Thursday, January 5, 2012

மன்னார்குடி டேஸ் - தொல்லைக் காட்சிகள்

”யே! இப்ப படந் தெரியுதா?”
“இல்ல”
"இப்ப”
“உஹும். கொஞ்சம் கிழக்கால சர்ச் பக்கம் திருப்பு”
“இப்ப”
“லேசா வருது. இன்னும் ஒரு ஜான் அந்தப் பக்கமே திருப்பு”
“என்னடா ஜான்... முழம்.. இப்ப”
“ஒரு நாலு விரக்கடை திருப்பு”
“ஆ...ஆங்.. நிப்பாட்டு.. போதும்...போதும்”

எண்பதுகளில் டீ.வி பார்க்க வேண்டுமென்றால் முதலில் கணீரென்று எட்டூருக்குக் கேட்கும் “மன்மத லீலையை வென்றார் உண்டோ” என்ற வெங்கலக் குரல் வேண்டும். தேக்குக்கட்டைத் தொண்டை அவசியம் தேவை. டீ.வி பெட்டி நடுநாயகமாக கொலு வீற்றிருக்கும் ஹாலிலிருந்து மொட்டை மாடியில் ஹெலிகாப்டர் ரூட்டை தடை செய்யும் உயரம் வரை தூக்கி நிறுத்தப்பட்ட (அ) நிறுவப்பட்ட (அ) நிர்மாணிக்கப்பட்ட ஆன்டென்னாவை துடுப்புப் போட்டு “எலேலோ ஐலசா” பாடல் மட்டும் இல்லாமல் படக் காட்சி தெரிய திருப்பும் ”திருப்புறசுந்தர” வசனம்தான் இப்பதிவாரம்பத்தில் உள்ளது. ஒவ்வொரு வசன முடிவிலும் உள்ள எழுத்துக்களை மூன்று மாத்திரை அளவிற்கு நீட்டிப் பாட்டாக முடிப்பார்கள். மேலே ஆன்டென்னா திருப்பியவருக்கு ஜிம்முக்கு போகாமல் தம்படி செலவில்லாமல் நல்ல எக்ஸர்சைஸ். நித்யமும் பத்துமுறை திருப்புவருக்கு சிக்ஸ் பேக் பாடி கியாரண்டி. இப்போது டெலிஷாப்பிங் நெட்வொர்க்கில் சுலபத்தவணைகளில் கிடைப்பது அப்போது அன்டென்னா ரூபத்தில்.

ஒரு சமயத்தில் ஊரில் உள்ள ஹார்ட்வேர் கடைகளில் எல்லாம் “இனிமே லோட் வந்தாதான் சார் பைப்பூ” என்று கடையாளர்கள் கையை விரிக்கும் அளவிற்கு இரும்பு பைப் தட்டுப்பாடு ஏற்பட்டு டி.வி. புரட்சி மலர்ந்தது. ஃப்யூஸ் பல்ப் மட்டுமே கழற்றி மாற்றத்தெரியும் எலக்ட்ரிகல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு கம்பி கட்டி ஆன்டென்னா ஃபிக்ஸ் செய்வது லாபகரமான உபதொழிலாக அமைந்தது. யார் வீட்டு மொட்டை மாடியிலாவது செங்குத்தாக விண்ணைக் கிழிக்கும் ஆன்டென்னா தெரிந்தால் அவர்கள் டீ.வி பொட்டி வைத்திருக்கும் உயர் குடியினராக மதிக்கப்பட்ட காலம்.

எங்களூரில் பூமியில் போர் போட்டு தண்ணீர் எடுப்பதற்கு கூட அவ்வளவு உசரத்துக்குப் பைப் வேண்டா. கட்டுமரத்திலேறி கடல் ஆழத்திற்கு சென்று கொழுத்த மீன் பிடிப்பது போல காற்றில் அலையும் சிக்னல்களை மேகத்திற்கு பாதி தூரம் வரை ஆன்டென்னாவை நீட்டி எக்கிப் பிடித்து டி.வி பார்த்தார்கள். ”முப்பது அடி ஓ.கே. இன்னும் ஒரு பத்தடி போட்டால் நேருக்கு நேரா பார்க்கிற மாதிரி தெரியும்” என்று பூமிக்கும் ஆகாசத்திற்கும் இடைப்பட்ட இடத்தை இரும்பு பைப் ஆன்டென்னாவால் அடி அடியாக நிரப்பினார்கள்.

சென்னையில் டி.வி ஸ்டேஷன் வாசலில் கூட அவ்வளவு பெரிய கோபுரம் வைத்திருக்கமாட்டார்கள். யூ.எம்.எஸ் என்ற ஸிக்னல் பூஸ்டர் ஒரு இன்றியமையாத உபரி சாமான். மழைக்காலத்தில் பவர்ஃபுல் மின்னல் வெட்டித் தயாரிக்கும் சர்ஜ் மின்சாரம் அதற்கு அஜாத சத்ரு. பனால் ஆன பூஸ்டரை மாற்றுவதற்கு ஆன்டென்னாவை இறக்கி ஏற்ற இன்ஸ்டால் செய்ததை விட ஒரு நூறு ரூபாய்தான் குறைச்சல்.

ஆன்டென்னா பாலு எங்கள் வட்டாரத்தில் ரொம்ப ஃபேமஸான ஆள். ஐந்தடி வாமன ரூப ஆள் ரெண்டு ஆறடி திடகாத்திர ஆட்கள் புடைசூழ டி.வி.எஸ் 50ல் வலம் வருவார். கீச்சுக் குரல். கறார் கூலி. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு பேச்சு. வரும்படி அதிகம் என்று கண்டு கொண்டதும் ஆளாளுக்கு பகுதி நேரமாக பார்த்ததை இராப்பகல் அகோராத்திரி இதையே தொழிலாக்கிக்கொண்டு ஒரு சேனையாய் சைக்கிள் பின்னால் இரும்பு பைப்பைக் கட்டிக்கொண்டு திரிந்தார்கள். பேய் பிசாசு நிச்சயம் அண்டாது. பைப்பிற்கு அவரவர் ராசி மற்றும் விருப்பத்திற்கு வண்ணம் அடித்து கலர்ஃபுல்லாக ஏற்றியவர்களும் உண்டு. அன்டென்னா பைப்பின் பாதத்தில் ரோட்டர் பொருத்தி மோட்டார் கொண்டு கீழிருந்து ரிமோட் மூலம் திருப்பும் அடுத்த தலைமுறை டெக்னாலஜியை செயல்படுத்தி அசத்தியவர்களும் இந்த லிஸ்டில் உண்டு.

இரு தூறலுக்கு இடையே இடைவெளியில்லாமல் பொத்துக்கொண்டு ஊற்றும் மாரிக்காலமும், சுட்டெரிக்கும் கோடைக்கால பகல் வேளைகளும் டி.வி பார்க்க உகந்த காலம் அல்ல. இந்த சீதோஷ்ணங்களில் டி.வி திரை முழுக்க ரெண்டு அரைபாடி லாரி மணல் அடித்தது போலத் தெரியும். ”புஸ்....ர்...ச்....” என்று காதை அரிக்கும் சப்தம் இலவச இணைப்பாக.  நம் தேசத்து சொந்தத் தொலைக்காட்சியான சென்னை தூ’ர’தர்ஷனை விட அண்டை நாடான ஸ்ரீலங்காவின் ரூபவாஹினி கன ஜோராக தெரியும்.

தமிழ்ப் பாடல்களும், கழுத்து நீண்ட கிழவிகள் மதுக்கோப்பை கையும் ஸ்கர்ட்டும் போட்டுக்கொண்டு நடிக்கும் டைனஸ்டி என்ற தற்போதைய மெகா சீரியல்களின் ஆங்கில முன்னோடி ரூபவாஹினியில் ஒளிபரப்பாகும் (பிரதி செவ்வாய்/புதன் என்று ஞாபகம்). நைட் ரைடர் போன்ற நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் கார் நடித்த ஆக்‌ஷன் ஆங்கிலத் தொடர்களும் உண்டு. காட்டு மரங்களுக்கு இடையில் கைலியை மடித்துக் கட்டிய டீக்கடைக்காரர் முன்னால் கட்டஞ்சாய் அடிக்கும் வெள்ளை முண்டு கட்டிய பல்லு போன பாட்டி நடிக்கும் தேநீர் விளம்பரங்கள் இடையிடையே வரும்போது சானல் மாற்றமுடியாத கட்டாயத்தில் கண்மூடி தியானத்தில் உட்கார்ந்திருப்போம்.


பிபிஎல் நிறுவனத்தாரின் ப்ளாக் அண்ட் வொயிட் பெட்டிகள் சல்லிசாக விற்றுத் தீர்த்து விற்பனைப் புரட்சி செய்துகொண்டிருந்த வேளையில் நாங்கள் ஹை ரேட்டாக கலர் டி.வி வாங்கினோம். வாங்கிய புதிதில் பழசான எம்.ஜி.ஆர் மறைந்தார். எங்கள் வீட்டில் பிரேதம் கிடந்தது போல துக்கத்துக்கு தெருவாசிகள் டிவி பார்க்க முற்றுகையிட்டார்கள். எம்.ஜி.ஆரின் ட்ரேட் மார்க் ரசிகைகளான தோல் சுருங்கிய தொள்ளைக்காது பாட்டிகள் விசும்பித் தேம்பி அழுதனர். மூக்கைச் சிந்தி சுவரில் புதிதாய் பெயிண்ட் அடித்த சுவரில் துடைத்தார்கள். துக்கத்துக்கு வந்தவர்களுக்கு ஒரு வாய் காபி போட்டுக் கொடுக்காத குறையாக அவரது இறுதி அஞ்சலி ஊர்வலம் எங்கள் வீட்டில் நடந்தேறியது.

வால்மீகிக்கு இணையாக வையகமெங்கும் எண்பதுகளில் போற்றப்பெற்றவர் ராமானந்த் சாகர். ராம ராவணாதிகளை ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கும் வில்லு அம்போடு கொண்டு வந்து நிறுத்தியவர் அவர். வசதி படைத்தவர்களின் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் எட்டிப் பார்த்து எட்டிப் பார்த்து ஒட்டகச்சிவிங்கி மாதிரி கழுத்து நீண்ட பிறகு எங்கள் வீட்டிலும் இராமபிரானின் அருளால் பொட்டி ஒன்று வாங்கினோம்.

இப்போது இராமனுக்கு சேவை புரிந்த அந்த அணிலைக் குத்துபவர்கள் கூட வலது கையில் ரிமோட்டும் இடது கையில் பிட்சாவோடும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் ரஜினி படம் பார்ப்பதற்கு கேபிள் தொடர்பும் வைத்திருக்கிறார்கள். ராம மடத்துப் பாட்டிதான் முதலில் இராமாயணம் வந்து சீட் போடுவார். ஒவ்வொருவராக அசெம்பிள் ஆவதற்கும் டைட்டில் சாங் முடிவதற்கும் கனகச்சிதமாக இருக்கும்.

ராமானந்த் சாகரின் ராமாயணம் இங்கே காணக் கிடைக்கும்.


பக்திப் பழமாக பாட்டிமார்களும், பழமாவதற்கு முன் செங்காயாக தீர்க்க சுமங்கலிகளும், ரிடையர் ஆன பாங்க் மாமாக்களும் ஸ்ரீராமபிரானின் அருளில் மூழ்கித் திளைப்பதற்கு டி.வி பயன்பட்டது. என் பாட்டி பால்யத்தில் பார்த்த திரைப்படத்திலிருந்து  “தேர்ந்தெடுத்து/கடைந்தெடுத்த” பழைய பாடல்களை ஒளிபரப்பும் ”ஒளியும் ஒலியும்” போன்ற நிகழ்ச்சிகள் மூலம் இளசுகளுக்கும் சற்று ஆறுதலைத் தந்தன அட்டீவிக்கள். வெள்ளிக்கிழமை இரவு 7:30 என்று அதற்கு சுபமுஹூர்த்தம் குறித்திருந்தார்கள். அநேக இரவுகள் மணாளனே மங்கையின் பாக்கியமும், வீர அபிமன்யூவின் பௌர்ணமி நிலவொளியில் கிருஷ்ணர் படகோட்டிப் பாடும் “ஆஹா இன்ப நிலாவினிலே”யும் ஜெகம் புகழ போட்டார்கள். அப்போதெல்லாம் சித்ரஹாரும் ரங்கோலியும் பார்ப்பவர்கள் காண்பிக்கும் கெத்து...ப்பா...எழுத்தில் வடிக்கமுடியாது.

அபூர்வமாக ஒரு தீபாவளி நேர ஒ.ஒவில் முன்சொட்டை தெரிய புதியதாக முன்னால் தூக்கி வாரப்பட்ட ஹேர் ஸ்டைல் செய்து கொண்ட ரஜினியின் “ராக்கம்மா கையத் தட்டுவும்”, மனம் பிழன்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் சொட்டு நீலம் போட்டு வெளுத்த அந்த அம்மணியுடன் புலம்பிய “கண்மணி...அன்போட...காதலன்...நான்..நா... எழுதும்” என்ற குணா பாடலும் ஒளிபரப்பினார்கள். சரித்திரம் காணாத அந்த ஒ.ஒவைப் பற்றி நாலு நாளைக்கு கூடிக்கூடி காடு மேடு கழனியெங்கும் பேசிக்கொண்டார்கள்.

மன்னையில் டி.விக்கள் வீதிக்கு நான்காக மலிந்து போவதற்கு முன்னரும் எங்கெளுக்கென்று சொந்தமாக ஒரு இடியட் பாக்ஸ் இல்லாதவே ளையில்  கிரிக்கெட் பார்க்க நானும் வடக்குத் தெரு கோபாலும் பட்ட பிரயத்தனங்கள் பற்றி கொஞ்சம் அலச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தோளுக்கு மேல் வளர்ந்த கோபாலை “எங்கூட வா டிவியில் கிரிக்கெட் மேட்ச் காமிக்கிறேன்” என்று யாராவது ஆசைகாட்டிக் கூப்பிட்டுக் கடத்திக் கொண்டுபோய்விடலாம். கிரிக்கெட் பார்ப்பதில் அவ்வளவு ஈடுபாடு.

ரேடியோவில் எங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கில, ஹிந்தி பாஷாக்களின் அறிவைக்கொண்டு காமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தெற்கு தெரு முரளி வீட்டில் ஒரு கருப்பு வெள்ளை சாலிடேர் வாங்கினார்கள். அவர்கள் வீட்டு முற்றத்தில் பள்ளிகளில் வாசலில் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக்கொடி கம்பம் போல அங்கே ஆன்டென்னா கம்பீரமாக நின்றிருந்தது. முரளியின் அண்ணா ரவியும் நமக்கு நெருங்கின தோஸ்த். ரவி சாஸ்திரி போலவே நெடுநெடு உயரம். சுருட்டை முடி. மெலிந்த தேகம். சீமைத்துரை போன்ற தோற்றம். முரளியின் தந்தையார் நல்ல ஓவியர். அரசுப்பள்ளியில் ஓவிய ஆசிரியரும் கூட. அதிகம் வாயைத் திறக்க மாட்டார். நான் அதிகம் வாயைத் திறக்காமல் இருக்க மாட்டேன்.

டி.வியில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பிக்கும் நேரத்திற்கு நானும் கோபாலும் தெற்குத்தெரு மண்டபம் பின்னால் இருக்கும் சாலிடேர் வீட்டை சைலன்ட்டாக முற்றுகையிடுவோம். சைக்கிள் ஸ்டாண்ட் போடும் சத்தம் கூட எழாது. படையோடு போகக்கூடாது. வீட்டை ஸ்டேடியம் ஆக்கும் அபாயம் உள்ளதால் உள்ளே விடமாட்டார்கள். “முரளி” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி ஆடியோ க்ரிப்ட்டோகிராஃபியில் ஒரு சங்கோஜ கூப்பாடு போட்டுவிட்டு சற்று நேரம் மறுவொலி எழுப்பாமல் அமைதியாக வெளியே காத்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட உளவு பார்க்கும் ஒற்றர்கள் தோரணையில் இருக்கவேண்டும். “உஷ். சத்தம் போடாதே” என்று ”வசீகரா...என் நெஞ்சினிக்க..” பாடும் பாம்பே ஜெயஸ்ரீயின் ஹிஸ்கி வாய்சில் வாய்மேல் விரல் வைத்துக்கொண்டே வந்து அந்த நீலக் கலர் சட்டம் போட்ட கதவைத் திறந்து உள்ளே விடுவான். ட்ராயிங் மாஸ்டர் மரச்சேரில் மௌனமாக டிவியைப் பார்க்க வீற்றிருப்பார். அந்த டார்க் ரூமின் சுவரோரத்தில் நானும் கோபாலும் பல்லி போல அவையடக்கமாக உட்கார்ந்திருப்போம்.

ஒரு சிக்ஸருக்கு உற்சாகமாக கைதட்டுவதோ அல்லது விக்கெட்டுக்கு வருத்தமாக உச்சுக் கொட்டுவதோ கூட கூடாது. வாயடக்கமாக உட்கார்ந்து பார்த்துவிட்டு இரவு மதில் கட்டையில் குழுமும் நண்பர்களிடம் ஸ்டேடியத்தில் பாப்கார்ன் கொரித்துப் பார்த்தது போல கதையளப்போம். அதிமுக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த டிவியில் 75% டாட்டுகளுக்கு மத்தியில் 25% சித்திரம் தெரியும். ஊரில் எல்லா டிவிக்கும் அதே கதிதான். க்ரீஸில் காலைப் பரப்பி மட்டையைப் பிடித்து நிற்கும் பிக்ஸல் கூட்டத்தை ஸ்ரீகாந்த் என்றும் எதிர்முனையில் கொஞ்சம் குள்ளமாக மெதுவாக ஓடிவரும் பிக்ஸல் அணிவகுப்பை கவாஸ்கர் என்றும் ஒரு கெஸ்ஸில் பார்க்கவேண்டும். சிக்ஸருக்கு காமிராவைத் தூக்கி விண்ணில் செல்லும் பாலைக் காண்பித்தால் புள்ளியோடு புள்ளியாக பந்தும் கரைந்துவிடும். டி.வி திரையில் மும்மாரி மழை எப்போதும் பொழிந்துகொண்டே இருக்கும். எளிமையாக சொல்வதென்றால் கமெண்ட்ரி கேட்கும் ரேடியோவை விட ஒரு படி மேல். அவ்வளவுதான்.

இப்படி கருப்பு-வெள்ளையில் பார்த்துக்கொண்டிருந்த போது பிருந்தாவன் நகரில் கோபாலின் நண்பன் பாய் வீட்டில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புத்தம்புது கலர் டிவி வாங்கியிருந்தார்கள். அப்போதே செட்டாப் பாக்ஸ் வைத்து சாட்டிலைட்டிலிருந்து நேரடியாக சிக்னல் இறக்கி புள்ளியில்லாமல் டி.வி பார்த்த படாடோபர்கள். பாய் வீட்டில் கொஞ்சம் பேசலாம். கொஞ்சம் கை தட்டலாம். கொஞ்சம் உச்சும் கொட்டலாம். ஆனால் அங்கும் ஒரு லிமிட்டோடு அதையெல்லாம் நிறுத்திவிடவேண்டும். இல்லையென்றால் பாய் சூறாவளியாய் உள்ளே வந்து “அத்தா வைவாஹ” என்று கண்டித்து வாய்க்குப் பூட்டு போட்டுவிடுவான். இதில் ஒரு சின்ன பிரச்சனை என்னவென்றால் பாய்க்கு கிரிக்கெட் அவ்வளவாக பிடிக்காது. சில சமயங்களில் அவ்வளவும் பிடிக்காது. பாதி நாள் “அண்ணே இல்ல” என்று தங்கச்சி குரல் மட்டும் சாத்திய கதவுக்கு பின்னாலிருந்து வெளியே வரும். அப்படியே திரும்பி தெக்குத் தெரு க-வெக்கு வந்து தஞ்சமடைவோம்.

சன் டிவி கோலோச்ச ஆரம்பித்ததும் மன்னைக்கு புதுரத்தம் பாய்ச்சப்பட்டதைப் போன்ற உணர்வு. சாயந்திரவேளைகளில் வம்பு பேச வீட்டு வாசல்களில் குழுமும் மகளிர் கூட்டம் குறைந்துவிட்டது. ஆங்காங்கே தெருவோரத்தில் சவுக்குக் கோலூன்றி கேபிள் சுற்றி இழுத்தார்கள். கும்சுகு கும்சுகு குப்புச்சும் பாடலில் மனிஷா கொய்ராலா அர்விந்த் சாமியை 360 டிகிரிக்கு விசிறிப் பார்த்து தேடி முடிப்பதற்குள் நகருக்கு கேபிளினால் பரிவட்டம் கட்டியிருந்தார்கள். சன்னோடு ஸ்டார் தொலைக்காட்சியையும் காண்பிக்கிறேன் என்று வடக்குத் தெரு சரவணன் கேபிள் டி.வி ராஜாங்கத்தை எங்கள் பேட்டையில் தொடங்கினான். அவர்கள் வீட்டு மாடியறைதான் கேபிள் டி.வி அலுவலகம். மேட்ச் நாட்களில் வேறு பக்கம் டிஷ்ஷைத் திருப்பி வீட்டிலிருக்கும் திருமதிகளுக்கு சினிமா காண்பித்துவிட்டு வெளியே போய்விடும் சரவணனை கிரிக்கெட் பார்க்க கையோடு அழைத்துவருபவர்கள் நானும் கோபாலுமாகத்தான் இருக்கும்.

ஊரில் புதிதாய் டி.வி வாங்கிய எல்லோருக்கும் “டெக்” போட்டுப் புதிய படம் பார்க்கும் ஆர்வம் கற்பாந்த காலப் படங்களுடையது போல ரீல்ரீலாக இருந்தது. பந்தலடி ரங்கூன் விடியோஸில் ஒரு இரவுக்கு நாற்பது ரூபாய்க்கு டெக்கும் நான்கு படங்களும் வாடகைக்கு தருவார்கள். சத்யராஜின் “ஆளப்பிறந்தவன்” படம் ஐந்தாறு முறை “ஆண்டவனைப் பார்க்கணும்... அவனுக்கு ஊத்தணும்... அப்ப நான் கேள்வி கேட்கணும்... சர்வேசா... தலையெழுத்தெந்த மொழியடா....” என்ற agnostic வரிகளில் க்ரீச்சிட்டு நின்றுவிட்டது. கூட்டம் கொஞ்சம் கூட அசராமல் அப்படியே உட்கார்ந்திருந்தது. கையால் கொஞ்ச தூரத்துக்கு கேசட் உருளைகளைச் சுற்றிவிட்டு போடும் தனித்திறமை மிக்கவர்கள் முழுப்படம் பார்க்கலாம். சுழற்றுகிறேன் பேர்வழி என்று ஆர்வலன் ஒருவன் இழுக்க ஒளி நாடா முழுவதும் உருவிக்கொண்டு வெளியேவந்து விழுந்தது. தரையில் நாடா நூடுல்ஸ் மலை. அன்றைய தினத்தோடு எங்கள் வீட்டில் டெக் சினிமா பழக்கம் தடைசெய்யப்பட்டது.

நிறைய கீறல் விழுந்த, கண்ணை அரிக்கும் ஆபத்தான விடியோ கேசட்டுகள் புழக்கத்தில் வர கொஞ்சம் கொஞ்சமாக டெக் போதையிலிருந்து மக்கள் மீண்டார்கள். அந்த இராப்பொழுது முழுவதும் கண் முழிக்கும் கெட்டப் பழக்கத்தை கைவிட்டார்கள். சன் டிவியினர் நிறைய புதுப்படங்களையும் சினிமா நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி மக்கள் மத்தியில் மங்காப் புகழ் பெற்றார்கள். அப்புறம் நிலா தொலைக்காட்சி, விஜய் என்று வரிசையாக சாட்டிலைட்டில் நிறைய பேர் கடை விரித்தார்கள். மாலை வேளைகளில் அக்கம்பக்கம் வீடுகளில் சௌஜன்யமாகப் பேசிப் பழகி வந்த மக்கள் அனைவரும் ஹாலுக்குள்ளேயே முடங்கிப்போனார்கள். ஆறு மணிக்கெல்லாம் வெளியே ஊர் அடங்க ஆரம்பித்துவிட்டது. வீட்டிற்குள் “தமிழ் மாலை” ஒலிக்கத்தொடங்கியது.

பின்குறிப்பு: போன பாரா இந்த நெடிய மன்னார்குடி எப்பிஸோடை முடிப்பதற்காக அவசராவசரமாக எழுதப்பட்டது.

பட உதவி: http://8ate.blogspot.com/
-

36 comments:

Angel said...

//மாலை வேளைகளில் அக்கம்பக்கம் வீடுகளில் சௌஜன்யமாகப் பேசிப் பழகி வந்த மக்கள் அனைவரும் ஹாலுக்குள்ளேயே முடங்கிப்போனார்கள்.//


நேரில் பார்த்தேன் இம்முறை ஊர் சென்றப்போ
என்ன சொன்னாலும் எண்பது தொண்ணூறு ஆரம்பத்தில் தொலைக்காட்சி பார்க்க ஆசையா இருக்கும் .சிட்டுவேஷன் சாங்க்ஸ் மழைக்கு போடுவாங்களே அப்புறம் எதிரொலி /முன்னோட்டம் இதெல்லாம் ஒரு தனி ஆசை பார்க்க .சோவின் நாடகங்கள் பனிரெண்டு எபிசோடில் முடியும் டிராமாக்கள் எல்லாமே சூப்பர்தானே சாலிடேர் டிவிக்கு எம்ப்ரைடரி போட்ட ஸ்க்ரீன் எல்லாம் போட்டு அழகா இருக்கும் .எங்க தெருவில் சில வீட்டுக்காரங்க ஒரு தலைக்கு 25 பைசா வாங்கித்தான் டிவி பாக்க விடுவாங்க .

Roaming Raman said...

//75% டாட்டுகளுக்கு மத்தியில் 25% சித்திரம்//- என்ன ஒரு வர்ணனை!! அந்தக் காலகட்டங்களில் அடியேன் டிவி டெக்னீஷியன்.(மெக்கானிக் என்று சொன்னால் கோபம் பொத்துக் கொண்டு வரும்!-இன்றும்!!மறக்க முடியாதது:- எம் ஜி ஆர் மறைந்த அன்றும் அடுத்த நாளும், எல்லாக் கடைகளும் மூடப் பட்டிருக்க, என் வீட்டிற்கு டிவி ரிப்பேர் பண்ணிக் கொடுக்க, சாரி சாரியாக மக்கள் வருகை! பலன்- நல்ல வருமானம்.அதே போல OUTSOURCE முறையில் பலருக்கு வேலை வாய்ப்பளித்த பெருமையும் நமக்குண்டு! நாமெல்லாம் ஆண்டெனாதான் பிரச்னை என்று கண்டு பிடிப்பதோடு சரி- அதை சரி செய்வதற்கு ஒரு ஐந்து பேர் குழு இருந்தது(Mechanic Team?) இப்போ நம்ம டிவியைவே கம்பெனிக் காரந்தான் வந்து அட்டன்ட் பண்ணுகிறான்! தொழிலை மாற்றி ஒரு பதினான்கு ஆண்டுகள் ஆச்சு! ஒரு சூப்பர் ஃபிளாஷ் பேக் ஒட்டி விட்டீர்..ஒரு அருமையான புது பைக்கில் ஏறி பெரிய ரவுண்ட் அடித்த திருப்தி!

Rekha raghavan said...

அருமை.இப்படி சுவாரசியமா எழுத கொடுப்பினை வேண்டும். அது உங்களுக்கு நிறையவே இருக்கு. தொடர்ந்து விருந்தளியுங்கோ!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அய்யோ சாமி RVS சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. கண்ணில் தண்ணீர்
வர மனம் விட்டு சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு. தூர்தர்ஷனில் வரும்,வெள்ளிக் கிழமை ஒளியும் ஒலியும்,செவ்வாய்க் கிழமை நாடகம் பார்க்கரத்துக்காகவே சீக்கிரமே பாடங்களை படிச்சது,
திரையரங்கு மாதிரி பக்கத்து வீட்டு பாட்டி, எதிர்த்த வீட்டு அக்கா என நிறைய பேர் சேர்ந்து டிவி பார்த்தது,
அது ஒரு பொற்காலம். நாம சின்ன பிள்ளைகளா இருந்த காலத்தில் எல்லா பொருளும் அபூர்வமா
இருந்ததுனால, ஒரு ஈர்ப்பு இருந்தது. இப்ப பிள்ளைகளுக்கு கேட்டவுடனே எல்லாம் கிடைத்துவிடுவதால் எந்த விஷயமுமே பெரிதாகவோ, எதிலும் ஒரு சந்தோஷமோ இல்லை.
பழைய நினைவுகளை மீட்டெடுத்த உங்களுக்கு மிக்க நன்றி RVS .

அப்பாதுரை said...

ரூபவாஹினி நினைவிருக்கிறது. ஏன்டெனாவில் காசித்துண்டைக் காயப் போடக்கூடாது என்று விடாமல் புலம்பியதும்.
நீண்ட நாள் கழித்து உருப்படியாக எழுதியிருக்கிறீர்கள் :) வாழ்க.

அந்த நாளில் மன்னார்குடியில் சேடலைட் டிவியா.. ஆச்சரியம்! பஸ்செல்லாம் எப்ப வந்துச்சு உங்க ஊருக்கு? :)

ரஹீம் கஸ்ஸாலி said...

மறக்கமுடியாத நினைவுகளை கிளறி விட்டது இந்தப்பதிவு. ஒரு வின்னை தொடும் ஆண்டெனா, பூஸ்டர், அதிலும் தெளிவாக தெரியவில்லையென்றால் டியூன் செய்ய ஒரு குச்சி போன்ற சாதனம். அப்போதெல்லாம் தூர்தர்சன், இலங்கை ரூபவாஹினி மட்டுமே மக்களின் பொழுதுபோக்கு. சாலிடர், டயொனரா கம்பேனி டி.வி.க்கள் மட்டுமே மக்களின் வரப்பிரசாதமாக இருந்த காலம்.

எங்கள் வீட்டில் இரண்டாயிறம் வரை கருப்பு வெள்ளை டி.விதான்.

ஹாலிவுட்ரசிகன் said...

முன்பு நம் வீட்டிற்கு இரண்டு சானல்கள் வெவ்வேறு ஆங்கில்களில் வைத்தால்தான் சரியாக வரும். மாறி மாறி அந்த சானல்களில் காட்டும் கார்ட்டூன்களை பார்க்க மூச்சு வாங்க சரியா சரியா எனக் வீட்டுக் கூரையில் நின்று கத்திக் கேட்டுத் திருப்பிய காலங்கள் இப்பொழுது நினைத்தால் இனிக்கிறது.

நிறைய இனிய பழைய ஞாபகங்களை கிளறி விட்டீர்கள். மிகவும் நன்றி.

Madhavan Srinivasagopalan said...

என்னமா இருக்கு எழுத்துநடை..

ஒவ்வொரு வரிகளையும் ரசித்து படித்தேன்.. மன்னையின் நினைவுகளை மறக்க முடியுமா ?

'ஆளவந்தான்' அல்ல அது.
அது 'மக்கள் என் பக்கம்' என்று நினைக்கிறேன். சத்யராஜ், நிழல்கள் ரவி மற்றும் ரகுவரன் நண்பர்களாக இனைந்து நடித்தது.

Unknown said...

மைனர் வாள்
கலக்கல் போங்கோ
அந்த ஆண்டெனா
திருப்பும் கதை கேட்டு சிரிப்பு வந்தது
பழைய நியாபகமும்

ம் உண்மைதான் மனிதர்களிடம் பேசுவதை விட
மடிகநியிடமும்
தொல்லை காட்சியிடம் தொடர்பில் இருப்பதுதான்
அதிகம் பரவி வருகிறது

சுசி said...

சார் ! தூர்தர்சனில் செகண்ட் சேனல் வந்த புதிதில் ஹிந்தியில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட சீரியல்ஸ் வருமே. அப்புறம் "ஜுனூன்" பாஷை என்று ஒரு புது விதமான தமிழ் கொஞ்ச காலம் இருந்தது. தமிழ் சரியாக தெரியாமல் வடநாட்டில் வளர்ந்த என் அத்தை பசங்கலாம் "are you coming tomorrrow?" என்பதை "நாளைக்கு நீ வந்துண்டு இருக்கியா?" என்று மொழி பெயர்த்து பேசியது "ஜுனூன் தமிழ்" தான். "வாழ்கையை rewind செய்து திருப்பியும் எண்பதுகளுக்கு கொண்டுபோய் விட்டுடு கடவுளே!" என்று வேண்ட தோன்றுகிறது. நல்ல பதிவு.


அப்புறம், அந்த சத்யராஜ் படம் "மக்கள் என் பக்கம்".

Kumaran said...

அருமையான பதிவு, மீண்டும் எண்பதுகளுக்கு சென்று வந்த ஒரு உணர்வு, நன்றி.

selva said...

எழுபது எண்பதுகளில் தீபாவளி ,திருவிழா நாட்களிலே நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று சந்தோசமாய் பொழுது போக்கி வருவோம்...வரலன்னா கோவிச்சுக்குவாங்க.இப்ப அது மாதிரி நாட்களில் சென்றால் வாயை நமக்கும் கண்ணை தொல்லை காட்சிக்கும் செலவழித்து கொண்டிருக்கிறார்கள்.மக்கள்.பரிணாம வளர்ச்சியை சிறப்பாய் சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

இந்த இடியட் பாக்ஸ் - பார்ப்பதற்கே எவ்வளவு கஷ்டப் பட்டிருப்போம்.... இப்பவும் கஷ்டம் தான் - அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு.....

என்னவொரு ஃப்ளோ எழுத்தில்.... ரசித்தேன் மைனரே......

சிவகுமாரன் said...

அப்படியே என் இளமைக் காலத்துக்கு கூட்டி சென்று விட்டீர்கள்.
என் அப்பா சிங்கப்பூரில் இருந்து சோனி கலர் டிவி வாங்கி வந்த நேரம் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றான் ஒரு சிங்கு.
எங்க தெரு மட்டும் இல்லாமல் பக்கத்து தெருவில் இருந்தெல்லாம் துக்கம் விசாரிக்க வந்தார்கள்.
டிவிப் பெட்டியின் மேல் அப்போது இருந்த கிரேஸ் இப்போது இல்லை

சிவகுமாரன் said...

வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு ஒளியும் ஒலியும் நிகழ்ச்ச்யும் , வியாழன் இரவு DD இல் சித்ரஹார் நிகழ்ச்சியும் ( ஒரேயொரு தமிழ்ப் பாடல் மட்டும் )
தந்த மகிழ்ச்சிக்கு இணையாக இன்று எந்த சானலின் நிகழ்ச்சியும் இல்லை.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மாஸ்டர் பீஸ் ஆர்விஎஸ். இப்படி எழுதும் அடிக்கடி.

R.SOLAIYAPPAN said...

Dear Sir,

Wish you a Happay Pongal & Mattu Pongal

R.Solaiyappan.

தக்குடு said...

என்ன ஒரு எழுத்து நடை ஒய்ய் மைனர்வாள்! ஒவ்வொரு காட்சியும் அப்பிடியே கண்ணு முன்னாடி நிக்கர்து. சுவாரசியதிலகம் தான் போங்கோ! எங்கதெருல ஆண்டனாவை ரொம்ப திருப்பி ஒரு ஆத்துல மலையாள தூர்தர்ஷன் வந்துடுத்து! :)

RVS said...

@angelin
ஆமாங்க... பக்கத்துவீட்டாருடன் பேசும் மனநிலையில் யாருமில்லை. இப்போதெல்லாம் டிவியில் வரும் கதாபாத்திரங்களோடு பேசிக்கொள்கிறார்கள்.
கருத்துக்கு நன்றி :-)

RVS said...

@Roaming Raman
டெக்னீசியன் ரசித்ததற்கு நன்றி. :-)

RVS said...

@ரேகா ராகவன்
சார்! நீங்க ஒரு பக்கத்தில் ரெண்டு ட்விஸ்ட் வச்சு கதை எழுதி அசத்துறீங்க... இதெல்லாம் நான் பிக்‌ஷன்... பாராட்டுக்கு நன்றி. :-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
காத்திருந்து தவித்து ஒன்றைப் பெறுவது நீண்ட நாள் நினைவில் நிற்கும். அதைக் காபந்து செய்யவும் முனைவோம். இப்போதெல்லாம் டேக் இட் ஈஸி பாலிஸி மேடம்..

சிரித்ததற்கும் பாராட்டியதற்கும் நன்றி. :-)

RVS said...

@அப்பாதுரை
அப்பாடி! ஒருவழியாக உருப்படியாக எழுதினேன். பாராட்டுக்கு நன்றி தலைவரே!!

மன்னார்குடியைப் பற்றி என்ன நினைத்தீர்கள். அது மன்னர்குடியாக்கும். :-)

RVS said...

@ரஹீம் கஸாலி
ஆனால், முன்பெல்லாம் தன் வீட்டில் டி.வி இல்லையென்றால் யாரும் அனத்தவும் இல்லை. இப்போது இது அத்தியாவசியமான ஒன்று. :-)

RVS said...

@ஹாலிவுட்ரசிகன்
கருத்துக்கு நன்றிங்க.. :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
பாராட்டுக்கு நன்றி மாதவா! ஆமாம்.மக்கள் என் பக்கம். தப்பா எழுதிட்டேன். :-)

RVS said...

@siva sankar
பாராட்டுக்கு நன்றி சிவா! :-)

RVS said...

@Thanai thalaivi
இந்தப் பதிவை ஒரு மெகாத்தொடராக எழுதும் அளவிற்கு சரக்கு இருக்கிறது. பரவாயில்லை என்று ஷார்ட்டாக முடித்துக்கொண்டேன் மேடம்.

கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@Kumaran
பாராட்டுக்கு நன்றி குமரன். :-)

RVS said...

@pudukai selva
நல்ல கருத்து. வாழ்த்துக்கு நன்றிங்க.. :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரமே! உங்க பக்கம் எட்டிப் பார்க்கணும். ரொம்ப நாளாச்சு. :-)

RVS said...

@சிவகுமாரன்
எதுவுமே அளவாக இருந்தால் ருசிக்கிறது சிவா. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடுகிறது.

இப்போ.. எப்பப் பார்த்தாலும் பாடல் போடுகிறார்கள். காது கிழிகிறது. :-)

RVS said...

@சுந்தர்ஜி

மிகவும் நன்றி ஜி! உம்ம வாயிலேர்ந்து... :-))))

RVS said...

@R.SOLAIYAPPAN
நன்றி சார்! மறக்காமல் மாட்டுப்பொங்கல் வாழ்த்து சொன்னதுக்கு... :-)

RVS said...

@தக்குடு
மலையாள பகவதி யாராவது வராமல் இருந்தாங்களே.... அது போதும்...

பாராட்டுக்கு நன்றி கல்லிடையின் காதல் மன்னா! :-)

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பிதழ்:

உங்களது இவ்விடுகையை இன்றைய வலைச்சரத்தில் “ஞாழல் பூ - அனுபவச்சரம்” என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_08.html

நேரம் இருக்கும் போது வந்து பார்வையிட அழைக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails