Saturday, May 9, 2015

பாற்கடலில் நீரின்றி வாழ்வீரோ நீர்?

”ஒரே முள்ளுக்காடா இருக்கும்... எங்க அண்ணாதான் ஒத்தையாளா சைக்கிள்ள வந்து போயிண்டு இருந்தார்..”

“பத்து மணிக்கு நடை தொறப்போம்.. அப்போல்லாம் யாருமே வரமாட்டா.. ஒரு ஈ காக்கா இருக்காது.. ஓ....ன்னு இருக்கும்..”

”கரிகால சோழனோ.. ராஜராஜ சோழனோ... யாரோ ஒரு இடைப்பட்ட சோழன் கட்டினதுன்னு பேசிப்பா... த்தோ.. அந்த தூண்ல எழுதியிருக்கு பாருங்கோ... ”

அவரது கை சென்ற திசையில் வெள்ளையாய் சுண்ணாம்பு அடித்த கற்தூணில் பூச்சியாகவும் புழுவாகவும் சில எழுத்துகள் அடையாளம் தெரியாமல் இடைவெளியில்லாமல் நெளிந்துகொண்டிருந்தது. யாரோ ஒரு பக்திமான் வெள்ளைத் தூணுக்கு நடுவில் குங்குமப்பொட்டிட்டு சுமங்கலியாக்கியிருந்தார்.

தேசலாக இருந்தவர் தலைக்கு மேலே தட்டைத் தூக்கித் தீபாராதனை காட்டினார். ஸ்ரீநிவாசப்பெருமாள் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விஸ்வரூபமெடுத்து நின்றார். ஆரத்தியில் பளபளத்தார். பக்கத்தில் திருவிந்தவல்லி சன்னிதி வாசலில் நாங்கள் நின்றதும் “அப்டியே தர்சனம் பண்ணிக்கோங்கோ... சாவி அண்ணாட்ட இருக்கு..” என்று பூட்டு திறக்காத க்ரில் கதவுக்கு வெளியே இருந்து கன்னத்தில் போட்டுக்கொள்ளச் சொன்னார்.
சுற்றி வந்ததும் ”மார்கழியில ஆறு மணிக்கு நடை தொறப்போம்... அடிக்கடி வாங்கோ...” என்று உபசாரம் செய்தார். ஜிப்லாக் கவரில் குங்குமமும் துளசி ஒரு கொத்தும் பிரசாதமாகக் கையில் போட்டார்.

திருச்சுற்று வந்தபிறகு ஏதோ “மங்களாசாசனம்..” என்று கடப்பா கல்லில் செதுக்கியிருந்த வெள்ளையெழுத்து கூப்பிட்டது. நெருங்கிச் சென்று பார்த்தால் உள்ளூர்க் கவிராயர் பக்தவச்சலம் என்பார் மழை வேண்டி 2001ல் பத்து பதினைந்து வெண்பா எழுதியிருக்கிறார். இவைகளை சன்னிதியில் படித்தபின் மழை பொழிந்து காடு கழனியெல்லாம் நிறைந்தது என்று ஆவணப்படுத்தியிருக்கார்கள்

நிதானமாகப் படித்தேன். எப்படி மழை பொழியாமல் இருக்கும்? அந்தப் பாமழையை படம் பிடித்ததில் ஒன்றை இங்கே பகிர்கிறேன். தமிழ் மழை இங்கு பொழியட்டும்.

கண்ணின்ற கார்மேகம் தண்ணீர் கசியாமல்
விண்ணின்று மெல்ல விலகினவே - எண்ணற்ற
நீர்நிலை வற்றினவே! நீலவண்ணா! பாற்கடலில்
நீரின்றி வாழ்வீரோ நீர்?


பாற்கடலில் நீரின்றி வாழ்வீரோ நீர்? என்று பெருமாளையே தட்டிக்கேட்டத் தமிழ்ப்புலவர் பாடிய அந்த ஸ்தலம், குன்றத்தூர் திருவிருந்தவல்லி சமேத திருஊரகப்பெருமாள் திருக்கோயில்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails