Saturday, February 22, 2014

அப்பன் கவிதைகள்

அந்தப் பிராந்தியத்திற்கே அழகூட்டும் அப்பன்ராஜ் சலூனில் ஒரு பிட்டு கவர்ச்சிப் படம் கிடையாது. திரும்பிய பக்கமெல்லாம் பூதம் காட்டாத கண்ணாடி. இளையராஜா அபிமானி. உத்தரத்தில் வேதாளமாய்த் தொங்கும் செட்டில் முப்பொழுதும் ”நெஞ்சுக்குள்ள இன்னாரென்று..” ரேஞ்சுக்கு மெலடி ஓடும். தலைக்குப் பட்டாபிஷேகம் செய்துகொள்ளும் ஞாயிற்றுக்கிழமைகள் கொண்டாட்டமானவை. அன்று வெயிட்டிங் ஸ்டூல்கள் வாசல் வரை நீண்டிருக்கும். Naked eyeயால் பார்த்தாலே ஒன்று இரண்டு என்று விரல் விட்டு எண்ணுமளவிற்கு முடி வளர்ந்திருக்கும் வழுக்கைத் தலையர்கள் கூட மாசம் ஒருமுறை சிரம் சாய்க்க அங்கே வர ப்ரியப்படுமளவிற்கு கஸ்டமர் சர்வீஸ் அப்பனின் பேச்சில்தான்.

திருமலா போல முண்டியடிக்கும் கூட்டமிருந்தாலும் “அஞ்சு நிமிஷமாகும். உட்காருங்க...” என்று சிரிப்பில் ஸ்டூலோடுக் கட்டிப்போட்டுவிடுவார். அவசரம் என்று கிளம்புவர்களை “ஒரு டீ சொல்லட்டா பாஸு?” என்று விருந்தோபசாரம் பண்ணுவார்.

இன்றைக்குப் பொதிகையிலிருந்து கடன் வாங்கி குடியரசுதின நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய ஜெயா ஓடிக்கொண்டிருந்தது. மயிலாட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை என்று எல்லா ஆட்டபாட்டத்திற்கும் பாரதியின் எடுத்தகாரியம் யாவினும் வெற்றியில் “வெற்றி....வெற்றி....” என்று வெற்றிக்குப் பன்ச் கொடுத்து எட்டுத்திக்கும் ஒலிக்கும்படி ட்ரம்ஸ் மேளம் என்று தட்டியெடுத்தார்கள். காலையில் தடதடவென்று வெற்றிமேளம் கேட்பது சுகமாகத்தானிருந்தது.

”பாரதியாரு தானே?”
“ம்...அவருதான்...அப்பன்”
“மியூசிக்கு இல்லைனா கூட வெற்றி..வெற்றின்னு பாட்டை மட்டும் அந்த டெம்ப்போல பாடும் போது அப்படியே நரம்பெல்லாம் முறுக்கிக்குதுல்ல...”

அப்பனிடம் தலையைக் கொடுத்துவிட்டு ஸ்விங் சேரில் உட்கார்ந்திருந்த தாத்தாவிற்கு அஜீரணக் கோளாறு போலிருக்கிறது. பேதி புடுங்கும் கண்களோடு “யப்பா.. வேலையைப் பாருப்பா...” என்று துரிதப்படுத்தினார். ரெண்டாவது சேருக்கு வேலைக்கு வரும் பையன் வரவில்லை. ஒற்றை ஆளாய் சமாளித்துக்கொண்டிருந்தாலும் புன்னகைத்துவிட்டு காடாய் வளர்ந்திருந்த அவர் தலையில் சுதந்திரமாகக் கத்தரியை ஓடவிட்டார்.

”நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி... அமர்க்களமான ஒண்ணு...” கத்தரி பிடித்த கையின் “சிக்..சிக்..சிக்க்”கொலி இசைக்கு நடுவில் என்னிடம் உபரிப் பேச்சு.

ஜெயாவில் அலங்கார வண்டிகள் சாதனைகளைப் பறைசாற்றி அணிவகுத்துக்கொண்டிருந்தன.

ஒன்பது மணிக்கு அஸிஸ்டெண்ட் பையன் மொள்ள உள்ளே வந்தான். ஜீன்ஸில் டிஷர்ட்டில் துள்ளினான். கண்ணில் முதலாளித்தனம் தெரிந்தது. அதற்குள் FIFO வில் இரண்டு பேரை ஸ்விங் சேரில் அமரவைத்துப் போர்த்திப் போர்த்திக் கிராப்படித்துத் தள்ளியிருந்தார். ஏன் லேட்டு என்று அப்பன் கேட்பதற்குள்ளாகவே

“காலேலேர்ந்தே ட்ரை பண்றேன். உங்க மொபைலு ரீச்சே இல்லைண்ணே. சுச்சாஃப் ஆயிருக்கு..”

”இல்லேயாப்பா...”

”இங்க பாருங்க...” டயல் செய்தான். ஸ்பீக்கரில் போட்டான். “நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது” என்று பெண்குரல் கரகரவென்று கேட்டது.
”சரி.. அவருக்குப் பாரு...” என்று ஒரு இளைஞரை சேரில் ஏற்றிவிட்டார். ”ஆஃப் பண்ணி ஆன் பண்ணிப் போடு” என்று மொபைலை நோண்டிக்கொண்டிருந்த ஆசாமி ஐடியா கொடுத்தார்.

எனக்கு முடித்துக்கொண்டு வரும் போது கேட்டேன். “கோவம் வர்றதில்லையா அப்பன்?”. ஹாப்பிடெண்ட் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு “என்னாத்த கோவப்படறது? எதுக்கு கோவப்படறது? நொம்ப பார்த்தோம்னா அல்லாத்துக்கும் கோவப்பட்டுகிட்டுதான் இருக்கணும். வேலைக்காவாது. நா விட்டுடறது...” என்றபோது கத்தரி பிடித்த பக்கிரி சாமியார் மாதிரி தெரிந்தார் அப்பன். அழகாக்கியதற்கு கூலி கொடுத்தேன். வாங்கிக் கல்லாவில் போட்டுக்கொண்டு....

“பாரதியாரு.. பைகவனுக்கருள்வாய்..னு ஒரு பாட்டு எழுதியிருக்காரு.. ரொம்ப நாளிக்கு முன்னாடி படிச்சது. திங்கறதுக்கு வரும் புலியைக் கூட அன்போடு போற்றுவாய்னு ஒரு வரி வரும்...எல்லாமே அது மாதிரிதான்....” என்றதற்கு “நீ கவிதையெல்லாம் எழுதினியே.. அப்பன்.. வீட்ல பரண்ல இருக்கா?” என்று கேட்டேன்.

“இங்கதான் இருக்கு பாருங்க...” என்று இரண்டு டயரிகளை எடுத்துக் கையில் கொடுத்தார். ச்சும்மா புரட்டினேன். நிறைய ஒற்றும் குறில் நெடில்களும் தடுமாறின. ஆனாலும் ஒன்று இழுத்தது. எங்கிருந்தோ இன்ஸ்பயர் ஆகியிருக்கவேண்டும். இருந்தாலும்......

“வீழாமல் வாழ்ந்தேன் என்பது சரித்திரமல்ல.
வீழ்ந்தும் வாழ்ந்தேன் என்பதே சரித்திரம்”

“உங்க கிட்ட தமில் ஃபாண்ட் இருக்கா? இதுமாதிரி ரெண்டு டயரி ஃபுல்லா இருக்கு. ஃப்ரீயா இருக்கும் போது....”

தலையாட்டிக்கொண்டே வந்தேன். ஒருநாள் அப்பன் கவிதைகளை அடிச்சுத் தரணும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails