Tuesday, March 6, 2012

ஆத்ம பயம்

 அரை மைலுக்குப் அப்பால் மத்தியான ஒற்றைக் காகம் செல்ஃபோன் டவரிலிருந்து கரைந்தால் உங்கள் வீட்டு டமார செவிட்டுப் பாட்டிக்குக் கூட காது கேட்கும் ஓர் அமைதியான பகுதி. நிர்ஜனமான வீதிகள். விரோதமாய்ப் பிரிந்திருக்கும் தனித் தனி வீடுகள். இரவு எட்டு மணிக்கு மேல் தாய்மார்கள் தனியாக நடந்து வந்தால் தாலிப் பறிப்பு சம்பவங்கள் அசால்டாக நடக்கும் இடம். பகலில் கூட தெரு நாய்கள் சங்கம் வைத்துத் தெரு பிரித்துக்கொண்டு தனது ராஜ்ஜியத்தை நடத்திக்கொண்டிருக்கும். இப்படி ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு புறநகர்ப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்திருந்தான் விஷ்ணு. “டாய்.. டாய்... இது அநியாயம்டா.. துளிக்கூட டிஸ்டர்பன்ஸ்ஸே கூடாதுன்னு இப்டி ரிமோட்டா வீடு பார்த்தியாடா?” என்று பார்த்தி ஏற்கனவே இடுப்பைக் குத்தி கண்களைச் சிமிட்டி கேலி செய்திருந்தான்.

அனிதா அங்கு வந்த முதல் நாளே “எப்பங்க ஆபீஸ்லேர்ந்து வருவீங்க. தனியா இருக்க எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு” என்று ஏக்கம் பாதி பயம் பாதி கலந்து கேட்டாள்.

“சீக்கிரம் ஓடி வந்துடுவேண்டா புஜ்ஜிக் கண்ணு” என்று செல்லமாக கண்ணத்தில் தட்டி பதில் சொன்னான்.

“நீங்க ரொம்ப பிசியா? ஆஃபீஸ் போனா ஃபோன் பண்ண மாட்டீங்களா?” அடுத்த நாள் ஷூ மாட்டும் போது காதருகே உஷ்ணமாகக் கேட்டாள். புலனனைத்தும் விழித்துக்கொண்டது.

“நாந்தான் அங்க ஆல் இன் ஆல். நெனைப்பெல்லாம் உன்ன சுத்தியே வந்தாலும் பேச முடியாதுடா ராஜா” இம்முறையும் கண்ணத்தில் ஒரு செல்லத்தட்டும் இச்சும் வைத்து ஒரு மந்தகாசப் புன்னகையும் உதிர்த்தான்.

அனிதா ரெண்டு வாரமே ஆன புத்தம் புதுப் பொண்டாட்டி. மறுவீடு, கறி விருந்து என்ற சொந்தங்களின் உபசரிப்பு தாக்குதல்களிலிருந்து தப்பித்து திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகியிருந்தது. தாலியில் பூசியிருந்த கஸ்தூரி மஞ்சள் இன்னமும் கமகமத்தது. தலைக்குக் குளித்து துண்டோடு கொண்டை போட்டிருந்தாள். இந்த காஸ்ட்யூமிற்கு நீங்கள் யூகித்தது போலவே நெற்றியில் சின்ன விபூதித் தீற்றல். உச்சி வகிட்டில் ஸ்ரீவித்யா குங்குமம்.

தலை முழுகிய கேசத்திலிருந்து நீர் சிந்தி பின்புற ஜாக்கெட்டில் மேப் வரைந்திருந்தது. கைகளில் மருதாணி கருத்திருந்தது. சூடு உடம்பு. எந்நேரமும் இந்நேரமும் முதலிரவு மயக்கத்தில் இருந்தாள். முகத்தில் ’அந்த’ சந்தோஷப் பூரிப்பு ’ஏ’த்தனமாகத் தெரிந்தது. அவர்கள் இருவரும் அடல்ஸ் ஒன்லியாக குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

விஷ்ணு பக்கத்தில் வரும்போதெல்லாம் அவளுக்குள் ஒரு புதுவித மின்சாரம் பாய்ந்தது. பாலீஷ் போட்ட இறக்குமதி சைனா ஆப்பிளாய் வெட்கத்தில் கண்ணம் சிவக்கும். கால்கள் கட்டாந்தரையில் சிக்குக் கோலம் போடும். நிலம் நோக்குவாள். அவனிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பாள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை. விஷ்ணு பத்து மணிக்குத்தான் எழுந்து சோம்பலாகப் பல் துலக்கினான். ப்ரூ காபி உறிஞ்சிய பின் “ஏய்! இங்க வா” கைலியை சுருட்டி கால்களுக்கிடையே சொருகிக்கொண்டு ஹஸ்கி வாய்சில் குழைந்தான். அவன் நின்று கூப்பிட்ட இடம் அவர்களது கட்டிலறை. அவனது “வா”வில் ரகசிய ஆசை நிறையவே கலந்திருந்தது. வெளியே காதலர்களுக்கேற்ற பருவநிலை நிலவியது. மேகமூட்டத்துடன் சிலுசிலு காற்று வீசியது. சமீபத்தில் பால் சொம்பு ஏந்தி அலங்கரித்த அறை சென்ற நினைவுகள் அவளுக்குள் திரும்பவும் வட்டமிட்டன. விஷ்ணு தலை உத்திரத்தை இடிக்கும் உயரம். திருமாலே பூவுலகிற்கு இறங்கிவந்து விஸ்வரூபம் எடுத்து நின்றமாதிரி கையை இடுப்பில் வைத்துக்கொண்டு நிற்பான்.

பின்னாலிருந்து தடிமாடு வில்லன் கட்டையை எடுத்து ஆவேசமாய் தோளில் அடித்து உடைக்கும் வலுவுள்ள தேக்கு மாதிரி தோள்கள். கொலுசு ஜலஜலக்க அடிஅடியாய் அனிதா அவனை நெருங்கினாள். ஆசையையும் காதலையும் அவளது கண் காட்டிக்கொடுத்தது. ஜன்னல் கதவு வெட்கமில்லாமல் திறந்திருந்தது.

தொட்டால் பற்றிக்கொள்ளும் இடைவெளியில் வந்து நின்றாள். அவளை விழுங்கிவிடுவது போல பார்த்தான் விஷ்ணு. இப்போது அவளுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறந்தது. கண் துடித்தது. எவ்வளவு சினிமா பார்த்திருக்கிறோம். அதே ஃபீலிங். டி.வியில் ஏதோ சேனலில் “கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்பிடிடா” என்று அவர்களுக்காக சிச்சுவேஷன் சாங் ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்.

“என்ன?” தெரியாதது போலக் கேட்டாள்.

“இன்னும் பக்கத்தில நெருங்கி வா” ஆர்வமாகக் கூப்பிட்டான்.

“வேலை நிறையா இருக்குங்க.” போலியாகச் சொன்னாள்.

“இதுவும் வேலைதான்” ஆர்டர் போட்டான்.

“சொன்னாக் கேளுங்க.. இல்லைனா மத்தியானம் வயித்துக்குப் பூவா கிடையாது” பொய்க் கோபம் காட்டினாள்.

“பரவாயில்லை. இதே மாதிரி ஒரு வருஷம் கூட அன்னம் தண்ணி இல்லாம இப்படியே இருக்கலாம் தெரியுமா?” ஆசையை அப்படியே காண்பித்தான்.

“சாப்பிடலைன்னா எப்படி மத்த வேலையெல்லாம் செய்யறதாம்” மீண்டும் ஊடல்.

“அடிக் கள்ளி!” இழுத்து அணைத்தான். முடிந்தது.

“ச்சீ. நா உள் வேலையெல்லாம் சொன்னேன்” அவனின் கரங்களுக்குள் அடைக்கலமாகி பனியனை மீறிய ரோம நெஞ்சில் டம்டம்மென்று குத்தினாள்.

”நானும் அதைத்தான்...” குறும்பாக இறுக்கினான். இடைக் கரும்பு நசுங்கியது. சாறு பிழியும் நேரத்தில்....

“டப்..டப்..டப்....” வாசல் கதவு பலமாகத் தட்டப்பட்டது. 

யாரது காமன் பூஜையில் கரடி?

“யாரு?”

பதிலில்லை.

”யாரு?”

அந்த மத்தியான செல்ஃபோன் டவர் காகம் கரைவது தெளிவாகக் கேட்டது.

டக்கென்று கதவு திறந்தாள் அனிதா.

இரு காவலர்கள் சீருடையில் நின்றிருந்தனர்.

இருவருக்கும் பகீரென்றிருந்தது.

“காலேஜ்லேர்ந்து ரமேஷ் கூட சுத்தினோம். அவனைச் சுத்தமா மொட்டையடிச்சு அவன் கிட்ட இனிமே பசையில்லைன்னு தெரிஞ்சவுடனே “நீங்க என் அண்ணன் மாதிரி”ன்னு அடிச்சு சொன்னோம். அந்த துக்கத்தில பாலக்கரைக்கு பக்கத்தில தூக்கி மாட்டி செத்துட்டானே. நம்மளோட லெட்டர், ஹேர் பின் எதாவாது போலீஸ் கைக்குச் சிக்கி விசாரணைக்கு வந்துட்டாங்களோ.” அனிதாவின் மனசு அடித்துக்கொண்டது.

”அடக்கடவுளே! தமிழரசி பெரிய மனுஷன் வீட்டு பொண்ணு. மெரினா, பீச், சுண்டல் அலுத்துப் போய் மகாபலிபுரம் அழைச்சுக்கிட்டுப் போயிருந்தோம். அங்கே மழை சொட்ட சொட்ட பெய்த போது அவளோட வளைவுகள் நம்மை வளைச்சப்போ ட்ரெஸ் மாத்தறத்துக்கு ரூம் எடுத்து கொஞ்சம் அப்படி இப்படி நடந்துக்கிட்டோம். ரெண்டு மாசத்துக்கப்புறம் கண்ணீரும் கம்பலையுமா அவ வந்து நின்னப்போ கையை விரிச்சுட்டு டேக்கா கொடுத்துட்டு ஓடி வந்துட்டோம். அவ அப்பங்காரன் கேஸ் கொடுத்துட்டானோ” விஷ்ணு ஏகத்துக்கும் கலவரமானான்.

”ஹலோ! என்னாச்சுங்க.. ரெண்டு பேரும் பேசாம சிலையாயிட்டீங்க”

“உ.....ங்க...ளுக்கு என்ன வேணும்” அனிதா மென்று விழுங்கிக் கேட்டாள்.

“நீங்க புதுசா குடி வந்துருக்கீங்க. இங்க நிறைய கொலை, கொள்ளைன்னு நடக்குது. இந்த ஏரியா ஸ்டேஷனுக்கு புதுசா மொபைல் வந்துருக்கு. அதான் வீடு வீடா எச்சரிச்சு அந்த நம்பர் கொடுத்துட்டு போலாம்னு வந்தோம்”

எழுதிக் கொடுத்தார். குறித்துக்கொண்டார்கள்.

“தேங்கஸ்!” கோரஸாக சொன்னார்கள்.

போலீஸ் ரெண்டும் போன பிறகு, தங்கள் காவியக் காதலை மீண்டும் தொடர்ந்தார்கள்.

பத்து நிமிடம் காதலாய்க் கடந்திருக்கும்.

”டப்..டப்...டப்... “ வாசல் கதவு மீண்டும் பலமாகத் தட்டப்பட்டது.


யாரது?

தமிழரசியா? ரமேஷா?

படம் நன்றி: http://www.townlog.com

-

11 comments:

Ponchandar said...

"யாரது?

தமிழரசியா? ரமேஷா?"

--விடுங்க பாஸ் ! ! யாரேனும் இருந்துட்டு போகட்டும்.... இன்னும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு கதவை தட்டச் சொல்லுங்க ! ! !

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

ஆத்ம பயம் - வரவேண்டியதுதான்.... :))

பத்மநாபன் said...

A...க்ளாஸ் கதை .... ஆத்ம பயமா ஒரு திருப்பு திருப்பி கடைசியில முடிச்ச விதம்.. உண்மையில வாத்யாரோட தலைமை சிஷ்யன்னு நீரூபிச்சிட்டே இருக்கிங்க ஆர்.வி.எஸ்....

யுடான்ஸில் உங்க டான்ஸ் களை கட்டுது.. வாழ்த்துகள்....

Madhavan Srinivasagopalan said...

உண்மையில் இது ஒரு 'A'-Class கதை தான்

RVS said...

@Ponchandar
ஆஹா... “ஏ” கமெண்ட் போடறீங்களா? :-)

RVS said...

@ஸாதிகா
நன்றி தோழி! :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஆமாம்! சரிதான் தலைநகரத் தல!! :-)

RVS said...

@பத்மநாபன்
மனப்பூர்வமான வாழ்த்துக்கு நன்றி தலைவரே! உங்களோட தொடர்வருகை தெம்பூட்டுது!! :-)

RVS said...

@அப்பாதுரை
நன்றி சார்! :-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
புரிஞ்சிடுச்சா!! வெரி குட்!! :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails