Monday, August 5, 2013

ராஜ்

ராஜ்ஜிடம் மணிமுடி துறக்க காலையிலிருந்தே கும்பலாய் காத்திருந்தார்கள். இந்தத் தியாகக் கூட்டத்தில் முடிமன்னர்களும், முடி(சூடா/யில்லா) ராஜாக்களும், காடாய் வளர்த்து இளவரசுப் பட்டம் கட்டிக்கொண்டவர்களும், வானப்ரஸ்தம் போகவேண்டிய வயதினர்களும் அடக்கம். உள்ளே நுழைந்தவுடன் ட்யூப்லைட் வெளிச்சத்தில் தலையில் வைரமுடி அணிந்ததுபோன்ற பளீர் ஜொலிஜொலிப்புடன் ஒருவர் தென்பட்டார். காதோரமும் பின்கழுத்தோரமும் ஒரு இன்ச் இடைவெளில் பரவாயில்லை என்று ஒவ்வொன்று முளைத்திருந்தது. ஊடுபயிராக ஏதாவது பயிரிடலாம். ராஜ்ஜின் கத்திரிக்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் வேலையிருக்காது. சொத்து சொற்பமாக இருந்தாலும் அதை அற்பமாக நினைக்காமல் செப்பனிட்டுப் பாதுகாக்கும் பழக்கமிருக்கும் அவரை ஆதூரமாகப் பார்த்து ஆனந்தப்பட்டேன். ராஜ்ஜின் வசதிக்கு வெளிச்சமூட்டும் முயற்சியாக தலையக் குனிந்து முண்டனம் செய்த தலைக்கு ருத்ராட்சம் சுற்றிய மதுரை ஆதீன அட்டைப்பட ஜுனியர் விகடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

ராஜ் கடையில் ரேடியோவாகப் பணியிலிருக்கும் அரைநூற்றாண்டு உழைத்த டிவிக்கும் அம்மன் கோயிலிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மரத்துக்கு மரம் கட்டியிருந்த கூம்பு ஸ்பீக்கருக்கும் வாய்த் தகராறு. போட்டியென்றும் சொல்லலாம். அம்மன் அருள் பெற்ற கூம்பிற்கு ராஜ் கடை தள்ளாத வயது டிவி அடிபணிந்தது.

“அணைச்சுடலாமே” என்கிற என் வேதனைக்குச் செவிசாய்த்து ”சரிதான்...” சொல்லி பொட்டென்று அணைத்தார்.

“உங்க கவிதையெல்லாம் எப்படியிருக்கு ராஜ்? உலோக அதிசயம்ங்கிற தலைப்புல

‘நீ சிரிச்சா வெள்ளி.
கட்டித் தங்கம் சிரிச்சா வெள்ளி வரும்?”

ன்னு ஒரு கவிதை சொன்னீங்களே அது அட்டகாசம்.” வாயைக் கிளறினேன்.

”எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வீட்டு லாஃப்ட்ல வச்சுருக்கேன். ஒருநாள் எடுத்து வரேன்...”

அப்பன்ராஜ்ஜின் வாய் பேசினாலும் கை கர்மசிரத்தையாக வேலையில் மும்முரமாயிருந்தது.

“உங்க அஸிஸ்டெண்ட் இன்னும் வரலையா?”

“எங்க சார் வரானுங்க. வாரத்துல நாலு நாள் லீவு. இப்ப எங்க இருக்கன்னு ஃபோன் பண்ணிக் கேட்டா ஐஞ்சு நிமிசத்துல கடைக்கு வந்துருவேம்பான். எப்போ பார்த்தாலும் காசு மட்டும் பத்தலை பத்தலைன்னு மூக்கால அழுவுறானுங்க..” அங்கலாய்த்தார்.

நான் இப்போது சிங்காதனம் ஏறியிருந்தேன். சேரில் உட்கார வைத்துச் சுற்றச்சொல்லும் தேங்காய் சீனிவாசன் ஞாபகம் வருவதை தடுக்கமுடியவில்லை. ”பச்க்.பச்க்” என்று ஸ்ப்ரே பண்ணி வழித்து வாரி கத்திரியை சினோரீட்டா ரஜினியாக ஓட்டிக்கொண்டிருக்கும் போது

“அஸிஸ்டெண்ட்டுக்கு எவ்ளோ தர்றீங்க அப்பன்ராஜ்?”

“ஒரு நாளைக்கு நானூறு ரூவா. வாரத்துக்கு ரெண்டு நாளு வரமாட்டானுங்க. ரெண்டு நாள் லீவு போட்டா 800 ரூவா. மாசத்துக்கு 3200 ரூவா இதிலயே கட். கரெக்டா வந்து வேலை பார்த்தாலே போதும்....சொகமா இருக்கலாம்... விதி யாரை விட்டுது...”

“நீங்க உங்க மாமா கடையில இருந்தப்போ...”

“ம்... 93ல நாப்பத்தஞ்சு ரூவா குடுப்பாரு. முப்பத்தஞ்சு ரூவா குடும்பத்துக்கு. பத்து ரூவா எனக்கு.” விரக்தியாக சிரித்துக்கொண்டு “நானு, எம்பொண்டாட்டி, அம்மா இத்தோட சேர்த்து கலியாணமாவாத எங்கக்காவும் என் கூட இருந்திச்சு... இந்த வேலை பார்த்துகிட்டே வீடு ப்ரோக்கர் வேலையும் பார்த்து ஒப்பேத்தினேன்...”

“இந்தப் பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

ராஜ்ஜை அவ்வளவு சிரமப்பட வைக்காத ஃப்ரெண்ட்லி கேசமாதலால் வெட்டும் வேலை முடித்து அவர் ப்ளேட் மாற்றி கிருதாவையும் பின்னங்கழுத்தையும் கோடு கட்டித் திருத்துவதற்கு ஆரம்பித்திருந்தார்.

“இல்லீங்க. பாச்சிலர் பசங்க.. வேலையின்னா இவனுஹளுக்கு வேப்பங்காயா இருக்கு. பணம் பட்டும் நெறையா வேணும்ங்கிறானுங்க... ஊரு சுத்தணும். சினிமா பார்க்கணும். நானு சின்னப்பையனா இருந்ததுலேர்ந்து ஒரு நாள் கூட லீவு போடாம மாமா கடையில வேலை செஞ்சேன். வாய்க்கும் வயித்துக்கும் போக மிச்சம் பண்ணி கடனை உடனை வாங்கி இந்தக் கடை போட்டேன். ஏதோ பொளப்பு நல்லபடியா ஓடிக்கிட்டிருக்கு. நீங்களே சொல்லுங்க... நா என்னிக்காவது கடைக்கு லீவு விட்ருக்கேனா?”

படிகாரத்தைப் பின்னங்கழுத்தில் மிருதுவாய் தேய்த்தார். ஏதோ ஊர்பேர் தெரியாத வெள்ளைநிற ஆண்டிசெப்டிக் எடுத்து குலுக்கி கைகளில் ஊற்றிக் கத்திபட்ட இடங்களில் சதும்ப தடவினார். முதலில் ஜிவ்வென்று எரிய ஆரம்பித்து சிறிது நேரத்தில் ஜிலீர்ரென்று குளுமையாக இருந்தது. அப்பன் ராஜ் கஷ்டப்பட்டு உழைத்து இப்போது கடை ஓனர் ஆனது போல.

ம்.. கடையிலிருந்து கிளம்புவதற்கு முன் இன்னொரு முக்கியமான விஷயம். இன்னும் அந்தப் பையன் வேலைக்கு வரவில்லை.

3 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை...

இளம்வயதில் கஷ்டப்பட மறுத்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டியதுதான்...

வெங்கட் நாகராஜ் said...

ஒவ்வொரு முறை இங்கே செல்லும்போதும் ஒரு வித அனுபவம்....

மாதேவி said...

"மணிமுடி துறக்க காத்திருக்கும் முடிமன்னர்கள்" ஹா....ஹா ரசனை.

அனுபவத்தை அழகாக தந்தீர்கள்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails