Wednesday, September 17, 2014

ஹூய்...ஹூய்...

விடுமுறை நாட்களில் அவர் ரொம்ப பிஸி. வாரநாட்களில் ஐயப்பன் கோயில் காலை ஒன்பது மணிக்கே காற்று வாங்கும். அவரை ஃப்ரீயாக்கிப் பக்தர்கள் வேலைக்குப் பறந்திருப்பார்கள். பெரிய கூட்டமிராது. ரிட்டயர்ட் ஆன தாத்தாக்களும், பையன் மாட்டுப்பெண்ணை ஆஃபிஸுக்கும் பேரன் பேத்திகளை ஸ்கூலுக்கும் கல்லூரிக்கும் அனுப்பிய சில மாமியார்களும் சன்னிதிக்கு சன்னிதி நின்று ஸ்வாமியோடு மனசு விட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். 

பொதுவாகப் பத்தரைக்கு உச்சிகாலம் மணி அடித்துவிடுவார்கள். அன்றைக்கு பத்தரை மணி. ஆஃபிஸுக்கு லேட். உச்சிகாலம் ஆகிக்கொண்டிருக்கிறது. சன்னிதி கதவு சார்த்தியிருந்தார்கள். கண்ணை மூடி “பூதநாத சதானந்த....” மனசுக்குள் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன். இடது பக்கத்திலிருந்து “ஹூய்..ஹூய்..” என்று மூச்சு இழுபட்டு இழுபட்டு ஒரு சிரிப்பொலி. தலையைத் திருப்பினேன். 

ஐயப்பனுக்கு நேரே ஓடு வேய்ந்த உத்தரத்தில் கட்டிய கண்டாமணியின் கயிற்றைப் பிடித்து தொங்கிக்கொண்டு ஒரு ஆறடி சிறுவன். கசங்கிய அழுக்கு பனியன். காலரில்லாதது. பனியனை டக்கின் செய்த அரக்கு பேண்ட். பதினெட்டு படிக்குக் கீழே இருக்கும் ஒரு அம்மணியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான். அம்மா போலிருக்கிறது. கவலையில் தோய்ந்த முகம். ”பகவானே காப்பாத்து...” தோரணையில் கையிரண்டையும் நீட்டி வேண்டிக்கொண்டிருந்தார். “உஷ்....” என்று வாயில் கைவைத்து மிரட்டிய கோயில் ஊழியருக்கும் அவனிடமிருந்து ஒரு “ஹூய்.. ஹூய்...” கிளம்பியது.

இன்னும் சன்னிதி திறக்கவில்லை. நானும் அவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். என்னை ஊடுருவிப் பார்த்தான். உடனே எனக்கும் ஒரு “ஹூய்.. ஹூய்...”. ஸ்நேகமாய் பல்லைக் காட்டினேன். அவனுக்குள் குஷி பீறிட்டது. மீண்டும் உத்வேகமான “ஹூய்...ஹூய்..”. கோயில் ஊழியர் “ஏன்டா?” என்ற உக்கிரமானப் பார்வையை என் மீது வீசினார். நான் மெலிதான புன்னகையோடு ”சத்தம் போடாதே” என்று வாய்மீது விரல் வைத்து சைகை செய்தேன். அவனும் கண்ணாடி போல அதையே எனக்குச் செய்தான்.

திரும்பவும் தலையை இறக்கி பாவமாக அம்மாவைப் பார்த்தான். இம்முறை சப்தம் எழுப்பவில்லை. சன்னதிக் கதவு திறந்தது. சந்தன அலங்காரத்தில் சிரித்தான் ஐயப்பன். மணியின் நாக்கு அறுந்து கீழே விழும்படி அசுரத்தனமாக மணியடித்தான் அந்தப் பையன். விபூதி சந்தனம் வாங்கிக்கொள்ளும் போது நெருங்கி வந்து ஈஷிக்கொண்டான். செல்லமாக இடித்தான். ஒரு ”ஹூய்..ஹூய்..”. வாய் சிரித்தாலும் மனசு பாரமாக இருந்தது. பள்ளிக்குச் சென்றால் பத்தாவதில் இருப்பான்.

என் கூடவே ஒட்டிக்கொண்டு படியிறங்கினான். மஹிஷாசுரமர்த்தினியிடம் குங்குமம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். அம்மாவின் கைக்குள் கையை விட்டு ’L’ பெண்டாக்கி மடக்கியிருந்தான். குழந்தைத்தனமான சிரிப்பு. அந்த தாய்க்குதான் எவ்வளவு வலி. விதியென்று நினைத்து லேசில் விடமுடியுமா? கண்ணெதிரே அக்கம்பக்கம் சிட்டாய் பறக்கும் சிறுவர்களைப் பார்க்கும் போது எப்படியிருக்கும்?

“குடும்மா.... “ அம்மா கையிலிருந்து பொங்கல் பிரசாதத்தை பிடிங்கி வாயில் அடைத்துக்கொண்டான். வீதியில் கைகோர்த்து நடந்து போனார்கள். போன வாரத்தில் பார்த்தது. ஆறடியில் கச்சலான பசங்களை எங்கு பார்த்தாலும் அவன் நினைப்பு முட்டிக்கொண்டு வருகிறது. ஒரு நொடி மௌனமும் சோகமும் கூடவே கசிகிறது. ஐயப்பா காப்பாத்து!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails