Tuesday, October 9, 2012

தூதஞ்சல்


இன்று உலக அஞ்சல் தினமாம். கணநேரத்தில் பட்டுவாடா ஆகும் மின் அஞ்சலின் பிரவேசத்திற்குப் பிறகு ஸ்நைல் மெயில் என்று பழித்து தொழித்து அஞ்சலுக்கு எப்போதோ அஞ்சலி செலுத்திவிட்டார்கள். வாலெட் நிரம்ப கிரெடிட் கார்டுகள் அடைத்து வைத்திருந்தால் அதற்கான ஸ்டேட்மெண்ட்டுகளும் ஈ ட்ரேடிங் அக்கௌண்ட்டில் கரடியா எருதா என்று தினமும் லாகின் செய்து நொடிக்கொருதரம் ப்ரௌஸரை ரிஃப்ரெஷ் செய்யும் பழக்கமிருக்குமளவிற்கு பங்குகள் வைத்திருந்தால் அது சம்பந்தமான தஸ்தாவேஜுகளும் கூரியரில் வீடு வந்து சேர்கின்றன. சேர்ப்பித்துவிட்டு மறக்காமல் கையெழுத்து வாங்காமல் செல்கிறார்கள். 

சிப்பங்கள் என்றால் பார்ஸல்கள் போலிருக்கிறது. கூரியருக்கு தூதஞ்சல் என்ற பதத்தைப் பயன்படுத்துவதைப் பார்த்தேன். கருத்தொருமித்த காதலர்கள் தூதஞ்சல் என்பதற்கு புறாவிடு தூது போன்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. துரித அஞ்சல் என்றால் எக்ஸ்பிரஸ் டெலிவரி. “வேணும். அநேக நமஸ்காரம். ஆசீர்வாதம். சென்ற முறை வந்த போது புவனா போட்ட காப்பி சூடாகயில்லை” என்றெல்லாம் தபால் கார்டில் ஊரே தெரிந்துகொள்ள நடந்த விஷயப் பரிவர்த்தனைகள் நின்றுவிட்டது.

1.55 லட்சம் அஞ்சலகங்கள் மூலம் உங்களை உலகுடன் இணைக்கிறது என்கிறது இந்திய அஞ்சல் துறையின் விளம்பரம். அவ்வளவு அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கும் நிரந்தர பணி செய்வதற்காகவும் அவர்களுடைய குடும்ப ஜீவிதத்திற்கும் ஆதரவாக இப்பொழுதும் கடிதப் போக்குவரத்து வைத்திருப்பவர்கள் யாரேனுமிருந்தால் அவர்களை மனதாரப் பாராட்டி கை குலுக்கலாம். இலவசமாகக் கிடைத்த ஒரு மெயில் ஐடியில் அண்டசராசரத்துடன் அனானியாகக்கூட அப்பொழுதே பேசுகிறார்கள். விண்ணப்பிக்கிறார்கள். ச்சேட்டுகிறார்கள். சீண்டுகிறார்கள். திட்டிக்கொள்கிறார்கள். களவுமணம் புரிகிறார்கள். 

கால் கடிதாசு எழுதும் வழக்கம் என்றோ வழக்கொழிந்துவிட்டது. லவ் ப்ரபபோஸ் பண்ணுவது கூட ஒரு வரி SMS அல்லது நாலு வரி ஈமெயிலில் முடிந்துவிடுகிறது. ”காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா....” என்று ஆனந்தபாபு சேரன் பாண்டியனில் பாடி நடித்ததை இப்போது பார்க்கும் போது நகைப்புக்குரியதாக இருக்கிறது. கடித இலக்கியங்கள் இப்போது ஈமெயிலிலக்கியங்களாகப் பாராட்டப்படுகின்றன. ஈமக்கிரியைக்கு நாற்பது பேருக்கு தனித்தனியாக கருப்பு மசியில் கையொடிய லெட்டர் எழுதியது இப்போது மெயில் மெர்ஜ்ஜில் சாதரணமான காரியமாக பேனாவுக்கு இங்க் நிரப்பும் சிரமமில்லாமல் முடிந்துவிடுகிறது. இந்த எஸ்ஸெம்மெஸ் யுகத்தில் தந்திக்கென்ன அவசியம்? உங்கள் ஏரியா போஸ்ட்மேனைப் எப்போது கடைசியாகப் பார்த்தீர்கள்? உங்கள் பேட்டையிலுள்ள போஸ்ட்டாபீஸ் முகவரி தெரியுமா?

மணியார்டரை எதிர்பார்த்து போஸ்ட்மேனுக்காக அமர்ந்திருக்கும் வயதானவர்களை வைத்து எவ்வளவு சினிமா சீன்கள் வைத்தாயிற்று. கை நடுங்கி கோணலாகக் கையெழுத்துப்போட்டு காசு வாங்கி தபால்காரருக்கு டிப்ஸ் கொடுக்கும் முதியவர்களைப் பார்க்க முடியவில்லை. இப்போது வயர் ட்ரான்ஸ்ஃபரா? மணியார்டர் என்ற ஒன்று இருக்கிறதா? அரசாங்கமே பென்ஷனை பேங்கில் போட்டுவிட்டு கையில் கார்டை சொருகிவிட்டு போய்விடுகிறார்கள். ப்ளாஸ்டிக் மணி.

கீழத் திருப்பாலக்குடி என்றொரு குக்கிராமம். எனது சிறிய பாட்டனாரது முள்வேலி போட்ட ஓட்டு வீடுதான் அக்கிராமத்திற்கு அஞ்சலகம். அவருக்கு வெளியே டவுனில் வேலையிருந்தால் குடும்பத்து நபர்கள்தான் யூனிஃபார்ம் போடாத அஞ்சலக சிப்பந்திகள். ஜன்னல் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு கல்லாவில் காசை வாங்கிப் போட்டுக்கொண்டு காந்தி படம் போட்ட ஸ்டாம்ப் விற்றிருக்கிறேன். அஞ்சலகம் இல்லா குக்கிராமங்களில் இது போல சிலரைத் தேர்ந்தெடுத்து இந்திய அஞ்சல் துறையே அதிகாரப்பூர்வமாக ஸ்டாம்ப், போஸ்ட் கார்டு, கவர் விற்பதற்கு அங்கீகரித்திருந்தார்கள். ஜன்னலை எட்டிப் பார்த்து ”மிட்டாயெல்லாம் விக்கறதில்லையா?”ன்னு அழுக்கு ஸ்கர்ட் போட்ட ஒரு சிறுமி கேட்டதாக மங்கலாக ஞாபகம் இருக்கிறது.

இவ்வளவு தொழில்நுட்ப மாற்றங்களுக்கிடையே நிகழும் அதிசயம் என்னவென்றால் இன்னமும் கருவாழக்கரை காமாக்ஷியம்மன் கோயில் முருகன் பூசாரியிடமிருந்து தனுர் மாதக் கட்டளை அர்ச்சனை மற்றும் அபிஷேகத்திற்கு
இப்பவும் இங்கு தனுர் மாத பூசை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தாங்கள் இந்த முறையும் ரூ 250 அனுப்பி காமாட்சி அம்மனின் பரிபூரண கடாட்சத்திற்குப் பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
முருகன் பூசாரி

என்று கைப்பட எழுதிய போஸ்ட் கார்ட்தான் எங்கள் கிரஹத்திற்கு வருகிறது. அடுத்த வருடம் பூசாரி செல்ஃபோனில் தட்சிணைக் கேட்கலாம். ஆனால் “சார் போஸ்ட்!” என்ற குரல் கேட்டு வருஷாந்திரம் ஆகிறது.

#அஞ்சலி..அஞ்சலி.. அஞ்சலுக்கு புஷ்பாஞ்சலி...

பட உதவி: stampboards.com

22 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த நாளில்... எதிர்ப்பார்த்து கிடைக்கும் அந்த சந்தோசம் இப்போது இல்லை...

தபால்காரர்களுக்கு வாழ்த்துக்கள்...

கார்த்திக் சரவணன் said...

முன்பெல்லாம் பம்பாயில் இருக்கும் எங்கள் மாமாவுக்கு இன்லேண்ட் லெட்டர் எழுதுவோம். என் அம்மா எழுதவேண்டியதை உள்ளிருக்கும் இரண்டு பக்கங்களில் எழுதுவார்கள். மீதமிருக்கும் ஒரு பக்கத்தில் நான் என் மாமாவை கலாய்த்து எழுதுவேன். ம்ஹூம்.. அந்தக்காலம் எல்லாம் போயாச்சு...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

தூசி தட்ட வச்சுட்டீங்களே...

மறைந்து கொண்டிருக்கும் ரசனைகள்

வெங்கட் நாகராஜ் said...

என் அப்பா முன்பெல்லாம் தினமும் யாருக்காவது கடிதம் எழுதிக்கொண்டு இருப்பார். ஒரு சில நாட்களில் இரண்டு மூன்று கடிதம் கூட எழுதியதுண்டு.

தில்லி வந்த புதிதில் அவரிடமிருந்து நிறைய கடிதங்கள் வரும். நானும் பதில் போடுவேன்.... மெல்ல மெல்ல நான் பதில் எழுதுவது நின்றுவிட... அவரும் நிறுத்தி விட்டார்....

அஞ்சல் துறைக்கு அஞ்சலி தான் செலுத்த வேண்டும் போல!

மாதேவி said...

அஞ்சல் தினத்துக்கு வாழ்த்துகள்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்.....

சேலம் தேவா said...

அஞ்சல் தின சிறப்பு பதிவு அருமை சார்...அலுவல் கடிதங்கள்தான் இப்போது வந்து கொண்டிருக்கிறது.அன்பை சுமந்து வரும் கடிதங்கள் இப்போதெல்லாம் இல்லை.

Angel said...

ம்ம்ம் ..:))அதெல்லாம் ஒரு இனிய நினைவுகள் ..சில கடிதங்களை பிரிச்சி வைத்து எத்தனை தரம் படித்திருப்போம் :))
.அந்த நீல நிறinland கவர்/airmail letters ,அப்புறம் ரிசல்ட் அனுப்ப ஸ்கூலில் தருவோமே ஸ்டாம்ப் என்வலப் ,பேனா நண்பர்களின் கடிதம் ...போஸ்ட் கொண்டாருவோருக்கு பொங்கல் /diwali /கிறிஸ்மஸ் இனாம் ..ஸ்டாம்ப் கலெக்சன் இனிமே இருக்குமா ?


I Feel Nostalgic..

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மாறுதல் நிரந்தரமானது என்ற அறதப் பழசான மஹா வாக்யத்தோடுதான் இந்த நினைவுகளையும் மரத்தடிப் பசு போல அசை போடவேண்டியதிருக்கிறது.

சுலபமாகக் கிடைத்துவிடக்கூடிய எந்த அனுபவமும் வாழ்க்கையின் பக்கங்களில் பதிவாவது இல்லை.

இன்றைக்கும் நான் எழுதிய பல கடிதங்களும், எனக்கு எழுதப்பட்ட பல கடிதங்களும் நினைவில் இருக்கின்றன.

மின்னஞ்சலில் இப்படி ஒன்றைக்கூட என் நினைவில் பாகுபடுத்திப் பார்க்க முடியவில்லை.

நல்ல கிளறல்.

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு.
என்ன தான் இமெயில் அனுப்பினாலும், சாட் பண்ணினாலும், கடிதம் எழுதுவது போல் வராது. ஆனா பொறுமை தான் இப்போது இல்லை....

காத்திருந்து படிப்பதில் தான் எத்தனை சுகம்...

ஞாபகமாக சில கடிதங்கள் உள்ளன. அவை தான் நாளை எங்கள் மகளுக்கே இப்படி தான் இருக்குமா கடிதம் என தெரிந்து கொள்ள உதவலாம்.

சரி, இப்போ இந்த பகிர்வை படித்தவுடன் கடிதம் எழுதலாம் எனத் தோன்றுகிறது...ஆரம்பிக்கிறேன்.

பால கணேஷ் said...

முன்னொரு காலத்தில் கதையோ நாவலோ படித்தவுடன் எழுத்தாளருக்கு நான் கடிதம் எழுதித் தள்ளியது பழங்கதையாய் நினைவில் இருக்கிறது. இப்போதெல்லர்ம் உடன் செல்லை எடுத்து பேசிவிடத்தான் கை பரபரக்கிறது. வேறென்ன செய்ய... உங்களுடன் சேர்ந்து அஞ்சலுக்கு நானும் அஞ்சலி செலுத்துகிறேன் - பெருமூச்சுடன்.

RAMA RAVI (RAMVI) said...

அருமையான அஞ்சலி..

கடிதம் வந்ததும்,ஆவலுடன் அதை வாசலிலிருந்தே படித்துக்கொண்டு வருவோமே அந்த நாட்கள் நினைவுக்கு வந்தது.

RVS said...

@திண்டுக்கல் தனபாலன்
நன்றி தனபாலன். :-)

RVS said...

@ ஸ்கூல் பையன்
இண்ட்லாண்ட் கடிதாசில் ஐந்தாறு பேர் கைப்பட எழுதிய லெட்டரெல்லாம் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறது. கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@அறிவன்
நன்றிங்க. :-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
கைப்பட கடிதம் எழுதியது ஒரு கலையாக இருந்துவந்தது பாஸ்! :-)

RVS said...

@மாதேவி
ஆமாங்க. புதியது வெள்ளமெனப் புகுந்துவிட்டது. நன்றி. :-)

RVS said...

@சேலம் தேவா
லவ் லெட்டர்லாம் இப்ப கடிதமாக வர்றதில்லைன்னு சொல்றீங்களா? :-))))))))))

RVS said...

@angelin
அஞ்சலுக்கு ஒரு நினைவஞ்சலியா? கருத்துக்கு நன்றி. :-)

RVS said...

@சுந்தர்ஜி
என்ன ஒரு ரசனையான கமெண்ட் ஜி! வாஸ்தவம் தான். :-)

RVS said...

@கோவை2தில்லி
கடிதம் எழுதியாச்சா? டெல்லிக்குத்தானே? :-)

RVS said...

@பால கணேஷ்
நாம் சொல்லும் செய்தி போய்ச்சேரும் முன் சூடு ஆறிவிடுவதால் எல்லோரும் செல்லை நாடவேண்டியுள்ளது. :-)

RVS said...

@RAMVI
ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொன்னீங்க. வாசல்லேர்ந்தே இன்னார்கிட்டேயிருந்து வந்துருக்குன்னு சொல்லிக்கிட்டே படிச்சுக்கிட்டே போகறது ஒரு சந்தோஷம்தான்.. :-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails