Sunday, September 18, 2011

எங்கேயும் எப்போதும்



தளபதியும் குணாவும் ஒரு சேர தீபாவளிக்கு ரிலீஸ் ஆன போது ரசிகக் கண்மணிகள் என் கையைப் பிடித்து FDFS-க்கு இழுத்தார்கள். முதல் ஒரு வாரத்திற்கு படம் பார்க்க முடியாது. திரைக்கு காகிதார்ச்சனை செய்வார்கள். கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம், “தலைவா!! தலைவா” என்று புளகாங்கிதத்தில் திரையைப் பார்த்து உணர்ச்சி பொங்க இரைந்து, படம் ரிலீஸ் ஆனதற்கு மொட்டையடித்து நேர்த்திக் கடன் புரிந்து நாயக புண்ணியம் கட்டிக்கொள்வார்கள். கமல், ரஜினி, விஜய், அஜீத் போன்ற நட்சத்திர ஹீரோக்கள் நடிக்காத படம் என்பதால் முதல் வார ஹிம்சை அதிகம் இருக்காது என்ற நம்பிக்கையில் சென்றேன். வீணாகவில்லை. ஜெய்யின் சிரிப்பு வசீகரமானது. கள்ளம் கபடமற்ற ஒரு குழந்தையின் சிரிப்பு அது. அதற்காகவும்தான்.

பொதுவாக ஒருவரி நூல் போன்ற கதைகளைப் பெரிய படுதாவாக விரிப்பதற்கு சிலர் சிரமப்படுவார்கள். ததிக்கினத்தோம் போட்டுத் தடுமாறிவிடுவார்கள். இல்லை வழவழாகொழகொழா என்று வாழைப்பழ ஜூஸ், வெண்டைக்காய் மோர்க்குழம்பு போல கொழப்பிவிடுவார்கள். ஆனால் தேசிய நெடுஞ்சாலை பேருந்து மோதல் என்ற ஒரு வரியை மையமாக வைத்து திரைக்கதையை இழை இழையாய்ப் பின்னியிருக்கிறார் இந்த இயக்குனர். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

தியேட்டரை அடையும் முன் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நாலு பேருடன் ”போடாங்.......”னு உதார் சண்டைப் போட்டு, லேட்டாக, விளக்கணைத்து டைட்டில் போட்டவுடன் தியேட்டர் இருட்டில் நாலு பேர் காலை மிதித்து நசுக்கி,  தட்டுத் தடுமாறி சேரில் உட்கார்ந்திருப்பவர் மடியில் பச்சென்று உட்கார்ந்து தடவித் தடவி வந்து அமருபவர்களை, டைம் லாப்ஸில் இரண்டு பேருந்துகளை அதிவேகமாக முட்டிக்கொள்ள வைத்து எடுத்தவுடனேயே மிரட்டிவிடுகிறார்கள். தினத்தந்தி அலுவலகத்தில் ப்ரஸ்ஸை நிறுத்தி அன்றைய தலைப்புச் செய்தியை மாற்றவைக்கும் ஒரு கோர விபத்து.

மோதிக்கொள்ளும் பஸ்களிலிருந்து கால் செத்துப்போகாத வடிவேல் கணக்காக முன் கண்ணாடியை சில்லுச்சில்லாகப் பொத்துக்கொண்டு விழும் ஒருவர் விபத்துக்குள்ளான இரு பேருந்துக்கும் இடையில் சிக்கிச் சட்னியாவதைக் காண்பிக்கும் போது குடும்பம் குட்டிகளோடு செல்பவர்கள் குட்டிகளின் கண்களை மறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பொய்யான சினிமாவில் கூட நிஜமாகவே காணமுடியாத ஒரு மோசமான நிகழ்வு. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பதை கடைசியில் ஒரு சடன் ப்ரேக் போட்டு க்ளைமாக்ஸில் அவிழ்க்கிறார் இயக்குனர். எதனால் என்று யாரும் எதிர்பார்க்காத பாராட்டப்பட வேண்டிய ஒரு சிறு முடிச்சு. வெரி குட்.

ஒரு அரசுப் பேருந்து திருச்சியில் இருந்து சென்னைக்குப் புறப்படுகிறது. கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்திலிருந்து ஐராவத ”ஸ்கை ரைடர்” ஒன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு பறக்கிறது. விழுப்புரத்திற்கு அருகே இரண்டும் தலையோடு தலை ஒன்றோடொன்று முட்டிக்கொள்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே மோத விட்டு ”4 மணி நேரத்திற்கு முன்பு” என்று ஒரு ஃப்ளாஷ் பேக் ஓட்டுகிறார்! அந்தப் பேருந்துகளில் பயணிப்பவர்களின் குடும்பப் பின்புலங்கள், பயண காரணங்கள் காண்பிக்கப்படுகிறது. கோயம்பேட்டையையும் திருச்சி நகர பேருந்து நிலையத்தையும் லாங் ஷாட்டில் பருந்துப் பார்வையில் காண்பிக்கும் இடங்களில் அமர்க்களப்படுத்துகிறார் ஒளிப்பதிவாளர்.

அந்த நான்கு மணிநேர மினி ப்ளாஷ்பேக்குக்குள் இன்னொரு ஆறு மாத கால ஜெயண்ட் கொசுவர்த்தி சுருள் ப்ளாஷ்பேக்! அந்த ஜெயண்ட் ப்ளாஷ்பேக்கில் இரண்டு காதல் ஜோடிகளின் ஆத்மார்த்த காதல் கதை. திருச்சியிலிருந்து தொண்ணூறு சதம் மதிப்பெண் எடுத்து சென்னைக்கு இண்டெர்வியூவுக்கு வரும் பெண்ணாக அனன்யா. தலைக்காவிரி பெண். அழகாக திருதிருவென்று முழிக்கிறார். தென் தமிழகத்திலிருந்து வரும் பெண்களின் நகரப் பூச்சாண்டி பயத்தை மூலதனமாக வைத்து அனன்யா காட்சிகளை நகர்த்துகிறார் இயக்குனர். அவருடைய டி.ஸி.எஸ் நேர்முகத்துக்கு வழித்துணையாக உதவி புரிய வருகிறார் ஷர்வானந்த். பக்கத்து வீட்டு படித்த பையன் போன்ற களையான தோற்றம்.

“கோவிந்தா..கோவிந்தா...சென்னையில புதுப் பொண்ணு” என்று அனன்யா ஷேர் ஆட்டோவில் இடிபடும் போது உடனடி ஹிட் சாங் ஒன்றை ஓட்டிவிடுகிறார்கள். பஸ்ஸில் பயணிக்கும் போது தலையை விரித்துப் போட்ட கருப்புப் பனியன் பெண் ஒன்று பாய் ஃப்ரெண்ட் ஒருவனை ”டேய் கட் பண்ணு... அப்பா லைன்ல வராரு”  என்று கட் செய்துவிட்டு இன்னொருத்தனுக்கு லைன் போடுவதைப் பார்த்து பயமுறும் காட்சியில் அனன்யா கண்களில் ஒருவித மிரட்சி தெரிகிறது. சாலைகள் தான் படத்தின் பாதி நேர லொகேஷன். ஒன்று சென்னைக்குள் ஆட்டோ அல்லது பஸ்களில் இல்லையென்றால் ஹைவேயில் பயணிக்கும் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளில். சாஸ்திரத்திற்கு திருச்சி மலைக்கோட்டையில் இரண்டொரு சீன் வைத்திருக்கிறார்.

ஜெய்யும் - அஞ்சலியும் காதலிக்கிறார்கள். மெஷின் டூல்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் ஜெய் எதிர் சாரியில் இருக்கும் கூந்தல் பெரியதாக வளர்ந்த ஒரு பெண்ணுக்கு தினமும் காலை கை ஜாடை காண்பிக்கிறார். அந்தக் கன்னிகை அணியும் உடைக்கு மேட்சாக சட்டை அணிந்து வேலைக்கு சென்று காதல் விரதம் இருக்கிறார். சில நாட்களில் அம்மா, பெண் வித்தியாசம் தெரியாமல் கை காண்பிக்கிறார். காதலிக்குக் கட்டுப்பட்ட ஜெய்யை மெய்யாலுமே விரட்டிக் காதலிக்கிறார் அஞ்சலி. விரட்டுவது என்றால் உங்க வீட்டு விரட்டு எங்க வீட்டு விரட்டு கிடையாது. கையில் குச்சி எடுத்துக்கொண்டு பின்னால் விளாசி விரட்டாமல் விட்டது ஜெய் செய்த புண்ணியம்.

காதல் என்பது கையோடு கை கோர்த்து மாரோடு மார் கட்டிப்பிடித்து அலைவது இல்லை என்றும், காதலித்தால் என்னென்ன பிரச்சனையை சமாளிக்க வேண்டுவரும் என்று பரஸ்பரம் தெரிந்து கொண்டு பின்னர் காதலிக்கலாம் என்று சொல்லும் அஞ்சலி HIV டெஸ்ட் வரை ஜெய்யிக்கு எடுத்துப் பார்ப்பது காதல் விரட்டலின் உச்சம். தன்னை ஆறு வருடம் பின்னால் நாக்கை தொங்கப்போட்டு துரத்தியவனிடம் அனுப்பி அடி வாங்க வைப்பது கொஞ்சம் ஓவர். அஞ்சலி கேரக்டர் பில்டப் இமாலய சைஸ் அதிகம். சொர்ணாக்கா போல கிட்டத்தட்ட “அதிரடி காதலி”யாக வருகிறார் அஞ்சலி. காதலி அஞ்சலிக்கு அடங்கிய அமெரிக்கையான பிள்ளையாக ஜெய். என்ன பவ்யம். என்ன குழைவு. ”உங்க மேல கோவமே படமாட்டேங்க” என்று அஞ்சலியிடம் சொல்லும் போது பார்க்கும் வெள்ளந்தியான பார்வை. சூப்பர்ப். கடைசி வரையில் அஞ்சலியை “ங்க...ங்க...” என்று வார்த்தைக்கு வார்த்தை மரியாதை சேர்த்துதான் பேசுகிறார்.

சத்யா என்ற அறிமுக இசையமைப்பாளரின் இசை இரண்டு பாடல்களில் தலையாட்ட வைக்கிறது. “மாசமா... ஆறு மாசமா..” என்ற பாடலை அவரே பாடியும் இருக்கிறார். அந்தப் பாடல் முழுவதும் ஜெய் ரஜினியைப் போல கை காலை அசைக்கிறார். பாடல் முழுக்க ரோடில் ஓடிக்கொண்டே வருவோர் போவோருடன் சேர்த்து இடது தோள்பட்டையை குலுக்கி உலுக்கி நெஞ்சில் குத்திக்கொள்கிறார் ஜெய். அதை நடனம் என்று அழைக்கிறார்கள் போலும். இறக்கையில்லாமல் “உஸ்...உஸ்...” என்ற சத்ததில் ஷாலின் படங்கள் குடுமிகள் போல விண்ணில் பறந்து தாக்கும் சண்டைக் காட்சிகள் இல்லாததால் காது பிழைத்தது. பின்னனி இசை பரவாயில்லை.

இன்றைய திருச்சிப் பெண்கள் அனன்யா மாதிரி அசமந்தமாக இருப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி அல்ல 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மதிப்புக் கேள்வி. இருந்தாலும் அவரது அசட்டுத்தன்மை ரசிக்கும்படி இருக்கிறது. ஊர் பெயர் தெரியாத பெண்ணுக்காக ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு உதவி புரிய ஊர் சுற்றுவது ரொம்ப மோசம் என்று அனன்யாவை விட்டே ஷர்வானந்துக்கு சொல்லவைக்கும் டைரக்டர் மிகவும் விஷமி. சென்னையைக் கயவாளிகள் குடியிருக்கும் பகுதி போல சித்தரித்து விடக்கூடாது என்று ஷர்வானந்தை விட்டே வந்தாரை வாழ வைக்கும் சென்னையின் அருமை பெருமைகளுக்கு பாராட்டுப் பத்திரம் படிக்கிறார்கள்.

“ஏண்டி! ஒரே ஒரு தடவை உனக்கு வழித் துணைக்கு வந்தவனை எப்படி கல்யாணம் கட்டிப்பே?” என்ற கேள்விக்கு “அக்கா! மாமா உண்ணை பொண்ணு பார்க்க வந்தப்ப நீ டீ குடுத்தே... மாமாவுக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க... உன்னை அவரை பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க... ரெண்டு பேரும் பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க... ஒரு டீ குடுக்குற நேரத்தில உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க இல்ல.. அவன் என் கூட ஒரு நாள் முழுக்க சென்னையை சுத்தியிருக்கான். எனக்குத் தெரியாதா?” என்ற கேள்வியில் காதல் சூத்திரம் சொல்கிறார் வசனகர்த்தா. சில இடங்களில் மின்னல் வெட்டியது போல பளிச்சென்று இருக்கிறது வசனம்.

மிகச் சிறந்த படத்திற்கு கடைசி கால் மணி நேரம்  நகம் கடிக்கும் அல்லது சீட் நுனிக்கு கொக்கிப் போட்டு அழைக்கும் க்ளைமாக்ஸ் என்பார்கள். ஆனால் இப்படம் உட்கார விடாமல் எழுந்து நிற்க வைத்துவிடுகிறது. தொண்ணூறு சதம் படம் நகர்த்த தெரிந்தவர் கடைசி பத்து சதம் படுத்திவிட்டார். இரண்டு காதலர்கள், ஒரு ஆக்ஸிடெண்ட், விரசமில்லா சீன்கள், சில சுவையான காதல் காட்சிகள், டிஷ்ஷும் டிஷ்ஷும் இல்லாமல் அழகாக ஒரு கதை சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தரமான தயாரிப்புக்கு ஏ.ஆர். முருகதாஸுக்கு ஒரு நன்றி. நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

என்னது? அந்த ஆக்ஸிடெண்ட் எப்படி ஆனது என்று கேட்கிறீர்களா? கதை முழுவதையும் சொல்லிவிட்டால் ஜெய் கோபித்துக் கொள்வார். தியேட்டரில் போய் பாருங்களேன்!!

பின் குறிப்பு: படம் முடிந்ததும் ஜெய்யிடம் பேசினேன். என் நண்பருக்கு நண்பர் அவர். ”நல்லா நடிச்சிருக்கீங்க” என்றேன். மனிதர் அப்படியே உருகிவிட்டார். ”கண்கள் இரண்டால்...” சிரிப்பு இங்கே தெரிந்தது. அவருடைய நம்பர் தெரிந்த யார் கூப்பிட்டாலும் சகஜமாகப் பேசுவார் என்றார் என் நண்பர். அலட்டல் இல்லாத ஜெய்யிக்கு இந்தப் படமும் அமோக வெற்றியைத் தரட்டும். வாழ்த்துகள்.

பட உதவி: www.cinejosh.com

-

34 comments:

சத்ரியன் said...

அப்ப பாத்துற வேண்டியது தான்!

Yaathoramani.blogspot.com said...

அருமையான விமர்சனம் பார்க்கத் தூண்டிப் போகிறது
அவசியம் தியேட்டரில் போய் பார்த்து விடுகிறேன்
த.ம 1

ரிஷபன் said...

இந்தப் படம் பரவலா எதிர்பார்ப்பை கொடுத்திருக்கு..

ஸ்ரீராம். said...

(நண்பரின்) நண்பருக்காக ஒரு விமர்சனம்? நல்ல அலசல். தலைப்புக்கு என்ன ஜஸ்டிஃபிகேஷன்?

பத்மநாபன் said...

நிதானமாக விமர்சித்துள்ளீர்கள்..விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது.. கண்கள் இரண்டால்’’ ஜெய்’’ க்கு இப்பொழுது கழுத்தாட்டம் நின்றுவிட்டதா?

Unknown said...

ப்ரெசென்ட் அண்ணா.
என்னோட வாழ்த்துக்களும் சொல்லிடுங்க ஜெய்க்கு..
வழக்கம் போல கலக்கலான விமர்சனம்
பார்த்துவிட்டு சொல்லுகிறேன்

CS. Mohan Kumar said...

நைட் ரெண்டு மணிக்கு பதிவு போட்டு புல்லரிக்க வைக்கிறீங்க. இந்த படம் எனக்கும் நிறைய எதிர்பார்ப்பை எற்படுதிருக்கு பாக்கணும்

மனோ சாமிநாதன் said...

அழகாய் விமர்சனம் செய்திருக்கிறீர்கள்! அவசியம் தியேட்டர் போய்த்தான் பார்க்கணும் என்ற ஆவலைத் தூன்டி விட்டீர்கள்!! இன்னும் இங்கு இந்தப்படம் வரவில்லை!

RAMA RAVI (RAMVI) said...

விரிவான விமர்சனம் அருமை. படம் பார்க்க தூண்டுகிறது.

Unknown said...

பார்க்கலாம் பாக்கலாம் :)

Bharathi said...

நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

Madhavan Srinivasagopalan said...

இதையும் விட நீங்கள் அதிகமாக ரசிக்கும் படம்.. விரைவில் உங்களை வந்தடையும்..

வெங்கட் நாகராஜ் said...

உங்க விமர்சனம்.... பார்த்துருவோம்.... படத்தை...

Senthil Kumar said...

// 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மதிப்புக் கேள்வி
விமர்சனத்தில் கூட அரசியில் RVS Trademark.

விமர்சனம் சூப்பர்.
உங்க நண்பர் ஓட நண்பனுக்கு வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

நல்ல விமர்சனம். படத்தை பார்க்க துண்டுகிறது.

RVS said...

@சத்ரியன்
பார்த்துட்டீங்களா? :-))

RVS said...

@Ramani
நன்றி சார்! இதுபோல அசிங்கம் இல்லாத படங்களை நாம் வரவேற்கவேண்டும். :-)

RVS said...

@ரிஷபன்
ஆமா சார்! ஒரு நல்ல செய்தியை நல்ல விதமா பேக்கேஜ் செஞ்சு கொடுத்திருக்காங்க... கடைசி ஒரு பத்து நிமிஷம் ஆள நிக்க வச்சு அறுத்துட்டாங்க.. மத்தபடி நல்லாத்தான் இருக்கு. :-))

RVS said...

@ஸ்ரீராம்.
எங்கேயும் எப்போதும் நடக்கும் விபத்துகள், காதல்கள், மோதல்கள், வருத்தங்கள், சந்தோஷங்கள்..... லிஸ்ட் ரொம்ப பெருசு....

கருத்துக்கு நன்றிங்க... :-))

RVS said...

@பத்மநாபன்
கழுத்தாட்டம் நின்று விட்டது ஜி! போனில் பேசும் போது அந்த அபிநயம் தான் ஞாபகம் வந்தது. :-))

RVS said...

@siva
சொல்லிடறேன் சிவா! கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@மோகன் குமார்
ரெண்டு மணியா? இல்லையே மோகன்!! படம் நல்லா இருக்கு.. பாருங்க.. :-)

RVS said...

@மனோ சாமிநாதன்
பாராட்டுக்கு நன்றி மேடம். அவசியம் மிஸ் பண்ணாமல் பாருங்கள். ஒரு முறை பார்க்கலாம். :-))

RVS said...

@RAMVI
பாராட்டுக்கு நன்றிங்க மேடம். :-)

RVS said...

@மழை
முதன் முறையாக வந்து கருத்து மழை பொழிந்ததற்கு நன்றி. பார்க்கலாம்.... :-))

RVS said...

@Bharathi
ஆமாம் பாரதி!! :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
உங்கள் ஆருடத்திற்கு நன்றி மாதவன். :-))

RVS said...

@வெங்கட் நாகராஜ்
டெல்லியில எங்க ஓடுது... :-))

RVS said...

@செந்தில் குமார்
நன்றி செந்தில்!! வாழ்த்தை சொல்லிடறேன். :-)

RVS said...

@கோவை2தில்லி
நன்றி சகோ!! தலய அழச்சிக்கிட்டு போய்ட்டுவாங்க... :-))

சாந்தி மாரியப்பன் said...

ஜூப்பர் விமர்சனம்.

Anonymous said...

//வெண்டைக்காய் மோர்க்குழம்பு போல கொழப்பிவிடுவார்கள்//

Brand RVS

RVS said...

@அமைதிச்சாரல்
ஜுப்பரு தேங்க்ஸு :-)

RVS said...

@! சிவகுமார் !

நன்றி! எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்!! :-))

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails