Thursday, November 27, 2014

வீல் சேர்

பரபரப்பான மாலை. மௌண்ட் ரோடில் இம்மி பிசகாமல் வண்டி ஓட்டவேண்டிய கட்டாயம். மென்னியை முறிக்கும் ட்ராஃபிக். காலை அகட்டி ப்ளாட்ஃபாரமோரம் நின்றாலும் சந்து கிடைத்த கேப்பில் ஆட்டோகாரர் நுழைந்துவிடுவார். சாந்தி, தேவியெல்லாம் தாண்டிய திருப்பம். அஸெம்பிளியாகப் பிறந்து ஹாஸ்பிடலாக உருமாறியக் கட்டிடத்தின் எதிர் கரை. ”அப்டி ஓரமா நில்லுங்க.. ரொம்ப நாளி நின்னா டோ பண்ணிட்டு போயிருவேன்...” கண்டிக்கும் சார்ஜெண்ட். சர்ஜிகல் கடைகளின் மும்முரமான வியாபார நேரம்.

“வீல் சேர் ஒண்ணு வேணும்.”

“இதோ இங்க இருக்கு பாருங்க.. இப்படியா? இல்ல வேற மாடலா?”

“இது ஓகே.. வேற என்னவெல்லாம் மாடல் இருக்கு?”

“ஆள் எப்படி இருப்பாங்க..”

“ஒல்லியாதான் இருப்பாங்க.. ஆனா பெரிய வீல் வச்சது வேணாம்...”

“இருங்க கொண்டாரேன்..”

அவர் கொண்டு வருவதற்குள்...
கார்வண்ணமாக இருந்தார். வயது: ஐம்பதுகளின் கடைசியில் இருப்பார். முன் பக்கம் பளபளப்பாகச் சொட்டை விழுந்திருந்தது. அரைவாசி மீதமிருந்த பாகத்தில் முளைவிட்ட முன்னூறு மயிர்களை நாலாபக்கமும் பரவவிட்டு கபாலத்தைக் கவனமாக மூடியிருந்தார். சிரித்த முகம். முன் காலில் தையல் போட்ட கறுப்பு ஷூ. சலவை செய்த ஷர்ட் பேண்ட். இதோ வந்துவிட்டார்.

“ம்.. இதைப் பாருங்க.. சின்ன வீலு. காத்தெல்லாம் அடிக்க வேண்டாம். இம்போர்டட். மலேசியா ப்ராண்டு.”

“ஸ்டாப்பர் இருக்கா?”

“ம்.. பின்னால பிடிச்சு.. இதோ.. இங்கப் பாருங்க.. இப்படி அழுத்தினா வீல்ல ப்ரேக் பிடிச்சுடும்.”

“இதை எப்படி மடக்குவீங்க?”

“பின்னால இருக்கிற இந்த லிவரை அழுத்தினீங்கன்னா... முதுகு சாயிற பக்கம் பின்பக்கம் கவுந்துடும். அப்புறம் உட்கார்ற இடத்துல நடுப்பற கீழே அழுத்தினா ரெண்டு கையும் உள்பக்கம் மடங்கிடும். அப்படியே மடிச்சுத் தூக்கி கார்ல, பஸ்ல, ஃப்ளைட்லன்னு எங்க வேணா தூக்கிக்கிட்டுப் போவலாம். எட்டு கிலோ தான் மொத்த வெயிட்டு...இதோ இப்படி ஒத்தைக் கையால தூக்கலாம்.. ”

கிட்டத்தட்ட அசராமல் அரை மணி நேரம் வீல் சேரைப் பற்றி பிரசங்கம் செய்தார். இடையிடையே யாருக்கு வாங்குறீங்க? கொஞ்சமாவது நிப்பாங்களா? எவ்ளோ தூரம் தள்ளணும்? அடிக்கடி வெளியில கூட்டிக்கிட்டுப் போவீங்களா? டாய்லெட்டு எந்திரிச்சு போவ முடியுமா? இல்லேன்னா கம்மோடு வச்சுத் தரட்டா? போன்ற தேர்வு செய்வதற்கு ஒத்தாசையானப் பல கேள்விகள்.

“கைப்பிடியில ஏதோ பெயிண்டு போன மாதிரி இருக்கே. பரவாயில்லையா?”

“சரியாத்தான் இருக்கு. டெஸ்ட் பண்ணி எடுத்தாந்தேன்... “

“வேற பீஸு இல்லையா?”

“சரி.. நீங்களும் கூட வாங்க.. பார்க்கலாம்...”

பல சைஸ் அட்டை பெட்டிகள் கோபுரமாய் அடுக்கியிருந்த ஸ்டோர் ரூமில் இன்னொரு வீல்சேர் பாக்கெட்டைப் பிரித்தார். நிமிர்த்தி உட்காரவைத்தார். கைப்பிடி சரியாக உட்கார அடம்பிடித்தது. டக்டக்கென்று அசைத்தார். ஊஹும்.

“சொன்னேன்ல.. அது நல்ல பீஸு.. ஒரு பொட்டு பெயிண்டு போனா பரவாயில்லை... இதுல கைப்பிடியே நிக்க மாட்டேங்குது.. உருவிடுச்சுன்னா?”

”சரி.. அதையே எடுத்துக்கறேன்..”

மீண்டும் ஒருமுறை வீல்சேரை டெஸ்ட் செய்தார். பில் போட்டார்.

“கார்ல வந்தீங்களா?”

”ஆமாங்க..”

”கொண்டு வந்து தரட்டுங்களா?”

“இல்ல பரவாயில்லை... நானே தூக்கிட்டு போறேன்...”

“கூடிய சீக்கிரம் எந்திரிச்சு நடப்பாங்க.. கவலைப்படாதீங்க...”

திரும்பிப்பார்த்தேன்.

சிரித்தார். கடைக்குள்ளே திரும்பினார். அப்போதுதான் கவனித்தேன்.
வலதுகாலை லேசாக இழுத்துக்கொண்டு நடந்தார்.

ஆண்டவன் அதற்குமேல் அவரைச் சோதிக்கமாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails