடுப்பது போன்ற கடமுடா சப்தத்துடன் சர்வ நிதானமாகச் சென்றுகொண்டிருந்தார். 

இதுவரை ஓகே. 45 பி டிரைவர் திடீரென்று ப்ரேக்கில் ஏறி நின்றுவிட்டார். எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளும் சேவகன் போல பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்த எனக்கு வெடுக்கென்று ஆகிவிட்டது. அரைக்கண் ரியர்வ்யூ மிரர் யாருமில்லை என்று சொல்ல சடாரென்று ஸ்டியரிங் ஒடிய வலதுபுறம் ஆனமட்டும் ஒடித்தேன். சேப்பாயியின் இடது கண் மாநகரப்பேருந்தில் இடித்துவிட்டது. 45பி எழுப்பிய சப்தத்தை விட சன்னமான சப்தம்தான் கேட்டது.

சிக்னல் தாண்டி அப்படியே மெதுவாக ஓரம் கட்டினார். நான் 45பியின் முதுக்குப்பின்னால் கொண்டுபோய் பயபக்தியோடு நிறுத்தினேன். டிரைவரும் கண்டக்டரும் ஜோடியாக இறங்கி வந்தார்கள். நானும் சீட் பெல்ட்டிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு போனெட் அருகில் வந்தேன். ஹெட்லைட் கண்ணாடி செதில்செதிலாக உடைந்துவிட்டது. போனெட்டை லேசாகத் தன்னை திறந்து கொண்டு குறட்டை விட வாய்பிளக்கும் போஸில் இருந்தது.

“ஒரு சாவுகிராக்கி டூவீலரை முன்னாடி கொண்டுவந்து கட் கொடுத்துட்டான் சார்! அவன் மேலே இடிக்கக்கூடாதுன்னு சடன் ப்ரேக் போட்டேன்....”

“சரி.. விடுங்க.. என்ன பண்றது.. உங்க மேலையும் தப்பில்லை..” என்றேன்.

“நீங்க கேப் விட்டு வந்திருக்கலாம்”

குருக்ஷேத்திரத்தில் துரோணர் காதில் விழாதமாதிரி குஞ்சரஹ சொன்ன தர்மபுத்திரன் போல பேசினார். எனக்கு மனசு தாங்கலை. “நான் நிறையா கேப் விட்டு வந்திருப்பேன். ஆனா லட்சோபலட்சம் வண்டிகள்ல அந்த கேப்ல வேற யாரும் வராம இருப்பாங்களா சார்?” கேட்டுவிட்டேன். டிரைவர் பதில் பேசவில்லை. நியாமெனப்பட்டிருக்கும். சேதாரம் எதுவும் கேட்டுவிடுவேனோ என்று அப்படி பேசியிருக்கலாம். ”பத்து மீட்டர் இடைவெளி விடவும்னு விளம்பரம் பண்றாங்க... சிட்டியில ஒவ்வொரு வண்டிக்கு பின்னாடியும் பத்து மீட்டர் இடைவெளி விட்டா.. கிண்டியில முதல் பஸ் நின்னா மூனாவது பஸ் பாரீஸ்ல நிக்கும்... என்ன சொல்றீங்க?” என்றேன். ஒரு குறுகுறுப்பார்வையை என் மேல் விட்டார். நான் சிரித்தேன். கொஞ்சம் சகஜமானார்.

“பரவாயில்லை. எடுங்க..” என்று கார்க்கதவைத் திறந்தேன். இருவரும் நகர்ந்தனர். யாரோ கட் அடித்த சாகசத் தவறுக்கு யார்யாரோ அனுபவித்தோம். சேப்பாயியை நாளை க்ளினிக் அழைத்துக்கொண்டு போகவேண்டும். நான் இன்னும் விழிப்பாக இருந்திருக்கலாம்.

சாரி சேப்பாயி!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails