Wednesday, December 24, 2014

ஆனந்தம்.. பரமானந்தம்....

பட்டுவும் சொர்ணமும் சகோதரிகள். கல்யாணமாகாத பழுத்த முதிர்கன்னிகள். எலும்பும் தோலுமாக இருக்கும் கையில் சிகப்பும் பச்சையுமாக க்ளாஸ் வளையல்கள். எலி வாலாய் பின்னால் தொங்கும் கேசத்திற்கு பேப்பருக்குப் போடும் ரப்பர் பேண்ட். கசங்கிய அழுக்கு புடவை. ”நானொரு அப்ராணி” என்று எழுதி நெற்றியில் ஒட்டிய அகம் காட்டும் முகம். பிதுங்கிய கண்கள். வீட்டில் ”டி”யும் “லு”வும் போட்டு தெலுங்கில் பேசுவார்கள். வீடென்று அதைச் சொல்லிவிட முடியாது. ராம மடத்தில் ஒரு கள்ளிப்பெட்டி சைஸ் கூடு அது. வீடுவீடாக பத்து பாத்திரம் தேய்த்து மிச்சம் மீதி சாப்பிட்டு வீட்டு வேலைகள் செய்து கஷ்ட ஜீவனம் நடந்திவந்தார்கள்.

“திருவையாத்துக்குப் பக்கத்தில அவளுக்கு நெறைய நிலம் நீச்செல்லாம் இருந்துதுடா...” என்று பாட்டி ஆச்சரியமாகச் சொல்வாள். பட்டுக்கு உடம்புக்கு முடியாத காலங்களில் சொர்ணத்தின் பாத்திரம் தேய்க்கும் முறை. சொர்ணத்திற்கும் சிரிப்பிற்கும் விரோதம். யாரும் பல்லைப் பார்க்க முடியாது. எப்போதும் இறுகிய முகத்தில் லிட்டராய்வடியும் சோகம். எப்பவாவது அபூர்வமாகக் மிமீ சிரிப்பு. ”சொர்ணத்துக்கு கல்யாணம் ஆச்சுடா.. பாவம் வுட்டுட்டு ஓடிட்டான்.. கடங்காரப் பாவி...கட்டேல போறவன்...” என்று இன்னொரு நாள் ஊஞ்சலில் படுத்துக்கொண்டே பாட்டி வாய் வலிக்கத் திட்டினாள்.

கிணத்தடியில் கரி போட்டு வெங்கலப்பானை தேய்க்கும் போது “இப்படியாயிடுத்தேடி பட்டு...” என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போவாள் பாட்டி. ”என்னவாச்சு?” என்று கேட்டால் “சொந்தக்காராள்ளாம் இவாளோட சொத்தை ஏமாத்தி எழுதி வாங்கிண்டு தொரத்தி அடிச்சிப்பிட்டா... இல்லேனா சொகுசா மஹாராணி மாதிரி இருக்கவேண்டியவடா.... ” என்று அங்கலாய்த்தாள் பாட்டி. கண்ணுக்குத் தெரியாத அவர்களது அயோக்கிய சொந்தக்காரர்களை ஈவிரக்கமில்லாமல் சுட்டுத்தள்ள வேண்டும் என்று கொதித்ததுண்டு. வருடத்தில் ஒரு வாரம் சகோதரிகள் இருவரும் வேலையில் கட்டாய விடுப்பு எடுத்துக்கொள்வார்கள். ஜனவரிகளில் கிணத்தடியில் பாட்டி உட்கார்ந்து சில சமயம் சாமான் தேய்க்கும் போது ”பட்டு வரலை?” என்ற கேள்விக்கு “அவாள்ளாம் த்யாகராஜ ஆராதனைக்குப் போயிருக்காடா.. ஒரு வாரம்.. அவாளுக்கு வேண்டப்பட்டவாள்லாம் இருக்கா... சாப்பாடெல்லாம் தடபுடலா இருக்கும்... பாவம்... வேறென்ன சுகத்தைக் கண்டதுகள்.. ” என்ற பாட்டியிடம் “சொந்தக்காராள்ளாம் அங்கே வருவாளா?” என்று மேல் ஸ்தாயியில் கேட்டேன். பதிலில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் மன்னை தேரடியில் எதேச்சையாகப் பட்டுவைப் பார்த்தேன். கால்களின் உத்தரவில் நடந்து சென்றுகொண்டிருந்தாள். நண்பனின் சைக்கிளில் அரை வட்டமடித்துத் திரும்பி “சொர்ணம்க்கா எப்படியிருக்கா?” என்று வழி மறித்துக் கேட்டேன். “சின்னதம்பியா?” என்று சடுதியில் அடையாளம் கண்டு சிரித்தாள். பரவலாகப் பற்களைத் தொலைத்திருந்தாள். “எப்படியிருக்கே? பவானி நீலாவெல்லாம் சௌக்கியமா?” என்று கைகளைப் பிடித்துக்கொண்டு சித்திகளை விஜாரித்தாள். எண்ணெய் காணாத தலை நடராஜப் பெருமானின் ஜடாமுடி போல பறந்தது. மனசுக்குள் பச்சாதாபம் சுனாமி அலை போல எழுந்தது.

சென்னைக்குத் திரும்பும் அவசரத்தில் பர்ஸுக்குள் கையை விட்டு அகப்பட்டதை எடுத்து நீட்டினேன். சில சலவை காந்திகள் என் கையில் இருந்தார்கள். வேணும் வேண்டாம்னு சொல்லாமல் அமைதியாக வாங்கிக்கொண்டாள். பட்டுவின் சுருக்குப் பையைத் தேடினேன். சிகப்புக் கலரில் இடுப்பிலிருந்து உருவி பணம் அதற்குள் போனது. மோகன் லாட்ஜ் பக்கத்திலிருந்து நடந்து வந்த லோடுமேன் பட்டு கிழவிக்குப் பணம் கொடுக்கும் என்னை வித்தியாசமாகப் பார்த்தார். ”வரேன்...” என்று பட்டுவிடம் ஒரு சிரிப்பை உதிர்த்து சைக்கிளை மிதித்தேன். ஆட்டோகிராஃப் சேரனைப் போல பட்டுவும், பாட்டியும், கிணற்றடியும், அரிசி உப்புமா கிண்டின வெங்கலப்பானையும் என்னுள் உறங்கிக்கொண்டிருந்த பால்ய பருவ நினைவுகளை ஒவ்வொரு மிதிக்கும் குழிக் கரண்டியால் கிண்டியெடுத்து வெளியில் தள்ளின. நிற்க.

இந்த மாதிரி ஒரு பட்டுவை சென்னையில் முந்தாநாள் பார்த்தேன். ஆனால் சுத்தமான ஆடைகளில் சிரித்த முகத்துடன் “வாங்க..” என்று கைகூப்பி வரவேற்ற அந்த பாட்டி பட்டுவை கொண்டு வந்து கண்முன் நிறுத்தினாள். ஆனந்தம் என்கிற முதியோர் இல்லம். நண்பர் Vinoth Davey மற்றும் அவரது மனைவி Priya Davey இருவருக்கும் பரிச்சயமான முதியோர் இல்லம். "எவ்ளோ வேணா டொனேட் பண்ணலாம்” என்றனர் இத் தம்பதியினர். அம்பத்தூரில் கடல் போன்ற ஏரியில் ஆயிரக்கணக்கான(?!) ஜனங்கள் வாக்கிங் செல்லும் பார்க்கைத் தாண்டி கள்ளிக்குப்பம் பகுதிக்குச் சென்றோம்.

”சௌக்கியமா?” என்று எதிரில் தென்பட்ட பெரியவரிடம் நலம் விசாரித்துக்கொண்டே நேரே சமையல் அறைக்கு அழைத்துச்சென்றார் வினோத். ஒரு டைனிங் ஹாலைத் தாண்டி அந்த சமையலறை இருந்தது. “நான் டிவியெஸ்லேர்ந்து ரிட்டயர்ட் ஆனவன்... சூடா காஃபி சாபிடறேளா?” என்று கைகூப்பி அறிமுகப்படுத்திக்கொண்டார் தோளில் காசித்துண்டோடு சட்டையில்லாத தாத்தா ஒருவர். “இவர்தான் இங்கே சமையல்...” என்று பின்னாலிருந்து வினோத். சமையலறையும் டைனிங் ஹாலும் சுத்தமான சுத்தம். ”ட்ரஸ்ட்டி வந்துருக்கார்...கொஞ்சம் பார்த்துட்டு வந்துடறேன்...” என்று அவரைப் பார்க்கச் சென்றார் சமையல் தாத்தா. சமையலறை போர்டில் “இன்னார் நினைவாக இன்று உணவு பரிமாறப்படுகிறது” என்று உபயதாரர் பெயர் எழுதியிருந்தது. காஃபி, ஸ்நாக்ஸ், மதிய சாப்பாடு, டின்னர் என்று வயிற்றுக்கு வஞ்சனையில்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

இரண்டு மாடிகள். மேன்ஷன் போன்ற அமைப்பு. நடுவே பெரிய துளசி மாடம். இருபுறமும் அறைகள். ஒவ்வொரு அறையிலும் ஆறேழு படுக்கைகள். கோடு போட்ட நோட்டில் ”ராம..ராம..” எழுதிக்கொண்டிருந்த பாட்டி கண் சுருக்கி என்னைப் பார்த்தது. சதமடிக்க இன்னும் பத்து வருஷம் இருக்கலாம். பக்கத்தில் வாக்கர் நின்றிருந்தது. அவருக்குத் துணையாக இன்னொரு பாட்டி தேமேன்னு உட்கார்ந்திருந்தது மனசுக்கு ஏனோ சங்கடமாக இருந்தது. இவர்களுடைய பிள்ளைகள் யார்? பேரன் பேத்திகள் என்ன செய்கிறார்கள்? இந்த இடம் இம்முதியவர்களுக்குச் சந்தோஷமளிக்கிறதா? குடும்பத்திற்குச் சுமை என்று தன்னைச் சுமந்தவர்களை இங்கே கொண்டு வந்து தள்ளிவிட்டார்களா? நடமாட முடியாமல் மொத்தமாகக் கட்டிலில் சாய்ந்து விட்டால் இவர்களுக்கு யார் கதி? இப்படி தவிக்கவிட்டு இவர்களுடைய சொந்தகங்களால் தினமும் சோறு தின்ன முடிகிறதா? கேள்விச் சிலந்திகள் மூளைக்குள் ராட்சஷ வலைப் பின்னிக்கொண்டிருந்தன.

“ஃபார்ம் வாங்கிட்டீங்களா?” என்று சிந்தனையைக் கலைத்து ஒரு பாட்டி உதவிக்கு ஓடி வந்தார். அச்சு அசல் என்னுடைய சாரதாபாட்டி மாதிரியே தெரிந்தது. லேசாக கூன். “கொண்டு வரேன்னு இன்னொருத்தங்க போயிருக்காங்க...” என்று பதிலளித்துவிட்டு தாத்தா பாட்டிகளைக் காணச் சென்றேன். அறையெங்கும் வயோதிகர்கள். முதல் மாடியில் படியருகே இருந்த அறையிலிருந்து வெளியே வந்தவர் தும்பைப்பூவாய் வெளுத்த வேஷ்டியில் இருந்தார். சட்டையில்லை. முப்பது நாள் வெண் தாடி. பொக்கை வாயால் சிரித்துக்கொண்டே கும்பிட்டார். கூப்பிய கையைப் பிடித்துக்கொண்டேன். அவரது பேரனோ மகனோ நினைவுக்கு வந்திருப்பானோ? மீண்டும் அவருடைய முகம் பார்க்க மனசு வரவில்லை. பகவானே! எனக்குள் உதறியது.

“உள்ள போகலாம்...” வினோத் ஒரு அறைக்குள் கூப்பிட்டார். சிலர் படுக்கையில் படுத்திருந்தார்கள். படுக்கைக்கு எதிரே ஷெல்ஃபில் டானிக்குகள், மாத்திரை டப்பாக்கள். சிரமப்படுத்த மனசில்லை. ”வேண்டாம்...” என்று காரிடாரில் சுற்றி வந்தேன். வயோதிகம் எவ்வளவு கொடுமையானது. வானம் தெரியும்படி இருந்த ஒரு இடத்தில் வரிசையாகச் சேர்கள் போட்டிருந்தார்கள். அதில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் இருகை சேர்த்து இடுக்கு வழியாக சூரியனைப் பார்த்து வந்தனம் செய்துகொண்டிருந்தார். அதிலென்ன ஆச்சரியம்? பாவம். சூரியன் எப்பவோ அஸ்தமித்துவிட்டான். அவரைச் சற்று நெருங்கி உற்றுப் பார்த்தேன். கண்ணிரண்டும் பொட்டாகச் சுருங்கி பெரிய ஃபுல்ஸ்டாப் மாதிரி இருந்தது. அருகிலிருந்த பாட்டி எவ்வித உணர்வும் முகத்தில் காட்டாமல் அமர்ந்திருந்தார். சிரித்துப்பார்த்தேன். ஏதோ சிந்தனை. வீட்டார் மேல் கோபமோ? ஈஸ்வரா காப்பாத்து.

”ஃபார்ம் வந்திடிச்சு...” கூப்பிட்டார்கள். உணவருந்தும் அறையில் உட்கார்ந்து பூர்த்தி செய்தேன். பர்ஸைப் பிரித்து எடுத்துக் கொடுத்தேன். ”ரசீது நாளைக்கி...” என்று பாட்டி இழுத்தார்கள். “பரவாயில்லை.. மெதுவா ஆகட்டும்...” என்று சொல்லிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானேன். “கீழ ப்ரேயர் ஹால் பார்த்துட்டு போகலாம்... மேல் மாடியில டிவி கூட இருக்கு..” என்றார் வினோத். காரிடார் கடந்து செல்கையில் லைப்ரரி இருந்தது. ராக் ராக்காய் நிறைய புஸ்தகங்கள். ஆர்வமிக்க தாத்தா ஒருவர் தலையை கவிழ்த்து புஸ்தகத்தில் மூழ்கியிருந்தார். அதையடுத்து டிஸ்பென்ஸரி. டிடிகே குழுமம் நன்கொடை. பரிசுத்தமாக இருந்தது. சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன் டாக்டர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

யூனிஃபார்மோடு புஸ்தகப் பை சுமந்து வந்த அப்பகுதி சிறுவர்களுக்கு ட்யூஷன் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார் ஒரு தாத்தா. கடந்து வந்ததும் ப்ரேயர் ஹால். தெய்வங்களின் திருவுருவப்படங்களுக்கு மாலையிட்டிருந்தார்கள். யாரோ ஒரு பாட்டி நிதானமாக ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்துக்கொண்டிருந்தார்கள். நானும் கும்பிட்டுக்கொண்டேன். இல்லத்தின் பெயர் ஆனந்தம். தாத்தா பாட்டிகள் நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். ஆனந்தமாகத்தான் இருப்பார்கள் என்று நம்புகிறேன். என்னாலான உபகாரம் செய்ததில் மனசுக்கு நிறைவாக இருந்தது.

“போய்ட்டு வாங்கோ...” ஆரம்பத்தில் வரவேற்ற பாட்டி மீண்டும் வாசல் வரை வந்து கைகூப்பி விடையளித்தார். ஒட்டுமொத்தமாக இல்லத்தின் அனைத்து பெரியவர்களையும் பார்க்கமுடியவில்லை. பார்த்திருந்தால் ரெண்டு வார்த்தை பேசியிருந்தால் எவ்வளவு பட்டுவோ எவ்வளவு சொர்ணமோ.

ஓவியர் கோபுலு தன் உபயமாகச் சிரித்த முகத்துடனிருக்கும் தாத்தா பாட்டி படத்தை சின்னமாக வரைந்து கொடுத்திருக்கிறார்.
உங்களுக்கும் நிறைவளிக்க.. கள்ளிக்குப்பம்.. ஆனந்தம்-முதியோர் இல்லம்... மேலதிக விபரங்கள் இங்கே http://www.anandamoldagehome.org/
‪#‎பிறர்க்கு_உதவுதல்_ஆனந்தமே‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails