Saturday, February 22, 2014

காமிராக் கவிஞர்

’ப’ வரிசை டைரக்டர்கள் என்ற கோடம்பாக்கத்து தொகையியக்குனர்களில் பாலு மகேந்திரா விசேஷமானவர். வாழ்நாளெல்லாம் ராஜாவுக்காகக் காத்திருந்து படம் பண்ணியவர். ”பாலு மகேந்திரா தொப்பி” என்கிற புது அடையாளத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். பாடல்களைப் பின்னணியில் ஓடவிட்டு கதாநாயக நாயகியர்களைத் திரையில் நடக்கவிட்டவர். கேமிராக் கவிஞர் என்று சக கலைஞர்களால் மெய்க் கீர்த்தி பாடப்பெற்றவர். யதார்த்த இயக்குனர் பாலாவுக்கு குருநாதராக இருந்தவர். பிறந்தது ஸ்ரீலங்காவில். லண்டனில் படித்தார். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் கேமிராவுக்காக தங்கம் வென்றவர். கன்னடத்தில் தொடங்கினார். இப்படியாகப் பல...

”விஜி..விஜி... சீனு விஜி...விஜி...சீனு விஜி...” என்று ரயில்வே ப்ளாட்ஃபாரத்தில் சேறும் சகதியுமாகத் தெரியும் மூன்றாம் பிறை கமல்ஹாசனில் மகேந்திராவும் கலந்திருக்கிறார் என்பதை யாராலும் மறுக்கயிலாது. எண்பதுகளின் டீனேஜர்கள் ”ஓ வசந்த ராஜா..” பார்க்கும்போதெல்லாம் பாலு மகேந்திராவை நினைக்காமல் இருக்கமுடியாது. ஷோபாவிற்கு நாலணா பொட்டிட்டு அழகு பார்த்ததில் குடும்ப ஸ்திரீகள் மங்களரமாக அதே சைஸில் பொட்டிட்டு வலம் வந்தார்கள். மூன்றாம் பிறையில் சில்க் ஸ்மிதாவை வேறு பரிணாமத்தில் காண்பித்து பார்ப்பவர்கள் மனதில் கள்வெறி பொங்கச் செய்தவர். ’வீடு’ வந்த போது ஊரில் கலை ஆர்வல அண்ணாக்கள் நிறைய பேர் பார்த்துவிட்டு வீடுவீடாகத் திண்ணைகளை ஆக்கிரமித்துச் சிலாகித்தார்கள். நான் ’நாயகன்’ பார்த்துக்கொண்டிருந்த வேளையில் வீடு கட்டி லோல்படுவது போன்ற கடப்பாரையால் இதயத்தை உடைக்கும் கண்ணீர்க் கதையெல்லாம் பார்த்து அழ பிரியப்படவில்லை.

தேசிய விருது வாங்கிய பின் தூர்தர்ஷனில் போட்டதாக ஞாபகம். அதையும் ஸ்கிப் செய்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தேன். இளையராஜாவின் நத்திங் பட் விண்ட் பின்னணியில் பூராப் படமும் இன்ச் இன்ச்சாக நகர்ந்தது. இக்கால கலைப்பட இயக்குனர்கள் இதில் ரொம்பவும் ஈர்க்கப்பட்டு மூளையில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். ”சதிலீலாவதி” சொக்கலிங்க பாகவதர்தான் ஹீரோ. பஸ் ஏறி வளசரவாக்கத்துக்கு அதிக நெரிசலில்லாத சென்னை சாலையில் சென்றுவந்து கொண்டிருந்தார். செங்கல் செங்கல்லாக தொட்டுப் பார்த்து அழுதுகொண்டிருந்தார். இந்தப் படமெடுப்பதற்கு தன் அம்மா சிரமதசையில் வீடு கட்டியதைப் பார்த்ததுதான் உந்துகோல் என்று பின்னர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். கஷ்டப்பட்டு வீடுகட்டியவர்கள் கட்டாயம் தாரைதாரையாகக் கண்ணீர் உகுத்திருப்பார்கள். ரணப்படுத்தியிருப்பார்.

இன்னும் வளர்ந்த பிறகு கல்லூரியில் படிக்கும் போது திரைக்கு வந்தது வண்ண வண்ணப் பூக்கள். “இள நெஞ்சே வா....” என்று ஜேசுவும் ராஜாவும் கை கோர்த்துக்கொண்டு இசை ரசிகர்களைப் புரட்டிப் புரட்டி எடுத்தார்கள். இருந்தாலும் இளசுகளின் நெஞ்சை அள்ளியது “கண்ணம்மா... காதல் என்னும் கவிதை சொல்லடி...”தான். ஊரையடுத்த ஒரு காடு. அதில் பாழடைந்த ஒரு மண்டபம். அங்கே ஒரு மர்ம இளைஞி. அவளிடம் உறவாடும் ஒரு இளைஞன். பதின்மர்களுக்கு உல்லாசக் கனவில் வரும் பிரதேசம். அவருடைய அநேக படங்களில் வருவது போல சட்டையில்லாமல் பிரசாந்த். அவரது தோளை உரசி சிரித்துக்கொண்டே வினோதினி. படத்தில் கிக் எதில் இருந்ததென்றால் வினோதினி அணிந்திருந்த பிரசாந்த் சட்டையிலும் மௌனிகாவின் இந்தியா டுடே புஸ்தகத்திலும்.

எம்சீயே முடிப்பதற்கு முன்னால் சதிலீலாவதி வந்தது. காமெடியும் தனக்கு கைவந்த கலை என்று பின்னிப் பெடலெடுத்திருந்தார். கோவை சரளாவை ஹீரோயினாகப் போட்டதில் பாலு மகேந்திராவும் தனக்கு ஜோடியாக ஏற்றுக்கொண்டதில் கமலும் திரைப் புரட்சி செய்திருந்தார்கள். “பளனி.. திருப்பதி..... பேசும் சபாபதி.. குரைக்கும் சபாபதி...” என்று பொளந்து கட்டியிருப்பார். ராமன் அப்துல்லா போன்ற படங்கள் கலெக்ஷனில் சுமார் என்றாலும் ராஜாவின் இசையிலும் மகேந்திராவின் இயக்கத்திலும் மிளிர்ந்தன.

பல நேரங்களில் வசனத்தை விட காட்சி பேசினால் போதும் என்று ஃப்ரேம் ஃப்ரேமாகத் திரைப்படமெடுத்தார். இன்று ஃப்ரேமிற்குள் படமானார். கலைஞன் மறைந்தாலும் அவனெடுத்த கலைப்படைப்புகள் மூலம் அமரத்துவ நிலையை அடைகிறான். பாலு மகேந்திரா தனது காலத்தால் அழியாத படைப்புகளில் இருக்கிறார்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails