Friday, November 15, 2013

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே......

மன்னையில் தனுர் மாசம் முப்பது எம்பாவாய் சொல்லிவிட்டு சாரங்கன் மாமா பொங்கலுக்காகத் நித்திரைத் தியாகம் செய்து பச்சைத் தண்ணீரில் வெடவெடக்கக் குளித்துவிட்டு கோதண்டராமர் கோயிலுக்கு ஓடுவது போல் காலங்கார்த்தாலையே ஹோட்டலுக்கு வரச்சொன்னார்கள். கேவலம் ஸ்டார் ஓட்டல் ஓசி டிஃபன் ஆசையில் ”காஃபி மட்டும் போதும்” என்று அரை டம்ப்ளர் வாயில் சரித்துக்கொண்டு ச்சீஸை நோக்கி ஓடும் அப்பாவி ஜெர்ரியாக சேப்பாயியில் ஆரோகணித்து விரைந்தேன். வழியெங்கும் பல ஸ்டாண்டுகளில் ஆட்டோக்காரர்கள் நெற்றியில் குங்குமம் (அ) துண்ணூற்றுடன் கையில் தந்தியும் வாயில் பீடியுமாக பக்திப் பழமாகச் சவாரிக்காகச் சாலையோரத்தில் காத்திருந்தது கிருஷ்ணனைக் கூடையில் ஏந்திய வசுதேவருக்கு ஒதுங்கி வழிவிட்ட யமுனை போல மௌண்ட் ரோடு காட்சியளித்தது.

ஆதியோடந்தமாக சேப்பாயியை துருவித் துருவிப் பரிசோதித்த செக்யூரிட்டியிடம் விடைபெற்று தாஜ் க்ளப் ஹௌஸில் நுழைந்தவுடனே ஒரு ரூபாய் வட்டத்துக்குள் சிகப்புக் கலர் கௌபாய் தொப்பியுடன் ஜெய்சங்கர் தலையைச் சாய்த்து துப்பறியும் சாயலிலிருகும் ஐகான் அச்சடித்த பதாகைகள் பரவலாகக் கண்ணில்பட்டன. ஊரிலிருக்கும் ஒன்பது தாஜ்ஜுகளில் எந்த தாஜ்ஜில் என்று இங்கி பிங்கி பாங்க்கி போட்டுக் குன்ஸாக தாஜ் க்ளப் ஹௌஸிற்குள் வந்திருந்தேன். அதை நிவர்த்தி செய்யும் சந்தேக நிவாரணியாக ரெட் ஹேட் லோகோ தெரிந்தது. கணினியை இயக்குவதற்கு ஆதார ஸ்ருதியாக இருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் யுனிக்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்த ரெட்ஹேட் லைனக்ஸ் ஜாதியின் சமூகத்தார் நடத்தும் வாழ்த்துக் கூட்டம். பயப்பட வேண்டாம். இங்கு நான் சாஃப்ட்வேர் பற்றிப் பேசப்போவதில்லை. நம் இருவருக்கும் தெரிந்ததைப் பார்ப்போம்.

நித்யமும் பொழுது விடிந்து பொழுது போனால் எனது தொழிலில் நான் பல ஹார்ட்-டிஸ்க்குகளில் இதை ஏற்றி இறக்கும் போது தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்தான் ஞாபகம் வருவார். இந்த செமினாரில் அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கீர்த்திகளை ஒவ்வொருவராக மேடையேறி வாழ்த்துப்பா படித்தார்கள். தூங்கி எழுந்து பல் தேய்ப்பதற்கு முன்னர் வாயில் சேர்ந்திருக்கும் கோழை எச்சிலை வைத்துக்கொண்டு முழுங்காமல் பேசுவது போல ஒரு வெள்ளைக்காரர் படே கொழகொழத்தனமாகப் பேசி வார்த்தைகளை நம் காதுக்கு வரும் முன் வழுக்கினார். ஒவ்வொரு வாசகத்தின் வாலாக வந்த ஓகே மட்டும் தெள்ளெனப் புரிந்தது.

சன்னதம் வந்தது போல சிலசமயங்களில் மேனியதிர பெருங்குரலெடுத்து ஆங்காரப்பட்டார். மெல்லிய இதமான ஏசியின் சூழலில் அலுவலக அழைப்புகள் இல்லாமல் காலையில் சுகமாகக் கண்ணை மூடுபவர்களுக்கு இவ்விரைச்சலினால் ஜன்னி வந்தது போலத் தூக்கித் தூக்கிப் போட்டது. ”இந்த ஜென்மத்தில நீ யாருக்காவது எந்த மாதிரி கெடுதல் பண்றியோ...அதே மாதிரி அடுத்த ஜென்மத்துல நோக்கும் நடக்கும்” என்று பாட்டி மிரட்டி வளர்த்தது நினைவில் வந்து உரைத்தது. அதற்கப்புறம் பின்னாலையே வந்த ஒரு பகல் கனவுக் காட்சியில் வெள்ளைக்காரனும் நானும் இடம் மாறிக்கொண்டோம். நான் மேடையில் ஏறிப் படம் போட்டேன் அவன் முதல் வரிசையில் தூங்கி வழிந்தான்.

தன் கண்ணுபடவே சொக்கி விழுபவர்களை எழுப்பும் முயற்சியில் “யாராவது கோபால் ப்ரோகிராமிங் பண்ணினவங்க இந்த திருக்கூட்டத்தில் இருக்கீங்களா?” என்று எட்டூருக்கு கேட்கும்படி இரைந்தான் அந்த வெ.கா. சட்டென்று கையைத் தூக்கிவிட்டு ”எதற்காக?” என்று திருதிருவென விழித்தவரிடம் “கோபால்..” என்றதற்கு மையமாகத் தலையை ஆட்டிவிட்டு தன் அசட்டுத்தனத்தை எண்ணி நொந்துகொண்டு கையை இறக்கிக்கொண்டார். பிக்கல்பிடுங்கலில்லாமல் நிம்மதியாகத் தூங்குபவர்களை ஒரு கண்ணாடிக்காரர் கையில் நிகானுடன் படம்பிடித்துக்கொண்டிருந்தார். என் பக்கம் வரும்போதெல்லாம் உதட்டைக் கடித்துக்கொண்டு பிரசவ வேதனையில் கண்ணிமைகள் மூடிக்கொள்ளாமல் பாதுகாத்துக்கொண்டேன். மானத்தையும் சேர்த்துத்தான்.

ரெட் ஹேட்டை உபயோகப்படுத்தி பயனடைந்த பெரும் கம்பெனிக்காரர்கள் சிலரும் இந்த கோஷ்டி கானத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அப்படிப் பேசியதில் ஒரு டெக்னாலஜி பேச்சாளி ரேகாவிடம் I know சொல்லும் ரகுவரன் போல You Know சேர்த்துச் சேர்த்துப் பேசி நம்மை No No சொல்ல வைத்தார். பக்கத்தில் ஒருவர் ஹோட்டல்காரர்கள் சப்ளை செய்த ஸ்கிரிப்ளிங் பேடில் பால் கணக்கு எழுதி டேலி பண்ணிக்கொண்டிருந்தார்.

திடீரென்று ஒரு மாதுவின் குரல் தேனாய் ஒலித்தது. இது கனவிலோ என்று அசிரத்தையாக இருக்கும் போது மீண்டும் சர்க்கரையாய் ஒலித்து கரும்பாய் இனித்தது. கண்ணைத் திறந்து பார்த்தால் ”எல்லோரும் ஒரு பத்து நிமிஷத்துக்குள் ஓடிப் போய் டீ காஃபி குடித்துவிட்டு மறுபடியும் சமர்த்தாகச் தங்களது இருக்கையில் வந்து அமருவீர்களாக!” என்று செல்லமாக ஆக்ஞை பிறப்பித்தார். இனியும் தாமதித்தால் தெவசச் சாப்பாடு மாதிரி ரெண்டு மணிக்கு மேலேதான் போடுவார்கள் போலிருக்கிறது என்று கொலைப்பட்டினியுடன் ஆஃபிஸுக்குச் சென்று ராகவனை சரவணபவனில் ஒரு மசால் தோசையும் தயிர் சாதமும் வாங்கிவரப் பணித்துச் சாப்பிட்டேன். ஒரு டபரா மாவில் ட்ரேஸிங்க் பேப்பராய் தோசை ஊற்றி அது கிழியாமல் உருளைக் கிழங்கு கறி பொதித்த கலைஞனை மனதாரப் பாராட்டினேன். கூடவே ஒரு தொன்னை தயிர்சாதமும் ரெண்டு வாயில் உள்ளேயிறங்கியது. “அடேய்! கொஞ்சம் பொறுமையாயிருந்தால் ஸ்டார் ஹோட்டலில் வயிறார சாப்பிட்டிருக்கலாமே” என்று வயிற்றுக்குள்ளிருந்து கடாமுடாவென்று கத்தின.

அடுத்த முறை எப்பாடுபட்டேணும் ஐம்புலன்களையும் அடக்கி ஒரு முனிசிரேஷ்டர் போல இந்த அரையிருட்டு ஹால்களில் தவமியற்றிவிட்டு ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுதான் ஆஃபீஸுக்கு வரணும் என்று ஒரு பிரசவ வைராக்கியம் பிறந்தது.

போன வாரத்திலிருந்து எழுதவேண்டும் என்றிருந்த ஆத்திரத்தை இன்று அள்ளிக் கொட்டிவிட்டேன். என் பாரத்தை நான் இறக்கி வைத்துவிட்டேன். நீங்கள்.......

1 comments:

வெங்கட் நாகராஜ் said...

//பக்கத்தில் ஒருவர் ஹோட்டல்காரர்கள் சப்ளை செய்த ஸ்கிரிப்ளிங் பேடில் பால் கணக்கு எழுதி டேலி பண்ணிக்கொண்டிருந்தார்.//

அட... என்ன ஒரு கவனிப்பு..... :)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails