Sunday, January 2, 2011

இன்விடேஷன் முத்து

"முத்து இன்னிக்கி மூணாம் தெரு, ரெண்டாம் தெரு, காந்தி ரோடு இது எல்லாம் முடிச்சுடு. சரியா.. தை ஒன்னு கல்யாணம். அப்புறம் அவாளை விட்டுட்டேன்.. இவாளை விட்டுட்டேன்னு தலையை சொரிஞ்சிண்டு வந்து நிக்காத.." என்று வக்கீல் வைத்தியநாதன் வாசல் திண்ணையில் ஈசி சேரில் சாய்ந்து படுத்துக்கொண்டு அவனை ஏவிக் கொண்டிருந்தார். "சரின்னா.. முடிச்சுடறேன்..இது அரசகட்டளையல்லவோ..." என்று கையில் பத்திரிகை கட்டோடு தயங்கி தயங்கி நின்னவனுக்கு முகத்தைக் காட்டாமல் குனிந்து தரையை பார்த்து டப்பியில் இருந்து கையில் ஒரு சிட்டிகை பொடி அள்ளி எடுத்து சுத்து வட்டாரத்தில் இருக்கும் தூசி தும்பட்டைகள் உள்ளே போகும் அளவிற்கு "சர்ர்.." என்று மூக்கில் வைத்து ஒரு இழு இழுத்தார். "வாக்குவம் கிளீனர் தோத்துது போங்கோ.." என்ற நிலைவாசல் படியில் முட்டுக்கொடுத்து நின்ற மாமியின் எகத்தாளமான கமெண்ட்டுக்கு செவிமடுக்காமல் "க.. ஹ.." என்று மண்டைக்குள் சுர்ரென்று ஏறிய பொடியால் தலையை ஆட்டி கணைத்து மீண்டும் ஒரு முறை மூக்கை உறிஞ்சினார். "பொடிக்கு பதிலா ரெண்டு பீரங்கி குண்டை மூக்கில் போட்டு அவாள ஒரு தடவை தும்மச் சொன்னா கோர்ட்ல எதிரிகள் எல்லாம் பயந்து ஓடிடுவான்னேன்.." என்று வக்கீலாத்து மாமி மகளிர் சங்கத்தில் தனது தோழிகளிடம் ஜோக் அடிப்பது வழக்கம். "அண்ணா... ஒரு சிட்டிகை கொடுத்தேள்ன்னா கல்யாணப் பரிசு மாதிரி வாங்கிண்டு ஓடிடுவேன்" என்று டர்க்கி டவலால் மூக்கை துடைத்துக் கொண்டிருந்தவரிடம் மஞ்சள் பல் தெரிய இளித்தான் முத்து.

வெள்ளைக் கலர் சட்டை வேஷ்டி. கந்தையானாலும் கசக்கி கட்டு என்பதை வீராப்பாக மீறியவன் போல தினசரி அழுக்கு வேஷ்டி சட்டை. சட்டை பழுப்பு கலரில் இருந்தாலும் பின்னக் கழுத்துக்கு கலர் கர்ச்சீப் மடித்துக் கொடுத்திருப்பான். "முத்து.. ரௌடி மாதிரி எதக்கு  காலர் பின்னாடி கர்ச்சீப்பு சுத்திருக்கே" என்று யாராவது கேட்டால் "காலர் அழுக்காச்சுன்னா யார் தோப்பா.. மக்களை பெற்ற மகராசிக்கு வயசாய்டுத்து.. மணாளனே மங்கையின் பாக்யம்ன்னு எனக்கு இன்னும் ஒருத்தி வாய்க்கலை..." என்று பெரிய வியாக்யானம் கொடுப்பான். யார் வீட்டு கல்யாணம் என்றாலும் முத்து தான் பத்திரிகை டிஸ்ட்ரிபியூஷன். கல்யாணத்துக்கு பத்து நாள் முன்பிருந்தே மணமக்கள் வீட்டிற்கு காலையிலே வந்துவிடுவான். பேர் வீட்டு அட்ரெஸ் ரெண்டும் எழுதி அவன் கையில் கொடுத்துவிட்டால் தெரு வாரியாக பிரித்துக் கொண்டு சேர்பித்து விடுவான். முத்துவுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. "முத்து சைக்கிள் ஓட்டக் கத்துண்டா இன்னும் நிறைய வேலை செய்யலாமே" என்று கேட்ட பட்ணம் பவானி மாமியிடம் "அப்புறம் நான் ரிகாஷாக்காரன் ஆயிடுவேன் மாமி.." என்று சிறந்த பதில் கூறி அந்த அழுக்கு காலரை பெருமையாக அவனே தூக்கி விட்டுக்கொண்டான்.

"காலணா காசு கொடுக்காத கஞ்சர் கோபாலன் மாமா வீட்டிற்கு பத்திரிகை கொடுக்க மாட்டேன்" என்று கட் அண்ட் ரைட்டா சொல்லிவிட்டான். "ஏண்டா முத்து மட்டேன்ற.." என்று வக்கீல் கேட்டதற்கு "அந்த மாடி வீட்டி ஏழை அவாத்து பொண்ணுக்கு பணக்கார குடும்பம் ஒன்னு பார்த்தது. பையன் நித்யபடி பீடி சிகரெட் லாஹிரி வஸ்த்துகள் இல்லாம கண்ணே தொறக்க மாட்டான். பெட் காபி மாதிரி பெட் சிகரெட் பெட் ரம்மு... என்ன ஓய்.. மாப்பள திரிகாலமும் நீரும் நெருப்புமா இருப்பாராமேன்னு அவர் அம்மாவுக்கு நேரா கேட்டுட்டேன். தீர்த்தவாரி செட் பூரா நம்ம வசந்த மாளிகை ஜஸ்டீஸ் கோபிநாத் வீட்ல உக்காந்து தாகசாந்தி பண்ணிக்கும் போது இந்தப் பையனை உத்தமபுத்திரன்னு நினைச்சு இவர் பொண்ணுக்கு பார்த்துட்டார். இதை அவர் அம்மாவை வச்சுண்டு சொன்னதில கோச்சுண்டுட்டார். இதனால அவாத்ல அவர் அம்மாவுக்கும் ஆத்துக்காரிக்கும் பழி சண்டை. தாய்க்கு பின் தானே தாரம். ஒரு நல்ல குடும்பத் தலைவனா இல்லாம தாயை காத்த தனையனாவும் இல்லாமா எம்மேல ஹிட்லர் உமாநாத்தா பாயறார்" என்று மூச்சு விடாமல் அரைமணி கதை சொல்லிவிட்டு அந்தப் பத்திரிக்கையை மட்டும் எடுத்து வக்கீல் கையில் கொடுத்துவிட்டு செருப்பில்லாமல் வெற்றுக் காலோடு நடையைக் கட்டினான் முத்து.

பஸ் ஓனர் சுந்தரம் மாமாவை எப்போதும் மோட்டார் சுந்தரம் பிள்ளை என்றுதான் மற்றவர்களிடம் சொல்லுவான். அவர் வீட்டிற்கு பத்திரிகை கொடுக்க போன இடத்தில் கையில் பத்திரிகை வாங்காமல் "அங்கேயே வச்சுட்டு போ" என்று ஒருக்களித்த கதவு வழியாக திண்ணையை காண்பித்த மாமி வீட்டிற்கு விலக்காக இருந்தாள் என்பதை புரிந்து கொண்டு "என்ன மாமி நேற்று.. இன்று.. நாளையா... " என்று கேட்டு வாயார வாங்கிக் கட்டிக்கொண்டான். அடுத்த ஒரு மாதத்திற்கு சுந்தரம் மாமாவை "பட்டாக்கத்தி பைரவன் மாதிரின்னா என்னைக் கண்டா துரத்தறார்.. அப்படி என்ன ஊர்ல இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிட்டேன்.." என்று ஊர் பூரா சொல்லி அங்கலாய்த்தான்.

"என்னடா முத்து எப்போ கல்யாணம் பண்ணிக்கபோரே.."  என்று கேட்ட பனாரஸ் பரிமளம் மாமியிடம் "சிரித்து வாழ வேண்டும்ன்னு நான் இப்போ இருக்கேன். பிறர் சிரிக்க வாழ வேண்டும்ன்னு கேட்கறேளா..." என்று கேட்டான். எப்போதும் ஒன்பது கஜம் பனாரஸ் பட்டில் ஜொலித்த அந்த மாமி "ஏண்டா வெறும் முத்துன்னு பார்த்தா முரடன் முத்தான்னா இருக்கே....உனக்குன்னு ஒரு நல்ல வேலையா பார்த்ததுண்டா பொண்ணு கிடைக்கும்டா" என்று ஆசிர்வாதம் கொடுத்தாள். "இது உழைக்கும் கரங்கள்.. வக்கீலாத்து பத்திரிகை தான் நான் கடைசியா கொடுக்கறது.. அப்புறம் ஏழைப் பங்காளன் சமையல் சாம்ராட் கிச்சா பரிஜாரகனா அவர் ட்ரூப்ல சேர்ந்துக்க சொல்லி என்னை கூப்ட்ருக்கார்... அவர் செட்ல சேர்ந்து நானும் நளமகாராஜா மாதிரி ஆயிட்டேன்னா எனக்கு ஒரு தமயந்தி கிடைக்க மாட்டாளா என்ன.." என்று பத்திரிகை கொடுத்துவிட்டு போனான்.

pandhi


ஓரிரு மாதங்கள் பல திருமண மண்டப சமையற்கட்டுகளில் வெந்தான் முத்து. ஒரு நல்ல யோகமான காலத்தில் முத்துவுக்கும் புதையலாக ஒரு ரத்தினம் கிடைத்தது. சமையல் கிச்சாவின் ஒன்று விட்ட அத்தையின் உறவில் சிறுவயதில் அப்பா அம்மாவை பறிகொடுத்த ஒரு பெண்ணிற்கு வாழ்வளித்தான் முத்து. "என்ன முத்து.. கல்யாணம் ஆச்சா.." என்ற கேள்விக்கு "ஓ..பெரிய இடத்து பெண்.. என்னதான் நாம பரிஜாரகனா வேலை பார்த்தாலும் அன்னமிட்ட கைக்கு ஒரு அன்னக்கிளி மாட்டிடுடுத்து.." என்று பெருமையாக ஊர் நெடுக கேட்டவரிடம் சொல்லிக் கொண்டான். "கல்யாணத்துக்கு அப்புறம் எங்கயும் போகலையா.." என்ற கேள்விக்கு "தேன் நிலவுக்கு தானே கேக்கறேள்.. ஊட்டி வரை உறவு மாமி..." என்று சொல்லி சந்தோஷமாக சிரித்துக் கொண்டே சட்டைக் காலர் கர்ச்சீப்பை சரி செய்துகொண்டான்.

மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்ததில் வெள்ளை சட்டை வேஷ்டி இரண்டும் தும்பைப்பூ நிறத்தில் இருந்தது. ராஜா வேஷம் போடாத மன்னாதி மன்னனாக மாறியிருந்தான் முத்து. பெண்ணே நீ வாழ்க.

பின் குறிப்பு: எப்போதும் சினிமா தலைப்பு சொல்லும் ஓர் ஆசாமியைப் பற்றிய கதை இது. இதில் நிறைய கருப்பு வெள்ளை திரைப்படங்கள் பெயர்களை உபயோகித்து இருக்கிறேன். எவ்ளோ என்று கண்டுபிடிப்பவர்கள் வைரமுத்து வாலி போன்றார் தங்களின் ஆயிரம் பாடல்கள் புத்தகம் போட்டது போல ஆயிரம் படங்கள் என்று டேடாபேஸ் கணக்காக புத்தகம் போட்டு வரும் ராயல்டி பணத்தில் எனக்கு ஐம்பது சதம் தரும்படி கோரப்படுகிறார்கள். நன்றி.

பட உதவி: couplets.in

42 comments:

பத்மநாபன் said...

அந்த பந்தி விருந்துல வடை முதல்ல ...கதை அப்புறம்

பத்மநாபன் said...

இன்விடேசன் முத்து ..சரியான ரகளை பார்ட்டி....படப்பெயர்களை இயற்கையாக கோர்த்தது அருமை...ஆனாலும் முத்துக்கு இவ்வளவு ரகளை கூடாது நே.இ.நா... அப்புறம் ப.க.பைரவன் துரத்தாமல் என்ன செய்வான்...

Aathira mullai said...

1.அரசகட்டளையல்லவோ..."
2.கல்யாணப் பரிசு
3.மக்களை பெற்ற மகராசிக்கு
4.மணாளனே மங்கையின் பாக்யம்
5.ரிகாஷாக்காரன்
6.பணக்கார குடும்பம்
7.நீரும் நெருப்புமா
8.வசந்த மாளிகை
9.ஜஸ்டீஸ் கோபிநாத்
10. உத்தமபுத்திரன்
11.தாய்க்கு பின் தானே தாரம்.
12.தாயை காத்த தனையன
13.ஹிட்லர் உமாநாத்தா
14.மோட்டார் சுந்தரம் பிள்ளை
15.நேற்று.. இன்று.. நாளையா
16.பட்டாக்கத்தி பைரவன்
17. "சிரித்து வாழ வேண்டும்ன்னு
18.முரடன் முத்தான்னா
19.உழைக்கும் கரங்கள்
20.ஏழைப் பங்காளன்
21.புதையல
22.பெரிய இடத்து பெண்..
23.பார்த்தாலும் அன்னமிட்ட கை
24.அன்னக்கிளி
25.தேன் நிலவுக்கு
26.ஊட்டி வரை உறவு
27.மன்னாதி மன்னனாக
28.பெண்ணே நீ வாழ்க

அப்பாடா... சரியா இருக்கான்னு சொல்லுங்க.. இன்னும் ஏதேனும் விட்டுப் போயிடுச்சா? எனக்குத் தெரிந்த வரை சொல்லி இருக்கேன்.

ஏன் இப்படி கொடுமையெல்லாம் பண்றீங்க RVS?

Porkodi (பொற்கொடி) said...

எனக்கு தெரிந்தது
முத்து (black and white illai, but still!)
அரசகட்டளை
கல்யாணப் பரிசு
மக்களை பெற்ற மகராசி
மணாளனே மங்கையின் பாக்யம்
ரிகாஷாக்காரன்
நீரும் நெருப்பும்
வசந்த மாளிகை
ஜஸ்டீஸ் கோபிநாத்
உத்தமபுத்திரன்
தாயை காத்த தனையன (?!)
உமாநாத் (?!)
மோட்டார் சுந்தரம் பிள்ளை
நேற்று.. இன்று.. நாளை
பட்டாக்கத்தி பைரவன்
சிரித்து வாழ வேண்டும்
உழைக்கும் கரங்கள்.
ஏழைப் பங்காளன்
பெரிய இடத்து பெண்.
அன்னமிட்ட கை (?!)
அன்னக்கிளி
தேன் நிலவு
ஊட்டி வரை உறவு
மன்னாதி மன்னன

ஜோக் என்னனா, இதுல முத்து தவிர ஒரு படமும் நான் பார்த்தது இல்லை, எல்லாம் சினிமா டைட்டில் வைத்து dumb charades விளையாட தேடியவை! :-|

நல்ல கதை சார்!

எல் கே said...

நான் ரசிச்சேன் அதோட நிறுத்திக்கிறேன். எனக்கு பழையப் படம்லாம் தெரியாது. அதெல்லாம் நம்ம ரசிகமணி குழு சொல்லுவா

Anonymous said...

ரைட்டு.. முன்னாடியெல்லாம் சினிமா படப் பெயர்களைக் கொண்டு கவிதை சொல்லுவாங்க.. நீங்க கதையாவே சொல்லிட்டீங்க அண்ணே! ;)
ஆனா கொஞ்சமாத்தான் என்னால கண்டுபிடிக்க முடிஞ்சது.. ஒன்லி முப்பத்தியிரண்டு. மொத்தம் எத்தனை அண்ணா?

இளங்கோ said...

நான் பழைய படம் அவ்வளவா பார்க்குறது இல்லீங்க.. :)
(எப்படி எல்லாம் தப்பிக்க வேண்டி இருக்குது.. !!)

பொன் மாலை பொழுது said...

அதெல்லாம் சரிதான் அம்பி, அவா அத்தனை பேர் சாப்டுண்டு இருக்கா அங்கெ சித்த லைட்ட போட்டா என்னவாம்?
ஒரே இருட்டா இருக்கோன்னோ !

புவனேஸ்வரி ராமநாதன் said...

உங்க கதைகள்ல ஊரையும் கொண்டு வந்துட்றது ஒரு ஸ்பெஷல்.

ஸ்ரீராம். said...

முத்து
காந்தி
அரசகட்டளை
கல்யாணப் பரிசு
மக்களை பெற்ற மகராசி
மணாளனே மங்கையின் பாக்யம்
பவானி
ரிகாஷாக்காரன்
மாடி வீட்டி ஏழை
பணக்கார குடும்பம்
நீரும் நெருப்பும்
வசந்த மாளிகை
ஜஸ்டீஸ் கோபிநாத்
உத்தமபுத்திரன்
தாய்க்கு பின் தாரம்
குடும்பத் தலைவன்
தாயை காத்த தனையன்
ஹிட்லர் உமாநாத்
மோட்டார் சுந்தரம் பிள்ளை
நேற்று.. இன்று.. நாளை
பட்டாக்கத்தி பைரவன்
சிரித்து வாழ வேண்டும்
முரடன் முத்து
ஆசிர்வாதம்
உழைக்கும் கரங்கள்
ஏழைப் பங்காளன்
புதையல்
பெரிய இடத்து பெண்.
அன்னமிட்ட கை
அன்னக்கிளி
தேன் நிலவு
ஊட்டி வரை உறவு
ராஜா
மன்னாதி மன்னன்
பெண்ணே நீ வாழ்க + பின்குறிப்பில் 'கறுப்பு வெள்ளை'....!

ஷ்...அப்பாடா...இந்த மாதிரி கேள்விகளை விடலாமா...கணக்குப் போட்டால்தான் காணாமல் போகணும்..!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. எத்தனை படங்கள்? மேலேயே நிறைய பேர் சொல்லிட்டாங்களே... இதுல நான் வேற எதுக்கு தனியா? :)))

தக்குடு said...

கதை ரொம்ப பிரமாதமா இருந்தது அண்ணா, கல்லிடைல சில வருஷங்களுக்கு முன்னாடி ஒரு புள்ளையாண்டான் இதே மாதிரி ஊர்ல உள்ள கல்யாணம்,திரண்டுகுளி,கிரேக்கியம்,ஆயுஷ்யஹோமம்னு எல்லாத்துக்கும் சந்தனகும்பாவை எடுத்துண்டு விஷேஷாத்து பொம்ணாட்டி ஒருத்தரையும் கூட்டிண்டு "மாமி! நான் தக்குடு வந்துருக்கேன்!"னு போயிட்டு வந்தது எல்லாம் ஞாபகத்துக்கு வந்துருத்து. இந்த பப்ளிக் சர்வீஸ் பண்ணின வகைக்கு ஜானுவாசம் முடிஞ்சு வெள்ளிகும்பால இருக்கும் திரட்டிப்பால்ல ஒரு ஏகதேசமான பங்கு கிட்டும்...:)

தக்குடு said...

பொம்ணாட்டிகளை அழைக்கர்த்துக்குதான் அந்த ஆத்துலேந்து ஒரு மாமியையோ/அக்காவையோ அந்த புள்ளை கூட்டிண்டு போகும், ஆனா போற ஆத்துல இருக்கும் மாமிமார் எல்லாம் "என்ன விஷேஷம் கோந்தை?"னு அந்த புள்ளையோட வாயைதான் பிடுங்குவா, வந்த மாமிகிட்ட அவாத்து மாமா குசலம் விசாரிச்சுண்டு இருப்பார்.

Madhavan Srinivasagopalan said...

நல்லா வந்திருக்கு.. வித்தியாசமா யோசிச்சு படங்களோட பெயர்களை புகுத்தி.. சபாஷ்..

ஆதிரா, போர்க்கொடி, ஸ்ரீராம் .. சபாஷ் உங்களுக்கும்தான்..

அப்பாதுரை said...

ரசித்துச் சிரித்தேன்.
>>>வாக்குவம் கிளீனர் தோத்துது

இன்னும் பத்து சினிமா பெயர்களைச் சேர்த்திருக்கலாம் (ஆதிரா, பொற்கொடி, ஸ்ரீராம்,... மன்னிக்கவும்:)

தமிழ்மணம் popular blogsல தீவிபி வந்திருக்குதே? அட்டகாசம் போங்க.

Aathira mullai said...

எவ்வளவு கஷ்டப்பட்டு எண்ணிச் சொல்லி இருக்கோம்.. அப்பாதுரை சார் என்ன சொன்னீங்க? என்ன சொன்னீங்க? முழிச்சு முழிச்சுப் பார்த்து எண்ணினதுல கண்ணெல்லாம் குழிக்குள்ள போயிடுச்சு... இப்பவே RVS க்கிட்டதான் வாசன் ஐகேர் சார்ஜெல்லாம் வாங்கி ஆகனும். இதுல இது வேறயா..

இப்படிக்கு,
பார்வை மங்கிய ஆதிரா..

Aathira mullai said...

Madhavan Srinivasagopalan said...

//சபாஷ்..ஆதிரா//

நன்றி மாதவன் சார்.

பத்மநாபன் said...

//மாமிமார் எல்லாம் "என்ன விஷேஷம் கோந்தை?"னு அந்த புள்ளையோட வாயைதான் பிடுங்குவா, // ஆனா கோந்தை சின்ன மாமி எதாவது கண்ணுக்கு சிக்குதான்னு தேடீட்டு இருக்கும்...ஒடி பிடிச்சு வெளையாட...

(பாண்டியமன்னனை துறந்த காரணம் என்ன தக்குடு சக்ரவர்த்தி ?)

பத்மநாபன் said...

பொடி இழுப்பு சுகத்தை நீங்க சொன்னபிறகு தான் நானும் ரசித்து சிரித்தேன் அப்பாதுரை... மாமிகளும் ரகளைக்காரர்கள்

பத்மநாபன் said...

//இன்னும் பத்து சினிமா பெயர்களைச் சேர்த்திருக்கலாம்// மாஞ்சு மாஞ்சு எண்ணியவர்களின் தூக்கத்தை கெடுத்துட்டிங்களே அப்பாதுரை...

பத்மநாபன் said...

//இன்னும் பத்து சினிமா பெயர்களைச் சேர்த்திருக்கலாம்// மாஞ்சு மாஞ்சு எண்ணியவர்களின் தூக்கத்தை கெடுத்துட்டிங்களே அப்பாதுரை...

RVS said...

@பத்மநாபன்
புத்துஜி மார்கழி மாசம் தொடர்ந்து வடை உங்களுக்கே... ;-)

RVS said...

@பத்மநாபன்
பத்துஜி!!! பெர்ஃபெக்டா பாய்ன்ட்டை பிடிச்சீங்க.. (நே.இன்.நா..) ;-)

RVS said...

@ஆதிரா
சிஸ்டர் கொடுமையா.. ஏன் இப்படி.. எவ்ளோ சூப்பர்ஆ படம் பேர் எல்லாம் அடிச்சிருக்கீங்க.. ரொம்ப நன்றி ;-)

RVS said...

@Porkodi (பொற்கொடி)
முதல் வருகை.. கமென்ட்.. பாராட்டு.. எல்லாத்துக்கும் முதற்கண் நன்றி. ;-)
தெகிரியமா படம் எல்லாம் பார்த்தேன்னு வேணும்னாலும் சொல்லுங்க.. உங்களுக்கு வயசாய்டுச்சுன்னு சொல்ல மாட்டோம். ;-) ;-)
அடிக்கடி வாங்க.. ;-)

RVS said...

@எல் கே
தெரியாதுன்னு சொன்னாலும் நீங்க ரொம்ப சின்னப் பையன்னு சொல்லமாட்டோம் எல்.கே. ஓ.கே ;-) ;-)
ரசித்ததற்கு நன்றி. ;-)

RVS said...

@Balaji saravana
முப்பத்திரெண்டையும் காண்பித்து சிரித்து மகிழ்ந்ததற்கு நன்றி.. பாலாஜி.. ;-)

RVS said...

@இளங்கோ
எப்டி தப்பிச்சாலும் எங்களுக்கு தெரியும் இல்ல.. உங்களுக்கு தெரியும்ன்னு... ;-) ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
நன்றி மாணிக்கம். லைட் போட்டுடலாம். ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
கரெக்ட்டு புவனேஸ்வரி ராமநாதன். மூணாம் தெரு காந்தி ரோடு வந்த வுடனே நீங்க நம்ப டவுனுக்குள்ள வந்துருவீங்கன்னு தெரியும்.. நன்றி ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
நீங்க , ஆதிரா, பொற்கொடி மூன்று பெரும் காட்டிய பெருத்த ஆர்வத்திற்கு மிக்க நன்றி. ;-) உங்க மூணு பேரோட கலெக்ஷனையும் கலந்து டூப்ளிகேட்டை ரிமூவ் பண்ணினா அதுதான் ஆன்செர். ரொம்ப நன்றி. ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
சரிதான் தல. நீங்க வந்து தலையை காண்பிச்சாலே அது எங்களுக்கு பெருமை.. நன்றி ;-)

RVS said...

@தக்குடு
திரண்டுகுளிக்கு கூப்பிட போயிருக்கேன்னா.. சரி.சரி.. பப்ளிக்...பப்ளிக்... நாமெல்லாம் பொது சேவைல ஈடுபடலைன்னா வேற யார் படுவா.. (படுவா சொல்லலை.. படுவா சொல்லிருக்கேன்.. ) ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
சபாஷுக்கு நன்றி மாதவா.... ;-)

RVS said...

@அப்பாதுரை
ரசித்ததற்கு நன்றி அப்பாஜி! போற போக்கில ஏன் எல்லாரையும் வார்ரீங்க.. ;-)

RVS said...

@ஆதிரா
அச்சோ.. பாவம்.. இனி ஒருமுறை இதுமாதிரி நடக்காம பார்த்துக்குறேன்.. அப்பாஜி.. சும்மா விளையாட்றாரு.. நீங்க ஒன்னும் கோச்சுக்காதீங்க.. அடுத்தது பாட்டெல்லாம் வச்சு... (என்ன ஓடிட்டீங்களா?) ;-)

RVS said...

@பத்மநாபன்
பாண்டியனை இழந்த தக்குடுவை விசாரிப்பது இருக்கட்டும்...
எழுதினவங்க தூக்கத்தை கெடுத்துட்டீங்களேன்னு அப்பாஜியை கேட்கறா மாதிரி கேட்டு நீங்க அந்த தூக்கத்தை கெடுக்குறீங்க பாருங்க.. அது உங்க டேலன்ட்.. புது வருஷத்துல குழந்தை போட்டோ போட்டுக்கிட்டு நீங்க இன்னும் எவ்ளோ லூட்டி அடிக்க போறீங்களோ.. தெரியலை.. நடத்துங்க.. ;-)

தக்குடு said...

@ பத்பனாபன் அண்ணா - சில பல பேர் பாண்டிய மன்னனோட சேர்த்து வாசிக்கும்போது எதோ அடாவடி பேர்வழி மாதிரி இருக்கு!னு சொல்லிட்டா, எப்பிடி இருந்தாலும் எல்லாரும் தக்குடுனு தானே கூப்படரா அதனால அதே போதும்னு முடிவு பண்ணியாச்சு!

//புது வருஷத்துல குழந்தை போட்டோ போட்டுக்கிட்டு நீங்க இன்னும் எவ்ளோ லூட்டி அடிக்க போறீங்களோ.. தெரியலை.. நடத்துங்க.. ;-)// இதை ஒரு 'டை' கட்டின மன்னர்குடி கிருஷ்ணர் சொல்லரார்...:)

Porkodi (பொற்கொடி) said...

ஹிஹிஹி.. செம ஜோக் சார் நீங்க, வயசுக்கும் பழைய படத்துக்கும் என்ன சம்பந்தம்? ஏதோ வாய்க்கலை அவ்ளோ தான்! தக்குடுவே எனக்கு அண்ணா, அப்புறம் நான் ஏன் கவலை பட போறேன்!

எல் கே said...

//நீங்க ரொம்ப சின்னப் பையன்னு சொல்லமாட்டோம் //

தக்குடுவே எனக்கு அண்ணாதான்

தக்குடு said...

@ RVS anna - Porkodi atthaiyaiyum LK periyappavaiyum onnum sollathengo! yenna irunthaalum vayasula periyavaa avaa rendu perum!...:)

//திரண்டுகுளிக்கு கூப்பிட போயிருக்கேன்னா.. சரி.சரி// oru full cycle implementation exp irukku anna. antha ponnoda therandukuli,kalyanam,avaa kolanthaiyooda aayushya homam(sep vacationla poona poothu) yellathukum adiyenthan thaan theruazlaippu (seemantham mapplai aathula panninathaala polachen)..:)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இத்தனை தமிழ்படம்னு கரெக்டா சொல்ற முதல் நபருக்கு மாருதி 800 ப்ரெசெண்ட்
பண்ணப் போறாராம், நம்ம RVS!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails