Saturday, February 22, 2014

காட்டுப்பள்ளியுறை கனலே போற்றி



உச்சிகாலவேளையில் திருக்கோவில்கள் அனைத்தும் நடை சார்த்தியிருப்பார்கள் என்று கோவில் கோவிலாகச் சுற்றிய என்னுடைய சேப்பாயிக்குக் கூட தெரியும். ஆகையால் பிள்ளையார்பட்டியிலிருந்து நேரே தஞ்சைத் தரணியிற்கு தானாகவே தடம் பிடித்தாள் சேப்பாயி. வழியில் அகஸ்மாத்தாக கைப்பட்டதில் பவர் விண்டோ லேசாகத் திறந்துகொள்ள மன்மதன் தோட்டத்து முந்திரி வாசம் காரோடு சேர்த்து ஆளைத் தூக்கியது. புதுக்கோட்டை தஞ்சாவூர் வழித்தடத்தில் ஆதனக்கோட்டை மிந்திரி(என் பாட்டியின் பாஷை) ரொம்ப ஃபேமஸ். வழியோரங்களில் மரத்தடியில் கூரை போட்டுக் குடும்பத்துடன் வறுத்துக்கொண்டிருப்பார்கள். கால் கிலோ, அரைக் கிலோ பாக்கெட்டுகளை பார்வையாக அடுக்கியிருப்பார்கள். இறங்கி விலைபேசுபவர்களிடம் ஒன்றிரண்டு கால் அரை கொட்டைகளை கையில் திணித்து தின்று பார்த்துக் கமிட் ஆகச் சொல்வார்கள். கீழ் வருவது ஒரு ஆப்த நண்பனைப் பற்றிய இரு பாராக்கள். கோவிலை மட்டும் படிப்பதாக உத்தேசித்திருந்தால் நான்காவது பாராவிற்கு கண்களையும் மௌஸையும் உருட்டிவிடவும். நட்பையும் படிப்போம் என்றால் தொடர்க.

அழகியநாச்சியம்மன் பிரசாதம் இன்னமும் வயிற்றில் நிறைந்திருக்க வறுத்த முந்திரிக்கொட்டை அனாவசியம் என்று ஆக்ஸிலை அழுத்தினேன். கந்தர்வக்கோட்டை பிபிஸியெல்லில் சேப்பாயியின் வயிற்றுக்கு நிரப்பிக்கொண்டு தஞ்சையில் மூன்றாண்டுகள் இளங்கலை ஒன்றாகப் படித்த மணிவண்ணனை பார்த்துவிட்டு திருக்கோவில் உலாவைத் தொடரலாம் என்று எண்ணினேன். “மாப்ள.. புது பஸ்டாண்ட் பக்கத்துல வந்துடு. நா வண்டியில வர்றேன். குறுக்கால பஸ்ஸ்டாண்ட் உள்ளாற பூந்து வீட்டுக்குப் போயிடலாம். அப்பா கூட ஒன்னிய பார்க்கணும்னு சொன்னாங்க..” படபடவென்று பேசி முடித்தான். புது பஸ்ஸ்டாண்ட் அருகில் ஆரஞ்சு வாங்கிக்கொண்டேன். “உல்லெல்ல்லோ உல்லேலோ” என்று கிங்ஃபிஷர் விளம்பர மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர் போல கண்ணுக்கு ரேபானுடன் இருசக்கரத்தில் வந்து நின்றான். மணியின் கன்னத்தைத் தொட்டு குழந்தைக்குத் திருஷ்டிப் பொட்டு வைக்கலாம். அப்படியொரு கவர்ந்திழுக்கும் காந்தக் கலர். ஒரு மணிநேரம் பல சங்கதிகள் பேசினோம். பல நண்பர்களின் நலம் விசாரித்தோம். “எப்பவுமே இங்க தங்கற மாதிரி வரமாட்டியே!” என்று திட்டிக்கொண்டே வழியனுப்பி வைத்தான்.

ஆப்டோமெட்ரிஸ்ட்டாக ஷங்கர நேத்ராலயாவிலும் மஸ்கட்டிலும் பல வருடங்கள் உழைத்துக் கொட்டிவிட்டு போன வருடத்தில் தஞ்சையில் கண்ணாடிக் கடை விரித்தான். நாளைக்கு பூஜை போட்டு திறக்கவேண்டிய கடையை இன்றே திறக்க வைத்து சங்கீதா கையால் முதல் போணி செய்துவைத்தது ஞாபகம் வந்தது. “மாப்ள.. நல்லா போவுதுல்ல...” என்ற தயக்கமானக் கேள்விக்குக் கையைப் பிடித்துக்கொண்டு “நல்ல ராசியான கை... பிச்சுக்கிட்டுப் போவுது வியாபாரம்” என்று வாயெல்லாம் பல்லாக மகிழ்ந்தான். பரமதிருப்தி. பல்லாண்டுகளாகத் தொடர்சங்கிலியாய்த் தொடரும் நட்பு.

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் இருபுறமும் மரங்களைப் பார்த்துக்கொண்டே பயணத்தீர்களேயானால் இடையிடையே திரும்பும் இடமெல்லாம் ராஜகோபுரம் துருத்திக்கொண்டு தெரியும். பிரம்மசிரகண்டீஸ்வரர் அருள்பாலிக்கும் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் திருவையாறு சாலையிலேயே வலது புறம் ஒளிந்திருக்கும். அக்கோயிலின் இடது புறம் திருப்பூந்துருத்தி சாலையில் வண்டியைச் செலுத்தினேன். அங்கே விடுபட்டுப்போன இரண்டு பாடல் பெற்ற ஸ்தலங்களை தரிசிப்பதாக உத்தேசம். மாலை வெயில் பொன்னிறத்தில் ஒளி வீசி அப்பகுதியெங்கும் தகதக தங்கமாக்கியிருந்தது. பச்சை வயல்களுக்கு நடுவில் ஓடிய சிறு வாய்க்காலை பசும்பொன்னை உருக்கி ஓடவிட்ட பொன் வாய்க்காலாக ஜெகஜோதியாய் மாற்றியிருந்தது. சட்டென்று இறங்கி பச்சையை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொண்டேன்.

திருப்பூந்துருத்தி பார்க்காதவர்கள் ஒருதடவை புஷ்பவனநாதரை தரித்துவிட்டு மேலே வாருங்கள். கூடு விட்டு கூடு பாயும் மணி என்கிற பாத்திரம் வரும் பாலகுமாரனின் திருப்பூந்துருத்தி நாவல் நினைவுக்கு வந்தது. அப்படியே விரைவாக அழுத்திக்கொண்டே சென்றுவிட்டீர்கள் என்றால் திருஆலம்பொழில் என்கிற நாவுக்கரசர் பாடல் பெற்ற திருத்தலத்தை தவறவிட்டுவிடுவீர்கள். திருவாலம்பொழில் அடைந்து ஊரின் எல்லையில் சாலை திரும்பும் வளைவில் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளடங்கி கோயில் இருக்கிறது. எதிர்த்தார்போல ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியவுடன் மேலுக்குச் சட்டையில்லாத ஒருவர் கோயிலினுள் ஓடினார். கோயில் கோபுரம் வேலை நடந்துகொண்டிருக்கிறது. சாரம் கட்டியிருந்தார்கள். நேரே மூலவர் ஆத்மநாதேஸ்வரர் காட்சி தருகிறார். அதற்கு முன்னர் இடதுபுறம் ஞானாம்பிகை சன்னிதி இருக்கிறது. புத்தி ஸ்திரமாகுமாம். கதவு திறந்து “சாமிய பார்த்துக்கோங்க..”ன்னு கற்பூரம் காண்பித்த மெய்க்காவல் சொன்னார். “குருக்கள் வருவாருங்களா?” என்று கேட்டதற்கு “இனிமேதானுங்க வருவாரு..” என்று அசிரத்தையாகப் பதில் சொல்லிவிட்டு அம்பாள் சன்னிதிக்கு துரிதகதியில் ஓடினார். தூண்களில் “சிவ சிவ”. வழக்கம்போல சுவர்களில் சில இடங்களில் எண்ணெய்க் கிறுக்கல். பரீட்சை நம்பர் எழுதி ”பாஸ் போடு” என்று இறைவனுக்கு கட்டளைத் தூது விட்டிருந்தார்கள்.

தரிசித்துவிட்டு கோஷ்டத்திலிருக்கும் விஷ்ணு துர்க்கையையும் மேதா தெக்ஷிணாமூர்த்தியையும் பிரகாரத்தில் தரிசித்தோம். புராணம் சொல்வதற்கு ஆளில்லை. அஷ்டவசுக்களால் வழிபடப்பெற்றது என்பது மட்டும் தெரிந்தது. வசுக்களின் தலைவன் ப்ரபாசனும் சன் டிவி மஹாபாரத ஆறடி உசர ஓஏகே சுந்தர பீஷ்மரும் ஞாபகத்துக்கு வந்தார்கள். நமஸ்கரித்து வெளியே வந்து வந்த வழியே திருவையாற்றுக்குத் திரும்பிவிடலாம் என்று நினைக்கும் போது இன்னொரு பாடல்பெற்ற ஸ்தலம் நினைவுக்கு வந்தது. காட்டுப்பள்ளியுறை கனலே போற்றி!

திருக்காட்டுப்பள்ளி இரண்டு இருக்கிறது. நாகப்பட்டிணம் மார்க்கத்தில் இருப்பது கீழைத் திருக்காட்டுப்பள்ளி. இது மேலை திருக்காட்டுப்பள்ளி. திருக்காட்டுப்பள்ளியில் டீக்கடை பழக்கடை இருக்கும் மெயின்ரோடிலிருந்து வலதுபுறம் திரும்பவேண்டும். ஆறடி ரோட்டில் மூன்றடிக்கு பாரிகேட் வைத்து தொண்டு புரிந்திருந்தார்கள். நேரே ஐந்துநிலை அக்னீஸ்வரஸ்வாமி ராஜகோபுரம் தெரிந்தது. அழகம்மை சமேத தீயாடியப்பர். இருசக்கர வாகனமேறிப் புறப்பட்ட சிவாச்சாரியார் சேப்பாயியைப் பார்த்ததும் வண்டிக்கு ஸ்டாண்ட் போட்டுவிட்டு கோயிலுக்குள் வந்தார்.

நேரே மூலவர் சன்னிதி. நான்கு படி இறங்கி கர்ப்பக்கிரஹத்திற்குள் சென்று தீபாராதனை காண்பித்தார். தீபாராதனை தட்டோடு என் நெஞ்சைப் பார்த்து ஸ்தல புராணம் சொன்னார். “இங்க இருக்கிறது விசேஷமான மூர்த்தி. ஸ்வயம்புத் திருமேனி. அக்னி வந்து பூஜை பண்ணினான். இந்த க்ஷேத்ரத்துக்கே அக்னீஸ்வரம்னு பேரு. சூரியனோட ஒளி லிங்கத்துமேல படும். தெனமும். அதனால . பத்து பன்னெண்டு வருஷம் முன்னாடி கூட சூரியன் நேரே ஸ்வாமி மேலே படறா மாதிரி இருந்தது. இப்போ எதிர்த்தாப்ல நிறையா பெரிய பில்டிங் கட்டினதால சூரியக்கதிர் பகவான் மேலே விழல்லே. கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே காட்டுப்பள்ளியுள்ளான் கழல் சேர்மினேன்னு நாவுக்கரசர் தேவாரத்துல பாடறார். சம்பந்தரும் காட்டுப்பள்ளியுறையானை துதித்தால் அல்லலில்லைங்கிறார். பிரகாரத்துல இருக்கிற யோக குரு ரொம்ப விசேஷமானவர். குரக்காசனத்துல உட்கார்ந்திருக்கார். நவக்கிரஹங்களெல்லாம் சூரியனோட தெசையைப் பார்த்துண்டே இருக்கா.”

வலம் வரும்போது யோக குரு தரிசனம். கையில் சின் முத்திரையோடு ஒரு பக்கமாக சிரசை ஒருக்களித்து நளினமாக தக்கோல தக்ஷிணாமூர்த்திபோல காட்சியளிக்கிறார். பார்த்ததும் மெய்மறந்து போய்விடுவீர்கள். பக்கத்தில் சனகாதி முனிவர்களில்லாமல் ஏகாந்தமாக நமக்கு அருள்பாலிக்கிறார். பிரகார மண்டபத்தில் சுதைச்சிற்பமாகவும் சமீபத்தில் வடித்திருக்கிறார்கள். ஸ்தபதி ஜமாய்த்திருக்கிறார். சிரசை மட்டும் கொஞ்சம் சாய்க்காமல் விட்டுவிட்டார். பார்க்கப் பார்க்கப் பரவசமாயிருக்கிறது. குரு ரசிகர்கள் கட்டாயம் தரிசிக்கவேண்டிய தலம். நெற்றி நிறைய விபூதியுடன் வந்து வண்டியை திருவையாற்றுக்கு கிளப்பினேன்.

பஞ்சநதீஸ்வரர் கோயிலுக்குள் படி தாண்டி உள்ளே நுழையும் போது மணி ஏழரைக்கு மேலிருக்கும். கோயில் அமைதியாக இருந்தது. மயில் மண்டபமும் அதற்கு நேரே சுப்ரமண்யரும் தரிசனம் தந்தார்கள். ம். நீங்கள் நினைப்பது சரி. தன்னாலேயே தி.ஜாவும் மோகமுள்ளும் தியாகைய்யரும் தூணுக்குத் தூண் வந்து மறைந்தார்கள். பஞ்சநதீஸ்வரர் தரிசனம் மனசுக்கு இதமாக இருந்தது. பாணம் லிங்க வடிவில் இல்லாமல் பறவையின் சிறகு விரிந்தது போலிருந்தது. “ஸ்வாமி மணல் லிங்கம். ஸ்வயம்பு. தீண்டாத் திருமேனி. அபிஷேகம் ஆவுடைக்கு மட்டும்தான். நாங்களே தொடமாட்டோம். கோவிலை விட்டு வெளிலே போய்ட்டா திரும்ப கர்ப்பஹரத்துக்கு வரணும்னா குளிச்சுட்டுதான் வரணும். அப்புறம்தான் பாணத்தைத் தொடலாம்..” என்று ஆரத்தி காட்டினார். நிறைவான தரிசனம். ஸ்வாமியின் கருவறைக்குப் பின்னால் திருச்சுற்று வரமுடியாது. மணல் வடிவாக அங்கிருந்துதான் எழுந்தருளினார் என்பது ஐதீகம். நமது கால்தடம் அங்கே படக்கூடாது என்பதற்காக வழியை மறித்திருந்தார்கள். அரைச்சுற்றுக்குப் பிறகு ஸ்வாமி சன்னிதியிலிருந்து அம்பாள் கோயிலுக்குச் சென்றோம்.

தர்மசம்வர்த்தினி அம்மன். “உங்க தாத்தா இங்கேதான் படிச்சார்...” என்று என் பசங்களிடம் சொன்னேன். ”இங்கேயேவா...” என்று கோயிலைக் காட்டினாள் சின்னவள். திமிர் ஜாஸ்தி. ”இல்லே.. திருவையாத்திலே..” என்று சிரித்தேன். அம்மன் கோயிலுக்குள் நுழைவதற்கும் கரெண்ட் கட் ஆவதற்கும் சரியாக இருந்தது. நேரே நின்ற திருக்கோலத்தில் குத்துவிளக்கின் ஒளியில் அற்புதமான தரிசனம். மனசுக்கு இதமாக இருந்தது. “சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த...” என்று மனசுக்குள் ஸ்லோகம் ஓடியது. ”டெய்லி ஆறதா?” என்று குருக்களிடம் கேட்டேன். “இன்னிக்கி என்னமோ இப்படி படுத்தறது. ஜெனரேட்டர் போட்டுடுவா..த்தோ வந்துடும்...”ன்னார். தரிசனம் முடித்துத் திரும்பும்போது மின்சாரம் உடம்புக்கும் கோயிலுக்கும் சேர்த்துக் கிடைத்தது.

தொட்டடுத்து வரும் திருப்பழனம் இன்னும் நான் தரிசிக்காத க்ஷேத்திரம். நேரம் ஆகிவிட்டபடியால் தஞ்சைக்கு விரைந்தோம். பரிசுத்தத்தில் டின்னர். ரோட்டரி சங்க மீட்டிங் நடந்துகொண்டிருந்தது. கசகசவென்று வெளியில் கூட்டம். ரெஸ்டாரெண்ட் ஆளரவம் இல்லாமல் சர்வர்களும் சூப்பர்வைசர்களும் கதை பேசிக்கொண்டு ரெஸ்ட் எடுக்கும் இடமாக இருந்தது. அவர்களின் மாநாட்டைக் கலைத்து ஆர்டர் செய்தோம். சரவணபவன் ரேட். இராத்தங்கல் மன்னார்குடியில். மனசு ஆனந்தத்தில் றெக்கைக் கட்டி பறக்க ஆரம்பித்திருந்தது. அடுத்து மன்னார்குடியில் சந்திக்கிறேன்...

[யாத்திரை தொடரும்....]

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails