Wednesday, September 17, 2014

கணபதி முனி - பாகம் 12 : காவ்ய கண்டர்

கணபதிக்கு அம்பிகா தத்தரை வாரிவிட லட்டான வாய்ப்பு கிடைத்தது. தத்தர் இலக்கணப் பிழையுடன் பாடிவிட்டார். கணீரென்று ஒரு ஸ்லோகத்தை ஆரம்பித்தார் கணபதி.

”அமிர்தமான பொருளைக் கண்டு நகைக்கிறது உமது கவிதை. தேனைக் குறை சொல்லி அதை உண்ட அதரங்களைப் புகழ்கிறது உமது வாய். தாராவின் புகழ் பாடிக்கொண்டிருப்பதால் அவளுக்கு தனது மேனியில் பாதியினை அளித்த உமையொருபாகனை மறந்தீரோ?” என்று அம்பிகா தத்தருக்கு எசக்கவிதை பாடினார் கணபதி.

அவையில் ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. அந்தப் பண்டிதக் குழாம் அசைவற்று அமர்ந்திருந்தது. அம்பிகா தத்தர் சம்ஸ்க்ருதத்தில் பெரிய ஆள். ஊர் உலகம் மெச்சும் அறிஞர். மஹா பண்டிதர். இன்று அவரை எதிர்த்து கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு ஒரு இளம் பிள்ளை வார்த்தை விளையாடுகிறது. இதுவரை இப்படியாகப்பட்ட சிறுவர்களிடம் அவர் உரையாடியதில்லை. அதீதமாக உணர்ச்சிவசப்பட்டார். கண்களில் கோபம் கொப்பளிக்க கத்தினார்.

“ஓ மதம் பிடித்த யானையே! நீ அர்த்தமில்லாமல் பிளிறி தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை உசுப்புகிறாய். அது எழுந்தால் உன் மத்தகஜத்தில் ஏறி உன்னை அடித்துக் கொன்று உன் மூளையைத் தின்றுவிடும்.” கணபதியின் பெயருக்கு இணையாக மதம் பிடித்த யானையே என்று சொற்களைப் போட்டுக் கன்னாபின்னாவென்று ஏசினார். அவருடைய ஆங்காரத்தில் ஹரிசபையில் கடும் உஷ்ணம் நிலவியது.

இப்போது திட்டிப் பாடிய இந்தத் துக்கடாக் கவிதையிலும் தவறு செய்தார் அம்பிகா தத்தர். கோபம் அறிவை மறைத்தது. கணபதி இந்த இலக்கணப் பிழையையும் சுட்டிக் காட்டித் தன் பங்கிற்கு மீண்டும்

“ஓ மாமரத்தின் மீதமர்ந்த காகமே! வாயைச் சற்று மூடிக்கொண்டிரு. அப்போதுதான் உன்னைக் குயில் என்று இவ்வுலகம் போற்றும்” என்று பதில் கவிதையால் அடித்தார். ”வாயைத் திறக்காதே. திறந்தால் உன்னுடைய குட்டு வெளிப்பட்டு விடும்” என்கிற அர்த்தம் தொணிக்க பாடினார் கணபதி.

அம்பிகா தத்தரின் கோபம் சுறுசுறுவென்று உச்சிக்கு ஏறியது. எழுந்து நின்று கோபாவேசமாகத் தூண்கள் கிடுகிடுக்க

“ஏ மின்மினிப் பூச்சியே, இரவில் தானே நீ ஒளிர்வாய். பகலில் இங்கென்ன உனக்கு வேலை?” என்று கணபதியைப் பார்த்து வார்த்தைகளால் சுட்டார்.

அரங்கம் அதிர்ந்தது. யானை சிங்கம் என்று விலங்குகளை உதாரணம் காட்டி சண்டையிட்டவர்கள் இப்போது புழு பூச்சிக்கு இறங்கியிருந்தார்கள். இதற்கு கணபதியின் பதில் என்ன என்று அவையோர் அவர் அமர்ந்திருக்கும் திக்கைப் பார்த்தார்கள்.

”அட விளக்கே! கூண்டு வீட்டிற்குள்ளே மட்டும்தானே நீ ப்ரகாஸமாய் எரிவாய். வெளியே வந்தால் வீசும்காற்றினால் படபடக்கப்பட்டு கணநேரத்தில் அணைந்தொழிவாயே!” என்று அழுத்தம் திருத்தமாக இகழ்ந்தார்.

இருவரும் வாய்ச்சண்டையை விடுவதாகயில்லை. கணபதியை அம்பிகா தத்தரிடம் அறிமுகப்படுத்திய சிதிகண்டர் பொறுமை இழந்தார். விலுக்கென்று எழுந்தார். ” கவி சிரேஷ்டர்களே! இந்தச் சண்டையை இதோடு நிறுத்துங்கள். உங்களுடைய குலத்தைப் பற்றிக் கேலியாக ஆளுக்கொரு கவி புனைந்து இதை நிறுத்திக்கொள்ளுங்கள்..” என்று வேண்டுகோள் விடுத்தார்.

அம்பிகா தத்தர் முனுக்கென்று ஆரம்பித்தார். “தென்னகத்து அந்தணர்களெல்லாம் கள் குடித்து பெண்களின் மடியில் வீழுந்து கிடப்பவர்கள்..” என்று எக்காளமிட்டார். பதிலுக்கு கணபதி “வங்காளத்து கௌடர்களெல்லாம் மீனுக்கு விலையாக காசையோ உயிரையோ எதாகிலும் தாரை வார்ப்பார்கள்” என்று கவி படைத்தார். மீனை வைத்துக் கவுடர்களை பகடியாடினதும் அம்பிகா தத்தருக்கு பிடித்துப் போயிற்று.

“கணபதி! நீ அசாத்திய திறமைசாலியப்பா. உன்னுடைய அருவிபோல் பொழியும் கவிகளைக் கேட்டு இந்த “ஹரிசபை” இவ்வளவு நேரம் கட்டுண்டு கடந்தது. எதுகையும் மோனையும் உன் ஸ்லோகங்களில் துள்ளி விளையாடுகிறது. பலவித பாவங்களையும் ரசங்களையும் உன் கவிதையில் முடிந்து எங்களுக்கு ரசிக்கத் தருகிறாய். காதுக்கு இனிமையாகவும் மனசுக்கு இதமாகவும் புத்திக்கு அர்த்தபுஷ்டியுடனும் இருக்கிறது. உன்னைப் பெருமைப் படுத்த இச்சபை பெருமையடைகிறது” என்று பேசினார். கூட்டத்தின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

அவை நடுவில் அகண்ட தீபம் ஏற்றினார்கள். கணபதிக்கு ஆளுயர மாலை அணிவித்தார்கள். மங்கள வாத்தியங்கள் முழங்கின. ஹரிசபையின் தலைவர் “காவ்ய கண்ட” என்ற பட்டத்தை வழங்குவதாக அறிவித்தார். அனைவரும் அதை ஆமோதித்து “வாழ்க! வாழ்க!!” கோஷமிட்டார்கள். ஹரிசபை மங்களகரமாக இருந்தது. கணபதிக்குக் கிடைத்தப் பட்டம் தங்களுக்குக் கிடைத்தது போலவே அங்கு குழுமியிருந்த பண்டிதர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக்கொண்டார்கள். காவ்ய கண்டர் என்பதற்கு தனது கண்டக் (தொண்டை) குழியில் கவிதையை எப்போதும் தேக்கி வைத்திருப்பவர் என்று பெயர். அதாவது எந்தப் பொருளிலும் விரல் சொடுக்குவதற்குள் கவி பாடும் திறமை படைத்தவர்.

”பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமிர்தத்தைக் காட்டிலும் உன்னதமாக கவிதை என்கிற வித்தை மனிதகுலத்துக்கு வாய்த்தது. இறையருள் மிஞ்சி நிற்கும் ஒருவரால்தான் இப்புவியில் அதில் சிறந்துவிளங்க முடியும். அப்படி விளங்குபவர்கள் மேன்மையானவர்கள். நவத்வீபா ஜனங்களாகிய நாங்கள் உங்களை அப்படிப்பட்ட மேன்மை பொருந்திய உத்தமகவியாக தேர்ந்தெடுக்கிறோம். விசாகப்பட்டிணம் கலுவராயி கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீமத் கணபதி சாஸ்திரியாகிய நீங்கள் காளிதாஸன் போன்ற ஆதிகாலத்துக் கவிகள் அடைந்த புகழடைந்துச் சிறந்து விளங்குவீர்கள் என்று வாழ்த்தி “காவ்ய கண்ட” என்கிற உன்னத பட்டத்தை இந்நாளில் உங்களுக்கு அளிக்கிறோம்” என்று எழுதி பட்டயம் வழங்கினார்கள்.

கணபதியை அவைக்கு அழைத்து வந்த சிதிகண்டர் பூரித்துப்போனார். கூட்டத்தின் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரம் பிடித்தது. அம்பிகா தத்தர் வாயெல்லாம் பல்லாக நின்றுகொண்டிருந்தார். கணபதி தவ சிரேஷ்டர். இத்தகைய புகழ்ச்சிக்கும் இதற்கு முன்னர் அம்பிகா தத்தர் தொடுத்த இகழ்ச்சிக்கும் மனதைச் சாயவிடாதவர்.

இந்தச் சான்றிதழை மந்தேசா ராஜாவிடம் அனுப்பி தனது தந்தை நரசிம்ம சாஸ்திரிக்கு அனுப்பப் பணித்தார்.
நவத்வீபாவிலிருந்து வெளியே வரும்போது அலங்கார வாசலில் ஒரு குரல் கேட்டது.
”என்னோடு வருவீர்களா காவ்ய கண்டரே?”

திரும்பிப் பார்த்த கணபதி முனிக்கு ஆச்சரியம். நவத்வீபாவில் முதன்முதலில் தனக்கு ஒரு நாள் இரவு அறையில் தங்குவதற்கு ஏற்பாடளித்த குலபின்யா நின்றுகொண்டிருந்தார்.

“எங்கே?”

“முர்ஷிதாபாத். நான் அங்கே ராஜாவின் தர்பாரில் முதன்மைப் பண்டிதனாயிருக்கிறேன். நீங்கள் அங்கே வந்து எங்களையெல்லாம் பெருமைப்படுத்தவேண்டும்” என்று வேண்டினார்.

முர்ஷிதாபாத்தில் அரசன் வெகுவிமரிசையாக பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்றான். உற்சாகமான பண்டிதர்கள் கணபதியுடன் சம்ஸ்க்ருத காவியங்கள் பேசிக் களித்தார்கள். மன்னன் மேலும் சிறிது நாட்கள் கணபதியை அரண்மனையில் தங்க ஏற்பாடு செய்தான். ஒரு வருட காலமாக தவமியற்றாமல் இருந்ததால் கணபதி சீக்கிரமாக அங்கிருந்து கிளம்ப முடிவுசெய்தார். அங்கிருந்து கிளம்பி வைத்தியாத் சென்றார். அங்கு நிலவிய தபோ சூழ்நிலையில் உடனே ”நமசிவாய” என்ற சிவபஞ்சாட்சர ஜபத்தில் இறங்கினார்.

ஒரு நாள் சலனமில்லாமல் ஆழ்ந்த ஜபத்தில் மூழ்கியிருந்த போது.......

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_12‬
‪#‎கணபதி_முனி‬

1 comments:

இராஜராஜேஸ்வரி said...

பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமிர்தத்தைக் காட்டிலும் உன்னதமாக கவிதை என்கிற வித்தை மனிதகுலத்துக்கு வாய்த்தது

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails